Friday 21 August 2015

உக்ரேனில் அமெரிக்கப் படைகள் அதிர்ச்சியில் இரசியா

உக்ரேனியப் படைகளுக்கு பயிற்ச்சி அளிக்க அங்கு சென்றுள்ள ஐக்கிய அமெரிக்கப்படைகளால் இரசியா அதிர்ச்சியடைந்துள்ளது. உக்ரேனின் கிறிமியாவை தன்னுடன் இணைத்த இரசியா உக்ரேனின் இரசியர்கள் பெரும்பான்மையினராக வாழும் அதன் கிழக்குப் பிராந்தியத்தில் பெரும் கிளர்ச்சியைத் தூண்டியுள்ளது. அவர்கள் தமக்கு தனிநாடு கோரிப் போராடுகின்றார்கள். உக்ரேனுக்குள் இரசியா தனது படையினர் பலரை இரகசியமாக அனுப்பி உக்ரேனியப் படைகளுடன் சண்டை செய்ய வைத்துள்ளது.

மூலம் சிரியா
சிரிய விவகாரத்தில் ஐக்கிய அமெரிக்காவுடன்இரசியா ஒத்துழைக்காததால் அமெரிக்கா உக்ரேனில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி உக்ரேனை இரசியாவிற்கு எதிராகத் திருப்பியது. அதனால் உக்ரேன் இரசியாவின் யூரோ ஏசியன் பொருளாதாரக் கூட்டமைப்பில் இணையாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முனைந்தது. இதனால் ஆத்திரமடைந்த இரசியா உக்ரேனில் வாழும் இரசியர்களை உக்ரேனிய அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழச் செய்தது. முன்பு இரசியாவின் ஒரு பகுதியாக இருததும் இரசியாவிற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற்படைத் தளத்தைக் கொண்டதுமான கிறிமியாவில் குழப்பம் உருவானது. கிறிமியாவில் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தி அது இரசியாவுடன் இணைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரசியாவிற்கு எதிராக நேட்டோ நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன.

இரசியாவின் தளரும் பொருளாதாரம்
இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையும் உலகச் சந்தையில் வீழ்ச்சியுறும் எரிபொருள் விலை வீழ்ச்சியும் அதன் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளது. தொடர்ந்து இரண்டு காலாண்டுகள் இரசியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த படியால் இரசியப் பொருளாதாரம் கோட்பாட்டு ரீதியாக மந்த நிலையை அடைந்துள்ளது என்பது உறுதியாகிவிட்டது. 2015-ம் ஆண்டிற்கான முதலாம் காலாண்டில் 2.2விழுக்காடு வீழ்ச்சியைக் கண்டிருந்தது.  இரண்டாம் காலாண்டில் இரசியப் பொருளாதாரம் 4.6 விழுக்காடு வீழ்ச்சியை அடைந்ததுடன் அங்குவிலைவாசி 15.6விழுக்காடாக இருக்கின்றது. இரண்டாம் காலாண்டிற்கான வீழ்ச்சி எதிர்பார்த்த 4.5 விழுக்காட்டிலும் அதிகமாகும். 2015 ஜூலை வரையிலான 12 மாதங்களில் இரசிய நாணயம் அமெரிக்க டொலர்களுக்கு எதிராக 43 விழுக்காடு வீழ்ச்சியடைந்தது.

இரசியாவின் படை இரகசியம் கை மாறுமா?

உக்ரேனில் கிளர்ச்சி செய்பவர்களுக்கும் உக்ரேனுக்குள் இரகசியமாக நுழைந்த இரசியப் படையினருக்கும் எதிராகப் போர் புரிய உக்ரேனியப் படைகளுக்கு ஐக்கிய அமெரிக்கப் படைகள் போர்ப்பயிற்ச்சிகள் வழங்குகின்றன. முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஓரு உறுப்பு நாடாக இருந்த படியால் உக்ரேனியப் படையினர் இரசியாவின் போர் முறைகளைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். அத்துடன் இரசியப் படைகள் எப்படிப் போர் புரிகின்றன என்பது பற்றி தற்போது உக்ரேனியப்படைகள் அறிந்து கொள்கின்றன. உக்ரேனியப் படைகளிடமிருந்து அமெரிக்கப் படைகள் இத் தகவல்களைப் பெற்றுக் கொள்வது பற்றி இரசியா கலவரமடைந்துள்ளது.

