Wednesday 19 September 2018

இரசிய விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியது சிரியா


இஸ்ரேலிய வான்படைகளின் நடவடிக்கையின் விளைவாக சிரியாவின் ஏவுகணையால் வீழ்த்தப்பட்ட இரசிய விமானத்தில் இருந்த 15 இரசிய வீரர்கள் கொல்லப்பட்டனர். சிரியாவிற்கு இரசியா வழங்கிய S-200 ஏவுகணை எதிர்ப்பு முறைமையால் இரசிய வேவு விமானமான Ilyushin Il-20 சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. 2018 இரசியாவின் படைகள் அதிகம் நிலை கொண்டுள்ள லதக்கியா மாகாணத்தில் செப்டம்பர் 18 செவ்வாய் இரவு நடந்த இந்த நிகழ்வு இஸ்ரேலுக்கும் இரசியாவிற்கும் இடையில் உள்ள உறவில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

இஸ்ரேல் – ஈரான் போட்டிக்குப் பலி
இத்லிப் மாகாணத்தில் சிரிய அரச படைகளும் இரசியப் படைகளும் நடத்தும் தாக்குதல் தொடர்பாக துருக்கியுடன் ஒரு உடன்பாடு செய்த ஒரு சில மணித்தியாலங்களில் இரசிய விமானம் வீழ்த்தப்பட்டுள்ளது. சிரியப் படையினர் கவனமின்றி அதிக அளவிலான ஏவுகணைகளை வீசுவதே இரசிய வேவு விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதற்கு காரணம் என்றது இஸ்ரேல். கொல்லப்பட்ட இரசிய வீரர்களுக்கு அமெரிக்கா தனது அனுதாபத்தைத் தெரிவித்தது. சிரியாவில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவும் போட்டிக்கு இரசிய வீரர்கள் பலியாகினர் என்பது படைத்துறை நிபுணர்களின் கருத்து.

இஸ்ரேலின் எல்லை தாண்டிய பயங்கரவாதம்
ஹிஸ்புல்லாவின் வளர்ச்சியை இட்டும் சிரியாவில் ஈரானின் ஆதிக்கத்தையிட்டும் இஸ்ரேல் அதிக கரிசனை கொண்டுள்ளது. 2011-ம் ஆண்டு சிரியப் போர் தொடங்கியதில் இருந்து 200இற்கும் மேற்பட்ட விமானத் தாக்குதல்களை இஸ்ரேல் சிரியாவில் செய்துள்ளது. இஸ்ரேலின் இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதம் தங்கு தடையின்றி தொடர்கின்றது. 2015-ம் ஆண்டு செப்டம்பரில் இரசியா சிரியாவில் தலையிட்ட பின்னர் இரண்டு நாடுகளும் தொடர்ச்சியான தொடர்பாடலில் இருக்கின்றன. இரசியா சிரியாவில் தலையிட்ட பின்னர் (கடந்த மூன்று ஆண்டுகளில்) இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ ஒன்பது தடவைகள் இரசியா சென்று பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். சிரியப் போரில் அதிபர் பஷார் அல் அசாத் பதவியில் இருந்து அகற்றப்படுவதை இஸ்ரேல் விரும்பவில்லை. அவர் அகற்றப்படால் இஸ்லாமிய மதவாதத் தீவிர வாதிகளின் கையில் சிரியா போவதை இஸ்ரேல் விரும்பவில்லை. அதனால் இரகசியமாக அமெரிக்கா சிரிய அரச படைகளுக்கு உதவி செய்துள்ளது. ஆனால் சிரியாவில் இருந்து லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லாப் போராளி அமைப்புக்கு படைக்கலன்கள் எடுத்துச் செல்லப்படுவதை இஸ்ரேல் தொடர்ந்து தனது தாக்குதல்கள் மூலம் தடுத்து வந்தது.

துருக்கி வேறு இஸ்ரேல் வேறு
2015 டிசம்பரில் இரசியாவின் SU-24 போர்விமானம் ஒன்று தனது எல்லைக்குள் பறந்ததாகச் சொல்லி துருக்கி அதைச் தன்னிடமுள்ள அமெரிக்கத் தயாரிப்பு F-16 விமானத்தில் இருந்து வீசிய ஏவுகணையால் சுட்டு வீழ்த்தியது. பத்துத் தடவை எச்சரிக்கை செய்த பின்னரே சுட்டு வீழ்த்தியதாக துருக்கி தெரிவித்திருந்தது. அப்போது இரசிய ஊடகங்கள் துருக்கியின் அதிபர் எர்டோகானை குண்டர் என்றும் மேலும் பல கடுமையான வார்த்தைகளைப் பாவித்து துருக்கி மீது சேறு பூசியது. ஆனால் இஸ்ரேல் விவகாரத்தில் அவை சற்று மிதமாக நடந்து கொண்டன.

