Monday 21 March 2016

துடித்த ஈரானிய மக்களும் வெடித்த ஏவுகணைகளும் -

1979-ம் ஆண்டு ஈரானில் ஏற்பட்ட மதவாதப் புரட்சியின் பின்னர் ஈரான் ஒரு இஸ்லாமியக் குடியரசாக்கப் பட்டது. அங்கு மதவாதமும் மக்களாட்சியும் இணைந்த ஒரு ஆட்சி முறைமை நிலவுகின்றது. 2016-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26-ம் திகதி ஈரானில் நடந்த இரண்டு தேர்தல்கள் கடந்த 37 ஆண்டுகளில் நடந்த மற்றப் பல தேர்தல்களிலும் பார்க்க முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் மக்கள் அதிக அக்கறை காட்டுவனவாகவும் உலக அரங்கில் பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டிவிட்ட தேர்தால்களாகவும் அமைந்துள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் பாராளமன்றத் தேர்தலும் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் 88 உறுப்பினர்களைக் கொண்ட அறிஞர்கள் சபைக்கான தேர்தலுமே நடைபெற்றன.
ஈரானின் பல அதிகார மையங்கள் உள்ளன:
1. மக்களால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப் படும் அதிபர்
2. மக்களால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படும்290 உறுப்பினர்களைக் கொண்ட பாராளமன்றம். ஈரானியப் பாராளமன்றம் Islamic Consultative Assembly என அழைக்கப்படும்.
3. மக்களால் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை  88 உறுப்பினர்களைக் கொண்ட அறிஞர்கள் சபை.
4. அறிஞர் சபையால் தேர்ந்தெடுக்கப்படும் உச்சத் தலைவர்
5. உச்சத் தலைவரால் நியமிக்கப்படும் 12 உறுப்பினர்களைக் கொண்ட அரசமைப்புப் பாதுகாவலர் சபை (The Guardian Council of the Constitution)
6. ஈரானியப் படைத்துறை

உச்சத் தலவரே உச்சமானவர்
தற்போது உச்சத் தலைவராக இருப்பவர் அலி கமெய்னி. ஆரம்பத்தில் இருந்தவர் அயத்துல்லா கொமெய்னி.தேர்தல்களில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களும் 12 உறுப்பினர்களைக் கொண்ட Guardian Council எனப்படும் காப்பாளர்கள் சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். காப்பாளர் சபையில் உள்ள பன்னிரண்டு உறுப்பினர்களில் அறுவர் இஸ்லாமியச் சட்டத்தில் வல்லவர்களாக இருக்க வேண்டும். எஞ்சிய ஆறு பேரும் பல்வேறு சட்டத் துறைகளில் வல்லவர்களாக இருக்க வேண்டும்.   இவர்கள் பன்னிருவரையும் உச்சத் தலைவர் நியமிப்பார். அதிகாரம் மிக்க இச்சபையை நியமிக்கும் உச்சத்தலைவரே ஈரானில் அதிகாரம் மிக்கவராவார். ஈரானின் சிறப்புப் படையணியான Quds Force ஈரானில் உள்ள ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அதிகார மையமாகும். காப்பாளர் சபை உறுப்பினரை நியமிக்கும் உச்சத் தலைவர் ஈரானில் அதிகாரம் மிக்கவராவார். ஈரானின் படைத்தளபதியும் உச்சத் தலைவர் ஆவார். அவரே நீதித் துறையில் உயர் பதவிகளில் இருப்போரையும் அரச ஊடகத் துறைக்குப் பொறுப்பானவரையும் நியமிக்கின்றார். உச்சத் தலைவர் பாராளமன்றம் இயற்ற முயலும் சட்டங்களையும் நிறுத்த முடியும்.

அனுமதி பெற்ற வேட்பாளர்கள் மட்டுமே
தேர்தலில் போட்டியிட வந்த சீர்திருத்தவாதிகளில்பலரை அரசமைப்புப் பாதுகாவலர் சபை (The Guardian Council of the Constitution) நிராகரித்திருந்தது. இது வாக்காளர்களை விரக்தியடைய வைத்து பலர் தேர்தலைப் புறக்கணிக்கலாம் என எதிர்பார்க்கப் பட்டது. ஈரான் ஒரு மக்களாட்சி முறைமையிலான குடியரசு அல்ல என விமர்சிக்கப் படுவது இந்த பாதுகாவலர் சபைக்கு இருக்கும் வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமையினாலாகும். நாட்டின் மொத்த அறிஞர் சபை உறுப்ப்புரிமையான 88இல் 16 தலைநகர் ஈரானுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.தேர்தலில் போட்டியிட முன்வந்த எல்லாப் பெண்களையும் பாதுகாவலர் சபை நிராகரித்திருந்தது. ஏற்கனவே உறுப்பினர்களாக இருந்த 50பேர் மீண்டும்போட்டியிட அனுமதிக்கப் படவில்லை.

