Monday 4 July 2016

துருக்கியின் உலக உறவும் ஐரோப்பிய ஒன்றியமும்


ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டுமா என்ற விவாதத்தில் 77மில்லியன் மக்களைக் கொண்ட துருக்கி  ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தால் அங்கிருந்து பெருமளவு இஸ்லாமியர்கள் பிரித்தானியாவில் வந்து குடியேறுவார்கள் என்ற பூச்சாண்டி பரவலாக முன்வைக்கப்பட்டது.  இந்த வகையான பரப்புரைக்கு துருக்கி தனது அதிருப்தியையும் தெரிவித்திருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி இணைவதற்கு ஆதரவு தெரிவித்த நாடான பிரித்தானியா இப்போது விலகிவிட்டபடியால் துருக்கி ஒன்றியத்தில் இணைவது என்பது கேள்விக் குறியாகிவிட்டது. 

துருக்கியா கொம்பா?
மேற்கு நாடுகள் எனச் சொல்லப்படும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் வட அமெரிக்க நாடுகளும் துருக்கியை அதன் புவிசார் கேந்திர முக்கியத்துவத்திற்காக கவனமாகக் கையாள்கின்றன.  துருக்கி மற்றைய இசுலாமிய நாடுகளிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. அது ஒரு குடியரசு நாடு தேர்தல் மூலம் தனது தலைமை அமைச்சரைத் தேர்ந்தெடுக்கின்றது. சம்பிரதாய குடியரசுத் தலைவர் கூட தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.  அதன் அரசு மதசார்பற்றது. மேற்கு நாடுகளின் படைத்துறைக் கூட்டமைப்பான நேட்டோவில் உறுப்புரிமை கொண்ட ஒரே இசுலாமிய மக்களைப் பெரும்பான்மையினர்களாகக் கொண்ட நாடு.  அமெரிக்காவுடன் நீண்டகால நட்புறவைக் கொண்ட நாடு. எண்ணிக்கை அடிப்படையில் நேட்டோவின் இரண்டாவது பெரிய படைத்துறையைக் கொண்ட நாடு துருக்கியாகும். துருக்கியின் பொருளாதாரமும் வலுவுள்ள நிலையில் உள்ளது. 

புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த துருக்கி
பூகோள ரீதியிலும் துருக்கி ஒரு முக்கியமான இடம் வகிக்கிறது. எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கு, போல்க்கன் பிராந்தியம், வளைகுடாப் பிராந்தியம், கோக்கஸ் பிராந்தியம் ஆகியவற்றிக்கு அண்மையில் துருக்கி அமைந்துள்ளது. மேற்குலகின் கிழக்கு வாசல் துருக்கி என விபரிக்கப்படுகிறது. அத்துடன் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் ஆபிரிக்காவிற்கும் இடையில் உள்ள அனட்டோலியன் குடாப் பிராந்தியத்தில் துருக்கி இருக்கிறது. மேற்குலகிற்கும் இசுலாமிய உலகிற்கும் ஒரு பாலமாக துருக்கி செயற்படுகிறது. கருங்கடல், மத்திய தரைக்கடல், ஈகன் கடல் (Aegean Sea) ஆகியவற்றிடை துருக்கி அமைந்துள்ளது. மத்திய கிழக்கில் இருந்தும் வளைகுடாவில் இருந்தும் ஐரோப்பிய நாடுகளிற்கான எரிபொருள் விநியோகத்திற்கு துருக்கி முக்கியத்துவம் பெறுகிறது. துருக்கி ஈகன் கடலையும் கருங்கடலையும் இணைக்கும் துருக்கி நீரிணையை மூடினால் இரசியா மத்திய தரைக்கடல் பக்கம் அடியெடுத்து வைக்க முடியாது.  மத்திய தரைக்கடலின் படைத்துறைச் சமநிலையைத் தீர்மானிக்கும் நாடாக துருக்கி இருக்கின்றது. இரசியாவினதும் ஈரானினதும் பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் 2010-ம் ஆண்டு நேட்டோப் படையினரின் மிகவும் உணர்திறன் மிக்க X-band radar stationஐ துருக்கியில் நிறுவ துருக்கி ஒத்துக் கொண்டது. நேட்டோவின் Very High Readiness Joint Task Forceஇற்கு படையினரை இணைக்கவும் துருக்கி ஒத்துக் கொண்டது. 
.
ஆசியாவா ஐரோப்பாவா?
தனது நிலப்பரப்பில் 97 விழுக்காட்டை ஆசியாக் கண்டத்தில் வைத்துள்ள துருக்கி ஒரு ஐரோப்பிய நாடு அல்ல. அங்கு மக்களாட்சி நிலவினாலும் அது மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போன்ற ஒரு வளர்ச்சியடைந்த மக்களாட்சி அல்ல. அங்கு ஊடக அடக்கு முறைகள், மனித உரிமை மீறல்கள், சிறுபான்மையினருக்கு எதிரான அடக்கு முறைகள் மோசமாக இருக்கின்றன. பல்கேரியா, ருமேனியா, குரோசியா, ஹங்கேரி, போலாந்து ஆகிய வளர்முக நாடுகள் ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கின்றன. இந்த நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதால் ஒன்றியமும் சிரமப் படுகின்றது இந்த நாடுகளும் சிரமப்படுகின்றன. ஆனால் இவை சிறிய நாடுகள். 77மில்லியன் மக்களைக் கொண்ட வளர்முக நாடான துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைத்தால் அது பாரிய பிரச்சனைகளைக் கொண்டு வரும். 2050-ம் ஆண்டு ஜேர்மனியையும் முந்தி ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடாக துருக்கி அமையும். அப்போது அதன் ஆதிக்கமும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகரிக்கும். இதனால் ஜேர்மனி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை ஜெர்மனி விரும்பாது. துருக்கியின் கலாச்சாரமும் வரலாறும் மத்திய ஆசியாவுடனும் வட ஆபிரிக்காவுடனும்தான் தொடர்பு பட்டிருக்கின்றது. ஐரோப்பாவைப் பொறுத்தவரை வரலாற்று அடிப்படையில் துருக்கி ஓர் அந்நிய ஆக்கிரமிப்பாளர்.

பிள்ளையார் திருமணம் போல 
.துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான விண்ணப்பத்தை 1987-ம் ஆண்டு செய்திருந்தது. தற்போது துருக்கியில் ஐரோப்பிய ஒன்றிய விவகாரத்திற்கு என ஓர் அமைச்சும் இருக்கின்றது. 1995-ம் ஆண்டு சுங்கவரி ஒன்றிய ஒப்பந்தம் ஒன்றை துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்திருந்தது. 1999-ம் ஆண்டு துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான விண்ணப்பதாரி நாடாக ஒன்றியம் ஏற்றுக் கொண்டிருந்தது. பிரித்தானியாவும் பிரான்ஸும் துருக்கிக்கு அப்போது ஆதரவு தெரிவித்திருந்தன. ஆனால் சரியாகச் சொல்லப் போனால் ஆதரவு தெரிவிப்பது போல் நடைத்திருந்தன. ஐக்கிய அமெரிக்காவும் துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதா இல்லையா என்ற கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பிற்கான பரப்புரை நடந்த போது பிரித்தானியத் தலைமை அமைச்சர் டேவிட் கமரூன் துருக்கி இப்போது ஒன்றியத்தில் இணைக்கப்பட மாட்டாது என்றார். அவரது நிதியமைச்சர் 3000-ம் ஆண்டு வரை துருக்கி ஒன்றியத்தில் இணைவது சாத்தியமில்லை என்றார். துருக்கியின் மனித உரிமை மீறல்கள், ஊடகங்களுக்கு எதிரான அடக்கு முறை, பயங்கரவாத ஒழிப்புச் சட்டம், கிருத்தவர்களுக்கு எதிரான அரச் நிலைப்பாடு போன்றவை ஐரோப்பிய ஒன்றியத்தின் நியமங்களுக்கு முரணானவை என ஜேர்மனி சொல்கின்றது. இவற்றைச் சாட்டாக வைத்து துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை அது இழுத்தடிக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்திற்காக துருக்கி தனது பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மாட்ட மாற்றது என்றார் துருக்கியின் ஐரோப்பிய ஒன்றிய விவகாரங்களுக்கான அமைச்சர். 

