Monday 5 September 2016

மத்திய ஆசிய நாடுகள் மீதான ஆதிக்கப் போட்டி


மத்திய ஆசியாவில் முக்கிய நாடுகள் கஜகஸ்த்தான், கிர்கிஸ்த்தான், தஜிகிஸ்த்தான், தேர்க்மெனிஸ்த்தான், உஸ்பெக்கிஸ்த்தான் ஆகியவையாகும்இவை முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளாகும். 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னர் இவை சுதந்திர நாடுகளாகின. வயது முதிர்ந்த சர்வாதிகாரிகளாள் ஆளப்படும் இவை அபரிமிதமான இயற்கை வளங்களையும் சிறந்த விவசாய நிலங்களையும் கொண்ட நாடுகளாகும்அதனால் சீனா, இரசியா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் மத்திய ஆசிய நாடுகளுடனான உறவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. சீனாவின் தரைவழிப் பட்டுப் பாதைக்கும் பொருளாதாரப் பட்டிக்கும் இந்த நாடுகள் அவசியமானவையாக உள்ளன. முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் இரசியாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்பது இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் கொள்கையாகும்.

உக்ரேனைத் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்ற மத்திய ஆசியா
மத்திய ஆசியா முக்கியத்துவம் பெறுவதற்கான காரணங்கள்:
1.   1. ஐரோப்பிய ஒன்றியம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ஜோர்ஜியாவையும் உக்ரேனையும் தன்னுடன் இணைக்கும் முயற்ச்சிக்கு எதிராக இரசியா கடுமையாக நடந்து கொண்டமை.
2.   2. உக்ரேனை ஆக்கிரமித்தது போல் இரசியா தம்மை ஆக்கிரமிக்குமா என மத்திய ஆசிய நாடுகள் அச்சம் கொண்டமை.
3.   3. சீனா மத்திய ஆசிய நாடுகளில் அதிக அக்கறை காட்டுவது.
4.   4.  எஸ் என்ப்படும் இஸ்லாகிய அரசு தனது நடவடிக்கைகளை மத்திய ஆசிய நாடுகளுக்கும் விரிவு படுத்த எடுக்கும் முயற்ச்சிகள்.  


பொருளாதாரமும் பூகோளமும்
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளாக இருந்த மத்திய ஆசிய நாடுகளில் நிலப்பரப்பில் பெரிய கஜகஸ்த்தான் எரிபொருள் யூரேனியம், தங்கம் உட்படப் பல கனிம வளங்களைக் கொண்டது. உஸ்பெக்கிஸ்த்தானிலும் தேர்க்மெனிஸ்த்தானிலும் எரிபொருள் நிறைய இருக்கின்றன. தஜிகிஸ்த்தானிலும் கிரிகிஸ்த்தானிலும் உள்ள மலைகள் தரும் நீரால் விவசாயம் செழிக்கும். பெருமளவு பருத்தி அந்த இரு நாடுகளிலும் பயிரடப்படுகின்றன. உலகச் சந்தையில் 2008-ம் ஆண்டின் பின் ஏற்பற்ற மூலப் பொருட்களின் விலைச் சரிவு இந்த நாடுகளையும் பெரிதும் பாதித்துள்ளன. 2000-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டு வரை சரசரியாக 8.3 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியைக் கண்ட மத்திய ஆசிய நாடுகள் தற்போது 1.4 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை மட்டுமே கொண்டிருக்கின்றன என்கின்றது பன்னாட்டு நாணய நிதியம்.  வேலை என்றால் இரசியாவிற்குச் செல்லும் மத்திய ஆசிய நாட்டு மக்கள் இரசியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த ஐந்து மத்திய ஆசிய நாடுகளும் வடக்கிலும் மேற்கிலும் இரசியாவும் கிழக்கில் சீனாவும் தெற்கில் பாக்கிஸ்த்தான், ஈரான், ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகளும் சூழ இருக்கின்றன. இவை எல்லாம் பல தரப்பட்ட  பிரச்சனைகளைக் கொடுக்கக் கூடியவை.
இஸ்லாமியர்கள் நிறைந்த பிரதேசம்
சீனாவின் பழைய பட்டுப் பாதை கிறிஸ்த்துவிற்கு இரு நூற்றாண்டுகளுக்கு முன்னதாக இருந்து நானூறு ஆண்டுகள் மத்திய ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தியது. அப்போது மத்திய ஆசியாவில் பௌத்த மதம் பரப்பப்பட்டது. பின்னர் 8-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து அங்கு இஸ்லாம் பரப்பப்பட்டது. தற்போது மத்திய ஆசிய நாடுகளில் இஸ்லாமியர்களே பெரும்பாலும் வசிக்கின்றனர். கிர்கிஸ்த்தானில் 86 விழுக்காடும், தஜிகிஸ்த்தானில் 98 விழுக்காடும் தேக்மெனிஸ்த்தானில் 93 விழுக்காடும் உஸ்பெக்கிஸ்த்தானில் 90 விழுக்காடும் கஜகஸ்த்தானில் 70 விழுக்காடும் இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர்.

