Monday 22 October 2018

இரசியாவும் புட்டீனும் சவால்களும் சமாளிப்புக்களும்


இரசியாவைத் தனிமைப்படுத்தும் முயற்ச்சியில் அமெரிக்காவும் மற்ற நேட்டோக் கூட்டமைப்பில் உள்ள நாடுகளும் 2014-ம் ஆண்டில் இருந்து கடுமையாக முயற்ச்சிக்கின்றன. 2014-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் குழுவில் இரசியா தன்னுடன் இணைத்த கிறிமியா உக்ரேனுக்கு சொந்தமானது என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக 100 நாடுகளும் எதிர்த்து 11 நாடுகளும் வாக்களித்தன. 58 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை 24 நாடுகள் சபைக்கு சமூகமளிக்கவில்லை. இது இரசியாவைத் தனிமைப்படுத்தும் முதல் முயற்ச்சியாகப் பார்க்கப்பட்டது. இந்த நாடுகள் இரசியா மீது விதித்த பொருளாதாரத் தடை இரசியப் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தின. இரசிய நாணயமான ரூபிளின் வீழ்ச்சி பொருளாதார வளர்ச்சி குன்றியமை, பன்னாட்டுக் கடன்களை இரசியா பெற முடியாமற் போனமை எனச் சில பின்னடைவுகளை இரசியா சந்தித்தது. ஆனால் இரசியா வலுவிழந்த தனது நாணயப்பெறுமதியை தனக்கு சாதகமாக்கி தனது ஏற்றுமதியை அதிகரித்தது. மற்ற எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளுடன் இணைந்து செயற்படுவதைத் தீவிரப்படுத்தியது. இரசியாவில் புட்டீனை விரும்புவோர் 85 விழுக்காடாக உயர்ந்தது.

இரசிய ஆட்சி முறைமைச் சவால்கள்
1993-ம் ஆண்டு வரையப்பட்ட இரசிய அரசியலமைப்புச் சட்டப்படி இரசியாவின் ஆட்சி முறைமை தலைவரால் நடத்தப்படும் கூட்டாட்சி குடியரசு (federal presidential republic) என விபரிக்கப்படுகின்றது. ஆனால் தனிமனித ஆதிக்கம், ஊழல் போன்றவற்றால் அது மாசு படுத்தப்பட்டுள்ளது என்ற குற்றச் சாட்டு பரவலாக முன் வைக்கப்படுகின்றது. மக்களால் நேரடியாகத் தேர்தெடுக்கப்படும் அதிபருக்கு அதிக அதிகாரங்கள் உண்டு. 2008-ம் ஆண்டு அரசியலமைப்பு திருத்தப்பட்டு அதிபரின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகளில் இருந்து ஆறு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. பாராளமன்றத்தின் அனுமதியுடன் தலைமை அமைச்சரை அதிபர் நியமிப்பர். பாராளமன்றம் இரு அவைகளைக் கொண்டது கீழவைக்கான உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு மாநில அரசுகளும் இரு உறுப்பினர்களை மேலவையான கூட்டாட்சித் சபைக்குத் தெரிவு செய்யும். இரசியர்கள் பொதுவுடமை ஆட்சியின் கீழ் 70 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர்கள். அவர்களுக்கு மக்களாட்சி முறைமை பற்றிய அனுபவம் குறைவு. அதனால் ஒரு தனிப்பட்ட மனிதரின் அடக்கு முறையின் கீழ் வாழ்வது அவர்களுக்கு சிரமமல்ல. அதனால் ஊழல் குறைந்ததும் பொறுப்புக் கூறும் தன்மை மிக்கதுமான  ஒரு நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க முடியவில்லை. பல கட்சிகள் தேர்தலில் போட்டியிடக் கூடிய மக்களாட்சி முறைமை இரசியாவில் இருக்கின்றது. ஆனால் அக்கட்சிகள் எவ்வளவு சுதந்திரமாகச் செயற்படுகின என்பது கேள்விக்குறியே. புட்டீனை எதிர்த்த அலெக்ஸி நவன்லி சிறையில் அடைக்கப்பட்டார் விமர்சித்த பொறிஸ் நெமொ மர்மமான முறையில் கொல்லப்பட்டார். புட்டீன் பெரும்பாலான ஊடகங்களைக் கட்டுப்படுத்துகின்றார். 2001-ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட புட்டீனின் ஐக்கிய இரசியக் கட்சி இரசியப் பாராளமன்றத்தின் 450 தொகுதிகளில் 335ஐக் கைப்பற்றி வைத்திருக்கின்றது.  பழைமை வாதத்தையும் தேசிய வாதத்தையும் கலந்த கொள்கையுடைய கட்சி இரு கட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்டது. சில கட்சிகள் பல கட்சி முறைமை இருக்கின்றது என்பதைக் காட்டுவதற்காக போலியாக உருவாக்கப்பட்டுள்ளன என்ற குற்றச் சாட்டையும் மேற்குலக அரசியல் ஆய்வாளர்கள் முன் வைக்கின்றார்கள்.
வெளிச் சவால்
இரசியாவிற்கு எதிராக மேற்கு நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தமை இரு நோக்கங்களைக் கொண்டது. ஒன்று இரசியப் பொருளாதாரத்தை சிதைத்து அதன் படைத்துறைச் செலவைக் குறைத்து அதனால் தமக்கு உள்ள அச்சுறுத்தலை இல்லாமற் செய்வது. இரண்டாவது பொருளாதாரச் சிதைவால் பாதிக்கப்பட்ட இரசிய மக்களை புட்டீனுக்கு எதிராகக் கிளர்ந்து எழச் செய்து அவரைப் பதவியில் இருந்து அகற்றுவது. பொருளாதாரத் தடையால் இரசியாவின் 50 செல்வந்தர்களுக்கு 12பில்லியன் டொலர்கள் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

