Monday 18 December 2017

இந்தியாவிற்கு சவாலாகும் நேபாளத்தின் ஆட்சி மாற்றம்

நேப்பாளத்தின் புதிய அரசியலமைப்பு யாப்பின்படி நடந்த முதலாவது தேர்தலில் இரு பொதுவுடமைவாதக் கட்சிகளின் கூட்டமைப்பு வெற்றி பெற்று ள்ளது. நடுவண் இணைப்பாட்சி அரசின் பாராளமன்றத்திற்கும் ஏழு மாகாணசபைகளுக்குமான தேர்தல் நேப்பாளத்தில் நவமபர் 26-ம் திகதி முதல் டிசம்பர் 7-ம் திகதிவரை நடைபெற்றது. 275 உறுப்பினர்களைக் கொண்ட பாரளமன்றத்திற்கும் மொத்தம் 550 உறுப்பினர்களைக் கொண்ட ஏழு மாகாணசபைகளுக்குமான தேர்தல் நேரடித் தேர்வும் விகிதாசாரத் தேர்வும் கலந்த முறைமையில் நடந்தது. கடந்த 28 ஆண்டுகளில் 26 தடவைகள் ஆட்சி மாற்றங்களை கண்ட நேப்பாளியர்கள் தமக்கு ஓர் உறுதியான அரசு தேவை என்பதை பரவலாக உணர்ந்துள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப பொதுவுடமைவாதக் கட்சிகளின் கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளது.

இந்திய சீன நிழற்போர்க்களமாக நேப்பாளம்


இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நிழற்போராகப் பார்க்கப்பட்ட நேப்பாளியத் தேர்தலில் யூ.எம்.எல் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ஐக்கிய மாக்ஸிச-லெனினிஸ கட்சியும் மாவோயிஸ கொள்கை கொண்ட நேப்பாளிய பொதுவுடமைக் கட்சியும் இணைந்து 116 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் போது இடைக்கால ஆட்சியில் இருந்த காங்கிரசுக் கட்சி 23 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது.

உலகின் உயர்ந்த இடத்தின் தாழ்ந்த நிலை
147,181 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நேப்பாளம் கடல் மட்டத்தில் இருந்து 1400 மீட்டர் உயரத்தில் உள்ளது. அத்துடன் 8000மீட்டர் உயரமான மலைத்தொடர்களையும் கொண்டது. உலகின் வறுமை மிக்க நாடுகளில் ஒன்றான நேப்பாளம் வெளிநாட்டு உதவிகளிலும் உல்லாசப் பிரயாணிகளின் வருகையிலும் பெரிதும் தங்கியுள்ளது. பத்து ஆண்டுகள் தொடர்ந்த 16,000இற்கு மேற்பட்ட உயிர்களைப் பலிகொண்ட வன்முறைக் கிளர்ச்சி 2006-ம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. எதிர்பார்த்த அளவு வன்முறைகள் இன்றி தேர்தல் அமைதியாக நடந்தது. 15மில்லியன் வாக்காளர்களின் 67 விழுக்காட்டினர் வாக்களித்தனர். பலர் பல தூரம் சிரமமான மலைப்பகுதிகளூடாக நடந்து சென்று வாக்களித்தனர். பல இழுபறிகளுக்குப் பின்னர் 2015-ம் ஆண்டு நேப்பாளம் மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சி உருவாக்கும் அரசியலமைப்பு அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. புதிய அரசியலமைப்பை இந்தியா விரும்பவில்லை. நேப்பாளத்தின் தென் பகுதியில் வாழும் இனக்குழுமங்கள் தமக்கு என ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பி போதாது என வன்முறைகளில் இறங்கியிருந்தனர். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் அகப்பட்டுள்ள நாடுகளில் நேப்பாளமும் ஒன்று. அது தனித்து நிற்க விரும்புகின்றது. ஆனால் சீனாவும் இந்தியாவும் தமது பக்கம் நேப்பாளம் நிற்க வேண்டும் என்ற அழுத்தங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் அதற்கு கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. இரண்டும் இணையும் போது நேப்பாளத்தை ஒதுக்கத் தயங்குவதில்லை. Qiangla/Lipu-Lekh Pass என்னும் பாதை ஊடாக இந்தியாவும் சீனாவும் வர்த்தகப் போக்கு வரத்துச் செய்ய 2015-ம் ஆண்டு மோடியின் சீனப் பயணத்தின்  போது ஒத்துக் கொண்டிருந்தன. அந்த Qiangla/Lipu-Lekh Pass தனக்குச் சொந்தமானது எனச் சொல்லி நேப்பாளம் தனது ஆட்சேபனையைத் தெரிவித்திருந்தது. அதை இரு நாடுகளும் செவிசாய்க்கவில்லை. Qiangla/Lipu-Lekh Pass நேப்பாளத்தின் மேற்கு முனையில் உள்ள பிரதேசத்தில் உள்ளது. அது யாருக்கு சொந்தம் என்பதில் முரண்பாடு உண்டு. இந்தியாவும் சீனாவும் நேப்பாளத்து தேர்தலை உன்னிப்பாகக் கவனித்து வந்தன. இரண்டு நாடுகளும் நேப்பாளத்தை தமது பிடிக்குள் வைத்திருக்க விரும்புகின்றன.

