Thursday, 7 October 2021

Strategic Autonomy: ஐரோப்பிய நாடுகளின் கேந்திரோபாய தன்னாளுமை

  


மேற்கு ஐரோப்பா என்பது சிறிய நாடுகளின் கூட்டமாகும். அதில் பெரிய நாடாகிய ஜேர்மனியின் மக்கள் தொகை எட்டுக் கோடியாகும். அதிலும் அதிக மக்கள் தொகை கொண்ட நான்கு மாநிலங்கள் இந்தியாவில் உள்ளன. மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மொத்த மக்கள் தொகை 19 கோடியாகும். அது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் மக்கள் தொகையின் குறைவானது. மேற்கு ஐரோப்பாவிற்கும் இரசியாவிற்கும் இடையில் உள்ள நாடுகளை கிழக்கு ஐரோப்பிய நாடுகளாக கருதலாம். தங்களது சிறுமை என்னும் வலிமையற்ற நிலையைத் தவிர்க்க பல ஐரோப்பிய நாடுகள் நேட்டோ என்னும் படைத்துறைக் கூட்டமைப்பிலும் ஐரோப்பிய ஒன்றியம் என்னும் பொருளாதாரம் மற்றும் அரசியல் கூட்டமைப்பிலும் இணைந்துள்ளன.

கேந்திரோபாய தன்னாளுமை

ஒரு நாடு தனது பாதுகாப்பிற்கும் உலக அரங்கில் அதனது செயற்பாட்டிற்கும் வேறு நாடுகளில் தங்கியிருக்காமல் இருப்பதை கேந்திரோபாய தன்னாளுமை (Strategic Autonomy) எனச் சொல்லலாம். ஐரோப்பிய ஒன்றியம் தனக்கு என ஒரு படையை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையை முன்பு பிரித்தானியா கடுமையாக எதிர்த்தது. பிரான்ஸ் அதை தீவிரமாக ஆதிரித்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறிய நிலையில் மீண்டும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு என ஒரு படை வேண்டும் என பிரான்ஸ் செயற்படுகின்றது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்த காலத்திலும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு என ஒரு கேந்திரோபாய தன்னாளுமை வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றிருந்தது. டிரம்ப் அமெரிக்கா ஐரோப்பாவின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா செலவு செய்யக் கூடாது என்ற கொள்கையுடையவர். சீனாவிலும் பார்க்க வலிமையான பொருளாதாரத்தை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டிருக்கின்றது. ஆனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் படைத்துறைக்கு போதிய நிதியை ஒதுக்குவதில்லை.



ஒதுக்கப்பட்டதாக உணரும் ஐரோப்பா

மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் கலந்து ஆலோசிக்காமல் அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறியதும் அமெரிக்கா, ஒஸ்ரேலியா, பிரித்தானியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து AUKUS என்ற படைத்துறைக் கூட்டமைப்பை உருவாக்கியதும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தங்களது கேந்திரோபாய தன்னாளுமை (strategic autonomy) பற்றி தீவிரமாக சிந்திக்க வைத்தன. ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறும் முடிவை அமெரிக்கா எடுத்த போது அங்கிருந்த ஐரோப்பிய நாடுகளின் படைகளும் வெளியேறியே ஆக வேண்டும் என்ற சூழல் உருவாகியது. அப்போது கருத்து வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஐரோப்பாவிற்கான பாதுகாப்பின் தேவை முன்பு எப்போதும் இல்லாத அளவு இன்று அதிகரித்திருக்கின்றது என்றார். மேலும் அவர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒவ்வொன்றும் ஐயாயிரம் படையினரைக் கொண்ட துரித பதிலிறுப்பு படையணி ஒன்றை உருவாக்க வேண்டும் என்றார். ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சரும் தனது டுவிட்டர் பதிவில் அதை ஆதரித்திருந்தார். நேட்டோ படையினர் ஒரு நிபந்தனையற்ற படை விலக்கலை ஆப்கானிஸ்த்தானில் இருந்து செய்வதை தான் விரும்பவில்லை என்றார் நேட்டோவின் பொதுச் செயலர் ஜென் ஸ்ரொலென்பேர்க்.

கேந்திரோபாய தன்னாளுமையும் ஐரோப்பிய ஒன்றியமும்

ஐரோப்பிய ஒன்றியத்திடம் கேந்திரோபாய தன்னாளுமை என்பது ஒரு கொள்கை நோக்கமாக (Policy Objective) 2016-ம் ஆண்டில் இருந்து இருக்கின்றது. கொள்கை நோக்கம் என்பது கொள்கை வகுப்பாளர்கள் விரும்புகின்ற விளைவுகளாகும். (A policy objective is a desired outcome that the policy makers wish to achieve). 2016-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் தனது உலகளாவிய கேந்திரோபாயத்தை வகுத்துக் கொண்டது (European Union Global Strategy). அதன் ஒரு பகுதிதான் கேந்திரோபாய தன்னாளுமையாகும்.

