Saturday 18 November 2017

சிம்பாப்வே: தாரத்தால் ஆட்டம் காணும் அதிகாரம்

2017 நவம்பர் 15-ம் திகதி புதன் கிழமை சிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் போர்த்தாங்கிகள் நடமாடத் தொடங்கின. அரச ஊடகங்கள் படையினரால் கைப்பற்றப்பட்டன. உலகின் மிக மூத்த அதிபர் ரொபேர்ட் முகாபே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவரைத் தாம் பாதுகாப்பான இடத்தில் வைத்திருப்பதாகப் படையினர் தெரிவித்தனர். சிம்பாப்வே சுதந்திரம் பெற்றதில் இருந்து 37 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் ரொபேர்ட் முகாபேயைச் சுற்றியுள்ள குற்றவாளிகளை நாம் இலக்கு வைத்துள்ளோம் என்றது படைத்துறை. 

பிந்திய செய்திகள்:
19-11-2017: ஞாயிற்றுக்கிழமை ஆளும் கட்சியான Zimbabwe African National Union—Patriotic Front கூடி ரொபேர்ட் முகாபேயை கட்சித் தலமைப் பதவியில் இருந்தும் அவரது மனைவி கிரேஸ் முகாபேயை கட்சியின் மகளரணித் தலைமைப் பதவியில் இருந்தும் நீக்கியது. முகாபே அதிபர் பதவியில் இருந்து   திங்கட் கிழமை விலகாவிடில் அவரைப் பதவியில் இருந்து விலக்கும் நடவடிக்கையைப் பாராளமன்றம் எடுக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டது.  முகாபேயால் பதவி நீக்கம் செய்யப்பட்ட துணை அதிபர் எமெர்சன் மனங்காவ கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய முகாபே பதவி விலகல் பற்றி ஏதும் சொல்லாமல் விட்டது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. தான் இறக்கும் போது பதவியில் இருக்க  அவர் பெரிதும் விரும்பியிருந்தார். ஆனால் அவருக்கு பதவியில் இருந்து தானாக விலகுவதா அல்லது நீக்கப்படுவதா என்பதைக் தவிர வேறு தெரிவுகள் இல்லை.

நாட்டு மக்களு உரையாற்றும் போது தான் பதவி விலகுவதாக உரையாற்றப் போவதாக படைத்துறையினருக்குச் சொல்லிய முகாபே பின்னர் உரைக் குறிப்பை மாற்றி வேறு உரையாற்றியதாகவும் செய்திகள் வெளிவந்தன.
20-11-2017

20/11/2017 திங்கள் காலை பத்து மணிக்குள் பதவி விலக வேண்டும் என்ற காலக்கெடு முடிவடைந்து விட்டது. 
பதவிநீக்கப் பிரேரணையில் கிரேஸ் முகாபே சட்ட விரோதமாக அதிகாரம் பெற்றார் என்பது முக்கிய குற்றச் சாட்டு.
புதன்கிழமை பதவிநீக்கப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு பாராளமன்றத்தில் இடம்பெறும்
மூன்றில் இரண்டு பங்கு பெரும்பானமை ஆளும் கட்சிக்கு இல்லை. எதிர்க்கட்சியின் ஆதரவு தேவை.
எதிர்க்கட்சிகள் அரசியல் சீர்திருத்தக் கோரிக்கையை முன்வைக்கலாம்.
260 உறுப்பினர்களைக் கொண்ட பாராளமன்றத்தில் 230 உறுப்பினர்கள் பதவிநீக்கத்திற்கு ஆதரவு வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முகாபேயிற்கு ஆதரவான அமைச்சர்கள் பலர் வெளிநாடு சென்றுவிட்டனர். 

முகாபே தனக்கும் தன் மனைவிக்கும் எதிராக வழக்குகள் தொடுக்காத கவசம் தேவை என எதிர்பார்க்கின்றார். 

21-11-2017

முகாபேயைப் பதவி நீக்கம் செய்யும் முன்மொழிவு தொடர்பாக பாராளமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருக்கையில் அதை இடை நிறுத்திய அவைத் தலைவர் முகாபே பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இனி முகாபேயிற்கு எதிரான குற்றச் சாட்டுகள் தொடர்பாக பாராளமன்றம் விசாரணையை முடுக்கிவிடலாம். 

