Monday 30 October 2017

ஆப்கானுக்காக பாக்கிஸ்த்தானுக்கு எதிராக அமெரிக்கா இந்திய இணைவு

அமெரிக்காவின் வெளியுறவுத்துறைச் செயலர் ரெக்ஸ் ரில்லர்சன் இந்தியாவிற்குப் போகும் வழியில் ஓர் அறிவிக்கப்படாத பயணத்தை ஆப்கானிஸ்த்தானிற்கு மேற் கொண்டது முதல் ஆச்சரியம். அதைத் தொடர்ந்து அவர் பாக்கிஸ்தானிற்குப் போய் அங்கு ஒரு நாள் முழுக்கப் பேச்சு வார்த்தை நடத்தியது அடுத்த ஆச்சரியம். மேலும் அவர் இந்தியாவிற்குப் போகையில் ஆப்கானிஸ்த்தான் அதிபர் மொஹம்மட் அஸ்ரப் கானியும் (Mohammad Ashraf Ghani)  இந்தியாவிற்குப் போனது ஆச்சரியத்தின் உச்சம் . இப்பயணங்களுக்கு முன்னர் இந்திய ஊடகங்கள் பாக்கிஸ்த்தானுக்கு எதிராக அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானையும் இந்தியாவையும் இணைந்து ஒரு சுருக்குக் கயிறு போடப் போகின்றது என செய்திகள் வெளியிட்டமையை வைத்துப் பார்க்கும் போது பாக்கிஸ்த்தானுக்கு எதிராக ஒரு பெரும் சதி அரங்கேறுகின்றது என்பதை உணர முடிகின்றது.

ரில்லர்சன் இந்தியாவிற்கு செல்வதற்கு முன்னர் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலரும் இந்தியா சென்றிருந்தார் என்பதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியதே. அது மட்டுமல்ல ரில்லர்சன இந்தியா செல்லும் முன்னர் ஒக்டோபர் 18-ம் திகதி கேந்திரோபாய மற்ர்றும் பன்னாட்டுறவிற்கான நிலையத்தில் உரையாற்றும் போது சீனாவையும் பாக்கிஸ்த்தானையும் கடுமையாகச் சாடியிருந்தார் என்பதும் இன்னும் ஓர் ஆச்சரியமாகும்.  

டிரம்பும் அவரது பரப்பியமும்
பரப்பியம் (populism) என்ற கயிற்றைப் பிடித்துக் கொண்டு பதவிப்பாறையில் ஏறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அங்கு பல பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றார். அவர் ஏதாவது செய்ய வேண்டும் என்ற நிலையில் ஆப்கானிஸ்த்தானில் தலிபான், அல் கெய்தா, ஐ எஸ் ஆகிய தீவிரவாத அமைப்புக்களை ஒழித்துக் கட்டுவேன் என 2017 ஓகஸ்ட் மாதம் முழங்கினார். அதைச் செயற்படுத்தும் திட்டமாகவே வெளியுறவுத் துறைச் செயலர் ரெக்ஸ் ரில்லர்சனை ஆப்கான், பாக்கிஸ்த்தான், இந்தியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பியுள்ளார். டொனால்ட் டிரம்ப் பதவிக்கு வந்ததில் இருந்தே அமெரிக்காவி|ற்கு பெருமளவு ஏற்றுமதி செய்யும் இந்தியா ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்காவிற்கு உதவி செய்ய வேண்டும் என ஒன்றுக்கு மேற்பட்ட தடவை கருத்து வெளியிட்டிருந்தார். இந்திய தரப்பில் இருந்து அதற்கு பாதகமான பதில்கள் ஏதும் வெளிவரவில்லை. ஆனால் ஆப்கான் பிரச்சனையில் இந்தியா சம்பந்தப்பட்டால் அது எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போலாகும் என பாக்கிஸ்த்தான் தரப்பில் இருந்து கருத்து வெளியிடப்பட்டது. ஆப்கானிஸ்த்தானின் 350,000 படையினரும் தலிபானுக்கு எதிராக எத்தனை நாட்கள் தாக்குப் பிடிப்பார்கள் என்பது கேள்விக் குறியே. ஆப்கானிஸ்த்தானின் ஆளும் தரப்பினரிடையே உள்ளக முரண்பாடுகளும் ஊழல்களும் நிறைந்திருக்கின்றன. அமெரிக்கப் படைகள் வெளியேறினால் ஒரு சில மாதங்களுக்குள் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றும் நிலை அங்குள்ளது.

