Thursday 15 October 2015

இஸ்லாமியத் திவிரவாதிகள் இரசியாவிற்கு எதிராகத் திரும்புவார்களா?

இஸ்லாமிய அரசு அமைப்பு இரசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் எதிராகப் புனிதப் போர் தொடுக்கும்படி உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஒரு ஒலிப்பதிவின் மூலம் விடுக்கப்பட்ட இந்த அழைப்பில் முஸ்லிம்களுக்கு எதிராக சிலுவைப் போர் தொடுத்துள்ள இரு நாடுகளுக்கும் எதிராக இஸ்லமிய இளைஞர்களைக் கிளர்ந்து எழும் படி அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. இதே வேளை சிரியக் கிறிஸ்த்தவப் பேராயர் Jean-Clément Jeanbart மேற்கு நாடுகள் இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் அதிபர் பஷார் அல் அசாத்திற்கு துணை நிற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் சிரியாவில் இரசியத் தலையீட்டையும் வரவேற்றுள்ளார்.

மக்களாட்சி வேண்டி அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிராக உருவான அரபு வசந்தப் புரட்சி சுனி - சியா முஸ்லிம்களிடையேயான மோதலாக மாறி பிராந்திய நாடுகளின் போட்டிக்களமாகி இப்போது வல்லரசு நாடுகளின் நிகராளி மோதல் (Proxy war) களமாகவும் உருவெடுத்ததுடன் இஸ்லாமிற்கும் கிறிஸ்த்தவத்திற்கும் இடையிலான முறுகல் களமாகவும் திரிவு பட்டுள்ளது. சிரிய உள்நாட்டுக் குழப்பம் தொடங்கியதில் இருந்தே அங்கு வாழும் கிறிஸ்த்தவர்கள் அசாத்தின் ஆதரவாகச் செயற்பட்டு வருகின்றனர். அசாத் சிரியாவில் ஒரு மதவாத ஆட்சியை நடத்தவில்லை. 

இரசியத் தலைநகர் மஸ்கோவில் ஐ எஸ் அமைப்பு எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பினால் பயிற்றுவிக்கப்பட்ட தாக்குதலாளிகளைக் கைது செய்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன. 2015 ஒக்டோபர் 11-ம் திகதி ஞாயிற்றுக் கிழமை மஸ்கோவில் உள்ள ஒரு தொடர் வீட்டுத் தொகுதியில் FSB எனப்படும் இரசிய உளவுத் துறையினர் திடீரெனப் புகுந்து சோதனை நடத்திய போது பதினொரு இறாத்தல் எடையுள்ள வெடி பொருட்களைக் கைப்பற்றினர். இவை கைப்பேசிகளில் வைத்து வெடிக்கச் செய்யத் தயாரான நினையில் இருந்தது. இது தொடர்பாக பத்து முதல் பதினைந்து வரையிலானவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். அதில் மூவர் சிரியர்கள் ஆகும் என்கின்றது FSB எனப்படும் இரசிய உளவுத் துறை. மஸ்க்கோவின் தொடரூந்துப் போக்குவரத்தை இலக்கு வைத்து இவர்கள் தாக்குதல் செய்யவிருந்தனர் என்றது FSB. இரசியா சிரியாவில் 2015 செப்டம்பர் 30-ம் திகதி ஐ எஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதல்களைத் தொடங்க முன்னரே இத் தாக்குதலாளிகள் இரசியாவிற்கு சிரியாவில் இருந்து அனுப்பப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இரசியாவில் இரண்டு கோடி இஸ்லாமியர்கள் வாழ்கின்றார்கள்.

இரசியாவின் North Caucasus பிராந்தியத்தில் இருந்து இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிரியா சென்று ஐ எஸ் அமைப்பில் இணைந்து போராடுகின்றார்கள். இவர்களை சிரியாவில் வைத்து அழிப்பதும் இரசியப் படைகள் சிரியாவிற்கு அனுப்பப்பட்டதின் ஒரு நோக்கமாகவும் கருதப்படுகின்றது.


இரசியாவின் செஸ்னியப் பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமியப் போராளியான Abu Omar al-Shishani இறப்பதற்கு முன்னர் தனது தந்தையிடம் ஐ எஸ் போராளிகள் இரசியாவிற்குப் படையெடுப்பார்கள் எனச் சூழுரைத்திருந்தார்.                                                                                                                             

