Friday 27 January 2017

டிரம்பின் அமைச்சரவையும் உலக அரசியலும்



பராக் ஒபாமா உலக மக்களிடை அமெரிக்காவின் பழுதடைந்திருந்த விம்பத்தை திருத்த முயன்றார். முக்கியமாக உலகெங்கும் வாழும் இஸ்லாமிய மக்களின் அமெரிக்கா தொடர்பான அபிப்பிராயத்தை மாற்ற முயன்றார். புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் உலக அரங்கில் அமெரிக்காவின் விம்பத்தைப் பற்றிக் கவலைப்படுபவராகத் தெரியவில்லை. அவர் பெரும்பாலான அமெரிக்கர்கள் எதை விரும்புகின்றார்கள் என்பதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றார். ஆனால் அவர் தனது விம்பத்தையே கெடுத்துக் கொண்டிருக்கின்றார். சந்தேக நபர்களை விசாரிக்கும் போது சித்திரவதை செய்வது தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டை மாற்றியமைத்த டிரம்ப் Water Boarding என்ற சித்திரவதையை மீள நடைமுறைப்படுத்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அது தொடர்பாக தேவையேற்படின் மாற்றம் செய்ய தனது பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் மத்திஸுக்கு அதிகாரமளிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். மத்திஸ் Water Boarding சித்திரவதைக்கு எதிரானவர். இது டிரம்ப்பின் அமைச்சர்களுக்கும் அவருக்கும் இருக்கும் முரண்பாடுகளை டிரம்ப் எப்படிக் கையாளப் போகின்றார் என்பதற்கு உதாரணமாகக் காட்டுகின்றது. டிரம்ப் அரச விவகாரங்களில் தனது அனுபவமின்மையை நன்கு அறிந்துள்ளார். 

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்
அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை எப்படி அமெரிக்க முதலாளிகள் உலகத்தைச் சுரண்டுவது என்பதையே கரிசனையாகக் கொண்டுள்ளது எனப் பரவலாக நம்பப்படுகின்றது. பல அரசியல்வாதிகள் தமது கொள்கைகளை அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதை அடிப்படையாகக் கொண்டே வகுப்பார்கள். முன்னாள் அமெரிக்க அதிபர் ஹரி ரூமன் புதிய பேரம் என்ற கொள்கையை முன்வைத்தார். அது நிவாரணம், மீட்சி, சீர்திருத்தம் என்பவற்றை முக்கிய பாகங்களாகக் கொண்டது. அதை உலக மக்கள் வெறுக்கவில்லை.
சுதந்திரத்தின் வெற்றிக்காக எந்த எதிரியையும் எதிர்ப்பேன் என்றார் ஜோன் F கெனடி. பொதுவுடமைவாதத்தை விரும்பாதவர்கள் மட்டுமே அதை விரும்பினர். டொனால்ட் ரீகன் வியட்னாம் போருக்குப் பின்னரான அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதை கொள்கையாகக் கொண்டார். அதற்கு உலகில் பரவலான வரவேற்பிருக்கவில்லை. அமெரிக்காவை மீண்டும் உயர்ந்ததாக ஆக்குவது தன் கொள்கை என்கின்றார் டிரம்ப். இதை உலக மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பதிலேயே அதன் வெற்றி தங்கியிருக்கின்றது. அதனால் உலகிற்கு என்ன நன்மை கிடைக்கப் போகின்றது?

