Thursday 8 June 2017

இணையவெளி தாக்குதல்களின் வரலாறும் எதிர்காலமும்

சீன எல்லைகளில் பறந்த இந்தியாவின் இரசியத் தயாரிப்பு எஸ்யூ-30 போர் விமானங்கள் சீனாவின் இணையவெளி ஊடுருவிகளால் வீழ்த்தப்பட்டிருக்கலாம் என இந்தியப் பாதுகாப்புத்துறையினர் நம்புகின்றனர். நன்கு பராமரிக்கப்பட்டும் பரிசோதனை செய்யப்பட்டும் பறக்க விடப்பட்ட விமானங்கள் இயந்திரக் கோளாறு காரணமாக விழ வாய்ப்பில்லை என நம்பப்படுகின்றது. விமானங்களில் உள்ள கணினித் தொகுதிகள் தொடர்பாடலுக்கும் விமானச் செயற்பாட்டிற்கும் பாவிக்கப்படுகின்றன. எஸ் யூ 30 விமானச் செயற்பாட்டுக்கு உரிய கணினிகள் வெளி உலக இணையவெளியுடன் தொடர்பில்லாதபோது எப்படி நடந்தது? அவை ஈரானின் யூரேனியப் பதப்படுத்தல் நிலையத்தில் பாவிக்கப்பட்ட stuxnet போன்ற வைரஸ்களால் பதிக்கப்பட்டதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. சீனா இணையவெளி ஊடுருவலில் மிகவும் வளர்ச்சியடைந்துள்ளதா என்ற வியப்பும் தோன்றியுள்ளது.

தரைப்படை, வான்படை, கடற்படையும் கடல்சார்படையும் என்ற முப்பெரும் படைப்பிரிவுடன் நான்காம் படைப்பிரிவாக உளவுப்படையினர் செயற்படுகின்றனர். உளவுப் படை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல நாடுகளாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் ஐந்தாம் படைப்பிரிவான இணைவெளிப்படை 1960களின் பிற்பகுதியில் இருந்துதான் செயற்படத் தொடங்கியது. உலகில் பல நாடுகளின் தேர்தலில் தலையிட்டு ஆட்சி மாற்றங்களைத் தனக்குச் சாதகமாக்கும் அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியின் கணினித் தொகுதிகள் இணையவெளி மூலம் ஊடுருவப்பட்டதன் மூலம் அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் மாற்றியமைக்கப்பட்டன் பின்னர் உலகில் இணையவெளி ஊடுருவலுக்கு எதிரான நடவடிக்கைகளைப் பல நாடுகளும் முடுக்கி விட்டுள்ளன. பிரெஞ்சு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மக்ரோனிற்காகப் பரப்புரை செய்தவர்களின் மின்னஞ்சல்களும் இணையவெளியூடாகத் திருடப்பட்டன. இரண்டு செயல்களுக்கும் பின்னணியில் இரசிய கணினி ஊடுருவுகள் இருந்ததாகக் பரவலாகக் குற்றச் சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. 2017-ம் ஆண்டு மே மாதம் உலகெங்கும் ரன்சம்வெயர் என்னும் கணினி வைரஸ் 100இற்கும் அதிகமான நாடுகளில் பெருமளவு கணினிகளைப் பாதித்தது. இந்த நிலையில் கணினிப் பாதுகாப்புத் தொடர்பாக அதிக கரிசனை உலகெங்கும் எழுந்துள்ளது.

இணையவெளி மோசடிகளால் உலகெங்கும் ஆண்டு தோறும் ஒரு ரில்லியன் அமெரிக்க டொலர்கள் இழ்ப்பீடு ஏற்படுகின்றது. 2011-ம் ஆண்டு காற்று-மின்பிறப்பாக்கிகளை உருவாக்கும் நிறுவனமான AMSC இன் மென்பொருளை சீனக் காற்று-மின்பிறப்பாக்கிகளை உருவாக்கும் நிறுவனமான Sinovel திருடியது. அதைப் பாவித்ததால் சீனாவின் Sinovel நிறுவனத்தின் விற்பனை அதிகரித்தது. AMSC இன் பங்கு ஒன்று 370 டொலர்களில் இருந்து ஐந்து டொலர்களாகக் குறைந்தது.

