Monday 8 October 2018

உக்ரேன் – இரசியப் போர் வெடிக்குமா?



உலகம் அதிகம் அறிந்திராத அஜோவ் கடலில் ஓர் உலகப் போர் ஆரம்பமாகும் ஆபத்து உள்ளது. அஜோவ் கடலை செங்கடலுடன் இணைக்கும் அகலம் குறைந்த கேர்ச் நீரிணையைத் தவிர மற்ற எல்லாப்புறத்திலும் அது நிலத்தால் சூழப்பட்டுள்ளது. இரசியா உக்ரேனின் கிறிமியாவை 2014 மார்ச் மாதம் இணைத்ததைதவுடன் அஜோவ் கடலில் பிரச்சனை இருக்கவில்லை. அஜோவ் கடலுக்கு குறுக்கே இரசியாவையும் கிறிமியாவையும் இணைக்கும் பாலம் இரசியாவால் கட்டப்பட்டது. அந்தப் பாலத்தை இரசியா வேண்டுமென்றே 33மீட்டர் உயரமாகக் கட்டியுள்ளது. அதனால் உக்ரேனின் பெரிய கப்பல்கள் அந்தப் பாலத்தின் கீழாகச் செல்ல முடியாத நிலையை இரசியா உருவாக்கியுள்ளது. அது மட்டுமல்ல உக்ரேனுக்கு சொந்தமான ஆனால் இரசிய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெற்க்ஸ் பிரதேசத்திற்கும் அது தலையிடியாக அமைந்துள்ளது. அதனால் அஜோவ் கடலில் உக்ரேன் அதிக அக்கறை காட்டத் தொடங்கியுள்ளது.

கேந்திர முக்கியம்மிக்க உக்ரேன்
இரசியாவிற்கு அடுத்தபடியாக ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடாக இருக்கும் உக்ரேன் இரசியா, போலாந்து, சுலோவேனியா, ஹங்கேர், பெலரஸ், மொல்டோவா, ருமேனியா ஆகிய நாடுளுடனும் அஜோவ் கடலுடனும் செங்கடலுடனும் எலைகளைக் கொண்டுள்ளது. இரசிய எல்லையில் உக்ரேனுக்குள் உயர் மலைத் தொடர் இருப்பது இரசியாவைப் பொறுத்தவரை உக்ரேன் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும். உக்ரேன் இரசியாவின் எதிரிகளின் கைகளில் இருந்தால் அது இரசியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். அதனால் உக்ரேன் நேட்டோவில் இணைவதை எந்த விலை கொடுத்தும் தடுப்பதற்கு இரசியா தயாராக உள்ளது என்பதை உக்ரேனுக்கு எதிராக இரசியா 2014இல் செய்த படை நடவடிக்கை எடுத்துக் காட்டுகின்றது.

உக்ரேனின் பின்னணி
இரசியாவிற்கு ஆதரவாக மாறிய விக்டர் யுனோவோவிச்   பதவியில் இருந்து விலக்கப்பட்டதால் இரசியா ஆத்திரமடைந்தது. தனது படைகளை உக்ரேனின் வடகிழக்கு எல்லையை நோக்கி நகர்த்தியது. உக்ரேனில் இருக்கும் இரசியர்களைத் தன்பக்கம் இழுத்து. உக்ரேனின் ஒரு மாகாணமான கிறிமியாக் குடாநாட்டில் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பின் மூலம் தன்னுடன் இணைத்தது. இரசியர்கள் அதிகமாக வாழும் உக்ரேனின் கிழக்குப் பிராந்தியங்கள் இரண்டு உக்ரேனில் இருந்து பிரிந்து செல்லப் போவதாக அறிவித்தன. இரசியாவின் நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக ஐக்கிய அமெரிக்கா இரசியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளைச் செய்தது.  அவை பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தாவிடிலும் பல முதலீடுகள் இரசியாவில் இருந்து வெளியேறி இரசிய நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சி கண்டது. உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் இரசிய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்களுக்கும் உக்ரேன் அரசுக்கும் இடையில் போர் தொடர்ந்து நடக்கின்றது.

