Tuesday 9 August 2016

புது டில்லியின் எலும்பு சுவைக்கும் நாய்களே இது இனக்கொலை இன்றேல் எது இனக்கொலை?


எண்பத்தி மூன்றில் இலங்கையில் நடந்தது
இனக்கொலை என்றார் இந்திரா காந்தி
இந்திய சட்டவாளர் சபையும் சொன்னது
அது இனக்கொலையே இனக்கொலையே என்று
ஆனால் இங்கு சில சில்லறைக்  கைக்கூலிகள் எல்லாம் 
இலங்கையில் இனக்கொலையே நடக்கவில்லையென 
ஏதோ எல்லாம் சின்னத்தனமாகச் சொல்கின்றன
எலும்புத் துண்டு நக்குவதற்காகச் சொல்கின்றன 

எங்கோ இருந்து துரத்தப்பட்ட
கயவர் கூட்டம் எம்மண்ணில் குடியேறியது
கட்டுப்பாடற்ற கலப்புத்  திருமணங்களால்
கலாச்சார விட்டுக் கொடுப்புகளால்
கயமை தாண்டவமாடியதால்
ஓர் இனம் உருவாகியது சிங்களமென்றானது
தூய தமிழினம் சிறுபான்மையாகியது
குணரத்தினம் குணரட்னாவாக
குணசிங்கங்கள் குணசிங்கவாக
தென்னகக்கோன்கள் தென்னக்கோன்களாகின
வளவன்கள் வளவ ஆகின
கமம் என்னும் கிராமங்கள் கம என்றாக
குளம் என்னும் பொருள் கொண்ட வில்கள் வில ஆக
இனம் ஒன்று அழிவுக்குள்ளானது சிறுபான்மையானது
இனக்கொலை தொடங்கி ஆயிரம் ஆண்டுகளாகிவிட்டது
ஈனர்கள் இன்றும் தொடர்கின்றனர் இனக்கொலை
பெரும்பான்மையினத்தை வந்தேறு குடிகள்
சின்னா பின்னமாக்கிச் சிறுபான்மையாக்கியது
இனக்கொலை இன்றேல் எது இனக்கொலை

ஆண்டாண்டு நாம் ஆண்டு வந்த பூமியில்
வியாபாரத்துக்கென வந்த ஐரோப்பியர்
எம்மைப் பிரித்தனர் பிளவுபடுத்தினர்
காட்டிக் கொடுக்கும் கயமை மிகு
துரோகிகளைப் பயன்படுத்தினர்
எம் ஆட்சியைப் பறித்தினர்
எம் இறைமையை இல்லாததாக்கினர்
நம் நிலங்களான நன்னிலங்களை
ஒன்று படுத்தினர் ஒரு நாடாக்கினர்
அவர் எம்மை விட்டுச் செல்கையில்
எம் இறைமை எம்மிடம் இல்லை
இது இனக்கொலை இன்றேல் எது இனக்கொலை

எத்தனை இடர்கள் எத்தனை துயர்கள்
எத்தனை ஒதுக்கல்கள் எத்தனை புறக்கணிப்புக்கள்
அத்தனைக்கும் நடுவிலும் தனித்துவம் இழக்காமல்
தமிழினம் நின்றதால் தனித்துவம் அழிக்க
தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வந்தனர்
அதை அமைதியாக ஆனால் ஆணித்தரமாக
தட்டிக் கேட்ட தலைவர்களை
காடையரை ஏவிக் கால்களால் உதைத்தனர்
உள்ளாடையுடன் பாராளமன்றத்தில்
கொதிந்தெழுந்து உரையாற்றினார் நாகநாதன்
அமிர்தலிங்கம் தலையில் இருந்து
இரத்தம் வடிய வடிய உரையாற்றினார்
கடைகளைக் கொழுத்தினர் கன்னியரைச் சிதைத்தனர்
குழந்தையைக் கொதிதாரில் போட்டுக் கொன்றனர்
கோவில் பூசாரியை உயிருடன் கொழுத்தினர்
இத்தனை கொடுமைகளின் பின்னரும்
இது இனக் கொலை இன்றேல்
எதுதானிங்கு இனக்கொலை

