Tuesday 9 January 2018

வட கொரியாவின் மூக்கை அமெரிக்காவின் F-35 உடைக்குமா?

அணுக்குண்டு உற்பத்தியிலும் அவற்றைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணை உற்பத்தியிலும் வட கொரியா காட்டும் அதீத அக்கறையும் தடுக்க முடியாத வெற்றியும் கிழக்காசியப் பிராந்தியத்தில் பல கேந்திரோபாய மாற்றங்களை உருவாக்குகின்றன. அதே வேளை வட கொரிய அரசு மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை வெளிவிடத் தயங்குவதில்லை. தன் மேசையில் இருக்கும் பட்டனை அழுத்தி தன்னால் அணுக்குண்டுகளை ஏவ முடியும் என்றார் வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன். அப்படி உடனடியாக ஏவுகணையை ஏவக் கூடிய தொழில்நுட்பம் வட கொரியாவிடம் இல்லை என்கின்றனர் சில படைத்துறை நிபுணர்கள்.

உயிரியல் குண்டுகள்
வட கொரியாவின் அடுத்த ஏவுகணை என்னும் கிருமிகளைப் படைகலன்களாக்கிய (Weaponized anthrax) )குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடிய வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ஏவுகணை அமெரிக்காவின் எப்பாகத்தையும் தாக்கக் கூடியதாக இருக்கும். வட கொரியா அணுக்குண்டுகளை மட்டுமல்ல வேதியியல் குண்டுகளையும் உயிரியல் குண்டுகளையும் உற்பத்தி செய்கின்றது

அணுப்படைக்கலப் பரவலாக்கத் தடை
அமெரிக்கா, இரசியா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா ஆகிய வல்லரசு நாடுகள் உட்பட 191 நாடுகள் அணுப் படைக்கலப் பரவலாக்கத் தடை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. இந்தியா, பாக்கிஸ்த்தான், வட கொரியா ஆகிய அணுப் படைக்கலன்களை வைத்திருக்கும் நாடுகள் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை. இஸ்ரேல் அணுக் குண்டு வைத்திருக்கின்றது அல்லது அதனால் அணுக்குண்டை உற்பத்தி செய்ய முடியும் என நம்பப்பட்டாலும் அதுவும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை. பெல்ஜியம், நெதர்லாந்து, துருக்கி, ஜேர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளில் அமெரிக்கா அணுக்குண்டுகளை வைத்துள்ளது. உலகில் தொழில்நுட்பப் பரவலாக்கத்தைக் கட்டுப்படுத்துவதெற்கு என Nuclear Suppliers' Group, the Missile Control Technology Regime, the Australian Group and the Wassenaar Arrangement ஆகிய நான்கு அமைப்புக்கள் இருக்கின்றன. இவை தமது தொழில்நுட்ப ஆதிக்கத்தை நிலைநிறுத்த சில நாடுகளால் உருவாக்கப் பட்டவையாகும். இஸ்லாமிய நாடுகளுக்கு அதிலும் முக்கியமாக  ஈரானிற்கு புதிய தொழில்நுட்பம் போகமல் தடுப்பதும்  இவற்றின் பகிரங்கப்படுத்தப்படாத நோக்கமாகும்.அத்துடன் வட கொரியாவிற்க்க் எதிராகவும் இவை செயற்படுகின்றன.