டொனால்ட் டிரம்பின் வர்த்தக, பாதுகாப்பு, வெளியுறவுத் துறை போன்றவை தொடர்பான கொள்கை தற்போது உள்ள உலக நிலைப்பாட்டில் பல மாற்றங்களையும் தாக்குதல்களையும் கொண்டுவரவுள்ளது. அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கப் படையினர் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்டோர் உலகெங்கும் நிலைகொண்டுள்ளனர். அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுடன் பெருமளவு வர்த்தகத்தைச் செய்கின்றது. அங்கு அமைதி நிலவது அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு மிகவும் அவசியமாகும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் ஆண்டு தோறும் அமெரிக்கா செய்யும் வர்த்தகம் 699பில்லியன் டொலர்களாகும். ஆனால் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கப் படைத்தளங்களை வைத்திருக்க அமெரிக்காவிற்கு 2.5பில்லியன் டொலர்கள் மட்டுமே. இது உலகெங்கும் அமெரிக்கா தளங்கள் வைத்திருப்பதற்கான செலவில் 34 விழுக்காடாகும்.

அமைச்சரவை நியமனம்
புதிய அதிபர் டிரம்பின் வெளியுறவுக் கொள்கை அமெரிக்காவை முதன்மைப் படுத்தும் வெளியுறவுக் கொள்கை (America First” foreign policy) என அவர் பல தடவைகள் சொல்லியுள்ளார். புதிய அதிபரின் கொள்கைகளை அவரது அமைச்சர்களில் இருந்து அறிந்துகொள்ளலாம். அவரது அமைச்சரவை பருந்துகளால் நிறைந்திருக்கின்றது. அமெரிக்க அரசியலில் பருந்துகள் என்போர் போரையும் அடுத்த நாடுகளில் தலையிடுவதையும் விரும்புபவர்கள். மாறாகப் புறாக்கள் எனப்படுவோர். சண்டையைத் தவிர்த்து வேறு வழிகள் மூலம் மற்ற நாடுகளை தமது வழிக்குக் கொண்டு வர முயல்வார்கள். அமெரிக்க அரசியலமைப்பு ஓர் அமைச்சருக்கான தகமைகள் எதையும் வரையறுக்கவில்லை. அமெரிக்காவில் அமைச்சரை செயலர் எனவே அழைப்பர். அதிபர் தான் விரும்பியவரை பாராளமன்றத்தின் மூதவையின் ஆலோசனையுடனும் அங்கீகாரத்துடனும் அமைச்சராக நியமிக்கலாம். ஆனால் தனது உறவினரை நியமிக்க முடியாது. நியமிக்கப் படுபவரை மூதவை உறுப்பினர்கள் தமது கேள்விகளால் துளைத்தெடுப்பர். டொனால்ட் டிரம்ப்பின் செய்கைகள் எல்லாம் வழமைக்கு மாறானதாகவும் சர்ச்சைக்கு உரியனவாகவே இருப்பது வழக்கம். அவரது அமைச்சரவை நியமனங்களும் அப்படியே இருக்கின்றன. என்றுமில்லாத அளவு அதிக படைத்துறையைச் சேர்ந்தவர்களை டிரம்ப் தனது அமைச்சரவையில் இணைத்துள்ளார். அமெரிக்காவின் வெளியுறவுத் துறை பெண்டகன் எனப்படும் பாதுகாப்புத்துறை சிஐஏ எனப்படும் முதன்மை உளவுத்துறை ஆகிய மூன்றும் அமெரிக்காவின் முக்கிய அதிகார மையங்களாகும். இந்த மூன்றும் வெள்ளை மாளிகை எனப்படும் அமெரிக்க அதிபரின் பணிமனையை இயக்குபவர்களாக இருப்பார்கள். அந்த மூன்று அதிகார மையங்களும் முக்கிய ஊழியர்கள் பெரும்பாலும் புதிய-பழமைவாதிகளாக (neoconservative) இருக்கின்றனர்.

