Friday 26 May 2017

சீனாவின் புதிய பட்டுப்பாதையும் மென்வல்லரசாகுதலும்

29 நாடுகளின் அரசுத் தலைவர்கள், உலக வங்கி, பன்னாட்டு நாண்டிய நிதியம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் பல நாடுகளினதும் அமைப்புக்களினதும் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட வலயமும் பாதையும் மாநாடு (Belt and Road Forum)  ஒன்றை சீனா 2017-ம் ஆண்டு மே 14-ம் திகதி அமர்க்களமாக நடத்தியது. டொனால்ட் டிரம்ப்பின் தலைமையில் உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் பிடியும் தலைமையும் ஆட்டம் காணும் வேளையில் அவற்றைத் தான் பிடிப்பதில் சீனா உறுதியாக உள்ளது என்பதை இந்த மாநாடு சுட்டிக் காட்டுகின்றது. அமெரிக்காவின் பசுபிக் தாண்டிய பங்காணமைத் திட்டத்தை டொனால்ட் டிரம்ப் இரத்துச் செய்ததமையை சீனா தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்துகின்றது. கொழும்பு பன்னாட்டு நிதி நகரம், கென்யா தொடருந்து திட்டம் போன்றவை எல்லாம் புதிய பட்டுப்பாதையின் பகுதிகளே.

புதியவகைக் கூட்டுறவுத் திட்டம்
மாநாட்டில் உரையாற்றிய சீன அதிபர் ஜீ ஜின்பிங் பொருளாதார அபிவிருத்திக்கான் முக்கிய இயந்திரம் வர்த்தகமே என்றார். புதிய பட்டுப்பாதைத் திட்டம் சீனாவின் உலக ஆதிக்கத்தை நோக்கமாகக் கொண்டதல்ல என்பதையும் அவர் சொல்லத் தவறவில்லை. ஒருவருக்கு ஒருவர் நன்மை செய்யக் கூடிய ஒரு புதியவகைக் கூட்டுறவுத் திட்டமே பட்டுப்பாதைத் திட்டம் என்றார். பங்கு பற்றும் எல்லோருக்கும் நன்மையளிக்கக் கூடிய வகையில் சீனா நன்கு சிந்தித்து இந்தப் புதிய பட்டுப்பாதைத் திட்டத்தை உருவாக்கியுள்ளதாம். மேலும் சீன அதிபர் சீனா தனது பொருளாதார அபிவிருத்தி அனுபவத்தை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றது; அடுத்த நாடுகளில் தலையிடுவது எமது நோக்கமல்ல; எமது ஆட்சிய் முறைமையையோ சமூக முறைமையையோ நாம் ஏற்றுமதி செய்ய விரும்பவில்லை என வலியுறுத்திக் கூறினார்.

உட்கட்டுமானங்களும் சீனாவும்
சீனா தனது நாட்டின் உட்கட்டுமானங்களை பெருமளவு அபிவிருத்தி செய்து உலகை வியக்கவைத்தது. இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியே இந்திய உட்கட்டுமானங்களில் சீன முதலீட்டை விரும்பும் அளவிற்கு சீனாவின் உட்கட்டுமான வளர்ச்சி அமைந்திருக்கின்றது. சீனாவின் புதிய பட்டுப்பாதையின் Belt என்பது பொருளாதார வலயங்களைக் குறிக்கும். பாதை செல்லும் நாடுகளில் சீனா உட்கட்டுமானங்களில் ஒரு ரில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யவுள்ளது. ஆனால் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழ்கத்தின் Atif Ansar, Bent Flyvbjerg, Alexander Budzier, and Daniel Lunn ஆகிய நிபுணர்கள்  செய்த ஆய்வின்படி சீனாவின் கட்டுமானங்கள் பொருளாதாரத் திறன்மிக்கவை அல்ல எனத் தெரிவிக்கப் படுகின்றது. நைஜீரியா, இந்தோனேசியா, மியன்மார், இலங்கை, சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் சீனா செய்த உட்கட்டுமான வேலைகளை இவர்கள் ஆய்வு செய்துள்ளனர். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சீனா நிர்மானித்த விமான நிலையம், விளையாட்டு மைதானம் போன்றவை பயனற்றுப் போனதை இலங்கையர் அனைவரும் அறிவர்.

