Sunday 8 November 2009

சரத் பொன்சேக்கா விசாரணை - அமெரிக்க நாடகமா?


இலங்கையைச் சீனப் பிடியில் இருந்து விடுவிக்க அமெரிக்கா முயல்கிறது. சரத் பொன்சேக்காவை விசாரிக்க அமெரிக்கா எடுத்த முயற்ச்சியும் அதை அவர் தவிர்த்து இலங்கைக்கு பறந்ததும் அவர்மீதான சிங்கள மக்களின் நம்பிக்கையையும் பற்றையும் மேலும் அதிகரித்துள்ளது. இப்படி ஒரு செல்வாக்கை உருவாக்கத்தான் அமெரிக்கா சரத் பொன்சேக்காவை விசாரிப்பது என்ற நாடகம் ஆடியதா? அவர் அமெரிக்கவில் இருந்து பறந்த பின்னர் தொடர்ந்து அவரிடம் இருந்து எப்படித் தகவல் அறிவது என்றோ அல்லது அவர் அமெரிக்க உள் துறையுடன் ஒத்துழைக்காததால் அவரது அமெரிக்க வதிவிட உரிமை பறிக்கப் படும் என்றோ அமெரிக்கத் தரப்பில் இருந்து எதுவும் தெரிவிக்கப் படவில்லை.

சரத் பொன்சேக்கா அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் ராஜபக்சே சகோதரர்கள் சரத் பொன்சேக்காவிற்குப் பாதுகாப்பு அதிகரிப்பது என்ற போர்வையில் அவருக்கு கஜபா படையணியினரை (Gajaba Regiment) அவரைச் சுற்றி வளைத்துவிட்டனர். அவருக்கு இதுவரை சிங்க படையணியினர்(Singhe Regiment) பாதுகாப்பு வழங்கி வந்தனர். அதை அகற்றும் படியும் உத்தரவிடப் பட்டது. ஆனால் சரத் சிங்கப் படையணியை தொடர்ந்து தனக்குப் பாதுகாப்பு வழங்கும்படி உத்தரவு இட்டுள்ளார். இப்போது சரத்தைச் சுற்றிவர இரு ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட படையணிகள்! அதுமட்டுமல்ல சரத்திற்கு சார்பான படையணிகளும் இருக்கின்றன என்பதும் மிகவும் கவனிக்கப் படவேண்டியது. இப்போது கஜபா படையணி சரத்தின் நடவடிக்கைகளை உளவு பார்க்கிறது.

சரத் பொன்சேக்கா அமெரிக்காவில் இருக்கும்போதே அவர் யூஎன்பி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடன் செய்மதி காணொளித் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டுள்ளார். இவர்களுக்கு இடையிலான பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்து அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத் பொன்சேக்காவை நிறுத்துவது என்று அமெரிக்க ஆசியுடன் திரைமறைவில் முடிவு செய்யப் பட்டது. இந்த எதிர்க் கட்சிகள் கூட்டமைப்பில் யூஎன்பி, மங்கள சமரசிங்கவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி(மஹாஜன), இலங்கை முஸ்லிக் காங்கிரஸ், மேலக மக்கள் முன்னணி எனப் படும் கொழும்புத் தமிழர் கட்சி ஆகியன இடம் பெறுகின்றன. இது அமெரிக்கா உருவாக்கிய கூட்டணியா?

எதிர் கட்சிகள் என்று பார்த்தால் அதில் யூ என் பி எனப்படும் ஐக்கிய தேசியக் கட்சி மேற்குலக சார்பானது. அமெரிக்கா சரத் பொன்சேக்காவையும் யூஎன்பியையும் இணைத்துவிட்டது. இதனால் சரத் பொன்சேக்காவை சிங்களப் பேரினவாதக் கட்சிகளான ஜனதா விமுக்தி பெரமுனைக்கும் ஜாதிக ஹெல உருமயவுக்கும் அறவே பிடிக்காமல் போகலாம். அதனால் அது தீவிர சிங்களவர்களின் வாக்குகளை சரத்-யூஎன்பி கூட்டணிக்கு எதிராக திருப்பலாம். அடுத்த தேர்தல் மேடைகளில் அமெரிக்கா கடுமையாக அடி படப் போகிறது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...