Friday 2 February 2018

எதிரிகளின் அணுக்குண்டுகளைச் சமாளிக்க அமெரிக்கா முயலும் வகைகள்

வட கொரியா போன்ற சிறு நாடுகள் கூட அணுக்குண்டுகளை உற்பத்தி செய்யும் திறன் பெற்றிருக்கும் வேளையிலும் ஐக்கிய அமெரிக்காவிற்கு எதிராக தேவை ஏற்படின் அணுப் படைக்கலன்களைப் பாவிக்கத் தயங்க மாட்டோம் என இரசியா பகிரங்கமாக அறிவித்திருக்கையிலும் சீனா தனது படைவலுவை மிகத் துரிதமாக மேம்படுத்திக் கொண்டிருக்கும் வேளையிலும் அமெரிக்கா எதிரிகளின் அணுப்படைக்கலன்களை அழிக்க பல் வேறு வழிகளை உருவாக்கி வருகின்றது.

அமெரிக்க ஆதிக்க முறியடிப்பு
எதிரி நாடுகளின் “நுழைவு எதிர்ப்பும் பிரதேச மறுப்பும்( “Anti-Access/Area Denial strategy”) உபாயத்தை உடைக்கும் வல்லமையை அமெரிக்காவிற்குக் கொடுப்பது அதன் கடல்சார் படையணிகளாகும். கடற்படை என்பது பல நாடுகளில் இரு வகையானவை. ஒன்று கடற்படை அது கடலில் மட்டும் செயற்படக் கூடியது. மற்றையது கடல்சார்படை(Marines). கடல்சார் படை கடலை முக்கிய தளமாகக் கொண்டு செயற்பட்டாலும் அது தரையிலும் வானிலும் போர் புரியக் கூடியவகையில் படைக்கலன்களையும் பயிற்றப்பட்ட படையினரையும் கொண்டுள்ளது. அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தில் அதன் கடல்சார்படை பெரும் பங்கு வகிக்கின்றது.18-ம் நூற்றாண்டில் பிரித்தானியப் பேரரசுக்கு எதிரான அமெரிக்க சுந்தந்திரப் போரில் இருந்து ஈராக் போர் வரை அமெரிக்காவின் அமெரிக்காவின் கடல்சார் படையினரே மிகப்பெரும் பங்கு வகித்தனர். அமெரிக்காவின் இந்த ஆதிக்கத்தை முறியடிக்க அணுப்படைக்கலன்கள் அவசியமானவை என அதன் எதிரி நாடுகள் உணர்ந்துள்ளன. அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் பேரழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்களைக் கொண்டிருந்தால் அமெரிக்கா ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படும் என்பதை வட கொரியா உலகிற்கு உணர்த்தியுள்ளது. தன் எதிரிகளின் அணுப்படைக்கலன்களை புதிய முறைகள் மூலம் அணுக அமெரிக்கா முனைகின்றது.

இணைய வெளியூடான தாக்குதல்
எதிரியின் அணுப்படைகளுடன் தொடர்பு பட்ட கணினித் தொகுதிகளை இணையவெளி ஊடுருவல் மூலம் செயலிழக்கச் செய்வதும் எதிரியின் செய்மதிகளை அழிப்பதும்இணைந்த ஒரு வகை பாதுகாப்பு முறைமைய அமெரிக்கா உருவாக்கியுள்ளது. இதனால் எதிரி அணுக்குண்டு வீசுவதை தற்காலிகமாகத் தடை செய்ய முடியும். அந்த இடைப்பட்ட வேளையில் எதிரியின் அணுக்குண்டு வீசும் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்க வேண்டும். மைக்குரோவேவ் என்னும் நுண்ணலைத் தொழில்நுட்பம் கொண்ட குண்டுகளை வீசுவதன் மூலம் எதிரியின் கணினிகளைச் செயற்படாமல் தடுக்க முடியும். இணயவெளி ஊடுருவலிலும் பார்க்க இது செயற்திறன் மிக்கது. ஆனால் ஏவுகணை எதிர்ப்பு முறைமையைத் தாண்டிச் செல்ல வேண்டும்.

இடை மறிப்புத் தாக்குதல்
அமெரிக்காவும் இரசியாவும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை ஒன்று ஒன்று கடும் போட்டியாக உருவக்கி வருகின்றன. இஸ்ரேல், இரசியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகள் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை உருவாக்குகின்றன. அத்துடன் பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலிய ஆகிய நாடுகள் இணைந்து ஏவுகணை எதிர்ப்பு முறைமையை உருவாக்குகின்றன. ஆனால் மறுபுறத்தில் பல நாடுகள் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்கி வருகின்றன. ஒலியிலும் பார்க்கப் பன்மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைகளுக்கு எதிராக பெரும்பாலான ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் செயற்பட முடியாது. ஐக்கிய அமெரிக்கா, சீனா, இரசியா, இந்தியா, பாக்கிஸ்த்தான், துருக்கி உட்படப் பல நாடுகளிடம் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் இருக்கின்றன. இந்தியாவும் இரசியாவும் இணைந்து உருவாக்கிய பிரம்மோஸ் ஏவுகணைகள் தற்போது உள்ள ஏவுகணைகளில் அதிக வேகமாகப் பாயக் கூடியவை.

