Tuesday 22 March 2011

லிபியா மீதான தாக்குதல்: முரண்பாடுகளும் பின்விளைவுகளும்


ஒரு சிறந்த படைத் தளபதி போருக்குப் போக முன் தனக்கு உத்தரவிடும் அரசியல் வாதிகளிடம் கேட்கும் கேள்விகளுள் முக்கியமானவை இரண்டு:
1. போருக்கான நோக்கங்கள் என்ன?
2. எமது நோக்கங்கள் நிறைவேற்றப் படக்கூடியவையா?
இவைக்கான சரியான பதில்களுடன் சென்றால் மட்டுமே போரில் வெற்றியடையலாம். இவற்றுக்கான பதில்கள் சரியாகக் கிடைக்காமல் இலங்கை சென்ற இந்திய அமைதிப்படைக்கு(?) என்ன நடந்தது என்பது சரியான உதாரணம். லிபியா மீது மேற்குலக நாடுகள் மேற் கொண்டுள்ள படை நடவடிக்கைக்கும் மேற்படி கேள்விகளுக்கான பதில் சரியாக கொடுக்கப்பட்டாதா என்பது சந்தேகம்.


விமானப் பறப்பற்ற வலயத்தில் பறந்து தாக்கும் விமானங்கள்
துனிசியாவில் பென் அலி பதவியில் இருந்து விரட்டப்பட்டமையும். எகிப்த்தில் ஹஸ்னி முபராக் பதவியில் இருந்து விரட்டப்பட்டமையும் பெருமளவு இரத்தம் சிந்தாத புரட்சிகள். இரண்டிலும் சமூக வலைத் தளங்களும் பாரிய மக்கள் எழுச்சியும் பெரும் பங்கு வகித்தன. எகிப்தில் ஹஸ்னி முபராக்கின் படை சிறந்த தொழில்சார் நேர்மையைக் கடைப்பிடித்தது என்று சொல்லலாம். லிபியாவில் மும்மர் கடாபியின் படைகளும் கணிசமான தொகை மக்களும் கடாபிக்குப் பின்னால் நிற்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இலகுவாக பிரதேசங்களைக் கைப்பற்றிய கடாபி எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் பல நகரங்களில் இருந்து கடாபி ஆதரவுப் படைகளை விரட்டினர். இதைப் பலர் கடாபியின் பலவீனமாக எண்ணினர். ஆனால் கிளர்ச்சிக்காரகள் திரிப்பொலியை அண்மித்தவேளை காடாபியின் தனது நடைமுறையை மாற்றிக் கொண்டார். கடாபி தனது தாக்குதலை மூர்க்கத் தனமாக ஆரம்பித்தபோது ஒரு ஒழுங்கான கட்டுக் கோப்பான படை அமைப்பைக் கொண்டிராத கிளர்ச்சிக்காரர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் மேற்கு நாடுகள் அவசரமாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையைக் கூட்டி லிபியாவின் வான் பிரதேசத்தில் விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றின. தீர்மானத்தில் மேற்கு நாடுகள் தந்திரமாக விமானங்கள் பறப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்ற வாசகத்தை உட்புக்குத்தின. இப்போது மேற்கு நாடுகள் கடாபியின் இருப்பிடம் மீதான தாக்குதலையும் "தேவையான சகல நடவைக்கைகள்" என்பதன் கீழ் அடக்குகின்றன. கடாபியின் இருப்பிடம் படைத்துறைக் கட்டுப்பாட்டகம் என்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் நிறை வேற்றியவுடன் கடாபி ஒருதலைப்பட்டசமான போர் நிறுத்தத்தை அறிவித்தார். அதை கடாபிக்கு எதிரான கிளர்ச்சியாளர்களோ மேற்கு நாடுகளோ ஏற்றுக் கொள்ளவில்லை. கடாபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின்மிக்-23 ரக விமானம் ஒன்று கடாபியின் படையினரால் ஐநா தீர்மானத்தின் பின் சுட்டு வீழ்த்தப்பட்டது.கடாபியின் விமானங்களின் பறப்பைத் தடுக்க விமானங்கள் பறக்கக் கூடாது என்று ஐநா தீர்மானம் குறிப்பிட்ட வான் வலயத்துக்குள் பிரெஞ்சு, பிரித்தானிய, அமெரிக்க விமானங்கள் பறந்து குண்டுகள் வீசுகின்றன.