பாதுகாப்புத் துறைச் செயலர் ஜேம்ஸ் மத்திஸ்
டொனால்ட் டிரம்ப் தனது பாதுகாப்புத் துறைச் செயலராக முன்னாள் அமெரிக்கப் படைத்தளபதி ஜேம்ஸ் மத்திஸ்சை நியமித்திருப்பது பலரை வியப்பில் ஆழ்த்தியது. 1950-ம் ஆண்டிற்குப் பிறகு முதற்தடவையாக முன்னாள் படைத்தளபதி பாதுகாப்புத் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். 1950-இல் இருந்து குடிசார் அதிகாரிகளே பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பாக இருந்தனர். 1950-ம் ஆண்டு கொரியப் போர் நடந்த படியால் ஜெனரல் ஜோர்ஜ் ஜீ மார்ஷல் பாதுகாப்புத் துறைக்கு நியமிக்கப்பட்டார். ஆனால் இப்போது அரசை நடத்துவது தொடர்பாக எந்த அனுபவமும் இல்லாத டிரம்ப்பிற்கு ஒரு படைத்துறையைச் சேர்ந்தவரின் ஆலோசனை வழங்க படைத்துறை நிபுணத்துவம் மிக்க ஜேம்ஸ் மத்திஸ் அவசியமான ஒருவராகும். நேட்டோ படைத்துறக் கூட்டமைப்பிலும் மத்திஸ் அனுபவம் கொண்டவர். இவரது தலைமையிலேயே அமெரிக்கப் படைகள் அதிரடியாக ஈராகியத் தலைநகர் பாக்தாத்தைக் கைப்பற்றின. பேட்டியொன்றில் எதிரிகளைக் கொல்வதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன் எனத் தெரிவித்தமைக்காக இவரை விசர் நாய் என்கின்ற பட்டப்பெயரால் அழைப்பர். மேற்காசியாவின் அமைதிக்கு ஈரான் மிகவும் ஆபத்தானது என்ற கொள்கையுடையவர் மத்திஸ். எழுத்தாளரும் பேச்சாளரும் கட்டைப் பிரமச்சாரியுமான மத்திஸ் 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பிற்கும் ஈரானிற்கும் தொடர்பு உண்டு என உரையாற்றியிருந்தார். மத்திஸ் ஈரானின் கழுகு என விபரிக்கப்படுபவர். ஈரானுடன் பராக் ஒபாமா செய்த யூரேனியம் பதப்படுத்துவது தொடர்பாக செய்து கொண்ட ஒப்பந்தத்தை டிரம்ப் கடுமையாக எதிர்த்தவர். டிரம்பின் வெளியுறவுக் கொள்கையால் பல சிக்கல்களைச் சந்திக்கவிருக்கும் நாடாக ஈரான் இருக்கப் போகின்றது.  ஈரானைத் தனிமைப்படுத்தி அடக்கி  தண்டிக்க வேண்டும் என்ற கொள்கை எந்த அளவு நிறைவேற்றப்படும்? இரசியாவின் இரசிகர் அல்லர். புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் இரசியாவின் நண்பராகவும் பாதுகாப்புத் துறைச் செயலர் இரசியாவை விரும்பாதவராகவும் டிரம்ப் நியமித்துள்ளார். ஜேம்ஸ் மத்திஸ் விளடிமீர் புட்டீன் நேட்டோவைச் சிதைக்க முயற்ச்சிக்கின்றார் என தனது நியமனம் தொடர்பாக அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவை உறுப்பினருடனான நேர்முக உரையாடலின் போது தெரிவித்திருந்தார். உலகின் பல முனைகளில் இரசியா அமெரிக்காவிற்குப் போட்டியாகவும் எதிரியாகவும் செயற்படுகின்றது எனவும் மத்திஸ் தெரிவித்திருந்தார். லித்துவேனியா, லத்வியா, எஸ்த்தோனியா ஆகிய போல்ரிக் நாடுகளின் அமெரிக்க படைகள் இருக்க வேண்டும் என்பதில் மத்திஸ் தீவிரமாக இருக்கின்றார்.