வெறுப் பட்டுப்பாதை மட்டுமல்ல
சீனா தான் 2013-ம் ஆண்டு ஆரம்பித்த Belt and Road, One Belt One Road எனப் பல பெயர்களால் அழைத்தாலும் அதன் நோக்கம் உலக வர்த்தகத்திலும் போக்கு வரத்திலும் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதே. பொதுவாக இதைப் புதிய பட்டுப்பாதை என பலரும் அழைக்கின்றார்கள். சீனாவின் பழைய பட்டுப்பாதை ஆசியாவில் உள்ள நாடுகளிற்கும் மத்திய தரைக்கடலை ஒட்டிய நாடுகளிற்கும் சீனாவின் பட்டை விற்பனை செய்வதையே முக்கிய நோக்கமாகக் கொண்டது. அந்தப் பெரும் பாதை வலையமைப்பிற்கு பாதுகாப்பு வழங்கக் கூடிய சிறந்த கடற்படையையும் சீனா கொண்டிருந்தது. சீனாவின் புதிய பட்டுப்பாதை இரு வழிகளைக் கொண்டுள்ளது. ஒன்று கடல்வழியானது மற்றது தரைவழியானது. இது ஆசியா ஐரோப்பா தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களை உள்ளடக்கியது. துறைமுகங்கள், பெருந்தெருக்கள், தொடருந்துப்பாதைகள், பொருளாதார வலயங்கள், எரிபொருள் வழங்கு குழாய்கள் போன்ற பலவற்றைக் கொண்டது. சீனா 124பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக புதிய பட்டுப்பாதைத் திட்டத்திற்கு முதலீடு செய்யவுள்ளது. இதில் ஒன்பது பில்லியன் டொலர்கள் வளர்முக நாடுகளின் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தனது விநியோகம் மற்றும் கொள்வனவிற்கான பாதைகளின் பாதுகாப்பும் சீனா வெளியில் சொல்லாத திட்டம் என பல ஐரோப்பிய அரசுறவியலாளர்கள் கருதுகின்றனர். புதியபட்டுப் பாதையில் தனது படைத்தளங்களையும் சீனா நிறுவும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஐரோப்பியப் பெரு நிலப்பரப்பில் சீனாவின் ஆதிக்கத்தை அதிலும் படைத்துறை ஆதிக்கத்தை ஒரு சில நாடுகள் மட்டுமே ஆதரிக்கலாம்.

சீனாவின் மென்வலு முன்னெடுப்பு
பொருளாதார மற்றும் கலாச்சாரத் தொடர்புகள் மூலம் மற்ற நாடுகளைத் தனக்கு ஏற்புடையதாக்கும் நாடு மென்வல்லரசு எனப்படும். சீனா தனது முதலீடு, கடன் போன்றவை மூலம் பல நாடுகளுடனான தனது உறவை மேம்படுத்த முயல்கின்றது. சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டம் பல நாடுகளுடன் பொருளாதாரத் தொடர்புகளை ஏற்படுத்த முயல்கின்றது. ஏற்கனவே சீனா தனது மென்வலு முன்னெடுப்பிற்காக ஆண்டொன்றிற்கு  உலகில் அதிக மக்கள் தொகையும், இரண்டாவது பெரிய பொருளாதாரத்தையும், படைத்துறைத் தொழில்நுட்பத்தில் பெருமளவு முதலீட்டையும் கொண்ட சீனா உலகின் தலைமைப் பொறுப்பை தான் ஏற்கவேண்டும் என்பது தற்போதைய சீன ஆட்சியாளர்களின் கனவு. கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக உலகெங்கும் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கின்றது. அந்த நிலையில் இருந்து அமெரிக்காவை அகற்றுவதும் சீனா ஆட்சியாளர்களின் இரகசியத் திட்டமாகும். கடந்த பத்து ஆண்டுகளாக சீனா உலக அரங்கின் தனது பிம்பத்தை சீர் செய்யப் பலவழிகளில் முயல்கின்றது.

மென்வல்லரசிற்கு அவசியமானது காலாச்சார உறவு
பரிஸ், மொல்ரா, பேர்லின், மொஸ்க்கோ, கொப்பெனஹன், பிரசல்ஸ் ஆகிய முக்கிய ஐரோப்பிய நகரங்களில் சீனா கலாச்சார நிலையங்களை நிறுவியுள்ளது. 2013-ம் ஆண்டு சீனா தனது 16+1 முன்னெடுப்பு என்னும் திட்டத்தை வரைந்தது இதன் படி 16 நாடுகளுடன் சீனா தன்னை அரசுறவியல் ரீதியில் நெருங்கி இணைத்துக் கொள்ளப் போவதை அறிவித்தது. பல்கேரியா, குரோசியா, செக் குடியரசு, எஸ்த்தோனியா, ஹங்கேரி, லத்வியா, லித்துவேனியா, போலாந்து, ருமேனியா, சுலோவேக்கியா, சுலோவேனியா, அல்பேனியா, பொஸ்னியா, ஹெர்ஜெகொவினா மொண்டினிகுரோ, சேர்பியா, மசடோனியா ஆகியவை அந்தப் பதினாறு நாடுகளாகும். இதில் பதினொரு நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை கொண்ட நாடுகளாகும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியில் சீனா தன் வசப்படுத்துவது இலகுவானதல்ல. 202 நாடுகளிலிருந்து நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சீனாவில் கல்வி பயில்கின்றனர். சீன அரசின் புலமைப்பரிசில் பயிலும் இவர்களில் பெரும்பாலானவர்கள் தென் கொரியா, அமெரிக்கா, தாய்லாந்து, இந்தியா, இரசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இது சீனா உலகெங்கும் தனது கலாச்சார உறவை மேம்படுத்த எடுக்கும் நடவடிக்கையாகும்.