மாற்று வழி தேடும் துருக்கி
அரபு லீக், ஆசியான், பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, தென் பொதுச் சந்தை(ஆர்ஜெண்டீனா, பிரேசில், பரகுவே, உருகுவே, வெனிசுவேலா) ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு அமைப்புக்களுடன் துருக்கி தனது உறவை அண்மைக்காலங்களாக மேம்படுத்தி வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் தனது உறுப்புரிமை விண்ணப்பத்தை இழுத்தடித்து வருவதால் துருக்கி சீனா உருவாக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு நிறுவனம் (Shanghai Cooperation Organization - SCO) மற்றும் பிரிக்ஸ் எனப்படும் பிரேசில், இரசியா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு ஆகியவற்றில் இணைய ஆர்வம் காட்டியது. வரும் காலத்தில் நேட்டோவிற்கு எதிரான ஒரு படைத்துறைக் கூட்டமைப்பாக உருவாகும் சாத்தியமுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் கூட்டமைப்பில் துருக்கி இணைவது நேட்டோவிற்கும் பெரும் சவாலாக அமைவதுடன். மத்திய தரைக்கடலில் அமெரிக்காவிற்கு சாதகமாக உள்ள படைத்துறைச் சமநிலையை மாற்றவும் கூடியது. துருக்கி வரும் காலத்தில் ஒரு படைத்துறைக் கூட்டமைப்பாக உருவாகக் கூடிய ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பில் துருக்கி இணைவதை சீனா பெரிதும் ஆதரிக்கின்றது. G-20 நாடுகளின் கூட்டத்திற்கு முன்னோடியான பிரிக்ஸ் கூட்டமைப்பின் அரசத் தலைவர்களின் கூட்டம் 2015 நவம்பரில் துருக்கியில் நடைபெற்றது. இஸ்ரேலையும் துருக்கி விட்டு வைக்கவில்லை. இஸ்ரேலுடன் துருக்கி தனது அரசுறவியல் உறவைப் புதுப்பித்துள்ளது. 2010-ம் ஆண்டு துருக்கியில் இருந்து காசா விடுதலை அமைப்பும் துருக்கிய மனித உரிமை அமைப்பு ஒன்றும் இணைந்து காசாவில் உள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற படகுத் தொடர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் பத்து துருக்கியர்கள் கொல்லப்பட்டனர். அதைத்தொடர்ந்து இஸ்ரேலுடனான அரசுறவுகளை துருக்கி துண்டித்தது. இப்போது அதற்கான இழப்பீடாக பத்து மில்லியன் டொலர்களைப் பெற்றுக் கொண்டு இஸ்ரேலுடனான உறவைத் துருக்கி புதுப்பித்துள்ளது. துருக்கியில் இருந்து காசா நிலப்பரப்பிற்கு மனிதாபிமான உதவிகளை இஸ்ரேலியத் துறைமுகத்தினூடாக எடுத்துச் செல்ல இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது. இது நடந்த ஒரு சில நாட்களுக்குள் துருக்கியின் முக்கிய நகரமான இஸ்தான்புல் விமான நிலையத்தில் குண்டுத்தாக்குதல் செய்யப்பட்டது. சிரியாவில் தாக்குதல் செய்த இரசியாவின் எஸ்.யூ-24 போர் விமானம் எல்லை மீறி துருக்கிக்குள் வந்தது எனச் சொல்லி அதை தனக்குச் சொந்தமான அமெரிக்க F-22 விமானத்தில் இருந்து ஏவுகணை வீசி சுட்டு வீழ்த்தியது. துருக்கி 2015 நவம்பரில் செய்த இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இரசியாவிற்கும் துருக்கிக்கும் இடையிலான உறவு மோசமடைந்த நிலையில் துருக்கியால் பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பிலோ அல்லது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிலோ இணைவதற்கான கதவுகள் அடைக்கப்பட்டன எனச் சொல்லலாம். 

