Monday 20 August 2018

துருக்கிய நாணயத்தின் வீழ்ச்சியும் மற்ற வளர்முக நாடுகளும்


2018-ம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து 2018-08-10-ம் திகதி வரை துருக்கிய நாணயமான லிராவின் பெறுமதி 40விழுக்காட்டால் விழ்ச்சியடைந்தது. அதில் மோசமான வீழ்ச்சியாக 25 விழுக்காடு வீழ்ச்சி 2018-08-6-ம் திகதி முதல் 10 திகதி வரை ஏற்பட்டது. அந்த ஆடிக் கடைசி வெள்ளியை லிரா ஆடிய வெள்ளி என அழைக்கலாம். லிராவின் பெறுமதி வீழ்ச்சிக்கான காரணம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் துருக்கிய அதிபர் ரெசெப் எர்டோகானுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் அமெரிக்காவுடன் முறுகல் இல்லாத பல நாடுகளின் நாணயங்களின் (சீனா, இந்தியா, ஆர்ஜெண்டீனா, உட்பட) அமெரிக்க டொலருக்கு எதிராக வீழ்ச்சியடைந்துள்ளன. உலகப் பொருளாதார உற்பத்திக்கு துருக்கியின் பங்களிப்பு ஒரு விழுக்காடாக இருப்பதால் துருக்கியின் பொருளாதார ஏற்ற இறக்கம் கரிசனைக்குரியது. துருக்கிய நாணயப் பெறுமதியின் வீழ்ச்சி மற்ற வளர்முக நாடுகளின் நாணயப் பெறுமதிகளையும் விழச்செய்தது.

அளவுசார் தளர்ச்சியும் இறுக்கமும் (QUANTITATIVE EASING & TIGHTENING)
இந்திய ரூபா, இரசிய ரூபிள், சீன யுவான், ஆர்ஜெண்டீனாவின் பெஸோ, சிலியின் பெஸோ, தென் ஆபிரிக்க ரண்ட் ஆகிய நாணயங்கள் இந்த ஆண்டு தொடர்ந்து பெறுமதி வீழ்ச்சியைக் கண்டு கொண்டிருக்கின்றன. அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் தமது அளவுசார் தளர்ச்சியை (Quantitative Easing) நிறுத்தின. அந்த நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சி குன்றியிருந்தபோது பொருளாதார வளர்ச்சியைத் தூண்ட தமது நாட்டின் வங்கிகளிடம் பணப்புழக்கத்தை அதிகரித்தமையை அளவுசார் தளர்ச்சி எனச் சொல்லி அதை இலகுவாக விபரிக்கலாம். ஒரு நாடு அளவுசார் தளர்ச்சியைச் செய்யும் போது அந்த நாட்டின் வட்டி விழுக்காடு குறையும். அப்படிக் குறையும் போது அந்த நாட்டு நாணயத்தில் பன்னாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய மாட்டார்கள். அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அளவுசார் தளர்ச்சியைச் செய்யும் போது பன்னாட்டு முதலீட்டாளர்கள் தமது கையிருப்பில் இருந்த அவற்றின் நாணயங்களை விற்று அதிக வட்டி கொடுக்கும் வளர்முக நாடுகளின் நாணயங்களை வாங்கினர். இப்போது அந்த வளர்ச்சியடைந்த நாட்டு நாணயங்கள் அளவுசார் தளர்ச்சியை நிறுத்தியுள்ளன. ஒரு நாட்டில் அதன் நடுவண் வங்கி அளவுசார் தளர்ச்சி செய்யும் போது அது புதிதாக நாணயங்களை உருவாக்கி அந்த நாட்டின் திறைசேரிப் பத்திரங்களை வாங்கும். அதனால் அந்த நடுவண் வங்கியின் ஐந்தொகையின் (Balance Sheet) பெறுமதி அதிகரிக்கும். உதாரணத்திற்கு ஐரோப்பிய நடுவண் வங்கியின் ஐந்தொகைப் பெறுமதி 1.5ரில்லியன் டொலரில் இருந்து 5.5ரில்லியன் டொலர்களாக அதிகரித்தது. தற்போது வளர்ச்சியடைந்த நாடுகளான மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் வேலையற்றோர் தொகை குறையத் தொடங்கியுள்ளன. அவை அளவுசார் இறுக்கத்தைச் (QUANTITATIVE TIGHTENING) செய்யத் தொடங்கியுள்ளன. அளவுசார் இறுக்கம் அளவுசார் தளர்ச்சிக்கு எதிர்மறையானது. நடுவண் வங்கிகள் தம்மிடம் இருக்கும் திறைசேரிப் பத்திரங்களை வங்கிகளுக்கு விற்பனை செய்து அவற்றிடம் இருந்து பணத்தை வாங்கும். இதனால் வங்கிகள் கையில் உள்ள நாணயப் புழக்கம் குறையும். வங்கிகளுக்கு இடையிலான வட்டி விழுக்காடு அதிகரிக்கும் அது பணவீக்கத்தை தடுக்கும். அதனால் பன்னாட்டு முதலீட்டாளர்கள் வளர்முக நாடுகளின் நாணயங்களை விற்று  வளர்ச்சியடைந்த நாடுகளின் நாணயங்களை வாங்கும். இதனால் ரூபாக்களும் லிராக்களும், பெஸோக்களும் 2018 ஆரம்பத்தில் இருந்து பெறுமதி வீழ்ச்சியடைகின்றன. 2017 நவம்பரில் அமெரிக்க நடுவண் வங்கி தனது அளவுசார் இறுக்கத்தை ஆரம்பித்தது.