மெல்வல்லரசும் ஊடக ஆதிக்கமும்
பல மொழிகளில் தொலைக்காட்சிச் சேவைகளை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் சீனா பற்றி உலகம் அறியாத பல தகவல்களை உலகிற்கு சீனா உணர்த்தி வருகின்றது. மேற்கு நாட்டு வல்லரசுகளின் உலக ஆதிக்கத்திற்கு ஊடகத் துறை பெரும் பங்களிப்பாற்றி வருகின்றது. போர் முனைகளில் கூட அவை பங்களிப்புச் செய்கின்றன. 1998-98-ம் ஆண்டுகளில் நடந்த கொசொவா போரின் போது நேட்டோ படைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்த போதெல்லாம் அமெரிக்க சார்புத் தொலைக்காட்சிகள் அங்கு நீச்சலுடையில் கவர்ச்சிகரமான பெண்கள் பலர் நடிக்கும் பே வாச் என்ற அமெரிக்க தொலைக்காட்சித் தொடர் நாடகங்களின் அங்கங்களை ஒளிபரப்புச் செய்து மக்களை வீடுகளுக்குள் தங்க வைத்தன. சீனச் செய்தி நிறுவனமான சின்ஹுவா உலகெங்கும் 160 நிலையங்களை நிறுவியுள்ளது 2020-ம் ஆண்டுக்குள் மேலும் நாற்பது நிலையங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. 2016-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் முன்னணித் தொலைக்காட்சி தனது CCTV என்ற பெயரை என்பதில் இருந்து China Global Television Network என மாற்றியுள்ளது. இது ஆறு அலைவரிசிகளில் ஆங்கிலம், அரபு, பிரெஞ்சு, இரசியமொழி, ஸ்பானிய மொழி ஆகியவற்றில் ஒளிபரப்புச் செய்கின்றது. சீன வானொளி 14 நாடுகளில் முப்பது ஒலிபரப்பு நிலையங்களைக் கொண்டுள்ளது.

சீனாவின் வறுமை ஒழிப்பு
1978-ம் ஆண்டில் தனது பொருளாதாரச் சீர்திருத்தத்தைத் தொடங்கியதில் இருந்து சீனா 800மில்லியன் மக்களை வறுமைக் கோட்டின் கீழ் இருந்து விடுவித்துள்ளது. உலக வரலாற்றில் எந்த நாடும் காணாத வேகமான பொருளாதார வளர்ச்சியை சீனா கண்டுள்ளது. சீனாவின் புள்ளி விபரங்கள் தொடர்பாக பல வாதப் பிரதிவாதங்கள் எப்போதும் உள்ளது. சீனாவில் வறுமைக் கோட்டின் கீழ் இருப்பவர்கள் தொகை தொடர்பான தகவலில் உலக வங்கியும் சீன அரசும் முரண்பட்ட தகவல்களை வெளிவிடுகின்றன. உலக வங்கியின் அறிக்கையின் படி 16மில்லியன் மக்களின் நாளாந்த வருமானம் 1.9 அமெரிக்க டொலர்களுக்கும் குறைவாகப் பெறுகின்றனர். 150 மில்லியன் மக்கள் 3.10 டொலர்களுக்கு குறைவான நாளாந்த வருமானம் பெறுகின்றார்கள். சீன அரசின் புள்ளிவிபரங்களின் படி 43.4 மில்லியன் சீனர்கள் ஒரு டொலர்களுக்கும் குறைந்த வருமானத்தைப் பெறுகின்றார்கள். 2020-ம் ஆண்டு சீனாவில் வறுமை முற்றாக ஒழிக்கும் திட்டத்தை சீனா நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது. இன்னும் 70 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் இருக்கின்றார்கள். சீனாவின் பொருளாதாரம் பெருமளவில் ஏற்றுமதியில் தங்கியிருக்கின்றது. சீனாவின் உள்நாட்டு மக்களின் கொள்வனவு வலுவை அதிகரித்தால் மட்டுமே ஏற்றுமதியில் தங்கியிருப்பதைக் குறைக்க முடியும். ஆனால் சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டம் அது தனது ஏற்றுமதியை தொடர்ந்தும் தக்க வைத்திருக்கும் திட்டத்துடனேயே இருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது.