முதல் இணையவெளித் தாக்குதல்
1969-ம் ஆண்டு அமெரிக்காவின் நான்கு முன்னணிப் பலகலைக் கழங்கள் இணைந்து எதிரிகள் மரபு வழியிலான தொடர்பாடல்களை அழித்தால் அதற்கு மாற்றீடாக இலத்திரனியல் தொடர்பாடல்கள் மூலம் அமெரிக்க அரச மற்றும் படைத்துறையினர் தகவல் பரிமாற்றம் செய்யும் முறைமையை உருவாக்கியபோது கணினிகளும் போர்க்களத்தில் இறங்கின. சைபீரியாவினூடான எரிவாயுக் குழாய்களில் பாவிப்பதற்காக 1982-ம் ஆண்டு கனடாவின் மென்பொருட்களை சோவியத் ஒன்றியம் திருட முயற்ச்சிக்கின்றது என்பதை அறிந்த அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏ அந்த மென்பொருளில் ஆபத்தான மாற்றங்களைச் செய்தது. இதை அறியாமல் திருடிய சோவியத் ஒன்றியம் அதன் தனது எரிவாயு விநியோகக் குழாய்கள் நிர்வாகத்தில் பயன்படுத்திய போது. எரிவாயுக் குழாய் வெடித்துச் சிதறியது. மென்பொருளில் அதற்கான மாற்றத்தை தந்திரமாக சிஐஏ செய்திருந்தது. இது உலக வரலாற்றில் நடந்த முதலாவது இணையவெளித் தாக்குதலாகும்.

முதல் இணையவெளி ஊடுருவல்
அமெரிக்காவின் கலிபோர்ணியாப் பல்கலைக்கழகம் 1986-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலான பத்து மாதங்களாக அமெரிக்காவின் படைத்துறையினதும் எரிபொருள் துறையினதும் கணினிகளை ஜேர்மனியில் இருந்து ஒருவர் ஊடுருவியதைக் கண்டறிந்தது.

முதலாவது வைரஸ் தாக்குதல்
1988-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவின் கொர்ணல் பல்கலைக்கழக்த்தின் ஆராய்ச்சி மாணவன் ரொபேர்ட் மொரிஸ் முதன்முதலாக பரவவிட்ட வைரஸ் உலகின் பத்து விழுக்காடு இணையத் தளங்களை செயலிழக்கச் செய்தது. இவர் பின்னர் தண்டிக்கப்பட்டார்.

1994-ம் ஆண்டு அமெரிக்காவின் Rome Air Development Centerஇல் உள்ள கணினிகள் 150 தடவைகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஊடுருவப்பட்டன. அதன் போது பல கடவுச் சொற்கள் திருடப்பட்டன. அங்கு ரடார் தொழில்நுட்பம், செயற்கை விவேகம் தொடர்பான பல ஆய்வுகள் திருடப்பட்டன. திருடப்பட்ட கடவுச்சொற்கள் மூலம் அவர்கள் மேலும் பல கணினிகளை ஊருடுவினர். நாசா போன்ற பல விண்வெளி ஆய்வு மையங்களும் பாதிக்கபபட்டன.

2001-ம் ஆண்டு விண்டோவின் செயற்பொருளைப் பாதிக்கக் கூடிய Code Red என்ற கணினிக் கிருமி அமெரிக்க வெள்ளை மாளிகை உட்படப் பல இடங்களில் உள்ள கணினித் தொகுதிகளைப் பாதித்தது.

 2003-ம் ஆண்டு இணையவெளிச் செய்திக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான குழு ஒன்று உலகெங்கும் உள்ள அரச கணினித் தொகுதிகளைப் செயலிழக்கச் செய்யும் வைரசைப் பரவவிட்டது.

