Monday 13 April 2015

பத்து ஆண்டுகளுக்கு மேலாக சீனா இந்தியாவின் கணனிகளை ஊடுருவிக் கொண்டிருக்கின்றதாம்

சீனாவின் இணையவெளி ஊடுருவல் (Cyber Hacking) செய்யாத நாடே இல்லை என்று சொல்லுமளவிற்கு நாள் தோறும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்கப் புலனாய்வுத் துறையான FBIஇன் இயக்குனர் ஜேம்ஸ் கொமி சீனாவின் இணையவெளி ஊடுருவல்களுக்கு ஐக்கிய அமெரிக்காவின் எல்லா வத்தக நிறுவனங்களும் உள்ளாகியுள்ளன என்றார். கடந்த பத்து ஆண்டுளாக இந்தியாவின் பல்வேறுபட்ட அரச மற்றும் வர்த்தக நிறுவனங்களின் கணனிகளை யாருமறியாமல் ஊடுவல் செய்து வருவதாக இப்போது செய்திகள் வெளிவந்துள்ளன.

இணைய வெளி ஊடுருவலும் போரும்(Cyber hacking and Cyber warfare)
இணையவெளி ஊடுருவல்கள் தனிப்பட்டவர்களாலும் நிறுவனங்களாலும் மட்டுமல்ல அரசுக்களாலும் செய்யப்படுகின்றன. தகவல் திருட்டு, வங்கி விபரங்களை அறிந்து பணங்களை முறைகேடான மாற்றீடு செய்தல், வர்த்தக நிறுவனங்கள் பெரும் தொகை செலவழித்துக் கண்டறிபவற்றையும் கண்டு பிடிப்பவற்றையும் திருடுதல், ஒரு நாட்டுப் படைத்துறை இரகசியங்களைத் திருடுதல் போன்ற பல இணையவெளி ஊடுருவல்கள் மூலம் பெறப்படுகின்றன. இவை போக பொழுது போக்கிற்காக இணையவெளி ஊடுருவல்கள் செய்பவர்களும் உண்டு. ஒரு நாட்டின் இணையவெளிக்குள் ஊடுருவி அதன் கணனிகளைச் செயலிழக்கச் செய்வது இணைய வெளித் தாக்குதல் எனப்படும். இதன் மூலம் ஒரு நாட்டின் பல குடிசார் வழங்கல்களை முடங்கச் செய்வதுடன் பல படைத்துறை நடவடிக்கைகளையும் செயலிழக்கச் செய்யலாம். முக்கிய தகவல்களை அழித்தல், பல பொறிகளை இயங்காமல் முடக்குதல், தொடர்பாடல்களை ஒற்றுக் கேட்டல், தொடர்பாடல்களை முடக்குதல், தொடர்பாடல்களை திசைதிருப்புதல் இப்படிப்பல செய்ய முடியும் போன்றவை இணையவெளிப் போர் எனச் சொல்லலாம்.
வருங்காலத்தில் நாடுகளுக்கிடையிலான போர் தரை, கடல், விண்வெளி மார்க்கமாக மட்டுமல்லாமல் இணையவெளியிலும் நடக்கவிருக்கிறது. அதற்கான தாயாரிப்புக்களில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. அது மட்டுமல்ல பல போராளி இயக்கங்களும் இதில் தமது திறமையை வளர்த்து வருகின்றன.

சீனாவிடம் "இணையவெளி நீலப் படைப்பிரிவு" என்ற பெயரில் இணையவெளி நிபுணர்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவு உண்டு. இவை "இரவு யாளி" என்னும் பெயரில் பிரித்தானியாவிற்கு எதிராக ஒரு படை நடவடிக்கையை மேற் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கவிற்கு பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் லொக்கீட் நிறுவனத்தின் கணனிகள் தொடர் ஊடுருவல் முயற்ச்சிகளுக்கு உள்ளாகி வருகிறது. முழுக்க முழுக்க கூகிளின் இணையத் தளம் போல் போலியான ஒரு இணையத்தளத்தை சீனாவில் உருவாக்கி அதில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் உண்மை என நம்பி உள் நுழைந்து தமது மின்னஞ்சல்களின் கடவுச்சொற்களை பதிந்தனர். இதனால் பல இரகசியங்கள் திருடப்பட்டன. இணையவெளிப் போர்முனையில் சீனா முன்னணியில் இருக்கிறது என்று ஐக்கிய அமெரிக்கா அஞ்சுகிறது. இதனால்  அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தனது இணையவெளிப் போர் முறைமைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளதாக 27-01-2013இலன்று செய்திகள் வெளிவந்தன.
அமெரிக்காவின் படையினர் இணையவெளியிலும் செய்மதித் தொடர்புகளிலும் பெரிதும் தங்கியிருக்கின்றனர் என்பதை உணர்ந்த சீனா இணைய வெளியில் தனது போர் முறைகளை வளர்த்தது. அத்துடன் செய்மதிகளை நிலத்தில் இருந்து செலுத்தும் ஏவுகணைகள் மூலம் அழிக்கும் தொழில்நுட்பத்தையும் உருவாக்கியது.

இந்தியப் படைத்துறை இரகசியங்கள் சீனாவின் கையில்
சீன இணைய ஊடுருவிகள் பலதடவை இந்தியப் படைத்துறைக்குத் தெரியாமல் அவர்களின் கணனிகளை ஊடுருவி பல தகவல்களைப் பெற்றுள்ளார்கள் என நம்பப்ப்டுகிறது. இதில் எந்த அளவு தகவல்கள் பாக்கிஸ்தானுக்குப் பரிமாறப்பட்டது என்பது பெரும் கேள்வி. மும்பையைச் சேர்ந்த ஒரு இணையவெளி ஊடுருவி தான் அரச அதிகாரிகளுக்கு தனது வைரஸை இணைப்பாகக் கொண்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பினால் அதில் 75% மானவர்கள் அதைத் திறந்து பார்ப்பார்கள் என்றும் அதன் மூலம் தன்னால் பல அரச செயற்பாடுகளை மறு நாள் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றார்.

FireEye நிறுவனத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி பிறைஸ் போலண்ட்  ஆசியாவில் உள்ள பலநாடுகளின் மீது இணையவெளி ஊடுருவலகளும் தாக்குதல்களும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன என்கின்றார். 2011-ம் ஆண்டு Shady Rat என்னும் குறியீட்டுப் பெயருடன் சீனாவில் இருந்து பல ஆசிய நாடுகளினது அரசகளினதும் தனியார் நிறுவனங்களின் கணனித் தொகுதிகள் மீது ஊடுருவல்கள் செய்யப்பட்டதாக McAfee என்னும் இணையவெளிப் பாதுகாப்பு நிறுவனத்தால் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் எல்லாக் குற்றச் சாட்டுகளையும் சீனா மறுக்கின்றது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...