ஆளாளுக்கு போர் ஒத்திகை
ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, போலாந்து ஆகிய நாட்டுப் படைகள் உட்படப் பல நேட்டோப் படையினர் உக்ரேனியப் படைகளுடன் இணைந்து 2015-ம் ஆண்டின் நடுப்பகுதியில் போர்ப் பயிற்ச்சிகளில் ஈடுபட்டதும் இரசியாவைக் கரிசனை கொள்ள வைத்துள்ளது. இந்தப் போர்ப்பயிற்ச்சி தேவை ஏற்படின் அவர்கள் இரசியாவுடன் மோதலுக்குத் தயார் என்பதை உணர்த்துவதாக அமைந்திருந்தது. இப்பயிற்ச்சியில் 19 நாடுகளில் இருந்து 15,000 படையினர் ஈடுபட்டனர். ஒரு பயிற்ச்சியில் ஈரூடகத் தரையிறக்கம் செய்யப்பட்டது. இன்னும் ஒரு பயிற்ச்சியில் போல்ரிக் நாடுகளிலும் போலாந்திலும் தாங்கிகள் தாழப் பறக்கும் விமானங்களுடன் பயிற்ச்சிகள் நடந்தன. மூன்றவது பயிற்ச்சியில் நேட்டோ புதிதாக உருவாக்கிய   ஏநசல ர்iபா சுநயனiநௌள துழiவெ வுயளம குழசஉந எனப்படும் அதி துரித தயார் நிலை அதிரடிப் படையினர்  போலாந்தில் பயிற்ச்சியில் ஈடுபட்டனர்.  பதிலுக்கு இரசியப் படையினர் லத்வியாவை ஆக்கிரமிப்பது போன்ற ஒரு பயிற்ச்சியில் ஈடுபட்டனர். இரசியாவின் பயிற்ச்சியில் எண்பதினாயிரம் படையினர் ஈடுபட்டனர்.  நேட்டோப் படைகள் தேவை ஏற்படின் உக்ரேனின் படை நிலைகளையும் படைத்துறைக் களஞ்சியங்களையும் பாவிக்க உக்ரேன் அனுமதி வழங்கியுள்ளது.
 
இரசியப் பாதுகாப்புச்சபையில் தனித்த புட்டீன்
2015 ஜுலை மாதம் 3-ம் திகதி இரசியாவின் பாதுகாப்புச் சபைக் கூட்டம் நடை பெற்றது. பத்துப் பேரைக் கொண்ட இரசியப் பாதுகாப்புச் சபையில் இரசிய அதிபர் விளடிமீர் புட்டின் மட்டுமே தனது நாட்டுப் படைகள் தனது ஆணையை ஏற்றுப் நேட்டோப் படைகளுடன் போர் புரியும் என நம்புகின்றனர். ஐக்கிய அமெரிக்கா இரசியாவை ஆக்கிரமிக்க முயல்கின்றது என புட்டீன் உறுதியாக நம்புகின்றார். நேட்ட்ப்படைகளுடன் ஒரு போருக்கு அவர் தாயார் என்கின்றார். இரசியாவின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் பின்னர் மாஸ்க்கோவின் எதிரொலி என்ற வானொலி எடுத்த கருத்துக் கணிப்பில் இரசியாவிற்கும் நேட்டோவிற்கும் இடையில் நேரடி மோதல் நடக்கும் என 43 விழுக்காட்டினர் பதிலளித்துள்ளனர். இதுவரை வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளை எமது மேற்கத்தையப் பங்காளிகள் என குறிப்பிட்டு வந்த புட்டீன் இப்போது அவர்களை எமது புவிசார் அரசியல் எதிரிகள் எனக் குறிப்பிடத் தொடங்கியிருக்கின்றார் என்பதை அரசிய நோக்குனர்கள் கவனமாகக் கருத்தில் கொண்டுள்ளனர்.

பெருகும் போர் அபாயம்

இரசிய எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் கேஜீபி அதிகாரியுமான கென்னடி குட்கோவ்  உக்ரேனில் நிலைமைகள் மோசமடைந்து இரசியப் படைகளுக்கும் நேட்டோ ஆதரவுப் படைகளுக்கும் இடையிலான ஒரு மோதல் சாத்தியமான ஒன்று என்றார். பிரித்தானியாவில் உள்ள நுரசழிநயn டுநயனநசளாip நேவறழசம என அழைக்கப்படும் போர் தொடர்பான சிந்தனையாளர் குழு நடக்கும் ஒத்திகைகள் போர் அபாயத்தை அதிகரித்துள்ளது என்கின்றது.