2007-ம் ஆண்டு எஸ்தோனிய அரச கணினித் தொகுதிகள் 22 நாட்கள் செயலிழக்கச் செய்யப்பட்டன. எஸ்த்தோனியா 2003-ம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திலும் 2004-ம் ஆண்டு நேட்டோவிலும் இணைந்த பின்னர் இரசியா தனது ஆத்திரத்தை வெளிப்படுத்த இந்த இணையவெளித் தாக்குதல்களைச் செய்தது என மேற்கு நாட்டு ஊடகங்கள் கருத்து வெளியிட்டன.

2008-ம் ஆண்டு ஜோர்ஜியா நேட்டோவில் இணைவதைத் தடுக்க அதன் மீது இரசியா போர் தொடுத்தது. போருக்கு முன்னர் ஜோர்ஜியாவின் அதிபர் பணிமனை, போக்குவரத்துத் துறை, ஊடகத் துறை ஆகியவற்றின் கணினிகள் செயலிழக்கச் செய்யப்பட்டன. இரசியாவே இதைச் செய்ததாக ஜோர்ஜியா குற்றம் சாட்டியது. 2008-ம் ஆண்டு ஜூனில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினதும் செப்டெம்பரில் பிரித்தானிய வெளியுறவுத் துறையினதும் கணினிகளை சீன மக்கள் விடுதலைப் படையினர் ஊடுருவியதாகச் செய்திகள் வெளிவந்தன.

2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் பலஸ்த்தீனத்தின் காசா நிலப்பரப்பில் இருக்கும் கமாஸ் அமைப்பிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் சண்டை நடந்த போது இஸ்ரேலிய அரச கணிகளுக்கு ஒரு நொடிக்கு 15மில்லியன் மின்னஞ்சல்கள் அனுப்பப் பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன.

2009-ம் ஆண்டு மார்ச் மாதம் கனடாவின் Munk Center for International Studies என்னும் ஆய்வகம் சீனாவில் இருந்து 103 நாடுகளினதும் தலாய் லாமாவினதும் 1300 கணினிகள் ஊடுருவப்பட்டு தகவல்கள் திருடப்பட்டதாக அறிவித்தது. 2010-ம் ஆண்டும் சீனாவில் இருந்து கனடியப் பாதுகாப்புத் துறையின் கணினிகள் ஊடுருவப்பட்டதாக கனடியப் பல்கலைக்கழம் ஒன்று தெரிவித்தது.

2010இல் ஈரானின் அணு ஆராய்ச்சி மையத்தை இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க உளவுத்துறையினர் இணைய வழி ஊடுருவி Stuxnet என்னும் வைரஸ் மூலம் சேதப் படுத்தியது அதன் பின்னர் ஈரானிய ஆயுதக் கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டதுஇது இஸ்ரேலின் Dugu கணனி வைரஸின் வேலை என்று சந்தேகிக்கப்பட்டது. ஈரானின் அணு ஆராய்ச்சி நிலையங்களில் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தனித்தனியாகவும் இணைந்தும் பல இணைய வெளித்தாக்குதல்களை நடாத்தின என்று நம்பப்படுகிறது. ஈரானிய அணு ஆராய்ச்சி மையத்தின் கணினிகள் எல்லாம் வெளியுலகத் தொடர்பற்றிருந்தது. அங்கு ஓர் உளவாளி USB Drive மூலம் வைரஸ்களை கணினி ஒன்றில் செலுத்தினார். அதிலிருந்து  BLUETOOTH மூலம் அங்குள்ள மற்றக் கணினிகளுக்குப் பரப்பப்பட்டன. BLUETOOTH மூலம் கணினி வைரஸ்கள் பரப்பப்பட்டது அது வரலாற்றில் முதல் தடவையாகும். இப்படிப் பரம்பிய Stuxnet என்னும் வைரஸ் பின்னர் கட்டுக்கடங்காமல் உலகின் பல கணினிகளைத் தாக்கியது. பின்னர் ஐக்கிய நாடுகள் சபையும் இரசிய கணினி வைரஸ் எதிர்ப்பு நிறுவனமும் இணைந்து Stuxnet என்னும் அந்த வைரஸைக் கட்டுப்படுத்தின.

