2016-ம் ஆண்டு தைவான் சுதந்திரமான நாடு என்ற கொள்கையுடைய சாய் இங் வென் அதன் அதிபராகப் பதவியேற்றதில் இருந்து சீனா தைவானை தனது ஒரு மாகாணம் என வலியுறுத்துவது அதிகரித்தது. 2019 ஜனவரியில் அமைதியான வழியில் அல்லது அது முடியாதவிடத்து ஒரு போர் மூலமாகாவேனும் தைவான் சீனாவுடன் இணைக்கப்படும் என்று சீன அதிபர் ஜீ ஜின்பிங் சூளுரைத்தார். அதன் பின்னர் தைவான் வான்பரப்புக்கு சீன விமானங்களும் அதன் கடற்பரப்பினுள் சீனப் போர்க்கப்பல்களும் அத்து மீறுவது அடிக்கடி நடக்கின்றது. 2016-ம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் தேர்தலில் வென்றவுடன் தைவான் அதிபர் தொலைபேசி மூலம் டிரம்புடன் பத்து நிமிடம் உரையாடியது சீனாவை ஆத்திரப்படுத்தியது. 2020 ஆகஸ்ட்டில் அமெரிக்க சுகாதாரத்துறை அமைச்சர் தைவான் சென்றது சீனாவைக் கடும் விசனத்திற்கு உள்ளாக்கியது.
தைவானின் முக்கியத்துவம்
சீனா ஒரு போர் மூலம் தைவானைக் கைப்பற்ற முயன்றால் அமெரிக்கா சீனாவிற்கு எதிராக போர் செய்தே ஆக வேண்டும். 1996-ம் ஆண்டு தைவானை ஆக்கிரமிக்க சீனா தயார் செய்த போது அப்போதைய அதிபராக இருந்த பில் கிளிண்டன் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை சீனாவிற்கும் தைவானிற்கும் இடையிலான தைவான் நீரிணக்கு அனுப்பியவுடன் சீனா தனது முயற்ச்சியைக் கைவிட்டது. பதினைந்து ஆழ்கடல் துறைமுகங்களைக் கொண்ட தைவானை சீனா கைப்பற்றினால் அதன் கடற்படை வலிமை மிகவும் அதிகமாகும். பசுபிக் பிராந்தியத்தில் சீனா அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் கொடுக்கக் கூடிய நாடாக மாறும். அதனால் தைவானை சீனா கைப்பற்றுவதை அமெரிக்கா எந்த வகையிலும் தடுக்கும். 2021-ம் ஆண்டு சீனா தைவானைக் கைப்பற்ற முயற்ச்சி செய்தால் என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம்.
சீனத் தாக்குதல்கள்
சீனா தைவானைக் கைப்பற்ற முன்னர் நான்கு பெரும் தாக்குதல்களைச் செய்ய வேண்டும். முதலாவது அமெரிக்க செய்மதிகளை ஏவுகணைகள் மூலம் அழிப்பதுடன் இணையவெளித் தாக்குதல் மூலம் அமெரிக்கப்படையினரின் தொடர்பாடல்களை நிர்மூலம் செய்ய வேண்டும். இரண்டாவது சீனாவின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள சீனப் பொருளாதாரதரத்தின் இதயமான கைத்தொழிற்பேட்டைகளை இலக்கு வைத்து தைவான் தனது மண்ணில் நிறுத்தி வைத்துள்ள ஏவுகணை நிலைகளை அழிக்க வேண்டும். மூன்றாவது அமெரிக்கா பசுபிக் மாக்கடல், இந்து மாக்கடல், ஜப்பான் கடல் ஆகியவற்றில் சீனாவை இலக்காகக் கொண்டு வைத்துள்ள பல படைத்தளங்களை அழிக்க வேண்டும். நான்காவதாக தைவான் நீரிணையில் உள்ள அமெரிக்க கடற்படையை அழிக்க வேண்டும். இறுதி நகர்வாக சீனா பெருமளவு படையினரை தனது கடற்கலன்கள் மூலம் 161கிமீ நீளமான தைவான் நீரிணையைக் கடந்து தைவானில் தரையிறக்கி தைவானைக் கைப்பற்ற வேண்டும்.