சிரியப் படைகளுக்கு ஏற்பட்ட பின்னடைவால் இரசியப் படைகள் சிரியாவில் தலையிட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இது ஒரு பேச்சு வார்த்தை மூலம் அசாத்தைப் பதவியில் இருந்து அகற்றும் அமெரிக்காவின் சதியைக் குழப்பி விட்டது. இரசியப் படையினர் சிரியாவில் சென்று இறங்கியதுடன் முதல் வேலையாக இந்த ஏவுகணைகளும் அவற்றின் செலுத்திகளும் நிலை கொண்ட இடங்களை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தின. அதனால் மேற்கத்தைய ஊடகங்கள் இரசியா ஐ எஸ் "பயங்கரவாதிகள்" மீது தாக்குதல் நடத்தாமல் மிதவாதக் குழுக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றன என்று குற்றம் சாட்டின. அமெரிக்க ஆதரவு பெற்ற் Tajamu al-Ezzah அமைப்பினரின் மீது இரசிய விமானப் படையினர் தாக்குதல் நடத்தியது பல சிரியர்களை ஆத்திரப்படுத்தியது. வட மேற்குப் பிராந்தியத்தில் உள்ள Talbiseh நகரில் இரசிய விமானங்கள் நடாத்திய குண்டு வீச்சில் பதினேழு அப்பாவிக கொல்லப்பட்டனர். முதலில் எம்மை சிரிய அரச படைகள் கொன்றன. பின்னர் எம்மை ஹிஸ்புல்லா கொன்றது, அதைத்தொடர்ந்து ஈரானியப் படைகள் கொன்றன, இப்போது இரசியர்கள் எம்மைக் கொல்கின்றார்கள். அடுத்து எம்மைக் கொல்ல யார் வருவார்கள். இப்படி ஆத்திர்படுகின்றனர் சிரியர்கள்.

அல் கெய்தாவின் கிளை அமைப்பான ஜபத் அல் நஸ்ரா அமைப்பினர் இரசியாவின் சிரியத் தலையீட்டை இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரான போராகப் பார்க்கின்றார்கள். இரசியாவின் மரபுவழித் திருச்சபை இரசியப் படைகளின் சிரியத் தலையீட்டை ஒரு புனிதப் போர் எனக்கருதுவதையும் அவர்கள் ஆத்திரத்துடன் கருத்தில் கொண்டுள்ளார்கள். மேலும் ஆப்கானிஸ்த்தானிலும் செஸ்னியாவிலும் இரசியப் படைகள் இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கொடூரமான தாக்குதல் செய்தமையையும் அவர்கள் ஆத்திரத்துடன் நினைவு கூர்கின்றனர். ஐ எஸ் அமைப்பு மட்டுமல்ல அல் கெய்தா அமைப்பும் இரசியாவிற்கு எதிராகத் திரும்புகின்றது, சிரியாவில் செயற்படுக் ஜபத் அல் நஸ்ராவின் தலைவர் Abu Mohammed al-Jolani இரசியர்களைக் கொல்லும் படி த போராளிகளுக்கு  உத்தரவிட்டுள்ளார். சிரிய அல் நஸ்ரா அமைப்பில் உள்ள இரசியரான Abu Ubaid al-Madan இரசியர்களுக்கான தனது காணொளிச் செய்தியில் சிரியாவில் இருக்கும் உங்கள் மைந்தர்கள் உயிருடன் திரும்ப மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார். அல் நஸ்ராவைத் தொடர்ந்து. நைஜீரியாவில் செயற்படும் பொக்கொ ஹரம், சோமாலியாவில் செயற்படும் அல் ஷபாப் ஆகிய அல் கெய்தாவின் இணை அமைப்புக்களும் இரசியாவிற்கு எதிராகத் திரும்பலாம்.

Tuesday 13 October 2015

துருக்கிக் குண்டு வெடிப்பு தேர்தலுக்கான சதியா?

துருக்கித் தலைநகர் அங்காராவில் தொழிற்சங்கங்களும் குர்திஷ் மக்களும் இணைந்து ஏற்பாடு செய்த சமாதானத்திற்கான ஊர்வலத்தில் இரண்டு குண்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்ததால் 95 பேர் கொல்லப்பட்டனர் இருநூற்றைம்பதிற்கு மேற்பட்டவர்கள் காயப்பட்டனர். ஊர்வலத்தின் நோக்கம் குர்திஷ்ப் போராளிகளுக்கும் துருக்கிப் படையினருக்கும் இடையில் நடக்கும் மோதலை நிறுத்த வேண்டும் என்பதாகும். அங்காராவின் தொடரூந்து நிலையத்தில் இருந்து ஆரம்பித்து நகரின் பல பகுதிகளூடாக ஊர்வலம் செல்ல ஏற்பாடாகி இருந்தது. ஊர்வலம் ஆரம்பிக்கும் வேளையில் குண்டுகள் வெடித்தன.

குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அவசர சேவைகள் குண்டு வெடிப்புக்கள் நடந்த இடத்திற்கு செல்ல விடாமல் அரச படையினர் தடுத்ததாக ஊர்வலத்தில் சென்றவர்கள் குற்றம் சாட்டினர். துருக்கியில் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்கள் இருக்கும் நிலையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
குண்டு வெடிப்புக் காரணம் அரசுதான் என ஆத்திரப்பட்ட ஊர்வலத்திக் கலந்து கொண்ட மக்களில் சிலர் காவற்துறையினர் மீது தாக்குதல் நடாத்தினர்.

