Tuesday 12 February 2019

மீண்டும் போட்டிக்களமாகும் கருங்கடல்


ஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் (Inhospitable Sea) என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எதிர்ப்புக் காட்டுபவர்களாக இருந்ததாலும் அப்பெயர் சூட்டப்பட்டது. பின்னர் கிரேக்க குடியேற்ற ஆட்சியாளர்கள் கரையோரங்களை தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து அதன் பெயரை உபசரிப்புள்ள கடல் (Hospitable Sea) என மாற்றினர். உடைந்த இரும்புகள், இறந்த மரங்கள், விலங்குகள் போன்றவற்றால் உருவான கரும் சேறு நிறைந்திருந்ததாலும், பயணிப்பதற்கு கடுமையான கால நிலையைக் கொண்டிருந்ததாலும் அது கருங்கடல் என்னும் பெயரை பின்னர் பெற்றுக் கொண்டது. பல்கேரியா, ஜோர்ஜியா, இரசியா, ருமேனியா, துருக்கி உக்ரேன் ஆகிய நாடுகளுடன் கரையைக் கொண்டது கருங்கடல். இதன் மீதான ஆதிக்கத்தில் அதிக அக்கறை காட்டியவை இரசியாவும் துருக்கியுமே. பல நூற்றாண்டுகளாக அவை கருங்கடலின் ஆதிக்கத்திற்காக பல தடவைகள் போர் புரிந்தன.

தடையற்ற கருங்கடல் வர்த்தகம்
கருங்கடல் துருக்கியர்களின் உதுமானியப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் 1354-ம் ஆண்டில் இருந்து 1700-ம் ஆண்டு வரை இருந்தது. கருங்கடலின் வடகரையில் அதிக அளவு மக்கள் தொகை இல்லாததால் அங்கு மிகையாக உற்பத்தி செய்யும் அரிசி மற்றும் இறைச்சி போன்றவையும் அதிக அளவு மக்கள் தொகையைக் கொண்ட தென் கரையில் உற்பத்தியாகும் ஒலிவ் எண்ணெய், மதுரசம், பருத்தி போன்றவையும் சிறந்த வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்தி இருந்தது. பல போர்களில் உலக வர்த்தகம் பாதிக்கப்பட்டிருந்த போதெல்லாம் கருகடல் வடிநிலத்து வர்த்தகங்கள் தடையின்றி நடந்து கொண்டிருந்தன, நடந்து கொண்டிருக்கின்றன.

கருங்கடலும் கிறிமியாவும்
இரசியாவிற்கு வடக்கே உள்ளது பனி நிறைந்த வட துருவம். கிழக்குப் பகுதி நிலப்பரப்பைக் கொண்டது. உலகின் மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்டிருக்கும் இரசியாவிர்கு இருக்கும் இரு சிறு கடற்தொடர்புகளில் ஒன்று கருங்கடலூடாக இருக்கின்றது. பல இரசியா உட்படப் பல ஐரோப்பிய நாடுகள் கடற்கரையில் இருந்து 200 முதல் 300 மைல்கள் தொலைவில் இருக்கின்றன. இரசியாவின் கடற்தொடர்பிற்கு கருங்கடல் முக்கியம். அத்தொடர்பிற்கு கிறிமியாவின் ஸ்வெஸ்ரப்பொல் துறைமுகத்தில் இருக்கும் அதன் கடற்படைத்தளம் முக்கியத்துவம் வாய்ந்தது.

