Tuesday 30 August 2016

மோடி கொழுத்திய வெடியும் புவிசார் அரசியலில் சிக்கிய பலுச்சிஸ்த்தானும்

பாக்கிஸ்த்தானிய மாகாணமான பலுச்சிஸ்த்தான் பெருமளவு கனிம வளங்கள் நிறைந்த ஒரு பிரதேசமாகும். சீனாவின் முத்து மாலைத் திட்டத்தில் உள்ள துறைமுகங்களில் ஒன்றான குவாடர் அமைந்திருப்பது பலுச்சிஸ்த்தான் மாகாணத்தில். ஆப்கானிஸ்த்தானிற்கு அமெரிக்கா படைகளை நகர்த்துவதற்கு பாவிப்பது பலுச்சிஸ்த்தான் மாகாணம். தனது எரிபொருள் இறக்குமதிக்கான ஒரு மாற்று வழிப்பாதையாக பலுச்சிஸ்த்தானில் இருந்து சீனாவிற்கு ஒரு தரைவழிப்பாதையை சீனா உருவாக்கியுள்ளது. பாக்கிஸ்த்தானிய நடுவண் அரசால் பலுச்சிஸ்த்தானில் வாழும் பலுச் இன மக்கள் மோசமாகப் புறக்கணிக்கப் படுகின்றனர். இவை யாவும் ஒரு தீவிர புவிசார் அரசியல் போட்டிக்கும் சிக்கலுக்கும் வழிவகுக்கும் காரணிகளாகும்.

பலுச் இனப்பரம்பல்
பலுச் மக்கள் பாக்கிஸ்த்தான், ஈரான், ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகளில் வாழ்கின்றார்கள். பலுச்சிஸ்த்தான் பிராந்தியம் இந்த மூன்று நாடுகளில் பிளவு பட்டுக் கிடக்கின்றமை பலுச்சிஸ்த்தானின் விடுதலைக்கு உகந்த ஒரு புவிசார் நிலைமை அல்ல. இதில் 75 விழுக்காடு மக்கள் பாக்கிஸ்த்தானில் வாழ்கின்றனர். இதனால் பலுச்சிஸ்த்தான் மக்களின் விடுதலைப் போராட்டம் பாக்கிஸ்த்தானின்  மையம் கொண்டுள்ளது. பாக்கிஸ்த்தானின் சிந்து மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் வாழும் பலுச் இன மக்கள் பாக்கிஸ்த்தானுடன் ஒன்றிப் போய் உள்ளனர். பலுச்சிஸ்த்தானில் 54 விழுக்காடு பலுச் இனத்தவரும் 30 விழுக்காடு பக்துன் இனத்தவரும் வசிக்கின்றனர். இதுவும் பலுச் இன மக்களின் விடுதலைக்கு உகந்ததாக இல்லை.

மோடி கொழுத்திய வெடி
இந்திய சுதந்திர நாளன்று தலைமை அமைச்சர் நரேந்திர மோடி பாக்கிஸ்த்தானிய மாகாணங்களில் சிலவற்றின் மக்களைப் பற்றித் தெரிவித்த கருத்து இந்திய உபகண்டத்தில் பெரும் புவிசார் குழப்ப நிலையை உருவாக்கியுள்ளது. பிரித்தானிய ஆட்சியில் இருந்து இந்திய உபகண்டம் சுதந்திரம் பெற்றதில் இருந்தே பாக்கிஸ்த்தானின் பலுச்சிஸ்த்தான் மாகாணம் பிரிவினைவாதப் பிரச்சனைக்கு உருவானது. மோடி இந்தியச் சுதந்திர நாளன்று ஆற்றிய உரை முழு பாக்கிஸ்த்தானையுமே ஆத்திரப்படுத்தியுள்ளது. “கடந்த சில நாட்களாக பாலுச்சிஸ்த்தான் மக்கள், ஜில்ஜிற் மக்கள், பாக்கிஸ்த்தான் ஆக்கிரமிப்பிலுள்ள காஷ்மீர் மக்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் எனக்கு நன்றி சொல்லியவண்ணம் இருக்கின்றார்கள். நான் பார்த்திராத, சந்தித்திராத தொலைவில் வாழும் இம்மக்கள் இந்தியத் தலைமை அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதற்காக அவர்களுக்கு நான் நன்றியுடையவனாக இருக்கின்றேன்.” என்றார் நரேந்திர மோடி. அதற்குப் பதிலளித்த பாக்கிஸ்தானியத் தலைமை அமைச்சரின் வெளியுறவுத் துறை ஆலோசகர் சர்தாஜ் அஸீஸ் (Sartaj Aziz) கஷ்மீரில் இந்தியா செய்யும் அட்டூழியங்களில் இருந்து உலகக் கவனத்தைத் திருப்புவதற்கே மோடி முயற்ச்சி செய்கின்றார் என்றார். பாக்கிஸ்த்தானிய எதிர்கட்சித் தலைவர் பிலாவால் பூட்டோ மோடியின் உரை ஆத்திரமூட்டுவதாகவும் பொறுப்பற்றதாகவும் பிரச்சனையைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது என்றார்.