போட்டிக்களமாகவிருந்தது
19-ம் நூற்றாண்டில் பிரித்தானியப் பேரரசுக்கும் இரசியாவிற்கும் இடையிலான போட்டிக் களமாக மத்திய ஆசியா இருந்ததுஇதற்கான முதலாவது காரணம் மத்திய ஆசியாவில் உள்ள வளங்களைச் சுரண்டுவது. இரண்டாவது பிரித்தானியா  இந்திய உப கண்டத்தில் செலுத்திய ஆதிக்கத்திற்கு மத்திய ஆசியாவினூடாக இரசியா அச்சுறுத்தல் விடக் கூடாது என்பதில் பிரித்தானியா அதிக கவனம் செலுத்தியமை. இரண்டாம் உலகப் போரின் போது மத்திய ஆசியாவின் விவசாய நிலங்களையும் எரிபொருள் வளங்களையும் அபகரிப்பதில் ஜேர்மனி அக்கறை காட்டியதுகிழக்கு ஐரோப்பாவிலும் மத்திய ஆசியாவிலும் அமெரிக்காவின் ஆதிக்கத்தைத் தடுப்பதில் ஹிட்லரும் ஸ்டாலினும் ஒன்றுபட்டுச் செயற்பட்டனர். கஜகஸ்த்தான் நிலப்பரப்பில் பெரிய நாடாக இருந்தாலும் மக்கள் தொகையில் உஸ்பெக்கிஸ்த்தான் பெரிய நாடாகும். அதன் மக்கள் தொகை மொத்த ஐந்து மத்திய ஆசிய நாடுகளின் மக்கள் தொகையின் அரைப் பங்காகும். உஸ்பெக்கிஸ்த்தானிடம் வலிமை மிக்க 650,00 படையினர் இருக்கின்றன. அத்துடன் மற்ற நான்கு மத்திய ஆசிய நாடுகளிலும் 5 முதல் 20 விழுக்காடு உஸ்பெக் இனத்தவர்கள் வசிக்கின்றனர். இவற்றின் மூலம் உஸ்பெக்கிஸ்த்தானின் ஆட்சியாளர்கள் மற்ற நான்கு நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்த முற்பட்டனர். அந்த நான்கு நாடுகளிலும் தமது மக்களை வைத்து பெரும் பிரச்சனைகளையும் உஸ்பெக்கிஸ்த்தான் ஆட்சியாளர்கள் உருவாக்கினர். அதற்கு கடுமையாக எதிர்ப்புக் காட்டியது கஜகஸ்த்தான். கிரிகிஸ்த்தானில் மக்களாட்சியை நோக்கிய சீர்திருத்தங்கள் 1999இல் செய்யப் பட்ட போது உஸ்பெக்கிஸ்த்தானின் ஆட்சியாளர்கள் கடும் எதிர்ப்புக் காட்டினர். அப்படிச் செய்தால் தமது நாட்டில் இருந்து செய்யப்படும் எரிபொருள் விநியோகம் தடை செய்ய்யப்படும் என்றும் மிரட்டினர். கிரிகிஸ்த்தானும் தஜிகிஸ்த்தானும் மத்திய ஆசியாவிலேயே வறுமை மிக்கவையும் உறுதியற்ற ஆட்சியைக் கொண்டவையுமாகும்.