பிரெஞ்சு நிலைப்பாடு
லிபியா மீதான படை நடவடிக்கைக்கு பிரான்ஸ்தான் முன்னின்று செயற்பட்டது. பிரான்ஸில் லிபியாவிற்கு எதிரான படை நடவடிக்கைகளுக்கு பலத்த ஆதரவு நிலவுகிறது. எதிர்கட்சியான சோஸ்லிசக் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. லிபியாவிற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பது பற்றி பல நாடுகள் பரிசில்தான் கூடி ஆலோசித்தன. லிபியாவிற்குள் பிரவேசித்து தாக்குதல் நடாத்தியவை பிரெஞ்சு விமானங்களே. ஐக்கிய நாடுகள் சபையின் பாது காப்புச் சபையின் தீர்மானத்தை நிறை வேற்றுவதில் பிரான்ஸ் முன்னின்று செயற்படுவதை தம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்று துருக்கி தெரிவித்துள்ளது.

பிரித்தானிய நிலைப்பாடும் மொக்கை அமைச்சரும்

மும்மர் கடாபியைக் கொல்வது தமது நோக்கம் என பிரித்தானியப் பாதுகாப்புத் துறை அமைச்சரும் சிங்களவர்களின் நெருங்கிய நன்பருமான லியாம் பொக்ஸ் தெரிவித்தார். பிபிசியின் வானொலி-5 இற்கு வழங்கிய செவ்வியில் இதைக் குறிப்பிட்டார். Liam Fox, the Defence Secretary, adopted an even stronger tone in an interview with BBC Radio Five Live, as he said that Britain and its allies could deliberately target Col Gaddafi in their military strikes on Libya. பொது மக்களுக்கு ஆபத்து விளைவிக்காதவிடத்து பதுங்கு குழிகளை அழிக்கும் குண்டுகளைப் பாவித்து கடாபி மீது தாக்குதல் நடத்த தான் உத்தரவிடலாம் என
லியாம் பொக்ஸ் தெரிவித்தார். என்று டெயிலி மெயில் கூறியது. இவரது இந்தக் கூற்று பலத்த சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. படை அதிகாரி ஒருவரிடம் கடாபியை கொல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா எனக் கேட்டபோது அது ஐக்கிய நாடுகளின் தீர்மானத்திற்கு அப்பால் பட்டது என்றார். அது பற்றிக் கதைக்கவே முடியாது என்றார். ஒரு படை அதிகாரிக்கு தெரிந்த இராசதந்திரம் இந்த மொக்கை அமைச்சர் லியாம் பொக்ஸிற்குத் தெரியாமல் போனது எப்படி? கடாபியின் சகல படைக் கட்டமைப்பை அழிப்பதே தமது நோக்கம் என்கிறது பிரித்தானியா. அங்கு ஒருஆட்சி மாற்றத்தை படை நடவடிக்கை மூலம் பிரித்தானியா ஏற்படுத்த விரும்புகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. ஞாயிறு இரவு பிரித்தானிய விமானங்கள் கடாபியின் மாளிகையை தரை மட்டமாக்கின. பிரித்தானிய உளவுத்துறை கடாபியின் உயர் படைத்துறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கடாபியை விட்டு விலகுங்கள் அல்லது நீங்களும் இறப்பீர்கள் -defect or did- என்று எச்சரித்தது.

ஜேர்மனி பங்கு பற்ற மறுப்பு
கேர்னல் மும்மர் கடாபிக்கு எதிரான போரில் தாம் ஈடுபடப்போவதில்லை என ஜேர்மனி அறிவித்து விட்டது.