மகிழ்ச்சியில் விடுதலைப் போராளிகள்
பாக்கிஸ்தானில் இருந்து வெளியேறிச் செயற்படும் பலுச்சிஸ்த்தான் செயற்பாட்டாளர்களின் டுவிட்டர் பதிவுகளை இந்திய அரச தகவற் தொடர்புப் பணிமனை தனது வலைத்தளங்களில் மீள் பதிவு செய்தது. நரேந்திர மோடியின் உரைக்கு வரவேற்பு தெரிவித்தவர்கள் மீது பாக்கிஸ்த்தானில் பல வழக்குகள் தொடுக்கப் பட்டன. நரேந்திர மோடியின் நன்றி தெரிவிப்பு பாக்கிஸ்த்தான் இந்திய உள்விவகாரங்களில் தலையிட்டால் இந்தியாவும் பழிவாங்கும் முகமாக பாக்கிஸ்த்தானின் உள்விவகாரங்களில் தலையிடும் என்ற அடிப்படையிலேயே அமைந்திருந்ததாகக் கருதப் படுகின்றது.

றோவும் பாக்கிஸ்த்தானும்.
பாக்கிஸ்த்தானியர்களால் மோசமாக வெறுக்கப்படும் றோ (என சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய உளவுத்துறையினர் RAW- Researh and Analysi Wing) பலுச்சிஸ்த்தானில் பயங்கரவாதத்தைத் தூண்டுகின்றனர் என்ற பாக்கிஸ்த்தானியர்களின் குற்றச் சாட்டு நரேந்திர மோடியின் சுதந்திர நாள் உரையின் மூலம் உறுதி செய்யப்படுகின்றது என பாக்கிஸ்த்தான் தரப்பில் இருந்து தெரிவிக்கப் படுகின்றது. 1968-ம் ஆண்டு இந்தியா றோவை உருவாக்கியதே பங்களாதேசத்தைப் பிரித்தெடுக்கவே எனப் பல பாக்கிஸ்த்தானியர்கள் நம்புகின்றனர். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆரம்பித்து வைத்ததே றோதான் எனவும் அவர்கள் கருதுகின்றனர். பலுச்சிஸ்த்தானின் பிரிவினைவாதத் தலைவர்கள் பலர் பகிரங்கமாகவே இந்தியா தமது விடுதலைக்கு உதவி செய்ய வேண்டும் எனக் கருத்து வெளியிடுகின்றனர்.