மின்ஸ்க் உடன்படிக்கையல்ல நடப்பொழுங்கு
உக்ரேன், இரசியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகள் உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் இரசியத் தலையீட்டின் பின்னர் நடக்கும் மோதலைத் தடுக்க கிழக்கு ஐரோப்பாவில் உள்ள இரசிய ஆதரவு நாடான பெலரஸ் தலைநகர் மின்ஸ்க்கில் சமாதானப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டன. அங்கு இரண்டு தடவை மின்ஸ்க் -1, மின்ஸ்க் -2 என இரண்டு உடன்பாடுகள் செய்யப்பட்டன. அவற்றிற்கு உடன்படிக்கை எனப் பெயரிடாமல் நடப்பொழுங்கு என அழைக்கப்பட்டன. உடன்படிக்கை என்பதற்கு பன்னாட்டு சட்டத்தில் இருக்கும் இடம் உடன்படிக்கை என்பதற்கு உள்ள இடத்திலும் குறைவானது. இந்த நடப்பொழுங்கில் சம்பந்தவட்டவர்கள் இரசியா, உக்ரேன், பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளுடன் ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கும் ஒத்துழைப்பிற்குமான அமைப்புமாகும் (Organization for Security and Co-operation in Europe). உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் மோதும் இரசிய ஆதரவுக் குழுக்களும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும், அங்கிருந்து படைகளையும் படைக்கலன்களையும் விலக்க வேண்டும், உக்ரேனிய அரசு கிளர்ச்சிக்காரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும், உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும், அரசியலமைப்பில் இரசியர்கள் பெரும்பான்மையாக வாழும் பிராந்தியத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும், இரசியாவின் கூலிப்படைகள் உக்ரேனில் இருந்து வெளியேற வேண்டும், இரசிய உக்ரேனிய எல்லை உக்ரேனிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரவேண்டும் ஆகியவை மின்ஸ் நடப்பொழுங்கின் முக்கிய அமசங்களாகும். முதலாவது நடப்பொழுங்கு 201 செப்டம்பரில் கையொப்பமிடப்பட்டு 2015 ஜனவரியில் கைவிடப்பட்டது. பின்னர் இரண்டாவது நடப்பொழுங்கு 2015 பெப்ரவரியில் செய்யப்பட்டது.

இரசியா மீறுகின்றதாம்
ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கும் ஒத்துழைப்பிற்குமான அமைப்பு (Organization for Security and Co-operation in Europe) உக்ரேனிற்கும் இரசியாவிற்கும் இடையிலான போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கின்றது. அது தனது ஆளில்லாப் போர்விமானங்கள் மூலம் செய்த கண்காணிப்புக்களின் படி இரசியாவில் இருந்து உக்ரேனுக்குப் படைகலன்கள் இரகசியமாக அனுப்புவது கண்டறியப்பட்டுள்ளது.
உடைந்த பாலங்கள்
2014இற்குப் பின்னரும் இரசியர்களையும் உக்ரேனியர்களையும் இணைக்கும் பாலங்களாக இருந்தவை இரசிய மொழியும் மரபுவழி கிறிஸ்தவமும் ஆகும். 2018 செப்டம்பர் மாதம் இரசிய திருச்சபையில் இருந்து உக்ரேன் பிரிந்து கொண்டது. உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தைச் சேர்ந்த இரசியர்கள் உக்ரேனின் மற்றப் பிராந்தியத்தில் உள்ளவர்களைச் சந்திக்கும் போது இரசிய மொழியில் உரையாடுவது வழக்கம். இப்போது அது முற்றாக இல்லாமல் போய்விட்டது. உக்ரேன் தலைநகர் கீவில் உள்ள பல்கலைக்கழங்களில் பயிலும் உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தைச் சேர்ந்த இரசியமொழி பேசும் மாண்வர்கள் இப்போது தங்கள் மொழியைக் கைவிட்டு விட்டு உக்ரேனிய மொழியில் உரையாடுகின்றார்கள். இரசியா ஆட்சியாளர்களுக்கும் உக்ரேனிய ஆட்சியாளர்களுக்கும் இடையில் உள்ள பகையிலும் பார்க்க உக்ரேனியர்களுக்கும் இரசியர்களுக்கும் இடையில் உள்ள பகை அதிகமாகிவிட்டது. அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்குச் சார்பான உக்ரேனிய அரசியல்வாதிகளுக்கு இது பெரும் வெற்றியாகும். 2014இன் பின்னர் உக்ரேன் பல பொருளாதார சிக்கல்களைச் சந்திக்க வேண்டி இருந்தது. அப்போது இரசியாவிற்கு அடங்கிப் போவது நல்லது என்ற கருத்து உக்ரேனியர்களிடம் இருந்தது. உக்ரேனின் பெரும்பாலான ஏற்றுமதி அப்போது இரசியாவிற்கே சென்றது. இரசியாவின் எரிபொருள் விநியோகத்தில் உக்ரேன் பெரிதும் தங்கியிருந்தது. இப்போது உக்ரேனின் ஏற்றுமதியில் பெரும் பகுதி இந்தியாவிற்கு செல்கின்றது.