அமெரிக்க நிலைப்பாடு
போரைத் தான் விரும்பாதவர் என்று கூறிப் அமெரிக்க அதிபர் பதவிக்கு வந்த பராக் ஒபாமா இப்போது மூன்றாவது போரில் அமெரிக்கப் படைகளை ஈடுபடுத்தியுள்ளார். இந்த லிபியாமீதான தாக்குதல் ஒன்றும் பெரிய அலுவல் அல்ல என்று தனது மக்களுக்கு காட்டுவது போல் ஒபாமா நடக்கிறார். தான் திட்டமிட்டபடி தனது தென் அமெரிக்கப் பயணத்தை தொடர்கிறார். அமெரிக்கா தான் தனது படைகளை லிபியாவிற்கு அனுப்பப் போவதில்லை என்று அறிவித்து விட்டது. லிபியாவில் ஒரு படை நடவடிக்கையை அமெரிக்கா விரும்பவில்லை. பிரான்சும் பிரித்தானியாவும்தான் அமெரிக்காவை வற்புறுத்தி இதற்குள் இழுத்தன. அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான சவுதி அரேபியாவில் ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் அரசுக்கு எதிராக வெடிக்கும்போது அங்கும் சவுதி அரசு கொடூரமாக நடக்கும் போது அங்கும் படை அனுப்புவீர்களா என்ற கேள்வி எழலாம் என்று அமெரிக்கா அஞ்சலாம். அமெரிக்காவில் சில குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள் இப்போது கடாபிக்கு எதிராக எடுக்கும் படை நடவடிக்கை காலம் தாழ்த்தியது என்று கருதுகிறார்கள். அமெரிக்க மக்கள் சபையைக் கலந்தாலோசிக்காமல் அமெரிக்க அதிபர் ஒரு படை நடவடிக்கைக்கு உத்தரவிட்டிருக்கிறார். இது வரம்பு மீறிய செயல் என்று எதிர்க்கட்சியினர் கருதுகின்றனர். அமெரிக்க மக்கள் சபையின் படைத்துறைச் சேவைக்கான குழுவின் தலைவர் இப்படிக் கேள்வி எழுப்பினார்: “Are our goals aimed at protecting civilians in Libya, or the removal of Muammar Qaddafi from power? In either case, to what extent and for how long will military resources be utilized?” உங்கள் நோக்கம் மக்களைப்பாதுகாப்பதா? கடாபியை அதிகாரத்தில் இருந்து விலக்குவதா? இரு சந்தர்ப்பங்களிலும் எவ்வளவு வளங்கள் பாவிக்கப்படும்? எவ்வளவு காலம் எடுக்கும்? அமெரிக்கப் படைத்தரப்பு தமது நடவடிக்கைகள் ஒரு மட்டுப்படுத்தப் பட்ட அளவிலேயே இருக்கும் என்று தெரிவிக்கிறது. ஆனால் அமெரிக்காவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஸ்றிபன் ஹட்லி ஒரு மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கை தோல்வியில் முடிவடையலாம் என்றார். பராக் ஒபமா கடாபியை அதிகாரத்தில் இருந்து விலக்க வேண்டும்; அப்பாவி மக்கள் பாதுகாக்கப் படவேண்டும்; அதேவேளை அமெரிக்கா அதிக வளங்களைப் பாவிக்கது என்றார். இக்கருத்து அமெரிக்கா பிரெஞ்சு பிரித்தானிய வேண்டுகோளிற்கு இணங்கவும் தயக்கத்துடனும் லிபியாவில் படை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்பதைக் காட்டுகிறது. ஆனால் அமெரிக்க நடாத்தும் தாக்குதல்களைப்பார்த்தால் அமெரிக்கப் படைகள் ஏற்கனவே தயார் நிலையில் இருந்தது போலவே தெரிகிறது. கடாபிக்கு எதிரான நடவடிக்கையின் தலைமப் பொறுப்பை தான் ஐரோப்பிய நாடு ஒன்றிடம் கையளிக்கப் போவதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இத்தாலியின் குத்துக் கரணம்
கடாபியின் அரசு ஒரு சட்டபூர்வமானது என்று முதலில் அறிவித்த இத்தாலிய அரசு பின்னர் கடாபி மீது தாக்குதல் நடத்த தனது நாட்டுத் தளங்களை அனுமதித்தது. பின்னர் ஒரு நீண்டகாலத் தாக்குதல் நடத்த தான் ஒத்துழைக்கப் போவதில்லை என்று அறிவித்தது

ஆபிரிக்காவில் ஆதரவு இல்லை
லிபியாவிற்கு எதிரான தாக்குதலை தென் ஆபிரிக்கா ஆதரிக்கவில்லை. அரபு லீக்கும் ஆரம்பத்தில் ஆதரித்துவிட்டு பின்னர் பொது மக்கள் கொல்லப்படக்கூடாது என்கிறது. அரபு லீக் தலைவர் Moussa has told reporters Sunday that "what happened differs from the no-fly zone objectives." He says "what we want is civilians' protection not shelling more civilians."