சீனாவும் பாக்கிஸ்த்தானும்
மக்கள் சீனக் குடியரசு பொதுவுடமைப் புரட்சியால் உருவாக்கப் பட்ட போது அதை முதலில் அங்கீகரித்த நாடுகளில் பாக்கிஸ்த்தானும் ஒன்று.  சீனாவிற்கு எதிராக மேற்கு நாடுகள் இருபது ஆண்டுகள் பொருளாதாரத் தடை விதித்த போது சீனாவுடன் வர்த்தகத்தைப் பேணியது பாக்கிஸ்த்தான். 1989-ம் ஆண்டு சீனா தினமன் சதுக்கத்தில் செய்த கொலைகளுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்த போது சீனாவின் பக்கம் நின்றது பாக்கிஸ்த்தானும் கியூபாவும் மட்டுமே. சீனாவிற்கு ஆதரவாக நின்றன. பாக்கிஸ்த்தானிற்கு சீனாவின் ஏற்றுமதி சொற்பமே. ஆனால் பாக்கிஸ்த்தானின் பூகோள இருப்பு சீனாவிற்கு மிகவும் வேண்டப்பட்ட ஒன்றாக அமைகின்றது. இந்தியாவிற்குப் பிரச்சனை கொடுக்கும் சிறந்த களமாக சீனாவிற்கு பாக்கிஸ்த்தான் இருக்கின்றது. மலேசியாவை ஒட்டியுள்ள மலாக்கா நீரிணையில் சீனாவிற்கான ஏற்றுமதி இறக்குமதிப் பாதை தடைபட்டால் ஒரு மாற்று வழிப்பாதையை பாக்கிஸ்த்தானுடாக சீனா அமைத்துள்ளது. பாக்கிஸ்த்தானுடாக சீனா மேற்காசியா, மத்திய ஆசியா, ஐரோப்பா போன்ற பல பிரதேசங்களுடன் தொடர்பை ஏற்படுத்தலாம். அதற்கு பலுச்சிஸ்த்தான் மாகாணம் தனியாகப் பிரிந்து செல்லாமல் சீனா பார்த்துக் கொள்ள வேண்டும். சீனாவின் தரை வழிப்பட்டுப் பாதைக்கும் கடல்சார் பட்டுப் பாதைக்கும் பாக்கிஸ்த்தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இரு நாடுகளும் இணைந்து உருவாக்கிய சீன பாக்கிஸ்த்தானிய பொருளாதாரப் பாதை (China-Pakistan Economic Corridor) (CPEC) பலுச்சிஸ்த்தானில் உள்ள குவாடர் துறைமுகத்தில் தொடங்கி சீனாவின் தென் முனை நகரமான காஷ்கரில் முடிவடைகின்றது.

பலுச்சிஸ்த்தானும் சீனாவும்
பலுச்சிஸ்த்தானில் உள்ள குவாடர் துறைமுகம் 2013-ம் ஆண்டில் இருந்து 40 ஆண்டுகள் சீனாவிற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. துறைமுகத்தின் உரிமம் பாக்கிஸ்த்தானிடம் இருந்தாலும் அதன் முழு முகாமையும் சீனாவினுடையதே. உலக எரிபொருள் இருப்பு உள்ள பிராந்தியத்திற்கு அண்மையில் அமைந்துள்ள குவாடர் துறைமுகத்தை சீனா இலகுவில் கைவிட மாட்டாது. எந்தக் காலநிலையிலும் சீனாவிற்குத் தேவையான எரிபொருளை குவாடர் துறைமுகத்தினூடாக சீனா பெற்றுக் கொள்ள முடியும். பலுச் இன மக்கள் அதிலும் குறிப்பாக புலம் பெயர்ந்து வாழும் பலுச் இன மக்கள் சீன பாக்கிஸ்த்தானிய பொருளாதாரப் பாதையைக் (China-Pakistan Economic Corridor) கடுமையாக எதிர்க்கின்றார்கள். பலுச்சிஸ்த்தானிய மக்கள் 1948-ம் ஆண்டில் இருந்து ஐந்தாவது கட்ட விடுதலைப் போரை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.  பலுச் விடுதலைப் போராளிகள் சீனாவின் எரிபொருள் காவிகள் மீது அவ்வப் போது தாக்குதல்களும் தீவைப்புகளும் செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் எதிர்ப்பு சீனாவின் கேந்திரோபாய நோக்கங்களுக்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது. பலுச்சில் ஒரு இனக்கொலை நடக்குமா? பலுச்சிஸ்த்தான் மாகாணத்தில் சீனா நிறைவேற்றும் பல திட்டங்கள் பலுச் மக்களின் ஒப்புதல் இன்றியே நடக்கின்றது மட்டுமல்ல அவை பலுச் இன மக்களுக்கு எந்தவித நன்மையையும் கொடுப்பதாக இல்லை.

