Friday 13 November 2015

ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக குர்திஷ் போராளிகள் கடும் தாக்குதல்

ஐக்கிய அமெரிக்காவின் விமானப் படைகள் குண்டு மழை பொழிய ஐ எஸ் போராளிகளிடமிருந்து பிரதான நெடுஞ்சாலை-47ஐ குர்திஷ் போராளிகள் கைப்பற்றியுள்ளார்கள். குர்திஷ் போராளிகளுடன் இணைந்து யதீஷீயப் போராளிகளும் சிரியாவைச் சேர்ந்த சுனி அரபுக்களும் போராடுகின்றார்கள். இன்னொரு புறம் ஈராக்கிய சியா படையினரும் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராகத் தாக்குதல் செய்கின்றார்கள். இத்தனைக்கும் மேலாக இரசியப் போர் விமானங்கள் சிரியாவில் உள்ள ஐ எஸ் போராளிகள் மேல் குண்டுகளை வீசுகின்றார்கள். அது போதாது என்று ஹிஸ்புல்லா அமைப்பினர் ஈரானியப் படையினர் ஆகியோரும் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராகப் போர் புரிகின்றார்கள்.

பல முனைகளில் பலதரப்பட்ட எதிரிகளால் தாக்கப்படும் சுனி முஸ்லிம் அமைப்பான ஐ எஸ் அமைப்பினர் சிரியப் படைகளுடன் இணைந்து போராடும் லெபனான் தலைநகரை ஒட்டியுள்ள ஹிஸ்புல்லாவின் கோட்டையாகக் கருதப்படும் ஒரு புறநகர்ப் பகுதியில் இரட்டைத் தற்கொடைத் தாக்குதல்களை நடாத்தியுள்ளனர். ஹிஸ்புல்லாவின் அல் மனார் தொலைக்காட்சி இத் தாக்குதல்களில் 41 பேர் கொல்லப்பட்டதாகவும் இரு நூற்றிற்கு மேற்ப்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவித்தது. இறந்தோர் தொகை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

சிரியாவில் உள்ள ராக்கா நகரையும் மேற்கு ஈராக்கில் உள்ள மொசுல் நகரும் ஐ எஸ் அமைப்பினரின் கோட்டைகளாகும். ரக்கா நகரிலேயே அவர்களின் தலைமைச் செயலகம் இருக்கின்றது. இரு நகர்களையும் இணைக்கும் நெடுஞ்சாலை-47 சின்ஜார் மலைப்பகுதியூடாகச் செல்கின்றது. இந்த மலைப் பகுதியைக் கைப்பற்றினால் ஐ எஸ் அமைப்பினரின் நிலப்பரப்ப்பைப் பொறுத்தவரை அதன் முதுகெலும்பை முறித்தது போலாகும்.  ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரான மொசுல் நகரில் உள்ள எண்ணெய் கிணறுகள் ஐ எஸ் அமைப்பினரின் தங்கச் சுரங்கங்களாகும். அவர்கள் அவற்றில் இருந்து பெரும் தொகைப்பணத்தை வருமானமாகப் பெறுகின்றார்கள்.  அமெரிக்க விமானங்கள் தற்போது சிரியாவில் ஐ எஸ் அமைப்பினர் வசமுள்ள எண்ணெய்க் கிணறுகள் மீது தமது தாக்குதல்களைத்  தீவிரப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே அமெரிக்க விமானங்கள் செய்த தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களை ஐ எஸ் இன் பொறியியலாளர்கள் இலகுவாகச் சீர் செய்து விட்டனர். இதனால் இப்போது கடுமையான சேதங்களை விளைவிக்கக் கூடிய தாக்குதல்கள் செய்யப்படுவதுடன் எரிபொருள்களை எடுத்துச் செல்லும் பெரிய வண்டிகள் மீதும் தாக்குதல்கள் நடாத்தப்படுகின்றன.

ஈராக்கின் ஒரு பகுதியான சின் ஜான் மலைப் பகுதியை 2014-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஐ எஸ் அமைப்பினர் அதிரடியாகக் கைப்பற்றினர். இதனால் அங்கு வாழ்ந்த யதீஷீயர்கள் சொல்ல முடியாத கொடுமைகளுக்கு ஆளானார்கள். அவர்கள் கண்டபடி கொல்லப்பட்டு சிறுமிகள் உட்படப் பல பெண்கள் பாலியல் அடிமைகளாக்கப் பட்டனர். இது யதீஷியர்களின் நெஞ்சி ஆறாத வடுவாக இருக்கின்றது. இவர்கள் ஐ எஸ் அமைப்பினரைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டு இருந்தார்கள். இவர்களின் ஆத்திரத்தை ஐக்கிய அமெரிக்கா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. அத்துடன் தமக்கு என ஒரு அரசு வேண்டும் என நீண்டகாலமாகப் போராடிக் கொண்டிருக்கும் குர்திஷ் மக்களையும் அமெரிக்கா தனது பக்கம் சேர்த்துக் கொண்டது. சிரியாவில் உள்ள சுனி முஸ்லிம்களிற்குப் போர்ப்பயிற்ச்சி கொடுத்து அது பயனற்றதாகிப் போனதால் அமெரிக்கா குர்திஷ் மக்கள் பக்கம் அதிக கவனம் செலுத்தியது.

