Monday 11 March 2019

கேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை

சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச் 3-ம் திகதி நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையில் இது பற்றி ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. வானில் எதிரி விமானங்கள் போரிட்டுக் கொள்வதை நாய்ச் சண்டை என அழைப்பார்கள். இந்தியாவிற்கும் பாக்கிஸ்த்தானுக்கும் இடையில் 2019 பெப்ரவரி இறுதியில் வானில் நடந்த மோதல்களை அடிப்படையாக வைத்தே இந்த ஐயம் எழுந்துள்ளது. இந்தியாவின் படைவலுவிலும் அரைப்பங்கு படைவலுவைக் கொண்ட பாக்கிஸ்த்தானால் எப்படி ஒரு இந்திய விமானத்தைச் சுட்டு வீழ்த்த முடிந்தது எனப் பல படைத்துறை நிபுணர்கள் ஆச்சரியப் படுகின்றார்கள் என்கின்றது நியூயோர்க் ரைம்ஸ். இந்தியப் படையினர் ஒரு மிகவும் பழைய துருப்புக் காவி வண்டியில் பயணிப்பதை கட்டுரையின் முகப்புப் படமாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

அவன் போட்ட கணக்கொன்று இனவ போட்ட கணக்கொன்று
2019 பெப்ரவரி நடந்த இந்திய பாக்கிஸ்த்தான் மோதலில் இந்தியா சிறப்பாக செயற்பட்டது என இந்திய ஊடகங்களில் இந்தியப் படைத்துறை நிபுணர்களும் முன்னாள் படைத்துறை அதிகாரிகளும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் போதே இந்தக் கட்டுரை நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. பெப்ரவரி 26-ம் திகதி இந்திய விமானங்கள் பாக்கிஸ்த்தானுக்குள் செய்த தாக்குதலுக்கு பாக்கிஸ்த்தான் பதிலடி கொடுக்கும் என இந்தியப் படையினர் கண்காணிப்புடன் இருந்தனர். கஷ்மீரின் கட்டுப்பாட்டு எல்லையில் ரோந்துப் பணியாக் அபிநந்தன் தனது மிக்-21 பைஸன் விமானத்தில் பறந்து கொண்டிருக்கையில் அவர் பாக்கிஸ்த்தானிய விமானங்களை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. பாக்கிஸ்த்தான் 24 விமானங்களைக் கொண்ட ஒரு படையணியை வேறு வேறு வான்பரப்பில் பறக்க விட்டிருந்தது, அவற்றில் எட்டு அமெரிக்கத் தயாரிப்பு F-16  விமானங்கள், நான்கு பிரெஞ்சு தயாரிப்பு மிராஜ்-3 விமானங்கள், நான்கு Mirage-3 நான்கு சீனத் தயாரிப்பு JF-17 விமானங்கள் என 12 விமானங்கள் கட்டுப்பாட்டு எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் உள்ள இந்தியப் படைத்துறை நிலைகளை தாக்க முயன்றன.அதை எதிர் கொண்ட அபிநந்தனின் மிக்-21 பைஸன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அபிநந்தன் ஒரு F-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார் என இந்தியா சொல்ல தாம் F-16ஐப் பயன்படுத்தவே இல்லை என்றது பாக்கிஸ்த்தான். பாக்கிஸ்த்தான் படையினர் வீசிய ஏவுகணைகளின் அலைவரிசைகளைக் குழப்பி அவற்றை இலக்கில் விழாமல் செய்தோம் என்றது இந்தியா. இந்தியாவின் SU-30 விமானத்தை தாம் சுட்டு வீழ்த்தியதாக பாக்கிஸ்த்தான் சொல்லியது. அபிநந்தன் என்கின்ற இந்திய விங் கொமாண்டர் பறந்த விமானம் சுட்டுவீழ்த்தப்படதும் அவரி பாக்கிஸ்த்தானில் கைது செய்யப்பட்டதும் இந்தியாவால் மறுக்க முடியாத உண்மை. நியூயோர்க் ரைம்ஸ் “இந்திய பாக்கிஸ்த்தான் மோதல் பொய்களின் அணிவகுப்பு” என இன்னும் ஒரு ஆசிரியக் கட்டுரையையும் வெளிவிட்டிருந்தது.

