Monday 12 November 2018

அமெரிக்கப் பாராளமன்றத் தேர்தல் முடிவுகளின் விளைவுகள்



அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை அதிபர் தேர்தல் நடக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை பாராளமன்றத் தேர்தல் நடக்கும். அதிபர் தேர்தல் நடக்கும் போது பாராளமன்றத்திற்கும் தேர்தல் நடந்தால் அது பொதுத் தேர்தல் என்று அழைக்கப்படும். அதிபர் தேர்தல் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடக்கும் பாராளமன்றத் தேர்தல் இடைக்காலத் தேர்தல் என அழைக்கப்படும். இடைக்காலத் தேர்தல் அதிபராக இருப்பவரின் ஆட்சிமீதான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பாகக் கருதப்படும். அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களில் இருந்து ஒரு மாநிலத்திற்கு இரு உறுப்பினர் என்ற அடிப்படையில் மூதவைக்கு நூறு உறுப்பினர்கள் இரண்டு ஆண்டு கால சுழற்ச்சி முறையில் தெரிவு செய்யப்படுவர்.

இரண்டு அவைகள் கொண்ட பாராளமன்றம்
அமெரிக்கப் பராளமன்றம் மக்களவை, மூதவை என இரு அவைகளைக் கொண்டது. இரண்டுக்கும் உறுப்பினர்கள் தேர்தல் மூலம் நேரடியாகத் தேர்ந்தெடுப்பார்கள். மக்களவையின் மொத்த 435 உறுப்பினர்களுக்குமான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடக்கும். மொத்தம் 100 உறுப்பினர்களைக் கொண்ட மூதவையின் மூன்றில் ஒரு உறுப்பினர்களுக்கான தேர்தல் மட்டும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடக்கும். தெரிவு செய்யப்பட்ட மூதவை உறுப்பினர் ஆறு ஆண்டுகள் பதவி வகிக்கலாம் ஆனால் மக்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே. 2018 நவம்பர்-6-ம் திகதி நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற மூதவை உறுப்பினர் 03-01- 2019 முதல் 0-01-2025 வரை பதவியிலிருப்பார்.

மாறிய மக்களவை
அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவை மூதவை ஆகிய இரண்டும் 2018 நவம்பர் தேர்தலுக்கு முன்னர் டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தன. குடியரசுக் கட்சி மக்களவையில் 235 தொகுதிகளையும் மூதவையில் 51 தொகுதிகளையும் வைத்திருந்தது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அளவு 2018 நவம்பர் 6-ம் திகதி நடந்த இடைக்காலத் தேர்தல் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் அக்கறையுடன் நோக்கப்பட்டது. அதில் மக்களவையை டிரம்பின் எதிர்க்கட்சியான மக்களாட்சிக் கட்சி கைப்பற்ற மூதவையை டிரம்பின் கட்சியான குடியரசுக் கட்சி கைப்பற்றிக் கொண்டது. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை 101 பெண் உறுப்பினர்கள் மக்களவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதில் இரு இஸ்லாமியர்கள் உட்பட 87 பெண்களை மக்களாட்சிக் கட்சியினர் வெற்றி பெற வைத்தனர். மக்களாட்சிக் கட்சியின் வெற்றியில் ஆபிரிக்கர், ஆசியர், லத்தின் அமெரிக்கர் பெரும் பங்கு வகித்துள்ளனர்.

டிரம்ப் பதவிக்கு வந்து செய்தவை:
1. பராக் ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை இரத்து செய்தமை
2. செல்வந்தர்களுக்கான வரியைக் குறைத்தமை.
3. மெக்சிக்கோவுடனான எல்லையில் படையினரை நிறுத்தி சட்ட விரோதக் குடியேற்றக்கார்களை தடுப்பமை.
4. இஸ்ரேலுக்கு சார்பாக அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை மாற்றியமை.
5. பல நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு செய்யப்படும் இறக்குமதிகளுக்கு வரிகளை அதிகரித்து வர்த்தகப் போரை ஆரம்பித்தமை.
6. ஈரானுடனான யூரேனியப் பதப்படுத்தல் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிமை.
7. மற்ற நேட்டோ நாடுகள் பாதுகாப்புச் செலவை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியமை.
8. முன்னணி நாடுகளிடையேயான சூழல் பாதுகாப்பு ஒப்பந்தத்தைக் கெடுத்தமை.
9. அமெரிக்காவின் அணுக்குண்டு கொள்கையை மாற்றியமை.

