Saturday 28 February 2015

அமெரிக்காவின் THAAD ஏவுகணை எதிப்பு முறைமைக்கு அஞ்சும் சீனா


அமெரிக்காவிடம் இருக்கும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளில் மிகவும் நம்பகத் தன்மை வாய்ந்தது THAAD எனச் சுருக்கமாக அழைக்கபடும் Terminal High Altitude Area Defense ஆகும். THAAD ஏவுகணை எதிர்ப்பு முறைமை என்பது Ballistic Missiles களுக்கு எதிரான பாதுகாப்பு முறைமையாகும். உலகில் முப்பதுக்கு மேற்பட்ட நாடுகள் Ballistic Missiles வைத்திருக்கின்றன. தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமை எதிரிகள் ஏவும் Ballistic Missileகளை இடைமறித்து அழிக்கவல்லன. 

Ballistic Missileஇல் பல வகைகள் உண்டு  அவை அவை இலக்கை நோக்கிப் பாயக் கூடிய தூரத்தை வைத்து வகைப்படுத்தப்படும் பாயும்.


Missile Type Range in KM
    Tactical ballistic missile 300
    Short-range ballistic missile 1000
    Theatre ballistic missile 3500
    Medium-range ballistic missile 3000
    Intermediate-range ballistic missile 5000
    Intercontinental ballistic missile  5500

    இவற்றைத் தவிர  Submarine-launched ballistic missile, Air-launched ballistic missileஆகியவையும் உண்டு. அமெரிக்காவின் புதிய தாட்  ஏவுகணை எதிர்ப்பு முறைமை எல்லாவகையான்ன ஏவுகணைகளையும் இடை மறித்து அழிக்க வல்லது.  அணுக்குண்டுகளைத் தாங்கி வரும் ஏவுகணைகளையும் தாட் இடைமறித்து அழிக்கும். அத்துடன் இது மற்ற ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளுடனும் Aegisஎனச் சுருக்கமாக அழைக்கப்படும் Aegis Combat System என்னும் கடல் சார் பாதுகாப்பு முறைமையுடனும் இணைந்து செயற்பட வல்லது. அத்துடன் செய்மதிகளுடனும் தொடர்பாடல்கள் செய்ய வல்லது. இதுவரை செய்யப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 100 விழுக்காடு நம்பகத்தன்மை வாய்ந்த ஏவுகணை எதிர்ப்பு முறைமையாக தாட்  ஏவுகணை எதிர்ப்பு முறைமை திகழ்கின்றது. எதிரியின் Ballistic Missileகளுக்கு எதிராக தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமை ஒரு தடவையில் 72 எதிர் ஏவுகணைகளை வீசும்.  அத்துடன் இது மூன்று கட்டப் பாதுகாப்பு வலயத்தைக் கொண்டுள்ளது. இந்த மூன்று கட்டப் பாதுகாப்பு வலயத்தால் அதிக உயரத்திலும் தாழ்வாகவும் வரும் Ballistic Missileகளை அழிக்க முடியும். இதனால் இது நூறு விழுக்காடு நம்பகத்தன்மை உடையதாகக் காணப்படுகின்றது.

ஏவுகணை எதிர்ப்பு முறைமை என்பது முன்று தனித்துவ முறைமைகளின் இணைப்பாகும். இது முழுக்க முழுக்க ஒரு தானியங்கி முறைமையாகும். இனம் காண் நிலையம் (Radar Unit), கட்டுப்பாட்டகம் (Control Centre ), ஏவுகணை வீசிகள் ( Missile Launchers) ஆகிய மூன்று முறைகள் ஏவுகணை எதிர்ப்பு முறைமையில் உள்ளன. இனம் காண் நிலையம் வரும் எதிரிகளின் ஏவுகணைகளை ரடார் மூலம் இனம்காணும். அது பற்றிய தகவலகளை அது உடனடியாகக் கட்டுப்பாடகத்திற்கு அனுப்பும். கட்டுபாட்டகம் ஏவுகணை வீசிகளுக்கு உத்தரவுகளை வழங்கும். அந்த உத்தரவின் அடிப்படையில் எதிரி ஏவுகணைகள் மீது இடைமறித்து அழிக்கும் ஏவுகணைகள் வீசப்படும்.

