Monday 9 January 2017

ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகராகுமா? பலஸ்த்தீன தீவிரவாதம் தீவிரமடையுமா?


அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பேன் எனக் கருத்து வெளியிட்டது பலஸ்த்தீனியப் பிரச்சனைக்கு ஈர் அரசுத் தீர்வு என்ற அமெரிக்காவின் கொள்கையைக் கேள்விக் குறியாக்கியுள்ளது. தேர்தல் பரப்புரையின் போது டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதுவரகத்தை டெல் அவிவ்வில் இருந்து ஜெருசலேம் நகருக்கு மாற்றுவேன் எனத் தன்னைச் சந்தித்த இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவிடம் தெரிவித்திருந்தார்.

மருமகன் Jared Kushner
டொனால்ட் டிரம்பின் மகளின் கணவர் ஒரு யூதராவார். யூத மதத்தை ஒழுங்காகக் கடைப்பிடிக்கும் Jared Kushnerஐக் கைப்பிடிப்பதற்காக மகள் இவங்கா யூத மதத்திற்கு மாறினார். மருமகன் Jared Kushner டிரம்பிற்கு தேர்தல் பரப்புரையின் போது பேருதவியாக இருந்து ஆலோசனைகள் வழங்கியவர். அவர் டிரம்ப்பின் ஆட்சியிலும் முக்கிய பங்கு வகிப்பார். அவர் வெள்ளை மாளிகையில் பணி புரிவதை பெரிதும் விரும்புகின்றார்.

அன்று நடக்காதது இன்று நடக்குமா?
ஜோர்ஜ் புஷ்பில் கிளிண்டன் ஆகிய முன்னை அமெரிக்க அதிபர்களும் தமது தேர்தல் பரப்புரையின் போது ஜெருசலேத்திற்கு அமெரிக்க தூதுவரகத்தை மாற்றப் போவதாகச் சொல்லியிருந்தனர். ஆனால் தேர்தலில் வென்ற பின்னர் அப்படிச் செய்யவில்லை. ஆனால் டிரம்ப் வித்தியாசமானவர். அத்துடன் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சில மூதவை உறுப்பினர்கள் ஜெருசலேத்தை இஸ்ரேலியத் தலைநகராக ஏற்றுக் கொள்ளும் சட்ட மூலத்தை அமெரிக்கப் பாராளமன்றதின் மூதவையில் 2017-01-03-ம் திகதி சமர்ப்பித்துள்ளனர்.  பலஸ்த்தீனியர்கள் தமது அரசின் தலைநகர் கிழக்கு ஜெருசலேம் என நம்புகின்றனர். ஜெருசலேத்தின் கிழக்கையும் மேற்கையும் இணைத்து அதை இஸ்ரேலின் தலைநகராக்கினால் மேற்குக் கரையில் அமைதி குலையும் என பலஸ்த்தீனியர்கள் எச்சரிக்கின்றனர்.

அரபு நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராகத்திரும்புமா?
புதிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஜெருசலேத்திற்கு அமெரிக்கத் தூதுவரகத்தை நகர்த்தும் எண்ணம் தொடர்பாகக் கருத்து வெளியிட்ட ஜோர்தானியத் தகவற்துறை அமைச்சர் அதனால் அமெரிக்காவுடன் நட்பைப் பேணும் அரபு நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கு இடையிலான உறவில் பாதிப்பு ஏற்படும் என்றார். ஜோர்தானைப் பொறுத்தவரை தூதுவரகத்தை நகர்த்துவது செங்கோட்டைத் தாண்டியது போலாகும் என்றார் மேலும் அவர். மேலும் இந்த நகர்வு அரபுத் தீவிரவாதிகளுக்கு ஒரு கொடையாக அமைந்து அரபு நாட்டு வீதிகளெங்கும் கலவரம் உண்டாகும் என்றார். அரபு நாடுகளிலேயே அமெரிக்காவுடன் அதிக நெருக்கமான உறவைப் பேணும் நாடு ஜோர்தான் ஆகும். ஜோர்தான் வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து மற்ற அரபுநாடுகளும் இதே போன்ற ஆட்சேபனையைத் தெரிவிக்கும் என எதிர் பார்க்கப் படுகின்றது. 1967-ம் ஆண்டுப் போரின் போது ஜோர்தானிடமிருந்தே இஸ்ரேல் கிழக்கு ஜெருசலேத்தைக் கைப்பற்றியது.