2011-ம் ஆண்டு டிசம்பரில் இஸ்லாமிய இறைதூதரின் பெயரைக் கொண்ட ஒரு வைரஸ் மின்னஞ்சலில் இணைக்கப்பட்டு ஈரான், இஸ்ரேல், ஆப்கானிஸ்த்தான் ஐக்கிய அமீரகம், போன்ற நாடுகளின் அரசதுறைகளினதும் தூதுவரகங்களினதும் கணினித் தொகுதிகளை இலக்கு வைத்து அனுப்பப்பட்டன. 2011-ம் ஆண்டு ஜூனில் பன்னாட்டு நாணய நிதியத்தின் கணினிகள் சீனாவில் இருந்து ஊடுருவப் பட்டதாக அமெரிக்காவின் உள்நாட்டுக் பாதுகாப்பு உளவுத் துறையான FBI தகவல் வெளியிட்டது.

2012-ம் ஆண்டு மே மாதம் ஹங்கேரியின் பியூடாபெஸ்ற் பல்கலைக்கழகத்தினர் FLAME என்னும் பெயர் கொண்ட கட்டுப்படுத்துவதற்கு மிகவும் சிக்கலான வைரஸ் ஒன்று பரவுவதைக் கண்டறிந்தனர். இது ஸ்கைப் மூலமான உரையாடல்களை இரகசியமாகப் பதிவு செய்வது, கணினித் திரையில் உள்ள படங்களைப் பதிவு செய்வது, தட்டச்சின் இயக்கங்களைப் பதிவு செய்வது போன்ற பல இரகசிய வேலைகளைச் செய்தது. இதுவும் USB stick மூலமாகப் பரப்பப்பட்டதாக அவர்கள் சொன்னார்கள்.

2012-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சவுதி அரேபிய எரிபொருள் நிறுவனத்தின் முப்பதினாயிரம் கணினிகளின் வன் தட்டில் உள்ள எல்லாத் தகவல்களையும் அழித்து விட்டு எரியும் அமெரிக்கத் தேசியக் கொடியின் படங்களை மட்டும் அங்கு பதிவு செய்துவிட்டனர். நீதியின் வாள் என்ற பெயர் கொண்ட இந்த வைரஸுக்கும் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருந்ததாக நம்பப்பட்டது. 2012 செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் ஒன்பது முன்னணி வங்கிகளின் கணினிகள் ஊடுருவப்பட்டன.

2012-ம் ஆண்டில் இருந்து 2013-ம் ஆண்டு வரை அமெரிக்கத் தினசரியான நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை பல தடவைகள் சீனாவில் இருந்து ஊடுருவிச் செயலிழக்கச் செய்யபப்ட்டன. சீனாவின் முன்னாள் தலைமை அமைச்சர் Wen Jiabao பதிவியில் இருக்கும்ப் போது அவரது உறவினர்கள் பெரும் சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்டது. அதற்குப் பழிவாங்கவே சீனாவில் இருந்து ஊடுருவப்பட்டதாக நியூயோர் ரைம்ஸ் தெரிவித்தது. 


2015-ம் ஆண்டு வட கொரியாவின் இணையவெளி ஊடுருவிகள் தென் கொரியாவின் அணுவலு மின் பிறப்பாக்கிகள் பலவற்றை செயலிழக்கச் செய்தனர். 2014-ம் ஆண்டு சோனி நிறுவனத்தை ஊடுருவினர். வட கொரிய ஊடுருவிகள் Federal Reserve Bank of New York இல் பங்களாதேசத்திற்குச் சொந்தமான 81மில்லியன் டொலர்களைத் திருடினார்கள் என்பதை இரசியாவின் கணனிப் பாதுகாப்பு மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான Kaspersky உறுதி செய்தது. இது போல உலகெங்கும் பல அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின்  கணினிகள் வட கொரியாவில் இருந்து ஊடுருவப்பட்டுள்ளன. வட கொரிய உடுருவிகள் சீனாவையும் விட்டு வைப்பதில்லை.

சீனா அமெரிக்கப் போர்விமான உற்பத்தி நிறுவனங்களின்  தொழில்நுட்பங்களைத் திருடியே தனது J-20 போர் விமானங்களை உருவாக்கியது.