சீனாவிற்குத் தேவையான கஜகஸ்த்தான்
70 விழுக்காடு இஸ்லாமியர்களைக் கொண்ட கஜகஸ்த்தான் சீனாவின் பிரச்சனைக்குரிய மகாணமான சின்சியாங்குடன் எல்லையைக் கொண்டது. கஜகஸ்த்தானில் ஒரு சர்வாதிகார ஆட்சி நடக்கின்றது. அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்கள் சீனாவை பொறுத்தவரை ஆட்சேபனைக்கு உரிவை அல்ல. அதனால் மனித உரிமைகளைத் தூக்கிப் பிடிக்கும் நாடகமாடும் மேற்கு நாடுகளுடன் உறவை வளர்ப்பதிலும் பார்க்க சீனாவுடன் உறவை விருத்தி செய்வது கஜகஸ்த்தான் ஆட்சியாளர்களுக்கு இலகுவானதாகும். சீனாவின் எரிபொருள் தாகத்தைத் தீர்ப்பதற்கும் கஜகஸ்த்தான் அவசியமானதாகின்றது. கஜகஸ்த்தானில் இருந்து சீனா எரிபொருள் இறக்குமதி செய்வது இரண்டு விழுக்காட்டிலும் குறைவானதாக இருந்தாலும் ஒரு அயல் நாட்டில் இருந்து செய்வது ஓர் இலகுவான இறக்குமதியாகும். சீனா முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சின்சியாங் பிரதேசத்தை  ஒரு மாகாணமாக 1894-ம் ஆண்டு தன்னுடன் இணைத்துக் கொண்டது. உய்குர் இன இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அந்த மாகாணத்தில் பிரிவினைவாதப் பிரச்சனை உண்டு. இரண்டாம் உலகப் போரின் போது சீனாவின் உறுதியற்ற நிலை இருந்தபடியால் சின்சியாங் பிரிந்து சென்றது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் சீனா மீளிணைத்துக் கொண்டது. மத அடிப்படையில் உய்குர் இன இஸ்லாமியர்களுக்கு கஜகஸ்த்தான் உதவி செய்யாமல் இருக்க வேஎண்டும் என்பதில் சீனா கரிசனை கொண்டுள்ளது.

அமெரிக்காவும் மத்திய ஆசியாவும்
மத்திய ஆசியாவில் அமெரிக்க ஆதிக்கத்திற்கு பல தடைகள் உண்டு. முக்கியமாக அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தின் கடற்படை அரசுறவியல் (Naval Diplomacy) அங்கு செல்லுபடியாகாது. தரையை மட்டும் பெரும்பாலும் எல்லைகளாகக் கொண்ட மத்திய ஆபிரிக்க நாடுகளுக்கு அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் செல்ல்ல முடியாது. மத்திய ஆசியாவின் மேற்கு எல்லையில் இருக்கும் கஸ்பியன் கடல் தரைகளால் சூழப்பட்ட ஒரு நீர்ப்பரப்பு ஆகும். 2001-ம் ஆண்டின் 9/11 இன் பின்ன்னர் அமெரிக்காவின் ஆப்கானிஸ்த்தான் ஆக்கிரமிப்பிற்கு மத்திய ஆசியா தேவைப்பட்டது. தரைவழிப் படை நகர்வுகளுக்கும் தலிபானிற்கும் அல் கெய்தாவிற்கும் விநியோகங்கள் செல்வதைத் தடுப்பதற்கும் மத்திய ஆசிய நாடுகள் அவசியமாகின. கிரிகிஸ்த்தானில் இருந்த அமெரிக்க விமானப் படைத்தளம் 2014-ம் ஆண்டு மூடப்பட்டது. கிரிகிஸ்த்தான் இரசிய சார்பு நாடாக மாறிக் கொண்டிருப்பதால் அது நடந்தது. தஜிகிஸ்த்தானைப் போலவே கிரிகிஸ்த்தானும் தனது ஏற்றுமதிக்கு பெரிதும் இரசியாவிலேயே தங்கியிருக்கின்றதுஅது மட்டுமல்ல பெருமளவு கிரிகிஸ்த்தானியர்கள் இரசியாவில் பணிபுரிகின்றார்கள். அவர்கள் அனுப்பும் பணமும் கிரிகிஸ்த்தானின் பொருளாதாரத்திற்குப் பெரும் ஆதாரமாக இருக்கின்றது. 2001-ம் ஆண்டு ஆப்கானிஸ்த்தான் போருக்கு என ஜேர்மனி தஜிகிஸ்த்தானில் அமைத்திருந்த படைத் தளமும் 2015-ம் ஆண்டுடன் மூடப்பட்டது. பூகோள அமைப்பு ரீதியில் பார்க்கும் போது அமெரிக்காவிலும் பார்க்க இரசியாவாலும் சீனாவாலும் மத்தியா ஆசியாவில் அதிக ஆதிக்கம் செலுத்தக் கூடிய நிலை இருக்கின்றது. பாக்கிஸ்த்தான் ஒரு முழுமையான அமெரிக்கச் செய்மதி நாடாக மாறும் போது மட்டுமே ஒரு காத்திரமான ஆதிக்கத்தை அமெரிக்காவால் மத்திய ஆசியாவில் செலுத்த முடியும். அப்படிப்பட்ட சூழ்நிலை ஏதும் இப்போது இல்லை. மத்திய ஆசிய நாடுகளில் மக்களாட்சி என்னும் போர்வையில் அமெரிக்காவின் கைப்பொம்மைகளை ஆட்சியில் அமர்த்துவதற்கான சாத்தியங்களும் காணப்படவில்லை. 2015-ம் ஆண்டின் இறுதியில் அமெரிக்க அரசுத் துறைச் செயலர் ஜோன் கெரி மத்திய ஆசிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களும் அமெரிக்காவிற்கு பெரிய வெற்றிகளைக் கொடுக்கவில்லை. அமெரிக்கா ஓரளவிற்கு படைத்துறை உறவைப் பேணக் கூடிய நாடுகளாக உஸ்பெக்கிஸ்த்தானும் தேர்க்மெனிஸ்த்தானும் காணப்படுகின்றன. இவ்விரண்டு நாடுகளும் இரசியாவுடன் இணைந்த பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (Collective Security Treaty Organization) என்னும் பாதுகாப்பு ஒப்பந்தத்தைச் செய்யவில்லை.