ஐநா தீர்மானம் – 181
ஐக்கிய நாடுகள் சபை ஜெருசலம் எந்த நாட்டுக்கும் சொந்தமில்லை அது ஒரு பன்னாட்டு நகரம் என்ற நிலைப்பாட்டில் உள்ளது. 1947-ம் ஆண்டு ஜெருசலேம் நகர் தொடர்பாக ஐநா சபையில் தீர்மானம் -181 நிறைவேற்றப்பட்டது. அதன்படி அது ஐநாவால் நிர்வகிக்கப்படும் தனி நிலப்பரப்பாகப் பிரகடனப் படுத்தப்பட்டது. அதை யூதர்கள் ஏற்றுக் கொண்டனர். அரபுக்கள் எதிர்த்தனர். பல பன்னாட்டு அமைப்புக்கள் ஜெருசலேம் இஸ்ரேலுக்குச் சொந்தம் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. டிரம்ப் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதுவராக நியமிக்கவிருக்கும் டேவிட் ஃபிரீட்மன் தான் ஜெருசலேத்தில் கடமையாற்றக் காத்திருப்பதாகச் சொல்லியுள்ளார். 

அவலத்தில் புனித நகரம்
1089-ம் ஆண்டு ஜெருசலேம் நகரை சிலுவைப் போரில் கைப்பற்றிய மேற்கு நாடுகளைச் சேர்ந்த கிறிஸ்த்தவர்கள் அங்கிருந்து யூதர்களை விரட்டினர். 1187இல் ஜெருசலேமை மீளக் கைப்பற்றிய இஸ்லாமியர்கள் யூதர்களை மீளக் குடியேற அனுமதித்தனர். ஜெருசலேமின் பழைய நகரத்தின் வட கிழக்குப் பகுதி முஸ்லிம் பகுதி எனவும் அதற்கு வட மேற்குப் பகுதி கிறிஸ்த்தவப் பகுதி என்றும், ஆர்மீனியன் பகுதி என்றும் யூதப் பகுதி எனவும் வகுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்க் இடையிலான மோதல்களைத் தவிர்க்க உதுமானியப் பேரரசின் ஆட்சியின் போது அங்கு பல சுவர்களும் கதவுகளும் நிர்மாணிக்கப்பட்டன. ஆனால் 1967-ம் ஆண்டு பழைய நகரத்தில் யூதர்கள் எவரும் இருக்கவில்லை. அவர்கள் அங்கிருந்து விரட்டப்பட்டிருக்கலாம். 1967-ம் ஆண்டின் பின்னர் பல யூதர்கள் அங்கு குடியேற்றப்பட்டு வருகின்றார்கள். 1517-ம் ஆண்டில் இருந்து உதுமானியப் பேரரசின் பிடியில் இருந்த ஜெருசலேம் நகரை 1917-ம்  ஆண்டு பிரித்தானியத் தளபதி general Edmund Allenby  கைப்பற்றிய பின்னர் அதன் புனித தன்மையை மதிப்பதற்காக தனது குதிரையில் இருந்து இறங்கி நடந்து சென்றார். ஆனால் குடியேற்றவாதம், சியோனிசம், அரபுத் தேசியவாதம், இஸ்லாமிய தீவிரவாதம், யூத எதிர்ப்புவாதம் (anti-Semitism) ஆகியவற்றின் நடுவில் அந்த புனித நகரம் அல்லல் படுகின்றது. கடவுள் உலகைப் படைக்கும் போது ஒன்பது பங்கு அழகை ஜெருசலேம் நகருக்கும் ஒரு பங்கு அழகை எனைய உலகிற்கும் கொடுத்தாராம். ஆனால் இன்று உலக அவலக்களின் பத்தில் ஒன்பது பங்கு ஜெருசலேமில் இருக்கின்றது. 