புறக்கணித்த இந்தியா
சீனாவின் வலயமும் பாதையும் மாநாட்டை இந்தியா புறக்கணித்துள்ளது. சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டத்தின் ஒரு பகுதியாக சீனாவும் பாக்கிஸ்த்தானும் இணைந்து செய்யும் பொருளாதாரப் பாதை திட்டம் இருக்கின்றது. இந்தப் பொருளாதரப் பாதையின் ஒரு பகுதியாக பாக்கிஸ்த்தான் வசமுள்ள கஷ்மீரும் இருக்கின்றது. முழுக் கஷ்மீரும் தனது நாட்டின் ஒரு பகுதியே என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருக்கின்றது. அதனால் இந்தத் திட்டம் தனது தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தக்கம் விளைவிக்கின்றது எனச் சொல்லி இந்தியா ஆட்சேபனை தெரிவிக்கின்றது. ஆனால் சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டம் முழுமையாக நிறைவேறினால் இந்தியா தனது உலக வர்த்தகச் செயற்பாட்டிற்கு சீனாவில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும். பிலிப்பைன்ஸின் அதிபர் Rodrigo Duterte இந்த மாநாட்டுக்குச் செல்லாததும் கவனிக்கத் தக்கது. சீனாவின் மற்று மொரு அயல்நாடான ஜப்பானும் சீனாவில் நடந்த மாநாட்டைப் புறக்கணித்திருந்தது. ஆனால் மாநாட்டில் சீன அதிபர் உரையாற்றிய போது முன் வரிசையில் இரசிய அதிபரும் துருக்கிய அதிபரும் அமர்ந்திருந்து அவ்வப்போது கைதட்டியது சீனாவிற்குப் பெருமை சேர்த்தது.

சீனாவின் ஆசிய உட்கட்டுமான முதலீட்டு வங்கி
பட்டுப்பாதையில் செய்யும் முதலீடுகளிற்காகவே சினா ஆசிய அபிவிருத்தி வங்கியை உருவாக்கியது. அதற்கு சீனா ஐம்பது பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது. மேலதிகமாக தரைவழிப் பட்டுப்பாதைத் திட்டத்திற்கு 40பில்லியன் டொலர்களையும், கடல்சார் பட்டுப்பாதைத் திட்டத்திற்கு 25பில்லியன் டொலர்களையும்பிரேசில், இரசியா, இந்தியா, சீனா தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளை உறுப்பு நாடுகளாகக் கொண்ட் பிரிக்ஸ் கூட்ட்மைப்புக்கு என உருவாக்கிய புதிய அபிவிருத்தி வங்கிக்கு 41 பில்லியன் டொலர்களையும் சீனா தனது பங்களிப்பாக வழங்கியுள்ளது.

இரசியாவின் திட்டத்துடன் முரண்படுமா?
சீனாவின் தரைவழிப் பட்டுப்பாதைத் திட்டம் மத்திய ஆசிய நாடுகளையும் உள்ளடக்கியது. அந்த நாடுகளின் சீனா பொருளாதார வலயங்களையும் பெரும் உட்கட்டுமானத் திட்டங்களையும் நிறைவேற்றவிருக்கின்றது. ஆனால் இரசியாவின் யூரோஏசியப் பொருளாதாரக் கூட்டமைப்பு மத்திய ஆசிய நாடுகளையும் உள்ளடக்கியது. இரசிய அரசுறவியலாளர்கள் இரசியா புதிய பட்டுப்பாதைத் திட்டத்தில் முதலீடு செய்வதையும் இலாபத்தை ஈட்டுவதையுமே நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் இத்திட்டத்தை சீனாவின் அரசியல் மற்றும் குறியீட்டிய (symbolism) நடவடிக்கையாகப் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இரசியாவின் உள்கட்டுமான அபிவிருத்தியில் சீனாவின் முதலீட்டையும் இரசியா விரும்புகின்றது. இவற்றுக்காகத்தான் புட்டீன் இந்த மாநாட்டிற்கு சென்று இடைவேளையின் போது இனிமையாம பியானோ வாசித்தார்.

செயற்கை விவேகத்தினதும் முப்பரிமாண அச்சுக்கலையினதும் வளர்ச்சி சீனாவின் மலிவான தொழிலாளர்களுக்கான தேவையை பல பன்னாடு நிறுவனங்களுக்கு இல்லாமல் செய்துவிடும். இதை அடுத்த பத்தாண்டு காலத்தில் நாம் காணலாம். இந்த நிலையில் சீனாவின் புதிய பட்டுப்பாதை இந்தியாவினதும் ஜப்பானினதும் ஒத்துழைப்பின்றி வெற்றிகரமாக நிறைவேற்றப் படுமா?


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...