டொலரில் வாங்கிய கடன்கள்
1990களில் இருந்து வளர்முக நாடுகள் டொலரில் பெருமளவு கடனகளை வாங்கின. வளர்முக நாடுகள் டொலரில் வாங்கிய கடன்கள் 1990இல் 642பில்லியனில் இருந்து 2000இல் 2.17பில்லியனகளாக அதிகரித்தன. டொலரின் பெறுமதி அதிகரிக்கும் போது கடன் பட்ட நாடுகளின் மீளளிப்புச் சுமையும் வட்டிக் கொடுப்பனவுச் சுமையும் அதிகரிக்கின்றது. பதின் மூன்று வளர்முக நாடுகளின் டொலர் கடன், வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு, மொத்த தேசிய உற்பத்தி ஆகியவற்றை ஒப்பீடு செய்த பன்னாட்டு கொடுப்பனவுகளுக்கான வங்கி (Bank of International Settlements) சிலி, ஆர்ஜெண்டீனா, துருக்கி, மெக்சிக்கோ ஆகிய நாடுகளில் நாணய நெருக்கடி உருவாகும் அபாயம் உள்ளது என்றும் தென் ஆபிரிக்கா, பிரேஸில் இரசியா, மலேசியா, தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகளில் அந்த அபாயம மிதமாக உள்ளது என்றும் சவுதி அரேபியாவிலும் சீனாவிலும் அந்த அபாயம் இல்லை எனவும் அறிவித்துள்ளது. சீனாவும் சவுதி அரேபியாவும் பெருமளவு வெளிநாட்டு நாணயக் கையிருப்பைக் கொண்டுள்ளவை. சீனா டொலரில் வாங்கிய கடன் அதன் மொத்தத் தேசிய உற்பத்தியில் 4விழுக்காடு மட்டுமே.

ஆடிட்டர் ஆடீட்டார்
துக்ளக் ஆசிரியர் கணக்காய்வாளர்(ஆடிட்டர்) குருமூர்த்தியை இந்திய நடுவண் வங்கியான ரிசேர்வ் வங்கியின் ஆளுநர் சபையில் ஒருவராக நியமிக்கப்பட்ட போது இந்திய ரூபாவை பெறுமதியை ஓர் அமெரிக்க டொலருக்கு 25 ரூபாவாக உயர்த்துவேன் என்று சூளுரைத்தார். ஆனால் மறுநாளே இந்திய ரூபா என்றுமில்லாத அளவு வீழ்ச்சியடைந்தது. இந்திய ஏற்றுமதியோ அல்லது இந்தியாவில் வெளிநாடுகளின் முதலீடோ இமயம் போல் உயர்ந்தால் மட்டுமே அவரது சூளுரை சாத்தியமாகும். அப்படி நடப்பதற்கான வாய்ப்புக்கள் ஏதுமே இல்லை. மாறாக இந்தியாவின் ஏற்றுமதியிலும்($25.77பில்லியன்) பார்க்க இந்தியாவின் இறக்குமதி($43.77பில்லியன்) 2018 ஜூலையில் மிகவும் அதிகரித்தது. இந்தியாவிற்குள் வரும் வெளிநாட்டுச் செலவாணியிலும் பார்க்க இந்தியாவில் இருந்து வெளியே செல்லும் இந்தியச் செலவாணி அதிகரித்துக் கொண்டே போகின்றது.


