Monday 9 May 2016

அடுத்த ஐநா பொது செயலர் தேர்வும் குழறுபடிகளும்

ஐக்கிய அமெரிக்காவின் அடுத்த குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது பற்றிய செய்திகள் பெரிதாக அடிபடுவதால் ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த பொதுச் செயலர் யார் என்ற செய்தி மறைக்கப்பட்டு விட்டது. இரு பதவிகளுக்குத் தெரிவு செய்யப்படுபவர்களும் 2017--ம் ஆண்டு ஜனவரி மாதம்  பதவி ஏற்பார்கள். அமெரிக்க அதிபருக்கான தேர்தல் 2016 நவம்பர் மாதம் ஐநா பொதுச் செயலர் பதவிக்கான தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும். ஐநா உலக மக்களை சொர்க்கத்திற்கு கொண்டு செல்ல உருவாக்கப்படவில்லை ஆனால் உலக மக்கள் நரக வேதனை அனுபவிக்காமல் இருக்க உருவாக்கபட்டது என்றார் ஐநாவின் இரண்டாவது பொதுச் செயலராக இருந்தவர்.

பொதுச் செயலர் தெரிவும் பேரம் பேசலும்.
ஐக்கிய நாடுகள் சபையின் பட்டயத்தின் 97-ம் பந்தியின் படி அதன் பாதுகாப்புச் சபையின் பரிந்துரையின் பேரில் பொதுச் சபை பொதுச் செயலரைத் தெரிவு செய்யும். ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், இரசியா, சீனா ஆகிய ஐந்து வல்லரசு நாடுகளின் ஒருமித்த ஆதரவு பெற்ற ஒருவரே பொதுச் செயலராக வர முடியும். பாதுகாப்புச் சபை பொதுச் செயலரைப் பரிந்துரை செய்யும் போது எந்த ஒரு வல்லரசு நாடாவது தனது வீட்டோ எனப்படும் இரத்து அதிகாரத்தைப் பாவித்து தனக்கு வேண்டாதவர் பொதுச் செயலராக வருவதைத் தடுக்க முடியும். ஐந்து வல்லரசு நாடுகளின் ஒருமித்த ஆதரவு  பெறுவதி சிரமம் மிக்கதாகும். இதனால் வெவேறு உலக அமைப்புக்களின் முக்கிய பதவிகளை இந்த ஐந்து நாடுகளும் தமக்குள் பங்கிட்டுக் கொள்ளும். அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாட்டைச் சேர்ந்த பான் கீ மூன் ஐநா பொது செயலர் பதவிக்கு அனுமதித்தமைக்குப் பதிலாக சீனாவைச் சேர்ந்தவருக்கு உலக வங்கி அதிபர் பதவி விட்டுக் கொடுக்கப்பட்டது. இந்தியாவின் படைத்துறையில் பணிபுரிந்த சித்தார்த் சட்டர்ஜி பான் கீ மூனின் மகளைத் திருமணம் செய்தவர். இதனால் இந்தியாவின் ஆதரவும் பான் கீ மூனுக்கு இருந்தது. ஐநாவில் இரசியாவும் இந்தியாவும் பல துறைகளில் ஒத்துழைப்பதால் இரசியா பான் கீ மூனைத் தெரிவு செய்வதில் ஆட்சேபனை செய்யவில்லை. பான் கீ மூன் இரண்டாம் பதவிக் காலத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பன்னாட்டு நாணய நிதியத்தின் உச்சப் பதவி விட்டுக் கொடுக்கப்பட்டது.
பிராந்திய அடிப்படையிலான தேர்வு
ஐநா சபையின் பதவிகளுக்கு தேர்வு நடக்கும் போது பிராந்தியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு சுழற்ச்சி முறையில் வேறு வேறு பிராந்தியங்களைச் சேர்ந்தவர்களுக்கு பதவு வழங்கப்படும். பான் கீ மூன் ஆசியப் பிராந்தியத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட போது ஆபிரிக்கப் பிராந்தியத்தைச் சேர்ந்த செல்வி நவநீதம் பிள்ளைக்கு மனித உரிமைக் கழக ஆணையாளர் பதவி கொடுக்கப்பட்டது. பான் கீ மூனிற்கு முன்னர் பொதுச் செயலர் பதவியில் இருந்த கோபி அனன் நடுவண் அமெரிக்காவைச் சேர்ந்தவர். அவருக்கு முன்னர் இருந்த பௌட்ரஸ் காலி ஆபிரிக்கப் பிராந்திய நாடான எகிப்தைச் சேர்ந்தவர். கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த எவரும் இதுவரை ஐநாவின் பொதுச் செயலர் பதவிக்கு வந்ததில்லை. ஐநாவின் வரலாற்றில் இதுவரை பெண் ஒருவர் பொதுச் செயலராகாக் கடமையாற்றியதில்லை. இதனால் அடுத்த பொதுச் செயலர் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என்ற கருத்து இப்போது பரவலாக நிலவுகின்றது.