2015 டிசம்பரில் இரசியாவின் SU-24 போர்விமானம் ஒன்று தனது எல்லைக்குள் பறந்ததாகச் சொல்லி துருக்கி அதைச் தன்னிடமுள்ள அமெரிக்கத் தயாரிப்பு F-16 விமானத்தில் இருந்து வீசிய ஏவுகணையால் சுட்டு வீழ்த்தியது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். 

பின்னடைவு நிறைந்த இந்தியப் படைத்துறை
இந்தியாவுடனான படைத்துறை ஒத்துழைப்பு பற்றி ஆய்வு செய்த அமெரிக்கப் படைத்துறை நிபுணர்கள் வெளியிட்ட கருத்துக்களில் மூன்று முக்கியமானவை:
  1. இந்தியப் படைத்துறை தடித்த மேலாண்மை கட்டுப்பாடு (bureaucracy) உள்ள ஒரு அமைப்பு. அது பல செயற்பாடுகளைத் தாமதப்படுத்துகின்றது.
  2. இந்தியப் படைத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை.
  3. அரசு செய்யும் நிதி ஒதுக்கீட்டுக்கு மூன்று படைத்துறையும் ஒன்றுடன் ஒன்று போட்டி போடுவதால் அவர்களிடையேயான ஒத்துழைப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் படைகளுடன் பயிற்ச்சியில் ஈடுபட்ட இஸ்ரேலியப் போர்வீரர்கள் அவர்களின் பயிற்ச்சியையும் துணிவையும் பாராட்டி இருந்தார்கள். அவர்களும் இந்தியாவின் படையினரைத் தாங்கிச் செல்லும் கவச வாகனங்கள் மிகவும் பழையனவாக இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளனர். பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவிடமிருந்து மிகச் சொற்ப அளவு படைக்கலன்களை மட்டும் கொள்வனவு செய்த இந்தியா தற்போது 15பில்லியன் டொலர்கள் பெறுமதியான படைக்கலன்களை வாங்குகின்றது.

சாதனைகள் பல படைத்த இந்திய விமானப்படை
இந்தியாவிற்கும் பாக்கிஸ்த்தானுக்கும் இடையில் நடந்த நான்கு போர்களிலும் வலிமை மிக்க பாக்கிஸ்த்தானின் பல விமானங்களை இந்திய விமான்கள் அவற்றிலும் பார்க்க வலிமை குறைந்த விமானங்களில் பறந்து சென்று சுட்டு வீழ்த்திய சம்பவங்கள் பல உள்ளன. இந்தியாவின் மிகச் சிறந்த விமானிகளில் ஒருவராகக் கருதப்படும் பாப்பையா தேவய்யா 1965-ம் ஆண்டு இந்தியாவிற்கும் பாக்கிஸ்த்தானுக்கும் இடையில் நடந்த போரின் போது பாக்கிஸ்த்தானின் சர்கோடா விமானத் தளத்தைத் தாக்குவதற்கு தனது Mystere என்ற ஒலியிலும் பார்க்க குறைந்த வேகத்தில் பறக்கும் விமானத்தில் சென்றார். அவரது விமானத்தை அப்போது உலகின் சிறந்த விமானமாகக் கருதப்பட்ட அமெரிக்காவின் F-104 star fighter ஒலியிலும் வேகமாகப் பறந்து வந்து இடைமறித்து அவரது விமானத்தின் மீது ஏவுகணையை வீசியது. தனது பறக்கும் திறனால் அவர் அந்த ஏவுகணையில் இருந்து தப்பினார். பின்னர் அவரது விமானத்தை நோக்கி பல வேட்டுக்களை பாக்கிஸ்த்தான் விமானி வீசினார். அவற்றால் சிதைவடைந்த நிலையிலும் பறந்து சென்று எதிரி விமானத்ஹ்டை தேவய்யா சுட்டு வீழ்த்தி விட்டு தன் விமானத்துடன் விழுந்து மடிந்தார். அமெரிக்காவின் F-104 விமானததை முதலில் சுட்டு வீழ்த்திய பெருமை அதிலும் ஒரு வலிமை குறைந்த விமானத்தில் இருந்து சுட்டு வீழ்த்திய பெருமை அவருக்கு கிடைத்தது. அவர் இறந்து 30 ஆண்டுகளின் பின்னர் அவருக்கு உயர் விருது அளித்து இந்திய அரசு கௌரவித்தது. அவர் தென் இந்தியர் என்பதாலா? 1999கார்கில் போரின் போது பாக்கிஸ்த்தானின் F-16 போர்விமானிகள் இந்திய விமானிகளின் தாக்குதலுக்குப் பயந்து எல்லையை தாண்டி பறக்க மறுத்தார்கள். பங்களாதேசத்தை பாக்கிஸ்த்தானில் இருந்து பிரிக்கும் போரில் முதல் இரண்டு நாட்களுக்குள் பாக்கிஸ்த்தான் விமானப்படை முற்றாக அழிக்கப்பட்டது என்று சொல்லுமளவிற்கு இந்தியர்கள் தாக்குதல் நடத்தி இருந்தனர். 

