Friday, 13 November 2009

சரத் பொன்சேக்காவால் கலக்கமடைந்துள்ள இந்தியா.


இலங்கையின் ஒரு நல்ல நண்பனாக இருக்க இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து இந்தியா முயன்றுவருகிறது. அதற்க்காக பல விட்டுக் கொடுப்புக்களை இலங்கைக்கு இந்தியா செய்து வந்தது. அந்த விட்டுக் கொடுப்புக்கள் தமிழர்களைப் பலிக்கடா ஆக்கிக் கொண்டே இருக்கின்றன.

1977இல் ஆட்சிக்கு வந்த ஜே. ஆர் ஜயவர்த்தனே அரசு இலங்கையை சிங்கப்பூர் ஆக்குகிறேன் என்று அமெரிக்கச் சார்பாக இலங்கயை மாற்றி இலங்கையில் அமெரிக்காவிற்கு சில மறைமுக இராணுவ வசதிகளைச் வழங்க முற்பட்டார். அதில் இருந்து இலங்கையை இலங்கை வாழ் தமிழர்களைப் பாவித்து அவர்களை ஆயுத பாணிகளாக்கி இந்திரா காந்தி அம்மையார் தனது வழிக்குக் கொண்டுவர முயற்சித்தார். அவர் கொல்லப்பட அதன் பின் இந்தியாவில் ஆட்சிக்கு வந்த அரசியல் கற்றுக் குட்டி ராஜீவ் காந்தி ஜே. ஆர் ஜயவர்த்தனேயால் ஏமாற்றப் பட்டு இலங்கைத் தமிழர்களின் பகையாளியாக இந்தியா மாற்றப் பட்டது. ஜே. ஆரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த பிரேமதாசா இந்திய அமைதிப் படையை இலங்கையில் இருந்து வெளியேற்ற விரும்பினார். இதற்காக அவர் விடுதலைப் புலிகளுடன் ஒத்துழைத்தார். இலங்கயின் சரித்திரத்தில் இந்தியாவால் மிகவும் வெறுக்கப் பட்ட ஒரு இலங்கை ஆட்சியாளராக பிரேமதாசா மாறினார். 1971இல்அவரை பதவியில் இருந்து தூக்க இந்தியா பலத்த முயற்ச்சி செய்தது. லலித் அத்துலத் முதலியையும் காமினி திசாநாயக்காவையும் இந்தியா தன் பக்கம் இழுத்து பிரேமதாசாவிற்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை தோல்வியடைந்து இந்தியா மூக்குடைபட்டது. லலித்தும் காமினியும் கொல்லப் பட்டனர். அசைக்க முடியாத ஆளாக உருவெடுத்த பிரேமதாசா பின்னர் தற்கொலைக் குண்டுதாரியால் கொல்லப் பட்டார்.

பிரேமதாசாவிற்குப் பின்னர் இலங்கைக்கு உதவிசெய்து நண்பனாக இருக்கும் முயற்ச்சியில் இந்தியா இறங்கியது. இன்றுவரை சீனாவிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் போட்டியாக இந்தியா இலங்கைக்கு உதவி வருகிறது.

இப்போது இந்தியாவிற்கு புதிய தலையிடி. தமது சொற்களை மீறி நடக்கும் ராஜபக்சேக்களைப் பதவியில் இருந்து அகற்ற மேற்குலகம் சரத் பொன்சேக்காவைத் தெரிவு செய்தது. சரத் பொன்சேக்கா பாக்கிஸ்த்தானின் உற்ற நண்பன். அதனால் சரத் பொன்சேக்கா இலங்கைக் குடியரசுத் தலைவராக வருவதை இந்தியா விரும்பவில்லை. ஏற்கனவே இலங்கை மீது சீனாவும் பக்கிஸ்த்தானும் கணிசமான செல்வாக்கு செலுத்தி வருகின்றனர். இதற்காக ரணில் விக்கிரமசிங்கவை தனது துணைக்கு இந்தியா அழைக்கிறது. அமெரிக்கா ரணில்-சரத் கூட்டணியை விரும்புகிறது. இந்தியாவின் கையில் உள்ள சீட்டு மலையக்த தமிழர்களின் வாக்கு. ஆனால் அது துருப்புச் சீட்டு அல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு அணியில் இணைவதாயின் அந்த அணி தமிழர்களுக்கு சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய வேண்டும் அதனால் அந்த அணி சிங்களத் தீவிர வாதிகளின் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டும். ரணில் அணியில் இந்தியாவின் வற்புறுத்தலுக்கு அமைய தமிழர் தேசியக் கூட்டமைப்பு சேர்ந்தால ரணில் மீண்டும் புலிகளுக்கு உயிர் கொடுப்பார் என்று சிங்களத் தீவிரவாதிகள் பிரச்சாரம் செய்வர். இருக்கும் நிலைமையப் பார்த்தால் இந்தியா இலங்கையின் அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு மும்முனைப் போட்டியை ஏற்படுத்த விரும்புகிறது போல் தெரிகிறது. ரணில், சரத், மஹிந்த ஆகிய மூவரும் தேர்தலில் போட்டியிடுவதை இந்தியா விரும்புகிறது போல் இருக்கிறது. இதனால் போர் வெற்றிக்கான அறுவடை வாக்குக்களை சரத்தும் மஹிந்தவும் போட்டி போட்டுக் கொண்டு பகிர்ந்து கொள்ள ரணில் தனது கட்சியான யூஎன்பியின் வழமையான வாக்கு வங்கியையும் தமிழர்களினது வாக்குக்களையும் பாவித்து வெற்றி பெறுவார் என இந்தியா கணக்குப் போடலாம்.

தேர்தலில் தான் தோல்வியுறும் நிலை ஏற்படுமாயின் ராஜபக்சே குடும்பம் இலங்கையை இன்னொரு மியன்மார்(பர்மா) ஆக மாற்றலாம். அது இந்தியாவிற்கு தலையிடி அல்ல தலைதெறிக்கும் நிலையாகக் கூட இருக்கலாம்.
Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...