இரு போர்கள்
1948இல் நடந்த அரபு இஸ்ரேலியப் போரின் பின்னர் 1949-ம் ஆண்டு செய்யப்பட்ட ஆர்மிஸ்றிஸ் உடன்படிக்கைகளின் படி வரையபட்ட ஆர்மிஸ்றிஸ் கோடுகளின்படி மேற்கு ஜெருசலேம் இஸ்ரேலினுடைய பகுதியாக்கப்பட்டது. 1967-ம் ஆண்டு நடந்த அரபு இஸ்ரேலியப் போரின் போது கிழக்கு ஜெருசலேம்ம்மேற்குக் கரைகாசா நிலப்பரப்புசினாய் பாலைவனக் கோலான் குன்றுகள் ஆகியவற்றை இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டது.

கிழக்கும் மேற்கும் வேறா ஒன்றா?
பலஸ்த்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையிலான பேச்சு வார்த்தையில் பெரும் முள்ளாக இருப்பது ஜெருசலம் நகர். இரு தரப்பினரும் அது தமக்குச் சொந்தம் என அடம் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். மேற்கு ஜெருசலேத்தில் இஸ்ரேலின் இருப்பை பல நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால் கிழக்கு ஜெருசலேத்தை ஒட்டியே பெரும் முரண்பாடு நிலவுகின்றது. 1967-ம் ஆண்டு நடந்த ஆறுநாட் போரில் இஸ்ரேல் கிழக்கு ஜெருசலேம்த்தை ஆக்கிரமித்துக் கொண்டது. அதன் பின்னர் 1980-ம் ஆண்டு இஸ்ரேல் ஜெருசலேம் சட்டம் 1980ஐ தனது பராளமன்றத்தில் நிறைவேற்றி முழு ஜெருசலேமும் தனது என்ற நிலைப்பாட்டை எடுத்தது. இதற்கு எதிராக ஐநா சபையில் தீர்மானம்-478 நிறைவேற்றப்பட்டது. இஸ்ரேலில் நிறைவேற்றப்பட்ட சட்டம் பன்னாட்டு சட்டங்களுக்கு முரணானது எனத் தெரிவித்தது தீர்மானம்-478. அத்துடன் ஐநா உறுப்பு நாடுகள் இஸ்ரேலுக்கான தூதுவரகத்தை ஜெருசலேத்தில் அமைக்கக் கூடாது எனவும் அந்தத் தீர்மானம்-478 சொல்கின்றது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா வாழ் யூதர்களின் முயற்ச்சியால் அமெரிக்கப் பாராளமன்றம் 1996-ம் ஆண்டு ஜெருசலேம் தூதுவரகம் சட்டத்தை நிறைவேற்றியது. அச்சட்டத்தில் ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகர் என்பதுடன் அமெரிக்காவின் இஸ்ரேலுக்கான தூதுவரகம் டெல் அவிவ்வில் இருந்து ஜெருசலேம்த்திற்கு மாற்றப்பட வேண்டும் எனச் சொல்லியது. அந்தச் சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரம் அமெரிக்க அதிபருக்கு வழங்கப்பட்டது. அதை 2016-ம் ஆண்டு வரை எந்த ஒரு அமெரிக்க அதிபரும் செயற்படுத்தவில்லை. தற்போது டொனால்ட் டிரம்ப் தான் அதனை நிறைவேற்றுவேன் என்கின்றார். அதற்கு ஏற்ற வகையில் இஸ்ரேல் ஜெருசலேம் நகரில் யூதர்களைக் குடியேற்றுவதை அதிகரித்துள்ளது. 1967-ம் ஆண்டு கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியதால் அங்கிருந்து வெளியேறிய இஸ்லாமியர்களை மீண்டும் அங்கு வந்து குடியேறும் படி அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மேஸே தயான் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய பல இஸ்லாமியர்கள் மீண்டும் சென்று குடியேறினார்கள். 

அன்று கதை வேறு
இஸ்ரேல் என்ற நாடு உருவாகிய முதல் மூன்று ஆண்டுகளில் அது பல தத்துக்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. சுற்றிவர எதிர்ப்புணர்வு மிக்க அரபு நாடுகளின் மத்தியில் இஸ்ரேலின் தொடர்ச்சியான இருப்புப் பற்றி பல ஐயங்கள் நிலவின. அரபுக்களின் ஆக்கிரமிப்பு ஆபத்தின் மத்தியில் பல முயற்ச்சிக்கு மத்தியில் இஸ்ரேலை பல நாடுகள் அங்கிகரித்தன. முதலில் அமெரிக்க ஒரு சட்டபூர்வ நாடாக அங்கீகரிக்கவில்லை. ஒரு உண்மை சார் நாடாகவே அங்கீகரித்தது. இஸ்ரேலை முதலில் அங்கீகரித்த நாடுகளில் சோவியத் ஒன்றியமும் ஒன்று.