இணையவெளிக் கப்பம்
பல்வேறுபட்ட நிறுவங்களின் கணினித் தொகுதிகளை ஊடுருவி அங்குள்ள தகவல்களை முடக்கி வைத்துக் கொண்டு பணம் தரும்படி மிரட்டுவது 2015-ம் ஆண்டில் இருந்து பரவலாக நடைபெறுகின்றது. பணம் கொடுக்காவிடில் அந்த தகவல்கள் அழிக்கப்படும்.

இணையவெளிப் போரின் எதிர்காலம்

அமெரிக்காவின் வழிகாட்டல் ஏவுகணைகள் GPS எனச் சுருக்கமாக அழைக்கப்படும் Global positioning sytemமில் பெருமளவு தங்கியிருக்கின்றன. இரசியா அமெரிக்காவின் Global positioning sytem கொடுக்கும் சமிக்ஞைகள் போல் வேறு சமிக்ஞைகளை வழங்கி அமெரிக்காவின் ஏவுகணைகளைத் திசை திருப்பும் தொழில்நுட்பத்தை உருவாக்கி அதை சிரியாவில் பரிசோதித்துள்ளதாக நம்பப்படுகின்றது. இதனால் அமெரிக்கா அவசரமாக் தனது வழிகாட்டல் ஏவுகணைகளின் மென்பொருளை மாற்றியுள்ளது. அதனால் எதிரி நாட்டு சமிக்ஞைகளை அவை இனம் கண்டு கொண்டு உதாசீனம் செய்யும். அரசுகள் அல்லாத தீவிரவாத அமைப்புக்கள் தற்போது பெருமளவில் இணையவெளி ஊடுருவல்களையும் தாக்குதல்களையும் செய்யும் திறனைப் பெற்றிருக்கின்றன. தற்போது எல்லா நடுகளும் தமக்கென இணைய வெளிப்படைப்பிரிவை வத்திருக்கின்றன. இணையவெளி ஊடுருவல்கள் மூலம் ஒரு நாட்டின் தேர்தலின் முடிவை மாற்றியமைக்க முடியும் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. இது புவிசார் அரசியல் போட்டியில் பெரும் பங்கு வகிக்கவிருக்கின்றது.                                                                                                                                                                                                                                                              

Tuesday 6 June 2017

கட்டார்(கத்தார்) நாட்டுடனான உறவை ஐந்து நாடுகள் கத்தரித்தது ஏன்?

சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், யேமன் ஆகிய ஐந்து நாடுகளும் கட்டார் நாட்டுடனான தமது அரசுறவியல் தொடர்புகளை 2017 ஜூன் 5-ம் திகதி துண்டித்தமை மேற்காசியாவில் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டார் அரசு பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கின்றது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டாருக்கான உணவு விநியோகத்தில் பெருமளவு சவுதி அரேபியாவினூடாக நடைபெறுகின்றது. அந்த விநியோகம் தடைபட்டுள்ளது. இந்த ஐந்து நாடுகளும் கட்டார் நாட்டுடனான கடல், வான் மற்றும் தரைப் போக்கு வரத்துக்களையும் துண்டித்துள்ளன.