1961இல் தமிழ் நிலமெங்கும் அரசப் பொறியை
அசையாமற் செய்தது அறப்போர்
சிலாபத்து வேங்கை ஃபிரான்ஸிஸ் பெரேரா
என்னும் தமிழ்ப்போராளி கச்சேரி வாசலில் இருந்து
காவற்துறை இழுத்து எறிய எறிய15 தடவைகள்
மீண்டும் மீண்டும் பாய்ந்து வந்து படுத்தான்
கச்சேரிக் கதவு திறக்கவிடாமல் தடுத்து நின்றான்
ஆண்களும் பெண்களுமாய் அடி வாங்கி உதை வாங்கி
அகிம்சை வாழியில் அனைத்த்தும் தாங்கி
கச்சேரியை நடக்கவிடாமல் தடுத்தனர்
பின்னர் சிங்களப் படையினரை
சிறிமாவோ ஏவி தமிழர் அடக்கினர் அறப்போரை
அது இனக்கொலை இன்றேல்
இங்கு எதுதான் இனக்கொலை

எழுபத்தி நான்கில் தமிழை ஆராய்ச்சி செய்ய என
யாழ்நகரில் கூடிய தமிழர்தம் கூட்டத்தை
தடியடி செய்து கண்ணீர்ப் புகை வீசி
மின்கம்பியை வேண்டுமென அறுத்து
அப்பாவிகளை வதைத்து அக்கிரமம் புரிந்து
பதினொருவரைக் படுகொலை செய்ததமை
இனக்கொலை இன்றேல் எது இனக்கொலை

காலம் காலமாய் வளர்த்து
கலைத்தாயின் பெட்டமாய்ப் பேணி
கல்வித் தாகத்தின் தடாகமாய் போற்றி
தமிழர் துதித்த கோவிலாம் நூலகத்தை
ஓரீரவில் அமைச்சர்கள் இருவர்
சாம்பல் ஆக்கிய கொடுமையைக் கண்டு
பட்டது போதும் போராட்டம் இனி வேண்டாம்
என சலிப்படையவில்லை தமிழர்கள்
தொடர்ந்தூ போராடினார்கள்
நாம் தோற்கடிக்கப்பட்ட இனம்
எனச் சொல்லவில்லை
தொடர்ந்து போராடினார்கள்
இனக்கொலை இன்றேல்
எதுதான் இனக்கொலை

ஐந்து சின்னஞ்சிறு கைக்குழந்தைகள்,
நாற்பத்திரெண்டு பத்துவயதுச் சிறுவர்கள்,
85 பெண்கள், 28 முதியவர்கள்
அத்தனை பேரையும் அநியாயமாகச்
சத்துருக்கொண்டானில் கொன்றது
கருணைக்கொலையா இனக்கொலையா


அரச படைகள் போட்ட துண்டுப் பிரசுரத்தை நம்பி
நவாலிப் பேதுருவானவர் தேவாலயத்திலும்
முருக மூர்த்தி கோவிலிலும் தஞ்சமடைந்த
அப்பாவிகள் மேல் புக்காராவில் வந்து
குண்டு போட்டுக் கொன்றது
இனக்கொலை இன்றேல்
எது இனக்கொலை


வல்வை நூலகத்திற்கு மக்களைச்
செல்லுமாறு பணித்து விட்டு
பின்னர் அதைக் குண்டு வைத்துத் தகர்த்ததும்
குமுதினியில் பயணம் செய்த
அப்பாவி மக்களை நடுக்கடலில் மறித்து
கூரிய கத்திகளால் கதறக் கதறக் குத்திக் கொன்றதும்
வெலிகடைச் சிறைச்சாலையில் கொன்றதும்
களுத்துறைச் சிறைச்சாலையில் கொன்றதும்
யாழ் குருநகரில் கொன்று ஒழித்ததும்
அம்பாறை உடும்பன் குளத்தில் கொன்று குவித்ததும்
பிந்துருவேவாவில் பிணந்தின்னிகள் செய்ததும்
கிளாலிப் படகில் உயிர்களை கிள்ளி எறிந்ததும்
இனக்கொலையின்றேல்
எது இனக்கொலை