பாக்கிஸ்த்தானை சீனா விட்டுக் கொடுக்காது.
சீனாவின் வெளியுறவுக் கொள்கையில் பாக்கிஸ்த்தானுக்கு முக்கிய பங்கு உண்டு. சீனாவின் தரைவழிப் பட்டுப் பாதையில் இருந்து பாக்கிஸ்த்தானுக்கு ஒரு பொருளாதாரப் பாதை வகுக்கும் திட்டத்தை சீனா ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. அத்திட்டத்திற்கு சீனா சீன-பாக் பொருளாதாரப்பாதை” (China-Pakistan Economic Corridor -CPEC) எனப் பெயரும் இட்டுள்ளது. சீனா பொருளாதார உதவியாகவும் முதலீடாகவும் பாக்கிஸ்த்தானில் 62 பில்லியன்களுக்கு மேல் செலவிட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவையும் இந்தியாவையும் சிந்திக்க வைப்பதும் ஒன்றுபட வைப்பதும் சீன பாக்கிஸ்த்தானிய உறவின் திருப்பு முனையாக அமைந்த குவாடர் துறைமுகமும் ஆப்கானிஸ்த்தானில் பாக்கிஸ்த்தானின் இரட்டை வேடமுமாகும். ஒரு புறம் பாக்கிஸ்த்தான் ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்கப்படைகளின் நடவடிக்கைக்களுக்கு பாதை வழிவிடுவது உட்படப் பல உதவிகளைச் செய்து வருகின்றது. மறு புறம் அமெரிக்காவிற்கு எதிரான தீவிரவாத அமைப்புக்களுக்கு பாக்கிஸ்த்தான் உதவுகின்றது. பாக்கிஸ்த்தானின் பலுச்சிஸ்த்தான் மாகாணத்தில் அமைந்துள்ள அரபிக் கடல் துறைமுகமான குவாடர் துறைமுகத்தை 2015-ம் ஆண்டு சீனா பாக்கிஸ்த்தானிடமிருந்து 43 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது. இது சீனாவின் சீன பாக்கிஸ்த்தானிய பொருளாதாரப் பாதைத் (China Pakistan Economic Corridor) முக்கிய பகுதியாகும். இத் திட்டத்தில் சீனா 46 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட உத்தேசித்துள்ளது. இதில் சீனாவையும் அரபிக் கடலையும் இணைக்கும் உள்கட்டுமானமும் அடங்கும். அதன் மூலம் சீனாவிற்கான எரிபொருள் விநியோகத்தின் இரு திருகுப் புள்ளிகளான ஹோமஸ் நீரிணையையும் மலாக்கா நிரிணையையும் சீனாவால் தவிர்க்க முடியும். மக்கள் குடியிருப்புக்கள், பன்னாட்டு விமான நிலையும், கைத்தொழிற்பேட்டை, மசகு எண்ணெய் பதனிடும் நிலையம், உல்லாசப் பயண நிலைகள் ஆகியவற்றைக் கொண்டது சீன-பாக் பொருளாதாரப்பாதை. 2017 ஒக்டோபர் 17-ம் திகதி முதல் 24-ம் திகதிவரை சீனாவில் நடந்த பொதுவுடமைக் கட்சியின் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் தன்னை கட்சியிலும், ஆட்சியிலும், படையிலும் முடிசூடா மன்னன் ஆக்கிக் கொண்டார். உலக அரங்கில் சீனாவின் நிலையையும் சீனாவின் பிராந்திய ஆதிக்கத்தையும் விரிவு படுத்த வேண்டும் என்ற கொள்கையுடைய ஜின்பிங் தனது கிழக்கு வாசலான பாக்கிஸ்த்தானில் எதிரிகளின் கைகள் ஓங்குவதை அனுமதிக்க மாட்டார். 