உள்ளகச் சவால்
உலக அரங்கில் தனக்கு எதிராக நகர்த்தப்பட்ட காய்களை சரியாகக் கையாண்ட இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் தற்போது சில உள்நாட்டுப் பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றார். சமூக வலைத்தளங்களூடாக உலகை இரசியர்கள் பார்ப்பது அதிகரித்துச் செல்லும் போது இரசியர்கள் தாமும் மேற்கு ஐரோப்பிய நாட்டு மக்களைப் போல் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோப் படைக்கூட்டமைப்பிலும் இணைந்த முன்னாள் சோவியத் ஒன்றிய நாட்டு மக்களைப் போல் வாழவேண்டும் என அவர்கள் விரும்புகின்றார்கள். இது இரசிய ஆட்சியின் மீது விளடிமீர் புட்டீனின் பிடியைத் தளரச் செய்யும் என சில மேற்கு நாடுகளின் அரசுறவியலாளர்களும் ஆய்வாளர்களும் கருதுகின்றனர். 1999-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பதவிக்கு வந்த புட்டீனின் 19 ஆண்டு கால ஆட்சி இரசியர்களுக்கு சலிப்புத் தட்டுவது இயற்கை. இப்போது புட்டீனின் ஆட்சியை விரும்புவோர் 60விழுக்காடாகக் குறைந்துவிட்டது. இது இரசியாவில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு. அதன் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. 2014-ம் ஆண்டின் பின்னர் இரசியர்கள் மீது அதிகரிக்கப்பட்ட பொருளாதாரச் சுமையை தமது நாட்டின் பெருமையைக் கருதி அவர்கள் பொறுத்துக் கொண்டனர். ஆனால் புட்டீன் ஓய்வூதியம் பெறும் வயதை ஆண்களுக்கு 65 ஆகவும் பெண்களுக்கு 55 ஆகவும் அதிகரித்ததை இரசியர்கள் பலர் வெறுக்கத் தொடங்கினர். மக்கள் தொகையில் அதிக வயோதிபர்களைக் கொண்ட இரசியாவில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மெலும் இரசியர்களின் சராசரி ஆயுட்காலம் 67 என்பதால் ஓய்வ் என்பதே இல்லாத நிலை பல இரசியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 2005-ம் ஆண்டு புட்டீன் ஓய்வூதிய வயதை தான் உயர்த்த மாட்டேன் என இரசிய மக்களுக்கு உறுதி மொழி வழங்கியிருந்தார். 2018 செப்டம்பர் மாதம் நடந்த மூன்று பிராந்திய ஆளுநர்களுக்கான தேர்தல்களில் புட்டீனின் ஐக்கிய இரசியக் கட்சி தோல்வியடைந்தது. தேசியவாதக் கட்சிகள் வெற்றியடைந்தன.