இரசியப் பொருளாதாரத் தடையை சமாளித்த துருக்கி.
2015-ம் ஆண்டு துருக்கி தனது F-16 போர் விமானத்தால் சிரியாவில் தாக்குதலில் ஈடுபட்டிருந்த இரசியாவின் SU-24 போர்விமானம் தனது நாட்டுக்குள் வந்தது எனச் சொல்லிச் சுட்டு வீழ்த்தியது. அதனால் ஆத்திரமடைந்த இரசிய அதிபர் புட்டீன் துருக்கிக்கு எதிராக பல பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தினார். துருக்கியின் பல விவசாயப் பொருட்கள் இரசியாவிற்கு ஏற்றுமதி செய்யவதற்கான தடை, துருக்கிக்கு இரசியர்கள் உல்லாசப் பயணம் செய்வது கூட தடை, துருக்கியர்கள் இரசியாவில் வேலை செய்வதற்குத் தடை, இருதரப்புப் பொருளாதார ஒத்துழைப்புத் தடை எனப் பல தடைகள் விதிக்கப்பட்டன. துருக்கி ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இரசியா 7வது இடத்தில் இருக்கின்றது. துருக்கியின் எரிவாயுவில் 98 விழுக்காடு இரசியாவில் இருந்து விநியோகிக்கப்படுகின்றது. ஆனால் இரசியப் பொருளாதாரத் தடையை துருக்கி சமாளித்தது மட்டுமல்ல அதன் பிறகு துருக்கியும் இரசியாவும் சிரிய விவகாரத்தில் நெருங்கி ஒத்துழைத்தது. இரசியா செய்த பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட்டன.

துருக்கியின் வலி தனிவலி
மற்ற வளர்முக நாடுகளின் பொருளாதாரப் பிரச்சனைகளுடன் ஒப்பிடுகையில் துருக்கி வெறு பல புவிசார் அரசியல் பிரச்சனைகளையும் பல உள்நாட்டுப் பிரச்சனைகளையும் எதிர் கொள்கின்றது. கடந்த சில ஆண்டுகளா துருக்கி பல நிலைமாற்றங்களைக் காண்கின்றது. நேட்டோ படைத்துறை கூட்டமைப்பில் இருந்து கொண்டு இரசியாவுடன் உறவை வளர்க்கின்றது. மக்களாட்சி துருக்கியில் கேள்விக்குறியாகியுள்ளது. அதிபருக்கு பல அதிகாரங்கள் வழங்கப்பட்டு பாராளமன்றத்தின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. பொறுப்புக்கூறல் குறைவடைந்த நிலையில் அதிபர் ஊழல் செய்வதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. அதிபரின் பொருளாதாரக் கொள்கைகள் விநோதமானவையாக இருக்கின்றன என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

டிரம்ப்-எர்டோகான் முறுகல்
2016-ம் ஆண்டு துருக்கியில் முறியடிக்கப்பட்ட படைத்துறைப் புரட்சியில் தொடர்புடையவர் என்ற குற்றச் சாட்டில் அமெரிக்காவைச் சேர்ந்த பாதிரியார் அண்டுரு பிறன்ஸன் துருக்கியில் சிறைவைக்கப்பட்டுள்ளார். 2018 ஜூலையில் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த நேட்டோக் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் துருக்கிய அதிபர் எர்டோகானைச் சந்தித்த டிரம்ப் பாதிரியார் பிறன்ஸனை விடுதலை செய்யுமாறு வேண்டு கோள் விடுத்திருந்தார். அதற்குப் பதிலாக இஸ்ரேலில் சிறை வைக்கப்பட்டிருக்கும் துருக்கியர் ஒருவரை விடுவிக்க வேண்டும் என எர்டோகான் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில் இஸ்ரேல் தனது சிறையில் இருந்த துருக்கியரை விடுதலை செய்தது. ஆனால் துருக்கி பாதிரியார் பிறன்ஸனை சிறையில் இருந்து மாற்றி வீட்டுக்காவலில் வைத்தது. இது டிரம்பை ஆத்திரப்படுத்தியதால் துருக்கியின் இரு அமைச்சர்களுக்கு எதிரான பொருளாதாரத் தடையை டிரம்ப் விதித்தார். பதிலடியாக டிரம்பின் அமைச்சரவையில் இருந்த இருவருக்கு துருக்கி பொருளாதாரத் தடை விதித்தது. இதனால் அமெரிக்க துருக்கி முறுகலை உருவாக்கும் என்ற அச்சத்தில் ஏற்கனவே வலிவிழந்திருந்த துருக்கிய நாணயமான லிராவின் பெறுமதி வீழ்ச்சியடையத் தொடங்கியது. இதனால் துருக்கியப் பொருட்கள் அமெரிக்காவிற்கு மலிவான விலையில் ஏற்றுமதிச் செய்யப்பட்டது. ஏற்கனவே துருக்கியின் அலுமினியத்திற்கு டிரம்ப் இறக்குமதி வரியை அதிகரித்திருந்தார். லிராவின் பெறுமதி வீழ்ச்சியால் அந்த வரிவிதிப்பு செயலிழந்தது. உடனே (2018-08-10- லிரா ஆடிய வெள்ளி) டிரம்ப் துருக்கிய அலுமினியத்திற்கான இறக்குமதி வரியை இரட்டிப்பாக்கினார். உடனேயே லிராவின் பெறுமதி பெருமளவில் விழ்ழ்ச்சியடைந்தது.

