Monday 3 July 2017

இந்தியாவின் மோடியும் அமெரிக்காவின் டிரம்பும்

2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ம் திகதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியும் சந்தித்துக் கொண்டபோது அமெரிக்கா வேறு டிரம்ப் வேறு மோடி வேறு இந்தியா வேறு என்பது உறுதியானது. இருவருக்கும் தத்தம் நாட்டில் இருக்கும் பிரச்சனைகள் வேறு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வேறு என்பது வெளிப்படையானது. இருவரும் சீர்திருத்தம் எனச் சொல்லிக் கொண்டு செய்யும் சீர்கேடுகள் மட்டும் ஒற்றுமையாக இருக்கின்றன. ஆனாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுக்கான தேவை இரு நாடுகளின் கேந்திரோபாய நோக்கங்களுக்கு அவசியமானதாகவும். அந்தத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. உலகில் அதிக படைக்கலன்களை விற்பனை செய்யும் அமெரிக்காவும் உலகில் அதிக அளவு படைக்கலன்களை கொள்வனவு செய்யும் இந்தியாவும் கைகோர்த்துக் கொள்வதில் பெரிய பிரச்சனைகள் இருக்காது. தனது விற்பனைகள் தொடர்ந்தும் வளர்ச்சியடையுமிடத்து அற்ப மனித உரிமை மீறல்களை எல்லாம் அமெரிக்கா கண்டுகொள்ளாமல் இருப்பதில் கில்லாடி.

இந்தியா போன மோடி
இந்தியாவில் ஒரு நகைச்சுவை பிரபல்யம். அதன் படி சீன அதிபர் புது டில்லி சென்று மோடியிடம் உங்களைச் சந்திக்க மிகவும் மகிழ்ச்சியுடன் இந்தியா வந்துள்ளேன் என்றாராம். மோடியும் சொன்னாராம் நானும் உங்களைச் சந்திக்க மகிழ்ச்சியுடன் இந்தியா வந்துள்ளேன் என்றாராம். அந்த அளவிற்கு மோடி வெளிநாடுகளுக்கு அடிக்கடி செல்வார். ஆனால் அமெரிக்காவில் மோடி அதிக நாட்கள் செலவு செய்யவில்லை. 2019-ம் ஆண்டு இந்தியாவில் நடக்கவிருக்கும் பாராளமன்றத் தேர்தலில் மோடி மீண்டும் வெற்றி பெறுவார் என அமெரிக்க வெளியுறவுத் துறை நம்புகின்றது. இதனால் மோடிக்கான வரவேற்பும் சிறந்த்தாக இருந்தது. ஜோர்ஜ் டபிளியூ புஷும் பராக் ஒபாமாவும் அமெரிக்காவின் ஆசியா நோக்கிய நகர்வுக்கு சீனாவிலும் பார்க்க இந்தியாவே சிறந்த நட்பு நாடு என்ற கொள்கையைக் கடைப்பிடித்தார்கள். டிரம்பும் அந்தக் கொள்கையையே தொடர்கின்றார்.

இஸ்லாமியப் பூச்சாண்டி
மோடி இந்தியாவில் இருக்கும் 189 மில்லியன் இசுலாமியர்களை வெறுப்பதாகக் காட்டிக் கொண்டு ஆட்சிக்கு வந்தார். டிரம்ப் உலகெங்கும் இருக்கும் 1800மில்லியன் இசுலாமியர்களை வெறுப்பதாகக் காட்டிக் கொண்டு அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்தார். இரண்டு பேரும் சமூக வலைத் தளங்களில் சீன் போடுவதிலும் ஃபில்ம். காட்டுவதிலும் சூரர்கள். மோடி பங்களா தேசத்தில் இருந்து இந்தியாவிற்கு கள்ளமாக வருபவர்களைத் தடுக்க வேண்டும் எனக் கங்கணம் கட்டியவர். டிரம்ப் மெக்சிக்கோவில் இருந்து அமெரிக்காவிற்கு இரகசியமாகக் குடியேறுபவர்களைத் தடுக்க வேண்டும் என முழங்கியவர். இருவரும் பரப்பியத்தைக் (populism) கையில் எடுத்து ஆட்சியைக் கைப்பற்றியவர்கள்.

