Wednesday 28 October 2009

அமெரிக்காவின் போர் குற்றப் பூச்சாண்டி ஏன்?



இலங்கையில் 1970-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரத் கட்சி இலங்கா சமசமாஜக் கட்சி(ட்ரொக்சிய வாதிகள்)யுடனும் இலங்கைக் கம்யூனிசக் கட்சியுடனும் இணைந்து போட்டியிட்டுப் பெரு வெற்றியீட்டியது. இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஒரு கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றியீட்டியது. இதனால் பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்ற சிறிமாவே பண்டார நாயக்க பல தனியார் தொழில் நிறுவனங்களை அரசுடமையாக்கினார். காணி உச்சவரம்புச் சட்டத்தை நிறைவேற்றி பலரது காணிகளை அரசுடமையாக்கினார். இலங்கை ஒரு சோசலிஸ நாடாகிவிடுமே என்ற பயம் முதலாளித்துவ நாடுகளிடம் ஏற்பட்டது. இலங்கையின் வழியில் மற்ற நாடுகளுக் சென்றுவிடுமா என்ற பயமும் உருவானது.

PUBLIC LOAN ACCOUNT 480(பொதுக் கடன் கணக்கு 480)
அமெரிக்கா இலங்கைக்கு வழங்கிய உணவுப் பொருளிற்கான பெறுமதியாவும் அமெரிக்காவின் பெயரில் பி.எல்480 என்ற பெயரில் உள்ள கணக்கில் இலங்கை மத்திய வங்கியில் வைப்பில் இடப் பட்டிருந்தது. இதில் இருந்து பெருந்தொகைப் பணத்தை இலங்கைக்கான் அமெரிக்கத் தூதுவர் 1975இல் இருந்து எடுக்க முயன்றார். அப்போது இலங்கையின் நிதியமைச்சராக இருந்த இடது சாரி கட்சியான சமசமாஜக் கட்சியின் என் எம் பெரேரா அதன் உள்நோக்கத்தை உணர்ந்து கொண்டு அதற்கான விளக்கத்தை கோரி அதைத் தடுக்க முயன்றார். சிறிமாவே பண்டார நாயக்கவின் மருமகனும் பல அமைச்சுப் பொறுப்புக்களைத் தன்வசம் வைத்திருந்தவருமான பிலிக்ஸ் டயஸ் பண்டார நாயக்க உடனடியாக அமெரிக்காவிற்கு வரவழைக்கப் பட்டார். அவர் அமெரிக்காவில் இருக்கையிலேயே இலங்கையில் அரசிலிருந்து சமசமாஜக் கட்சியும் அரசிலிருந்து வெளியேறியது. பிலிக்ஸ் டயஸ் பண்டார நாயக்க அமெரிக்காவில் இருந்தே நிதியமைச்சராக அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதுவரகத்தில் பதவியேற்றுக் கொண்டார். அதன் பிற்பாடு சிறிமாவோ பண்டாரநாயக்காவின் சுதந்திரக் கட்சி தந்து தனியார் மயமாக்கற் கொள்கையைக் கைவிட்டது. அடுத்த தேர்தலில் அது படுதோல்வியடந்தது. சமசமாஜக் கட்சியும் கம்யூனிசக் கட்சியும் எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இல்ங்கையின் பெரும் அரசியல் மாற்றம் வாஷிங்டனில் நிகழ்த்தப் பட்டது.

இப்போது அமெரிக்கா இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் தொடர்பாக ஒரு 73 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. இவ்வாண்டின் ஆரம்பத்திலிருந்தே கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுரகம் பலதரப்பிலிருந்தும் முக்கியமாக பன்னாட்டுத் தொண்டர் அமைப்புக்களிடம் இருந்தும் தினசரி போர்முனைத் தகவல்களைத் திரட்டியுள்ளது என்பது அவ்வறிக்கையைப் பார்க்கும் போது புலப்படுகிறது. இத்தகவல்களை வைத்து அப்போது ஏதுச் செய்யாத அமெரிக்கா எல்லாம் முடிந்த பின் அறிக்கை வெளியிடுகிறது. இவ்வறிக்கையைத் தொடர்ந்து சரத் பொன்சேகா அமெரிக்கவிற்கும் எதிர்க் கட்சியான யூஎன்பியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்தோனிசியாவிற்கும் பயணமானார்கள்.

அமெரிக்காவில் இருந்து சரத் பொன்சேகா கூறியவை:
  • தாய் நாடு அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனை மாற்றியமைக்கப் போகிறேன்.
  • யுத்தம் தற்போது முடிவடைந்துள்ளது. தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வழி செய்யப்பட வேண்டும்.
  • மீண்டும் நாம்,ஒரு பிரபாகரன் தோன்றுவதற்கு வழிவகுத்து விடக்கூடாது.
  • நாம் நாட்டை,பிழையான வழியில் செல்ல அனுமதிக்கக்கூடாது. எனவே நாட்டை சரியான வழியில் நடத்திச்செல்ல நான் தயாராக இருக்கிறேன்.

சரத் பொன்சேகா அமெரிக்காவில் உள்ள பௌத்த விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே மேல் உள்ளவற்றைத் தெரிவித்தார். அந்த நிகழ்வில் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசிங்க மற்றும் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் சமந்தா சூரியபண்டார ஆகியோர் பங்கேற்கவில்லை. மஹிந்த ராஜபக்சே சரத்தின் அமெரிக்கப் பயணத்தில் மகிழ்ச்சியடையவில்லை அது தனக்கு வைக்கும் ஆப்பு என்பதைஅவர் உணர்ந்துள்ளாரா?

இதைத் தொடர்ந்து நடந்தவை இன்னும் முக்கிய மானவை. முதலில் சரத் பொன்சேகாவும் ரணில் விக்கிரமசிங்கவும் செய்மதித் தொடர்பினூடாக உரையாடினர். அதன் பின் சிங்கப்பூரில் வைத்து சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு, சிங்கப்பூரில் உள்ள,குரொன் பிளாசா ஹோட்டலில் 25 ம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.

அது மட்டுமல்ல அமெரிக்க போர் குற்ற அறிக்கை தொடர்பாக விசாரிக்கப் படும் என்று இலங்கை அரசு அறிவித்தது. இலங்கை அரசின் கடந்த கால செயற்பாடுகளை அறிந்தவர்கள் அனைவரும் இலங்கை அரசின் விசாரணைகள் பற்றி நன்கு அறிவர். இலங்கை அரசின் விசாரணையில் நம்பிக்கை இல்லை என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கண்காணிப்பகம் அறிவித்தது. ஆனால் அமெரிக்காவோ அதை வரவேற்பதாக அறிவித்தது.

PUBLIC LOAN ACCOUNT 480(பொதுக் கடன் கணக்கு 480) இலங்கையில் கட்சிகளின் கூட்டணியை உடைத்து சுதந்திரக் கட்சியின் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. PUBLIC LOAN ACCOUNT 480(பொதுக் கடன் கணக்கு 480)ஐப் போல போர் குற்ற அறிக்கை இலங்கையில் ஒரு அரசியல் மாற்றத்தையும் வெளியுறவுக் கொள்கை மாற்றத்தையும் இலங்கையில் ஏற்படுத்தப் போகிறது. இதனால் தமிழர்களின் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. கொல்லப் பட்ட அப்பாவிகளுக்கு நீதி கிடைக்கப் போவது மில்லை. வன்னி முகாம்களில் மட்டும் சில கண்துடைப்பு மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...