Wednesday 19 August 2015

அரபு நாடுகளில் ஈரானின் ஆதிக்கம்

இதுவரை பொருளாதாரத் தடையால் மேற்காசியப் பிரதேசத்தில் சற்று அடக்கி வாசித்துக் கொண்டிருந்த ஈரான் இனி மேல் ஸ்தாயில் வாசிக்குமா என்ற கேள்வி உலக அரங்கில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கொமெய்னி அமெரிக்காவுடன் யூரேனியப் பதப்படுத்தல் உடன் படிக்கையின் பின்னர் அமெரிக்கா தொடர்பான ஈரானின் நிலைப்பாட்டில் மாற்ற மில்லை என்றார். ஈராக்கில் சதாம் ஹுசேயினின் ஆட்சியை ஒழித்ததன் மூலம் அமெரிக்கா ஈரானை வலுவடையச் செய்து விட்டது என்பது சுனி முஸ்லிம்களின் குற்றச்சாட்டாக இருக்கின்றது.

வரலாற்றில் ஒரு வல்லரசு
ஈரானுக்கு என்று உயரிய வரலாற்றுப் பெருமை இருக்கின்றது. பாரசீகம் (Persia) என அதை ரோமர்கள் அழைத்தனர். எகிப்து முதல் துருக்கி, மெசப்பட்டோமியா ஆகியவை உள்ளிட்ட அதனது பேரரசு சிந்து நதிவரை வியாபித்திருந்தது. பின்பு அவர்கள் கிரேக்கர், ரோமர், அரபுக்கள், துருக்கியர், மங்கோலியர் ஆகியோரால் ஆக்கிரமிக்கப் பட்டனர். மீண்டும் எகிப்து, அல்ஜீரியா, லிபியா, ஈராக், சவுதி அரேபியாவின் ஒரு பகுதி ஆகியவற்றைக் கொண்ட ஒரு வல்லரசாக தாம் உருவாக வேண்டும் என தற்போதைய ஈரானின் மதவாத ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். இப்பிரதேசங்களைத் தமது ஆட்சிக்குள் கொண்டு வந்து அங்கு சியா முறைமையிலான இஸ்லாமைப் பரப்ப வேண்டும் என்பது அவர்களது கனவு.

ஹோமஸ் நீரிணை
ஈரானின் பூகோள இருப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கடல் மூலமான உலக எரிபொருள் வழங்கலில் 40% ஈரானின் ஹொமஸ் நீரிணையூடாக நடக்கிறது. உலக மொத்த எண்ணை வழங்கலில் இது 20% ஆகும். ஹோமஸ் நீரிணை ஓமான் வளைகுடாவையும் பாராசீக வளைகுடாவையும் இணைக்கும் 35மைல்கள் அகலமுள்ள நீரிணையாகும். நாளொன்றிற்கு 15 எண்ணை தாங்கிக் கப்பல்கள் இதனூடாக பயணம் செய்கின்றன. சவுதி அரேபியா, ஈராக்,குவைத், பாரெய்ன், கட்டார், துபாய், போன்ற நாடுகளில் இருந்தூ ஏற்றுமதியாகும் எரிபொருள் ஹோமஸ் நீரிணையூடாகவே நடக்கின்றது. இந்த நீரிணையை மூடிவிடுவேன் என்று ஈரான் அடிக்கடி மிரட்டுவதுண்டு. அமெரிக்கா இந்த நீரிணையை தனது கடற்படையின் கண்காணிப்பின் கீழ் வைத்திருக்கின்றது. அமெரிக்காவின் மேற்காசிய நகர்வுகளுக்கு என்றும் பிரச்சனையாகவும் சவாலாகவும் இருப்பது ஈரானே.