கோட்டை விடப்படும் திறமை
ஐநா பொதுச் செயலர் தேர்வில் பிராந்திய அடிப்படையிலும் வல்லரசு நாடுகளிடையிலான பேரம் பேசுதலும் அதிக முக்கியத்துவம் பெறும் போது திறமையும் நேர்மையும் ஓரம் கட்டப்படப்படுகின்றது என்பதற்கு பான் கீ மூனின் தேர்வு நல்ல உதாரணமாக அமைந்தது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் செயலராக பான் கீ மூன் 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க ஊடகமான போரின் பொலிசி என்னும் சஞ்சிகையில் "பான் கீ மூன் ஏன் உலகின் மிக ஆபத்தான கொரியர்" என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அதில் பான் கீ மூன் பல அவல நிலைகளின் போது மௌனமாக இருந்தது சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இலங்கை உள் நாட்டுப் போரில் போது தமிழ் மக்கள் அல்லல் பட்டுக் கொண்டிருக்கையில் இலங்கைக்குச் செல்லாமல் போர் முடிந்த பின்னர் போனதையும் அந்தச் சஞ்சிகை சுட்டிக் காட்டி இருந்தது. திறமை மிக்க கோபி அனன் அமெரிக்காவின் சொற்படி நடக்க மறுத்த படியால் ஒரு திறமை அற்றவர் பதவிக்கு வருவதை அமெரிக்கா விரும்பியது எனவும் அந்த சஞ்சிகை சுட்டிக் காட்டியது.

கிழிபட்ட பான் கீ மூன்
திறமையும் நேர்மையும் அற்ற பான் கீ மூன் இரு ஐந்து ஆண்டுகாலப் பதவிக் காலத்தை நிறைவு செய்துள்ளார். பான் கீ முனிற்கு முன்னர் செயலராக இருந்த கோபி அனன் அவர்கள் சிறந்த தோற்றமும் தெளிவான பேச்சுத் திறனும் கொண்டவர். அவரைத் தொடர்ந்து வந்த பான் கீ மூன் ஒரு தெரியாத நகரத்தில் பணப்பையைத் தொலைத்த பயணி போல் எப்போதும் திரு திருவென விழித்தபடி காட்சியளிப்பார்; புன்னகைக்கவே மாட்டார். பான் கீ மூனின் பேச்சு தம்மை நித்திரை கொள்ளச் செய்வதாகப் பல ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். பான் கீ மூனின் இரண்டாவது பதவிக்காலம் தொடர்பான சர்ச்சைகள் 2012-ம் ஆண்டு சூடு பிடித்திருந்தது. பிரித்தானியக் கார்டியன் பத்திரிகை "பான் கீ மூனின் செயற்பாடுகளிற்கு எதிராக "கலையும் அமைதி" என்ற தலைப்பிட்டு 22-07-2010இல் ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் பான் கீ மூனின் மோசமான ஆங்கில அறிவும் அவரது தொடர்பாடல் திறமையின்மையும் அவரது முதற் பேச்சிலேயா வெளிப்பட்டு விட்டதாம். இதன் பின்னர் அவருக்கு ஆங்கிலப் பயிற்ச்சியும் தொடர்பாடல் பயிற்ச்சியும் வழங்கியும் போதிய முன்னேற்றம் கிடைக்கவில்லை. பின்னர் தொலைக்காட்சிகளில் தோன்றுவதை தவிர்க்குமாறு இவருக்கு ஆலோசனை வழங்கப் பட்டது. அவரும் பொது இடங்களில் தோற்றமளிப்பதை தவிர்த்துப்க் கொண்டார்.