கேந்திரோபாயப் பங்காளி
துருக்கி அதிபர் எர்டோகவன் நியூயோர்க் ரைம்ஸில் திறந்த ஆசிரியத் தலையங்கம் ஒன்றை எழுதினார். அதில் அமெரிக்கா-துருக்கி இடையிலான 70 ஆண்டு கால கேந்திரோபாய உறவு, துருக்கி நேட்டோவின் உறுப்புரிமை. பொதுவுடமைப் பரம்பலுக்கு எதிர்பில் துருக்கியும் இணைந்து செயற்பட்டமை கொரியப் போரில் துருக்கி அமெரிக்காவுடன் இணைந்து போரிட்டமை, 1962 கியூபா நெருக்கடி: துருக்கி துருப்புச் சீட்டாகப் பாவிக்கப்பட்டமை ஆகியவற்றை விளக்கி எழுதி அமெரிக்கா தனது கேந்திரோபயாப் பங்காளிக்கு துரோகம் செய்ததாக விளக்கியிருந்தார்.

முறுகல்களுக்கான காரணிகள்
1. அமெரிக்காவில் இருந்து செயற்படும் Fethullah Gulen என்ற துருக்கியர் துருக்கியில் ஆட்சிக்கவிழ்ப்பிற்கு சதி செய்கின்றார் அவரை அமெரிக்கா நாடுகடத்த வேண்டும் என்பது துருக்கிய அதிபர் எர்டோகானின் நிலைப்பாடு,
2. துருக்கி பயங்கரவாத அமைப்புக்களாகக் கருதும் சிரிய குர்திஷ் போராளிக் குழுக்களுடன் (P.Y.D./Y.P.G.) அமெரிக்க உறவு வைத்திருக்கின்றது.
3. துருக்கி இரசியாவின் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை வாங்கியது
4. துருக்கிக்கு விற்பனை செய்ய இருந்த நூறு அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களான F-35 டிரம்ப் நிறுத்தியுள்ளார்.
பணவீக்கம் 16%.
5. சிரியாவில் துருக்கி ஈரானுடனும் இரசியாவுடனும் நெருங்கிய ஒத்துழைப்பைச் செய்கின்றது. சிரிய விவகாரம் அமெரிக்காவிற்கு ஒரு கேந்திரோபாயத் தோல்வி எனக் கருதப்படுகின்றது.
6. டிரம்ப் இறக்குமதி வரிகளை அதிகரித்து வர்த்தகப் போர் தொடுத்த நாடுகளில் துருக்கியும் ஒன்றாகும்.
7. டிரம்பின் வேண்டுதலின் படி துருக்கி அமெரிக்கப் பாதிரியாரை சிறையில் இருந்து முழுமையாக விடுதலை செய்திருந்தால் 2018 நவம்பரில் நடக்கவிருக்கும் பாராளமன்றத் தேர்தலில் டிரம்பின் குடியரசுக் கட்சியின் வெற்றி வாய்ப்பை அதிகரித்திருக்கும்.