ஈரானின் பிராந்திய ஆதிக்கக் கனவு
2015 மார்ச் மாதம் ஈரானின் அதிபர் ஹஸன் ரௌஹானியின் ஆலோசகர் அலி யூனிசி ஈரான் ஒரு பேரரசு, ஈராக் அந்தப் பேரரசின் ஒரு பகுதி என்றார். அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் ஈரானிய புரட்சிப் படையான கட்ஸ் படையின் வெளிநாட்டுப் பிரிவின் தளபதி காசிம் சுலைமான் இன்று ஈரான் தனது மதப் புரட்சியை பாஹ்ரேன் முதல் ஈராக் வரைக்கும், சிரியா முதல் யேமன் உள்ளிட்ட வட ஆபிரிக்காவரைக்கும் ஏற்றுமதி செய்யக் கூடிய நிலை உருவாகியுள்ளது என்றார். இவை மட்டுமல்ல் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரானிய உச்சத் தலைவர்  அலி கொமெய்னிக்கு நெருக்கமான பாராளமன்ற உறுப்பினர் அல் ரெஜா ஜக்கானி தற்போது பாக்தாத், பெய்ரூட், டமஸ்கஸ், சனா ஆகிய நான்கு அரபுத் தலைநகரங்கள் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றார். இன்னும் சற்றுப் பின் சென்றால் 2013-ம் ஆண்டு அஜர்பைஜானை ஈரானுடன் மீளிணைக்க வேண்டும் என்ற தீர்மானம் ஈரானியப் பாராளமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அஜர்பைஜானை சோவியத் ஒன்றியம் ஓர் உடன்படிக்கை மூலம் ஈரானிடமிருந்து 1828-ம் ஆண்டு பிரித்து  தன்னுடன் இணைத்துக் கொண்டது.

அரபுக்கள் வேறு ஈரானியர்கள் வேறு.
ஈரானியர்களும் அரபுக்களும் மதத்தால் ஒன்றுபட்டிருந்தாலும் இனத்தால் மொழியால் வேறுபட்டவர்கள். மதத்தால் ஒன்றுபட்டவர்கள் என்று அழுத்திச் சொல்ல முடியாத அளவிற்கு சியா முஸ்லிம்களான ஈரானியர்களுக்கும் சுனி முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பல அரபு நாடுகளும் முரண்பட்டுக் கொள்கின்றன. சுனி முஸ்லிம்களைக் கொண்ட துருக்கி ஈரானுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வந்தாலும் சிரியா விவகாரத்தில் இரண்டும் முரண்படுகின்றன. குர்திஷ் மக்களை ஒழிப்பதில் இரு நாடுகளும் ஒத்துழைக்கின்றன.

ஈராக் சியா ஆனால் அரபு
ஈராக்கில் சுனி இஸ்லாமிய அமைப்பான ஐ எஸ் ஐ எஸ் என்றும் ஐ எஸ் ஐ எல் என்றும் ஐ எஸ் என்றும் அழைக்கப்படும் இஸ்லாமிய அரசுக்கு எதிராக ஈரானே முன்னணியில் நின்று செயற்படுகின்றது. சியா முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈராக்கில் சுனி முஸ்லிம் ஆன சதாம் ஹுசேய்ன் நீண்டகாலம் ஆட்சியில் இருந்தார். அவர் ஈரானுக்கு எதிராக நீண்ட போரையும் 1980இல் இருந்து 1988 வரை நடாத்தினார். அவரது பிராந்திய ஆதிக்கக் கனவால் அவர் அமெரிக்க ஆக்கிரமிப்பால் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் அமெரிக்க ஆதரவுடன் தேர்தல் மூலம் ஈராக்கில் சியா முஸ்லிம்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து ஈராக்கில் உள்ள சுனி முஸ்லிம்ளின் அமைப்பான ஈராக்கிற்கான அல் கெய்தா ஐ எஸ் என்னும் போராளி அமைப்பாக மாறியது. சுனிப் போராளிகளும், சதாமின் படையில் இருந்த பாத் கட்சி வீரர்களும் ஐ எஸ்ஸுடன் இணைந்து கொண்டனர். ஐ எஸ் அமைப்பு சுனி முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிரியாவில் சியா முஸ்லிம்களின் ஒரு பிரிவினரான அலவைற் இனக்குழுமத்தினரின் ஆட்சிக்கு எதிராகப் போராடுவதாகச் சொல்லி சவுதி அரேபியா, காடார் ஆகிய நாட்டுச் செல்வந்தர்களிடமிருந்து பெரும் நிதியைப் பெற்றுக் கொண்டு ஈராக்கிலும் சிரியாவிலும் பெரு நிலப்பரப்பைக் கைப்பற்றிக் கொண்டது. அமெரிக்காவின் முதலாம் எதிரியாக ஐ எஸ் அமைப்பு வளர்ந்து வருகின்றது. இந்த ஐ எஸ் அமைப்பை ஒழித்துக் கட்ட அமெரிக்காவும் விரும்புகின்றது ஈரானும் விரும்புகின்றது. இதனால் அமெரிக்காவும் ஈரானும் ஈராக்கில் இணைந்து செயற்படுகின்றன.