டொனால்ட் டிரம்ப் செய்த வருமான வரிச் சீர்திருத்தம் அமெரிக்கர்கள் செலுத்தும் வரியை 1.5ரில்லியன் டொலர்களால் குறைத்தது. அதனால் பல முதலீடுகள் அமெரிக்காவில் செய்யப்பட்டன. அதை டிரம்ப் தனது தேர்தல் பரப்புரையில் முன்வைத்தபோது மக்களாட்சிக் கட்சியினர் அது செல்வந்தர்களுக்கு மட்டும் நன்மையளிப்பது என்ற பரப்புரையை முன்வைத்தனர். டிரம்பினுடைய வர்த்தகப் போரால் பல அமெரிக்க விவசாயிகள் பாதிக்கப்பட்ட போதும் அது அவரின் செல்வாக்கில் சரிவை ஏற்படுத்தவில்லை மாறாக பல அமெரிக்கர்கள் மத்தியில் அவரது மதிப்பை உயர்த்தியது. தாம் ஆட்சிக்கு வந்தால் டிரம்ப் 2016 தேர்தலின் போது இரசியாவுடன் இணைந்து செயற்பட்டமைக்காக அவரைப் பதவி நீக்கம் செய்வோம் என்பதை தமது தேர்தல் பரப்புரையாக மக்களாட்சிக் கட்சியினர் முன் வைக்கவில்லை. அப்படிப் பரப்புரை செய்தால் அமெரிக்காவில் உள்ள தேசியவாதிகளும் வலதுசாரிகளும் திரண்டு வந்து டிரம்பிற்கு ஆதரவாக வாக்களிக்கலாம் எனற கரிசனையால் அவர்கள் அதை முன்வைக்கவில்லை.

டிரம்பிற்கு எதிரான விசாரணை
புதிய மக்களவையால் டிரம்பிற்கு பெரும் பிரச்சனையாக அமையப் போவது 2016 அவர் வெற்றி பெற்ற தேர்தலில் இரசியத் தலையீடு தொடர்பான விசாரணையே. 2016-ம் ஆண்டு நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலின் போது. டிரம்ப் அதிபராகப் பதவி ஏற்றபோது சட்டமா அதிபராக இருந்த சலி கேற் டிரம்பின் தேர்தல் பரப்புரைக் குழுவில் இருந்த மைக்கேல் ஃபிளைனை அமெரிக்கப் படைத் தளபதியாக நியமிக்க வேண்டாம் எனத் தெரிவித்திருந்தார். மைக்கேல் ஃபிளைன் இரசிய உளவுத்துறையுடன் தொடர்பில் இருந்த படியால் இரசியா அவரை பயமுறுத்தி அமெரிக்கப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கலாம் என்பது சலி கேற்றின் கருத்து. FBI டிரம்பின் பரப்புரைக் குழுவைச் சேர்ந்த பலர் இரசிய உளவுத் துறையுடன் தொடர்பில் இருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற முன்னரே முன் வைக்கப்பட்டது அமெரிக்க FBI நீதித்துறையின் கீழ் செயற்படுகின்றது. அதன் தலைமை இயக்குனரான ஜேம்ஸ் கொமி டிரம்ப் பதவி ஏற்க முன்னரே டிரம்பினது தேர்தல் பரப்புரைக்குழுவிற்கும் இரசிய உளவுத் துறைக்கும் தொடர்புகள் இருந்ததா என்பதைப் பற்றி துப்பறியத் தொடங்கினார். டிரம்ப் ஜேம்ஸ் கொமியுடன் தொடர்பு கொண்டு மைக்கேல் ஃபிளைன் அருமையான மனிதர் எனச் சொல்லி அவரை விட்டு விடும்படி கேட்டுக் கொண்டார். பின்னர் ஜேம்ஸ் கொமியை வெள்ளை மாளிகைக்கு விருந்துக்கு அழைத்த டிரம்ப் தான் விசாரணக்கு உட்படுத்தப்படவில்லை என பகிரங்கமாக அறிக்கை ஒன்றை விடும்படி வேண்டுகோள் விடுத்தார். அத்துடன் தனக்கு விசுவாசமாக நடப்பதாக ஒரு உறுதிமொழி வழங்கும் படியும் டிரம்ப் ஜேம்ஸ் கொமியைக் கேட்டுக் கொண்டார்.  ஃபிளைன் மீதான குற்றச்சாட்டுக்கள் பல ஊடகங்களில் அடிபட டிரம்ப் மைக்கேல் ஃபிளைனை பதவியில் இருந்து நீக்க வேண்டியதாயிற்று. ஆனால் ஜேம்ஸ் கொமி டிரம்பினதும் அவரது தேர்தல் பரப்புரைக் குழுக்களினதும் செயற்பாடுகள் தொடர்பான மேலதிகத் தகவல்களை நீதித்துறையிடம் கோரினார். இது டிரம்ப்பிற்கு தெரிய வந்தது. டிரம்ப் வழமையான செயற்பாடுகளுக்கு மாறாக ஜேம்ஸ் கொமியைப் பதவியில் இருந்து நீக்கினார். இதனால் ஏற்பட்ட பரபரப்புக்களுக்கு மத்தியில் அமெரிகாவின் துணைச் சட்டமா அதிபர் டேவிட் முல்லரை 2016இல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் இரசியா தலையிட்டதா என்பது தொடர்பாக சிறப்பு விசாரணையாளராக நியமித்தார். அவர் டிரம்பின் பல ஆதரவாளர்கள் மீது வழக்குத் தாக்குதல் செய்தார். டிரம்ப் டேவிட் முல்லரை பதவி நீக்கம் செய்யும் படி சட்டமா அதிபரைக் கோரினார். அவர் செய்யவில்லை. 2018 நவம்பர் தேர்தல் முடிந்தவுடன் டிரம்ப் முதல் செய்த வேலை சட்டமா அதிபரைப் பதவி விலகும்படி வேண்டியதே. அவரும் பதவி விலகினார். புதிதாக வரும் சட்டமா அதிபர் சிறப்பு விசாரணையாளர் டேவிட் முல்லரை பதவி நீக்கம் செய்யலாம். ஆனால் அவர் மட்டும் 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் இரசியத் தலையீடுபற்றியும் இரசியர்களுடன் டிரம்பின் தேர்தல் பரப்புரையாளர்களுக்கு இருந்த தொடர்பு பற்றியும் டேவிட் முல்லர் மட்டும் விசாரிக்கவில்லை. மக்களவை மூதவை ஆகிய இரண்டினதும் புலனாய்விற்குப் பொறுப்பான தெரிவுக் குழுக்களும் விசாரணைகள் செய்கின்றன. முல்லரின் விசாரணைகள் நிறுத்தப் படுவதை டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பலர் விரும்பவில்லை.