இரு எதிரிகள் எமது நண்பர்கள்
ஆட்சியில் இருந்த ஷெர் பஹதூர் டியூபா இந்திய சார்பு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். ஆனால் தேர்தல் பரப்புரையின் போது நேப்பாளம் எந்த நாட்டின் மீதும் தங்கியிருக்கக் கூடாது என்றும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஒரு சம நிலையான உறவை நேப்பாளம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அடிக்கடி சொல்லி வந்தார்தேர்தலில் வெற்றி பெற்று தலைமை அமைச்சராகவிருக்கும் கத்கா பிரசாத் ஷர்மா ஒலி நேப்பாளம் ஒரு அயல் நாட்டில் மட்டும் தங்கியிருப்பதை ஒழித்துக் கட்டி விட்டதாக தேர்தல் வாக்குக் கணிப்புகள் நடக்கும் போது தெரிவித்தார். அவரது தேர்தல் பரப்புரையும் இந்தியாவிற்கு எதிரானதாகவே பெரும்பாலும் அமைந்திருந்தது.

கடன் கொடுத்துக் கைபிடிக்கும் சீனா
சீனா நேப்பாளத்தில் செய்யும் முதலீடுகளும் அதற்குக் கொடுக்கும் கடன்களும் இந்தியாவைக் கலக்கமடையச் செய்துள்ளன. சீனா தனது ஆதிக்கத்தை பல ஆசிய நாடுகளில் விரிவு படுத்தும் வேளையில் நேப்பாளத்தில் இந்திய சார்பு ஆட்சியாளர்கள் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளார்கள். இந்தியர்களுக்கும் நேப்பாளியர்களுக்கும் இடையில் உள்ள கலாச்சாரத் தொடர்பால் நேப்பாளத்தில் இந்திய ஆதிக்கம் கடந்த பல ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஒரு திறந்த எல்லையும் சிறந்த வர்த்தகமும் நடை பெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சீனா நேப்பாளத்தில் தனது முதலீடுகளை இருமடங்காக அதிகரித்தது. நேப்பாளத்தில் பயன்படுத்தப்படாது இருந்த நீர் மூலம் மின்னுற்பத்தி செய்யும் வசதிகளில் முதலீடு செய்தது. பெருந்தெருக்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள் பாரிய கடைத்தொகுதிகள் எனப் பல கட்டுமானங்களை சீனா நேப்பாளத்தில் செய்தது. நேப்பாளத்தின் நடுப்பகுதியில் உள்ள உல்லாசப் பயணிகள் அதிக வருகை தரும் பொக்ஹாரா நகரில் சீனா ஒரு பாரிய விமான நிலையத்தையும் நிர்மாணித்தது. இந்த முதலீட்டு வெள்ளம் தான் இந்திய ஆதிக்கத்தை அடித்துக் கொண்டு போய்விட்டது.