ஏவுகணைக் கட்டுப்பாட்டு ஆட்சியகம்
1987-ம் ஆண்டு  ஆரம்பிக்கப்பட்ட MTCR என சுருக்கமாக அழைக்கப்படும் ஏவுகணைக் கட்டுப்பாட்டுத் தொழில்நுட்ப ஆட்சியகம் ஏற்கனவே 34 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. ஏவுகணைத் தொழில்நுட்பம் பல நாடுகளுக்கும் பரவுவதையும் அணுக்குண்டு தாங்கிச் செல்லக் கூடிய ஏவுகணைகளை எல்லா நாடுகளும் உருவாக்கக் கூடாது என்பதிலும் இந்த MTCR அமைப்பு கவனம் செலுத்துகின்றது. வட கொரியா அணுக்குண்டை உற்பத்தி செய்த போதிலும் அவற்றைத் தாங்கிச் செல்லக் கூடிய ஏவுகணைத் தொழில்நுட்பம் அதனிடம் இல்லை எனச் சொல்லப்படுகின்றது. ஆனால் அந்த வல்லமையை வட கொரியா பெறும் என்பதை மறுக்க முடியாது. MTCR உறுப்புரிமை இந்தியாவிற்கு இல்லாதிருந்த போது அதற்கு பல ஏவுகணைத் தொழில்நுட்பங்களை விற்பனை செய்வது தடை செய்யப் பட்டிருந்தது. அதேவேளை பல ஏவுகணைத் தொழில்நுட்பங்களை பாக்கிஸ்த்தானிற்கு சீனா வழங்கிக் கொண்டிருந்தது. 2003-ம் ஆண்டு அப்போதைய இந்தியத் தலைமை அமைச்சர் அடல் பிஹாரி வாஜ்பேய் இது தொடர்பாக MTCRஅமைப்பைக் கடுமையாகச் சாடியிருந்தார். வட கொரியா தனது ஏவுகணைத் தொழில்நுட்பத்தை உக்ரேனிடமிருந்தும் அதன் விஞ்ஞானிகளிடமிருந்தும் இரகசியமாகப் பெற்றுக் கொண்டது. அதை வைத்து வட கொரியா உருவாக்கிய ஏவுகணைகளின் தரம் கேள்விக்குரியது. அவற்றை எந்த அளவு இலகுவாக இடைமறித்துத் தாக்க முடியும் என்பது தொடர்பாக சரியான தகவல்கள் இல்லை.

இரசியாவின் சொல்லும் செயலும்
வட கொரியாவை ஒரு அணுக் குண்டு வைத்திருக்கும் நாடாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ரெக்ஸ் ரில்லர்சனும் இரசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கி லவ்ரோவும் தெரிவித்துள்ளனர். இருவருக்கும் இடையில் உலகின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக தொலைபேசியூடாக நடந்த பேச்சு வார்த்தையில் இது ஒத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் அமெரிக்காவிற்கு எங்கெங்கெல்லாம் பிரச்சனை கொடுக்க முடியுமோ அங்கெல்லாம் தன் தலையீட்டை இரசியா உக்ரேன் விவகாரத்தின் பின்னர் தயங்காமல் செய்கின்றது. இப்போது அமெரிக்கா உக்ரேனுக்கு தாக்குதல் படைக்கலன்களை வழங்க முடிவெடுத்த பின்னர் இரசியாவின் நிலைப்பாடு இன்னும் தீவிரமாக மாறியிருக்கும்.