இரு வல்லரசுகள் ஆதரிக்கவில்லை
சீனா லிபியாமீதான தாக்குதலைக் கடும் வார்த்தைகள் பாவித்துக் கண்டித்தது. சில நாடுகள் இப்போதும் பனிப்போர் மனப்பாங்கில் இருப்பதாக சீனா தெரிவித்தது. இரசியா ஒரு படி மேல் சென்று லிபிய அதிபர் கடாபியின் இருப்பிடம் மீதான தாக்குதல் ஒரு சிலுவைப்போர் போன்றது என்றார். இந்தியா லிபியா மீதான தாக்குதலை எதிர்த்துள்ளது. பாதுகாப்புச் சபையில் லிபியாவிற்கு எதிராக நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தில் பொருளாதாரத் தடையும் ஒன்று. இரசியாவிற்கு லிபியாவுடன் இரண்டு பில்லியன் பெறுமதியான ஆயுத வர்த்தகம் இருந்தும் இரசியா அத் தீர்மானத்தை எதிர்க்கவில்லை. பாது காப்புச் சபையில் உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி மன்சீவ் சிங் பூரி ஐநா ஒரு தூதுவரை லிபியாவிற்கு அனுப்ப வேண்டும் என்றார். இலங்கைக்கு விஜய் நம்பியாரை அனுப்பியது போலவா? பாக்கிஸ்தான ஆதரவு தெரிவிக்கவில்லை. அமெரிக்கக் கைப்பொம்மையான ஈராக் ஆதரவு தெரிவித்துள்ளது. பாதுகாப்புச் சபையில் பறப்பற்ற வலயத் தீர்மானம் லிபியாவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்டபோது சீனா, இரசியா, ஜேர்மனி, இந்தியா, பிரேசில் ஆகிய ஐந்து நாடுகளும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

கடாபி ஆதரவு தீவிரவாதிகள்
கடாபிமீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடக்குமிடத்து கடாபி தனக்கு ஆதரவான தீவிர வாதிகளை திரட்டி மேற்கு நாடுகள் மீதும் அதன் குடி மக்கள் மீதும் தாக்குதல் நடத்தலாம். கடாபி பதவி விலகும்போது லிபியாவின் இனக் குழுக்களிடையே ஒரு போரை உருவாக்கிவிட்டு விலகலாம். அதனால் கடாபியின் கீழி இருக்கும் லிபியாவிலும் பார்க்க மோசாமான ஒரு லிபியா உருவாகும்.

1 comment:

யோகா.எஸ் said...

உண்மையில் மேற்குலக நாடுகள் லிபிய மக்கள் மேல் கொண்ட காதலினால் ஒன்றும் கடாபிக்கு எதிராக கிழர்ந்தெழவில்லை!மேற்குலகப் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும் எரிபொருள் விலையேற்றமும்,செயற்கையான தட்டுப்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே காலம் கடந்த அதாவது கடாபி எதிர்ப்பாளர்கள் வெற்றி பெற்று விடுவார்கள் என்ற மாயை கடாபியின் விசுவாசப் படைகளால் முறியடிக்கப்படும் வேளையிலேயே "உறைத்து" அவசர அவசரமாக கடாபியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மேற்கொள்ளப்படுகிறது என்பதே உண்மை!!!!அழித்த பின் அபிவிருத்தியில் கோடிக்கணக்கில் பணம் பார்க்கலாமே?தங்கள்,தங்கள் நாட்டை பொருளாதார சிக்கலிலிருந்து மீட்கலாமே?ஈராக் யுத்தத்தின்?!போது பிரான்ஸ் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்து விட்டு அபிவிருத்தியில் பங்கு கேட்டதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுக்குக் கொண்டு வரலாம்!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...