சீரடையும் உக்ரேனியப் பொருளாதாரம்
கோதுமையும் சூரியகாந்தியும் பெருமளவில் விளையும் உக்ரேன் ஐரோப்பாவின் பாண் கூடை என அழைக்கப்படுகின்றது. இரசியா கிழக்கு உக்ரேனில் படைத்துறைத் தாக்குதலும் எஞ்சிய பிரதேசங்களில் பொருளாதாரத் தாக்குதலும் செய்யும் உத்தியுடனேயே செயற்படுகின்றது. பிரச்சனைக்குரிய பொருளாதாரமாக உக்ரேன் இருந்தால் அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடியாது. சரியாக எல்லையை வரையறுக்க முடியாமல் நாட்டின் ஒரு பகுதியில் போர் நடந்து கொண்டிருக்கும் போது அது நேட்டோவில் இணைய முடியாது. 2014-ம் ஆண்டில் உக்ரேனிய நாணயம் தனது பெறுமதியில் 70விழுக்காட்டை இழந்தது. அரச நிதிப்பற்றாக்குறை மொத்த தேசிய உற்பத்தியின் 10 விழுக்காடாக இருந்தது. பொருளாதாரம் 6.6 விழுக்காடு சுருங்கியது. 2015இல் மேலும் 9.8விழுக்காட்டால் சுருங்கியது. ஆனால் 2017இல் இருந்து நிலைமை சீரடையத் தொடங்கியது. 2018-ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் உக்ரேனியப் பொருளாதாரச் சுட்டிகள் நல்ல செய்திகளைத் தெரிவிக்கின்றன. உள்ளூர் கொள்வனவு அதிகரிக்கின்றது. விலைவாசி அதிகரிப்பு கட்டுப்பாட்டில் இருக்கின்றது. முதலீடுகள் அதிகரித்துச் செல்கின்றன.
மீண்டும் படைத்துறை உற்பத்தியில் உக்ரேன்
உக்ரேன் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்த போது அது படைத் துறை உற்பத்தியில் சிறந்து விளங்கியது. 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தில் இருந்து உக்ரேன் பிரிந்தபோது அது உலகிலேயே ஐக்கிய அமெரிக்காவிற்கும்   இரசியாவிற்கும் அடுத்த படியாக மூன்றாவது பெரிய அணுக்குண்டு  நாடாக உருவெடுத்தது.    தன் வசமான அணுக்குண்டுகளை உக்ரேன் வைத்திருக்க விரும்பியது.   ஆனால் ஐக்கிய அமெரிக்காவும் இரசியாவும் அதை விரும்பவில்லை.   அரசியல் உறுதிப்பாடு உத்தரவாதமில்லாத ஒரு புதிய நாட்டிடம்   அதிக அளவிலான அணுக்குண்டுகள் இருப்பது   எங்கு போய் முடியும் என்ற அச்சம் பல நாடுகளிடம்  அப்போது இருந்தது. உக்ரேனின் முதல் அதிபர் லியோனிட் கிரவ்சக் (Leonid Kravchuk)  தமது நாட்டில் உள்ள அணுக்குண்டுகளை இரசியாவிடம் ஒப்படைத்து அவற்றை அழிப்பதற்கு  நிபந்தனை அடிப்படையில் ஒப்புக்கொண்டார்.    அவர் கேட்ட நிபந்தனை  பியூடப்பெஸ்ற் குறிப்பாணை அதாவது The Budapest Memorandum என்னும் பெயரில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.   அதன்படி உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாட்டை  இரசியா, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள்  உறுதி செய்வதாக ஒத்துக் கொண்டன. ஆனால் அந்த உடன்படிக்கை காற்றில் பறக்கவிடப்பட்டு உக்ரேனின் கிறிமியா அபகரிக்கப்பட்டது. இப்போது உக்ரேன் மீண்டும் சிறந்த படைக்கலன்களை உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டது.