அமெரிக்காவும் பலுச்சிஸ்த்தானும்.
2011-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் ஆளில்லாப் போர் விமானங்கள் பாக்கிஸ்த்தானிற்குள் பிரவேசித்து பயங்கரவாதிகள் என எண்ணி பாக்கிஸ்த்தானியப் படையினரைக் குண்டு வீசிக் கொன்றது. இதைத் தொடர்ந்து பலுச்சிஸ்த்தானின் ஊடாக நேட்டோ நாடுகளது படையினரும் படைக்கலன்களையும் நகர்த்துவதை பாக்கிஸ்த்தான் தடை செய்தது. அந்தப் பாதையை திறப்பதற்கான பேச்சு வார்த்தை ஒரு புறம் இழுபறிப் பட்டுக் கொண்டிருக்கையில் அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையின் உறுப்பினர் ஒருவர் பாதை திறக்காவிடில் பலுச்சிஸ்த்தான் பிரிவினைக்கு அமெரிக்கா உதவும் என ஒரு மிரட்டலை விட்டார். அதைத் தொடர்ந்து அமெரிக்கா மன்னிப்புக் கேட்க பாதை திறக்கப் பட்டது. இது பலுச்சிஸ்த்தானை வல்லரசு நாடுகள் தமது பகடைக் காயாகப் பயன் படுத்துவதை உறுதி செய்கின்றது. பலுச்சிஸ்த்தானிற்கு உதவி செய்து பாக்கிஸ்த்தானை முழுக்க முழுக்க சீனாவில் தங்கியிருக்கும் ஒரு நாடாக மாற்ற அமெரிக்கா விரும்பவில்லை.