பிடியாணை மிரட்டல்
புதிய சட்டமா அதிபரால் சிறப்பு விசாரணையாளர் டேவிட் முல்லர் பதவி நீக்கம் செய்யப்பட்டு விசாரணை நிறுத்தப் பட்டால் மக்களவை தனது விசாரணையைத் தீவிரப்படுத்தும். மக்களவையின் புலனாய்விற்கான தெரிவுக்குழு டேவிட் முல்லர் விட்ட இடத்தில் இருந்து விசாரணையைத் தொடங்கும் இத் தெரிவுக் குழுவிற்கு முல்லரிலும் பார்க்க அதிகாரங்கள் உண்டு. எந்த நேரத்திலும் எவர் மீதும் விசாரணைக்கான பிடியாணையைப் பிறப்பிக்க முடியும். மக்களவை பிடியாணைகளை பிறப்பித்தால் தானும் பதிலடியாக பிடியாணைகளைப் பிறப்பித்து அரச இயந்திரத்தை செயற்படாமல் செய்வேன் எனவும் டிரம்ப் மிரட்டியுள்ளார். “அவர்கள் விளையாடலாம். ஆனால் நாம அவர்களிலும் பார்க்க சிறப்பாக ஆடுவோம்” என்றார் டிரம்ப். அமெரிக்க நிர்வாகத்திற்கு நியமிக்கப்பட்ட டிரம்பின் குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் மக்களாட்சிக் கட்சியினர் விசாரணைகளை நடத்துவர்.

மீண்டும் மருத்துவக் காப்புறுதி
அமெரிக்காவின் பாதீடு தொடர்பாக மக்களவைக்கு இருக்கும் அதிகாரம் டிரம்பிற்கு பெரும் தலையிடியாக அமையும். ஒபாமா ஆட்சியில் இருக்கும் போது அறிமுகப்படுத்தப்பட்ட மருத்துவக் காப்புறுதித் திட்டத்தை டிரம்ப் இரத்துச் செய்தார். அதை அல்லது அதற்கு ஈடான புதிய ஒன்றை மீண்டும் கொண்டு வருவதற்கான சட்டங்களை மக்களாட்சிக் கட்சியினர் மக்களவையில் மீண்டும் கொண்டு வருவார்கள். அது அமெரிக்க அரச நிதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். செல்வந்தர்கள் மீது அதிக வரி விதிப்பு சுமத்தப்படலாம். ஆனால் பல முதலீட்டாளர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் புதிய வரிச்சட்டங்கள் ஏதும் இயற்றப்படமாட்டாது என நம்புகின்றனர். அவர்களது நம்பிக்கை தேர்தல் முடிவு வெளிவந்தவுடன் பங்குச் சந்தையில் பெரும் விலை அதிகரிப்பாக வெளிப்பட்டது.