அமெரிக்க கடவுட்சீட்டுச் சட்டம்
2002-ம் ஆண்டு அமெரிக்கப் பாராளமன்றம் ஜெருசலத்தில் பிறந்த அமெரிக்கர்களின் கடவுட்சீட்டில் அவர்கள் விரும்புமிடத்து அவர்களின் பிறப்பிடம் இஸ்ரேல் எனக் குறிப்பிடலாம் எனக் கடவுட்சீட்டுச் சட்டத்தை இயற்றி இருந்தது. ஆனால் இது ஐநாவின் நிலைப்பாடான ஜெருசலேம் ஒரு தனிப் பிராந்தியம் என்ற நிலைப்பாட்டிறு முரணாக இருந்தது. அத்துடன் பல அரபு நாடுகளின் ஆத்திரத்தையும் கிளறியிருந்தது. இதனால் அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஜோர்ஜ் புஷ் அந்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்தப் போவதில்லை என அறிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து வந்த எல்லா அதிபர்களும் அதையே கடைப்பிடித்தார்கள்.  அமெரிக்காவில் வதிபவர்களும் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களுமான ஒரு யூதத் தம்பதிகளுக்குப் ஜெருசலம் நகரில் பிறந்த மெனக்கெம் ஜிவொடொஃப்ஸ்கி (Menachem Zivotofsky) என்னும் மகனின் கடவுட் சீட்டில் அவர் பிறந்த நாடு இஸ்ரேல் எனக்குறிப்பிட வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்க அரசால் நிராகரிக்கப்பட்டது. அதை எதிர்த்து பெற்றோர்கள் தொடுத்த வழக்கு அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. அதில் 2012-ம் ஆண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெருசலம் இஸ்ரேலுக்குச் சொந்தமானது அல்ல என குடியரசுத் தலைவர் சொல்வதில் தலையிடும் அதிகாரம் அமெரிக்கப் பாராளமன்றத்திற்கு இல்லை எனத் தீர்பளித்தது.

இன்னும் ஒரு தீர்மானம்
2016 டிசம்பர் 23-ம் திகதி ஐநா பாதுகாப்புச் சபையில் மேலும் ஒரு தீர்மானம் இஸ்ரேலுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டது. கிழக்கு ஜெருசலேத்தில் செய்யப்படும் யூதக் குடியேற்றங்களைக் கண்டித்ததுடன் அவை சட்டபூர்வமானதல்ல என்கின்றது அந்தத் தீர்மானம்-2334இந்தத் தீர்மானம் பலஸ்த்தீனியர்களாலோ அல்லது அதை முன் மொழிந்த எகிப்தியராலோ வரையப்பட்டது அல்ல ஒரு மேற்கு நாட்டு வல்லரசுதான் அதை வரைந்தது என அதன் வாசகங்களை வாசிக்கும் போது தெரிகின்றது என்றார் ஐநாவிற்கான இஸ்ரேலியப் பிரதிநிதி. அதை வரைவதில் மட்டுமல்ல அதை நிறைவேற்றுவதற்கான ஆதரவு தேடுதலிலும் பிரித்தானியா பெரும் பங்கு வகித்தது. இது இஸ்ரேல் தொடர்பாக டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்திற்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் தோன்றப் போகும் முரண்பாட்டிற்கு கட்டியம் கூறுகின்றது. தீர்மானம்-2334ஐ அமெரிக்கா தனது இரத்து (வீட்டோ) அதிகாரத்தைப் பாவித்து இரத்துச் செய்ய வேண்டும் என புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிபர் பராக் ஒபாமாவிடம் விடுத்த வேண்டு கோளையும் புறக்கணித்து ஐநா பொதுச்சபையில் அமெரிக்க தீர்மானம்-2334 தொடர்பான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. பல இஸ்ரேலியர்கள் ஐநா தீர்மானங்கள் தம்மை ஏதும் செய்யாது என மார் தட்டிக் கொண்டிருக்கையில் இஸ்ரேலிய வர்த்தக நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் இட்டு அவற்றுக்கு எதிரான தடைகளை விதிப்பதை இட்டு ஐநாவில் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