2015-ம் ஆண்டு நவம்பர் 12-ம் திகதி வியாழக் கிழமை குர்திஷ் மக்களின் பெஷ்மேர்கா படையினர் ஆறாயிரம் பேரும் 1500 யதீஷியர்களுமாக 7500 போராளிகள் அமெரிக்க வான் படையினரின் உதவியுடன் சின்ஞார் நகரில் உள்ள ஐ எஸ் போராளிகளின் நிலைகள் மீது கடும் தாக்குதல்களை மும்முனைகளில் நடத்தினர். அவர்கள் மீது பதில் தாக்குதல் தொடுக்க மகிழூர்திகளில் வந்த ஐ எஸ் தற்கொடைப் போராளிகள் மீது தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் வீசி  அவர்களின் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. முதலில் சின் ஞார் நகரை அடுத்த கபாரா கிராமம் ஐ எஸ் போராளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டது. பின்னர் பல முனைகளிலும் பெஷ்மேர்காப் படையினர் துரிதமாக முன்னேறினர். ஐ எஸ் அமைப்பினர் பின் வாங்கி ஓடினர். இறுதியில் எந்தவித எதிர்ப்பும் இன்றி சின்ஜார் நகரத்தை பெஷ்மேர்காப் படையினரும் யதீஷீயர்களும் கைப்பற்றினர்.

குர்திஷ் மக்களிடையே பல போராளிகள் அமைப்புக்கள் உள்ளன. அதில் பெஷ்மேர்கா போராளிகளும்  PKK எனப்படும் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியும் முக்கியமானவை. ஐ எஸ் நிலைகளின் மீது தாக்குதல் நடத்த முன்னர் கைப்பற்றப் படும் இடங்களை யார் வைத்திருப்பது எனபது தொடர்பாக இவர்களிடையே பெரும் முறுகல் ஏற்பட்டது. தாக்குதலில் PKK போராளிகள் பங்குபற்ற வேண்டாம் என பெஸ்மேர்காப் போராளிகள் தெரிவித்தனர். இதனால் தாக்குதல் தாமதப் பட்டது. அமெரிக்கப் படைத் துறை நிபுணர்கள் கால நிலையை துல்லியமாக முன் கூட்டியே கணித்து தமது தாக்குதல் வியூகத்தை வகுத்தனர். மேகமற்ற வானம் பொதுவாக வான் தாக்குதலுக்கு உகந்தது. அத்துடன் பாலைவனத்தில் வான் தாக்குதல் செய்வதற்கு காற்று வேகமாக வீசக் கூடாது. பாலை வனத்தில் காற்று வீசும் போது புழுதி கிளம்பி இலக்குகளை இனம் காண்பதை கடினமாக்கும். ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக அமெரிக்கா நெறிப்படுத்தும் பல முனைத் தாக்குதலுக்கு Tidal Wave II எனப் பெயரிடப்பட்டுள்ளது.

IED எனச் சுருக்கமாக அழைக்கப்படும் improvised explosive device என்னும் கண்ணி வெடிகளை ஐ எஸ் போராளிகள் பெருமளவில் பாவிக்கின்றனர். அவற்றை அகற்றும் கவச வண்டிகளை அமெரிக்கா குர்திஷ் போராளிகளுக்கு வழங்கியிருந்தது. ஆனால் அவை போதிய அளவில் வழங்கப்படவில்லை. அது மட்டுமல்ல அமெரிக்கா மற்றப் படைக்கலன்களைப் போதிய அளவில் குர்திஷ் போராளிகளுக்கு வழங்கவில்லை என்ற குற்றச் சாட்டு பரவலாக முன்வைக்கப் படுகின்றது. இப்படிப்பட்ட மட்டுப்படுத்தப் பட்ட அமெரிக்க ஆதரவுடன் குர்திஷ் போராளிகளும் யதீஷியப் போராளிகளும் தீரத்துடன் தமது எதிரிகளான ஐ எஸ் போராளிகளுக்கு எதிராகப் போராடி நெடுஞ்சாலை-47இல் 35கிலோ மீட்டர்(22மைல்கள்)  தூரமான நிலப்பரப்பைக் கைப்பற்றியுள்ளனர்.2015 நவம்பர் 13-ம் திகதி வெள்ளிக் கிழமை சின் ஜார் நகரில் உள்ள பல உயரிய கட்டிடங்களில் குர்திஷ் போராளிகள் தமது கொடிகளைப் பறக்க விட்டனர்.

ஏற்கனவே பைஜீ என்னும் எரிபொருள் வளம் மிக்க ஈராக்கிய நகரை ஐ எஸ் அமைப்பினர் இழந்துள்ளனர்.  ஈராக்கிய அரச படையினர் ரமாடி நகரை ஐ எஸ் அமைப்பினரிடமிருந்து முழுமையாகக் கைப்பற்ற முடியாமல் திணறுகின்றனர். ஈராக்கியப் படையினர் போதிய தீரத்துடன் போராடுவதில்லை என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

2015 நவம்பர் 11-ம் 12ம் திகதிகளில் இரசிய விமானங்கள் சிரியாவில் 107 பறப்புக்களை மேற்கொண்டு ஐ எஸ் போராளிகளின் 289 நிலைகள் மீது தாக்குதல்கள் நடத்தின. 34 கட்டளை நிலைகள், 16 படைக்கலன்கள் எரிபொருள் கொண்ட குதங்கள், இரு தொழிற்சாலைகள், 50 முகாம்கள், 184 காப்பரண்கள் ஆகியவற்றை தாக்கி அழித்ததாக இரசியா தெரிவித்துள்ளது.

குர்திஷ் இனத்தின் முதுகில் ஏற்கனவே ஐக்கிய அமெரிக்கா பலதடவைகள் குத்தியுள்ளது. இனி ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக அவர்களைப் பாவித்த பின்னர் அமெரிக்கா நேரடியாகக் குத்துமா அல்லது துருக்கியினூடாகக் குத்துமா? சில குர்திஷ் விடுதலைப் போராளிகளின் அமைப்புக்களை ஏற்கனவே அமெரிக்கா பயங்கரவாத அமைப்பு என்ற போலி முத்திரை குத்தியுள்ளது.

முப்பதினாயிரம் போராளிகளைக் கொண்ட ஐ எஸ் அமைப்பை ஒழித்துக் கட்ட நீண்ட காலம் எடுக்கும்.