வெளியுறவுத் துறைச் செயலர்
டிரம்ப் தனது வெளியுறவுத் துறைச் செயலராக நியமித்திருப்பது எக்ஸன்மொபில் என்னும் பன்னாட்டு எரிபொருள் நிறுவனத்தின் அதிபர் ரெக்ஸ் ரில்லர்சனை. இவருக்கு இரசியாவின் நண்பர் என்ற விருது இரசிய அதிபரால் வழங்கப்பட்டது. இவர் ஓர் எரிபொருள் வியாபாரியாகப் பல உலக நாட்டுத் தலைவர்களுடன் பழகியிருக்கின்றார். அவர்களை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்பதை நன்கு அறிந்தவர். விளடிமீர் புட்டீனுக்கு நெருக்கமானவரை நியமித்தமைக்கு பலத்ஹ்ட எதிர்ப்புக் கிளம்பியது. இவரை மூதவை உறுப்பினர்கள் கேள்விகளால் துளைத்துக் கொண்டிருக்க வெளியே பலர் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். அமெரிக்கப் பாராளமன்றத்தின் இரு கட்சியிலும் கணிசமான அளவினர் இவரது நியமனத்தை இட்டு அதிருப்தியடைந்துள்ளனர். விளடிமீர் புட்டீன் சிரியாவில் போர்க்குற்றம் இழைத்தார் என்பதை இவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இரசியாவின் நண்பராகக் கருதப்படும் இவர் சீனாவின் விரோதியாகக் கருதப் படுகின்றார். வியட்னாமின் தென்சீனக் கடல் எல்லையில் சீனாவின் மிரட்டலால் எல்லா நிறுவனங்களும் எரிபொருள் அகழ்வு செய்ய மறுத்தபோது அந்த மிரட்டலைப் பொருட்படுத்தாமல் இவரது நிறுவனமான எக்ஸன்மொபில் துணிந்து செய்தது. சீனா தென் சீனக் கடலில் செய்யும் விரிவாக்கங்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதில் இவர் உறுதியாக உள்ளார். இரசியா உக்ரேனில் செய்த ஆக்கிரமிப்பைப் போன்றதே சீனா தென்சீனக் கடலில்ச் செய்வது என்பது இவரது கருத்தாகும். சீனா செய்யும் தீவு நிர்மாணங்கள் நிறுத்தப்படவேண்டும் அந்தத் தீவுகளுக்கான சீனாவின் பயன்கள் தடுக்கப் படவேண்டும் என ரில்லர்சன் கருத்து வெளியிட்டது சீன ஊடகங்களின் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.

சிஐஏயின் அதிபர் மைக் பொம்பியோ
டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் முக்கிய உளவுத் துறையான சிஐஏயின் அதிபராக நியமித்த மைக் பொம்பியோ இரசியா தொடர்பாக கடுமையான நிலைப்பாடு கொண்டவர். இரசியா தனது உலக ஆதிக்கத்தை அதிகரித்து வருவதாக பொம்பியோ முதவை உறுப்பினர்களிடம் தெரிவித்திருந்தார். டிரம்ப் அமெரிக்க உளவுத் துறையை கடுமையாக விமர்சித்த போதிலும் மைக் பொம்பியோ தனக்கு உளவுத் துறையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கின்றது என்றார்.  இணையவெளி ஊடுருவல் அமெரிக்காவிற்குப் பெரும் பிரச்சனையாக நீண்டகாலமாக இருக்கின்றது. அது இப்போது அமெரிக்காவின் கட்சிப் பிரச்சனையாக மாறிவிட்டது. அமெரிக்கத் தேர்தல் இரசிய ஊடுருவிகளால் திசை திருப்பப்பட்டது என்பது கடும் வாதங்களைக் கிளப்பி விட்ட நிலையில் சிஐஏஇற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட மைக் பொம்பியோ இரசியாவும் சீனாவும் இணையவெளி ஊடுருவலைப் பொறுத்தவரை அமெரிக்காவின் மிக மோசமான எதிரிகள் என்றார். இரசியா ஐ எஸ் அமைப்பிற்கு எதிரான போரில் உதவவில்லை எனவும் ஐரோப்பாவிற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது எனவும் மூதவை உறுப்பினர்களிடம் தெரிவித்திருந்தார்.