மக்கள் அக்கறை காட்டினர்
55 மில்லியன் வாக்காளர்களில் 34மில்லியன் பேர் வாக்களிப்பில் பங்குபற்றினர். இம்முறை தேர்தல் சீர்திருத்தவாதிகளுக்கும் பழமைவாதிகளுக்கும் இடையிலான கடும் போட்டியாகக் கருதப்படுகின்றது. மூன்றாம் தரப்பினரான மிதவாதிகள் பழமைவாதிகளுடன் இணைந்து கொண்டனர். எதிர்பார்த்ததிலும் பார்க்க அதிக அளவு வாக்காளர்கள்கள் வாக்களித்த ஈரானியத் தேர்தலில் இளையோர் அதிக அக்கறை காட்டியுள்ளனர். ஈரான் மீதான மேற்கு நாடுகளின் தடைகள் நீக்கப் பட்ட பின்னர் நடந்த தேர்தல் என்றபடியால் இந்தத் தேர்தல் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. ஈரானில் முதலீடு செய்யத் துடிக்கும் மேற்கு நாடுகள் ஈரானியத் தேர்தலை அக்கறையுடன் அவதானித்தன. இஸ்ரேலுக்கு எதிரான கடுமையான நிலைப்பாடு, இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு ஈரான் கொடுக்கும் ஆதரவு ஆகியவை ஈரான் மீது மேற்கு நாடுகள் வைக்கும் குற்றச் சாட்டுகளில் முக்கியமானவை. தற்போதைய உச்சத் தலைவர் அயத்துல்லா அல கொமெனி உடல் நலம் குன்றியிருப்பதால் அவரது இடத்திற்குப் புதியவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கொண்ட 88 உறுப்பினர்களைக் கொண்ட அறிஞர்கள் சபைக்கான தேர்தலும் முக்கியத்துவம் பெற்றிருந்தது.  ஈரானிய நகரவாசிகள் ஈரானில் ஒரு சீர்திருத்தம் அவசியம் எனக் கருதுகின்றனர். சிலர் ஈரான் ஒரு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்ற கருத்தையும் கொண்டனர்.

சீர் திருத்தத் துடிக்கும் ரௌஹானி

2013-ம் ஆண்டு நடந்த ஈரானின் அதிபர் தேர்தலில் ஈரானில் சீர்திருத்தம் வேண்டும் என்ற கொள்கையுடைய ஹசன் ரௌஹானி எதிர்பாராத விதமாக வெற்றி பெற்றார். அவர் தனது சீர்திருத்தத்தை முன்னெடுக்க முடியாதவகையில் பாராளமன்றத்தில் பழமைவாதிகள் பலர் இடம்பிடித்திருந்தனர். 2016-02-29-ம் திகதி நடந்த ஈரானியப் பாராளமன்றத் தேர்தலில் பல பழமைவாதிகள் தோல்வியடைந்துள்ளனர். ஈரானில் அரசியல் கட்சிகள் இல்லை. பொதுக் கொள்கையுடைய வேட்பாளார்கள் ஒருமித்து தேர்தல் பரப்புரை செய்வர். கட்சிகள் இல்லாதபடியால் இந்தக் கொள்கையுடைய இத்தனைபேர் வெற்றி பெற்றார்கள் எனச் சொல்ல முடியாது. ஈரானியத் தேர்தலில் சீர்திருத்தவாதிகள் வெற்றி பெற்றார்கள் என மேற்குலக ஊடகங்கள் பறைசாற்றுகின்றன. ஆனால் ஈரானிய பழமைவாதிகளின் ஊடகங்கள் அதைப் பச்சைப் பொய் என்கின்றன. தெஹ்ரான் நகரில் மட்டும் சீர்திருத்தவாதிகள் வெற்றி பெற்றனர் என்பதை பழமைவாதிகள் ஒத்துக் கொள்கின்றனர். அது வெளிநாட்டுத் தீய வலுக்களுடன் இணைந்து பெற்ற வெற்றி எனவும் அவர்கள் விமர்சிக்கின்றனர். நாடாளவிய முடிவுகளில் தாமே வெற்றி பெற்றதாகவும் பழமைவாதிகள் சொல்கின்றனர். நிபுணர்கள் சபையிலும் தாமே பெரும்பான்மை வலுவுடன் இருப்பதாகவும் அவர்கள் முழங்குகின்றனர். சீர்திருத்தவாதிகளிடையே உள்ள மிதவாதிகள் பெரும் சீர்திருத்தவாதிகள் அல்லர். அத்துடன் தீவிர சீர்திருத்தவாதிகளைத் தேர்தலில் போட்டியிட பாதுகாவலர் சபை அனுமதிக்கவுமில்லை. 290 உறுப்பினர்களைக் கொண்ட பாராளமன்றத்தில் பழமைவாதிகள் 112 இடங்களிலும் சீர்திருத்தவாதிகளும் மையசாரிகளும் 90 இடங்களிலும் ஏனையவர்கள் 29 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளதாக சில மதிப்பீடுகள் சொல்கின்றன. பாராளமன்றத்தில் சீர்திருத்தவாதிகள் வெற்றி பெற்றாலும் பாராளமன்றத்தால் நிறைவேற்றப்படும் எந்தச் சட்டமும் பாதுகாவலர் சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