Tuesday 10 November 2015

மியன்மாரிலும் இலங்கையைப் போலவே ஆட்சி மாற்றம்

சீனாவின் பிடியில் இருந்து இன்னும் ஒரு நாடு ஆட்சிய மாற்றம் என்னும் பெயரில் மீட்கப்படுகின்றது. கொதிக்கும் எண்ணெயில் இருந்து விடுபட்டு எரியும் நெருப்புக்குள் இன்னும் ஒரு நாடு விழுகின்றதா? இலங்கையில் நடந்த ஆட்சி மாற்றத்திற்கும் மியன்மாரில் நடக்கும் ஆட்சி மாற்றத்திற்கும் பல ஒற்றுமைகள் உண்டு. மியன்மாரிலும் சீனா முதலீடுகள் செய்ததுண்டு. சரியாகச் சொன்னால் நாட்டுக்குப் பயன்தராத முதலீடுகள். மியன்மாரிலும் சீனவின் முத்து மாலைத் திட்டத்தில் ஓர் அம்சமாக சிட்வே துறைமுகம் மேம்படுத்தப் பட்டுள்ளது. மியன்மார் சீனாவின் strategic corridor into the Indian Ocean.

கேந்திர முக்கியத்துவம் 

பர்மா என முன்னர் அழைக்கப்பட்ட மியன்மார் ஐந்து கோடியே இரண்டு இலட்சம் (52 மில்லியன்) மக்களைக் கொண்டது. கனிம வளம் மிக்க மியன்மார் சீனா, இந்தியா, பங்களாதேசம், லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் எல்லைகளைக் கொண்டது. இந்து மாக்கடலின் வங்காள விரிகுடாவை மேற்கு எல்லைகளாகக் கொண்டது. உலகிலேயே அதிக அளவு மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் மியன்மார் இருக்கின்றது. அதன் அரசியலமைப்பின் படி வெளிநாட்டுக் கடவுச் சீட்டுக்களைக் கொண்ட இரு மகன்களைக் கொண்ட ஆங் சூ கீ அதன் தலைவராக முடியாது. அந்த அரசியலமைப்பை மாற்ற 75 விழுக்காட்டிற்கு மேலான ஆதரவு அவசியம். 1990-ம் ஆண்டு தேர்தலில் வெற்றியீட்டிய ஆங் சூ கீயை ஆட்சியமைக்க விடாமல் சிறையில் அடைத்தனர் மியன்மாரின் ஜுண்டா எனப்படும் ஆட்சியாளர்கள். ஆங் சூ கீயின் வலதுகரமாகத் திகழ்பவர் வின் தீன் என்னும் ஒரு முன்னாள் படைத்துறை அதிகாரி. இவர் படைத்துறையில் இருந்து விலகி பல பல்தேசிய நிறுவனங்களுக்கு இரகசியத் தரகராகச் செயற்பட்டதன் மூலம் பெரும் பொருள் ஈட்டியவர். படைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு சிகரட் பெட்டியும் விஸ்க்கிப் போத்தலும் கொடுத்து தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொண்டவர். இந்தப் பல்தேசிய நிறுவனங்களுடனான தொடர்பு அவரை பன்னாட்டுச் சமூகம் என்றும் அரச சார்ப்பற்ற தொண்டு நிறுவனங்கள் என்றும் பல உளவுத் துறைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த வாய்ப்புக் கொடுத்திருக்கலாம். அதுவே அவரை ஆங் சூ சீயின் வலது கரமாக்கியும் இருக்கலாம்.

மியன்மாரின் பாராளமன்றம் 224 உறுப்பினர்களைக் கொண்ட மேலவையையும் 440 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையையும் கொண்டது. இரண்டிற்குமான தேர்தல் 2015 நவம்பர் 7-ம் திகதி நடைபெற்றது. மக்களவையின் 440உறுப்பினர்களில் 110 பேரை படைத்துறையின் நியமிப்பர் எஞ்சிய 330 உறுப்பினர் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவர்.

ஒரு குட்டை ஒரே மட்டைகள்
இலங்கையில் பொய்ப்பரப்புரைகள் செய்யப்பட்டு இனக்கலவரங்கள் தூண்டப்படும். பர்மாவிலும் அப்படியே நடக்கும். இலங்கையில் உள்ள பௌத்த தீவிரவாத அமைப்புக்களுக்கும் பர்மாவில் உள்ள பௌத்த தீவிரவாத அமைப்புக்களுக்கும் இடையில் தொடர்பு உண்டு. இரு நாட்டிலும் உள்ள பௌத்த தீவிரவாத அமைப்புக்களுக்கும் நோர்வே, மோஸாட், சி ஐ ஏ ஆகியவற்றுடன் தொடர்பு உண்டு எனக் குற்றம் சாட்டப்படுவதும் உண்டு. நாட்டில் மக்கள் மத்தியில் தனது செல்வாக்கைக் குறைக்க பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்டதாக மஹிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியிருந்தார். ஆனாலும் சில வேறுபாடுகளும் உண்டு.  மஹிந்த ராஜபக்ச போல் பர்மாவின் படைத்துறை ஆட்சித் தலைவர் தெயின் செயின் முரண்டு பிடிக்கவில்லை. அமெரிக்காவின் சொற்படி கேட்கத் தொடங்கினார். அதனால் அவருக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைக்கழகத்தின் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. பக்கத்து நாட்டில் இருந்து படைகள் வந்து இறங்கும் என்ற மிரட்டலும் விடத்தேவையில்லாத ஒரு நிலைமை ஏற்பட்டது. இப்படி தெயின் செயின் வளைந்து கொடுத்ததால் அவரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து விருந்தும் கொடுக்கப்பட்டது.