சிரியாவில் துருக்கி
3.5 மில்லியன் சிரியர்கள் துருக்கியில் தஞ்சமடைந்துள்ளனர்.
இரசிய ஆசியுடன் துருக்கி அஃப்ரினையும் அல் பப்பையும் தனதாக்கியது, அது துருக்கிய ஆட்சியின் கீழ் உள்ளது. பொது இடங்களுக்கு எர்டோகானின் பெயர் வைக்கப்படுகின்றது. துருக்கிமொழி அங்கு போதிக்கப்படுகின்றது துருக்கிய ஆதரவுப் போராளிகளுக்கு துருக்கி சம்பளம் வழங்குகின்றது. துருக்கியில் இருந்து மின் இணைப்பு
இதிலிப்பை முழுமையாக துருக்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரமுடியவில்லை, அங்கு பல அவதானிப்பு நிலையங்கள் என்ற போர்வையில் தனது 1300பேரைக் கொண்ட படை நிலைகளை துருக்கி நிறுத்தியுள்ளது. இத்லிப்பை முழுமையாக தன் வசமாக்க இரசிய ஆதரவை துருக்கி வேண்டி நிற்கின்றது அஃப்ரினும், அல் பப்பும் இதிலிப்பும் இல்லாமல் பஷார் அல் அசாத்தால் பதவியில் நீடிக்க முடியும். அசாத்துக்கு சில எலும்புத் துண்டுகளைக் கொடுக்க இரசியா தயாராக உள்ளது அலேப்பேயிற்கு அண்மையாக துருக்கியுடன் எல்லையைக் கொண்ட பல நகரங்களை அசாத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர இரசியா தயாராக உள்ளது. முதலாம் உலகப் போரின் பின்னர் சிரியாவினதும் ஈராக்கினதும் வட பகுதிகளை துருக்கி தன்னுடன் இணைக்க முயன்ற போது அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அதைக் கடுமையாக எதிர்த்தன. அந்தக் கனவை இப்போது துருக்கி இரசிய உதவியுடன் நிறைவேற்றப்பார்க்கின்றது. இஸ்லாமிய நாடான துருக்கி சிரியாவில் கால்பதிப்பதையோ அதன் விரிவாக்கத்தையோ இஸ்ரேல் தடுக்க எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கும். ஈரானைத் தனிமைப்படுத்தும் அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் காய் நகர்த்தல்களுக்கு துருக்கி ஈரானுடன் கொண்டுள்ள உறவு தடையாக இருக்கின்றது. அதனால் துருக்கி வலுவிழக்கச் செய்யப்பட வேண்டிய ஒரு நாடாக இஸ்ரேலும் அமெரிக்காவும் கருதும் என ஊகிக்கலாம்.

நிதிச் சந்தியின் மிகையான நடவடிக்கையா? யூதச் சதியா?
துருக்கியின் அலுமினியம் உருக்கு ஆகியவற்றின் ஏற்றுமதி அதன் மொத்தப் பொருளாதார உற்பத்தியின் இரண்டு விழுக்காடு மட்டுமே. அதன் ஏற்றுமதி அமெரிக்காவில் சந்திக்கும் வரி அதிகரிப்பு ஒரு நாளில் 25விழுக்காடு வீழ்ச்சியை துருக்கிய நாணயத்தில் ஏற்படுத்தியமை பொருளாதாரத் தர்க்க அடிப்படையில் பிழையான ஒன்றே

எர்டோகானின் விநோதமான பொருளாதாரக் கொள்கை
அமெரிக்காவின் டொலரின் பெறுமதி அதிகரிக்கும் போது பல வளர்முக நாடுகளின் நாணயங்கள் நெருக்கடியைச் சந்திப்பது தவிர்க்க முடியாது. டொலரின் பெறுமதி ஏறும்போது எரிபொருட்கள் இறக்குமதி செய்வதற்கு பல நாடுகள் அதிக விலை கொடுக்க வேண்டும். அதனால் அந்த நாடுகளில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கும். அதுபோலவே பல இறக்குமதிப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும். அதற்கு ஏற்ப பொருளாதார நகர்வுகளை அந்த நாடுகள் செய்ய வேண்டும். துருக்கிய அதிபர் எர்டோகானின் பொருளாதாரக் கொள்கைகள் விநோதமானவை. துருக்கியின் அதிகார மிக்க தலைவரான அவர் வட்டி என்பது தீமையான ஒன்று, அதை அதிகரிக்க மாட்டேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர். துருக்கியில் பணவிக்கம் 16விழுக்காடாக இருக்கின்றது. இது இந்தியாவினது பணவீக்கத்திலும் இரு மடங்கிற்கு மேல். பணவிக்கம் அதிகரித்தால் நடுவண் வங்கி வட்டி விழுக்காட்டை அதிகரிக்க வேண்டும் என்பது அடிப்படைப் பொருளாதார விதி. அதைத் துருக்கி செய்யாததால் அதன் நாணயத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெறுப்புக் காட்டத் தொடங்கியதால் அதன் பெறுமதி வீழ்ச்சியடைந்தது.