முகாபே ஆபிரிக்க கண்டத்தின் சுதந்திரப் போராட்டத்தின் வாழும் தலைவர்களில் வயதில் மூத்தவர். வெள்ளையர் ஆண்ட ரொடீசியாவை கரந்தடிப் போர் செய்து 1980இல் சுதந்திரம் பெற்றவர்களில் முகாபேயும் ஒருவர். அவரது 10வது வயதில் அவரது தந்தை குடும்பத்தைக் கைவிட்டுச் சென்று விட்டார். இருந்தும் கற்றுத் தேர்ந்தவர். தென் ஆபிரிக்க விடுதலைத் தலைவர் நெல்சன் மண்டேலா படித்த பல்கலைக்கழகத்திலேயே முகாபேயும் கல்வி கற்றார். முகாபே மாவோவின் கொள்கைகளுக்கு அமையவே தனது விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்தார் 

முகாபே சிறுபான்மை இனங்களுக்கு எதிராகக் கடுமையாக நடந்து கொண்டார். இருபதினாயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்று குற்றம் சாட்டப்படுகின்றது. 2008-இல் அவரது கட்சி பாராளமன்றத் தேர்தலின் முதற் சுற்றில் தோல்வியடைந்தது. நாட்டில் இரத்தக் களரி உருவானது. தேர்தல் முடிவுகளைத் தனக்குச் சாதகமாக வர எதையும் செய்யக் கூடியவர் முகாபே என்ற குற்றச் சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகின்றது. முகாபே கொங்கோவிற்குப் அனுப்பிய அவரது படையினர் அங்கு மிக மோசமாக நடந்து கொண்டனர் என்ற குற்றச் சாட்டும் உண்டு.

இரண்டாம் உலகப் போரின் பின்னர் பல நாடுகளுக்குத் தனது குடியேற்ற நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கிய பிரித்தானியா சிம்பாப்வேயின் வழங்களைத் தொடர்ந்து சுரண்டுவதற்காக தொடர்ந்தும் தனது ஆட்சியின் கீழ் வைத்திருந்தது. 1980இல் பெரும் போராட்டத்தின் பின் சுதந்திரம் பெற்ற சிம்பாப்வேயின் கல்வித்தரத்தை உயர்த்துவதில் முகாபே அதிக கவனம் செலுத்தியதால் அந்தப் பிராந்தியத்தில் கல்வியில் மேம்பட்ட நாடாக சிம்பாப்வே இருக்கின்றது.


படையினர் களத்தில் இறங்கியமைக்குக் காரணம் முகாபேயின் 52 வயதான தென் ஆபிரிக்காவில் பிறந்த மனைவி கிரேஸ் முகாபே எனச் சொல்லப்படுகின்றது. அதிபரின் மாளிகையில் தட்டச்சாளராகப் பணிபுரிந்த கிரேஸுக்கும் முகாபேயிற்கும் இடையில் முகாபேயின் முதல் மனைவி நோய்வாய்ப்பட்டிருக்கும் போது தொடர்பு ஏற்பட்டு இருவரும் திருமணம் புரிந்து கொண்டனர். கிரேஸ் ஏற்கனவே ஒரு விமானப் படை விமானியைத் திருமணம் செய்திருந்தார்.

ஆடம்பரப் பிரியரான கிரெஸ் தமக்கென இரு ஆடம்பர மாளிகைகளை கட்டினார். ஒவ்வொன்றும் 26மில்லியன் டொலர் செலவில் அமைக்கப்பட்டது கிரேஸ் முகாபேயின் ஆதரவாளர்கள் அவரை வள்ளல் என்றும் திறமை மிக்க வியாபாரி என்றும் சொல்கின்றனர். பல அநாதைப் பிள்ளைகளைப் பொறுப்பெடுத்து பரமாரிக்கும் வேலையைச் செய்பவர். அவரது ஆதரவாளர்கள் அவரை நாட்டின் அன்னை என அழைக்கின்றனர். தென் ஆபிரிக்கத் தலைநகரில் 2017 ஓகஸ்ட்டில் கிரேஸின் மகன்களுடன் உல்லாச விடுதியில் இருந்த தென் ஆபிரிக்க அழகிகளை கிரேஸ் கடுமையாகத் தாக்கினார். அதற்கான வழக்கில் அவர் நீதிமன்றத்திற்கு சமுகமளிக்காமல் அரசுறவியல் கவசம் பெற்றுத் தப்பித்துக் கொண்டார்.