ஒரு சிறந்த ஏவுகணை எதிர்ப்பு முறைமையை உருவாக்க அமெரிக்கா நூறு பில்லியன் டொலர்களுக்கு மேல் செலவிட்டுள்ளது. பல் வேறு வகையான ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமைக்கு நான்கு பில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
Kinetic Enerty என்னும் வலுமூலம் இயங்க்கி இலக்கை அடித்து அழிக்கக்கூடிய திறனுடையவை {hit-to-kill (kinetic energy) lethality} தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமையாகும்.

மேற்கு பசுபிக் கடலில் உள்ள அமெரிக்காவிற்கு சொந்தமான தீவுகளில் ஒன்றான குவாம் தீவில் முதலில் தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமை நிறுத்தப்பட்டது. வடகொரியா தொடர்ந்து பேரழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்களையும் சிறப்பாகச் செயற்படக் கூடிய Ballistic Missile களையும் தொடர்ந்து உருவாக்கி வருவதால் தென் கொரியாவைப் பாதுகாக்க அங்கு தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமையை நிறுத்துவதற்கு அமெரிக்கா பரிசீலித்து வருகின்றது. ஆனால் சீனா இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றது. சீனா உருவாக்கிவரும் ஒலியிலும் பார்க்கப் பலவேகத்தில் பாயக்கூடிய ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமை செல்லாக் காசாக்கிவிடலாம் என சீனா அஞ்சுகின்றது. தென் கொரியாவைத் தொடர்ந்து ஜப்பானும் தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் மீது அக்கறை காட்டலாம்.

சீனா முதலில் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை உருவாக்கியபோது அவற்றில் இருந்து தப்ப வழியில்லை என உணரப்பட்டது. ஆனால் சீனாவின் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் இலகுவில் இனம் காணக் கூடிய அளவிற்கு அவற்றின் வெப்ப நிலை மிகவும் உயர்வானதாகும். தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமையில் சீனாவின் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை அழிக்கக் கூடிய வகையில் மேம்படுத்தல்கள் செய்யப் பட்டன. அதனால் அவற்றை THAAD - ER (Extended Range) அதாவது பாய்ச்சல்தூரம் நீடிக்கப்பட்ட தாட். சீனாவின் ஒலியிலும் பல மடங்கு வேகத்தில் பாயக்கூடிய்ய  ஏவுகணைகளும் அமெரிக்காவின் தாட்டும் ஒரு நேரடிக் கள மோதலில் ஈடுபட்டால்தான் அவற்றின் நம்பகத்தன்மை நிரூபிக்கப்படும்.

சீனாவைச் சுற்றிவர உள்ள பல நாடுகளில் தாட் ஏவுகணை முறைமை நிறுவப்பட்டால் சீனாவின் ஏவுகணைகள் பயனற்றவை ஆகிவிடும் என சீனா அஞ்சுகின்றது.

