Monday 1 July 2019

உலகப் பொருளாதாரம் சரிவடையுமா?


எந்த ஒரு நாட்டிலாவது தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளுக்கு அந்த நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி குறைவடைந்தால் அங்கு பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ளது என்பார்கள். அது முழு உலகத்திற்கும் பொருந்தும். 2008-ம் ஆண்டு உலகெங்கும் ஏற்பட்ட பொருளாதார சரிவை ஒரு சிலர் மட்டுமே எதிர்வு கூறியிருந்தனர். 2018-ம் ஆண்டு உலகப் பொருளாதாரம் 2.9% வளர்ச்சியடைந்தது. இது 2015-ம் ஆண்டின் பின்னர் கண்ட மிகப் பெரும் வளர்ச்சியாகும். 2019-ம் ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 2.6% எனவு உலக வங்கியும் 3.0% என ஐக்கிய நாடுகள் சபையும் எதிர்வு கூறியுள்ளன.
பன்னாட்டு நாணய நிதியத்தின் கணிப்பீட்டின் படி அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் தொடர்ந்தால் உலகப் பொருளாதார உற்பத்திக்கு 455பில்லியன் டொலர்கள் பெறுமதியான பாதிப்பு ஏற்படும். உலகெங்கும் உள்ள அரச கடன் முறிகளின் ஈட்டத்திறனை ஆய்வு செய்த பொருளாதார நிபுணர்கள் விரைவில் உலகப் பொருளாதார வீழ்ச்சியைச் சந்திக்கும் என எதிர்வு கூறியுள்ளார்கள்.

கடன்முறிகளும்(Bonds) அவற்றின் ஈட்டத்திறனும்(Yield)
பொதுவாக ஓர் அரசு கடன் பெறும் போது வழங்கும் பத்திரம் கடன் முறி என்ப்படும். கடன்முறிகளுக்கு என 1. ஒரு பெறுமதி, 2. கால எல்லை, 3. வட்டி என்பன இருக்கும். கடன் முறிகளை அரசின் திறைசேரி விற்பனை செய்யும். பெரு முதலீட்டாளர்களும் வங்கிகளும் அவற்றை வாங்குவர். அரசின் நடுவண் வங்கி கூட அவற்றை வாங்கும். ஏற்கனவே திறைசேரி விற்பனை செய்த கடன் முறியை அதை வாங்கியவர் விற்பனை செய்யலாம். அதனால் கடன்முறிகளின் விலை அவ்வப்போது அதிகரிக்கும் அல்லது குறையும். 12% வட்டி தரும் கடன் முறியை நூறு டொலருக்கு திறை சேரி விற்பனை செய்த்தால் அதன் ஈட்டத்திறன்(இலாபத்திறன் எனவும் அழைக்கலாம்) 12% ஆகும். நாட்டில் வட்டி விழுக்காடு 12%இலும் குறைவடையும் என்ற நிலை வரும் போது கடன்முறிகளின் விலைகள் அதிகரிக்கும். நாட்டின் வட்டி விழுக்காடு 10% என வரும் போது நூறு டொலருக்கு வாங்கிய கடன்முறி 120டொலர்களாக அதிகரிக்கும். அதனால் அந்தக் கடன்முறியில் ஈட்டத்திறன் 10விழுக்காடு ஆகும். கடன்முறியில் ஈட்டத்திறன் என்பது அதன் ஈட்டமான 12ஐ அதன் விலையால் பிரித்துப் பெறப்படும். இங்கு கடன்முறியின் ஈட்டத்திறன் முதலில் அதை வாங்கும் போது12% ஆக (அதாவது வட்டி 12ஐ விலையான 100ஆல் பிரிக்க வரும் பெறுமதி) இருந்தது. பின்னர் நாட்டில் வட்டி 10% ஆன போது அதன் விலை 120டொலர்களாக ஈட்டத்திறன் 10ஆகக் குறையும் வகையில் அதிகரித்தது. பொதுவாககடன் முறிகளின் கால எல்லை 3 மாதம் முதல் 30 ஆண்டுகள் வரை இருக்கும். கால எல்லையின் இறுதியில் விற்பனை செய்த திறைசேரி அதை மீள வாங்கும் என்பதாகும். எளிமையாகச் சொல்வதானால் கடன்முறி விற்பனை என்பது அரசு கடன் பெறுவதாகும். கடன் முறிகளின் ஈட்டத்திறன் நாட்டின் வட்டி விழுக்காட்டுக்கு ஏற்ப மாறும்.