தனித்துவமான பிரான்ஸ்

பிரான்ஸ் தனது நாட்டின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவில் தங்கியிருப்பதை விரும்புவதில்லை. தனக்குத் தேவையான படைக்கலன்களைத் தானே உற்பத்தி செய்து கொள்கின்றது. பிரான்ஸ் உற்பத்தி செய்யும் போர்விமானங்கள், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் உலகத் தரம் வாய்ந்தவை. 2011-ம் ஆண்டு இரசியாவே பிரான்ஸிடமிருந்து இரண்டு உலங்கு வானூர்தி தாங்கிக் கப்பலை வாங்கும் ஒப்பந்தம் செய்தது. 2014-ம் ஆண்டு உக்ரேனை இரசியா ஆக்கிரமித்தமைக்கு ஆட்சேபனையாக அந்தக் கப்பல்களை இரசியாவிற்கு விற்பனை செய்வதை அமெரிக்காவின் வற்புறுத்தலின் பேரில் நிறுத்தியது. பிரான்ஸும் கிரேக்கமும் ஒன்றை ஒன்று பாதுகாக்கும் ஒப்பந்தம் செய்ததுடன் பிரான்ஸிடமிருந்து மூன்று பில்லியன் யூரோக்களுக்கு மூன்று Frigate வகைப் போர்க்கப்பல்களை கிரேக்கம் வாங்கும் ஒப்பந்தமும் கைச்சாத்திட்டன. பல ஐரோப்பிய படைத்துறை ஆய்வாளரகள் இது ஐரோப்பாவின் கேந்திரோபாய தன்னாளுமையின் முதற்படி என்கின்றனர்.

இரசியாவின் அச்சுறுத்தல்

மேற்கு ஐரோப்பிய நாடுகள் என்னும் போது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அவற்றின் தோழமை நாடுகளான நோர்வே, பிரித்தானியா, சுவிற்சலாந்து ஆகியவையும் அடங்கும். புவியியல் அடிப்படையில் பார்க்கும் போது போலாந்து, ஹங்கேரி, லித்துவேனியா, லத்வியா, எஸ்தோனியா ஆகியவை கிழக்கு ஐரோப்பிய நாடுகளாகும். இரசியாவால் தமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எனக் கரிசனை கொண்ட ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள நாடுகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளையும் அமெரிக்காவையும் சார்ந்து செயற்படுகின்றன. இரசியாவைப் பொறுத்தவரை தனக்கு என ஒரு கவசப் பிராந்தியம் அவசியம் என நினைக்கின்றது. அந்த கவசப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளான ஜோர்ஜியா, உக்ரேன் போன்ற நாடுகள் நேட்டோ கூட்டமைப்பிலோ ஐரோப்பிய ஒன்றியத்திலோ இணைவதை கடுமையாக எதிர்க்கின்றது. இரசியா தன் கவசப் பிராந்தியமான போல்ரிக் பிரதேச நாடுகள் மூன்றும் ஏற்கனவே இரண்டிலும் இணைந்தமை இரசியாவைப் பொறுத்தவரை மிகவும் கரிசனைக்கு உள்ள ஒன்றாகும்.

லிபிய மும்மர் கடாஃபியின் கருத்து

“ஐரோப்பாவில் ஐம்பது மில்லியன் இஸ்லாமியர்கள் வாழுகின்றார்கள். இன்னும் சில பத்து ஆண்டுகளின் கத்தியின்றி இரத்தமின்றி அவர்கள் அல்லாவின் கிருபையால் ஐரோப்பாவைக் கைப்பற்றுவார்கள்” என்றால் லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மர் கடாஃபி. ஐரோப்பாவில் இஸ்லாமிய தீவிரவாதம் பரவாமல் இருக்க அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறைகளின் ஒத்துழைப்பு ஐரோப்பிய நாடுகளுக்கு தேவைப்படுகின்றது. உளவுத்துறையிலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு கேந்திரோபாய தன்னாளுமை தேவைப்படுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலை உணர்ந்த போலாந்து

ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த பாதுகாப்புத்துறை உற்பத்தி $113 பில்லியன்களாகும். அமெரிக்காவின் வான்பாதுகாப்புத்துறையின் உற்பத்தி மட்டும் $697 பில்லியன்களாகும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது பாதுகாப்பை உறுதிய் செய்ய இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதனால் தான் இரசியா உக்ரேனை ஆக்கிரமித்தவுடன் போலாந்து தனது நாட்டில் அமெரிக்கா படைத்தளம் அமைக்க வேண்டும் என அமெரிக்காவை வேண்டிக் கொண்டதுடன் அதற்கான செலவின் பெரும் பகுதியை தான் ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்தது. ஜேர்மனியில் இருந்து தனது படையினரில் 12,000 பேரை விலக்க முடிவு செய்த அமெரிக்காவிற்கு இது நல்வாய்ப்பாகவும் அமைந்தது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு இல்லாவிடில் இரசியாவின் கிழக்கு எல்லையில் இருக்கும் லத்வியா, லித்துவேனியா, எஸ்த்தோனியா ஆகிய மூன்று சிறிய போல்ரிக் நாடுகளையும் இரசியாவால் ஒரு சில மணித்தியாலங்களுக்குள் கைப்பற்ற முடியும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் 27 நாடுகளில் 21 நாடுகள் நேட்டோவின் உறுப்பு நாடுகளாக உள்ளன. மேலும் நான்கு நாடுகள் நேட்டோவில் இணைய விண்ணப்பித்துள்ளன. நேட்டோவில் உள்ள துருக்கி, அல்பேனியா, மொண்டிநீக்ரோ, வட மசடோனியா ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. இரு அமைப்புகளினதும் தலைமைச் செயலகம் பிரஸல்ஸில் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் ஒரு முழுமையான அரசியல் ஒன்றியமாவதை (Political Union) அமெரிக்கா பகிரங்கமாக எதிர்க்கின்றது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் படைத்துறைக்கு அதிக செலவு செய்ய வேண்டும் என அமெரிக்கா கருதுகின்றது.

ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸைத் தவிர மற்ற நாடுகள் வானில் வைத்து எரிபொருள் நிரப்பும் வல்லமை இல்லாமல் இருக்கின்றன. பிரான்ஸும் உலங்கு வானூர்திகளுக்கு மட்டுமே எரிபொருள் நிரப்பக் கூடியது. தற்காலத்துக்குரிய ஆளில்லாப் போர் விமானங்கள், ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள், லேசர் படைக்கலன்கள், விண்வெளிப் படையணிகள் போன்றவை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் இல்லை. பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி, ஜேர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் வலிமையான படைகளைக் கொண்டவை. மற்ற பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பெயரளவில் சில படைகளை வைத்திருக்கின்றன. பெல்ஜியம், போர்த்துக்கல், ஒஸ்ரியா, பல்கேரியா, ஹங்கேரி, டென்மார்க் ஆகிய நாடுகளிலும் பார்க்க இரசியாவின் வலயத்தில் உள்ள சிறிய நாடாகிய பெலரஸ் படைவலிமை மிக்கதாகக் கருதப்படுகின்றது. Nuclear Triad எனப்படும் தரை, வான் கடலடியில் இருந்து அணுப்படைகலன்களை வீசக்கூடிய நாடுகளாக இந்தியா, சீனா, இரசியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இருக்கின்றன. முன்பு பிரான்ஸ் இந்த வல்லமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோவிலும் இல்லாத சுவீடன் சிறந்த படைக்கலன்களை உற்பத்தி செய்கின்றது.

கிரேக்கம்

நேட்டோவின் உறுப்பு நாடான துருக்கி நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் உறுப்புரிமை உள்ள நாடாகும். ஆனால் துருக்கி கிரேக்கத்திற்கு சொந்தமான கடற்பரப்பை தனது கடற்பரப்பு என உரிமை கொண்டாடுவதால் இரண்டு நாடுகளுக்கும் இடையில் முறுகல் உள்ளது. கிரேக்கம் முதலில் தனது பாதுகாப்பிற்கு சைப்பிரஸுடனும் இஸ்ரேலுடனும் ஒரு முத்தரப்பு ஒப்பந்தத்தை செய்தது. பின்னர் சைப்பிரஸுடனும் எகிப்த்துடனும் இன்னும் ஓரு முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் செய்தது. இந்த ஒப்பந்தங்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கேந்திரோபாய தன்னாட்சி இல்லாமையை எடுத்துக் காட்டுகின்றது. பிரான்ஸுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்வதற்கு கிரேக்கம் பிரான்ஸிடமிருந்து 24 ரஃபேல் விமானங்களையும் மூன்று போர்க்கப்பல்களையும் வாங்க வேண்டியிருந்தது.

அமெரிக்காவுடனான ஒத்துழைப்பின்றி நேட்டோ இருப்பது கடினமான ஒன்று என்றார் நேட்டோவின் பொதுச் செயலர் ஜென் ஸ்ரொலென்பேர்க்.


No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...