துருக்கியும் மத்திய ஆசியாவும்
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் மத்திய ஆசிய நாடுகளில் “மக்களாட்சியை” உருவாக்கும் பணியை அமெரிக்கா துருக்கியிடம் ஒப்படைத்தது. துருக்கியால் முன்பு ஆட்சி செய்யப் பட்ட மத்திய ஆசியப் பிராந்தியத்துடன் துருக்கிக்கு சிறந்த கலாச்சாரத் தொடர்பு உண்டு. அங்கு பல பாடசாலைகளை உருவாக்க துருக்கி உதவி செய்தது. மத்திய ஆசியாவில் பல துருக்கிய மொழி பேசும் மக்கள் வாழ்கின்றார்கள். ஆனால் அரை நூற்றாண்டுக்கு மேல் இரசியப் பொதுவுடமை ஆதிக்கத்தில் இருந்த அவர்கள் துருக்கியக் வாழ்கை முறையில் இருந்து வேறுபட்டு இருக்கின்றார்கள்.

இந்தியாவும் மத்திய ஆசியாவும்
இந்திய மத்திய ஆசியாவுடனான இணைப்புக் கொள்கையை 2012-ம் ஆண்டு வரைந்தது. 2015-ம் ஆண்டு இந்தியத் தலைமை அமைச்சர் மத்திய ஆசிய நாடுகளுக்கான பயணத்தை மேற்கொண்டார். ஐந்து நாடுகளிலும் மோடி கலாச்சார ஒத்துழைப்பை வலியுறுத்தினார். கஜகஸ்த்தானிடமிருந்து அடுத்த 4 ஆண்டுகளில் 5000தொன் யூரேனியத்தை இந்தியா அகழ்வு செய்து வாங்குவதற்கான ஒப்பந்தம் அப்பயணத்தின் போது செய்யப் பட்டது. கஜகஸ்த்தானின் அரசி எரிபொருள் நிறுவனத்தில் இந்தியா சிறிதளவு முதலீடு செய்துள்ளது அதை மேலும் அதிகரிக்க விரும்பிய இந்தியாவின் எண்ணம் நிறைவேறவில்லை. கஜகஸ்த்தான், உஸ்பெக்கிஸ்த்தான் தேர்க்மெனிஸ்த்தான் ஆகிய நாடுகளில் தகவல் தொழில்நுட்பத்துறை, உல்லாசப் பயணத்துறை, மருந்தாக்கற் துறை ஆகியவற்றில் இந்தியா முதலீடு செய்வதற்காக மோடியின் பயணத்தின் போது ஒத்துக் கொள்ளப்பட்டது. இந்தியாவிற்கும் மத்திய ஆசியாவிற்கும் இடையில் பாக்கிஸ்த்தான் இருக்கின்றது. தேர்க்மெனிஸ்த்தானும் கஜகஸ்த்தானும் ஈரானுடன் ஒரு தொடருந்துப் பாதையை உருவாக்கியதை இந்தியா தனக்குச் சாதகமாகப் பார்க்கின்றது. ஈரானும் இந்தியாவும் அண்மைக்காலங்களாக தமக்கிடையிலேயான உறவை விருத்தி செய்து கொண்டிருக்கின்றன.