நிதித்துறைக்குப் பொறுப்பான திறைசேரிச் செயலர்-Steven Mnuchin
அமெரிக்க டொலர் வலிமை மிக்கதாக இருக்க வேண்டும் என்பது டொனால்ட் டிரம்ப்பின் கொள்கை. அமெரிக்கத் திறைசேரிக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட செயலர் Steven Mnuchinனும் டொலரின் பெறுமதி வலிமை மிக்கதாக இருப்பதையே விரும்புகின்றார். இதுவரைகாலமும் அமெரிக்கத் திறைசேரியின் கொள்கை டொலரின் பெறுமதி குறைந்திருந்தால்தால் அமெரிக்கப் பொருடக்ள் உலகச் சந்தையில் குறைந்த விலையில் விற்க முடியும் என்பதாக இருந்தது. அதிலும் முக்கியமாக சீனப் பொருட்களுடன் போட்டி போட்டு விற்பனை செய்ய முடியும் என்ற விவாதம் பரவலாக முன்வைக்கப்பட்டது.

நேட்டோ
நேட்டோ காலாவதியாகிப் போன ஒன்று என்பது டிரம்பின் கொள்கை. ஆனால் துறை அதிபர் மைக் பென்ஸ் எழுபது ஆண்டு கால வரலாறு கொண்டா நேட்டோ என்பது தொடரும் எனத்தெரிவித்துள்ளார். டிரம்ப்பின் கொள்கையால் குழப்பமடைந்த நேட்டோவில் உள்ள ஐரோப்பிய நாடுகள் தமது படைவலுவையும் படைத்துறை ஒத்துழைப்பையும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளனர். டிரம்ப்பின் வெளியுறவுத் துறைச் செயலர் ஜேம்ஸ் மத்திஸ் ஐக்கிய அமெரிக்காவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான உறவு அசைக்க முடியாதது என்றார். நேட்டோவில் அதிக ஆர்வமுள்ளவரான மத்திஸ் கனடியப் பாதுகாப்புத் துறையுடன் லத்வியாவில் கனடியப் படைகளை அதிகரிப்பது தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளார். ஜேர்மனியில் உள்ள இடதுசாரிகள் நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பைக் கலைத்துவிட்டு இரசியாவுடனான ஒத்துழைப்பை அதிகரிக்கவும் எனத்தெரிவிக்கின்றனர். நேட்டோவிற்கு எதிரான டிரம்ப்பின் முக்கிய குற்றச் சாட்டு பல நேட்டோ உறுப்பு நாடுகள் தமது மொத்தத் தேசிய உற்பத்தியின் குறைந்த அளவான இரண்டு விழுக்காட்டைக் கூட பாதுகாப்புச் செலவுக்கு ஒதுக்குவதில்லை என்பதாகும். மொத்தம் 23 நேட்டோ உறுப்பு நாடுகள் இந்த இரண்டு விழுக்காடு நிபந்தனைக்கு ஏற்ப செலவு செய்வதில்லை. டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் பல நாடுகள் தமது பாதுகாப்புச் செலவை அதிகரிக்க முன்வந்துள்ளன.


அயல் நாடுகளும்  குடிவரவும்
டிரம்பின் வெளியுறவுக் கொளையால் பெரிதும் பாதிக்கப் படப் போவது மெக்சிக்கோ நாடாகும். மெக்சிக்கோ தனது தேசிய வருமானத்தின் மூன்றில் இரு பங்கை ஐக்கிய அமெரிக்காவில் இருந்தே பெறுகின்றது. பல இலட்சக் கணக்கான மெக்சிக்கர்கள் அமெரிக்காவில் பணிபுரிந்து கொண்டு தமது நாட்டுக்கு பல பில்லியன் டொலர்களை அனுப்புகின்றனர். கடந்த நூறு ஆண்டுகளாக அமெரிக்கக் கண்டத்தில் உள்ள மற்ற நாடுகள் மீது வெளிநாடுகளின் ஆதிக்கம் இருக்கக் கூடாது என்பது அமெரிக்காவின் கொள்கையாகும். மன்றோ கோட்பாடு என இந்தக் கொளைக அழைக்கப் படும். பல தென் அமெரிக்க நாடுகள் பொருளாதாரப் பிரச்சனைகளில் இருக்கும் போது சீனா தனது கடனுதவி மூலம் தென் அமெரிக்காவில் தனது ஆதிக்கத்தை விரிவாக்க முயல்கையில் டொனால்ட் டிரம்ப் அந்த நாடுகளுடன் கடுமையான நிலைப்பாட்டை எடுப்பது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்கு பெரும் சவாலாக அமையும்.