Friday 27 February 2015

நகைச்சுவைக் கதை: முதலமைச்சரின் மூன்று பெட்டிகள்

picture from vinavu.com
முதலமைச்சர் ஆர்ஜீஎம் கடும் சுகவீனமுற்றுப் படுக்கையில் கிடந்தார். என்னேரமும் அவர் உயிர் பிரியலாம் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். இனி அவரின் இறுதி ஆசையை நிறைவேற்றுவதுதான் சரி என அனைவரும் அவரது கட்சியின் உயர் மட்டத்தினர் தீர்மானித்தனர். அவர்கள் முதலமைச்சர் ஆர்ஜீஎம் இடம் சென்று உங்கள் இறுதி ஆசை என்ன என்றனர். அதற்கு அவர் தனக்குப் பின்னர் அம்முதான் முதல்வராகவேண்டும் என்ற தனது ஆசையைத் தெரிவித்தனர்.  கட்சி உயர் மட்டத்தினர் சிலர் உடனே அங்கிருந்து விலகிவிட்டனர். சிலர் பற்களை நறு நறுவெனக் கடித்தபடி கைகளை பிசைந்து கொண்டு நின்றனர். அம்முவிற்கு வேண்டியவர்கள் அப்படியே ஆகட்டும் வாத்தியாரே என்றனர். முதலமைச்சர் ஆர்ஜீஎம் உடனடியாக அம்முவை அழைத்து வாருங்கள் என்றனர். அம்மு அழைத்துவரப்பட்டார். முதலமைச்சர் ஆர்ஜீஎம் தன்னையும் அம்முவையும் தனிமையில் விடும்படி சொன்னார். சிலர் சாகப்போகிற நேரத்திலுமா என்று தமக்குள் முணு முணுத்தபடி சென்றனர். அம்முவைத் தன்னருகே அழைத்த முதலமைச்சர் ஆர்ஜீஎம் எனக்குப் பிறகு நீதான் ஆட்சியையும் கட்சியையும் நடத்த வேண்டும் என்றார். அம்மு உள்ளுக்குள் மிகவும் மகிழ்ந்தபடி அது மிகவும் சிரமமான காரியம் என்று சொன்னார். அதற்கு முதலமைச்சர் ஆர்ஜீஎம் பயப்படாதே அம்மு என்று சொல்லிக் கொண்டு தன் தலையணைக்குக் கீழ் இருந்து ஒன்று இரண்டு மூன்று என இலக்க அடையாளமிடப்பட்ட மூன்று சிறு பெட்டிகளை அம்முவிடம் கொடுத்து நீ கடும் பிரச்சனைகளைச் சந்திக்கும் போது இப்பெட்டிகளை ஒன்றன் பின் ஒன்றாக திறந்து பார் என்று சொல்லிவிட்டு கண்ணை மூடிக் கொண்டார்.

முதலமைச்சராகப் பதவி ஏற்ற அம்மு ஆர்ஜீஎம் ஐ முற்றாக மறந்து விட்டு அவரின் கொள்கைகளுக்கு முற்றிலும் விரோதமானவரைத் தனது குருவாக ஏற்றுக் கொண்டு ஆட்சி நடத்தினார். அவர் பல பிரச்சனைகளை எதிர்கொண்டார். கட்சியில் பிரச்சனை. நாட்டில் பிரச்சனை. மத்திய அரசு ஆட்சியைக் கலைக்கலாம் என்ற அச்சம். அப்போது தான அம்முவிற்கு ஆர்ஜீஎம்இன் நினைவு வந்தது. அவர் கொடுத்த பெட்டிகளும் நினைவிற்கு வந்தன. முதலாவது பெட்டியைத் திறந்து பார்த்தார். உன் பிரச்சனைகள் எல்லாவற்றிற்ககும் காரணம் எதிர்க் கட்சியே என்று பரப்புரை செய் என்று ஒரு சிறு துண்டில் எழுதப்பட்டு இருந்தது. அம்முவும் அப்படியே செய்தார். பிரச்சனைகள் ஒருவாறு சமாளிக்கப்பட்டு அம்மு அடுத்த தேர்தலில் வெற்றியும் பெற்றார். ஆட்சி தொடர்ந்தது. ஊழல்களும் நிறைந்தன. அம்மு பெரும் பணக்காரியானார். மீண்டும் பிரச்சனைகள். பிரச்சனைகளுக்கு மேல் பெரும் பிரச்சனைகள். அம்மு இரண்டாம் பெட்டியைத் திறந்து பார்த்தார். எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம் மத்திய அரசு என்று பரப்புரை செய் என்று இருந்தது. அம்முவின் ஆட்சி கலைக்கப்பட்டது. இனிப் பெட்டிகளையே திறப்பதில்லை என்று முடிவு செய்தார் அம்மு. எதிர்க் கட்சியில் இருந்த அம்முவிற்குப் பெரும் யோகம் அடித்தது. ஆளும் கட்சியை தொலைக்கிறேன் பேர்வழி என்று பல தமிழ் உணர்வாளர்கள் எதிர்க்கட்சியில் இருந்த அம்முவை தேர்தலில் வெற்றி பெறச் செய்து ஆட்சியில் அமர்ந்தனர். அம்முவின் உற்ற தோழிக்கும் அம்முவிற்குமிடையில் அம்முவின் குருவினர் சண்டையை மூட்டி விட்டனர். தமிழின உணர்வாளர்கள் ஒருபக்கம் நெருக்கல் கொடுத்தனர். அவர்கள் சொற்படி நடந்தால் தனது ஆட்சியை தமிழர்களின் விரோதியான மத்திய அரசு தனது ஆட்சியைக் கலைத்துவிடும் என்ற பயம் ஒரு புறம். சொத்துக் குவிப்பு வழக்கு இன்னொரு புறம். அம்முவின் நோய்கள் இன்னும் புறம்  சிறைத்தண்டனை வேறு....எப்போது எத்தனை ஆண்டு சிறைவாசம் என்ற் அச்சம் எல்லாவற்றிற்கும் மேலாக.............................. அம்முவிற்குப் பெரும் துயர். சரி கடைசியாக அந்த மூன்றாவது பெட்டியைத் திறந்து பார்ப்போம் என்று போய் அந்த மூன்றாவது பெட்டியையும் திறந்து பார்த்தார். அதில் கிடந்த வாசகம்: "மூன்று பெட்டிகளைத் தயார் செய்".