அமெரிக்காவின் இரண்டு தீவுச் சங்கிலிகள்.
யொக்கோசுக்கா, ஒக்கினோவா ஆகிய ஜப்பானியத் தீவுகள், தென் கொரியத் தீபகற்பம், பிலிப்பைன்ஸ் தீவுகள் ஆகியவற்றில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் முதற் சங்கிலித் தீவுகள் என அழைக்கப்படுகின்றன. ஜப்பானியத் தீவுகள், குவாம் தீவு, பலௌ தீவுக் கூட்டம், ஒஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகியவற்றில் உள்ள ஆகியவற்றில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் இரண்டாம் சங்கிலித் தீவுகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் மீது சீன கடுமையான தாக்குதலை மேற்கொள்ளும் ஆனால் முற்றாக அழிக்க முடியாது. சீனாவிற்கு சீனாவைச் சுற்றியே ஒரு நுழைவுமறுப்பு/இடமறுப்பு (Anti-access/Area denial) தடையைப் போடவே இந்த இரண்டு சங்கிலிகளையும் அமெரிக்கா உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவின் முதற்கட்ட தாக்குதல்
அமெரிக்காவைப் பொறுத்தவரை போர் இரண்டு கட்டங்களாக இருக்கும். முதற்கட்டத்தில் அமெரிக்க கடற்படையும் வான் படையும் சீனாமீது பதில் தாக்குதல் செய்யும் போது நடக்கும் போரில் சீனாவின் கடற்படை முற்றாக அழிக்கப்படும். ஒரு போர் என்று வரும்போது சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல் ஒரு மணித்தியாலம் கூட நின்று பிடிக்காது என்பது நிபுணர்களின் கணிப்பு. அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்கள் மீது சீனா தனது ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை வீசும். போரில் அமெரிக்கா ஈடுபடுத்தும் மூன்று விமானம் தாங்கிக் கப்பல்களில் இரண்டை சீனா அழித்துவிடும் முன்றாவது சேதங்களுடன் விலகிச் செல்லும். சீனாவின் ஏவுகணைத் தளங்களை இந்த மோதலின் போது அமெரிக்கா இனம் கண்டு கொள்ளும் பல ஆளில்லாப் போர் விமானங்கள் சீனாவை நோக்கிப் பாயும் அவற்றில் பல சீனாவின் ரடார்களுக்கு பெரிய விமாங்களைப் போல் தோற்றமளித்து ஏமாற்றக் கூடியவை. ஆளில்லாப் போர்விமானங்கள் மீது சீன செய்யும் தாக்குதல்களை வைத்து அவற்றைத் தொடர்ந்து வரும் அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள் சீனாவின் வான் பாதுகாப்பு முறைமையை முற்றாக அழித்து விடும். அதற்கு முன்னர் பிலிப்பைன்ஸ், குவாம் தீவு, ஜப்பானியத் தீவுக் கூட்டங்களில் உள்ள அமெரிக்கப் படைக்கலங்கள் பெரும் அழிவைச் சந்தித்திருக்கும். அமெரிக்காவின் ஹவாய் தீவு மற்றும் மேற்குக்கரை ஆகியவற்றிலும் சீனா தாக்குதல் செய்திருக்கும். முதலாம் கட்டப் போரில் அமெரிக்காவில் குடிசார் சேவைகள் பல சீனாவின் இணையவெளித்தாக்குதலால் செயலிழந்து இருக்கும். உலகெங்கும் உள்ள பல அமெரிக்கப் படைத்தளங்களில் சீனாவின் தொலைதூர ஏவுகணைகளும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருக்கும். அமெரிக்கப் பொருளாதார உற்பத்தி நிலைகள் பல செயலிழக்கச் செய்யப்பட்டிருக்கும். முதலாம் கட்டப் போரில் அமெரிக்கா பெரிய இழப்பைச் சந்தித்து சீனாவின் தாக்குதல் திறனை அழிக்கும். அமெரிக்கப் படைகள் உலகப் பந்து எங்கும் பரந்து இருப்பதால் எல்லாவற்றையும் சீனாவால் அழிக்க முடியாது. சீனாவின் படைத்தளங்கள் யாவும் உலகப் பந்தைப் பொறுத்தவரை சிறு பகுதியில் மட்டுமே இருக்கின்றது.