ஈட்டத்திறன் வரைபடம் YIELD GRAPH
கடன் முறிகளின் ஈட்டத்திறன் கால ஓட்டத்துடன் இணைத்து வரையப்படும் வரைபடம் YIELD GRAPH எனப்படும். அரச கடன்முறிகளில் இருந்து எதிர்காலத்தில் கிடைக்கும் ஈட்டத்தை அடிப்படையாக வைத்து இது வரையப்படும். இந்த வரைபடம் மேல் நோக்கி நகர்வது சாதாரண YIELD GRAPH. அப்படி இருக்கும் போது குறுங்கால வட்டி விழுக்காடு நீண்ட கால வட்டி விழுக்காட்டிலும் குறைவாக இருக்கும். அது எதிர்காலப் பொருளாதார வளர்ச்சியைக் சுட்டிக்காட்டும். வரைபடம் தட்டையாக இருந்தால் குறுங்கால வட்டி விழுக்காடும் நெடுங்கால வட்டி விழுக்காடும் சமமாக இருக்கும் என எதிர்வு கூறலாம். பொருளாதார ஏற்றம் அல்லது இறக்கம் பெரிதாக இருக்காது என எதிர்வு கூறலாம். தலைகீழ் ஈட்டத்திறன் வரைபடம் அதாவது INVERTED YIELD GRAPH. குறுங்கால வட்டி விழுக்காடு அதிகமாகவும் நெடுங்கால வட்டி விழுக்காடு குறைவாகவும் இருக்கும் எனற எதிர்பார்ப்பு இருக்கும் போது உருவாகும். அப்படி இருக்கும் போது 18 மாதங்களுக்குள் பொருளாதாரச் சரிவு ஏற்படும் என எதிர்வு கூறுவர்.

ஈட்டத்திறன் பரம்பல் (YIELD SPREAD)
மூன்றுமாத கடன்முறிகளின் ஈட்டத்திறனுக்கும் பத்தாண்டு கால கடன்முறிகளின் ஈட்டத்திறனுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் ஈட்டத்திறன் பரம்பல் (YIELD SPREAD) எனப்படும். இது சிறந்த பொருளாதாரச் சுட்டியாகக் கருதப்படுகின்றது. இது இப்போது சுழியத்திற்கு கீழ் இருப்பதால் பொருளாதாரச் சரிவு நிச்சயம் வரும் என சில பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறுகின்றார்கள். ஒரு சிறந்த பொருளாதார சூழல் இருக்கும் போது குறுங்கால கடன்முறிகளின் ஈட்டத்திறனிலும் பார்க்க நெடுங்கால கடன்முறிகளின் ஈட்டத்திறன் மூன்றிலும் அதிகமாக இருக்கும். பொருளாதார சரிவு வரும் என்ற எதிர்பார்ப்பில் முதலீட்டாளர்கள் நெடுங்கால கடன்முறிகளை அதிகம் வாங்குவர். அதனால் அவற்றின் விலைகள் அதிகரித்து ஈட்டத்திறன் குறைவடையும். வரலாற்று அடிப்படையில் வளர்ச்சியடைந்த நாடுகளில் பொருளாதாரச் சரிவு தொடர்ச்சியாக 18 மாதங்களுக்கு மேல் இருப்பதில்லை. அதனால் அந்தப் 18 மாதங்களுக்கு அப்பாற்பட்ட கால எல்லையைக் கொண்ட நீண்ட கால கடன்முறிகளை வாங்குவது பாதுகாப்பானதாகும். பொருளாதாரம் சரியலாம் என்ற நிலை இருக்கும் போது அந்த 18 மாதப் பிரச்சனை அடிப்படையில் பார்த்தால் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைந்த கால எல்லையைக் கொண்ட கடன்முறிகளை வாங்குவது பாதுகாப்பு அற்றதாகும்.  
பொருளாதார வளர்ச்சி குன்றினால் நடுவண் வங்கிகள் வட்டி விழுக்காட்டைக் குறைத்து நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரித்து மக்களின் கொள்வனவை அதிகரிக்க முயற்ச்சி செய்யும். நெடுங்கால வட்டி விழுக்காடு குறையப்போகின்றது என சந்தச் சுட்டிகள் காட்டுவதால் பொருளாதாரம் சரிவடையப் போகின்றது என பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறுகின்றார்கள். அதுவும் அடுத்த 18 மாதங்களில் உலகப் பொருளாதாரம் சரிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மக்கள் தொகைக் கட்டமைப்பு உகந்ததாக இல்லை.
உலகப் பொருளாதார வளர்ச்சி 2020இல் சரிவடையும் போது உலகில்
பணவீக்கம் மிகவும் குறைவானதாக இருக்கும். அதனால் வட்டி விழுக்காட்டை குறைப்பது பாதுகாப்பானதாக இருக்கும். இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் மக்கள் தொகைக் கட்டமைப்பு பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லை. மேற்கு நாடுகள் பலவற்றிலும் சீனா, ஜப்பான் போன்ற முன்னணி ஆசிய நாடுகளிலும் முதியோர் தொகை இளையோர் தொகையிலும் அதிகமானதாக இருக்கின்றது. அதனால் நாட்டில் கொள்வனவு குறைந்து கொண்டு போகும். அதனால் பொருளாதார வளர்ச்சியும் குன்றும்.
மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படும் ஜேர்மனியின் கடன்முறி ஆவணங்கள் போதிய அளவு விற்பனைக்கு இல்லை. அதனால் பாதுகாப்பான முறிகளின் விலை அதிகரிக்க ஈட்டத்திறன் குறைகின்றது.