Monday 23 February 2015

சீனாவை ஜப்பான் அடக்குமா?

ஜப்பான் தனது அமைதிவாதக் (pacifism) கொள்கையைக் கைவிட்டு ஒரு போர் புரியக் கூடிய நாடாக மாறுவதற்காக தனது அரசமைப்பு யாப்பைத் திருத்துமா என்ற கேள்வி ஐ. எஸ் எனப்படும் இசுலாமிய அரசு அமைப்பினர் இரு ஜப்பானியர்களைக் கொலை புரிந்த பின்னர் மீளத் தலையெடுத்துள்ளது.  2015-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12-ம் திகதி ஜப்பானியப் பாராளமன்றத்தில் ஓர் உணர்ச்சி பூர்வமான உரையை ஆற்றிய ஜப்பானியத் தலைமை அமைச்சர் ஷின்ஜோ அபே ஜப்பானிய மக்களே நம்பிக்கை கொள்ளுங்கள் எனச் சொன்னதுடன் எமது அரசியலமைப்பு யாப்பைத் திருத்துவதற்கான விவாதத்தை ஆழமாகச் செய்ய வேண்டிய நேரம் இதுவல்லவா என்ற கேள்வியையும் எழுப்பினார். இந்தப் பாராளமன்றம் எதிர்காலத்தைக் கருத்திக் கொண்டு மிகப்பெரிய சீர்திருத்தத்தைச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அபே பாராளமன்றத்தில் எடுத்துரைத்தார்.