2009 டிசம்பரில் நடந்த உலக வெப்பமயமாதல் மாநாட்டிலும் பான் கீ மூனின் தலைமைத்துவத் திறமையின்னமை நன்கு வெளிப்பட்டது. பான் கீ மூனின் இரண்டாம் பதவிக்காலத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்த சிலர் இந்த மாநாட்டின் பின்னர் தம் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர். பான் கீ மூனின் மகளின் கணவரான சித்தார்த சட்டர்ஜீக்கு பதவி உயர்வு வழங்கியது பான் கீ மூனின் நேர்மையை சந்தேகத்திற்குள்ளாக்கியது. இந்த சித்தார் சட்டர்ஜி இந்திய அமைதிப் படை தமிழர் தாயகத்தில் செய்த முதற் படை நடவடிக்கையான புலிகளின் தொலைக்காட்சி நிறுவனத்தை நிர்மூலமாக்குதலின் போது தலைமை தாங்கிச் சென்றவர். அத் தாக்குதலில் அப்போதைய இலங்கைக்கான இந்தியத் தூதுவரின் வார்த்தைகளின் படி இந்தியப் படையினர் இலையான்கள் போல் அடித்துக் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் சித்தார்த் சட்டர்ஜீ ஒரு தமிழின விரோதியாக மாறினார் எனக் கருதப்படுகின்றது.
பான் கீ மூனின் தலைமை ஆலோசகரான விஜய் நம்பியார் இலங்கையின் போர்த்துறை ஆலோசகர் சதீஸ் நம்பியாரின் சகோதரர். விஜய் நம்பியார் 2009 மே மாதம் இலங்கையில் நடந்த போரின் போது இலங்கை சென்று விட்டு வந்து பாதுகாப்புச் சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்க மறுத்து அடாவடித்தனம் செய்தவர். இதனால் இவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாக பிரித்தானியா அப்போது மிரட்டியும் இருந்தது. சரணடைந்தவர்களை சுட்டுக் கொன்றதில் விஜய் நம்பியாரின் செயற்பாடுகள் சம்பந்தப்பட்டிருந்தன என ஐயப்படப்படுகின்றது.

மோசமான செயலர்
ஐநாவைப்பற்றி பல புத்தகங்கள் எழுதிய நியூ யோர்க் பல்கலைக் கழக அரசியற் துறைப் பேராசிரியர் தோமஸ் வைஸ் அவர்கள், இதுவரை இருந்த ஐநா பொதுச் செயலர்களுள் பான் கீ முன் மிக மோச மானவர் என்று குறிப்பிட்டார்.  அவர் கண்ணுக்குப் புலப்படாதவராக இருக்கின்றார் என்றார் அந்த நூலாசிரியர். இதே வேளை பான் கீ மூனின் உதவியாளர்கள் சிலர் அவரை புகழவும் செய்தனர்  ஒரு ஜப்பானியர் அவரை யோகிக்கு ஒப்பிட்டார். யோகி எப்படிக் கதைக்கிறார் என்பதல்ல முக்கியம் அவர் எதைப் போதிக்கிறார், எப்படிச் செயற்படுகிறார் என்பதுதான் முக்கியம் என்கிறார் அவர்.
சென்று வாருங்கள் என்கிறார் ஜேம்ஸ் ரவுப்
பிரபல அமெரிக்க அரசியல் ஆய்வாளர் ஜேம்ஸ் ரவுப் அவர்கள் Good night, Ban Ki moon என்ற தலைப்பிட்டு ஒரு கட்டுரையை 22-07-2010இலன்று எழுதினார். பொதுச் செயலாளர்கள் அவர்களின் திறமையின்மைக்காகவே தெரிவு செய்யப்படுகிறார்கள் என்று அவர் கிண்டலடித்துள்ளார். பான் கீ மூனிற்கு எதிராக அவர் வைக்கும் குற்றச் சாட்டுக்களிலும் இலங்கை உள்நாட்டுப் போரை அவர் கையாண்ட விதம் முக்கிய இடம் பெறுகிறது. முன்னாள் கோபி அனனின் திறமை அமெரிக்காவிற்கு பாதகமாக அமைந்ததால் திறமையற்ற பான்கீ மூன் தேர்ந்தெடுக்கப் பட்டதாக கூறப்படுகிறது. ஐநாவை எப்போதும் ஒரு தடையாகப் பார்க்கும் சீனா அதன் பெருமையைக் குறைக்கவே பான் கீ மூனை பொதுச் செயலராக்க அனுமதித்தது என்கிறார் ஜேம்ஸ் ரவுப்.
அமெரிக்க சார்பாளரை அமெரிக்க கைவிடுமா?