பாதுகாப்பான கடன்முறிகளுக்கு தட்டுப்பாடு.
உலகின் பாதுகாப்பான கடன்முறிகளை விற்பனை செய்யும் ஜேன்மனி தனது கடன்படுதலை குறைத்துக் கொண்டே போகின்றது.  முறிகள் 1.7ரில்லியன் டொலர்கள் பெறுமதியானவை மட்டுமே, அமெரிக்க முறிகள் 16ரில்லியன் டொலர்கள் பெறுமதியானவை. ஜேர்மனியில் மிகை பாதீடு (BUDGET SURPLUS) அதாவது அரச வருமானம் செலவிலும் அதிகமாக உண்டு. ஜேர்மனி அரச கடன் மொத்தத் தேசிய உற்பத்தியின் 80%ஆக இருந்து 59% ஆகக் குறைந்துவிட்டது. ஓர் அரசு அதிகம் செலவு செய்யும் போது அதன் மொத்த தேசிய உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உண்டு. 2019 ஜூன் மாதம் 20-ம் திகதியளவில் பிரெஞ்சு கடன்முறிகளின் ஈட்டத்திறன் சுழியமாகிவிட்டது. போர்த்துக்கல்லின் கடன் முறிகளின் ஈட்டத்திறன் 2011இல் 18% இருந்தது இப்போது 0.51%ஆகக் குறைந்துவிட்டது.

கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டி (Purchase Managers Index)
கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டி அமெரிக்காவில் ஐம்பதிலும் சிறிது அதிகமாக இருக்கின்றது. ஜப்பானில் ஐம்பதிலும் குறைவு. யூரோ வலய நாடுகளில் 48இலும் குறைய. சீனாவிலும் ஐம்பதிலும் குறைவான நிலையில் இருக்கின்றது. கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டி ஐம்பது விழுக்காட்டிலும் குறையும் போது பொருளாதாரச் சரிவு உருவாகும். ஐம்பதிற்கு மேல் இருக்கும் போது பொருளாதாரம் வளரும். 2019 ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரை உலக கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டி 52%இற்கு மேல் இருந்தது. மே மாதம் 51.5% விழுக்காட்டிலும் குறைந்து விட்டது. இந்தப் போக்கு தொடர்ந்தால் இச்சுட்டி 50விழுக்காட்டிலும் குறைந்து பொருளாதாரச் சரிவு ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம்.

இரசியா, ஈரான், வட கொரியா, வெனிசுவேலா போன்ற நாடுகளுக்கு எதிராக மேற்கு நாடுகள் செய்த பொருளாதாரத் தடையும் உலகப் பொருளாதார உற்பத்தியைக் குறைத்துள்ளன. அமெரிக்க சீன வர்த்தகப் போர் தொடர்ந்தால் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி 0.8%ஆலும் சீனாவினது 0.4% ஆலும் பாதிப்படையும். உலகப் பொருளாதாரம் 3.5% வளர்ச்சியடையும். அமெரிக்காதான் முதன்மையானது என அடம்பிடித்தாலும் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி 0.8%ஆலும் சீனாவினது 0.4% ஆலும் பாதிக்கப்படும்.
இரு நாடுகளும் மேலும் இறக்குமதி வரிகளை அதிகரித்து மோசமான வர்த்தகப் போர் தொடர்ந்தால் பனாட்டு நாணய நிதியத்தின் கணிப்பின்படி உலக மொத்த தேசிய உற்பத்தியில் 455பில்ல்லியன் டொலர்கள் குறையும். உலகப் பொருளாதார வளர்ச்சி 2.6% மட்டும்.

அப்பிள் நிறுவனம் தனது Mac Pro கணினிகளின் உற்பத்தியை சீனாவிற்கு நகர்த்துவதாக ஜூன் மாத இறுதியில் எடுத்த முடிவு சீன அமெரிக்க வர்த்தகப் போர் சுமூகமான முடிவை எட்டும் என்ற செய்தியைச் சொல்கின்றது. 

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...