ஆளும் கட்சியின் மகளிரணியின் முதன்மைச் செயலாளராக் கிரேஸ் நியமிக்கப்பட்டதால் கட்சியின் உயர்மட்டக் குழுவில்  உறுப்புரிமையையும் பெற்றுக் கொண்டார். அவரை எதிர்ப்பவர்கள் தந்திரம் மிக்கவர், அதிராரப் பசிமிக்கவர், சந்தர்ப்பவாதி என்கின்றனர். அதிகம் செலவு செய்பவர். கூச்சி(Gucci) என்ற ஆடம்பர ஆடை அணிகலன் நிறுவந்ததின் உற்பத்திப் பொருட்களை அதிக செலவு செய்து வாங்குவதால் அவர் கூச்சி கிரேஸ் என அழைக்கபட்டார். முகாபேயிற்கு அடுத்த படியாக நாட்டின் அதிபராக கிரேஸ் முயன்றதால் பிரச்சனை உருவானது. கிரேஸ் பதவிக்கு வருவதற்கு தடையாக இருந்த துணை அதிபரை ரொபேர்ட் முகாபே பதவி விலக்கியது அவர் இழுத்த இறுதி ஆப்பாக அமைந்தது. முன்னாள் படைத்துறை அமைச்சரான துணை அதிபர் எமேர்சன் மனங்காவ (Emmerson Mnangagwa) படைத்துறையினரின் ஆதரவு பரவலாக உண்டு. ஆளும் கட்சியைச் (Zimbabwe African National Union—Patriotic Front இதைச் சுருக்கமாக ZANU-PF அழைப்பர்) சேர்ந்த பலர் கிரேஸ் பதவிக்கு வருவதை விரும்பவில்லை.

சிம்பாப்வேயின் படையினர் தமது நடவடிக்கைகள் ஒரு சதிப்புரட்சி அல்ல என்பதை நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் காண்பிக்க வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருந்தனர். முகாபே பாதுகப்பாக இருக்கின்றார் என்பதை அவர்கள் தெரிவித்ததை நிரூபிக்கும் வகையில் அவரை இரண்டு நாட்களுக்குள் பல்கலைக்கழக மொன்றின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்ற வைத்தது அவர்களின் தந்திரத்தின் உச்சம். அவர்களுக்கு மக்களோ அல்லது முகாபேயின் ஆதரவாளர்களோ எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. அவர்களும் துப்பாக்கி வேட்டுகளைப் பாவிக்கவில்லை. இதனால் சிம்பாப்வேயில் நடப்பது A coup in slow motion – மென் நகர்வில் ஒரு சதிப் புரட்சி என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். ஆட்சி மாற்றம் ஒன்றை படையினர் அரங்கேற்றாமை முகாபேயிற்கு இன்னும் மக்கள் மத்தியில் ஆதரவு உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது. முகாபேயிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. 2017-11-17 வெள்ளிக்கிழமை முகாபேயின் ஆளும் கட்சியின் 10 மாநிலப் பிரதிநிதிகளும் அவர் பதவியில் விலக வேண்டும் என வாக்களித்தனர். சிம்பாப்வேயின் விடுதலைப் போராளிகளின் ஒன்றியமும் முகாபே பதவி விலக வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

முகாபேயின் நல்ல, கெட்ட, பயங்கர, மோசமான அனைத்து நடவடிக்கைகளிலும் அவரது வலது கரமாக இருந்தவர் எமேர்ஸன மனங்காவ ஆகும். சிம்பாவேயின் சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே இருவரும் ஒன்று பட்டுச் செயற்பட்டவர்கள். 50 ஆண்டுகள் தொடர்ந்த ஒற்றுமை முகாபேயின் மனைவி கிரேஸின் பதவி ஆசையால் பிளவு பட்டது. சிம்பாப்வேயிற்குத் தேவைப்படுவது அதனது பொருளாதாரத்தை சிறப்பாக முகாமை செய்யக் கூடியவரே


