Wednesday 12 August 2015

சீனாவின் நாணய மதிப்பிறக்கம் நாணயப் போரை உருவாக்குமா?

சீனா தனது றென்மின்பி நாணயத்தின் பெறுமதியை 2015 ஓகஸ்ட் 11-ம் திகதி 1.9 விழுக்காடும் பின்னர் 12-ம் திகதி  1.6 விழுக்காடும் குறைத்து உலக அரங்கில் ஓர் அதிர்வலையை உருவாக்கியுள்ளது. உடனடி விளைவாக சீனாவிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் பங்கு விலைகள் வீழ்ச்சியடைந்தன. சீனாவில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிகரித்தன. ஓகஸ்ட் 12-ம் திகதியும் சீனாவின் றென்மின்பியின் பெறுமதி குறைக்கப்பட்டது. நாணயப் பெறுமதியை குறைத்ததுடன் பெறுமதி மீதான சீன மைய வங்கியின் பிடியும் தளர்த்தப்பட்டுள்ளது.

சீனா தனது நாணயத்தை உலகச் சந்தையில் "மிதக்க" விட்டதைத் தொடர்ந்து அதன் நாணயத்தின் பெறுமதி மாற்றம் 0.6 விழுக்காடு வரையிலான ஏற்ற இறக்கத்துள் மட்டுப்படுத்தப் பட்டு வைக்கப் பட்டிருந்தது. சீனா திடீரென  தனது நாணயத்தின் பெறுமதியைக் குறைத்தமைக்குச் சொல்லப்படும் காரணங்கள்:
1. ஏற்றுமதியை அதிகரிக்க.
2. தனது நாணயத்தை உலக நாணயமாக மாற்றும் முன்னேற்பாடு
3. தனது பங்கு விலைச் சரிவை சரிக்கட்ட
4. பன்னாட்டு நாணய நிதியத்தில் தனது நாணயத்தையும் "கூடை நாணயங்களில்" ஒன்றாக ஏற்றுக் கொள்ளச் செய்ய.
5. உலக எரிபொருள் விலை வீழ்ச்சி சீனாவிற்கு சாதகமானது 

சீன நாணயமான றென்மின்பியின் பெறுமதியைக் குறைத்தது சீனப் பொருளாதாரத்தின் வலுவிழந்த நிலையைக் காட்டுகின்றது என்றும் சீன ஆட்சியாளர்கள் அதையிட்டுக் கலவரமடைந்துள்ளனர் என்றும் கருத்துக்கள் பொருளாதார நிபுணர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. 2015 ஜுலை மாதத்திற்கான சீன ஏற்றுமதி 8.3விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. தனது ஏற்றுமதியைத் தக்க வைத்துக்கொள்ள றென்மின்பியின் பெறுமதி டொலருக்கு எதிராக 15 விழுக்காடு குறைய வேண்டும் என்கின்றனர் சில நிபுணர்கள்.

நாணயப் போர் உருவாகுமா?
சீனாவின் நாணய மதிப்புக் குறைப்பு  ஒரு நாணயப் போரை உருவாக்குமா என்ற கேள்வியையும் உருவாக்கியுள்ளது. ஒரு நாடு மற்ற நாடுகளில் தனது உற்பத்திப் பொருட்களை மலிவு விலையில் சந்தைப் படுத்துவதற்காக தனது நாட்டின் நாணயத்தை மற்றைய நாடுகளின் நாணயத்தினுடன் ஒப்பீட்டளவில் மதிப்பைக் குறைத்து வைத்திருக்க விரும்புகிறது. இந்த சொந்த நாணய மதிப்புக் குறைப்பை பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு செய்யும் போது நாணய்ப் போர் உருவாகிறது. ஏற்கனவே ஐக்கிய அமெரிக்காவில் சீனா தனது நாணயத்தைத் திட்டமிட்டு பெறுமதியைக் குறைத்து வைத்துள்ளது. இதனால் அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்கள் பாதிப்படைந்துள்ளது என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.  சீன நாணய மதிப்பிறக்கத்தால் அமெரிக்கா செய்யும் என எதிர்பார்த்த வட்டி விழுக்காட்டுக் குறைப்பு கால தாமதமாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இது டொலரின் மதிப்பைக் குறைக்கும். அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவையில் பலர் சீனாவின் நாணயத்தின் மதிப்பு உயர்த்தப்பட வேண்டும் அல்லது டொலரின் பெறுமதியைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அமெரிக்காவின் குடியரசுக் கட்சி வேட்பாளராக வரப் போட்டியிடும் Donald Trump சீனாவின் நாணய மதிப்புக் குறைப்பு அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு பேரிடியாகும் என்றார்.