சீனாவின் நிம்மதிப் பெருமூச்சு
அமெரிக்கத் தேர்தல் முடிவுகளால் அதிகம் நிம்மதிப் பெருமூச்சு விடுவது சீனாவாகத்தான இருக்க முடியும். டிரம்ப் தான் தோன்றித்தனமாக நடக்க முடியாமல் மக்களவையால் இனி தடைகள் போட்டு அவரது விரும்பத்தகாத செயற்பாடுகளுக்கு தாமதம் ஏற்படுத்த முடியும். ஆனால் சீனா அமெரிக்காவிற்குச் செய்யும் மிகையான ஏற்றுமதியையிட்டும் அமெரிக்க படைத்துறை மற்றும் உற்பத்தித் துறை இரகசியங்களை சீனா திருடுகின்றது என்பதையிட்டும், சீனா அமெரிக்காவிற்கு உலக அரங்கில் சவாலாக உருவெடுப்பதையிட்டும் டிரம்பைப் போலவே மக்களாட்சிக் கட்சியினரும் அதிக கரிசனை கொண்டுள்ளனர்.

கரிசனை கொண்ட இரசியா
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகளால் அதிக கரிசனை கொண்ட நாடாக இரசியாதான் இருக்கும். 2016 நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஹிலரி கிளிண்டன் சோவியத்தின் கேஜிபி உளவாளியாகச் செயற்பட்ட விளாடிமீர் புட்டீன் ஒரு மனிதப் பிறவியாக இருக்க முடியாது எனச் சொன்னபடியாலும் புட்டீனை அடக்க வேண்டும் என்ற கொள்கையை ஹிலரி கொண்டிருந்தமையாலும் அவரை சதி செய்து தோல்வியடைய வைத்தது புட்டீனின் இரசியா எனக் கருதி ஆத்திரமடைந்துள்ள மக்களாட்சிக் கட்சியினர் தற்போது மக்களவையில் பெரும்பான்மையினராக உருவெடுத்துள்ளனர். இரசியத் தலையீட்டை எப்படியாவது அம்பலப்படுத்த எல்லா முயற்ச்சிகளையும் மக்களாட்சிக் கட்சியினர் எடுப்பார்கள்.

இஸ்ரேல் அசையாது
அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் அதிபரும் மூதவையுமே அதிக அதிகாரங்களைக் கொண்டுள்ளது. ஆனாலும் சட்டவாக்கல் அதிகாரம் கொண்ட மக்களவையை கையில் வைத்திருக்கும் மக்களாட்சிக் கட்சியினரால் இஸ்ரேலுக்கு சாதகமான சட்டங்களை இயற்ற முடியும். இருந்தும் வாஷிங்டனில் செயற்படும் வலிமை மிக்க யூதப் பரப்புரைக் குழுவினர் யார் ஆட்சியிலிருந்தாலும் இஸ்ரேலுக்கு சாதகமாக அமெரிக்காவை வைத்திருப்பர்.

இந்தியா இலங்கை மாற்றம் இருக்காது.
டிரம்ப் அமெரிக்காவை ஜெனீவா மனித உரிமைக்கழகத்தில் இருந்து விலக்கியது இலங்கை ஆட்சியாளர்களை பெரும் நிம்மதியடைய வைத்தது. அமெரிக்காவை மீண்டும் மனித உரிமைக்கழகத்தில் சேர்க்க மக்களவையால் முடியாது. முன்பு இல்லாத வகையில் டிரம்பின் ஆட்சியில் அமெரிக்காவும் இந்தியாவும் படைத்துறை அடிப்படையில் அதிகம் நெருங்கியுள்ளன.


அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கும் மக்களவைக்கும் இடையில் அவ்வப்போது இழுபறி நடப்பதுண்டு. ஆனால் அமெரிக்க வரலாற்றில் என்றுமே இல்லாத மோசமான இழுபறி விடாக்கண்டனான டிரம்பிற்கும் பல கொடாக்கண்டர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள மக்களவைக்கும் இடையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நடக்கும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...