சீனாவும் மத்திய ஆசியாவும்
மத்திய ஆசியாவில் பல எரிபொருள் மற்றும் கனிம வள அகழ்வுகள்செய்வதற்கான முதலீடுகளை சீனா நீண்ட காலமாகச் செய்து வருகின்றதுசீ்னாவின் புதிய தரைவழிப் பட்டுப்பாதையாகக் கருதப்படும் ஒரு வளையம் ஒரு பாதை (“One Belt, One Road”) என்னும் திட்டம் 2013-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டதில் இருந்து பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான தெருக்கள், குழாய்கள், தொடருந்துப்பாதைகள் போன்ற பல கட்டுமானங்களில் சீனா முதலிட்டுள்ளது. சீனாவிற்கும் மத்திய ஆசிய நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 2000-ம் ஆண்டு 1.8பில்லியன் டொலர்களாக இருந்து 2013-ம் ஆண்டு 50பில்லியன்கள் டொலர்களாக உயர்ந்துள்ளது. 2008-ம் ஆண்டு உருவான உலகப் பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து சீனாவில் பயனற்றுக் கிடக்கும் பல இயந்திரங்களும் உபகரணங்களும் மத்திய ஆசிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டு பெரும் கட்டுமான வேலைகள் அங்கு நடைபெறுகின்றன. ஆனால் சீனாவின் புதிய பட்டுப்பாதை மத்திய ஆசியாவை இரசியாவிடமிருந்து பறிக்கும் நடவடிக்கையாக இரசியாவால் பார்க்கப் படுகின்றது. இரசியாவின் யூரோ ஏசியன் ஒன்றியத்தில் மத்திய ஆசிய நாடுகள் எல்லாவற்றையும் இணைத்துக் கொள்ள இரசியா விரும்புகின்றது. ஒரு வளையம் ஒரு பாதைக்கு என சீனா பெருமளவு நிதியை ஒதுக்கியுள்ளது. பட்டுப்பாதைத் திட்டத்திற்கு என 40பில்லியன் டொலார்களும் ஆசிய உள்கட்டுமான முதலீட்டு வங்கிக்கு என 100 பில்லியன் டொலர்களும் சீனா ஒதுக்கியுள்ளது. பொருளாதார வீழ்ச்சியைக் கண்டு கொண்டிருக்கும் இரசியாவால் இதற்குப் போட்டியாக முதலீடு செய்ய முடியாது. சீனாவின் ஒரு வளையம் ஒரு பாதைத் திட்டத்தை ஒரு பொருளாதார ஆக்கிரமிப்புத் திட்டமாக முதலில் பார்த்த சில மத்திய ஆசிய அரசியல் ஆய்வாளர்கள் சீனாவின் முதலீடுகள் கொண்டு வந்த பொருளாதார மேம்பாடுகளை அடுத்து தமது கருத்துக்களை மாற்றத் தொடைங்கியுள்ளனர். இருந்தும் பல மத்திய ஆசிய நாடுகள் முழுமையாக சீனாவிலோ அல்லது இரசியாவிலோ தங்கியிருப்பதை விரும்பவில்லை என அமெரிக்கா உணர்கின்றது. அதனால் தனக்கும் அங்கு  ஆதிக்கம் செலுத்த ஓர் இடம் கிடைக்கும் என அமெரிக்கா நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு காத்திருக்கின்றது. ஆனால் சீனா போகும் இடமெல்லாம் சீன ஊழலும் போவதுண்டு. கிரிகிஸ்த்தானில் ஒரு தெருக் கட்டமைப்புத் திட்டத்திற்கான ஒப்பந்தம் சீன நிறுவனம் ஒன்றிற்கு வழங்கியதில் பெரும் ஊழல் நடந்ததால் 2016 ஏப்ரல் மாதம் கிரிகிஸ்த்தானின் தலைமை அமைச்சர் பதவி விலக வேண்டியிருந்தது. ஊழல் காரணமாக கஜகஸ்த்தானின் பல மாகாணங்களில் சீன முதலீட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