குவாடர் துறைமுகம்
குவாடர் துறைமுகத்தை சீனா படைத் துறை மயமாக்கும் நிலையில் அது இந்தியாவிற்கு மட்டுமல்ல யுனைட்டெட் அரபு எமிரேட், ஓமான், ஈரான் போன்ற நாடுகளுக்கும் சவாலாக அமையும். அத்துடன் எரிபொருள் விநியோகத்தில் கேந்திர முக்கியத்துவமான ஹோமஸ் நீரிணையையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகிறது. கடல் மூலமான உலக எரிபொருள் வழங்கலில் 40% ஈரானிற்கு அண்மையில் உள்ள ஹொமஸ் நீரிணையூடாக நடக்கிறது. உலக் மொத்த எண்ணை வழங்கலில் இது 20% ஆகும். நாளொன்றிற்கு 15 எண்ணை தாங்கிக் கப்பல்கள் இதனூடாக பயணம் செய்கின்றன. சவுதி அரேபியா, ஈராக்,குவைத், பாரெய்ன், கட்டார், துபாய், போன்ற நாடுகளில் இருந்தூ ஏற்றுமதியாகும் எரிபொருள் ஹோமஸ் நீரிணையூடாகவே நடக்கின்றது. அமெரிக்கக் கடற்படையினர் ஹோமஸ் நீரிணையில் தமது பெரிய விமானம் தாங்கிக் கப்பல்களை நடமாடவிட்டு தமது கண்காணிப்பின் கீழ் வைத்துள்ளனர். சீனாவிற்கான எரிபொருள் வழங்கலில் 70% ஹோமஸ் நீரிணையூடாகச் செல்வதால் அது சீனாவிற்கும் ஒரு முக்கியத்துவம் வாய்ததாக அமைகிறது. தற்போது அமெரிக்கக் கடற்படை அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஈரானியத் துறைமுகத்திற்குப் போட்டியாக குவாடர்
குவாடர் துறைமுகத்தை சீனா படைத்தளம், மேற்குச் சீனாவிற்கான வழங்கற்பாதை முனையம், வர்த்தக விருத்தி ஆகியவற்றிற்குப் பயன்படுத்தலாம். குவாடர் துறை முகம் வர்த்தக ரீதியில் வளர்ச்சியும் முக்கியத்துவமும் பெறும் போது அது ஈரானின் சபஹார் துறைமுகத்திற்குச் சவாலாக அமையலாம். ஈரான் - ஈராக் போரின் ஹோமஸ் நீரிணையூடான எரிபொருள் ஏற்றுமதி தடைபட்ட போது ஈரான் சபஹார் துறைமுகத்தையும் அதை அண்டியுள்ள பிரதேசத்தையும் பெருமளவு அபிவிருத்தி செய்து வருகிறது. 1992இல் அங்கு ஒரு சுதந்திர வர்த்தக வலயத்தையும் உருவாக்கியது. 2002இல் அங்கு ஒரு பன்னாட்டுப் பலகலைக்கழத்தையும் உருவாக்கியது. சபஹாரில் இருந்து இந்தியா, இரசியா, ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகளுக்கு போக்கு வரத்து வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தில் இந்தியாவும் ஈரானுடன் இணைந்து செயற்பட்டது. கடற்படுக்கையூடாக சபஹாரில் இருந்து இந்தியாவிற்கு குழாய்களூடாக எரிவாயு விநியோகத் திட்டமும் அதில் அடக்கம். ஈரானில் சிஸ்டன் – பலுச்சிஸ்த்தான் என்னும் ஒரு மாகாணம் இருக்கின்றது. அதில்தான் சபஹார் துறைமுகம் அமைந்துள்ளத். சியா முஸ்லிம் நாடான ஈரானின் சிஸ்ரன் - பலுச்சிஸ்த்தானில் சுனி முஸ்லிம்களே பெரும்பானமையானராக இருக்கின்றனர். இதனால் இங்கு பிரிவினை தோன்றலாம் என்ற அச்சத்தில் சபஹார் துறை முகத்தை மேம்படுத்த ஈரான் தயக்கம் காட்டுகிறது. சுனி முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பலுச்சிஸ்த்தானின் பிரிவினைக்கு உதவி செய்வது ஈரானைப் பொறுத்தவரை ஒரு புவிசார் அரசியல் தற்கொலையாகும். அணுக்குண்டை வைத்திருக்கும் தனது அண்டை நாடும் தனது எதிரிநாடான சவுதி அரேபியாவின் நெருங்கிய நட்பு நாடுமான பாக்கிஸ்த்தானுடன் ஒரு முறுகல் நிலையை உருவாக்க ஈரான் விரும்பவில்லை. அது மட்டுமல்ல ஈரானில் இருக்கும் சிஸ்டன் பலுச்சிஸ்த்தான் பிராந்தியத்தையும் பிரித்து எடுக்க வேண்டும் என பலுச்சிஸ்த்தானியர்கள் விரும்புகின்றார்கள்.

இந்தியாவால் முடியுமா?
அமெரிக்கா, சீனா, ஈரான், பாக்கிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் இந்தியாவால் பலுச்சிஸ்த்தானைப் பிரித்தெடுத்து ஒரு சுதந்திர நாடாக்க முடியாது. பலுச்சிஸ்த்தான் விடுதலைப்படை, பலுச்சிஸ்த்தான் குடியரசுப் படை, பலுச்சிஸ்த்தான் விடுதலை முன்னணி, ஐக்கிய பலுச் படை, பலுச் குடியரசுப் பாதுகாவலர் எனப் பல அமைப்புக்கள் இருப்பதும் இந்தியத் தலையீடும் இனக்கொலை செய்யத் தயங்காத பாக்கிஸ்த்தானும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விம்பங்கள் போல் இருக்கின்றன.  இது பலுச் மக்களுக்கு ஒரு பேரழிவைக் கொண்டுவரும் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இவையாவும். நரேந்திர மோடி இந்திய சுதந்திர நாளன்று கொளுத்திப் போட்ட வெடியை இட்டு பலுச் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...