நேப்பாளியத் தேசியவாதிகள்
நேப்பாளியத் தேசியவாதிகள் இந்தியாவுடனும் சீனாவுடனும் நல்லுறவின்றி தமது நாடு சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்துள்ளார்கள். ஆனால் தமது நாட்டின் இறைமையையும் தனித்துவத்தையும் அந்த உறவுக்காக அவர்கள் பலியிடத் தயாரில்லை என்பதை அவர்கள் தேர்தல் மூலம் நிரூபித்துள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்ற பொதுவுடமைவாதிகளும் மாவோயிஸ்ட்டுக்களும் இந்தியாவை புறம் தள்ள மாட்டோம் எனச் சொன்னாலும் சீனா மூலம் நேப்பாளத்தில் இந்தியாவின் ஆதிக்கத்தைக் குறைப்போம் என சூழுரைத்துள்ளனர்.

ஒற்றையாட்சியை நிராகரித்த நேப்பாளியர்கள்
நூற்றுக்கு மேற்பட்ட மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட நேப்பாளத்திற்கு கூட்டாட்சி முறைமையைக் கொண்ட அரசியலமைபு யாப்பை மாவோயிஸ்ட்டுகள் விரும்பினர். புதிய அரசியலமைப்பு நிறைவேற்றலும் சர்ச்சைகுரியதாகவே அமைந்தது. அது இந்திய விரோதமானது எனவும் கருதப்பட்டது. நேப்பாளிய மன்னர் குடும்பத்தினர் இந்திய சார்பான இந்துக்கள். அவர்களை இல்லாமல் செய்ய இரு அவைகளைக் கொண்ட மக்காளால் தேர்ந்தெடுக்கப்படும் பாராளமன்றத்திடம் புதிய அரசியலமைப்பு யாப்பு அதிகாரத்தை வழங்கியது. 2015-ம் ஆண்டு நேப்பாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தின் பின்னர் தான் செய்து கொண்டிருந்த உதவிகளை புதிய அரசியலமைப்பு யாப்பினால் அதிருப்தியடைந்த இந்தியா நிறுத்தியது. பல நேப்பாளியர்களை விசனத்துக்கு உள்ளாக்கியது. அது மட்டுமல்ல பூகம்பத்தின் அவலத்தை இந்தியத் தொலைக்காட்சிகள் தமது பார்வையாளர்களுக்கு பொழுது போக்காக வழங்கியதாகவும் நேப்பாளியர்கள் ஆத்திரமடைந்தனர். இந்தியாவால் நாம பலதடவைகள் வஞ்சிக்கப்பட்டோம் என்ற விசனம் நேப்பாளியர்கள் மத்தியில் மேலும் மோசமடைந்தது. அதுவரை இந்திய ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த பொதுவுடமைவாதியான தலைமை அமைச்சர் கே பி ஒலி இந்தியாவிற்கு எதிராகத் திரும்பினார். மாவோயிஸ்ட்டுக்களுடன் கூட்டணியும் அமைத்தார். தேர்தலில் வெற்றி பெற்ற அவர்கள் இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் இனி மீளாய்வு செய்யப்படும் என்கின்றனர். ஆனால் நேப்பாளத்தில் வாழும் மாதேசியர்கள்தான் புதிய அரசியலைமைப்பை எதிர்க்கும் முகமாக இந்திய நேப்பாளிய எல்லையை மூடினார்கள் என்பது இந்தியாவின் கருத்து. ஆனால் இந்திய உளவுத் துறையின் தூண்டுதலால் மாதேசியர்கள் எல்லையை மூடினார்கள் என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப்பட்டது

