Thursday 11 August 2011

திசைமாறும் எகிப்தியப் புரட்சி

எகிப்திய மக்கள் 18நாட்கள் நடத்திய "புரட்சியின்" மூலம் பெப்ரவரி 11-ம் திகதி ஹஸ்னி முபாரக்கைப் பதவியில் இருந்து விரட்டினர். ஆனால் புரட்சி என்பது ஒரு ஆட்சியாளரை மாற்றுவதுடன் முற்றுப் பெறுவதல்ல என்பதற்கு எகிப்து ஒரு நல்ல உதாரணமாக அமைகிறது. ஆட்சியாளருடன் ஆட்சி முறைமையும் மாற்றப்படவேண்டும். பெப்ரவரி 11-ம் திகதிக்குப் பின்னர் எகிப்தில் பல ஆர்பாட்டங்கள் அவ்வப் போது ஆட்சியாளர்களுக்கு எதிராக நடந்தவண்ணமே இருந்தன. இது ஹஸ்னி முபராக்கிற்குப் பின்னர் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் படையினரின் உச்ச சபைக்கு{Supreme Council of the Armed Forces (SCAF)} பெரும் தலையிடியைக் கொடுத்தன. புரட்சியின் பயன் மக்களை சென்றடைய முன்னரே திசை திருப்பப்படுமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. 40%இற்கு அதிகமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் எகிப்திற்கு ஒரு நல்ல ஆட்சி அவசியம்.

புரட்சி முடிந்தது என உணர்த்தும் ஆட்சியாளர்கள்.
இப்போது புரட்சி வேண்டி மக்கள் கூடும் இடமான தஹ்ரீர் சதுக்கத்தை படைத்துறையினரின் கவச வாகனங்களால் நிர்ப்பப்பட்டுள்ளன. ஆயுதங்களும் குண்டாந்தடிகளும் தாங்கிய காவற்துறையினர் சதுக்கத்தை சுற்றிக் காவல் இருக்கின்றனர். தஹ்ரீர் சதுக்கத்தில் நிறைந்திருக்கும் படையினரும் காவற்துறையினரும் சொல்லும் செய்தி "புரட்சி முடிந்துவிட்டது". எகிப்தியப் புரட்சியாளர்களைப் பற்றி தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு அவர்களது ஆர்ப்பாட்டங்களில் மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்த எகிப்திய ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் Supreme Council of the Armed Forces (SCAF) பலவகையிலும் முயற்ச்சி செய்து மக்களையும் புரட்ச்சியாளர்களையும் பிரித்து வைத்தது. மேலும் புரட்சியாளர்கள் வெளிநாட்டுக் கைக்கூலிகள் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது. விளைவு ஜூலை 25-ம் திகதி புரட்சியாளர்களி ஊர்வலத்தில் ஊர் மக்கள் தாக்குதல் நடாத்தினர். நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். ஒரு இளைஞர் கொல்லப்பட்டார். அடிக்கடி ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்து மக்களுக்கு அதில் ஒரு சலிப்பும் ஏற்பட்டு விட்டது.

எகிப்திற்கு ஒரு சிறந்த ஆட்சி முறைமையும் ஆட்சியாளர்களும் தேவை என்று புரட்சியைத் தொடக்கியவர்களுக்கு தஹ்ரீர் சதுக்கத்தில் இப்போது கூட முடியாது என்பது ஒரு பின்னடைவே. புரட்சீகர இளைஞர் ஒன்றியத்தின் செயலாளர் அப்துல்லா ஹெல்மி மக்களிடமிருந்து புரட்சி வேறுபட்டு நிற்கிறது. என்கிறார். மக்களுக்கு புரட்சியை விளங்கப்படுத்துவதற்காக நாம் ஆர்ப்பாட்டங்களை நிறுத்திவிட்டோம். "இப்போது மக்களுக்கு புரட்சியைப் பற்றி விளக்கம் கொடுக்கிறோம். குடிசார் அரசியல் கல்வியையும் விழிப்புணர்வுகளையும் மக்களிடம் பரப்புகிறோம்." என்கிறார். எகிப்த்தில் பாராளமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. அதற்கு முன்னர் மக்களுக்கு அரசியல் போதிக்க வேண்டியது முக்கியத்துவம் பெறுகிறது.

படையினரின் நீதிமன்றம்
ஹஸ்னி முபாரக் ஆட்சியைப் போலவே தற்போது ஆட்சியைக் கையில் வைத்திருக்கும் படையினரும் அரசுக்கு எதிராகச் செயற்படுபவர்களை படைத்துறை நீதிமன்றில் விசாரித்து வந்தனர். புரட்சியாளர்களின் தொடர்ச்சியான எதிர்ப்பைத் தொடர்ந்து இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட முதலாம் திகதி கைது செய்யப்பட்ட நூற்றுக் கணக்கானோர் இப்போது குடிசார் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுகின்றனர். இதை புரட்சியாளர்கள் ஒரு வெற்றியாகவே கருதுகின்றனர்.

ஏப்ரல்-6 இளைஞர் இயக்கம்
வேலை நிறுத்த மூலம் மக்களைக் கிளர்ந்து எழச் செய்து எகிப்தில் பிரபலமான ஏப்ரல்-6 இளைஞர் இயக்கம் மக்களாட்சி முறைமையினதும் சமூக நீதியினதும் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதை தலையாய பணியாகக் கொண்டு செயற்படுகிறது. மக்களாட்சி அனுபவம் இல்லாத எகிப்திய மக்களுக்கு மக்களாட்சி மனித உரிமை போன்றவை தெரியாத ஒன்றே.

தேர்தலை பாவிக்க முயலும் புரட்சியாளர்கள்
புரட்சியில் ஈடுபட்ட இருபதிற்கு மேற்பட்ட இளைஞர் அமைப்புக்களில் பெரும்பாலானவை இப்போது தேர்தலில் பங்கு பற்ற முடிவு செய்திருக்கின்றன. பாராளமன்றத் தேர்தலுக்கான திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. பழம்பெரும் மத சமூக அரசியல் அமைப்பான இசுலாமிய சகோதரத்துவ அமைப்பை புரட்சி அமைப்புக்கள் வெற்றியடைவது சிரமம்.

1 comment:

Anonymous said...

"எகிப்திய மக்கள் 18நாட்கள் நடத்திய "புரட்சியின்" மூலம் பெப்ரவரி 11-ம் திகதி ஹஸ்னி முபாரக்கைப் பதவியில் இருந்து விரட்டினர். ஆனால் புரட்சி என்பது ஒரு ஆட்சியாளரை மாற்றுவதுடன் முற்றுப் பெறுவதல்ல என்பதற்கு எகிப்து ஒரு நல்ல உதாரணமாக அமைகிறது. ஆட்சியாளருடன் ஆட்சி முறைமையும் மாற்றப்படவேண்டும்." என்பது முற்றிலும் உண்மை

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...