கிறிஸ்த்தவர்களின் வாதம்
1944-ம் ஆண்டு லெபனானில் பிறந்த மரோனைற் கிறிஸ்த்தவரான சரித்திரவியலாளர் பிலிப் ஹிற்றி என்பவர் அமெரிக்க அரசுக்குச் சாட்சியமளிக்கையில் பலஸ்த்தீனத்தில் யூதர்களுக்கு என்று ஒரு அரசு இருந்திருக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். அவரது கருத்து ஊடகங்களில் வெளிவந்த போது விஞ்ஞானி அல்பேர்ட் ஐன்ஸ்டைன் உட்படப் பல யூதர்கள் ஆட்சேபனை தெரிவித்து தமது தரப்பு விவாதங்களை முன்வைத்தனர்.

வரலாறு எங்கு ஆரம்பமானது – அரபு வாதம்
அரபுக்கள் பலஸ்த்தீனியத்தின் வரலாறு 1948இல் இருந்து பார்க்க விரும்புகின்றார்கள் 1948இல் ஐரோப்பாவில் இருந்து கொண்டு வந்து குடியேற்றபட்ட யூதர்களால் இஸ்ரேல் உருவானது என்கின்றார்கள் அவர்கள். இஸ்ரேல் என்ற ஒரு நாடு உலக வரைபடத்தில் இருக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் பல அரபு நாடுகள் இருந்தன. இன்றும் சில நாடுகள் வாயளவில் மட்டும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஈரான் மட்டுமே அதை ஓரளவிற்கு செயலிலும் காட்டுகின்றது. சவுதி அரேபியா உட்படப் பல நாடுகள் இஸ்ரேலுடன் இரகசியமாக உறவுகளை வைத்திருக்கின்றன. மக்கா,  மதீனா ஆகிய இரு பெரும் புனித நகர்களைப் போலவே ஜெருசலேமும் இஸ்லாமியர்களின் புனித நகராகும். அங்குள்ள மலைக் கோவிலில் இருந்தே இறை தூதுவரான அல்லா சொர்க்கத்திற்கு பறந்து சென்றார் என்கின்றனர் அரபுக்கள்.