ஈரானா இஸ்ரேலா?
வளைகுடாக் கூட்டுறவுச் சபையில் (The Gulf Cooperation Council -GCC) உள்ள பாஹ்ரேன், குவைத், ஓமான், கட்டார், சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் ஆகிய ஆறு நாடுகள் இருக்கின்றன. இவையாவும் அமெரிக்காவுடன் நல்ல உறவைப் பேணும் மன்னர்களால் ஆளப்படுபவை. இவற்றில் ஓமானும் குவைத்தும் கட்டாருடன் தமது அரசுறவைத் துண்டிக்கவில்லை. குவைத் மன்னர் நிலைமையை மோசமாக்க வேண்டாம் என கட்டார் மன்னரிடம் வேண்டு கோள் விடுத்துள்ளார். இந்த நாடுகளிற் பல இஸ்ரேலுடன் இரகசிய உறவை வைத்துள்ளன. இந்த மன்னர்களுக்கு எதிரான தீவிரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பான பல உளவுத்தகவல்களை இஸ்ரேல் அவர்களுக்கு வழகிக் கொண்டிருக்கின்றது. ஈரானிய ஆட்சியாளர்கள் போல் இந்த மன்னர்கள் இஸ்ரேலை ஒழித்துக் கட்ட வேண்டும் என செயற்படுவது கிடையாது. பலஸ்த்தீனிய விடுதலைப் போருக்கு இந்த மன்னர்களின் ஆதரவு குறைந்து கொண்டே போகின்றது. இந்த மன்னர்கள் எதிரியாகப் பார்ப்பது ஈரானை மட்டுமே. அங்கு உள்ள மதவாத ஆட்சி தமது நாட்டிலும் ஒரு புரட்சி மூலம் பரவலாம் என்பதே இவர்களது பெரும் அச்சம். அதற்காக ஈரானை அடக்குவதில் அதிக முனைப்புக் காட்டுகின்றார்கள். இஸ்ரேலுடன் இரகசியமாக இணைந்து இவர்கள் ஈரானுக்கு எதிராகச் செயற்படுகின்றார்கள்.

செல்வந்த நாடு
பாரசீகக் கடலில் உள்ள சிறு குடாநாடு கட்டார். அதன் தென்புறம் சவுதி அரேபியாவுடன் நிலத் தொடர்புடையது. 11,400 சதுர கிலோ மீட்டரில் 27 இலட்சம் மக்களைக் கொண்ட கட்டார் நாடு அங்கு எரிபொருள் வாயு இருப்பு 1939இல் கண்டறியப்படும் வரை ஒரு மீன் பிடிக் கிராமம் போல் இருந்தது. மீன் பிடித்தலும் முத்துக் குளித்தலும் அங்கு நடைபெற்றன. உலகிலேயே அதிக அளவு எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடு கட்டார். தற்போது அது உலகிலேயே தனிநபர் வருமானத்தில் முதலிடத்தில் இருக்கின்றது. அதன் தனிநபர் வருமானம் $140,649. கட்டாரிய மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டு வேலை வாங்கப்படுகின்றார்கள் என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப்படுகின்றது. 2003-ம் ஆண்டு 98 விழுக்காடு மக்களின் ஆதரவைப் பெற்ற அரசியலமைப்பு கட்டாரை ஓர் அரசமைப்பு மன்னராட்சி நாடாக்கியது.

நோர்வே பாதி சுவிஸ் பாதி
கட்டார் தனது வெளியுறவுக் கொள்கையை நோர்வே போலவும் சுவிஸ் போலவும் மாற்றுவதாக நினைத்துக் கொண்டு செயற்படுகின்றது. ஆனால் கட்டாரில் அமெரிக்கப் படைத்தளம் உள்ளது சிரியாவிலும் ஈராக்கிலும் அமெரிக்கா நடத்தும் வான் தாக்குதல்களில் பெருமளவு கட்டாரில் இருந்தே நடத்தப்படுகின்றது. கட்டார் பல அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு அனுசரணை வழங்குகின்றது. அதன் மூலம் உலக அரங்கில் தனது செல்வாக்கை நிலை நிறுத்த முயல்கின்றது. உலகில் தனது செல்வாக்கை நிலைநாட்டவே கட்டார் அல் ஜசீரா தொலைக்காட்சியை ஆரம்பித்தது.  சிரியாவில் அமெரிக்காவின் படை நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கினாலும் கட்டார் அதிபர் பஷார் அல் அசாத்துடன் உறவைக் கொண்டுள்ளது. அவருக்கு ஒரு தனிப்பட்ட விமானத்தையும் அது வழங்கியிருந்தது. ஆனால் கட்டார் ஈரானுடனும் உறவை வளர்ப்பதுதான் அதன் ஆபத்துகளில் முக்கியமானவை. டொனால்ட் டிரம்ப் சவுதி அரேபியாவிற்கு தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டதும் அங்கு மன்னர்களுடன் ஆடிப்பாடினதும் சவுதி அரேபியாதான் அந்தப் பிராந்தியத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதை அமெரிக்கா விரும்புவதைச் சுட்டிக்காட்டியது. இது அங்கு ஒரு தலைமைத்துவப் போட்டியையும் உருவாக்கியுள்ளது. எகிப்தில் நடந்த அரபு வசந்த எழுச்சியின் பின்னர் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு கட்டார் ஆதரவு வழங்கியமை எகிப்தையும் சவுதியையும் ஆத்திரபப்டுத்தியது உண்மை. . 2022-ம் ஆண்டு உலகக் காற்பந்தாட்டப் போட்டி கட்டாரில் நடக்கவிருக்கின்றது. அது இந்த அரசுறவுத் துண்டிப்பால பாதிக்கப்படலாம். 