புதிய ஜப்பான் சும்மா விடுமா?
ஆப்கானிஸ்த்தான் பிரச்சனையில் இந்தியாவை ஈடுபடுத்தி பாக்கிஸ்த்தானை மிரட்ட முயன்றால் அதில் சீனா தலையிடுவது தவிர்க்க முடியாதது போல் பாக்கிஸ்த்தானைச் சுற்றியுள்ள பிரச்சனையில் இருந்து ஜப்பான் விலகியிருக்க முடியாது. ஜப்பானை ஒரு தாக்குதிறன் மிகுந்த படைத்துறை நாடாக மாற்றவேண்டும் என்ற கொள்கையுடைய ஜப்பானியத் தலைமை அமைச்சர் திடீர்த் தேர்தலை நடத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். அதில் ஜப்பானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஒஸ்ரேலியா ஆகிய நான்கு நாடுகளும் நான்கு முனைப் பேச்சு வார்த்தை செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்துள்ளார். அப்பேச்சு வார்த்தை வர்த்தகத்திலும் பாதுகாப்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது அவரது கருத்தாகவிருக்கின்றது.

ஆப்கானை நான் வச்சிருக்கிறன் பாக்கிஸ்த்தானை நீ வச்சுக்க
போரை விரும்பும் படைத்துறையைக் கொண்டதும் பெருவல்லரசாகும் கனவுடன் இருக்கும் சீனாவுடன் நட்பை விருத்தி செய்து கொண்டிருப்பதும் அணுக்குண்டுகளை கையிருப்பில் வைத்திருப்பதுமான பாக்கிஸ்த்தான் மீது ஒரு போரை இலகுவில் தொடுக்க முடியாது. ஆனால் ஒரு போருக்கான நகர்வுகளைச் செய்தும் பாக்கிஸ்த்தானில் உள்நாட்டுப் பிளவிகள் மற்றும் பிரச்சனைகளை உருவாக்கியும் பாக்கிஸ்த்தானை வலிமை குன்றச் செய்த நிலையில் பேச்சு வார்த்தை நடத்தி அதை வழிக்குக் கொண்டு வரும் சாத்தியம் உண்டு. அதற்குத் தடையாக இருக்க முயலும் சீனாவுடன் “நீ பாக்கிஸ்த்தானை வைச்சுக் கொள் நான் ஆப்கானை வச்சிருக்கிறேன்” என்ற டீலை அமெரிக்கா செய்ய வேண்டும்.