ஏவுகணை எதிர்ப்பு முறைமையில் லேசர் கதிர்கள்
லேசர் கதிர்களை பாவித்து எந்த வேகத்தில் வரும் ஏவுகணைகளையும் அழிக்க முடியும். இது சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை அழிக்க அமெரிக்கா உருவாக்கிய உபாயமாகும். இப்படிப் பட்ட லேசர் படைக்கலன்களை பரிசோதிக்கும் போதுதான மலேசியாவின் எம்.எச்-17 பயணிகள் விமானம் தவறுதலாக அகப்பட்டுக் கொண்டது என்ற சதிக்கோட்பாடும் சிலரால் முன்வைக்கப்பட்டது.

ரொபோக்களைப் போரில் ஈடுபடுத்துதல்
செயற்கை விவேகத்தின் (artificial intelligence) வளர்ச்சி ரொபோக்கள் என்னும் இயந்திர மனிதர்களை போர்களம் இறக்கும் திறனை உருவாக்கியுள்ளது. முதலில் ஒரு படையணியை வழிநடத்துவதற்கும் தாக்குதல்களை நெறிப்படுத்துவதற்கும் செயற்கை விவேகம் பாவிக்கப்பட்டது. போர்களத்தில் இருந்து பெறப்படும் பல்வேறு தகவல்களை அடிப்படியாக வைத்து செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகளை துரிதமாக முடிவெடுக்கும் பணியை ரொபோக்கள் செய்தன. இவை கட்டளைப் பணியகத்தில் உள்ள தளபதிகளின் பணியை திறன் மிக்கதாக்கியது. தற்போது போர்க்களத்தில் இறக்கப்படக் கூடிய ரொபோக்கள் உருவக்கப்படுகின்றன. இவை அணுக்குண்டுத் தாக்குதல்களுக்கு மத்தியுலும் நின்று செயற்படும். இவற்றை களமிறக்கிய பின் தாமாகவே போர் புரியும். எவரும் அவற்றை இயக்கத் தேவையில்லை.

எதிரியின் அணுக்குண்டுகளை நிர்மூலமாக்குதல்
கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்கா எதிரியின் அணுக்குண்டுகளை எதிரியின் இடத்தில் வைத்தே அழித்து ஒழிக்கும் முறைமை பற்றி பல ஆராய்ச்சிகளைச் செய்து வருகின்றது. 2017 நவம்பரில் அமெரிக்கக் கடற்படையினர் உலகின் எப்பாகத்தையும் தாக்கக் கூடிய ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பரீட்சித்தனர். உலகின் மிகக் கூடிய தொலைவில் உள்ள இலக்கை ஒரு மணித்தியாலத்துக்குள் அந்த ஏவுகணைகளால் தாக்க முடியும். இவை மரபு வழிப் படைக்கலன்களை அதாவது அணுக்குண்டு அல்லாத குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடியவை. அத்துடன் இலக்குகளை மிகத் துல்லியமாகத் தாக்கக் கூடியவை. எதிரியின் அணுக்குண்டுகளை ஒழிக்கும் அமெரிக்காவின் திட்டத்திற்கு Conventional Prompt Global Strike (CPGS) எனப் பெயரிட்டுள்ளது. இதில் முக்கிய அம்சங்கள்
1. மரபுவழிக் குண்டுகளைப் பாவித்தல்
2. ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை முறியடிக்கக் கூடிய வகையில் ஒலியிலும் பல மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைப் பாவித்தல்.
3. உலகின் எப்பாகத்திலும் தாக்குதல் நடத்தும் திறன் பெறுதல்.
4. மிகத் துரிதமான நடவடிக்கை.
இவற்றால் தான் இத்திட்டத்திற்கு மரபுவழி துரிதசெயலில் உலகெங்கும் தாக்குதல் {Conventional Prompt Global Strike (CPGS)} எனப் பெயரிடப்பட்டுள்ளது.  இப்போது சீனாவும் இதே போன்ற முறைமையை உருவாக்கத் தொடங்கியுள்ளது. வட கொரியாவை அதன் அணுக்குண்டுகளைக் கைவிடாவிட்டால் தென் கொரியா, ஜப்பான், தைவான் ஆகிய நாடுகள் அணுக்குண்டு உற்பத்தி செய்ய வேண்டும் என அமெரிக்கப் பாதுகாப்புத் துறை கருதுகின்றது. இது வட கொரியாவை அடக்க மறுக்கும் சீனாவைப் பழிவாங்கு நடவடிக்கையே. ஏற்கனவே சீனா இந்தியாவின் அணுக்குண்டுகளையும் அதன் ஏவுகணைகளின் வளர்ச்சியையும் இட்டு மிகக் கரிசனை கொண்டுள்ளது.

ஆக மொத்தத்தில் படைகலப் போட்டி பல வழிகளில் தொடரும். அதனால் பெருமளவு பணம் விரயமாகும். ஆனல் உலகம் அமைதியடையப்போவதில்லை.


No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...