துருக்கியின் தலைமை அமைச்சர் அஹ்மட் டவுடொக்லு அவர்கள் இது ஒரு தற்கொடைத் தாக்குதல் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகத் தெரிவித்தார். துருக்கி அரசு ஐ எஸ் போராளிகள் செய்த தற்கொடைத் தாக்குதல் எனச் சொல்கின்றது.

குண்டு வெடிப்பைத் தொடர்ந்து துருக்கியில் செயற்படும் குர்திஷ் மக்கள் தொழிலாளர் கட்சியினர் ஒருதலைப்பட்டமான போர் நிறுத்தத்தை அறிவித்தனர். ஆனாலும் அவர்களது நிலைகள் மீது தொடர்ந்தும் துருக்கிய விமானப் படையினர் தாக்குதல்கள் நடத்துகின்றனர். குண்டு வெடிப்பைச் சாட்டாக வைத்துக் கொண்டு வலதுசாரி தேசியக் கட்சியினர் குர்திஷ் மக்கள் மீது தாக்குதலக்ள் செய்கின்றனர். குர்திஷ் மக்களின் உடமைகள் கொள்ளையிடபட்டன தீக்கிரையாகக்ப்பட்டன. இத்தாக்குதல்கள் குர்திஷ் தீவிரவாதிகளுக்கு கொடுக்கப்படு ஊக்க ஊதியம்.
முச்சந்தியில் துருக்கி
ஆசியா ஐரோப்பா, ஆபிரிக்கா ஆகிய மூன்று கண்டங்களுக்கு நடுவிலும் ஐரோப்பியர், அரபுக்கள், ஈரானியர் ஆகிய மூன்று ஒன்றுடன் ஒன்று முரண்படும் இனங்களுக்கு மத்தியிலும் துருக்கி இருக்கின்றது. சுனி இஸ்லாமியர், சியா இஸ்லாமியர், குர்திஷ் மக்கள் ஆகிய மூன்று ஒன்றை ஒன்று அழித்துக் கொண்டிருக்கும் பிரிவினருக்கு மத்தியில் துருக்கி இருக்கின்றது. ஈரான், ஈராக், சிரியா ஆகிய மூன்று ஐ எஸ் அமைப்பினருடன் மோதும் நாடுகளுடன் துருக்கி எல்லைகளைக் கொண்டுள்ளது. சிரியாவில் இருந்து பத்து இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

நேட்டோக் கூட்டமைப்பில் இணைந்த முதல் இஸ்லாமிய நாடான துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் ஓர் இணை உறுப்பினராக இருக்கின்றது. அது ஒரு முழு உறுப்பினராக இணைய விரும்புகின்றது. ஆசியச் சுழற்ச்சி மையம் என்னும் அமெரிக்காவும் யேமன், ஈராக், சிரியா, லிபியா ஆகிய நாடுகளில் உருவாகியுள்ள உள்நாட்டுப் போரும் உக்ரேனை மேலும் துண்டாட முயற்ச்சிக்கும் இரசியாவும் தென் சீனக் கடலில் பெரும் விரிவாக்கத்தைச் செய்ய முயலும் சீனாவும் உலக அரங்கில் ஒரு குழப்ப நிலையைத் தோற்றுவித்துள்ள வேளையில் துருக்கியில் ஓர் உறுதியான ஆட்சி அவசியமான ஒன்றாகும். சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தைப் பதவியில் இருந்து அகற்ற விரும்பும் துருக்கிய ஆட்சித் தலைவர் ரிசெப் ரய்யிப் எர்டோகான் அசாத்தின் ஆட்சிக்கு எதிராகப் போராடும் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பில் இணைய விரும்புபவர்களை துருக்கியினூடாகப் பயணிக்க அனுமதிக்கின்றார்.