வெறுவாய மெல்பவனுக்கு ஐ, எஸ் அமைப்புக் கொடுத்த அவல்

ஈராக்கில் இசுலாமியத் தீவிரவாதிகள் இரு ஜப்பானியர்களைக் கொன்றதுடன் ஜப்பானை ஒரு போர் செய்யக் கூடிய நாடாக்க வேண்டும் என்ற கொள்கையுடைய தலைமை அமைச்சர் ஷின்ஜோ அபேயின் செல்வாக்கு உயர்ந்துள்ளது.  சீனப் பாதுகப்புத் துறை நிபுணர் ஷி யொங்மிங் பணயக் கைதிகள் கொல்லப்பட்ட விவகாரத்தை வைத்து தலைமை அமைச்சர் ஷின்ஜோ அபே  தனது போர் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றப் பார்க்கின்றார் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.  வலதுசாரி அரசியல்வாதியான ஜப்பானியத் தலைமை அமைச்சர் ஷின்ஜோ அபே பதவிக்கு வந்த நாளில் இருந்தே ஜப்பானை ஒரு போர்புரியக் கூடிய நாடாக மாற்றுவதற்குத் தடையாக இருக்கும் ஜப்பானிய அரசமைப்பு யாப்பின் ஒன்பதாவது பிரிவை மாற்ற வேண்டும் எனக் கடும் பரப்புரை செய்து வருகின்றார். இந்தத் திருத்தத்தைச் செய்வதற்கு ஜப்பானியப் பாராளமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றின் இரண்டு பங்கு ஆதரவு வேண்டும் என்பதுடன் ஜப்பானிய மக்களிடையேயான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் சாதாரண பெரும்பான்மையுடனான ஆதரவையும் பெற வேண்டும். உலக அமைதிக்கும் அபிவிருத்திக்கும் ஜப்பான தனது நட்பு நாடுகளின் இணைந்து போர் புரியக் கூடிய வகையில் அதன் அரசமைப்பு மாற்றப் பட வேண்டும் என ஜப்பானியத் தலைமை அமைச்சர் ஷின்ஜோ அபேயும் அவரது ஆதரவாளர்களும் பெரும்பரப்புரை செய்து வருகின்றனர். அதாவது ஜப்பானும் அமெரிக்கப்படைகளுடன் இணைந்து போர் புரிய வேண்டும் என்பது அபேயின் கொள்கையாகும். ஜப்பான் எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளல் அவசியம் என அபே கருதுகின்றார். அபே அரசியலில் ஈடுபடத் தொடங்கிய காலத்தில் இருந்தே ஜப்பானிய அரசமைப்பு யாப்பைத் திருத்த வேண்டும் என்ற கொள்கையுடையவர்.

அமெரிக்காக்காரன் அல்வா கொடுத்தால்!!!!!
உலக வரலாற்றிலேயே முதல் முதலாக அணுக்குண்டால் தாக்கப்பட்ட நாடான ஜப்பான் ஐக்கிய அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தின் படி 1947-ம் ஆண்டு மே மாதம் 3-ம் திகதி நிறைவேற்றிய அரசமைப்பு யாப்பின்படி ஜப்பான் வேறு நாடுகளுடனான பிணக்கைப் போர் மூலம் தீர்க்க முடியாது. தனது நாட்டுக் குடிமக்களைப் பாதுகாக்க வேறு நாடுகளுக்குப் படை அனுப்ப முடியாது. ஒரு தன்னைப் பாதுகாக்கும் படையை மட்டுமே வைத்திருக்கலாம். சுருங்கச் சொன்னால் ஜப்பானியப் படையினர் மீது வேறு யாராவது சுட்டால் மட்டுமே ஜப்பானியப் படைகள் திருப்பிச் சுடலாம். இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்த ஜேர்மனியின் அரசியல்யாப்பில் இல்லாத ஒன்று ஏன் ஜப்பானிய யாப்பில் இருக்க வேண்டும் என்பது சில ஜப்பானியர்கள் எழுப்பும் கேள்வியாகும். ஜப்பானின் படைத்துறைச் செலவு ஆண்டுக்கு 49 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கின்றது. அது சீனாவின் 188 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஈடாக மாட்டாது. அதனால் ஆண்டுக்கு 640 பில்லியன் டொலர்கள் செலவு செய்யும் அமெரிக்காவில் ஜப்பான் தங்கியிருக்க வேண்டிய நிலை. அத்துடன் 23 படையினருக்கு ஜப்பானின் 58,000 படையினர் ஈடாகவும் முடியாது. உலகப் படைவலுப்பட்டியலில் சீனா மூன்றாம் இடத்திலும் ஜப்பான் பத்தாம் இடத்திலும் இருக்கின்றன. 2014-ம் ஆண்டு ஏப்ரம் மாதம் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபமா சீனா ஜாப்பானிற்குச் சொந்தமான தீவுகளை அபகரிக்க முயன்றால் ஜப்பானைப் பாதுகாக்கும் அமெரிக்க ஜபானிய பாதுகாப்பு உடன்படிக்கையின் படி அமெரிக்கா ஜப்பானைப் பாதுகாக்கும் என உறுதியளித்தார்.  அமெரிக்கா கைவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வியும் ஜப்பானிய மக்கள் மத்தியில் உண்டு.