கிறிமியாவை இரசியா இலகுவில் கைவிடாது.
கிறிமியாவை துருக்கி தேசத்தவர்களின் உதுமானிய (ஒட்டோமன்) பேரரசு ஆண்டு வந்தது. பின்னர் அவர்களிடமிருந்து கிறிமியாவை 1774-ம் ஆண்டு போரின் மூலம் இரசியர்கள் கைப்பற்றிக் கொண்டனர். 1853-ம் ஆண்டு இரசியாவிடமிருந்து கிறிமியாவைப் பறிக்க ஒட்டோமன் பேரரசு, பிரான்சு, பிரித்தானிய ஆகிய நாடுகள் கிறிமியா மீது போர் தொடுத்தன. 1853-ம் ஆண்டிலிருந்து 1856-ம் ஆண்டுவரை போர் நடந்தது. இதில் இரசியா  பத்து இலட்சம் போர் வீரர்களையும் பலி கொடுத்தது. பிரித்தானியப் படையினரில் 25,000 பேரும் பிரெஞ்சுப் படையினரில் ஒரு இலட்சம் பேரும் கொல்லப்பட்டனர். ஐரோப்பிய வரலாற்றில் இது மிக அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய போராகும். இறுதியில் ஒட்டொமன் பேரரசுக்கு சில விட்டுக் கொடுப்புக்களை இரசியா மேற்கொண்டு கிறிமியாவைத் தனதாக்கியது. 1917-ம் ஆண்டு இரசியப் புரட்சியின் போது கிறிமியா ஒரு தனி நாடாகச் சிலகாலம் இருந்தது. பின்னர் இரசியப் படைத்தளமானது. 1921-ம் ஆண்டு கிறிமியா சோவியத் ஒன்றியத்தின் ஒரு குடியரசானது.  1942-ம் ஆண்டு உலகப் போரின் போது ஜேர்மனி கிறிமியாவைக் கைப்பற்றியது. ஜேர்மனி கிறிமியாவைக் கைப்பற்ற ஆறு மாதங்களுக்கு மேல் எடுத்தது. 1944-ம் ஆண்டு கிறிமியாவை சோவியத் ஒன்றியம் மீளக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து ஜேர்மனியருடன் ஒத்துழைத்தார்கள் என்பதற்காக ஜேசேப் ஸ்டாலின் கிறைமியக் குடிமக்களான டாட்டார் இசுலாமியர்கள் மூன்று இலட்சம் பேரை கிறிமியாவில் இருந்து வெளியேற்றி சோவியத்தின் வேறு பிராந்தியங்களில் குடியேற்றினார். சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் பலர் திரும்பி வந்தனர்.  1945-ம் ஆண்டு கிறிமியா சோவியத் ஒன்றியத்தின் கீழ் ஒரு குடியரசு என்ற நிலையை நீக்கி அது சோவியத்தின் ஒரு மாகாணமாக (Crimean Oblast) மாற்றப்பட்டது. 1954-ம் ஆண்டு கிறிமியாவை இரசிய அதிபர் நிக்கித்தா குருசேவ் உக்ரேனுடன் இணைத்தார். உக்ரேனியரான குருசேவ் இரசியாவிற்கு தவறிழைத்தார் என்கின்றனர் இரசியர்கள் இப்போது. 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் போது அப்போதைய இரசிய அதிபர் பொரிஸ் யெல்ஸ்ரின் கிறிமியாவை இரசியாவின் ஒரு பகுதியாக வைத்திருப்பார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அதை உக்ரேனுடன் இருக்க வைத்து கிறிமியாவில் இரசியக் கடற்படை தொடர்ந்து இருக்க உடன்பாடு செய்து கொண்டார். 1997-ம் ஆண்டு 2042-ம் ஆண்டுவரை இரசிய படைத்தளம் கிறிமியாவின் செவஸ்ரப்பொல் பிராந்தியத்தில் இருக்க உக்ரேனும் இரசியாவும் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டன. 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 16-ம் திகதி கிறிமியாவில் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு அதன்படி கிறிமியா இரசியாவுடன் இணைக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்புச் செல்லாது என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்திற்கு 100நாடுகள் ஆதரவு தெரிவித்தன. 11நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 58 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

திரிக்கும் மேற்கு நாடுகள்
2014-ம் ஆண்டு இரசியா கிறிமியாவை ஆக்கிரமித்த பின்னர் கருங்கடல் பெரும் முக்கியத்துவம் பெற்றதாக மேற்கு நாட்டு ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனல் கிறிமியாவில் இரசியா உக்ரேனின் சம்மதத்துடன் வைத்திருந்த கடற்படைத் தளத்தை நீக்குவதற்கு செய்த சதியை முறியடிக்கவே இரசியா கிறிமியாவை ஆக்கிரமித்தது. சோவியத் ஒன்றியம் 1991இல் வீழ்ச்சியடைந்த போது இரசியர்களிடம் அமெரிக்காவும் மற்ற மேற்கு நாடுகளும் கிழக்கு ஜேர்மனியை மட்டும் நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பில் இணைக்கப்படும் என உறுதியளித்திருந்தன. ஆனால் 1991-ம் ஆண்டின் பின்னர் இரசியா வலுவிழந்திருந்த நிலையில் அல்பேனியா, போலாந்து, ருமேனியா ஹங்கேரி பல்கேரியா, எஸ்த்தோனியா, லத்வியா, லித்துவெனியா, சுலோவேக்கியா, சுலோவேனியா, குரோசியா ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைக்கப்பட்டன. இவற்றை எல்லாம் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருந்த இரசியா ஜோர்ஜியாவையும் உக்ரேனையும் நேட்டோவில் இணைக்க முயன்றபோது தனது படை நடவடிக்கைகளை முடுக்கி விட்டது. இரசியா தானமாக வழங்கிய கிறிமியாவைக் கொண்ட உக்ரேனை நேட்டோ தன்னுடன் இணைக்க சதி செய்தபோது இரசியா வெகுண்டெழுந்தது. உக்ரேனின் கிறிமியாவைத் தன்னுடன் இணைத்ததுடன் இரசியர்கள் பெரும்பான்மையாக வாழும் உக்ரேனின் கிழக்குப் பகுதியில் பிரிவினைவாதத்தை தூண்டிக் கொண்டிருக்கின்றது. இரசியாவை புவிசார் கேந்திரோபாய ரீதியிலும் புவிசார் பொருளாதார ரீதியிலும் முடக்கச் செய்யும் நகர்வுகளை நேட்டோவும் ஐரோப்பிய ஒன்றியமும் செய்வதகாகக் கரிசனை கொண்ட இரசியாவின் எதிர்வினையா உக்ரேனிற்கு எதிராக இரசியா செய்யும் நடவடிக்கைக்களாகும்.

