Friday 11 September 2015

சீனாவின் இணையவெளித் திருட்டுக்கு அமெரிக்காவின் பதிலடி.

அமெரிக்காவின் வர்த்தக இரகசியங்களைத் திருடிய சீன நிறுவனங்களுக்கும் தனியார்களுக்கும் எதிராக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் நிர்வாகம் முன்பு எப்போதும் இல்லாத பொருளாதாரத் தடைப் பொதி ஒன்றை உருவாக்குகின்றது. இது தொடர்பான விபரங்கள் விரைவில் வெளிவரவிருக்கின்றது.

இணையவெளிப் பொருளாதாரத் திருட்டுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போகையில் இப்படி ஒரு நடவடிக்கை அவசியம் எனக் கருதப்படுகின்றது. அமெரிக்காவின் அணுவலு இரகசியங்களில் இருந்து வலையங்களின் தேடுபொறிவரை பல வர்த்தக இரகசியங்களை அமெரிக்காவில் இருந்து சீனர்களால் திருடப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுகின்றது.

அமெரிக்க தொழில்நுட்பங்களை சீனா இணைய வெளியில் ஊடுருவித் திருடுவதால் அமெரிக்காவிற்கு ஆண்டு தோறும் 300 பில்லியன் டாலர்கள் இழப்பீடும் இரண்டு மில்லியன் பேருக்கான வேலைகள் இழக்கப்படுவதாகவும் அமெரிக்கப் பாராளமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.
சீனாவிடம் "இணையவெளி நீலப் படைப்பிரிவு" என்ற பெயரில் இணையவெளி நிபுணர்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவு உண்டு. இவை "இரவு யாளி" என்னும் பெயரில் பிரித்தானியாவிற்கு எதிராக ஒரு படை நடவடிக்கையை மேற் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கவிற்கு பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் லொக்கீட் நிறுவனத்தின் கணனிகள் தொடர் ஊடுருவல் முயற்ச்சிகளுக்கு உள்ளாகி வருகிறது. முழுக்க முழுக்க கூகிளின் இணையத் தளம் போல் போலியான ஒரு இணையத்தளத்தை சீனாவில் உருவாக்கி அதில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் உண்மை என நம்பி உள் நுழைந்து தமது மின்னஞ்சல்களின் கடவுச்சொற்களை பதிந்தனர். இதனால் பல இரகசியங்கள் திருடப்பட்டன. இணையவெளிப் போர்முனையில் சீனா முன்னணியில் இருக்கிறது என்று ஐக்கிய அமெரிக்கா அஞ்சுகிறது. இதனால்  அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தனது இணையவெளிப் போர் முறைமைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளதாக 27-01-2013இலன்று செய்திகள் வெளிவந்தன.

சீனப் அதிபர் ஜி ஜின்பிங் செப்டம்பர் மாத இறுதியில் அமெரிக்காவிற்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளும் தறுவாயில் இப்படிப்பட்ட பொருளாதாரத் தடை விதிக்கப்படுவது பிரச்சனைக்கு உரியதாயும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப் படுகின்றது. ஏற்கனவே தென் சீனக் கடலில் சீனாவின் அத்து மீறல்கள் சீனாவின் நாணய மதிப்பிறக்கம் ஆகியவை இரு நாடுகளுக்கும் இடையில் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
சீனாவில் இருந்து தொடர்ச்சியாக இணைய வெளியூடாக அமெரிக்க வர்த்தக மற்றும் படைத்துறை இரகசியங்களை சீனா திருடுவதாக உறுதியாக நம்பும் அமெரிக்கா மிகவும் விசனமடைந்துள்ளது எனபதை சீன அதிபரின் பயணத்தின் முன்னர் செய்யபடவிருக்கும் பொருளாதாரத் தடைகள் தொடர்பான அறிவிப்பு எடுத்துக் காட்டுகின்றது.
2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இணையவெளித் திருட்டுக்கு எதிராகத் தண்டனைகள் வழங்கும் தனது நிறைவேற்று ஆணையைப் பிறப்பித்திருந்தார். அமெரிக்க அதிபர் வழங்கும் நிறைவேற்று ஆணை ஒரு சட்டமாகும்.
அமெரிக்கத் திறைசேரிச் செயலர், சட்டமா அதிபருடனும் வெளியுறவுத் துறைச் செயலருடனும் கலந்து ஆலோசித்து பொருளாதாரத் தடைகளைச் செய்யலாம் என நிறைவேற்று ஆணை குறிப்பிடுகின்றது.
இந்த நிறைவேற்று ஆணையின் முதல் தண்டனையாக சீனாவின் நிறுவனங்களுக்கும் தனி நபர்களுக்கும் எதிரான பொருளாதாரத் தடையாக அமையப் போகின்றது என எதிர் பார்க்கப் படுகின்றது. அவர்களது சொத்துக்களை முடக்குதல் வியாபார நடவடிக்கைகளை இரத்துச் செய்தல், போன்றவை தண்டனைகளாக்கப் படலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது.
இணைய வெளியூடாக அமெரிக்க இரகசியங்களைத் திருடுபவர்களுக்கு எதிராகப் பொருளாதாரத தடை விதிப்பதுடன் அரசுறவியல் நடவடிக்கைகள், வர்த்தகக் கொள்கை மாற்றங்கள், சட்ட நடவடிக்கைகள் போன்றவையும் செய்யப்படலாம். அமெரிக்காவின் பெறுமதி மிக்க இரகசியங்களைத் திருடியவர்கள் தேச எல்லைகள் என்னும் திரைகளுக்குப் பின்னால் ஒளிந்து நின்று தப்ப முடியாது என்றார் பராக் ஒபாமா. மேலும் அவர் எமது தேசத்தின் சொத்துக்களை இணைய வெளியூடாகத் திருடுவுபவர்களுக்கு எதிராக எடுக்கப் படும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப் படும் என்றார்.
அமெரிக்க உளவுத் துறையினரின் கருத்துப்படி சீனா மட்டுமல்ல அமெரிக்க இரகசியங்களைத் திருடுவது. ஆனால் பெரும்பாலான திருட்டுக்கள் சீனாவில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்றன.