சீனாவின் பாதை வேறு
2018-ம் ஆண்டு சீனா செய்த படைத்துறைச் செலவு 175பில்லியன் டொலர்கள் அதே வேளை இந்திய செய்த செலவு வெறும் 45 பில்லியன்கள் மட்டுமே. உலகின் நான்காவது பெரிய படைத்துறைச் செலவைச் செய்யும் நாடாக இந்தியா இருக்கின்றது. இந்தியாவின் அந்தப் படைத்துறைச் செலவில் பெருமளவு படையினரின் ஊதியம் ஓய்வூதியப் போன்றவற்றிற்கும் மற்ற செலவுகளுக்கும் போக போர்த்தளபாடங்கள் வாங்குவதற்கு அதில் 14பில்லியன் மட்டும் படைத் தளபாடங்கள் வாங்குவதற்கு செலவிடப்படுகின்றது. உலகில் படைக்கலன் இறக்குமதிக்கு அதிகம் செலவு செய்யும் நாடாக இந்தியா இருக்கின்றது. அதற்கு அடுத்த படியாக சவுதி அரேபியா, சீனா, ஐக்கிய அமீரகம், பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகள் அதிக படைக்கலன்களை இறக்குமதி செய்கின்றன. பலநாடுகள் தமது படைக்கலன்களின் தரத்தையும் தொழில்நுட்பத்தையும் மேம்படுத்தவும் உளவுத்துறையை திறன் மிக்கதாக்கவும் அதிகம் செலவு செய்கின்றன.  சீனா கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது படையினரின் எண்ணிக்கையை குறைத்து படைக்கலன்களின் திறனை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. சீனா கடந்த முப்பது ஆண்டுகளாகக் கண்ட பொருளாதார வளர்ச்சி பல கோடி மக்களை வறுமையில் இருந்து விடுவித்து வருமான வரி செலுத்தும் மத்தியதர மக்களாக மாற்றியமையால் அது அதிக பணத்தை செலவிடுகின்றது. மரபு வழி முப்படைகளுக்கும் மேலதிகமாக பல நாடுகள் இணையவெளிப் படையணி, விண்வெளிப்படையணி, இலத்திரனியல் போர்ப்படையணி என பல புதிய படையணிகளில் அதிக கவனம் செலுத்துகின்றன.