இது வரை இருந்த எட்டு பொதுச் செயலாளர்களுள் பான் கீ மூன் தான் மிகத்திவீரமான அமெரிக்க ஆதரவாளர். முன்னாள் பொதுச் செயலர் கோபி அனன் அமெரிக்கா ஈராக்கில் செய்தவற்றை பகிரங்கமாக கண்டித்தவர். ஐரோப்பியாவில் நல்ல பெயரெடுத்தவர். இவரைப் பிடிக்கததால் ஜோர்ஜ் புஷ் பான் கீ மூனை பொதுச் செயலராக்கினார். ஒபாமா நிர்வாகம் இலங்கைப் போர் குற்ற விசாரணையை காரணம் காட்டி அவரை பதவியில் நீடிக்கச் செய்தது. பான் கீ மூன் ஐநா பொதுச் செயலர் பதவிக்குப் போட்டியிட்டபோது தனது வேட்பாளரைப் போட்டியில் இருந்து விலகச்செய்து அவரது வெற்றிக்கு இலங்கை பெரும் பங்காற்றியது. அது மட்டுமல்ல இலங்கையில் போர் நடந்த வேளை பான் கீமூன் அவர்களை இலங்கை "நன்கு கவனித்து" கொண்டதாகவும் பேசப்படுகிறது. இலங்கையில் தமிழ் ஐநா ஊழியர்களை இலங்கை அரசு கைது செய்து மோசமாக நடத்தியபோது ஐநா பாராமுகமாக இருந்தது.

வெழுத்து வாங்கிய சுவீடன் பெண்
பான் கீ மூனின் திறமையின்மை தொடர்பாக ஒரு செய்திக் கசிவு 2012-ம் ஆண்டு வெளிவந்திருந்தது. இது பான் கீ மூனிற்கு சுவீடனைச் சேர்ந்த ஐநா உதவிப் பொதுச் செயலாளர் இங்கா பிரித் ஆலெனியஸ் (under-secretary general Inga-Britt Ahlenius) அவர்கள் எழுதிய இரகசிய உள்ளகக் கடிதம் பின்னர் அமெரிக்கத் தினசரியான வாஷிங்டன் போஸ்ற்றில் வெளிவந்தது. அப்பெண்மணி ஐநா பொதுச் செயலகம் "அழுகத்" தொடங்கிவிட்டது துண்டுகளாக் விழப் போகிறது, ஐநா தேவையற்ற ஒன்றாகப் போகிறது என்று தான் மனவருத்தத்துடன் தெரிவிக்கிறேன் என்றார். ஐநா வரலாற்றில் இங்கா பிரித் ஆலெனியஸ் போல் வேறு எவரும் அந்த அளவு மோசமாக விமர்சித்ததில்லை. இங்கா பிரித் ஆலெனியஸ் ஐநாவின் ஊழல்கள் தொடர்பாக செய்த விசாரணைக்கு பான் கீ மூன் முட்டுக் கட்டை போட்டார் என்பதால் அவர் ஆத்திரமடைந்திருந்தார்.
இஸ்ரேலின் போர்க்குற்றத்தை பான் கீ மூன் மறைத்தாரா?
2014-ம் ஆண்டு காசா நிலப்பரப்பில் ஹாமாஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதல்களை இஸ்ரேல் செய்யும் போது ஐநாவின் கட்டிடங்கள் மீது இஸ்ரேலிய விமானன் படையினர் செய்த குண்டு வீச்சுத் தாக்குதல்கள் போர்குற்றமாகும் என ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் ஓர் அறிக்கையை ஐநா சபைக்குச் சமர்ப்பித்திருந்தார். இதில் அப்பாவி மக்கள் அகதிகளாகத் தங்கியிருந்த ஏழு கட்டிடங்கள் சிதைக்கப்பட்டன. அதை பான் கீ மூடி மறைத்து ஓர் அறிக்கையை வெளிய்ட்டார். அந்த அறிக்கை இஸ்ரேலிய உளவுத் துறையான மொசாட்டால் தயாரிக்கப் பட்டதாக குற்றச் சாட்டுக்கள் வெளிவந்திருந்தன. விக்கிலீக்சும் இது பற்றி தகவல் வெளியிட்டிருந்தது.  இந்த மூடி மறைப்பு தொடர்பாக அப்போதைய அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புத் துறை ஆலோசகர் சூசன் றைஸ் நான்கு தடவைகள் தொலைபேசியில் உரையாடி இருந்தார். 