இந்தியாவின் நீண்டகால ஆவலைத் தீர்க்க வேண்டும்.
சீனாவுடன் அமெரிக்கா பேக்கரி பாணி டீல் செய்தால் ஆப்கான் விவகாரத்தில் இந்தியாவிற்கு என்ன நன்மை என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாது. அதற்கு இரண்டு வகையான இனிப்புக்களை இந்தியாவிற்கு அமெரிக்கா வழங்கலாம்.  ஐக்கிய அமெரிக்கா புதிய  தரமான தொழில்நுட்பங்களைக் கொண்ட படைக்கலன்களை வழங்க வேண்டும் என்பது இந்தியாவின் நீண்ட காலக் கோரிக்கையாகும். ரில்லர்சன் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ள முன்னரே அமெரிக்கா இந்தியாவுடன் படைத்துறைத் தொழில்நுட்பங்களை பரிமாறிக் கொள்ளும் என்ற அறிக்கை வாஷிங்டனில் இருந்து வெளிவந்தது. இந்தியாவிற்கு வழங்கும் இந்த இனிப்பு அமெரிக்காவிற்குப் பல நன்மைகளைக் கொடுக்கும். முதலாவது விற்பனை வருமானம். இரண்டாவது இரசியாவிடமிருந்து இந்தியா படைக்கலன்கள் வாங்குவதைத் தடுத்தல். மூன்றாவது சீனாவை இந்தியப்படைக்கலன்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குதல். அமெரிக்கா இந்தியாவிற்கு கொடுக்கக் கூடிய அடுத்த இனிப்பு ஆப்கானிஸ்தானின் கனிம வளச் சுரண்டலை இந்தியாவுடன் பங்கு போட்டுக் கொள்ளுதல். சந்திரகுப்த மௌரியன் என்ற இந்திய அரசன் கிறிஸ்து பிறப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கானிஸ்த்தானை ஆண்டு வந்தான். அப்போது ஆப்கானில் இந்துக்களே பெரும்பான்மையினராக இருந்தனர். அந்த நிலை பத்தாம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. பின்னர் பல்வேறு படையெடுப்புக்களில் ஆப்கானிஸ்த்தான் இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாக கொண்ட நாடாக மாறியது. இந்துத்துவாக் கொள்கை கொண்ட தற்போதைய இந்திய ஆட்சியாளர்களுக்கு சகுந்தலையின் மகன் பரதன் ஆண்ட பிரதேசத்தை, பாண்டவர்கள் ஆண்ட பிரதேசத்தை மீண்டும் இந்துத்துவா ஆட்சியின் கீழ் கொண்டுவர விரும்பலாம். ஆப்கானிஸ்த்தானின் தற்போதைய ஆட்சியாளர்கள் இந்தியாவுடன் நல்லுறவை வளர்க்க விரும்புகின்றார்கள். ஆப்கான் மக்கள் இந்திப் படங்களால் சொக்கிப் போனவர்கள். இந்தித் திரைப்படத் துறையில் இருக்கும் பெரும்பாலான இஸ்லாமியர்களின் மூதாதையர் ஆப்கானிஸ்த்தானைச் சேர்ந்தவர்கள். அமெரிக்கா ஒரு நீண்டகால அடிப்படையில் ஆப்கான் முழுவதையும் இந்தியாவிற்கு விட்டுக் கொடுப்பேன் எனச் சொல்லி இந்தியாவைச் சமாதானப்படுத்தலாம்.