மற்ற அரபு மன்னர்கள் எல்லோரும் வயது போன பின்னரும் ஆட்சி பீடத்தில் தொடர்ந்து கொண்டிருக்கையில் கட்டார் மன்னர் மட்டும் தனது பதவியை 61 வயதில் துறந்து தனது 33 வயது மகனை மன்னராக்கினார். இது மற்ற வயோதிப மன்னர்களை ஆத்திரப்படுத்தியது. ஈரானுக்கும் கட்டாருக்கும் இடையில் பாரசீகக் கடலின் கீழ் உள்ள பாரிய எரிவாயு இருப்பை ஈரானுடன் சுமூகமாகப் பகிர்ந்து கொள்ள கட்டார் விரும்புகின்றது. அதனால் ஈரானுடன் ஒரு நல்ல உறவு அதற்கு அவசியம். ஆனால் சியா இஸ்லாமிய மதவாத அரசான ஈரானுடனான அந்த உறவை வளைகுடாவில் உள்ள மற்ற சுனி ஆட்சியாளர்கள் ஐயத்துடன் பார்க்கின்றார்கள்.

அமெரிக்காவிற்கு சிக்கலா
ஐக்கிய அமெரிக்கா வளைகுடா கூட்டுறவு நாடுகளின் உதவியுடன் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்களுக்கு எதிரான தனது படை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை அவற்றின் மேற்காசியக் கொள்கையில் முக்கிய இடம் வகிப்பவை:
1. இஸ்ரேலின் இருப்பையும் கிறிஸ்த்தவ புனித நிலையங்களையும் பாதுகாத்தல்.
2. எரிபொரு விநியோகம் தடையின்றி நடத்தல்.
3. மத்திய தரைக்கடலினூடான போக்குவரத்து சீராக இருத்தல்
கட்டார் ஈரானுடன் உறவை வளர்ப்பது இஸ்ரேலுக்கு ஆபத்தான ஒன்றாகும். அதை அமெரிக்கா விரும்பவில்லை.
ஐந்து நாடுகளும் அரசுறவைத் துண்டித்தவுடன் கட்டார் அரசு தனது நாட்டுக்கு எதிராக இணையவெளிக்குற்றம் இழைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. இஸ்ரேல் கட்டார் அரசின் கணினிகளை ஊடுருவி தகவல்களைத் திருடி இந்த ஐந்து நாடுகளுக்கும் வழங்கியதா என்ற ஐயம் எழுகின்றது.

கட்டார் அரசு ஈரானுடன் உறவை வளர்க்கின்றது, இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு உதவுகின்றது, கமாஸ் அமைப்பிற்கு உதவுகின்றது ஆகியவை தொடர்பான உறுதியான தகவல்கள் கிடைத்த படியால் இந்த ஐந்து நாடுகளும் ஆத்திரம் அடைந்துள்ளன. மேலும் கட்டார் மன்னர் டொனால்ட் டிரம்ப் இன்னும் சில காலம்தான் பதவியில் இருப்பார். அதனால் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாடு நீடிக்காது எனக் கூறினார் என்ற இரகசியமும் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. லிபியாவில் உள்ள தீவிரவாதக் குழுக்களுக்கு கட்டார் ஆதரவு வழங்குவதை எகிப்தும் துருக்கியும் கடுமையாக எதிர்க்கின்றன. 2013-ம் ஆண்டு தலிபானின் தூதுவரகம் கட்டார் தலைநகர் டொஹாவில் திறக்கப்பட்டது. சவுதி அரேபியாவின் ஒரு நிழல் நாடாக கட்டார் இருக்க வேண்டும் எனது சவுதி மன்னர்களின் நீண்ட நாள் விருப்பம். ஆனால் கட்டார் தனது செல்வத்தை வைத்து தனித்துவமாக இயங்க முடிவு செய்தது. 