வல்லாதிக்கத் தேர்தல்
ஐநா பொதுச் செயலர் தேர்தல் என்று சொன்னாலும் அதற்கும் மக்களாட்சித் தத்துவங்களுக்கும் வெகு தூரம். இரசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் செய்யப் படும் உடன்பாட்டில்தான் இந்தத் தேர்தல் பெரிதும் தங்கியுள்ளது. வழமையாக பொதுச் செயலர் தேர்வு பாதுகாப்புச் சபையில் மூடிய அறைக்குள் நடை பெறும் ஆனால் இந்த முறை பகிரங்கமாக நடை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பகிரங்கமாக நடந்தாலும் பல திரை மறைவுப் பேரம் பேசல்கள் நிச்சயம் நடக்கும். 193 உறுப்பு நாடுகளையும், முப்பது நிறுவனங்களையும், நாற்பதினாயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்களையும் கொண்ட ஐநாவின் பொதுச் செயலர் பதவிக்குப் போட்டியிட முனைபவர் தனது விபரங்களையும் இரண்டாயிரம் சொற்களைக் கொண்ட உலகம் தொடர்பான தனது பார்வைக் கூற்றையும் சமர்ப்பிக்க வேண்டும். ஏழு பில்லியன்களுக்கு ஒன்று என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு ஐநாவில் பல சீர்திருத்தங்களை முன்வைக்கின்றது. அதில் ஒன்று ஐநா பாதுகாப்புச் சபை ஒருவரைத் தெரிவு செய்து பொதுச் சபையின் அனுமதிக்கு அனுப்புவதை விடுத்து இருவரை பரிந்துரை செய்து அவர்களில் ஒருவரை பொதுச்சபை தெரிந்து எடுக்க வேண்டும் என்பதாகும். ஆனால் இது நடக்காத காரியமாகும்.
இந்த முறை தேர்தலில் மனுத் தக்குதல் செய்துள்ளவர்கள்:
1. ஐரீனா பொக்கோவா என்னும் 63 வயதான பல்கேரிய நாட்டுப் பெண்மணி. இவர் யுனெஸ்க்கோவின் ஆளுநர் நாயகமாக இருக்கின்றார்.
2. ஹெலென் கிளார்க் என்னும் 66 வயதான நியூசிலாந்து நாட்டுப் பெண்மணி. இவர் தற்போது ஐநாவின் அபிவிருத்தித் திட்டத்தில் தலைமைப் பொறுப்பில் உள்ளார்.
3. நட்டலியா ஜேர்மன் என்னும் 47 வயதான பெண்மணி. இவர் மொல்டோவா நாட்டின் முன்னாள் துணைத் தலைமை அமைச்சர்.
4. வெஸ்னா புசிக் என்னும் 62 வயதான பெண். இவர் குரோசியா நாட்டின் துணைத் தலைமை அமைச்சர்,
5. அண்டோனியோ குடெரெஸ் என்னும் 66 வயதான ஆண். இவர் போர்த்துக்கல்லின் முன்னாள் தலைமை அமைச்சர்.
6. ஸர்ஜன் கெரிம் என்னும் 67 வயதான ஆண். இவர் மெசடோனியாவின் முன்னாள் வெளிநாட்டமைச்சர். ஐநாவின் பொதுச் சபையில் தலைமைப் பதவி வகித்தவர்.
7. டனிலோ டேர்க் என்னும் 64 வயது ஆண். இவர் ஸ்லொவெனியாவின் ஐநாவிற்கான தூதுவராகவும் ஐநாவின் துணைப் பொதுச் செயலராகவும் கடமையாற்றியவர்.
8. ஐகர் லுக்சிக் என்னும் 39 வயதான ஆண் மொண்டிநிகரோவின் முன்னாள் தலைமை அமைச்சரும் தற்போதைய வெளிநாட்டமைச்சரும் ஆவார்.
கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த பெண் என்ற நிபந்தனையை பல்கேரிய ஐரீனா பொக்கோவா, மொல்டோவாவின் நட்டலியா ஜேர்மன், குரோசியாவின் வெஸ்னா புசிக் ஆகிய மூவரும் திருப்தி செய்கின்றனர். ஆனால் இவர் யுனெஸ்க்கோவின் தலைமைப் பதவியில் இருக்கையில் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி அதில் பலஸ்த்தீனத்திற்கு உறுப்புரிமை வழங்கப்பட்டதால் அவர் அமெரிக்காவைத் திருப்தி செய்ய மாட்டார். இந்த முறை வேட்பாளர்கள் தமது நிலை தொடர்பாக பொதுச் சபை உறுப்பினர்கள் மத்தியில் பரப்புரை செய்வதற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. ஆனால் எட்டு வேட்பாளர்களில் நால்வர் மட்டுமே பரப்புரைக் களத்தில் இதுவரை இறங்கியுள்ளனர். மற்றவர்கள் சும்மா இருக்கும் சங்கை ஏன் ஊதிக் கெடுப்பான் என்ற எண்ணத்தில் உள்ளனர்.
எப்படித்தான் தேர்தல் நடந்தாலும் எவர் வென்றாலும் ஐநா சபை என்பது உலகிலேயே திறனற்ற ஒரு அமைப்பு, ஊழல் நிறைந்த அமைப்பு என்ற நிலையை மாற்றப்பட மாட்டாது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...