வரலாறு எப்போது ஆரம்பித்தது – யூதர்களின் வாதம்
இஸ்லாம் தோன்ற முன்னர் கிறிஸ்த்தவம் தோன்றியது. கிறிஸ்த்தவம் தோன்ற முன்னர் யூதர்களின் மதம் தோன்றியது. மற்ற இரு மதங்களுக்கு முன்னரே யூத மதம் ஜெருசலத்தைப் புனித நகராகக் கொண்டுவிட்டது என்பது யூதர்களின்வாதம்.  இற்றைக்கு 3286 ஆண்டுகளுக்கு முன்னர். மோசஸ் எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரேலியர்களை மீட்டுக் கொண்டு ஜோர்தானிய நதியைக் கடந்து அதன் மேற்குப் புறமாக ஜோர்தான் நதிக்கும் மத்திய தரைக்கடலுக்கும் இடையில் உள்ள நிலப்பரப்பை இஸ்ரேலியர்களின் நாடாக்கினார். இப் பிரதேசம் இப்போது இஸ்ரேல் என்றும் மேற்குக் கரை என்றும் காஸா நிலப்பரப்பு என்றும் ஜோர்தான் நாடு என்றும் நான்கு பகுதிகளாக இருப்பதே தமது தாயகம் என்கின்றனர் யூதர்கள். அங்கிருந்து பல படையெடுப்புக்களால் தாம் விரட்டப்பட்டு உலகின் பல்வேறு பகுதிகளில் குடியேறினோம் என்பது யூதர்களின் கருத்து. இஸ்ரேலியர்களின் அரசு கிறிஸ்த்துவிற்கு முன்னர் 796ம் ஆண்டில் இரண்டாகப் பிளவு பட்டது. அதன் வடபகுதியை கி.மு 55-ம் ஆண்டு அசிரியப் பேரரசு கைப்பற்றியது. கி மு 422-ம் ஆண்டு பபிலோனியர்கள் இஸ்ரேலைக் கைப்பற்றி அவர்களின் புனித ஆலயத்தை அழித்தனர். இஸ்ரேலியர்கள் பலர் அவர்களது மண்ணில் இருந்து விரட்டப்பட்டனர். கி மூ 352-ல் மீண்டும் இஸ்ரேலியர்கள் தமது நாட்டிற்கு வந்து மீண்டும் தமது ஆலயத்தைக் கட்டி எழுப்பினர். ஆனால் நாற்பது ஆண்டுகளின் பின்னர் கிரேக்கர் இஸ்ரேலைக் கைப்பற்றினர். பின்னர் கி. மு 63-ம் ஆண்டு ரோமப் பேரரசு இஸ்ரேலை ஆக்கிரமித்தது. மீண்டும் இஸ்ரேலியர்களின் புனித ஆலயம் இடிக்கப்பட்டது. கி. பி 638-ம் ஆண்டு இஸ்லாமியர்கள் கலிஃபா ஒமரின் தலைமையில் இஸ்ரேலைக் கைப்பற்றினர். 1299-ம் ஆண்டு உதுமானியப் பேரரசு இஸ்ரேலைக் கைப்பற்றியது. பலஸ்த்தீனம் என்பது ஒரு நாடல்ல அது ஒரு பிரதேசத்தின் பெயர் என்கின்றனர் யூதர்கள். பைபிளில் பல இடங்களில் Peleshet எனச் சொல்லப்படுவது ஆங்கிலத்தில் Philistine எனத் திரிபுபட்டு பலஸ்த்தீனம் ஆனது என்கின்றனர் எனத் கிறிஸ்த்தவர்கள். 1920-ம் ஆண்டு உதுமானியப் பேரரசிடமிருந்து கைப்பற்றப் பட்ட மத்திய தரைக்கடலை ஒட்டிய ஒரு பிரதேசத்திற்கு பிரித்தானியப் பேரரசு பலஸ்த்தீன ஆணையகம் எனப் பெயரிட்டத்தில் இருந்தே பலஸ்த்தீனம் என்ற ஒரு நாடு உருவாக்கப்பட்டது

மலைக்கோவில் வாசலில்
ஜெருசலத்தின் முதலாவது யூத வழிபாட்டுத் தலம் கிறிஸ்துவிற்கு 957 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுப்பட்டுவிட்டது. அதாவது இஸ்லாமிய மதம் தோன்றுவதற்கு 1579 ஆண்டுகளுக்கு முன்னர் யூதர்களின் வழிபாட்டுத்தலம் ஜெருசலத்தில் கட்டப்பட்டுவிட்டது. மேலும் பலஸ்த்தீனம் என ஒரு நாடோ அரசோ ஒரு போதும் இருந்ததில்லை என்பது யூதர்களின் வாதம். . அதே வேளை ஜெருசலம் என்பது எப்போதும் குழப்பத்தின் உறைவிடமாகவே இருந்து வருகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் 0.9 சதுர மைல்களும் 1967-ம் ஆண்டு 2.5 சதுர மைல்களும் 2012-ம் ஆண்டு 49 சதுர மைல்களும் கொண்ட பிரதேசம் ஜெருசலம் நகராக இருக்கின்றது.  புனித குரானில் ஒரு இடத்தில் கூட ஜெருசலம் நகர் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. பைபிளில் அறுநூற்றிற்கு மேற்பட்ட இடங்களில் ஜெருசலம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெருசலம் நகரில் உள்ள் Temple Mount என்பது யூதர்களால் கட்டபப்ட்டது.  பின்னர் உதுமானியப் பேரரசு ஜெருசலத்தைக் கைப்பற்றி அங்கு சுவர்களை எழுப்பி மூன்று மதத்தினரும் வழிபடக் கூடிய ஏற்பாடு செய்யப்பட்டது. உதுமானியப் பேரரசு 4.5 கிலோ மீட்டர் நீள சுவரை ஒரு சதுர கிலோ மீட்டர்  பிரதேசத்தில் எழுப்பியது முதலாம் உலகப் போரின் பின்னர் ஜெருசலத்தைப் பிரித்தானியப் பேரரசு கைப்பற்றி அதை விரிவாக்கியது.  சிலுவைப் போரின் பின்னர் ஜெருசலத்தைக் கைப்பற்றிய கிறிஸ்த்தவர்கள் அங்கிருந்து யூதர்களையும் இஸ்லாமியர்களையும் விரட்டினர். ஆனால் 1187-ம் அதை மீளக் கைப்பற்றிய இஸ்லாமியர் அங்கு யூதர்களை மீளக் குடியேற அனுமதித்தனர்.