அமெரிக்காவிற்கு அதிகம் தேவைப்படும் இந்தியா
இந்தியாவின் பூகோள இருப்பும் அதன் படையினரின் எண்ணிக்கையும் அமெரிக்காவிற்கு இந்தியாவின் படைத்துறை ஒத்துழைப்பை அவசியமாக்கின்றது. இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் இந்தியா ஒரு சமநிலைப்படுத்தும் வல்லமை மிக்க நாடாக இருக்கின்றது. அதாவது இந்தியா எந்த வல்லரசுடன் இணைந்து செயற்படுகின்றதோ படைத்துறைச் சமநிலை அதற்கு சாதகமாக அமையும். 2024-ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை சீனாவையும் மிஞ்சி இந்தியா உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உருவெடுக்கும். 2030இல் இந்தியாவின் மொத்தத் தேசிய உற்பத்தி அமெரிக்காவினதிலும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜப்பான் அமெரிக்காவுடனும் இந்தியாவுடனும் சீனாவிற்கு எதிரான படைத்துறைக் கூட்டமைப்பைப் பெரிதும் விரும்புகிறது.

பழைய படைத்துறைத் தளபாடங்கள்.
இந்தியப் பாராளமன்றத்தின் படைத்துறைக்கான நிலையியற்க் குழுவின் உறுப்பினர் கௌரவ் கோகொய் இந்தியப் படையினர் பழைய போர்த் தளபாடங்களை வைத்துக் கொண்டு 21-ம் நூற்றாண்டு போரை எதிர்கொள்கின்றார்கள் என்றார். 2018-ம் ஆண்டின் படைவலுப் பட்டியலில் இந்தியா அமெரிக்கா, இரசியா, சீனா ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக நான்காம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் படைக்கலன்களில் 70 விழுக்காடு இரசியாவில் இருந்து வாங்கப்பட்டவை. இந்தியாவின் படைக்கலன்களில் 68 விழுக்காடு பழையவை என இந்திய அரச மதிப்பீடு சொல்கின்றது. அவை புரதான பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட வேண்டியவை என நியூயோர்க் ரைம்ஸ் சொல்லியிருப்பது ஆச்சரியப்பட வைக்கின்றது. 2015 மே மாதம் இந்தியாவின் அரச கணக்காய்வாளர்கள் ஒரு போர் நடந்தால் 10 நாட்களுக்கு போதுமான சுடுகலன்கள் மட்டும் இந்தியப் படையினர் வசம் இருப்பதாக அறிவித்தது.  பாக்கிஸ்த்தானின் படைக்கலன்களில் பெரும் பகுதி அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்டவை.

ஊழல் நிறைந்த படைத்துறைக் கொள்வனவு
இந்தியாவின் படைத்துறைக் கொள்வனவு தொடர்பாக பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. போபஸ் பீராங்கிக் கொள்வனவு, ரஃபேல் விமனக் கொள்வனவு போன்றவை பிரபல ஊழல் குற்றச் சாட்டுகளாகும். விமானி அபிநந்தன் ஓட்டிச்சென்று பக்கிஸ்த்தானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அல்லது விபத்தினால் விழுந்த மிக்-21 போர் விமானங்களைச் சேவையில் இருந்து நீக்கிவிட்டு ரஃபேல் விமானம் கொள்வனவு செய்யும் முடிவை இந்திய அரசு செய்திருந்தது. காங்கிரசு அரசு செய்த ஒப்பந்தத்தை பாரதிய ஜனதாக் கட்சி அரசு மாற்றியதால் கொள்வனவில் தாமதம் ஏற்பட்டது.