தென் ஆபிரிக்க ஒன்றியம், ஆபிரிக்க அபிவிருத்திச் சமூகம் ஆகியவை சிம்பாப்வேயின் நிலைமை குறித்து ஆராய்ந்து வருகின்றன. பொட்ஸ்வானாவில் இதை ஒட்டி ஒரு உயர் மட்டக் கூட்டமும் நடந்தது. கிறிஸ்தவ மத குரு ஒருவரின் பதவி விலகல் கோரிக்கையை முகாபே நிராகரித்துவிட்டார். தென் ஆபிரிக்காவின் அமைச்சர்கள் சிலர் ஹராரே சென்று பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.

முகாபேயின் இறுதிக்கால ஆட்சி ஊழல், உறவினர், சலுகை, மோசமான நிர்வாகம் ஆகியவற்றால் நிறைந்திருந்தது. ஆபிரிக்காவின் செல்வம் மிக்க நாடு மோசமான பொருளாதார நிலையில் இருக்கின்றது. விலவாசி அதிகரிப்பு விகிதம் வரலாறு காணாத அளவில் அதிகமாக உள்ளது. பொட்ஸ்வானாவும் சிம்பாப்வேயும் ஒரே ஆண்டில் சுதந்திரம் பெற்றன. அப்போது இரண்டு நாடுகளின் பொருளாதாரங்களும் ஒரே நிலையில் இருந்தன. ஆனால் இப்போது பொட்ஸ்வானாவின் பொருளாதாரம் சிம்பாப்வேயின் பொருளாதாரத்திலும் பார்க்க ஆறு மடங்கு சிறப்பாக உள்ளது. சிம்பாப்வேயில் வெள்ளையர்களுக்குச் சொந்தமாக இருந்த நான்காயிர்த்துக்கு அதிகமான பெருந்தோட்டங்களை முகாபே எடுத்து மண்ணின் மைந்தர்களுக்கு வழங்கியதே நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் என மேற்கு நாட்டு ஊடகங்கள் குற்றம் சுமத்துகின்றன. அத் தோடங்கள் தோட்டச் செய்கையில் முன் அனுபவமில்லாதவர்களுக்கு வழங்கப்பட்டமையே பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என அவை வாதிடுகின்றன.

சிம்பாப்வேயின் படைத்துறையின் உயர் மட்டத்தினர் சீனா சென்று அங்கு வெளிநாட்டுத் துறையினரின் உயர் மட்டதினரைச் சந்தித்தமை சீனாவிற்கும் சிம்பாப்வேயில் நடப்பவற்றிற்கும் இடையில் தொடர்பு உண்டா என்ற கேள்வியை எழுப்புகின்றது. ஆனால் முகாபேயைப் பதவில் இருந்து விலக்குவது இலகுவான ஒன்றல்ல. முகாபேயிற்கு எதிரானவர்கள் தெருக்களில் இறங்கி முகாபேயைப் பதவியில் இருந்து அகற்றுவது இரண்டாவது சுதந்திர நாள் என ஆர்ப்பரிக்கின்றனர் 


படைத்துறையினர் தமது எதிர்காலத் திட்டம் பற்றி ஏதும் கூறவில்லை. அவர்கள் மற்றப் பிராந்திய நாடுகளின் நிலைபபட்டை மதிக்கின்றனர். அதிலும் தென் ஆபிரிக்காவின் கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுக்கின்றனர். ஒரு படைத்துறைப் புரட்சி மூலம் சிம்பாப்வேயில் ஆட்சி மாற்றப்படுவதை சிம்பாப்வேயின் அயல் நாட்டு ஆட்சியாளர்கள் விரும்பவில்லை. முகாபேயின் ஆளும் கட்சியின் அடுத்த தேசியமட்ட கூட்டம் நடக்கும் வரை முகாபே பதவியில் தொடருவார். கட்சியின் முடிவே அடுத்த ஆட்சியாளர் யார் எனத் தீர்மானிக்கும். 

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...