இந்தியாவிற்கோர் பாலமமைப்போம் என்னும் சீனா
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான தொடருந்துச் சேவை ஏதும் இல்லை. ஆனால் சீனா அவசர அவசரமாக காத்மண்டுவிற்கு தனது தொடருந்து சேவையை நிர்மானிக்கின்றது. நேப்பாளத்தில் சீனா செய்த வேலைத் திட்டங்கள் இந்திய அழுத்தத்தால் இதுவரை இருந்த இந்திய சார்பு அரசால் முடக்கப்பட்ட நிலையில் இருந்தது. அதை நேப்பாளியர்கள் இந்தியா தானும் முதலீடு தமது நாட்டில் செய்வதுமில்லை சீனாவைச் செய்ய விடுவதுமில்லை எனப் பார்த்தார்கள். நேப்பாளத்தினூடாக இந்தியாவிற்கு தொடருந்து சேவையை நடத்த சீனா நீண்டகால அடிப்படையில் திட்டமிட்டுள்ளது. அது இந்தியாவுடனான வர்த்தகத்திற்கும் பயணிகள் போக்கு வரத்திற்கும் வாய்ப்பாக அமையும். நேப்பாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான கட்டுப்பாடற்ற எல்லையூடாக சீனாவின் மலிவான பொருட்கள் இந்தியச் சந்தையை வந்தடையும் என்ற அச்சமும் தற்போது இந்தியர்களை ஆட்டிப்படைக்கின்றது. ஆனால் அந்த எல்லையில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தால் அது நேப்பாளியர்களை மேலும் அந்நியப்படுத்தும். தனது எரிபொருள்த் தேவைக்கு நேப்பாளம் இந்தியாவில் தங்கி இருப்பதை ஒழிக்க சீனா நேப்பாளத்திற்கான எரிபொருள் விநியோகத்தை இனி அதிகரிக்கும். சீனத் துறைமுகங்களை நேப்பாள் பாவிக்க அனுமதி வழங்கப்படவிருக்கின்றது.

இந்தியாவின் அயல் நாட்டுக் கொள்கை
தனது உளவுத்துறையால் செய்யும் நடவடிக்கைகளால் மட்டும் அயல் நாடுகளுடனான உறவைத் தக்க வைத்துக் கொள்ள இந்தியாவால முடியாது என்ற பாடத்தை நேப்பாளியத் தேர்தல் முடிவுகள் இந்தியாவிற்கு உணர்த்தியுள்ளன. இரு தரப்பினருக்கும் நன்மையளிக்கக் கூடிய வகையிலான பங்காண்மை அடிப்படையிலான உறவும் வர்த்தகமும் முதலீடுகளும் மட்டுமே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு அடிப்படை உபாயமாக அமைய வேண்டும். 

பட்டுப்பாதையில் இருந்து விலகிய நேப்பாளம்
2017 மே மாதம் நேப்பாளில் ஆட்சியில் இருந்த மாவோயிஸ்ட்கள் சீனாவின் ஒரு பட்டி ஒரு தெரு என்னும் புதிய பட்டுப்பாதைத் திட்டத்தில் இணைந்து கொள்ளும் குறிப்பெட்டில் கையொப்பமிட்டனர். அதன் ஒரு பகுதியாக 2.5பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நேப்பாளத்தில் கந்தாக்கி நீர் மின் உற்பத்தி செய்யும் திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் 2017 ஜுனில் கையொப்பமிட்டன. பின்னர் வந்த இந்திய சார்பு இடைக்கால அரசு இந்தத் திட்டம் சீனாவின் கடன் பொறி எனச் சொல்லி அதைக் கைவிடும் திட்டத்தை 2017 நவம்பரில் அறிவித்தது. இப்போது மீண்டும் ஆட்சிக்கு வரவுள்ள மாவோயிஸ்ட்களும் பொதுவுடமைவாதிகளும் மீண்டும் சீனாவுடன் கைக் கோர்க்கலாம்.


திபெத்தை சீனாவும் சீக்கிம்மை இந்தியாவும் விழுங்கியது போல் தாம் எந்த ஒரு நாட்டாலும் விழுங்கப்படாமல் தனித்துவமாக இருக்க வேண்டும் என நேப்பாளியர்கள் சிந்திக்கத் தொடங்கியது அவர்களின் வருங்கால முன்னேற்றத்தின் முதற்படி. இரு பெரும் புளியமரங்களுக்கு இடையில் வளரமுடியாமல் தவிக்கும் சிறுமரமாக நேப்பாளம் இதுவரை தவித்தது போதும்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...