உச்சத்தலைவர் உடன்படார்
உச்சத் தலைவர் அயத்துல்லா கமெய்னி சீர்திருத்தவாதிகளிடம் நாட்டை ஓப்படைத்தால் அது தனக்கு தானே வேட்டு வைத்ததாக அமையும் என்பதையும் நன்கறிவர். அதே வேளை அதிபர் ஹசன் ரௌஹானி மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படுத்தப் பட வேண்டும் என்பதையும் அறிவார். மேற்கு நாடுகளின் முதலீடுகளிலும் பார்க்க சீனாவிடமிருந்து பெரு முதலீட்டை ஈரானல் பெற முடியும்.

ஐக்கிய அமெரிக்கா ஈரான் மீதான பொருளாதாரத் தடையை நீக்கியமைக்கு சீர்திருத்தவாதி ஹசன் ரௌஹானியின் கைகளை வலுப்படுத்துவதும் ஒரு காரணமாகும். அதனால் ரௌஹானி தொடர்பாகவும் அவரது சீர்திருத்தம் தொடர்பாகவும் உச்சத் தலைவர் அயத்துல்லா கமெய்னி மிகவும் கவனமாகவே இருப்பார். ஈரான் அமெரிக்காவுடன் யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பாகச் செய்த உடன்படிக்கையை கடுமையாக விமர்சித்த பலர் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்கள். கடந்த பாராளமன்றத்தின் அவைத்தலைவராக இருந்தவரும் அவர்களில் ஒருவராகும். ரௌஹானியின் நண்பரும் முன்னாள் அதிபருமான Akbar Hashemi Rafsanjani தேர்தலில் பெருவெற்றியடைந்துள்ளார்.

வோட்டு உனக்கு வேட்டு என்னிடம்
பாராளமன்றத் தேர்தலில் ஈரானிய மதவாதிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து. அதிபர் ரௌஹானிக்கு உலக அரங்கில் தலையிடி கொடுக்கும் வகையில் ஈரானியப் படைத் துறையினர் எறியியல் ஏவுகணைகளை (ballistic missile) வீசிப் பரிசோதனை செய்தனர். ஈரானுடன் ஐந்து வல்லரசு நாடுகளும் ஜேர்மனியும் 2015-ம் ஆண்டு செய்து கொண்ட உடன்பாட்டின்படி இப்படி ஒரு பரிசோதனை செய்யக் கூடாது என அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆட்சேபனை தெரிவித்தன. அவை மீண்டும் ஈரான் மீது பொருளாதாரத் தடை கொண்டு வருவோம் என்கின்றன. பொருளாதாரத் தடை நீக்கத்தால் மக்கள் மத்தியி புகழ் பெற்ற அதிபர் ரௌஹானிக்கும் அதற்காக அவரை ஆதரிக்கும் மக்களுக்கும் ஈரானிய மதவாதிகளும் படைத் துறையினரும் தம்மிடம் தான் படைவலு இருக்கின்றது என்ற செய்தியை ஏவுகணைப் பரிசோதனை மூலம் தெரிவித்துள்ளனர். அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையின் வெளியுறவுக் கொள்கைகான குழுவின் தலைவர்

மற்ற அதிகார மையங்கள் அனுமதிக்காது.
பெரும் எரிபொருள் இருப்பும் பலதரப்பட்ட உற்பத்தித் துறையும் நன்கு கல்வியறிவு பெற்ற மக்களும் ஈரானை ஒரு சிறந்த முதலீட்டுக் களமாகச் சுட்டி நிற்கின்றன. ஈரானின் மக்கள் தொகையில் 60 விழுக்காட்டினர் 30 வயதிலும் குறைந்தோரே. தற்போது உள்ள உலக வயோதிபர் பிரச்சனையில் இது ஈரானுக்கு ஒரு வாய்ப்பான நிலையாகும். அதிபர் ரௌஹானியால் ஈரானைப் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீட்க சில சீர்திருத்தங்களைச் செய்ய முடியும். ஆனால் சமூகச் சீர்திருத்தங்களைச் செய்வதற்கு மற்ற அதிகார மையங்கள் அனுமதிக்காது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...