வேண்டாம் இந்த சீனப் பூச்சாண்டி

சீனா ஒன்றும் சிறந்தத படைவலுவைக் கொண்ட ஒரு நாடல்ல. சீனாவின் படைக்கலன்களில் பெரும்பான்மையானவை பழுதடையும் நிலையில் உள்ளன. சீனாவிடம் இருக்கும் 7580 தாங்கிகளில் 450 மட்டுமே நவீனமானவை. சீனாவிடம் இருக்கும் 1321 போர் விமானங்களில் 502 மட்டுமே போர்க்களத்தில் பாவிக்கக் கூடியவை. எஞ்சிய பழைய சோவியத் ஒன்றியத்திடம் வாங்கிய பழைய விமானங்களாகும். சீனா முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் கப்பலை வாங்கித் திருத்தி உருவாக்கிய லியோனிங் என்னும் விமானம் தாங்கிக் கப்பல் நவீன தொலை தூரப் போர் விமானங்களைத் தாங்கிச் செல்லக் கூடியவை அல்ல. அவை சீனக் கரையேரப் பாதுகாப்புக்கு மட்டுமே போதுமானவை. அமெரிக்காவின் F-35 போர் விமானங்கள் லியோனிங் விமானம் தாங்கிக் கப்பல் மீது 290 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தே லியோனிங்கால் இனம் காண முடியாத வரையில் பறந்து கொண்டே ஏவுகணைகளால் தாக்குதல் செய்ய முடியும். இது போலவே சீனாவின் J-15 போர் விமானங்களால் இனம் காண முன்னரே அமெரிக்காவின் F-35 போர் விமானங்களால் J-15ஐத் தாக்கி அழிக்க முடியும்.  ஜப்பான் தனது தீவுகளை அமெரிக்காவிடம் இருந்து வாக்கிய Standard Missile-3, Patriot Advanced Capability-3  ஆகிய ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் மூலம் பாதுகாக்கின்றது.

ஜப்பான் வாங்கிக் குவிக்கவிருக்கும் படைக்கலன்கள்
...2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4.98 ரில்லியன் யென்கள் (41பில்லியன் டொலர்கள்) பெறுமதியான படைக்கலன்களை வாங்குவதாக முடிவு செய்துள்ளது. அதில் முப்பது AAV-7 Amphibious vehicle என்னும் நிலத்திலும் நீரிலும் பயணிக்கக் கூடிய ஊர்திகள், இருபது P-1 கண்காணிப்புக் கடற்கலன்க்கள், ஆறு F-35Aபோர் விமானங்கள், ஐந்து Bell Boing V-22 போர் விமானங்கள், மூன்று Global Hawks ஆளில்லாப் போர் விமானங்கள், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை இடைமறிக்கும் முறைமை போன்றவையும் உள்ளடக்கபட்டிருக்கின்றன.

சீனாவுக்கு ஆப்பு வைக்கும் ஜப்பான் - அமெரிக்கக் கூட்டு
ஜப்பானும் அமெரிக்காவும் இணைந்து SM-3-Block-IIA   என்னும் எறியங்களைக் (porjectiles) கொண்ட ஒரு ஏவுகணை எதிர்ப்பு முறைமையை உருவாக்குகின்றன.  21 அங்குல பரிமாணமுள்ள இந்த எறியங்கள் மற்ற எறியங்களுடன் ஒப்பிடுகையில் பெரியவையும் வேகமாகப் பாயக் கூடியவையுமாகும். அத்துடன் தாழவரும் ஏவுகணைகளையும் அழிக்கக் கூடியவை. ஜப்பான் ஏற்கனவே நான்கு உளவுச் செய்மதிகளை விண்வெளியில் விட்டுள்ளது. இனி அமெரிக்காவுடன் இணைந்து  மேம்படுத்தப்பட்ட GPS எனச் சுருக்கமாக அழைக்கபப்டும் Global Positioning System உருவாக்கவிருக்கின்றது. இதன் மூலம் வானிலும் கடலிலும் நிலத்திலும் நடப்பவற்றைத் தடயமறிய முடியும். மேலும் இரு தகவற்பரிமாற்றச் செய்மதிகளையும் ஜப்பான் விண்வெளியில் சேவையில் ஈடுபடுத்தவிருக்கின்றது.