மறைந்திருந்து வரும் F-35B
பொதுவாக விமானப் படைத்தளங்கள் பெரிய ஓடுபாதைகளுடன் இருக்கும் அவற்றை இனம் காண்பது எதிரிகளுக்கு இலகுவானதாக அமையும். ஆனால் அமெரிக்காவின் F-35B போர் விமானங்கள் குறுகிய தூரம் மட்டும் தரையில் ஓடி வானில் கிளம்ப வல்லன. அத்துடன் தரை இறங்கும் போது உலங்கு வானூர்தி போல் செங்குத்தாக இறங்க வல்லன அவற்றை அகலமான தெருவில் இருந்து வானில் பறக்க வைக்க முடியும். அதனால் விமானத் தளங்களில் இல்லாமல் வேறு மறைவிடங்களில் வைத்திருக்க முடியும். சீனாவைச் சுற்றவர உள்ள அமெரிக்கப் படை நிலைகளில் உள்ள பல போர் விமானங்கள் சீனத் தாக்குதலில் இருந்து தப்பி சீனாவை தாக்கச் செல்லும் போது அவற்றை சீனாவால் ஒன்றும் செய்ய முடியாத நிலை உருவாகும். அவற்றின் குண்டு வீச்சுக்களால் எஞ்சியுள்ள சீன படை நிலைகள் அழிக்கப்படும். F-35B போர் விமானங்களைச் தைவானிற்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற கருத்து அமெரிக்காவில் வலிமை அடைந்து வருகின்றது. ஆரம்பத்தில் இருந்தே தைவான் அவற்றை வாங்க விரும்பியது. ஆனால் சீனாவை அது கடும் சினப்படுத்தும் என்பதால் அது தவர்க்கப்பட்டது. அமெரிக்க சீன முரண்பாடு மோசமடையும் போது அது நடக்கலாம்.
அமெரிக்காவின் இரண்டாம் கட்ட தாக்குதல்
ஜப்பானியத் தீவுகளை சீனா தாக்குதல் செய்தபடியால் ஜப்பான் ஒரு தாக்குதல் போரை சீனாவிற்கு எதிராக செய்யக் களமிறங்கும். அதே போலவே தென் கொரியாவும் களமிறங்கும். ஒஸ்ரேலியா அமெரிக்காவிற்கு துணை நிற்கும். பிரித்தானியா தனது விமானம் தாங்கிக் கப்பல்களில் ஒன்றை சீனாவிற்கு எதிராக களமிறக்கும். இந்தியா சீன எல்லைகளை நோக்கி படைகளை நகர்த்துவதன் மூலம் சீனாவின் கவனத்தை ஐதாக்கும். இந்திய விமானத் தளங்களில் ஐரோப்பாவில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்களில் இருந்து பெருமளவு போர் விமானங்கள் வந்து இறங்கும். கொல்கத்தா துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படை நிலை கொள்ளும். தென் சீனக் கடலில் சீனா நிர்மானித்த செயற்கைத் தீவுகளை ஜப்பான் அமெரிக்காவுடன் இணைந்து குண்டுகள் வீசி அழிக்கும். சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி முற்றாகத் தடைபடும். பாக்கிஸ்த்தானின் குவாடர் துறைமுகம் அமெரிக்க முற்றுகைக்கு உள்ளாகும். இரண்டாம் கட்டப் போர் சீனாவைத் திக்கு முக்காடச் செய்யும் படைநகர்வுகள் அதிகம் நடக்கும் தாக்குதல் நடக்காது. சீன மண்ணில் எந்த ஓர் அந்நியப் படையும் கால் வைக்க முடியாது. சீனா மீதான தாக்குதலைத் மேலும் தொடர்ந்தால் சீனா அணுக்குண்டைப் பாவிப்பேன் என மிரட்டும். அந்த நிலையில் போர் நிறுத்தப்படும்.