ஆட்சி மாற்றமும் இனக்கொலையு
ம்
ஒரு நாட்டில் இனக்கொலை நடந்தால் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஆனால் ஒரு நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் அங்கு இனக்கொலை நடக்குமா என்பதை ஒரு கேள்விக்குறியாக்கியுள்ளது மியன்மார் எனப்படும் பர்மாவில் நடப்பவை. மியன்மாரில் சீனாவும் அமெரிக்காவும் பெரும் ஆதிக்கப் போட்டியில் ஈடுபட்டுள்ளன. இலங்கையைப் போல பர்மாவிலும் தேரவாத பௌத்த மதம் அங்குள்ள மக்களில் பெரும்பான்மையோரால் கடைப்பிடிக்கப் படுகின்றது.  அது மட்டுமல்ல இலங்கையில் மஹாவம்சம் போல் பர்மிய பௌத்தர்கள் சாஸன வம்சம் என்னும் வரலாற்று நூலை எழுதியுள்ளார்கள். வெளியாரின் நிர்பந்தங்களாலும் இயக்கத்திலும் அமைதியான தேர்தல் இலங்கையைப் போலவே மியன்மாரிலும் நடந்துள்ளது.

சீன முதலீடு

சீனாவிற்கான எரிபொருள் இறக்குமதியில் பெரும் பகுதி மலேசியாவை ஒட்டியுள்ள மலாக்கா நீரிணையூடாக நடை பெறுகின்றது. உலக வர்த்தகத்தின் முக்கிய திருகுப் புள்ளிகளில் (choking points)  ஒன்றான மலாக்கா நீரிணையில் வைத்து சீனாவிற்கான எரிபொருள் விநியோகத்தையும் சீனாவின் ஏற்றுமதியையும் தடை செய்ய முடியும். இதற்கு மாற்றீடாக பர்மாவினூடாக தனக்கு ஒரு விநியோகப் பாதையை சீனா உருவாக்கியது. இந்தப் பாதை சீனாவின் யுனன் மாகாணத்தில் ஆரம்பித்து பர்மாவின் இரவாடி நதியூடாகச் சென்று பர்மாவின் தலைநகர் சென்று பின்னர் இந்துமாக்கடலை அடைகின்றது. இது மட்டுமல்ல சீனாவின் முத்து மாலைத் திட்டம் பர்மாவின் சிட்வே துறைமுகத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது. பர்மாவின் கனிம வளங்களும் வெளிநாட்டுக் கொள்கையும் சீனாவின் கரங்களிலேயே இருந்தன என விமர்சிப்பதுண்டு. பர்மாவின் கனிம வளங்களை அகழ்வு செய்யும் உரிமத்தையும் இராவாடி நதியில் இருந்து மின் உற்பத்தி செய்யும் உரிமையையும் சீனா தனதாக்கிக் கொண்டது. 2007-ம் ஆண்டு பர்மாவின் கடலில் இயற்கைவாயு ஆய்விற்கான ஒப்பந்தத்தையும் பர்மாவுடன் செய்து கொண்டது. 2009ம் ஆண்டு 2.5பில்லியன் டொலர் பெறுமதியான 2380 கிலோ மீட்டர் நீளமான  எரிபொருள் வழங்கல் குழாயையும் நிர்மானிக்கும் ஒப்பந்தத்தை இரு நாடுகளும் செய்து கொண்டன. இரவாடி நதி மின் உற்பத்தியில் 90 விழுக்காடு சீனாவிற்கே செல்லும் என்பதால் அதற்குப் பலத்த எதிர்ப்பு மியன்மாரில் உருவானது. இதனால் அந்தத் திட்டம் இடை நிறுத்தப்பட்டது. இந்த எதிர்ப்புக்கு யார் தூபமிட்டார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.


2011-ம் ஆண்டு மியன்மாரில் சீன ஆதிக்கமும் முதலீடும் உச்சத்தை அடைந்தது. மியன்மாருக்கான அந்நிய நேரடி முதலீட்டில் 70 விழுக்காடு சீனாவில் இருந்தே வந்தது. இப்போதும் மியன்மாரின் ஏற்றுமதியில் 37 விழுக்காடு சீனாவிற்கானதே. மியன்மாரின் இறக்குமதியில் 30 விழுக்காடு சீனாவில் இருந்தே வருகின்றது.

பரிசு கெட்ட பரிசு பெற்ற ஆங் சூ கீ
மேற்கு நாட்டு ஊடகங்கள் பல தேர்தலில் வெற்றி பெற்ற ஆங் சூ கீயை ஒரு மக்களாட்சியின் தேவதையாக சித்தரித்துக் கொண்டிருக்கின்றன. இதே சித்தரிப்பு மைத்திரிக்கும் ரணிலுக்கும் அவ்வப்போது செய்யப்படுவதுண்டு. சீனா தனது ஆதிக்கத்தை பர்மாவில் அதிகரிக்க அதற்கு எதிரான அமெரிக்காவின் காய் நகர்த்தல்களும் அங்கு ஆரம்பித்தன. அமெரிக்காவின் முக்கிய காயாக திகழ்பவர் ஆங் சூ கி என்னும் பெண்மணி. ஆங் சூ கீயின் தந்தை பிரித்தானிய ஆட்சியின் கீழ் பர்மா இருந்த போது தலைம அமைச்சராக இருந்தவர். பின்னர் 1947இல் இவர் கொலை செய்யப்பட்டார்.  ஆங் சூ கீ 1990 இல் ராஃப்டோ பரிசு, சாக்கரோவ் பரிசு, மற்றும் நோபல் பரிசு (1991) ஆகியவற்றைப் பெற்ற பர்மியப் பெண்மணி. ஐரோப்பிய யூனியன் அமைப்பின் சார்பில் வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான சக்காரோவ் விருது 1990ம் ஆண்டு ஆங்சான் சூ கீ சிறையில் இருந்த போது அவருக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு அவ்விருதினை 2013இல் ஆங் சான் சூ கீ பெற்றுக் கொண்டார். 1992 இல் இந்திய அரசின் சவகர்லால் நேரு அமைதிப் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் 2007 இல் கனடா அரசு இவரை அந்நாட்டின் பெருமைக்குரிய குடிமகளாக அறிவித்தது. இத்தனை பரிசுகளையும் பெற்ற ஆங் சூ கீ பர்மாவில் வாழும் இஸ்லாமியர்களான ரொஹிங்கியர்கள் படுகொலை செய்யப் படும் போதோ நாட்டை விட்டு விரட்டப்படும் போதோ கண்டன அறிக்கை ஏதும் விடவில்லை. அதற்கு அவர் சொல்லும் விளக்கம் "நான் ரொஹிங்கியர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தால் அது நிலைமையை மேலும் மோசமாக்கும். " ஆனால் அவர் வாக்கு வேட்டை அரசியலுக்காகத்தான் மௌனமாக இருக்கின்றார்.