சீன நாணயத்தின் டபுள் ரோல்
சீனாவின் நாணயம் றென்மின்பி மற்றும் யுவான்  என்னும் இரண்டு பெயர்களைக் கொண்டுள்ளது. பொதுவுடமை ஆட்சியின் பின் மக்கள் நாணயம் என்னும் பொருள்கொண்ட றென்மின்பி என்னும் பெயர் சூட்டப்பட்டது. அது இரு பெயர்கள் மட்டுமல்ல இரட்டைத் தன்மையும் கொண்டது. உள்நாட்டு (onshore) றென்மின்பி என்றும் வெளிநாட்டு (offshor) றென்மின்பி என்றும் இரு வேறு பெறுமதிகளை சீன நாணயம் கொடுள்ளது. சீனாவின் வெளிநாட்டு றென்மின்பி 2.9 விழுக்காடு வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இது உள்நாட்டு நாணயத்தின் 2 விழுக்காடு வீழ்சியிலும் பார்க்க அதிகமானதாகும். வெளிநாட்டு நாணய வர்த்தகர்களின் செயற்பாடுகளில் இருந்து தனது நாணயத்தின் பெறுமதியைக் காப்பாற்ற இந்த இரட்டைத் தன்மை பேணப்படுகின்றது.

கூடையில் சீனக் கருவாடும்
தற்போது 7 விழுக்காடு வளரும் சீனப் பொருளாதாரம் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நான்கு விழுக்காட்டிற்கு குறைவான அளவே வளரும் என்பதாலும் 2015 ஜூன் மாதத்தில் சீனப் பங்குச் சந்தை பெரு வீழ்ச்சியைக் கண்டதாலும் சீனா தனது நாணயத்தின் பெறுமதியைக் குறைத்து தனது நாட்டினது குறைந்து கொண்டிருக்கும் ஏற்றுமதியைத் தூண்ட முயல்கின்றது. அதே வேளை சீனாவின் இன்னும் ஒரு நோக்கமான தனது நாணயத்தை உலக நாணயமாக்குவதையும் சீனா நிறைவேற்ற முயல்கின்றது. இனி சீன நாணயம் பெறுமதி குறைவடையாது என்ற நிலையை சீனா உருவாக்கியுள்ளது. சீனா தனது நாணயத்தையும் பன்னாட்டு நாணய நிதியத்தின் (IMF)முக்கிய நாணயங்களான "கூடை நாணயங்களில்" ஒன்றாக இணைக்க விரும்புகின்றது. அதற்காக சீனா தனது நாணயத்தின் நடவடிக்கை தொடர்பாக பல சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டியிருக்கின்றது. சீன நாணயத்தை கூடை நாணயங்களில் ஒன்றாக இணைப்பது தொடர்பான தீர்மானத்தை 2016-ம் ஆண்டு செப்டம்பர் வரை ஒத்தி வைத்துள்ளது. பன்னாட்டு நாணய நிதியத்தின் கூடைக்குள் தற்போது அமெரிக்க டொலர், யூரோ, ஜப்பானிய யென், பிரித்தானியப் பவுண் ஆகிய நாணயங்கள் மட்டுமே இருக்கின்றன.  சீனாவின் நாணயத்தை சுதந்திரமாக வாங்கவோ விற்கவோ முடியாது. அதற்கான கட்டுப்பாடுகள் நிறைய உண்டு. இந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்பது பன்னாட்டு நாணயத்தின் நிபந்தனையாகும்.