துரிதப்படுத்தப்பட்ட உற்பத்தி
வட கொரியா அமெரிக்காவின் எப்பாகத்திலும் சென்று விழக்கூடிய ஏவுகணைகளை 2017இல் வட கொரியா வெற்றிகரமாக பரீட்சித்துப் பார்த்து விட்டது. ஆனால் அவை அணுக்குண்டைத் தாங்கிச் செல்லக் கூடியவை ஆல்ல. 2017இன் இறுதியில் தனது நாட்டின் அணுப்படைகலன் மேம்பாட்டைத் துரிதப்படுத்தும்படி வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் உத்தரவிட்டுள்ளார். பல படைத்துறை நிபுணர்கள் 2020-ம் ஆண்டு அமெரிக்காவின் எப்பாகத்தையும் அணுக்குண்டால் தாக்கும் திறனை வட கொரியா பெறும் எனப் பல படைத்துறை நிபுணர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். ஆனால் இந்தத் துரிதப் படுத்தல் உத்தரவு 2020இற்கு முன்னரே வட கொரியா அமெரிக்காவின் எப்பாகத்தையும் அணுக்குண்டால் தாக்கும் திறனைப் பெற்றுவிடும் என்பதை உறுதி செய்கின்றது. 2017-ம் ஆண்டின் இறுதியில் வட கொரியா நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணைகள் வீசுவதைப் பரிசோதித்தது. ஆனால் வட கொரிய நீர் மூழ்கிக் கப்பல்கள் அதனது தரையில் இருந்து ஒரு சில நூறு மைல்கள் மட்டுமே செல்லக் கூடியவை. அவற்றை தென் கொரியாவாலேயே அழிக்க முடியும். 2020-ம் ஆண்ட் அல்லது அதற்கு முன்னதாக வட கொரியாவால் transporter erector launcher, or TEL எனப்படும் பாரா ஊர்திகளில் இருந்து செலுத்தும் ஏவுகணைகளை உருவாக்க முடியும். 2012-ம் ஆண்டு இவற்றில் சிலவற்றை வட கொரியா சீனாவிடமிருந்து வாங்கியிருந்தது. இந்த முறைமையில் இருந்து ஏவுகணை செலுத்த ஒரு மணித்தியாலம் எடுக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏவுகணையை முதலில் நிலத்துக்கு கீழ் உள்ள பாதுகாப்பான இடத்தில் இருந்து வெளியில் கொண்டு வந்து பார் ஊர்தியில் ஏற்றி நிமிர்த்தி ஏவ வேண்டும். இந்த ஒரு மணித்தியால அவகாசத்தினுள் அமெரிக்காவினது செய்மதிகள் நடப்பவற்றை அவதானித்து விடும். . இவற்றிற்கிடையில் வட கொரியாவின் அணுக்குண்டு உற்பத்தியில் தாமதத்தை ஏற்படுத்தினர் என்பதற்காக இரு உயர் அதிகாரிகள் வட கொரியாவில் கொல்லப் பட்டுள்ளார்கள் என ஜப்பான் தெரிவித்துள்ளது. ஒருவர் அணு உற்பத்தியின் மேற்பார்வை நிலையத்தின் இயக்குனர் பார்க் இன் யங் மற்றவர் அரச விவகாரங்களுக்கான ஆணையாளர் குவாங் பியோங் சோ.

பொருளாதார நெருக்கடி
வட கொரியாவிற்கு எரிபொருள் ஏற்றுமதி செய்வதை சீனாவும் பெருமளவு குறைத்துள்ளது. வட கொரியாவிற்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற இரு கப்பல்களை தென் கொரியா இடைமறித்துத் திருப்பி அனுப்பியுள்ளது. சீனா இரகசியமாக வட கொரியாவிற்கு எரிபொருள் அனுப்பியதும் செய்மதியூடாக அவதானிக்கப் பட்டுள்ளது. சீனா தன்னுடன் நூற்றுக்கு நூறு விழுக்காடு ஒத்துழைக்காவிடின் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகச் சம்மின்மை தொடர்பாக தான் நடவடிக்கை எடுப்பேன் என்பது சீனாவிற்கு எதிரான டிரம்பின் மிரட்டலாகும். வட கொரியாவில் எரிபொருள் தட்டுப்பாடு உருவாகி விலைகள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

2016-ம் ஆண்டிலேயே வட கொரியா அமெரிக்காவின் எப்பாகத்தையும் அணுக்குண்டால் தாக்கக் கூடைய வல்லமையைப் பெற்றுவிட்டது என்ற அனுமானத்துடன் அமெரிக்கா செயற்படத் தொடங்கிவிட்டது. இதன் மூலம் வட கொரியாவிலும் பார்க்க அமெரிக்கா இரண்டிற்கு மேற்பட்ட ஆண்டுகள் முந்தி நிற்கும் நிலையைப் பெற்றுவிட்டது. வட கொரியாவின் முழு அணுக்குண்டுகளையும் வட கொரியாவில் வைத்தே அழித்தல், ஏவும் நிலையில் வைத்து அழித்தல், ஏவப்பட்ட பின்னர் ஏவுகணைகளை இடைமறித்து அழித்தல் ஆகிய மூன்று வகையிலும் அமெரிக்கா தனது தொழில்நுட்பத்தை உருவாக்கியது.