வெறும் படைக்கல விற்பனையாளர்களின் சதியல்ல
நியூயோர்க் ரைம்ஸ் ஓர் அமெரிக்க ஊடகம் அது இந்தியாவிற்கு படைக்கலன்களை விற்பனை செய்யும் முகவர்களால் வழிநடத்தப்பட்டு இந்தியாவை அதிக அமெரிக்கப் படைக்கலன்களை வாங்கத் தூண்டுகின்றது என்று சொல்லலாம். ஆனால் ஜப்பானிய ஊடகமான த டிப்ளோமட் என்னும் இணைய வெளிச் சஞ்சிகையில் இரு இந்தியப் படைத்துறை ஆய்வாளர்கள் (அவர்களில் ஒருவர் ஜப்பானியப் பல்கலைக்கழப் பேராசிரியர்) பாக்கிஸ்த்தானுடன் நடந்த மோதலின் பின்னர் இந்தியா தனது படையை நவீன மயப்படுத்த வேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளது என எழுதியுள்ளனர். இன்னும் ஒரு அமெரிக்க ஊடகமான போரின் பொலிசி என்ற ஊடகத்தில் நிலைமையை நேரடியாகப் போட்டு உடைத்துள்ளார்கள். “வான் சண்டையில் இந்தியாவின் தோல்வி அமெரிக்க விமான உற்பத்தி நிறுவனங்களின் வெற்றி” என்ற தலைப்பில் கட்டுரையை வெளிவிட்டுள்ளது. அதில் இந்தியா அவசரமாக தனது பழைய விமானங்களை கைவிட்டு புதிய விமானங்களை வாங்க வேண்டிய அவசர நிலைமை தோன்றியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவையும் சமாளிக்க வேண்டும்
பாக்கிஸ்த்தானுக்கும் இந்தியாவிற்கும் நடந்த எந்த ஒரு போரிலும் சீனா காத்திரமான உதவியைச் செய்யவில்லை. பங்களாதேசப் பிரிவினைப் போரின் போது அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஹென்றி கிஸ்ஸிஞ்சர் சீனாவைத் தலையிடும்படி செய்த தீவிர வற்புறுத்தலுக்கு சீனா மசியவில்லை. குறைந்தது சீனப் படைகளை இந்திய எல்லையை நோக்கி நகர்த்தும் படி கேட்டதையும் சீனா நிராகரித்தது. ஆனால் இந்த நிலை தொடரும் என இந்தியா எதிர்பார்க்க முடியாது. சீனாவும் பாக்கிஸ்த்தானும் இணைந்து இந்தியாவிற்கு எதிராகப் போர் புரியும் நிலையை இந்தியா சமாளிக்க வேண்டும் என வசப்ஜித் பனர்ஜீயும் பிரசாந்த் சுஹாஸும் த டிப்ப்ளோமட் சஞ்சிகையில் எழுதியுள்ளனர். இந்த மூன்று வெளி நாட்டு ஊடகங்களையும் ஒரு புறம் தள்ளினாலும் இந்தியப் படைத்துறை நிபுணர்களின் கட்டுரைகள் அதிகமாக வெளிவிடும் ஜோபொலிரிக்ஸ் சஞ்சிகையில் பாக்கிஸ்த்தானுடன் நடந்த மோதலுக்கு முன்னர் வெளிவந்த 2019-பெப்ரவரிப் பதிப்பில் இந்திய வான்படையில் உள்ள பற்றாக்குறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போது 31 தாக்குதல் படையணியைக் கொண்ட இந்திய வான்படை 40 படையணிகளாக அதிகரிக்க வேண்டியதன் அவசியம் அதில் விபரிக்கப்பட்டதுடன் மிக்-21 பைஸன் விமானங்களை சேவையில் இருந்து நீக்கி விட்டு அதற்குப் பதிலாக புதிய ரக விமானங்கள் சேர்க்கப்பட வேண்டும் எனவும் அச் சஞ்சிகையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் தனிநபர் வருமானம் 2010அளவில் பாக்கிஸ்த்தானிலும் பார்க்க அதிகமாகி. இப்போது இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகின்றது. இரு நாடுகளும் தமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நீண்ட தூரம் போக வேண்டி இருக்கின்றது. இரண்டு நாடுகளின் தனி நபர் வருமானம் இலங்கை, மாலை தீவு போன்ற நாடுகளிலும் குறைவானதே. படைத்துறைச் செலவுகளை அதிகரிப்பது வறியவர்கள் நிறைந்த நாட்டுக்கு உகந்ததல்ல.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...