2014-ம் ஆண்டு பர்மிய(மியன்மார்) படைத்துறை ஆட்சியாளரான தெயின் செயின் ஐக்கிய அமெரிக்கா சென்று வெள்ளை மாளிகையில் அதிபர் பராக் ஒபாமாவைச் சந்தித்தார். பல மனித உரிமை அமைப்புக்களினதும் தெயின் செயினால் பாதிக்கப்பட்டவர்களினதும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் இது நடந்துள்ளது.

பர்மாவா மியன்மாரா?
பர்மாவில் பல முசுலிம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டபோது அதைத் தடுக்க எதுவும் செய்யாமல் இருந்தார் அதிபர் தெயின் செயின். அந்த இனக்கொலையாளியை  பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில்  சந்தித்தார். படைத்துறை ஆட்சியாளர்கள் பர்மாவிற்கு வைத்த மியன்மார் என்னும் பெயரை வெள்ளை மாளிகை ஏற்க மறுத்திருந்தது. பின்னர் தன் நிலைப்பாட்டை மாற்றி  மியன்மார் எனச் சொல்லத் தொடங்கிவிட்டது. தீண்டத்தகாத ஆட்சியாளர் என "பன்னாட்டுச் சமூகத்தினரால்" கருதப்பட்ட தெயின் செயின் திடீரென நல்லவராகி விட்டது எப்படி? பத்திரிகைகளில் தனக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தவரை அறுபது ஆண்டுகள் சிறைத்தண்டன வழங்கியவரை ஒபாமா எப்படி வெள்ளை மாளிகைக்கு அழைத்தார்? பர்மாவில் சில அரசியல் சீர்திருத்தங்கள் செய்தது உண்மைதான் ஆனால் இப்போதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை படைத்துறையினரால் கலைக்க முடியும். பர்மாவை சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து விடுவித்து அமெரிக்காவின் சார்பாக மாற்றும் முயற்ச்சிக்கு பர்மிய அதிபர் தெயின் செயின் இணக்கப் பட்டதுதான் இந்த அமெரிக்க பர்மிய ஆட்சியாளர்களுக்கு இடையிலான உறவை உருவாக்கியது.

ராகினிய மாகாணத்தில் இனச் சுத்திகரிப்பு
பர்மாவின் ராகினி மாகாணத்தில் வாழ்ந்த முசுலிம்களை அங்குள்ள பௌத்தர்கள் அரச படையினரின் உதவியுடன் கொன்று குவித்து வீடுகளைக் கொழுத்தித் தரைமட்டமாக்கி பெரும் இனச் சுத்திகரிப்பைச் செய்தனர். பல மனித உரிமை அமைப்புக்கள் இதை ஒரு மானிடத்திற்கு எதிரான ஒரு குற்றமாக கருதுகின்றன. ராகினி மாகாணத்தில் இருக்கும் எரிபொருள் வளமே அங்கு வாழ்ந்த முசுலிம்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் உலை வைத்தது. "பன்னாட்டுச் சமூகம்" சும்மா பார்த்துக் கொண்டிருக்கிறது. மன்னாரில் எண்ணெய் வளம் இருப்பதாக இலங்கை அரசு நம்பியது ஞாபகத்திற்கு வருகிறது. புத்த பிக்குக்க்கள் முசுலிம் மக்களுக்கு எதிரான தாக்குதலை முன்னின்று நடாத்துகின்றனர். 2007இல் இலங்கையில் போர் வேண்டாம் என படையினரும் போர் வேண்டும் என பிக்குகளும் கருதுவதாக ஆய்வுகள் தெரிவித்தன. மிதிவண்டியில் சென்ற இசுலாமியப் பெண் ஓர் 11 வயது பிக்குவின் மீது மோதி அவரது கையில் இருந்த பிச்சாபாத்திரத்தை உடைத்ததால் இனக்கலவரம் மூண்டது எனச் சொல்லப்படுகிறது.

கச்சின் மாகாணத்தில் இனக்கொலை

பர்மாவின் கச்சின் மாகாணத்தில் சிறுபான்மைக் கிருத்தவர்கள் பெரும்பானமை பௌத்தர்களின் அடக்கு முறைக்கு எதிராக பிரிவினைப் போரை ஆரம்பித்தனர். பின்னர் போர் நிறுத்தம் செய்து சுயநிர்ணய உரிமை கோரி சமாதானப் பேச்சு வார்த்தையை 1994இல் ஆரம்பித்தனர் (ஈழத் தமிழர்களைப் போலவே). 14 ஆண்டுகள் இழுபட்ட பேச்சு வார்த்தையின் பின்னர் கச்சின் போராளிகளை படைக்கலன்களை ஒப்படைத்து விட்டு பர்மியப் படையினருடன் இணையும் படி வற்புறுத்தினர். பின்னர் பேச்சு வார்த்தை 2011இல் முறிந்து போர் மூண்டது. (ஈழத்தைப் போலவே). போர் முனைக்கு உணவு மற்றும் மருந்துகள்  செல்வதை பர்மியப் படைகள் தடுத்தன. (ஈழத்தைப் போலவே). போர் முனையில் அகப்பட்ட மக்களுக்கு உணவு போடச் செல்வதாகப் பொய் சொல்லிக் கொண்டு பர்மிய விமானங்கள் அப்பாவி மக்கள் மீது குண்டுகளை வீசின. ( பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மக்களை மீட்பதற்கான போர் என இலங்கை அரசு பொய் சொல்லிக் கொண்டு அப்பாவிகளைக் கொன்று குவித்தது போல். )  போர் நடக்கும் போது அமெரிக்காவும் சீனாவும் தமது கரிசனையைத் தெரிவித்தன. ( ஈழத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் செய்தது போல்). நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூயி அம்மையார் தான் இந்த இனக்கொலையில் தலையிடப்போவதில்லை என்றார். (வாக்கு வேட்டை அரசியல்). 2013 ஜனவரியில் கச்சின் மக்களுக்கு எதிராக விமானத் தாக்குதல் நடத்த வேண்டாம் என்றது ஐக்கிய நாடுகள் சபை. கடுமையான விமானத் தாக்குதலையிட்டு தாம் கவலையடைந்துள்ளதாக தெரிவித்த ஐக்கிய அமெரிக்கா பிரச்சனைக்கு படைத்துறத் தீர்வு கிடையாது எனவும் கூறியது. ( ஈழத்திலும் இதையே சொன்னார்கள்).