நடுப்புள்ளி
தற்போது சீன நாணயத்திண் பெறுமதியை அதன் மைய வங்கி நாள் தோறும் காலை 9.15இற்கு நிர்ணயிக்கின்றது. இதை நடுப்புள்ளி என்பர் பின்னர் நாணயம் சந்தையில் நடுப்புள்ளியில் இருந்து இரண்டு விழுக்காட்டிலும் பார்க்க கூட ஏற்றவோ இறக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. இது கைவிடப்பட்டு நாணயச் சந்தைதான் நாணயத்தின் பெறுமதியை நிர்ணயம் செய்யும் வகையில் மாற்றம் செய்யப் பட வேண்டும். இப்படிச் செய்தால் மட்டுமே  பன்னாட்டு நாணய நிதியத்தின் கூடை நாணயங்களுள் ஒன்றாக சீன நாணயம் இணைக்கப்படும். ஆனால் சீன நாணய வர்த்தகம் சுதந்திரமாக நடந்தால் நான்கு ரில்லியன் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு சீனாவிடம் இருப்பதால் அதன் பெறுமதி உயர வாய்ப்புண்டு. அது சீனாவின் ஏற்றுமதியைப் பாதிக்கும்.இனி சீனாவின் நடுப்புள்ளியை சீன மையவங்கி தான் விரும்பியபடி தினம் தோறும் தீர்மானிக்காமல் முதல் நாள் சந்தை மூடப்படும்போது என்ன பெறுமதியில் றென்மின்பி இருந்ததோ அதே அடுத்தநாள் நடுப்புள்ளிப் பெறுமதியாக்கப்படும். இது சீன நாணயத்தின் பெறுமதியில் அதன் மையவங்கியின் தலையீட்டைக் குறைக்கின்றது. சீனா செய்த இந்த நகர்வை பன்னாட்டு நாணய நிதியம் வரவேற்றுள்ளது. உலகச் சந்தையில் எரிபொருட்களின் விலை தொடர்ந்துவீழ்ச்சியடையும் என்ற எதிர்பார்ப்பும் சீனாவின் நாணய மதிப்பிறக்கம் செய்யும் முடிவிற்கு சாதகமாக உள்ளது.

உலக நாணயமாக றென்மின்பி
கடந்த ஆண்டு அமெரிக்க டொலருக்கு எதிராக யூரோ  22 விழுக்காடும் ஜப்பானிய நாணயமான யென்  24 விழுக்காடும் வீழ்ச்சியடைந்திருக்கும் வேளையில் சீனாவின் 2015 ஓகஸ்ட் 11-ம் திகதி தனது நாணயத்தின் மதிப்பை குறைப்பது அதன் ஏற்றுமதியை அதிகரிக்க அவசியமான ஒன்றாகும்.
சீனா உலகின் முன்னணி நாடாக தான் வரவேண்டும் என்ற கொள்கைக்கும் முயற்சிக்கும் அதன் நாணயம் உலக நாடாக மாற்றப்படுவது அவசியம். இதற்கு ஏற்ப சீனா ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியை உருவாக்கியது. கடந்த 2,200 ஆண்டுகளாக சிறந்த சமூகக் கட்டமைப்பு, சிறந்த கல்வித்தரம், தொழில்நுட்பத்தில் மேன்மை கொண்ட நாடாக இருந்து வருகின்றது.  அமெரிக்காவின் பாதுகாப்புச் செலவீனம் சீனாவின் பாதுகாப்புச் செலவீனத்திலும் பார்க்க ஐந்து மடங்கு. 1.3 மில்லியன்(1,300கோடி) மக்கள் தொகையை கொண்ட சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகும் ஆனால் தனிநபர் வருமானம் என்று பார்க்கும் போது சீனா உலகில் 79வது இடத்தில் இருக்கின்றது. இதனால் சீனா ஒரு முதல்தர நாடாக மாற நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கின்றது.

அமெரிக்காவிற்கு இலாபம்
சீன நாணயத்தின் மதிப்புக் குறைந்த படியால் அமெரிக்கா சீன பொருட்களை மலிவாக வாங்கலாம். அதன் வெளிநாட்டு செல்வாணியை இது அதிகரிக்கும். அமெரிக்காவில் விலைவாசி குறையும். அப்பாவிச்  தற்போது இருக்கும் நிலையில் அமெரிக்காவும் தனது நாணயத்தின் மதிப்பைக் குறைக்க முயலாது. ஐரோப்பிய யூரோ நாணயமும் ஜப்பானின்  யென்னும் ஏற்கனவே பெறுமதி குறைக்கப்பட்டு விட்டன. அப்பாவிச் சீனத் தொழிலாளர்கள் சுரண்டப்படுகின்றார்கள்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...