அல் கெய்தாவிற்கு கப்பம் செலுத்திய கட்டார்
2017 ஏப்ரல் மாதம் அல் கெய்தா அமைப்பின் இணைக்குழுவான Tahrir al-Sham  ஈராக்கில் வேட்டைக்குச் சென்றிருந்த கட்டார் மன்னர் குடும்ப உறுப்பினர் ஒருவரையும் அவரது பரிவாரத்தினரையும் கைது செய்து வைத்திருந்தது. அவர்களை மீட்க கட்டார் அரசு அந்தக் குழுவினருக்கு ஒரு பில்லியன் டொலர்களை கப்பப் பணமாகச் செலுத்தியது என இலண்டனில் இருந்து வெளிவரும் ஃபினான்சியல் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பணயக் கைதிகளாகைப் பிடித்து வைத்திருப்பவர்களுக்கு எதிராக படைநடவடிக்கை மட்டுமே செய்ய வேண்டும் பணம் கொடுத்து மீட்கக் கூடாது என்பதில் மேற்கு நாடுகள் உறுதியாக இருக்கின்றன. அதனால் கட்டார் மீது மேற்கு நாடுகள் கடும் ஆத்திரம் கொண்டுள்ளன. ஏற்கனவே அல் ஜசீரா ஊடகத்தால் மேற்கு நாடுகள் கடும் பொறாமையும் விசனமும் அடைந்துள்ளன.



கட்டாருக்கு இப்போது இரண்டு தெரிவுகள் உள்ளன. ஒன்று மேற்கு நாடுகளுடனும் அயல் நாடுகளுடனும் முரண்டு பிடித்து ஈரானுடன் இணைதல். ஈரானில் இருந்து தனக்குத் தேவையான பொருட்களை கடல் வழியாக இறக்குமதி செய்தல். இது கட்டாரை ஈரானில் தங்கி இருக்கும் ஒரு நாடாக மாற்றிவிடும். இரண்டாவது தெரிவு நடந்தவற்றிற்கு மன்னிப்புக் கேட்டு மீண்டும் மேற்கு நாடுகளுடனும் அயல் நாடுகளுடனும் உறவை வளர்த்தல். 

2017-06-06 பிரித்தானிய நேரம் காலை 11 மணிக்கு வெளிவந்த செய்திகளின் படி கட்டாரின் வெளியுறவுத் துறை அமைச்சர் நிலைமையைச் சீராக்கும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடும்படி குவைத் மன்னரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


பிந்திக் கிடைத்த செய்திகள்:

5-ம் திகதி திங்கட் கிழமை அரசுறவுத் துண்டித்தவுடன் கட்டாரின் பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டது. பின்னர் குவைத்தை சமரச முயற்ச்சி செய்யும் படி கட்டார் வேண்டுகோள் விடுத்த பின்னர் மீண்டும் உயர்கின்றது. சமரச முயற்ச்சிக்கு ஐக்கிய அமீரகம் நிபந்தனை விதித்துள்ளது. "We need a guaranteed roadmap to rebuild confidence after our covenants were broken," உடைந்து போன எமது நம்பிக்கையை மீள வரச் செய்ய உத்தரவாதப்படுத்தப்பட்ட பாதைவரைபை கட்டார் சமர்ப்பிக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.

துருக்கி கட்டாருக்கு எதிரான பொருளாதாரத் தடைகளைக் கண்டித்துள்ளது. 
கட்டாரில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் எரிவாயு தடையின்றி நடக்கின்றது. 

ஐக்கிய அமீரகத்தில் கட்டார் நாட்டுக்கு ஆதரவாகக் கருத்து வெளிவிட்டால் 15 ஆண்டுகள் சிறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...