பொருளாதாரச் சவால்
2018 ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் இருந்து எரிபொருள் விலை 14 விழுக்காட்டால் அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் எரிபொருள் விலை டொலரிலேயே விற்பனை செய்யப்படுகின்றது. டொலருக்கு எதிராக இரசிய ரூபிளின் பெறுமதி 2018 ஏப்ரலில் இருந்து 15விழுக்காடு குறைந்துள்ளது. அதிகரிக்கும் எரிபொருள் விலையும் வீழ்ச்சியடையும் அதிகரிக்கும் டொலரின் பெறுமதியும் இரசியாவிற்கு இரட்டிப்பு நன்மையைக் கொடுக்கின்றது. எரிபொருளால் கிடைக்கும் வருமானம் இரண்டாலும் அதிகரிக்கின்றது. ஒரு பீப்பாய் எரிபொருள் விற்பனையால் இரசியாவிற்கு 2017 இறுதியில் 3835ரூபிள்கள் கிடைத்தது. 2019 ஒக்டோபரில் அது 5262ரூபிளாக உயர்ந்துள்ளது. இது இரசியப் பொருளாதாரத்திற்கு பெரும் வாய்ப்பாகும். இரசியாவின் இரு பெரும் எரிபொருள் உற்பத்தி நிறுவனங்களான Rosneft Oil Co., Lukoil Oil Co. ஆகியவற்றின் பங்கு விலைகள் முறையே 56விழுக்காட்டாலும் 39 விழுக்காட்டாலும் உயர்ந்துள்ளன. இந்த ஆண்டு எந்த ஒரு மேற்கு நாட்டு எரிபொருள் உற்பத்தி நிறுவனத்தின் பங்கு விலையும் இப்படி உயர்ந்ததில்லை. இரசியாவின் பங்குச் சந்தை 2018 ஆண்டு செப்டம்பர் வரை அமெரிக்காவின் பங்குச் சந்தையிலும் பார்க்கவும் வளர்முக நாடுகளின் பங்குச் சந்தையிலும் பார்க்கவும் சிறப்பான வளர்ச்சியைக் கண்டுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் உலக அரங்கில் இரசியா கடன்பட முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அதிலும் இரசியா நன்மையைக் கண்டுள்ளது. இரசியாவின் வெளிநாட்டுக்கடன் இப்போது குறைந்துள்ளது. அது மொத்தத் தேசிய உற்பத்தியின் 32 விழுக்காடாக உள்ளது. பெறுமதி குறைந்த ஒரு நாணயத்தால் நாட்டில் விலைவாசி அதிகரிக்கும் என்பது பொதுவான விதி. இதற்கு இரசியா விதிவிலக்கல்ல. ரூபிளின் பெறுமதி குறைவடைததால் இரசியாவில் பணவீக்கம் 2019-ம் ஆண்டு 5.5விழுக்காடாக இருக்கும் என இரசிய நடுவண் வங்கி எதிர்பார்க்கின்றது. அதன் பணவிக்க இலக்கு 4 விழுக்காடாகும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இரசிய நடுவண் வங்கி வட்டி விழுக்காட்டை 0.25 ஆல் அதிகரித்து 7.5 விழுக்காடாக்கியது. உலக வங்கியின் கணிப்பின் படி 2017-ம் ஆண்டு உலகின் ஆறாவது பெரிய நாடாக இரசியா இருக்கின்றது.

சவாலாக மாறிய சவுதிக்குச் சென்ற அமெரிக்கரும் இரசியர்களும்
2018 செப்டம்பர் 16-ம் திகதி அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் மைக் பொம்பியோ சவுதி அரேபியாவிற்கு ஒரு திடீர்ப் பயணத்தையும் இரசியாவின் சிரியாவிற்கான சிறப்புத் தூதுவர் சேர்கி வெர்சினின் உட்பட  வெளியுறவுத் துறை அதிகாரிகள் சவுதி அரேபியாவிற்கு ஒரு திட்டமிட்ட பயணத்தையும் மேற்கொனடனர். பொம்பியோவின் நோக்கம் துருக்கியில் காணாமற் போன பத்திரிகையாளர் கஷொக்கியோவைப் பற்றியது. இரசியர்கள் அந்த விவகாரத்தைப் பற்றி வாய் திறக்கவில்லை. அவர்கள் மேனாப்(MENA) பிரதேசமாகிய மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நிலைமை தொடர்பானது. இந்த இரசியா சவுதியின் உள் விவகாரங்களில் தலையிடாதமைக் கொள்கை சவுதியை மகிழ்ச்சிப் படுத்தியிருக்கும். ஆனால் இரசியாவின் புதிய நட்பு நாடாகிய துருக்கியை அதிருப்திப் படுத்தியிருக்கும். துருக்கி வம்சாவளியில் சவுதியில் பிறந்த கஷோக்கி துருக்கிய அதிபருக்குப் பிடித்த இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பை விரும்புபவர்.

பாதுகாப்புச் சவால்
2016-ம் ஆண்டு  நேட்டோப் படைத்துறை கூட்டமைப்பு நாடுகள் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் Tripwire Forces என்ற பெயரில் தமது சிறு படையணிகளை நிறுத்தியுள்ளன. இவை இரசிய ஆக்கிரமிப்பை முன் கூட்டிய அறிந்து பதிலடி கொடுக்கும் நோக்கத்துடன் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் நோர்வேயில் நேட்டோப் படைகள் Trident Juncture என்னும் பெயரில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலையும் உள்ளடக்கி ஒரு போர் ஒத்திகையை 2018 ஒக்டோபர் 25-ம் திகதியில் இருந்து நவம்பர் 7-ம் திகதி வரை செய்யவிருக்கின்றன. ஐம்பதினாயிரம் படையினரைக் கொண்டு செய்யப்படும் போர்ப்பயிற்ச்சி இரசியாவின் மேற்குப் பகுதியில் செய்யப்படும் மிகப் பெரிய போர் ஒத்திகையாகும். ஏற்கனவே இரசியா தனது மேற்குப் பகுதியில் சிறிய நாடான பெலரசுடனும் கிழக்குப் பகுதியில் பெரிய நாடான சீனாவுடன் இணைந்தும் இரு பெரும் போர்ப்பயிற்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.

இரசிய வரலாற்றில் புட்டீனின் ஆட்சி சிறு புள்ளி மட்டுமே. தன் வரலாற்றில் ஜப்பான், பிரான்ஸ், ஜேர்மனி போன்றவற்றின் படையெடுப்புக்களை எல்லாம் தாண்டி நிமிர்ந்து நிற்கும் இரசியாவால் எந்த சவாலையும் சமாளிக்க முடியும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...