மனிதக் கடத்தலாகக் காட்ட முயற்ச்சி

மியன்மாரில் இனக்கொலைக்குத் தப்பி ஓடிய ரொஹிங்கியா மக்களின் பிரச்சனையை வெறும் மனிதக் கடத்தல் செய்பவர்களின் பிரச்சனையாகக் காட்ட மேற்கத்தைய ஊடகங்கள் காட்ட முயன்றன. நடுகடலில் தத்தளிக்கும் ரொஹிங்கியோ மக்கள் தொடர்பாகச் செய்தி வெளிவிட்ட நியூயோர்க் ரைம்ஸ் தெற்காசியாவில் மனிதக் கடத்தல் பயங்கரம் எனத் தலைப்பிட்டுச் செய்தியை வெளிவிட்டது. பர்மாவில் இடப்பெயர்வுக்கு உள்ளான ரொஹிங்கிய இஸ்லாமியர்கள் மனிதக் கடத்தல்காரர்கள் மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றுகின்றார்கள் என நியூயோர்க் ரைம்ஸ் கூறுகின்றது. பர்மாவில் இருந்து மட்டுமல்ல பங்களாதேசத்தில் இருந்தும் மக்கள் தப்பி ஓடுகின்றார்கள் என்பது பெரிதுபடுத்தப் படுகின்றது.

பர்மாவுடன் மனித உரிமைப் பிரச்சனையை எழுப்பினால் அது மீண்டும் சீனா பக்கம் சார்ந்து விடும் என ஐக்கிய அமெரிக்கா அஞ்சியது. வட கொரியாவுடன் மனிதப் பிரச்சனையை எழுப்பிய படியால் அது அமெரிக்காவின் மோசமான எதிரியாக மாறியது. அது போல் பர்மாவும் மாறக் கூடாது என அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் கருதுகின்றார்கள்.  இதானால் மனித உரிமை மீறிய தெயின் செயினை வைத்துக் கொண்டே அவரின் எதிர்ப்பின்றி மியன்மாரில் ஆட்சி மாற்றம் செய்யப்பட்டது. சீனாவுடன் ஆறாயிரம் மைல்கள் எல்லையைக் கொண்ட மியன்மாரில் சீன ஆதிக்கத்தை இல்லாமற் செய்வது இலகுவான செயல் அல்ல. மியன்மார் 1948-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றதில் இருந்தே மியன்மாரின் Wa எனவும் Kachin எனவும் அழைக்கப்படும் ஈர் இனக்குழுமங்களுடன் சீனா நெருங்கிய உறவைப் பேணிவருகின்றது. சீனா நீண்ட கால அடிப்படையில் திட்டமிட்டு செயற்படுவதில் தனது திறமையை பல துறைகளில் நிரூபித்துள்ளது. இலங்கையிலும் மியன்மாரிலும் அதன் நீண்ட காலத் திட்டம் எப்படி இருக்கப் போகின்றது என்பதைப் பார்க்க இன்னும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் எடுக்கலாம்.

Sunday 8 November 2015

சீனாவும் தாய்வானும்: ஈர் அரசுகள் ஒரு நாடு!

1949-ம் ஆண்டு சீனக் குடியரசு என்றும் சீன மக்கள் குடியரசு என்றும் சீனா பிளவு பட்ட பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் முதற் தடவையாக 2015 நவம்பர் மாதம் 7-ம் திகதி சிங்கப்பூரில் சந்தித்து உரையாடியது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி என இருவரும் தெரிவித்துள்ளனர்.  இரு நாடுகளுக்கும் இடையில் தவறுதலாக மோதல்கள் ஏற்படாமல் இருக்க இரு நாடுகளுக்கும் இடையில் அவசரத் தொடர்பாடல் வசதிகள் செய்வதாக இருவரும் ஒத்துக் கொண்டனர்.

தாய்வானில் எதிர்ப்பு
தாய்வான் ஒரு முழுமையான சுதந்திரமான நாடாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள் தாய்வான் தலைநகர் தாய்ப்பேயில் இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். சீனாவின் ஒரு பகுதியே தாய்வான் என சீனப் பொதுவுடமைக் கட்சியினரும் ஆட்சியாளர்களும் கருதுவதற்கு தாய்வானில் பலத்த எதிர்ப்பு உண்டு. சீனாவின் பொருளாதார முன்னேற்றத்தில் பங்கு கொள்வதற்கு அதனுடன் இணைய வேண்டும் எனக் கருதுவோரும் சீனாவில் உண்டு. சீனாவின் பொதுவுடமை ஆட்சியில் மக்களுக்குச் சுதந்திரம் இல்லை. அங்கு எத்தனை பிள்ளைகள் பெறுவது ஒருவர் எந்த நகரத்தில் வேலை செய்வது போன்றவற்றிற்கு அரச கட்டுப்பாடுகள் உண்டு. இதனால் சீனாவுடன் இணைவதை எதிர்ப்பவர்கள் தொகை தற்போது தாய்வானில் அதிகரித்துக் கொண்டே போகின்றது. 