இரசியாவும் மற்ற நாடுகளும்
அமெரிக்க சீனப் போரின் ஆரம்பத்தில் இருந்தே இரசியா போர் நிறுத்தத்தை வலியுறுத்தும். சீனாவிற்கு சார்பான நிலைப்பாட்டை எடுக்கும். ஆனால் போரில் இறங்காது. சீனாவிற்கான படைக்கலன் விற்பனையையும் இரகசியமாகவே மேற்கொள்ளூம். சீன மக்களுக்குத் தேவையான அதிதியாவசியத் தேவைகளை இரசியா தரைப்பாதையூடாக பகிரங்கமாக வழங்கும். இந்த சூழலை இரசியா தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி லத்வியா, லித்துவேனியா, எஸ்த்தோனியா ஆகிய நாடுகளை ஆக்கிரமிக்கலாம். வட கொரியா சீனாவிற்கு தன்னால் முடிந்த உதவிகளை வழங்கும் ஆனால் அமெரிக்காவிற்கு எதிராக தாக்குதல் செய்யாது. வியட்னாம் தென் சீனக் கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும். வியட்னாம் சீன எல்லையில் தனது படைகளை நகர்த்தி சீனாமீதான அழுத்தத்தை அதிகரிக்கும். திபெத்தில் ஒரு மக்கள் எழுச்சியும் நடக்கும். இந்தியாவில் உள்ள திபெத்தியப் போராளிகள் சீனப் படைகள் மீது தாக்குதல் நடத்துவார்கள். நிலைமை சீனாவிற்கு மிகவும் பாதகமாக அமைந்தால் இந்தியா சீனா கைப்பற்றிய தனது நிலங்களை மீட்கும் நகர்வுகளை மேற்கொள்ளும். தைவான் தன்னிடம் எஞ்சியுள்ள ஏவுகணைகளை சீனாவின் பொருளாதார நிலைகள் மீது ஏவும்.
அமெரிக்கா தைவானை அங்கீகரிக்கும் நிலையை நோக்கி நகர்கின்றது. 2020 ஒக்டோபர் ஆரம்பதில் அமெரிக்க மூதவை உறுப்பினர்கள் ஐம்பது பேர் அமெரிக்கா தைவானுடன் வர்த்தக உடன்படிக்கை ஒன்றைச் செய்ய வேண்டும் என வற்புறுத்துகின்றனர். அமெரிக்கவிலும் தைவானிலும் அமெரிக்கா தைவானில் படைத்தளம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது. சீனா தைவானைக் கைப்பற்றும் நிலையை நோக்கி நகரும் போது தைவானை அமெரிக்கா ஒரு தனிநாடாக அங்கீகரித்து அங்கு தனது படைத்தளத்தை அமைக்க வேண்டி வரும்.
2021-ம் ஆண்டு தைவானைக் கைப்பற்றக் கூடிய அளவு வலிமை சீனாவிடம் இருக்காது. அமெரிக்காவை போர் தவிர்ந்த வேறு அரசுறவியல் நடவடிக்கைகள் மூலம் இரண்டு சங்கிலித் தீவுக் கூட்டங்களில் குறைந்தது அரைப் பங்கு தீவுகளில் இருந்தாவது அமெரிக்காவை வெளியேற்றி அங்கு சீனா படைத்தளங்கள் அமைத்த பின்னரே சீனாவால் தைவானைக் கைப்பற்றுவது பற்றி யோசிக்கலாம்.
No comments:
Post a Comment