Wednesday 25 November 2015

இரசிய விமானத்தை ஏன் துருக்கி சுட்டு விழுத்தியது?

சிரிய உள்நாட்டுப் போரின் புவிசார் அரசியல் போட்டியின் ஓர் அம்சமாக இரசியாவின் SU-24 போர் விமானம் துருக்கியால் சுட்டு வீழ்த்தப் பட்டுள்ளது. துருக்கிய வான் பரப்பினுள் இரசிய விமானங்கள் பறப்பதற்கு எதிரான ஆட்சேபனை 2015 செப்டம்பர் மாதம் இரசியப் படையினர் சிரியாவில் இறங்கியதில் இருந்தே துருக்கியால் தெரிவிக்கப் பட்டுள்ளன. வெறும் வான் வெளி அத்து மீறல்களுக்காக மட்டும் இரசிய விமானம் சுட்டு வீழ்த்தப் படவில்லை.

துருக்கிக்கும் இரசியாவிற்கும் இடையிலான புவிசார் ஆதிக்கப் போட்டி பல நூற்றாண்டுகள் நீண்டது. போல்கன் பிராந்தியம் முதல் கருங்கடல் வரை பரந்தது.  இரசியா கிறிமியா்வைத் தன்னுடன் இணைத்ததில் உக்ரேனுக்க்குக்கு அடுத்த படியாக அதிக அதிருப்தி அடைந்த நாடு துருக்கியே. கிரிமியாவில் வாழும் துருக்கி மொழி பேசும் டார்ட்டர் சமூககத்தவர்களை இரசியா நடத்தும் விதமும் துருக்கியை ஆத்திரமடைய வைத்தது. பல டார்ட்டர் அறிஞர்களும் செயற்பாட்டாளர்களும் கிறிமியாவில் இருந்து நாடுகடத்தப் பட்டுள்ளனர்.1516-ம் ஆண்டில் இருந்து 1923-ம் ஆண்டுவரை சிரியா துருக்கியின் உதுமானியப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்த ஒரு நாடாகும். தற்போது உக்ரேனில் இருந்து இரசியா பறிக்க முயலும் டொன்பாஸ் பிரதேசமும் துருக்கியின் ஆட்சியின் கீழ் இருந்த பிரதேசமாகும்.

சிரியாவில் 22 இலட்சம் முதல் 30இலட்சம் வரையிலான துருக்கியர்கள் வசிக்கின்றார்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளாக பல துருக்கியர்கள் அரபுக்காளாக மாற்றப்படுவாதால் உண்மையான துருக்கியர் தொகையை அறிய முடியவில்லை. சிரியாவில் முதல் படைக்கலப் போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் துருக்கியர்களே. 2011-ம் ஆண்டு உருவான அரபு வசந்தத்தை ஒட்டி சிரியாவில் உருவான உள்நாட்டுப் போரை குர்திஷ் மக்களைப் போலவே சிரியாவில் வாழும் துருக்கியர்களும் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு துருக்கியிடமிருந்து படைக்கல உதவி பண உதவி கிடைக்கின்றன. 1st Coastal Division, the 2nd Coastal Brigade and the Sham Brigade ஆகியவை சிரியாவில் வாழும் துருக்கியர்களுக்காகப் போராடும் முக்கிய அமைப்புகளாகும்.

சிரியாவில் உள்ள துருக்கியர்களில் அதிகமானோர் லதக்கியா மாகாணத்தில் வாழ்கின்றார்கள். அங்கு அதிபர் பஷார் அல் அசாத்தின் இனக் குழுமமான அலவைற் மக்களே பெரும்பான்மையினராகும். லதக்கியாவிலேயே இரசியாவின் படையினர் போய் இறங்கியுள்ளனர். அங்கிருந்தே இரசியப் போர் விமானங்கள் தாக்குதல்களில் ஈடுபடுகின்றன. இரசியப் போர்விமானங்கள் ஐ எஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்துவதிலும் பார்க்க சிரியாவில் உள்ள அமெரிக்கா ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்கள் மீது துருக்கியர்கள் மீதும் அதிக தாக்குதல்களை மேற்கொள்கின்றார்கள். இவர்கள் வசம் அமெரிக்காவின் தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் பல உள்ளன. இவை சிரிய அரச படையினருக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன. அதனால் இந்த ஏவுகணைகளைக் கொண்ட இடங்களில் இரசியா அதிக தாக்குதல்களை மேற்கொள்கின்றன. இதனால் பல அப்பாவி துருக்கியர்கள் சிரியாவில் கொல்லப் படுவது துருக்கிய மக்களை ஆத்திரப் படுத்துகின்றது .  2015 நவமபர் 22-ம் திகதி துருக்கியில் உள்ள இரசியத் தூதுவரை அழைத்த துருக்கிய அரசு லதக்கியா மாகாணத்தில் வாழும் துருக்கியர்கள் மீது இரசிய விமானங்கள் குண்டு வீசுவதற்கு தனது ஆட்சேபனையைத் தெரிவித்திருந்தது. பின்னர் 24-ம் திகதி இரசிய விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டது. வெறும் வான் வெளி அத்து மீறல் மட்டும் இரசிய விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டதற்குக் காரணம் அல்ல.