ஈழ விடுதலைக்கான
படைக்கலப் போராட்டம்
எமது உறுதியான போராட்டம்
மற்ற நாடுகளின் விடுதலைக்கு
முன் மாதிரியாகும் என
ஆதிக்க நாடுகள் அச்சம் கொண்டன
சக்கர வியூகத்தில் அபிமன்யுவைப் போல
எம் போராளிகளை இருபதிற்கு மேற்பட்ட நாடுகள்
வஞ்சகமாகச் சூழ்ந்து கொண்டன
அயல் நாட்டுப் படைகள் இருபதினாயிரம்
பின்கதவால் வந்து ஈழத்தில் இறங்கியது
உணவும் போகாமல் நீரும் போகாமல்
கடலிலும் நிலத்திலும் காவல் காத்தன
தமிழர்க்கு எதிரான இந்தக்கொலைகள்
இனக்கொலை இன்றேல் எதுதான் இங்கு இனக்கொலை

வல்லிபுனம் எனும் கல்விவனம் தேடி வந்த
அல்லி இனம் எனும் தமிழ்ப் பெண்கள்
பயிற்சிப் பட்டறை  நாடி வந்த கதையது
பட்டறையல்ல கல்லறை இதுவென
புக்காராக்கள் சீறிவந்த சதியது
பட்டுடல்கள் சிதைய குண்டுகள்
வீசிச் சிங்களம் கொன்ற கதியது
தமிழர் வரலாறு மறக்குமோ
வஞ்சியரைக் கொன்ற வடுக்களை
தமிழனின் வலிகளை வரலாறு மறக்குமோ
அது இனக்கொலை இன்றேல் இங்கு எதுதான் இனக்கொலை

கொத்தணிக் குண்டுகள் போட்டனர்
பொஸ்பரஸ் குண்டுகளும் வீசினர்
கண்மூடித்தனமாக கண்ட இடமெங்கும்
எறிகணை மழை பொழிந்தனர்
பாடசாலைகளும் அழிந்தன
மருத்துவ மனைகளும் தரை மட்டமாகின
வழிபாட்டிடங்களும் சிதைக்கப்பட்டன
அது இனக்கொலை இன்றேன் இங்கு எதுதான் இனக்கொலை

ஒரு சிறு நிலப்பரப்பினுள் மூன்று இலட்சம் பேரை முடக்கி
உணவு மறுத்தி நீர் தடுத்து மருந்துகள்தானும் மறுத்து
குண்மழை பொழிந்து கொன்ற கொடூரம்
காயப்பட்டோரை உயிருடன் புதைத்த கொடூரம்
சரணடைய வந்தோரைச் சல்லடையாக்கிய கொடூரம்
எஞ்சியோரைத் தடுத்து வைத்து வதை செய்த கொடூரம்
இனக்கொலை இன்றேல் எதுதான் இங்கு இனக்கொலை

வந்தாரின் வயிறு நிறைத்த விருந்தோம்பிகள்
வன்னி நில முத்துக்கள்
குடிக்கக் கூட நீரின்றி வதங்கினர்
ஒரு சிறு நிலப்பரப்புக்குள்
ஒடுக்கப்பட்டனர்
எத்தன ஆண்டுகள் ஆயினும் ஆறுமோ
அந்த வடுக்கள் முள்ளிவாய்க்கால்
மகாவம்ச சிங்களத்தின் மிருகத்தனத்தின் வடிகாலானது
ஆளவிடக்கூடாது தமிழனை என்னும்
ஆரிய சாதியத்தின் உயிரோடை ஆனது
அது இனக்கொலை இன்றேன் இங்கு எதுதான் இனக்கொலை

டப்ளின் தீர்ப்பாயம் சொன்னது இனக்கொலை என்று
பிறீமன் தீர்ப்பாயமும் சொன்னது இனக்கொலை என்று
அமெரிக்கச் சட்டப் பேராசிரியர் பொயிலும்
சொன்னார் இனக்கொலை என்று
புது டில்லி வீசும் எலும்புத் துண்டை
சுவைக்கும் நாயிற் கேவலமானோரே
இது இனக்கொலை இன்றேல்
இங்கு எதுதான் இனக்கொலையாம்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...