உக்ரேனின் ஆளில்லாப் போர்விமானம்
2018 செப்டம்பரில் உக்ரேன் தான் உருவாக்கிய ஆளில்லாப் போர்விமானம் உக்ரேனின் படைத்துறை உற்பத்திக்கு ஓர் எடுத்துக் காட்டாக இருக்கின்றது. வேவுபார்த்தல், படை நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல், ஊடுருவப்பட முகியாத தொடர்பாடல், தொடர்ந்து 24 மணித்தியாலங்கள் பறக்கக் கூடிய வல்லமை, 200கிலோமீற்றர் வரை பறக்கும் திறன், இலக்குத் தப்பாமல் குண்டு வீசுதல் என பல பணிகளைச் செய்யக் கூடிய ஆளில்லாப் போர்விமானமாக அது இருக்கின்றது. அத்துடன் முன்பு பராக் ஒபாமா உக்ரேனிற்கு வழங்கத் தயங்கிய படைக்கலன்களை தற்போது டொனால்ட் டிரம்ப் வழங்குகின்றார்.
கடற் படைக்கலன்களை வழங்கவிருக்கும் அமெரிக்கா
உக்ரேனிற்கான அமெரிக்கச் சிறப்புத் தூதுவரான கேர்ட் வொல்க்கரும் இரசியாவின் சிறப்புத் தூதுவரான விளடிஸ்லாவ் சுக்கோவும் உக்ரேன் தொடர்பாக அடிக்கடி பேச்சு வார்த்தை நடத்துவது உண்டு. உக்ரேன் மோதலை குறைக்க இரசியத் தரப்பில் அக்கறை காட்டவில்லை என அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது. அதனால் தாம் அதிக படைக்கலன்களை உக்ரேனுக்கு வழங்கப் போவதாக அமெரிக்க தெரிவித்துள்ளது. இரசியாவின் நடவடிக்கைகள் அஜோவ் கடலில் அண்மைக்காலங்களாக அதிகரித்துள்ளது. உக்ரேனும் இரசியாவும் அக்க்கடலைப் பங்கு போட்டுக் கொண்டாலும் உக்ரேனிடம் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய கடற்படைக்கலன்கள் இல்லை. அதனால் இரசியா அங்கு தான் தோன்றித்தனமாக நடக்கின்றது.
உக்ரேன் விவகாரத்தில் இரசியா எந்தவித விட்டுக் கொடுப்புக்களையும் செய்யாது. அதற்கு எதிரான பொருளாதாரத் தடைகளையும் அது சமாளிக்கின்றது. உக்ரேனில் இரசியா தன் பிடியை மேலும் இறுக்குவதைத் தடை செய்வது என்னும் போர்வையிலும் மின்ஸ்கில் ஒத்துக் கொள்ளப்பட்டவற்றை இரசியா மீறுகின்றது என்ற குற்றச் சாட்டிலும் உக்ரேனுக்கு படைக்கலன்கள் வழங்கப்படுகின்றது. இரசியாவிற்கு எதிராக உக்ரேனைப் போர் புரிய வைப்பதன் மூலம் இரசியப் பொருளாதாரத்தைச் சிதைக்கலாம் என்ற சதியும் பின்னணியில் இருக்கலாம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...