அமெரிக்கா முதல் என்பதும் இந்தியாவில் உற்பத்தி என்பதும்
டிரம்ப் அமெரிக்கப் பொருட்களை வாங்குங்கள் அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்துங்கள் என்ற கொள்கையுடையவர். இது பல இந்தியர்களின் அமெரிக்கப் பச்சை அட்டைக் கனவை சிதைத்தது. மோடி இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் என்ற கொள்கையுடன் ஆட்சிக்கு வந்தவர். இருவரது கொள்கைகளும் ஒன்றுடன் ஒன்று ஒத்துவராதவை. ஆனால் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவின் புதிய அத்தியாயத்தின் முன்னுரையை எழுதியவர் பராக் ஒபாமாவின் வெளியுறவுத் துறைச் செயலராக இருந்த ஹிலரி கிளிண்டன். இவர்களின் பல வெளியுறவுக் கொள்கைகளை  தலைகீழாகப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் டிரம்ப் இந்தியாவுடனான உறவைப் பொறுத்தவரை அவர்களின் கொள்கைகளைத் தொடர்ந்து பின்பற்றுகின்றார்.

பயங்கரவாத ஒழிப்பு
அமெரிக்காவும் இந்தியாவும் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என உள்நாட்டிலும் உலக அரங்கிலும் முழங்குபவை. இரு நாடுகளினதும் பயங்கரவாத எதிர்ப்பு பாக்கிஸ்த்தானில் சந்திக்கும் போது அது எப்போதும் சந்திப்பாக இருந்திருக்கவில்லை. பல கட்டங்களில் அது மோதலாகவே இருக்கின்றது. இந்தியாவுடனான உறவை வளர்க்க இந்த மோதல் தவிர்ப்பு அவசியம் என்பதை அமெரிக்கா உணரத் தொடங்கியுள்ளது. ஆனால் ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்கா தனது படை நடவடிக்கைகளைத் தொடரும் வரை பாக்கிஸ்த்தானை அதிருப்திப் படுத்த அமெரிக்காவால் முடியாது. மோடியை மகிழ்ச்சிப்படுத்த கஷ்மீரில் செயற்படும் ஹிஸ்புல் முஜாஹிடீன் அமைப்பின் தலைவர் செய்யது சலாஹுதீனை ஒரு பயங்கரவாதியாக அமெரிக்கா மோடி அமெரிக்கா செல்வதற்கு முதல் நாள் அறிவித்தது. அதை மறுத்த பாக்கிஸ்த்தானிய வெளியுறவுத் துரை அவரை ஒரு விடுதலைப் போராளி என்றது. லக்ஷர் இ தொய்பா, ஹக்கானி அமைப்பு போன்ற இந்திய எதிர்ப்பு அமைப்புக்கள் பாக்கிஸ்த்தானில் இருந்து செயற்படுகின்றன. ஆனால் ஹிஸ்புல் முஜாஹிடீன் அமைப்பு முழுக்க முழுக்க கஷ்மீரில் இருந்து செயற்படும் ஓர் அமைப்பாகும். அதன் தலைவர் கஷ்மீரில் மிகவும் பிரபலமான ஒருவராகும். இவர் இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீரின் சட்டசபைத் தேர்தலில் 1987-ம் ஆண்டு போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர். அந்தத் தேர்தலில் வாக்குப் பெட்டிகள் சட்ட விரோதமாக நிரப்பப்பட்டன என அவர் குற்றம் சாட்டி தன்னைத் தீவிரவாதியாக மாற்றிக் கொண்டார்.


டிரம்பிற்கு முக்கியத்துவம்
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு பரிஸ் சூழல் பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரத்து செய்த டிரம்ப் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட இந்தியாவைக் கடுமையாக விமர்சித்ததால் பாதிக்கப்படுமா என்ற அச்சத்தை உருவாக்கியது. அந்த அச்சம் டிரம்ப் மோடிக்குக் கொடுத்த இரவு விருந்தின் போது தவிடு பொடியானது. டிரம்ப் மோடிக்கு தனது வதிவிடமான வெள்ளை மாளிகைச் மோடிக்குச் சுற்றிக் காட்டிய டிரம்ப் பின்னர் நடந்த விருந்தின் போது துணை அதிபர் மைக் பென்ஸ், வெளியுறவுத் துறைச் செயலர் ரெக்ஸ் ரில்லர்சன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மத்தீஸ், டிரம்ப்பின் சிறப்பு ஆலோசகர் ஜெராட் குஷ்னர் உடபட 13 உச்ச மட்டத்தினரையும் அழைத்திருந்தார். இது டிரம்பிற்கு வழங்கப்பட்ட உச்சக் கௌரவமாகப் பார்க்கப்படுகின்றது. டிரம்பின் நிர்வாகத்தில் அமெரிக்காவின் முக்கிய பதவிகளில் ஒன்றான தெற்காசியாவிற்கும் நடுவண் ஆசியாவிற்குமான துணை அரசுத்துறைச் செயலர் பதவி இப்போதும் காலியாகவே உள்ளது. இதனால் உருவான நிர்வாகத்தின் கேந்திரோபாய இடைவெளி இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவை இதுவரை பெரிதாகப் பாதிக்கவில்லை.