சவுதி அரேபியா
ஈரானின் பிராந்திய ஆதிக்கத்திற்கு பெரும் சவால் விடும் நாடாக சவுதி அரேபியா இருக்கின்றது. சவுதியில் சியா முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களை தன்னுடைன் இணைக்க வேண்டும் எனவும் ஈரான் கருதுகின்றது. ஈரானின் நிகராளிகளில்(Proxies)  ஒன்றான ஹமாஸ் அமைப்பை சவுதி அரேபியா தனது பக்கம் இழுத்துக் கொண்டிருக்கின்றது. ஹாமாஸ் அரசியற் துறைப் பொறுப்பாளர் கலீட் மேஷாலும் மற்றும் பல உயர் மட்டத்தினரும் 2015 ஜூலை மாதம் சவுதி அரேபியாவிற்குப் பயணம் மேற்கொண்டது ஈரானை உலுப்பியதுடன் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது வரைகாலமும் ஹமாஸ் அமைப்பிற்குத் தேவையான படைக்கலன்களும் நிதியும் ஈரானிடமிருந்தே கிடைத்தன. சவுதி அரேபியாவுடன் உறவை வளர்த்தால் அதன் மூலம் எகிப்திய அரசு மூடி வைத்திருக்கும் ரஃபாக் கடவையைத் திறக்க வைக்கலாம் எனக் கமாஸ் அமைப்பு நம்புகின்றது. ஈரான் அணுக்குண்டு தயாரித்தால் பாக்கிஸ்த்தனிடமிருந்து அணுக்குண்டை வாங்கும் திட்டத்துடன் சவுதி அரேபியா இருக்கின்றது.

லெபனான்
முதலாம் உலகப் போரின் பின்னர் மேற்காசியாவில் ஒரு கிறிஸ்த்தவ நாடு தேவை என லெபனான் உருவாக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அங்கு இஸ்லாமியரே பெரும்பான்மையாகிவிட்டனர். பலஸ்த்தீனத்தில் இருந்து இடம்பெயர்ந்தோராலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலாலும் லெபனான் குழப்பம் மிக்க நாடாக இருக்கின்றது. லெபனானில் இருந்து யஸீர் அரபாத் தலைமையிலான பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தை சிரியா படையெடுத்து விரட்டியதன் பின்னர் அங்குள்ள எஞ்சிய பலஸ்த்தீனியர்களால் இஸ்ரேலின் அட்டூழியத்திற்கு எதிராக உருவாக்கப் பட்ட ஹிஸ்புல்லா அமைப்பு மத்திய தரைக் கடலில் உள்ள ஈரானின் விமானம் தாங்கிக் கப்பல் என விமர்சிக்கப்படுகின்றது. ஹிஸ்புல்லா அமைப்பிற்கு படைக்கலன்களும் நிதியும் வழங்கும் ஈரான் தனது பிராந்திய ஆதிக்கத்தை லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மூலம் முன்னெடுத்து வருகின்றது.

சிரியா
சிரியாவில் சுனி ஐ எஸ் அமைப்பும் சிரிய அதிபர் அல் பஷார் அசாத்திற்கு எதிரான சுனிக் கிளர்ச்சிக்காரர்களும் ஒரு தரப்பினருடன் மற்றத் தரப்பினர் போராடி அழிந்து கொள்வது ஈரானிற்கு மகிழ்ச்சியூட்டும் ஒன்று. லெபனானின் செயற்படும் சியா முஸ்லிம் தீவிரவாத அமைப்பான் ஹிஸ்புல்லாவிற்கான விநியோகம் ஈரானில் இருந்து சிரிய விமான நிலையங்களூடாக நடை பெறுகின்றது. இதனால் சிரியா ஈரானைப் பொறுத்தவரை முக்கியமான ஒரு நாடாகும். அதிபர் பஷாத்தைப் பாதுகாக்க ஈரான் பணம், படைக்கலன் ஆகியவற்றை வழங்குவதுடன் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாப் போராளிகளை அசாத்தின் படைகளுடன் இணைந்து கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராகப் போராட வைக்கின்றது. ஈராக்கும் சிரியாவும் ஈரானின் ஆதிக்கத்திற்குள் வந்தால் அடுத்ததாக் லெபனான் இலகுவாக ஈரானின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். ஈரானும் சிரியாவும் லெபனானுடனான எல்லையை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதில் அதிக அக்கறை காட்டுகின்றன.