வட கொரியாவைச் சுற்றி வளைக்கும் F-35 போர்விமானங்கள்
2017-ம் ஆண்டின் இறுதியில் இரசியா தனது உலங்குவானூர்தி (ஹெலிக்கொப்டர்) தாங்கிக் கப்பலை அமெரிக்காவின் F-35B போர்விமானத்தை தாங்கிச் செல்லக் கூடிய வகையில் மாற்றியமைக்கப் போவதாக அறிவித்தது. ஏற்கனவே அங்கு 12 F-35-A உள்ளன. தென் கொரியாவும் F-35B போர்விமானங்களைத் தாங்கிச் செல்லும் கப்பல்களை உருவாக்கப் போவதாக அறிவித்தது. ஏற்கனவே வட கொரியாவை F-35 போர்விமானங்கள் மூலம் தாக்கும் ஒத்திகையை அமெரிக்கா செய்துள்ளது. வட கொரியாவைத் தாக்குவதற்கென பல F-35 போர்விமானங்களை குவாம் தீவில் உள்ள தனது படைத்தளத்திற்கு அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் USS Ronald Reagan, Theodore Roosevelt and Nimitz ஆகிய மூன்று விமானம் தாங்கிக் கப்பல்கள் கொரிய வளைகுடாவைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் நிலைகொண்டுள்ளன. அவற்றிலும் F-35 போர் விமானங்கள் உள்ளன.

F-35 செய்யவிருப்பவை
அமெரிக்காவின் F-35 போர்விமானங்களில் , பி, சி என மூன்று வகை உண்டு. அமெரிக்காவின் விமானப்படை, கடற்படை, கடல்சார்படை(Marine)  ஆகிய மூன்றிலும் பாவிக்கக் கூடிய வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. F-35 வானில் எதிரிவிமானங்களை அழிப்பதில் சிறப்பு மிக்கவை. F-35 மூன்று வகைகளில் வட கொரியாவின் ஏவுகணைகளை அழிக்க முடியும். முதலாவதாக F-35இல் செய்யும் சிறுமாற்றம் அவற்றால் எறியியல் ஏவுகணைகளை (ballistic missile) இடைமறிக்க வல்லனவாக்கும். அவற்றில் வானில் இருந்து வானில் தாக்குதல் செய்யக் கூடிய AIM-12 ஏவுகணைகளைப் பொருத்தும் போது விரைவாகப் பாயும் ஏவுகணைகளை அவற்றின் மூலம் அழிக்க முடியும். அத்துடன் AIM-9X Sidewinder ஏவுகணைகளை பல திசைகளிலும் உள்ள இலக்குகலை நோக்கி F-35ஆல் வீச முடியும்.  இரண்டாவதாக வட கொரியாவிற்கு அண்மையான கடற்பரப்பில்  வேவு பார்க்கும். வட கொரியாவில் இருந்து ஏவுகணைகள் வீசப்படும் போது F-35 அந்த ஏவுகணைகள் பற்றிய தகவல்களை கடலில் உள்ள கப்பல்களுக்கும் தரையில் உள்ள ஏவுகணை எதிர்ப்பு நிலைகளுக்கும் துரிதமாக தகவல் அனுப்பும். அதனால் தானியங்கிகள் மூலம் உடனடியாக ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகள் ஏவப்பட்டு வட கொரிய ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்படும். F-35இல் உள்ள Electro-Optical Targeting System வட கொரிய ஏவுகணைகளை இலகுவாகவும் உடனடியாகவும் இனம் காணும். மூன்றாவது F-35 போர்விமானங்கள் தொலைவில் உள்ள ஏவுகணைகளை இனம் கண்டு அவற்றை அழிக்க வல்லவை. F-35-A போர்விமானங்களில் இருந்து GBU-54 என்னும் லேசர்கதிர்கள் மூலம் வழிகாட்டித் தாக்குதல் செய்யும் ஏவுகணைகள் அசையும் ஏவுகணைச் செலுத்திகளை நிர்மூலம் செய்யக் கூடியவை.