இந்தியா பழையனவற்றின் புகலிடமா?
உலகின் இரண்டாவது பெரிய சூட்டிகைக் கைப்பேசிச் சந்தை இந்தியாவாகும். அத்துடன் அந்தச் சந்தை மிக வேகமாக வளர்கின்றது. ஆனால் அமெரிக்க நிறுவனமான அப்பிளின் மிகப் புதிய கைப்பேசிகள் பல இந்தியர்களால் வாங்க முடியாமல் இருக்கின்றது. இதனால் அப்பிள் தனது பழைய ஐ-போன்-5-எஸ் கைப்பேசிகளை குறைந்த விலையில் விற்பனை செய்யத் தொடங்கியது. அத்துடன் நரேந்திர மோடியின் இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் திட்டத்தைத் திருப்திப்படுத்த புதிய ஐபோன்களை அப்பிள் இந்தியாவில் உற்பத்தி செய்யவும் தொடங்கியுள்ளது. இந்த பழையனவற்றை இந்தியாவிற்கு அமெரிக்காவிற்பனை செய்வது வெறுமனவே கைப்பேசிகளில் மட்டுமல்ல படைத்துறை உபகரணங்களிலும் செய்யப்படுகின்றது. அமெரிக்காவிற்கு இனித் தேவையற்றுதாகிவிட்ட F-16 போர் விமானங்களை அமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் இந்தியாவின் டாடா நிறுவனத்துடன் இணைந்து உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் காலாவதியாகிப் போன தொழில்நுட்பங்கள் இந்தியாவில் கொட்டி அமெரிக்க நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கின்றன என F-16 உற்பத்தி பற்றிச்சிலர் கருத்து வெளியிட்டனர். பாக்கிஸ்த்தானிடம் ஏற்கனவே F-16 போர் விமானங்கள் இருக்கின்றன. சீனாவின் J-20 போர் விமானங்களுக்கு லொக்ஹீட் மார்ட்டினின் F-16 ஈடாக மாட்டாது. ஆனால் இந்தியாவில் உற்பத்தி செய்யும் F-16இல் புதியரக படைக்கலன்களும் உணரிகளும் பொருத்தப்படும் என இந்தியாவில் உள்ள F-16இன் இரசிகர்கள் வாதாடுகின்றனர்.

விமான இயந்திர உற்பத்திப் புள்ளி
இந்தியா இரசியாவிடமிருந்து வாங்கிய போர் விமானங்கள் பல அதிக அளவில் விபத்துக்களைச் சந்தித்தன. அவற்றின் தரம் சரியில்லை என இந்தியாவில் இருந்து கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இந்தியாவில் விமானங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படாதமையால் அவை விபத்துக்களைச் சந்திக்கின்றன. ஆனால் விமான இயந்திர உற்பத்தித் துறையில் அமெரிக்கத் தொழில்நுட்பத்தையும் அனுபவத்தையும் பெறுவது இந்தியாவிற்கு அவசியமானதாகும். இதற்கான ஆரம்பப் புள்ளியாக F-16 உற்பத்தியை பார்க்கின்றது.

விமானந்தாங்கிகளுக்கான EMALS
EMALS என சுருக்கமாக அழைக்கப்படும் விமானந்தாங்கிக் கப்பல்களில் இருந்து விமானங்களை பறக்க வைக்கவும் தரையிறங்கவும் செய்யும் Electromagnetic Aircraft Launch System என்னும் முறைமையை இந்தியாவிற்கு விற்பனை செய்ய 2015-ம் ஆண்டு அமெரிக்கா முடிவு செய்தது. இந்தியா தொடர்ச்சியான விநயம் மிக்க பல வேண்டுதல்களுக்குப் பின்னரே அமெரிக்கா இந்த முடிவை எடுத்தது. ஆனால் அமெரிக்காவின் F-35-C போர் விமானங்கள் மிகக் குறுகிய தூரம் பறந்து விமானந்தாங்கிக் கப்பல்களில் இருந்து மேலெழுந்து செல்லுவதுடன் உலங்கு வானூர்தி போல் ஓடு பாதையில் ஓடாமல் தரையிறங்கவல்லது. F-35 போர் விமானங்கள் EMALS தொழில்நுட்பத்தைக் காலாவதியாக்கிய பின்னரே EMALS இந்தியாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் EMALSஇற்கு ஈடான தொழில்நுட்பம் இரசியாவிடமோ சீனாவிடமோ இல்லை.