சிரியாவில் உள்ள துருக்கியப் போராளிகளுக்கு அமெரிக்காவின் சிஐஏயும் ஆதரவு வழங்கி வருகின்றது. ஆனால் அசாத்தின் எதிரிகள் எல்லோரும் ஐ எஸ் அமைப்பின் ஆதரவாளர்களே என்பதே சிரியாவின் நிலைப்பாடு. இரசியாவும் அதையே கருதுகின்றது. இரசியாவிற்கு மத்தியதரைக் கடலில் உள்ள ஒரே பிடி சிரியாவாகும். அதை இழக்க அது விரும்பவில்லை. மத்திய தரைக்கடலில் ஒரு வல்லரசாக வேண்டும் சிரியாவில் இருந்தும் ஈராக்கில் இருந்தும் நிலப்பரப்புகளை அபகரிக்க வேண்ட்டும் என்பது துருக்கியின் நீண்ட நாள் கனவு. 

துருக்கி சுட்டு வீழ்த்திய இரசியாவின் எஸ்யூ-24 போர் விமானங்கள் 23மில்லி மீட்டர் துப்பாக்கிகள் மூன்று பொருத்தப்பட்டவை. அத்துடன் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கக் கூடிய நான்கு லேசர் வழிகாட்டி ஏவுகணைகளையும் கொண்டவை. தேவை ஏற்படின் தொலைக்காட்சி வழிகாட்டி ஏவுகணைகளையும் எடுத்துச் செல்லக் கூடியவை. அதில் சிறந்த ரடார் வசதிகளும் உண்டு. இப்படிப் பட்ட இரசிய விமானத்தை அமெரிக்கத் தயாரிப்பான F-16 விமானத்தைப் பாவித்து துருக்கி சுட்டு வீழ்த்தியுள்ளது. விமானத்தில் இருந்து இரு விமானிகள் பரசூட்டின் உதவியுடன் தரையிறங்க முற்பட்ட வேளையில் துருக்கிக்கு ஆதரவான சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் அவர்களில் ஒருவரை ஜெனிவா உடன்படைக்கைக்கு மாறாகச் சுட்டுக் கொன்றனர். மற்றவருக்கு என்ன நடந்தது என அறியச் சென்ற இரசிய எம் ஐ - 17 உழங்கு வானூர்தி சிரியாவில் உள்ள துருக்கியர் படையணியால் அமெரிக்கா வழங்கிய தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அமெரிக்காவின் F-16 போர் விமானங்கள் 1978-ம் ஆண்டில் இருந்து சேவையில் இருக்கின்றன. பல தடவைகள் இவை மேம்படுத்தப் பட்டன.  The Fighting Falcon என்னும் குறியீட்டுப் பெயரால் அழைக்கப் படும் F-16 போர் விமானத்தை அதன் ஒட்டிகள் அது பாம்பின் தோற்றத்தில் இருப்பதால் அதை Viper என அழைக்கின்றனர். விமான ஓட்டிகளின் பார்வை வீச்சம் அதிக முள்ள இந்தப் போர் விமானத்தில் M61 Vulcan cannon என்னும் சுடுகலனும் 11 பல்வேறு தரப்பட்ட ஏவுகணைகள் பொருத்தக் கூடிய வசதியும் உண்டு. எல்லாக் காலநிலையிலும் செயற்படக்கூடிய F-16 எதிரி இலக்குகளை இலகுவாக அறிவதுடன் எதிரி விமானங்களையும் விரைவில் இனம் கண்டு தாக்கும் திறன் கொண்டது. புவியீர்ப்பு விசையின் எட்டு மடங்கு உந்து வலுவைக் கொண்டதால் இது மற்ற எல்லா விமானங்களிலும் பார்க்க மேன்மையானதாகக் கருதப் படுகின்றது.

இரசியாவின் F-24 விமானம் மணித்தியாலத்திற்கு 1315கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியது. துருக்கியின் எல்லையை அண்மித்தவுடன் அதன் விமானி திசை திருப்பும் செய்கைகளைச் செய்ய முற்பட முன்னர் அது சில கிலோ மீட்டர்களைக் கடந்துவிடும். விழுத்தப் பட்ட விமானத்தின் வழிகாட்டி தனது விமானத்திற்கு எந்த வித எச்சரிக்கையும் விடப்படவில்லை என்றார். ஆனால் துருக்கி பத்துத் தடவைகள் எச்சரிகைகள் விடப்பட்டதாகச் சொல்கின்ற்து.

இரசிய விமானத்தை அமெரிக்காவின் ஆசி இல்லாமால் துருக்கி சுட்டு வீழ்த்தியிருக்க மாட்டாது. சிரியாவில் உள்ள துருக்கியர்களின் நிலைகள் மீது இரசியப் போர் விமானங்கள் அநியாயத்திற்குத் தாக்குதல் செய்கின்றன எனக் கருதும் துருக்கியர்களுக்கு இருக்கும் ஆத்திரத்தை அமெரிக்கா தனக்கு சாதகமாகப் பயன்படுத்தியுள்ளது எனக் கருத இடமுண்டு. இரசிய அதிபர் விளடிமீன் புட்டீனிற்கு ஒரு இழப்பீட்டைச் செய்வதன் மூலம் இரசியர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கைச் சரிக்க தக்க தருணத்தை அமெரிக்கா பார்த்துக் கொண்டிருந்தது. அதற்கு உரிய இடம் சிரியாவே.
இரசியாவிற்குப் பக்கத்தில் உள்ள உக்ரேனில் செய்ய முடியாத ஒன்று தொலைவில் உள்ள சிரியாவில் வைத்துச் செய்யப் பட்டுள்ளது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...