எங்கள் கடல்
நேட்டோவினது படை நகர்வுகளையும் ஐரோப்பிய ஒன்றியம் கிழ்க்கு ஐரோப்பாவில் தனது பொருளாதார ஆதிக்கத்தை விரிவு படுத்துவதற்கும் எதிரடியாக சீனா தென் சீனக் கடலை தனது ஆதிக்கத்தின்கீழ் முழுமையாகக் கொண்டு வர முயல்வது போல இரசியா கருங்கடலை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர முயல்கின்றது. ரோமப் பேரரசு மத்திய தரைக் கடலை “எங்கள் கடல்” (mare nostrum) என்றது போல் கருங்கடலை இரசியா தன் கடல் ஆகக் காட்ட முயல்கின்றது. இரசியாவில் இருந்து கிறிமியாவிற்கு ஒரு பாலத்தை அஜோவ் கடலில் அமைத்து உக்ரேனின் கருங்கடலுக்கான தொடர்பில் தடைகளை ஏற்படுத்துகின்றது, கடந்த பத்து ஆண்டுகளாக லித்துவேனியா ஊடாக மத்திய ஐரோப்பாவை இரசியா ஆக்கிரமிக்க முயற்ச்சிப்பது போல பாசாங்கு காட்டிக் கொண்டிருந்தது இரசியா. அதனால் நேட்டோ நாடுகள் அங்கு கவனம் செலுத்திக் கொண்டிருக்க கருங்கடலில் தனது நடமாட்டங்களை இரசியா அதிகரித்தது.

கருங்கடலில் இரசிய ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு இரசியாவிற்கு துருக்கியின் நட்பு மிக அவசியம். துருக்கிக்கும் கிரேக்கத்திற்கும் இடையில் உள்ள சிறு நீரிணையூடாகவே இரசியக் கப்பல்கள் மத்திய தரைக்கடலுக்குச் செல்ல முடியும். இரசியாவின் மேற்காசியா மற்றும் வட ஆபிரிக்கா பிராந்தியங்களின் மீதான ஆதிக்கத்தை துருக்கி அமெரிக்காவுடன் இணைந்து கட்டுப்படுத்த முடியும். இந்த நிலையில் அமெரிக்காவின் USS Fort McHenry என்ற தரையிறங்கற் கப்பல் 2019 ஜனவரி 6-ம் திகதியும் USS Donald Cook என்ற நாசகாரிக் கப்பல் கருங்கடலில் உள்ள ருமேனியாவினதும் ஜோர்ஜியாவினதும் துறைமுகங்களுக்கு 2019 ஜனவரி 19-ம் திகதி பயணம் செய்தன. இக்கப்பல்களை இரசியாவின் கரைசார் கப்பல்கள் நிழலாகத் தொடர்ந்தன. உக்ரேனின் கப்பல்களுக்கு இரசியா தடை விதிக்கும் வகையில் நடந்த போது சீனாவின் செயற்கைத் தீவிற்கு சவால் விடக் கூடிய வகையில் தென் சீனக் கடலுக்கு அமெரிக்கக் கப்பல்களும் விமானங்களும் பயணித்தது போல் இரசியாவிற்கு கருங்கடலில் சவால் விடும் வகையில் அமெரிக்கக் கப்பல்கள் பயணிப்பது இலகுவான ஒன்றல்ல எனப் படைத்துறை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தமைக்கு மாறாக அமெரிக்கா மேற்படி இரண்டு கப்பல்களையும் கருங்கடலுக்கு அனுப்பியிருந்தது.

கிரேக்கம், ஆர்மீனியா, பல்கேரியா, சேர்பியா ஆகிய நாடுகளில் இரசியா தனக்கு ஆதரவான கட்சிகள் ஆட்சிக்கு வரச் செய்யும் மென்வலு நகர்வுகளையும் செய்கின்றது. அதன் மூலம் கருங்கடலையும் கிழக்கு ஐரோப்பாவையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர முடியும் என அது நினைக்கின்றது. ஆனால் வெளியில் இருந்து திணிக்கப்படும் ஆட்சி மாற்றங்கள் கலவரங்களில் முடியும் என்பதுடன் பிராந்திய அமைதிக்கு குந்தகமாகவும் அமையும். கருங்கடல் ஆதிக்கப் போட்டி அதை செங்கடலாக மாற்றாமல் இருப்பதை வல்லரசு நாடுகள் உறுதி செய்ய வேண்டும்.


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...