வளம் நிறை ஆப்கான்
ஆப்கானிஸ்த்தான் ஒரு கனிம வளம் நிறைந்த நாடாகும். அமெரிக்காவிற்கு 600 ஆண்டுகளுக்குத் தேவையான கனிம வழங்கள் ஆப்கானிஸ்த்தானில் உள்ளன. ஆப்கானிஸ்த்தானில் இருக்கும் கனிம வழங்களில் முக்கியமானவை இரும்பும் செப்பும் ஆகும்.  இரும்பின் பெறுமதி 420பில்லியன் டொலர்கள், செப்பின் பெறுமதி 240பில்லியன்கள் என்றும் கருதப்படுகின்றது. மொத்தமாக ஒரு ரில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கனிம வளங்கள் இருப்பதாக 2010-ம் ஆண்டு மதிப்பிடப்பட்டது. 2010இல் உலகெங்கும் பொருளாதார மந்த நிலையில் இருந்த போது உள்ள பெறுமதியிலும் பார்க்க இப்போது பெறுமதி ஒரு ரில்லியன்களிலும் அதிகமாக இருக்கும். அதன் வருங்கால பெறுமதி மேலும் அதிகமாகும். வளங்கள் மிகையாக உள்ள நாட்டில் தொடர்ந்து உள்நாட்டுப் போர் நடந்தால் அந்த நாட்டின் நாணயத்தின் பெறுமதி குறைவடையும். அதனால் அந்த நாட்டு வளங்களை மலிவான் விலையில் வாங்க முடியும். அந்த நாட்டின் வேறு வேறு பகுதிகள் வேறு வேறு போர்ப்பிரபுக்களின் (warlords) கட்டுப்பாட்டில் இருப்பதும் அந்த நாட்டின் வளங்களைச் மலிவு விலையில் சுரண்டுவதற்கு வாய்ப்பாகும். அந்தப் போர்ப்பிரபுக்களிடமிருந்து சுங்க வரியின்றி பெறுமதி சேர் வரியின்றி மிகவும் மலிவாக வாங்க முடியும். இந்த உத்தி கொங்கோவில் நன்கு வேலை செய்தது. கொங்கோவில் கைப்பேசிகள், டிவிடி பிளேயர்கள், மடிக்கணினிகள்இலத்திரன் விளையாட்டுக்கருவிகள், கணினிகளின் வன் தட்டுக்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் tantalum என்னும் கனிம வளத்தைச் சுரண்டுவதற்காக ருவண்டாவில் உள்ள போராளிக் குழுக்களைப் பாவித்து அந்த நாடு சீரழிக்கப்பட்டது. ருவண்டாவில் இருந்து அகதிகளாகக் கொங்கோவிற்குச் சென்றவர்களை வைத்து பல போர்ப்பிரபுக்களின் கட்டுப்பாட்டில் பல சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு அபகரிக்கப் பட்டு அங்குள்ள கனிம வளங்கள் மலிவு விலையில் சூறையாடபப்ட்டன. டண்டலம்  மட்டுமல்ல தங்கம், வைரம், கோபால்ற், டங்ஸ்ரன் போன்ற பல விலை உயர்ந்த கனிம வளங்கள் கொங்கோவில் நிறைய இருக்கின்றது. ஆபிரிக்காவிலேயே அதிக அளவு நீரைக் கொண்ட கொங்கோ நதியும் கொங்கோவில் இருக்கின்றது. ஆபிரிக்காவிலேயே ஒரு வல்லரசாகவும் முதன்மைப் பொருளாதார நாடாகவும் இருக்க வேண்டிய கொங்கோ கனிம வளச் சுரண்டலுக்காக சின்னா பின்னப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதே நிலைதான் ஆப்கானிஸ்த்தானுக்கும்.

அண்மைக் காலங்களாக டிரம்பும் ஆப்கானிஸ்த்தான் அதிபர் அஸ்ரப் கானியுடன் அமெரிக்க கனிம வள அகழ்வு நிறுவனங்களை ஆப்கானிஸ்த்தானில் அனுமதிப்பது தொடர்பான பேச்சு வார்த்தையை இரகசியமாக நடத்தினார் என்றும் சில உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்த்தானின் rare-earth minerals அதன் ஹெல்மண்ட் மாகாணத்திலேயே இருக்கின்றன. அந்த மாகாணம் தலிபான் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது. ஆப்கானிஸ்த்தானுடனான பாக்கிஸ்த்தானின் எல்லையில் இருக்கும் பாக்கிஸ்த்தானின் வர்ஜிஸ்த்தான் பிரதேசத்திலும் கனிம வளங்கள் நிறைய உண்டு. ஆப்கான் பிரச்சனை தொடங்கியதில் இருந்து பல ஆண்டுகள் அப்பிரதேசம் போர்ப்பிரபுக்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது.


புவிசார் அரசியல் போட்டியில் ஒரு பிரதேசத்தில் உள்ள வளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதை அரபுநாடுகளில் உலகம் உணர்ந்து கொண்டது. அதை ஆப்கானிஸ்த்தானிலும் உணருமா. அமெரிக்காவும் இந்தியாவும் கைகோர்க்கும் போது இரசியாவின் நட்புத்தெரிவாக பாக்கிஸ்த்தானும் சீனாவும் மாறும்.


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...