சீனாவின் ஒரு பகுதியே தாய்வான என சீனத் தலைவர் ஜி ஜின்பிங் தாய்வான் தலைவர் மா யின் ஜியோ (Ma Ying-jeou) அவர்களிடம் தெரிவித்ததாக செய்திகள் கசிந்துள்ளன. இருவரும் சந்தித்த போது ஒருவரை ஒருவர் Mister அதாவது திருவாளர் என்று சொல்லியே அழைத்தனர். ஒருவரை ஒருவர் Mr president என அழைத்திருக்க வேண்டும். சீனா தாய்வானை ஒரு தனிநாடாக ஏற்றுக் கொள்ளாததால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

சீனாவை மாவோ சேதுங் பொதுவுடமைப் புரட்சியின் மூலம் 1949-ம் ஆண்டு கைப்பற்றிய பின்னர் அவரால் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்ட சியாங் கே ஷேக் தாய்வான் தீவிற்குத் தப்பிச் சென்று அங்கு ஒரு அரசை அமைத்தார். இருவரும் முழுச் சீனாவும் தம்முடையதே என உரிமை கொண்டாடினர். புரட்சிக்குப் பின்னரும் தாய்வானையே உண்மையான சீனா என ஐக்கிய நாடுகள் சபையும் பல நாடுகளும் அங்கீகரித்திருந்தன. தாய்வான் சீனக் குடியரசு என்றும் பொதுவுடமை ஆட்சி நிலவிய பிரதான சீனா சீன மக்கள் குடியரசு என்றும் அழைக்கப்பட்டன. மேற்கத்தைய ஊடகங்கள் மாவோ சே துங்கின் பொதுவுடமைச் சீனாவை செஞ்சீனா எனவும் அழைத்தன.

1971-ம் ஆண்டு சீனா ஐக்கிய நாடுகள் சபையில் இணைக்கப்பட்டு தாய்வான் வெளியேற்றப்பட்டது. தற்போது தாய்வானை ஒரு நாடாகப் பெரும்பாலான நாடுகள் அங்கிகரிக்கவில்லை. ஆனால் 23 நாடுகள் தாய்வானுடன் சிறப்பு அரசுறவியல் தொடர்புகளைப் பேணுகின்றன.

1979-ம் ஆண்டு சீனா ஐக்கிய அமெரிக்காவிடனும் மற்ற மேற்கு நாடுகளுடனும் சிறந்த உறவை உருவாக்கியது. சோவியத் ஒன்றியம் சீனாவைத் தாக்கலாம் என்ற ஒரு நிலைமை அப்போது நிலவியதால் அமெரிக்காவும் செஞ் சீனாவும் ஒன்றை ஒன்று பாதுகாத்துக் கொள்ளும் ஒப்பந்தம் கைச்சாத்திட்டன. அப்போது சீனாவுடன் அமெரிக்க தனது உறவுக்கான பரிசாக தாய்வானை சீனாவுடன் இணைக்க ஒத்துக் கொள்ளவிருந்தது. ஆனால் தாய்வான் அரசு அமெரிக்கப் பாராளமன்றமான கொங்கிரசின் இரு அவைகளான மக்களவையிலும் மூதவையிலும் செய்த கடும் பிரச்சாரத்தின் விளைவாக தாய்வான் தனித்திருக்க அனுமதி வழங்கப்பட்டது. சீனாவிடமிருந்து தாய்வானை ஐக்கிய அமெரிக்கா பாதுகாக்க ஐக்கிய அமெரிக்கப் பாராளமன்றம் 1979இல் தாய்வான் உறவுச் சட்டம் என்று ஒரு சட்டத்தை உருவாக்கியது. தாய்வான் உறவுச் சட்டத்தில் சீனக் குடியரசு என்ற பதம் பாவிக்காமல் தாய்வானை ஆளும் அதிகாரம் என்ற பதம் பாவிக்கப்பட்டது. ஆனால் அச்சட்டத்தின் படி தாய்வான் ஒரு நாடாக கருதப்பட்டு ஒரு நாட்டுடன் வைத்துக் கொள்ளக் கூடிய இராசதந்திர உறவுகள் யாவும் மேற்கொள்ளலாம்.  வெளி அச்சுறுத்தல்களில் தாய்வானை அமெரிக்கா பாதுகாக்க வேண்டும் என்கிறது அமெரிக்காவின் இந்த தாய்வான் உறவுச் சட்டம். அதனால் இன்று வரை அமெரிக்கா தாய்வானைப் பாதுகாக்கின்றது.  1984-ம் ஆண்டிலிருந்து அமெரிக்க சீன உறவில் விரிசல்கள் ஏற்படத் தொடங்கின. அமெரிக்கா தாய்வான் மீதான சீனாவின் இறைமையை ஏற்க மறுத்து வருகிறது. அமெரிக்கப் பாராளமன்றம் 2007-ம் ஆண்டு வெளிவிட்ட ஆய்வறிக்கை தாய்வான் மீதான சீனாவின் இறைமையை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை மீள் உறுதி செய்தது. அமெரிக்காவின் தாய்வான் உறவுச் சட்டம் சீனாவின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு எனச் சீனா கருதுகிறது.

தாய்வானைக் கைப்பற்ற முயன்ற சீனா
1995இல் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தாய்வான் மீதான சீனப் படையெடுப்பைத் தடுப்பதற்கு அமெரிக்காவின் இரு பெரும் கடற்படைப் பிரிவுகளை தாய்வானுக்கு அனுப்பினார். ஆனால் இன்று சீனா படைத்துறையில் பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. தாய்வானில் அமெரிக்கா இரகசியமாகப் பல நவீன சக்தி மிக்க ஏவுகணைகளை வைத்திருக்கிறது என்று சீனா குற்றம் சாட்டி வருகிறது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை தாய்வான் அதனது மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பல். அமெரிக்காவிடமிருந்து தாய்வான் பல போர் விமானங்களை வாங்கிக் குவித்துள்ளது.