வட கொரியாவிற்கான மேலதிக மிரட்டலாக USS Wasp என்னும் தாக்குதல் கப்பல் ஜப்பான் சென்றுள்ளது. 40,000 தொன் எடையுள்ள இது ஒரு சிறு விமானம் தாங்கிக் கப்பல் என அழைக்கப்படுகின்றது. ஓடுபாதையில் ஓடாமல் உலங்கு வானூர்தி போல் மேல் எழும்பக் கூடிய வல்லமை கொண்டதால் F-35 போர்விமானங்கள் இதில் இலகுவாக உள்ளடக்கப் பட்டுள்ளன.

வட கொரியாவிடம் இருக்கும் சீனத் தயாரிப்பான Shenyang J-5 போர்விமானங்கள் இரசியாவின் மிக்-17இன் பிரதிகளாகும். அதே போல இரசியாவின் மிக்-19இன் பிரதிகளான சீனாவின் J-6 போர் விமானங்களும் உள்ளன. மொத்தமாக வட கொரியாவிடம் பழமை வாய்த 106 போர்விமானங்கள் இருக்கின்றன. நான்காம் தலைமுறைப் போர்விமானங்களுடன் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான F-35 ஒப்பிடுவது பழைய வட்ட வடிவத்தில் இலக்கங்கள் துளைகளுக்குள் இருக்கும் தொலைபேசிகளுடன் ஐ-போனை ஒப்பிடுவது போன்றதாகும். வட கொரியாவின் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளால் F-35 போர்விமானங்களை இனம் காண முடியாது.  

இறங்கிய வட கொரியாவும் எகிறும் அமெரிக்காவும்
வட கொரியா பேச்சு வார்த்தைக்கு இறங்குவது போல் சமிக்ஞைகள் கிடைத்தவுடன் அமெரிக்காவின் ஐநாவிற்கான தூதுவர் நிக்கி ஹெலி வட கொரியா அணுக்குண்டுப் பரிசோதனைகளையும் ஏவுகணைப் பரிசோதனைகளையும் நிறுத்தினால் மட்டுமே பேச்சு வார்த்தை சாத்தியம் என்றார்.

வட கொரிய அதிபர் பயத்தின் பிடியிலா?

1950-53 இல் நடந்த கொரியப் போரில் வட கொரியர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் கொல்லப்பட்டனர். எல்லா கட்டிடங்களும் தரைமட்டமாகின. வட கொரியா தொடர்பான நிபுணர் Nicholas Davies அதிபர் கிம் ஜொங் உன் பயத்திற்கு உள்ளாகியுள்ளார். டொனால்ட் டிரம்ப் தன் மீதும் தனது நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தலாம் எனக் கரிசனை கொண்டுள்ளார். தன்னை தனது அணுக்குண்டுதான் பாதுகாப்பதாக அவர் கருதுகின்றார். அந்தக் கரிசனை இருக்கும் வரை அவர் தனது அணுக்குண்டுகளைக் கைவிடமாட்டார் என்கின்றார் Nicholas Davies. அவரது கருத்தை முன்னாள் அமெரிக்கப் படைத் தளபதி Jack Keaneயும் ஆதரிக்கின்றார். ஆனால் அமெரிக்காவின் அணுகுமுறை வட கொரியாவை மிரட்டிப் பணியவைப்பதே! இதனால் ஒரு “விடாக் கண்டன், கொடாக்கண்டன்” சூழ்நிலை கொரியத் தீபகற்பத்தில் உருவாகியுள்ளது. அது பல வட கொரியர்களை வறுமைக்கும் பட்டினிக்குள்ளும் தள்ளும். 

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...