துருக்கியில் 2003-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டுவரை தலைமை அமைச்சராக இருந்த ரிசெப் ரய்யிப் எர்டோகான் 2014-ம் ஆண்டில் இருந்து ஆட்சித் தலைவராகவும் இருக்கின்றார். அவர் பிரான்ஸில் உள்ளது போல் ஒரு அதிகாரமிக்க குடியரசுத் தலைவர் ஆட்சி முறைமையை உருவாக்க முயன்றார்.  550 உறுப்பினர்களைக் கொண்ட பாராளமன்றத்தில் தனது கட்சி 400 தொகுதிகளை வெல்ல வேண்டும் என விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் 2015-ஜுன் மாதம் 7-ம் திகதி வெளிவந்த பாராளமன்றத் தேர்தல் முடிவுகள் அவருக்கு உகந்ததாக இருக்கவில்லை. 2011-ம் ஆண்டு ஆட்சித் தலைவர் எர்டோகானின் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி 327 உறுப்பினர்களைப் பெற்றிருந்தது. 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 258 உறுப்பினர்களை மட்டுமே பெற்று மொத்தம் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் உள்ளது. இந்தத் தோல்விக்குக் காரணம் துருக்கிய இடதுசாரிகளும் குர்திஷ் இன மக்களும் இணைந்து செயற்பட்டமையே. துருக்கியின் அரசமைப்பை மாற்றித் தனனை ஒரு பல அதிகாரம் கொண்ட ஒரு அரசத் தலைவராக மாற்ற எர்டோகன் எடுத்த முயற்ச்சி தோல்வி கண்டது. துருக்கியின் புட்டீனாகத் தன்னை மாற்ற எர்டோகான் எடுத்த முயற்ச்சி தோல்வியில் முடிந்தது என ஊடகங்கள் கேலி செய்தன.  
வாக்காளர்கள் தவறு செய்து விட்டனர் அடுத்த தேர்தலில் அவர்கள் தமது தவறுகளைத் திருத்திக் கொள்வார்கள் எனச் சொன்ன எர்டோகன் மறு தேர்தலுக்கு 2015 நவம்பர் முதலாம் திகதி மறுதேர்தலுக்கு உத்தரவிட்டார்.

எர்டோகன் தனது Justice and Development Party (the AKP) கட்சியால் மட்டுமே உறுதியான ஓர் ஆட்சியை உருவாக்க முடியுன் என்கின்றார்

மீண்டும் இடதுசாரிகளும் குர்திஷ் மக்களும் இணைவது எர்கோடனுக்கு உகந்த ஒன்றல்ல. சிலர் அரச உளவுத் துறையின் மீது குற்றம் சாட்டுகின்றனர். சிலர் ஊர்வலத்தை ஏற்பாடு செய்தவர்கள் மீதும் குற்றம் சாட்டுகின்றனர். அண்மைக் காலங்களாக நாட்டில் ஒரு குழப்ப நிலை உருவாகியிருப்பதற்கு அதிபர் ரிசெப் ரய்யிப் எர்டோகான்தான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. குர்திஷ் மக்களுக்கு எதிரான உணர்வுகளை துருக்கியர்கள் மத்தியில் வளர்ப்பதற்கு ரிசெப் ரய்யிப் எர்டோகான் முயல்கின்றார் எனவும் குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

துருக்கியில் குர்திஷ் மக்களுக்கு எதிராக துருக்கியிலும் ஈராக்கிலும் சிரியாவிலும் செய்யும் தாக்குதல்களால் அவர்கள் தீவிரவாதத் தாக்குதலை துருக்கியில் செய்ய அது துருக்கியப் பேரினவாதிகளையும் தேசியவாதிகளையும் தனது நீதிக்கும் அபிவிருத்துக்குமான கட்சிக்கு ஆதரவு வழங்கச் செய்யும் என எர்டோகன் மனதில் வைத்துச் செயற்படுகின்றார் எனவும் சிலர் வாதிருகின்றனர்.

ஆரம்பத்தில் துருக்கியப் பொருளாதாரத்தையும் அதன் படைத்துறைவலுவையும் பெரிதளவு அபிவிருத்தி செய்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ரிசெப் ரய்யிப் எர்டோகான் பின்னர் ஒரு சர்வாதிகாரி போல் மாற்றம் பெற்றார். அதன் அடுத்த கட்டமாக தலைமை அமைச்சரின் ஆட்சியின் கீழ் இருக்கும் துருக்கியை அதிபர் ஆட்சிக்கு மாற்றி தனது அதிகாரத்தை அதிகரிக்கும் எண்ணம் அவரது மதிப்பை மக்கள் மத்தியில் குறைத்தது.

குண்டு வெடிப்பு நடந்தவுடன் நாடெங்கும் மக்கள் கொதித்து எழுந்தர்க்ள். இதனால் சமூக வலைத்தளங்கள் துருக்கிக் குண்டு வெடிப்புத் தொடர்பான செய்திகள் தடை செய்யப்பட்டு விட்டன. எர்டோகானின் ஊடக அடக்கு முறை உலகறிந்த ஒன்றாகும். துருக்கியின் விருது பெற்ற ஊடகவியலாளர் ஒருவர் எர்டோகனைப் பற்றிக் கேலி செய்து எழுதியமைக்காகத் தண்டிக்கப்பட்டார். நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தி ஊடகங்களை அடக்கி தேர்தலில் குழறுபடி செய்வது இப்போது பல நாடுகளில் செய்யப்படுகின்றன. அது துருக்கித் தேர்தலிலும் நடக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...