தாய்வானின் சரித்திரம்
தாய்வானை 1623-ம் ஆண்டு டச்சுக்காரர்கள் கைப்பற்றி ஆட்சிய் செய்தனர். பின்னர் 1662-ம் ஆண்டு சீனா டச்சுக்காரர்களை விரட்டி தனது ஆட்சியின் கீழ் தாய்வானைக் கொண்டு வந்தது. 1894-ம் 1895-ம் ஆண்டு நடந்த போரில் ஜப்பான் தாய்வானையும் கொரியாவையும் சீனாவிடமிருந்து பிடுங்கிக் கொண்டது. இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்த ஜப்பானிடம் இருந்து 1952இல் செய்த சான் பிரான்ஸிஸ்கோ உடன்படிக்கையின் படி தாய்வானை ஜப்பானிடம் இருந்து விடுவித்தன. ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பிக்கப்பட்டபோது சீனக் குடியரசு என்று அழைக்கப்பட்ட தாய்வான் அதன் உறுப்பினராக இருந்தது. அபிவிருத்தியடைந்த நாடுகளில் மிக அபிவிருத்தியடைந்த நாடான தாய்வான் உலக வங்கியின் ஓர் உறுப்பினர் அல்ல. கூறிவருகிறது. எந்த ஒரு பன்னாட்டு அமைப்பிலோ அல்லது கூட்டங்களிலோ தாய்வானின் பிரதிநிதிகள் பங்கு பற்றுவதை சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது.

உறவை வளர்த்த இரு சீனாக்கள்
தாய்வான் தன்னை சீனக் குடியரசு என்றும் தாய்வானை சீனா தனது நாட்டின் ஒரு மாகாணம் என்றும் சொல்லி வந்தன. 1992இல் இரு நாடுகளும் உறவுகளை உருவாக்கி வளர்க்க முயன்றன. இதற்காக தாய்வானும் சீனாவும் ஒரு நாடுகள் ஆனால் இரு அரசுகள் என்ற நிலைப்பாட்டை தாய்வான் எடுத்தது. ஆனாலும் இன்று வரை ஒன்றை ஒன்று சந்தேகக் கண்களுடனேயே பார்க்கின்றன.காலப் போக்கில் தாய்வானைத் தன்னுடன் இணைக்கலாம் என சீனா உறுதியாக நம்புகிறது. வளம் குறைந்த தாய்வானிய மக்களிக்கு பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் சீனா இணைய வேண்டிய ஒரு நாடாக மாறலாம் என சீனா நம்புகின்றது.

தாய்வானை நோக்கிய சீனாவின் வியூகம்

இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட சீன ஏவுகணைகள் தாய்வானைக் குறிபார்த்து நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றில் சீனா புதிதாக உருவாக்கிய விமானம் தாங்கிக் கப்பல்களை தாக்கி அழிக்கக் கூடிய DF-21D ஏவுகணைகள் முக்கியமானவை. இவற்றை Anti-Ship Ballistic Missile (ASBM) என அழைப்பர். 35 அடி உயரமும் 15 தொன் எடையும் கொண்ட DF-21D ஏவுகணைகள் 1200மைல்கள் ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்குகள் வேகத்தில் பாயக் கூடியவை. இவை அமெரிக்கக் கடற்படைக்குப் பெரும் சவாலாகும். அமெரிக்கா 2013 மே மாதம் உருவாக்கிய  RIM-162 ESSM "Evolved Sea Sparrow," ஏவுகணைகள் சீனாவின் DF-21D ஏவுகணைகளை அவற்றின் பறப்பின் போது இடை மறித்து அழிக்கக் கூடியவை. 

2013-ம் ஆண்டு சீனா 2013A, 2013B, 2013C என்னும் பெயரில் தனத் பெருமளவு படையினரைக் கொண்ட தாய்வான் ஆக்கிரமிப்புப் பயிற்ச்சிகளைச் செய்துள்ளது. சீனாவின் முப்படைகளும் இதில் ஈடுபடுத்தப் பட்டு உண்மையான சூடுகளுடன் பயிற்ச்சிகள் செய்யப்பட்டன. பெருமளவு படைக்கலன்கள் நகர்வும் இதன் போது பரீட்சிக்கப்பட்டன.

சிங்கப்பூரில் சந்தித்துக் கொண்ட சீனாவினதும் தாய்வானினதும் தலைவர்கள் எந்த வித உடன்படிக்கையிலும் கைச்சாத்திடவில்லை எந்த கூட்டறிக்கையையும் வெளிவிடவில்லை. தற்போது தாய்வானில் ஆட்சியில் இருக்கும் கட்சி சீனாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்ற கொள்கையுடைய கட்சியாகும். எதிர்க் கட்சி தாய்வான் முழுமையான சுதந்திரம் உள்ள நாடாக இருக்க வேண்டும் என்ற கொள்கையுடையது. அதன் செல்வாக்கு தற்போது அதிகரித்து வருகின்றது. 2016-ம் ஆண்டு ஜனவரியில் நடக்க விருக்கும் தேர்தலில் அது வெற்றி பெறும் எனக் கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

தாய்வானிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக உடன்பாட்டை தாய்வானியப் பாராளமன்றம் நிறைவேற்ற முயன்றபோது சூரியகாந்தி இயக்கம் என்னும் இளைஞர்களின் அமைப்பு கடும் எதிர்ப்புக் காட்டியது. அது ஒரு மாதமாக பாராளமன்றத்தை ஆக்கிரமித்திருந்தது.

இரு நாடுகளிற்கும் இடையிலான இடைவெளி நூறு மைல் அகலமான கடலிலும் அகலமனானது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...