ஐக்கிய அமீரகம்
ஈரானுக்கும் ஐக்கிய அமீரகத்திற்கும் இடையில் ஹோமஸ் நீரிணையில் உள்ள Greater Tunb, Lesser Tunb, Abu Musa ஆகிய மூன்று தீவுகளும் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக முறுகல் நிலை உண்டு. அரபு லீக் நாடுகள் ஐக்கிய அமீரகம் தமக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடு எனக் கருதுகின்றனர்.

ஈரானின் நிகராளிப் போர்கள்(Proxy Wars)
ஈரான் தற்போது சிரிய அரசினூடாகவும் ஹிஸ்புல்லாவின் உதவியுடனும் சிரிய அரசுக்கு எதிரான ஒரு நிகராளிப் போரையும், ஈராக்கில் அதன் அரசினூடாக ஐ எஸ் அமைப்பிற்கு எதிரான ஒரு நிகராளிப் போரையும், யேமனில் சவுதி அரேபியாவிற்கு ஆதரவான அரசுக்கு எதிராக ஹூதி இனக்குழுமப் போராளிகளூடாக ஒரு நிகராளிப் பேரையும் நடாத்தி வருகின்றது. நிகராளிப் போர் நேரடிப் போரிலும் பாக்கச் செலவு மிக்கது. அரபு சுனி முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிரியாவை ஈரானின் ஆதிக்க நாடாக மாற்றுவது இயலாத ஒன்று. அப்பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த விரும்பும் துருக்கியையும் சவுதி அரேபியாவையும் மிஞ்சி இதைச் சாதிக்க வேண்டும். அமெரிக்கா சிரியாவில் சுனி முஸ்லிம்களின் ஆட்சியை விரும்புகின்றது. ஈராக்கில் ஐ எஸ் அமைப்பு ஈரான், ஈராக்கிய அரசு, ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றின் தக்குதலை எதிர் கொள்கின்றது. ஐ எஸ் அமைப்பை அங்கு ஒழித்துக் கட்டினாலும் மொழியாலும் இனத்தாலும் வேறுபட்ட ஈராக்கை ஈரான் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதும் கடினம்.  யேமனைப் பொறுத்தவரை அது சவுதி அரேபியாவின் கொல்லைப் புறம். ஈரானுக்கு ஆதரவான ஹூதி இனக்குழுமம் எண்ணிக்கை அளவின் குறைவானது.

ஈரானிற்கு "சூழ்"நிலை சரியில்லை
ஈரானைச் சுற்றவர சுனி முஸ்லிம்களின் நாடுகளே இருக்கின்றன. தென் கிழக்கில் ஒரு நீண்ட எல்லையுடன் சவுத் அரேபியாவும் வடகிழக்கில் அமெரிக்காவின் நட்பு நாடான துருக்கியும் கிழக்கில் உறுதியற்ற ஆட்சியையும் பெரும்பானமை சுனி முஸ்லிம்களையும் கொண்ட சவுதியின் நட்பு நாடான பாக்கிஸ்த்தானும் மேற்கில் ஈரானுடன் எட்டு ஆண்டுகள் போர் புரிந்த ஈராக்கும் ஈரானுக்கு நட்பு நாடுகள் என்பது குறைவு சீனாவும் இரசியாவும் அவ்வப்போது அரசுறவியலில்(இராசதந்திரத்தில்) ஈரானுக்குச் சார்ப்பாக நடந்து கொண்டாலும் அவை ஈரானின் கேந்திரோபாய நட்பு நாடுகள் அல்ல. இந்த இரு வல்லரசுகளும் ஈரானுக்குத் தேவையான நேரங்களில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தமது இரத்து(வீட்டோ) அதிகாரங்களைப் பாவித்தது இல்லை. உலக அரங்கில் ஈரான் ஒரு தனித்து நிற்கும் நாடாகும்.
ஈரானின் பாது காப்புச் செலவீனத்திலும் பார்க்க சவுதியின் பாதுகாப்புச் செலவீனம் நான்கு மடங்கானது. ஈரான் தனது படைக்கலன்களில் பெரும் பகுதியைத் தானே உற்பத்தி செய்கின்றது. அவற்றை அவ்வப்போது லெபனானிலும் காசா நிலப்பரப்பிலும் பரீட்சித்து வருகின்றது. சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், காட்டார் போன்ற செல்வம் மிகுந்த அரபு நாடுகள் அரபு நாடல்லாத ஈரான் அரபு நாட்டில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காது. ஈரானின் பிராந்திய ஆதிகக் கனவை உணர்ந்த ஐக்கிய அமெரிக்கா அதைச் சுற்றி தனது பல படைத்தளங்களை வைத்துள்ளது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...