மானிடப் பேரிடர்  
மேற்குக் கரைகிழக்கு ஜெருசலேம்காசா ஆகியவை தமது பிரதேசம் அங்கு தங்களுக்கு ஒரு சுதந்திரமான நாடு வேண்டும் என்பதே பலஸ்த்தீனியர்களின் தற்போதைய நிலைப்பாடு.  மானிடப் பேரிடர் தெடந்து நடக்கும் இடமாக பலஸ்த்தீனத்தின் மேற்குக் கரை தொடர்ந்து பல ஆண்டுகளாக இருக்கின்றது. இஸ்ரேலின் தொடர் நில அபகரிப்பினாலும் யூதக் குடியேற்றங்களாலும் மேற்கு கரையின் வரைபடத்தில் பலஸ்த்தீனியர்களின் பிரதேசத்தையும் யூதக் குடியேற்ற நிலப்பரப்பையும் வைத்துப் பார்க்கும் போது அது ஒரு கறையான் அரித்த துணி போலத் தோற்றமளிக்கின்றது. இஸ்ரேல் 1967-ம் ஆண்டு போரில் ஜோர்டானிடமிருந்து அபகரித்த கிழக்கு ஜெருசலம் தன்னுடைய நாட்டின் ஒரு பகுதி எனச் சொல்லும் இஸ்ரேல் அங்கு வாழும் பலஸ்த்தீனியர்களுக்கு குடியுரிமை வழங்கவில்லை. அவர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அவர்களை ஜோர்தானும் தன்னுடைய நாட்டுக் குடிமக்களாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் 420,000 பலஸ்த்தீனியர்கள் நாட்டற்றவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் ஜோர்டான் கடவுச் சீட்டு வழங்கியுள்ளது. ஆனால் அவர்கள் ஜோர்டானில் வேலை பார்ப்பதாயின் அதற்காக சிறப்பு அனுமதி பெற வேண்டும். உலகத்தின் எந்த மூலையில் பிறந்தாலும் ஒரு யூதருக்கு இஸ்ரேலில் குடியுரிமை வழங்கப்படுகின்றது. கிழக்கு ஜெருசேலத்தில் இரண்டு இலட்சம் யூதர்கள் படைத்துறையின் பாதுகாப்புடன் குடியேற்றப் பட்டுள்ளார்கள். 2011 ஒக்டோபர் யுனெஸ்க்கோவில் பலஸ்த்தீனம் உறுப்புரிமை பெற்றது அமெரிக்காவைச் சினமூட்டி அதை அந்த அமைப்பில் இருந்து வெளியேற வைத்தது. 

1993-ம் ஆண்டு பலஸ்த்தீனியர்களும் இஸ்ரேலும் செய்த ஒஸ்லோ உடன்படிக்கையில் மேற்குக் கரையையும் காசா நிலப்பரப்பையும் பலஸ்த்தீனியர்கள் நிர்வகிக்க ஒத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் பலஸ்த்தீனியர்கள் தங்களது பிரதேசம் என உரிமை கோரும் கிழக்கு ஜெருசலேம் பற்றி முடிவு எடுப்பது பின் போடப்பட்டது. 

படைத்துறைதொழில்நுட்பம்பொருளாதாரம் ஆகியவற்றில் இஸ்ரேல் அடைந்து வரும் வளர்ச்சி அபரிமிதமானது. அதேவேளை அரபு நாடுகளிடையேயான ஒற்றுமையின்மையும் உள்நாட்டுக் குழப்பங்களும் பலஸ்த்தீனியர்களுக்கு சாதகமாக இல்லை. ஐ எஸ் அமைப்பு பலஸ்த்தீனியர்களுக்கு ஆதரவாகவோ இஸ்ரேலுக்கு எதிராகவோ செயற்பட்டதில்லை. இஸ்ரேலால் தான் நினைத்ததை நடத்தி முடிக்கக் கூடிய நிலை உருவாகியுள்ளது.


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...