எர்டோகானின் அதிரடி நடவடிக்கைகள்
2018 ஓகஸ்ட் 14-ம் திகதி துருக்கியின் வர்த்தகர்கள் எர்டோகானைச் சந்தித்து லிராவை பாதுகாக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். 2018 ஓகஸ்ட் 14-ம் 15-ம் திகதிகளில் எர்டோகான் அமெரிக்காவிற்கு எதிராகவும் லிராவைப் பாதுகாக்கவும் பல நடவடிக்கைகளை எடுத்தார். லிராவை குறைவணிகத்தில் விற்பனை செய்வதற்கு எதிராகச் செயற்பட்டார். கட்டார் நாட்டின் உதவியைக் கோரினார். துருக்கிக்குச் சென்ற கட்டார் எமிர் அல் தனி துருக்கியில் 15 பில்லியன் டொலர்களை முதலீடு செய்வதாக அறிவித்தார். 2017இல் துருக்கியில் செய்யப்பட்ட மொத்த வெளிநாட்டு முதலி 10பில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் கட்டாரின் முதலீடு எத்தகையது என அறியலாம். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் வாகனங்கள் மதுபானங்கள் உட்படப் பல பொருட்களின் இறக்குமதியை பெருமளவில் அதிகரித்தார். அமெரிக்காவின் இலத்திரனியல் பொருட்களை புறக்கணிக்குமாறு தன் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த நடவடிக்கைகளால் 15-ம் திகதி துருக்கிய நாணயமான லிராவின் பெறுமது ஐந்து விழுக்காடு அதிகரித்தது.

ஆவணி வெள்ளியில் மீண்டும் ஆடிய லிரா
ஆடிக் கடைசி வெள்ளியிம் பெரும் ஆட்டம் கண்ட துருக்கிய லிரா மீண்டும் ஆவணி முதல் வெள்ளியில் (2018-08-17)  5விழுக்காடு பெறுமதி வீழ்ச்சியால் மீண்டும் ஆட்டம் கண்டது. பாதிரியார் பிறௌன்ஸனை விடுதலை செய்யாவிடில் மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்தது வியாழக்கிழமை துருக்கியில் வெள்ளிக் கிழமை நிராகரிக்கப்பட்டது.

நாடுகளின் நிதி நிலைமையை தரப்படுத்தும் நிறுவனமான Fitch துருக்கிய அரசு தங்கள் பொருளாதாரக் கொள்கையில் உலக முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படக் கூடிய வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அறிவித்தது. துருக்கிய நாணயமான லிராவின் வீழ்ச்சிக்கு எதிராக துருக்கி எடுத்த நடவடிக்கைகள் போதாது என்றது Fitch. வட்டி விழுக்காட்டை 1.5ஆல் அதிகரித்ததும் குறைவணிகத்தைத் தடைசெய்ததும் கட்டாரின் 15 பில்லியன் முதலீடும் போதாது என்பது Fitchஇன் கருத்து. 2018-ம் ஆண்டு துருக்கியின் இறைமைத் தரத்தை (sovereign rating) BB+ இலிருந்து BB இற்கு தாழ்த்தியிருந்தது.

துருக்கின் பிழையான பொருளாதார முகாமை, திறனற்ற ஊழல் நிறைந்த அரச கட்டமைப்பு ஆகையவை தான் துருக்கியின் பொருளாதார நெருக்கடிகளுக்குக் காரணம். காரணம் அவை அல்ல எம் எதிரியான அமெரிக்காவே காரணம் என துருக்கிய மக்களை இலகுவாக நம்பவைக்க எர்டோகானுக்கு டிரம்ப் உதவி செய்துள்ளார்.


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...