கவனமாக இருக்க வேண்டும்
மோடியின் இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு தொழில்நுட்பமும் வெளிநாட்டு முதலீடும் அவசியம். ஆனால் வெளிநாட்டு வியாபாரிகள் எப்போதும் தமது முதலீடுகளுக்கு அதுவும் இந்தியா போன்ற வெளிநாட்டினரை ஐயத்துடன் பார்க்கும் மக்கள் நிறைந்த நாடுகளில் குறுகிய காலத்தில் தமது முதலீட்டுக்கு விரைவாக இலாபம் ஈட்டுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர். உலகில் அதிக அளவு படைக்கலன்களைக் கொள்வனவு செய்யும் இந்தியா சரியான முறையில் பேச்சு வார்த்தைகளை நடத்தி சரியான ஒப்பந்தங்களைச் செய்தால் மட்டுமே காலாவதியானவற்றை இந்தியாவில் தள்ளுவதைத் தடுக்க முடியும்.

முக்கியமானவை மூன்று
படைத்துறை ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மேம்பாடு, சீனாவின் கடல்சார் விரிவாக்கத்தைத் தடுத்தல் ஆகிய மூன்றும் அமெரிக்காவும் இந்தியாவும் கவனம் செலுத்த வேண்டியவையாகும். இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவையாகும். இரு நாடுகளினதும் அண்மைக்கால நகர்வுகளில் முக்கியமானவை. சீனாவின் எதிரி நாடுகளுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்பதை இந்தியா அமெரிக்காவுடன் The Logistics Exchange Memorandum Agreement ( LEMOA) என்னும் உடன்படிக்கை செய்து கொண்டமை சுட்டிக் காட்டுகின்றது. அமெரிக்காவும் இந்தியாவும் வழங்கல் வசதி மாற்றிகளை மாற்றிக்கொள்ளும் இந்த உடன்படிக்கை 2016-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைச்சாத்திடப்பட்டது. பத்து ஆண்டுகளாக இழுபறிப்பட்ட இந்த உடன்படிக்கை இந்தியாவில் பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் கைச்சாத்திடப்பட்டுள்ளமை இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு எவ்வளவு கேந்திரோபாய முக்கியத்துவம் வாய்ந்தது எனச் சுட்டிக் காட்டுகின்றது.

பாதுகாப்புத் தொழில்நுட்பமும் வர்த்தகமும்
அமெரிக்கா இந்தியாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்திற்கு இரு நாடுகளுக்கும் இடையில் செய்யப்பட்ட Defence Technology and Trade Initiative (DTTI) என்ற முன்னெடுப்பு உடன்பாடும் ஓர் உதாரணமாகும். 2012-ம் ஆண்டு அப்போது துணைப் பாதுகாப்புச் செயலராக இருந்த அஸ்டன் கார்ட்டர் இதை உருவாக்கினார். இரு நாடுகளுக்கும் இடையிலான படைத்துறை ஒத்துழைப்பில் உள்ள சிவப்பு நாடாக்களை அகற்றுவதே DTTIஇன் முக்கியமாகும். இதன் கீழ் ஆறு முக்கிய திட்டங்களில் இரு நாடுகளும் இணைந்து செயற்படுகின்றன. மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது அமெரிக்கா தனது predator guradian drones என்னும் ஆளில்லாப் போர் விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்ய ஒத்துக் கொண்டுள்ளது. இது காலாவதியான தொழில்நுட்பம் என்ற வகைக்குள் அடங்கவில்லை.


இரு நாடுகளிடையே உள்ள எத்தகைய வேறுபாடுகள் இருந்தாலும் சீனாவின் கடல்சார் விரிவாக்கத்திற்கு எதிராக இரண்டும் ஒத்துழைத்தே ஆகவேண்டும். 

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...