ஐரோப்பாவிற்கு செல்லும் வழி துருக்கி
சிரியாவிலும் ஈராக்கிலும் இருந்து புகலிடத் தஞ்சம் கோருவோர் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு பெருமளவில் படையெடுத்தபோது அதைத் தடுப்பதற்கு துருக்கியின் உதவி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குத் தேவைப்பட்டது. துருக்கி அதை வாய்ப்பாகப் பயன்படுத்தி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் ஒரு உடன்படிக்கையைச் செய்து கொண்டது. அதன் படி துருக்கி இந்த அகதித் தஞ்சம் கோருபவர்களை ஐரோப்பாவிற்குச் செல்லாமல் தடுக்க வேண்டும், ஐரோப்பிய ஒன்றியம் துருக்கியின் உறுப்புரிமை விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்வதைத் துரிதப்படுத்துவதுடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் துருக்கியர்களுக்கு வீசா இன்றி நுழைய அனுமதிக்க வேண்டும். ஆனால் இது நடந்த சில நாட்களுக்குள் துருக்கிக்கு முகத்தில் அறைந்தது போல துருக்கி ஆர்மீனியர்களைக் கொன்றமை ஓர் இனக்கொலை என ஜேர்மனியின் பாராளமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இரசியாவிற்கு நீட்டிய நட்புக்கரம்
துருக்கிய வெளியுறவுத் துறை அமைச்சர் இரசியா துருக்கியின்  Incirlik airbaseஐ ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசுக்கு எதிரான் தாக்குதலுக்குப் பயன்படுத்தலாம் என்ற சமிக்ஞையை 2016 ஜூலை 4-ம் திகதி வெளிவிட்டார். 2015 நவம்பரில் துருக்கி இரசிய விமானத்தைச் சுட்டு வீழ்த்திய பின்னார் துருக்கிக்கு எதிராக இரசியா பொருளாதாரத் தடையை விதித்திருந்தது. அதன் பிறகு 2016 ஜுலை முதலாம் திகதி இருதரப்பும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். துருக்கியில் சுய நிர்ணய உரிமை கோரிப் போராடும் குர்திஷ் மக்களுக்கு இரசியா உதவி செய்யத் தொடங்கினால் துருக்கி பெரும் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். சிரியாவிலும் ஈராக்கிலும் தமக்கு என நிலப்பரப்புக்களை வைத்திருக்கும் குர்திஷ் போராளிகள் துருக்கியில் செயற்படும் குர்திஷ் போராளிகளுக்கு பயிற்ச்சியும் படைக்கலன்களும் வழங்கக் கூடிய நிலையில் தற்போது இருக்கின்றார்கள். இதனால் இரசியாவுடன் ஒரு வலுவற்ற நிலையிலே துருக்கி பேச்சு வார்த்தை நடத்துகின்றது. 

தொடர்ந்து ஏமாற்றப்படும் துருக்கி
முதலாம் உலகப் போரின் பின்னர் துருக்கி தான் அரபு நாடுகளுடனோ அல்லது ஈரானுடனோ மத அடிப்படையில் இணைய விரும்பவில்லை என்றும் கலாச்சார அடிப்படையில் மேற்கு நாடுகளுடன் இணைந்து நடப்பதாகவும் மேற்கு நாடுகளுக்கு உறுதி மொழி வழங்கியிருந்தது. அதை முழுமையாக மேற்கு நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. சோவியத்தின் விரிவாகத்தில் இருந்து துருக்கியைப் பாதுகாக்க அதை நேட்டோவில் ஒரு உறுப்பு நாடாக இணைந்து கொள்ள அனுமதிக்கப் பட்டது. இதுவரை காலமும் துருக்கிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை வழங்குவது என்ற கரட்டைக் காட்டி மேற்கு நாடுகள் ஏமாற்றிக் கொண்டிருந்தன. ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னோடியான ஐரோப்பிய வர்த்தக சமூகம் ஆரம்பித்ததில் இருந்தே துருக்கி அதில் இணைய அக்கறை காட்டி வந்தது. ஆனால் இதுவரை ஒரு முழுமையான உறுப்புரிமை அதற்கு வழங்கப்படவில்லை. வழங்கும் நிகழ்தகவு மிகவும் குறைவாகவே உள்ளத்து. இப்படிப்பட்ட பின்னணியில் இரசிய விமானத்தைச் சுட்டு வீழ்த்திய பின்னர் துருக்கிக்கான வெளியுறவுத் தெரிவு ஐக்கிய அமெரிக்கா மட்டுமே.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...