பிரித்தானியா
டொனால்ட் டிரம்ப் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு ஆதரவு தெரிவித்தவர். பிரித்தானியாவுடன் அமெரிக்காவின் வர்த்தகத்தை தான் அதிகரிக்கவிருப்பதாக அவர் கருத்து வெளியிட்டுள்ளார். ஆனால் இரண்டு நாடுகளும் இஸ்ரேல் தொடர்பாக முரண்பட்டுள்ளன. பிரித்தானியா தனது இஸ்ரேல் தொடர்பான கொள்கையில் சில மாற்றங்களைச் செய்ய வாய்ப்புண்டு.

ஐரோப்பா
ஐரோப்பிய ஒன்றியம் பிளவு படுவதை டொனால்ட் டிரம்ப் இரகசியமாக விரும்புகின்றார். அவரது நேட்டோ தொடர்பான கொள்கையும் கடுமையானதே. நேட்டோ உறுப்பு நாடுகள் தமது பாதுகாப்புச் செலவை அதிகரிக்க வேண்டும் என டொனால்ட் டிரம்ப் நிர்ப்பந்திப்பார். ஆனால் நேட்டோப் படைகத் துறைக் கூட்டமைப்பை டிரம்ப் சிதைக்க மாட்டார். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைகளை டிரம்ப் விலக்க மாட்டார். இரசியாவுடனான முரண்பாடு மோசமாகுவதை டிரம்ப் தடுப்பார். இரசியாவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை டிரம்ப் கைவிட முடியாது. இரசியாவுடன் அமெரிக்கா டிரம்ப் தலைமையில் ஏற்ப்படுத்தவிருக்கும் உறவு போல்ரிக் நாடுகள் தடையாக இருக்கும்.

மேற்காசியா
அமெரிக்கா எரிபொருள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ள நிலையில் மேற்காசியாவின் எரிபொருள் விநியோகத்தில் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா தனது கடப்பாடுகளைக் குறைத்துக் கொள்ளும். ஆனால் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக டிரம்ப் கடுமையான நிலைப்பாட்டில் உள்ளார். இரசியாவுடன் அமெரிக்கா நல்லுறவை ஏற்படுத்தினால் மட்டுமே ஈரானை அடக்கும் டிரம்ப்பின் கொள்கை வெற்றியளிக்கும்.

உலக வர்த்தகம்
அமெரிக்காவின் உலக வர்த்தகக் கொள்கையில் டிரம்ப் பல மாற்றங்களைச் செய்யவிருக்கின்றார். அது ஏற்கனவே உள்ளகக் கடனால் பிரச்சனைக்கு உள்ளாகியிருக்கும் சீனாவை பெரிதும் பாதிக்கும். சீனாவில் இருந்து இறக்குமதிக்கு வரியை அதிகரிப்பேன் என டிரம்ப் சூழுரைத்திருந்தார். இது சீனா செய்து கொண்டிருக்கும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கும் தடையாக அமையும். ஆனால் சீனா டிரம்ப்பின் அமெரிக்காவுடன் ஒரு வர்த்தகப் போருக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கின்றது.

2008இல் குழம்பிப் போன உலகம் தெளிவு பெற முன்னர் டிரம்ப் மேலும் குழப்பப் போகின்றார்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...