சீனக் கடன்
சீனா குறைந்த வட்டிக்குக் கடன் கொடுத்து மத்திய ஆசிய நாடுகளில் செய்யும் கட்டுமானங்களில் சீனத் தொழிலாளர்கள் பணிகளுக்கு அமர்த்தப் படுவது உள்நாட்டு மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ மாட்டாது. இதை உணர்ந்த தேர்க்மெனிஸ்த்தான் அரசு சீனா தனது நாட்டில் செய்யும் கட்டுமானங்களில் 70 விழுக்காடு உள்ளூர் மக்களையே பணிக்கு அமர்த்த வேண்டும் எனப் பணித்தது. உக்பெஸ்த்தானிய அரசு முகாமையாளர்களை மட்டுமே சீனாவில் இருந்து கொண்டு வரலாம் தொழிலாளர்கள் எல்லோரும் உள்நாட்டவர்காளாகவே இருக்க வேண்டும் எனப் பணித்தது. சீனா வெளி நாடுகளின் தனது கட்டுமான வேலைகளில் பணிக்கு அமர்த்தும் சீனர்களில் பெரும்பாலோனோர் சிறையில் இருந்து தண்டனைக்காலம் முடிந்து விடுவிக்கப் பட்ட கைதிகளாகும். இதுவும் குற்றச் செயல்களை அதிகரிக்கின்றன. கிரிகிஸ்த்தானிலும் தஜிகிஸ்த்தானிலும் சீனா செய்யும் கட்டுமான வேலைகளில் பணிபுரிபவர்களில் 70 விழுக்காட்டினர் சீனர்கள். மேலும் அதற்குத் தேவையான மூலப் பொருள்களில் 60 விழுக்காடு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் ஒரு புறம் குறைந்த வட்டிக்குப் பணம் கொடுத்து மறுபுறம் அந்த கடன் பணத்தில் பெரும்பகுதி சீனர்களின் கைகளில் போய் முடிகின்றது. இந்தச் சுரண்டலின் விளைவாக கிரிகிஸ்த்தானின் மொத்த வெளிநாட்டுக் கடனான 3.6பில்லியன் டொலர்களில் 1.3 பில்லியனகள் சீனாவிடமிருந்து பெற்ற கடனாகும். ஆனால் கிரிகிஸ்த்தானும் தஜிகிஸ்த்தானும் தமது இருப்பிற்கு சீன மூதலீடுகளிலும் உதவிகளிலும் பெரிதும் தங்கியிருக்கின்றன. இப்படிக் கடன் வாங்குவதை பன்னாட்டு நாணய நிதியம் ஊக்குவிப்பது மத்திய ஆசிய நாடுகளில் இரசியா ஆதிக்கத்திலும் பார்க்க சீன ஆதிக்கத்ட்தை ஐக்கிய அமெரிக்கா விரும்புகின்றது என்பதைக் காட்டுகின்றது. மத்திய ஆசிய நாடுகளிற்கு சீனா கொடுக்கும் கடன்களில் பெரும்பகுதி திரும்பப்பெற முடியாமல் போகும் என்பதை சீனா அறியும். அதனால் தான் கொடுத்த கடனுக்கு மாற்றீடாக அந்தந்த நாடுகளின் வளங்களை அகழ்வு செய்யும் உரிமையை சீனா பெற்றுக் கொள்கின்றது.


2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனின் கிறிமியாவை தன்னுடன் இணைத்தமையைத் தொடர்ந்து மத்திய ஆசிய நாடுகள் தமது பாதுகாப்பை இட்டு அதிக கரிசனை கொள்ளத் தொடங்கின. சீனாவை மத்திய ஆசிய நாடுகள் முழுமையாக நம்பவில்லை ஆனால் பொருளாதார ரீதியில் ஒரு தற்காலிக தங்கிடமாகும். இரசியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஓர் ஆதிக்கப் போட்டி மத்திய ஆசியாவில் தோன்றவுள்ளது. சீனாவையும் இரசியாவையும் மத்திய ஆசியாவில் ஆதிக்கப் போட்டியிட வைப்பது அமெரிக்காவைப் பொறுத்தவரை சௌகரியமான ஒன்றாகும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...