முதல் வந்த பிழையான தகவல்
2015இன் பின்னர் சிரியாவில் தாக்குதல் செய்ய முன்னர் இஸ்ரேல் இரசியாவிற்கு அறிவித்துவிட்டு செய்வதை வழமையாகக் கொண்டுள்ளது. ஆனால் 2018 செப்டம்பர் 18-ம் திகதி இஸ்ரேலிய வான்படையினர் ஒரு நிமிடம் முன்னதாகவே தமது தகவலை இரசியாவிடம் தெரிவித்தனர். அமெரிக்கத் தயாரிப்பான F-16 விமானங்கள் சிரியாவில் தாக்குதல் செய்யத் தொடங்கியவுடன் சிரிய ஏவுகணை எதிர்ப்பு முறைமை செயற்படத் தொடங்கியது. அப்போது வானில் பறந்து கொண்டிருந்த இரசிய வேவு விமானமான Ilyushin Il-20  சிரியாவின் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானது. அதில் பயணித்த 15 பேரும் கொல்லப்பட்டனர். ஆரம்பத்தில் இஸ்ரேலியர்களால் இரசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இரசியத் தரப்பில் இருந்து இஸ்ரேலுக்கு எதிரான கருத்துக்கள் வெளிவிடப்பட்டன. இரசியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேலிய F-16 இரசிய விமானங்களுக்கு பின்னால் மறைந்து பறந்ததாகக் குற்றம் சாட்டினார். இரசியாவிற்கான இஸ்ரேலியத் தூதுவர் இரசிய வெளியுறவுத் துறையின் பணிமனைக்கு அழைத்து விளக்கமும் கோரப்பட்டது. பின்னர் உண்மை நிகழ்வு வெளிவந்ததும். இரசிய அதிபர் விளடீமீர் புட்டீன் இஸ்ரேலுக்கும் இரசிய விமானம் வீழ்த்தப்பட்டதற்கும் நேரடித் தொடர்பில்லை என்றார். சங்கிலித் தொடரான விபத்தான துன்பியல் நிகழ்வுகளால் (a chain of tragic accidental circumstances”) தமது விமானம் வீழ்த்தப்பட்டதாக புட்டீன் தெரிவித்தார்.

மௌனம் பேசியது
சிரியாவில் தாக்குதல்கள் செய்த பின்னர் மௌனமாக இருப்பதை வழமையாகக் கொண்டிருந்த இஸ்ரேல் இரசிய வேவு விமானமான Ilyushin Il-20  வீழ்த்தப்பட்ட பின்னர் ஒரு நீண்ட அறிக்கையை வெளிவிட்டது. சிரிய விமானப் படையின் படைக்கலக் களஞ்சியத்தின்  மீது தாம் தாக்குதல் செய்ததாக இஸ்ரேல் தெரிவித்தது. சகிக்க முடியாத அச்சுறுத்தலுக்கு எதிராக தாம் தக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்தது. சிரியாவின் படைக்கலக் களஞ்சியத்தில் இருந்து ஹிஸ்புல்லா லெபனானுக்கு எடுத்துச் செல்லவிருந்த நிலையிலேயே தாம் தக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்தது.

இஸ்ரேல் ஒரு நிமிட அவகாசத்தை மட்டும் இரசியாவிற்கு கொடுத்தது இரசியாவை நிச்சயம் உறுத்துகின்றது. போதிய அவகாசத்துடன் தகவல் வழங்கினால் அதை இரசியா சிரியாவிடன் பரிமாறிக் கொள்ளும் என்ற எண்ணத்துடன் இஸ்ரேல் செயற்பட்டிருக்க வேண்டும். 2018-ம் ஆண்டு  பெப்ரவரி மாதம் சிரியாவில் உள்ள ஈரானியப் படை நிலைகளைத் தாக்கச் சென்ற இஸ்ரேலிய F-16 விமானங்களில் ஒன்றை சிரியா சுட அது இஸ்ரேலின் ஆதிக்கப் பிரதேசத்துக்குள் விழுந்தது.

பிற்சேர்க்கை 24-09-2018
இரசியாவின் எதிர் நடவடிக்கைகள்

இரசியா சிரியாவிற்கு S-300 ஏவுகணைகளை வழங்கப் போவதாக அறிவித்தது. அத்துடன் சிரிய வான்பரப்புக்குள் வரும் விமானங்களின் அலைகளைக் குழப்பப்போகின்றது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...