ஏற்கனவே 2014-ம் ஆண்டு அமெரிக்கா சீனப் படைத்துறை அதிகாரிகளின் மீது இணையவெளித் திருட்டுக்காக நிதிமன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்துள்ளது. 2015-ம் ஆண்டு சீனாவின் Tianjin University இன் மூன்று பேராசிரியர்கள் மீது அமெரிக்கா இணையவெளித் திருட்டுக் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்கு சீனாவின் பதிலடி எப்படி இருக்கும் என்பது பற்றியும் அமெரிக்காவில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சீனாவில் அரச ஊழியர்கள், பொதுவுடமைக் கட்சிச் செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் எனப் பெரும்பாலானோர் தமது தகவற் பரிமாற்றத்திற்கு SMS எனப்படும் குறுந்தகவல்களிலேயே பெரிதும் தங்கியுள்ளனர். 2012-ம் ஆண்டு சீனாவில் 90 கோடி குறுந்தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன. சீனக் கைப்பேசி நிறுவனங்களின் கணனிகளை அமெரிக்கா ஊடுருவி எல்லா குறுந்தகவல் பரிமாற்றங்களையும் திருடிவிட்டதாக எட்வேர்ட் ஸ்னோடன குற்றம் சாட்டுகிறார்.

உலகில் முன்னணி நாடுகள் யாவும் இணையவெளியூடாக தகவல் திருட்டிலும், உளவு பார்த்தலிலும், தக்குதல்களிலும் ஈடுபட்டுள்ளன. இணையவெளிப்படைப்பிரிவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா இதில் அதிக அளவு ஈடுபட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவின் உலகக் காவற்துறை நிலை தகர்கப்பட்டால் சீனா கூட முறையான உலக வர்த்தகத்தில் ஈடுபட முடியாத நிலை ஏற்படும் என்பதை சீனாவும்

சீனாவும் இரசியாவும் இணைந்து அமெரிக்கத் தனியார் நிறுவனங்கள் பலவற்றின் கணினிகளை ஊடுருவி அமெரிக்க அரசுறவியலாளர்கள் மற்றும் உளவாளிகள் பற்றிய பல தகவல்களைத் திரட்டியுள்ளன. விமானச் சேவைகளின் கணினிகளை ஊடுருவி அதன் பயணிகளின் விபரங்களையும் பயண விபரங்களையும் திரட்டி அதில் அரசுறவியலாளர்கள் யார் உளவாளிகள் யார் என்பது பற்றியும் அவர்களது நடமாட்டம் பற்றியும் தகவல்களை இரசியாவும் சீனாவும் பெற்றுக் கொண்டதுடன் இரு நாடுகளும் தாம் திருடிய தகவல்களை ஒன்றுடன் ஒன்று பரிமாறியும் கொண்டன என லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ் பத்திரிகை அண்மையில் செய்தி வெளிவிட்டிருந்தது. அதே பத்திரிகை. ஜுனேய்ட் ஹுசேய்ன் என்ற ஒரு தனிநபர் அமெரிக்காவின் 1300அமெரிக்காவின் படைத்துறை மற்றும் உளவுத் துறையைச் சேர்ந்தவர்களின் பெயர்கள், படங்கள், முகவரிகள் போன்றவற்றை இணையவெளி ஊடுருவல் மூலம் திரட்டி பின்னர் அவற்றை சமூக வலைத்தளங்களில் பிரசுரித்து அவர்களைக் கொல்லும் படி வேண்டுகோள் விடுத்ததாகவும் அதே பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது

நாடுகளுக்கு இடையிலான மோதல்கள், தரை, கடல், விண்வெளி ஆகியவற்றில் மட்டுமல்ல இணைய வெளியிலும் நடக்க விருக்கின்றது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...