சீனாவின் பலவீனப் புள்ளியை மையப்படுத்தும் ஜப்பான்

  சீனா என்னதான் தனது படைவலுவைப் பெரிதாக்கினாலும் அதன் படைகளுக்கு போர் முனை அனுபவம் என்பது கிடையாது எனச் சொல்லலாம். இதுவே சீனாவின் பலவீனமாகும். நேட்டோப் படைகள் ஆப்கானிஸ்த்தானிலும் ஈராக்கிலும், சிரியாவிலும் தமது நேரடிப் போன் முனை அனுபவங்களைப் பெற்றுள்ளன. ஜப்பான் மற்ற நாடுகளுடன் இணைந்து பாதுகாப்புப் போர் புரியலாம் என தனது அரசியலமைப்பு யாப்பை மாற்றி உலகின் பல பாகங்களுக்கும் தனது படையினரை அனுப்பி நேரடிப் போர் முனை அனுபவங்களைப் பெற்றால் ஜப்பானியப் படையினரை எதிர் கொள்வது சீனாவிற்கு முடியாத காரியம் ஆகிவிடும். பன்னாட்டு அரங்கில் செய்யும் இந்த போர் முனைச் செயற்பாட்டை சமாதானத்திற்கான பங்களிப்பின் முனைப்பு (proactive contribution to peace) என்னும் பெயரிட்டுக் காட்ட ஜப்பான் விரும்புகிறது. ஜப்பானை வெறுப்பவர்கள் சீனர்கள் மட்டுமல்ல. கொரியர்களும் ஜப்பானை அதிகம் வெறுக்கின்ற்னர். ஜப்பானிய ஆதிக்கத்தின் கீழ் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை சீனர்களைப் போலவே கொரியர்களும் மறக்கவில்லை. வட கொரியா தனது அழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்களை வளர்த்து வருகின்றது. தென் கொரியா பொருளாதார ரீதியில் மட்டுமல்ல படைத்துறை ரீதியிலும் ஜப்பானுக்குச் சவாலாக அமையக் கூடிய ஒரு நாடு.


ஜப்பானிற்கும் வல்லரசுக் கனவு உண்டு
இந்தியா, ஜேர்மனி, தென் ஆபிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளைப் போல் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தற்போது உள்ள வல்லரசு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் போது தாமும் ஒரு வல்லரசாக வேண்டும் என ஜப்பான் நினைக்கின்றது. ஜப்பானின் மக்கள் தொகை, பொருளாதார வலு, படை வலு ஆகியவை மற்ற நாடுகளுக்கு சளைத்தவை அல்ல சவால் விடக்கூடியவை.

அமெரிக்காவின் பங்காளியா பணியாளியா

அமெரிக்காவின் ஆசியச் சுழற்ச்சி மையத் திட்டத்தின் கீழ் 2020-ம் ஆண்டு அமெரிக்காவின் படைவலுவில் 60 விழுக்காடு ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் நிலை கொள்ளவிருக்கின்றது. அத்துடன் ஆசிய பசுபிக் நாடுகளை இணைத்து அமெரிக்கா அமைக்கும் பொருளாதாரக் கூட்டமைப்பில் ஜப்பானும் இணையவிருக்கின்றது. அமெரிக்காவிற்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் ஜப்பானும் தனது படைவலுவைப் பெருக்க வேண்டும். அப்போதுதான் அமெரிக்காவின் பங்காளியாக ஜப்பான் செயற்படமுடியும் அல்லாவிடில் அமெரிக்காவின் பணியாளி நிலைதான் ஜப்பானுக்கு ஏற்படும்.  அத்துடன் தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப ஜப்பானின் படை வலுவும் இருக்க வேண்டும். தொடர்ந்தும் அமெரிக்காவில் அது தங்கியிருக்க முடியாது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...