Friday 14 August 2015

செஞ்சோலைக் கொலையாளிகளைக் தண்டிக்காமல் பன்னாட்டு விசாரணை முடிந்ததா?

வல்லிபுனம் எனும் கல்விவனம் தேடி வந்த
அல்லி இனம் எனும் தமிழ்ப் பெண்கள்
பயிற்சிப் பட்டறை  நாடி வந்த கதையது
பட்டறையல்ல கல்லறை இதுவென
புக்காராக்கள் சீறிவந்த சதியது
பட்டுடல்கள் சிதைய குண்டுகள்
போட்டுச் சிங்களம் கொன்ற கதியது
தமிழர் வரலாறு மறக்குமோ
வஞ்சியரைக் கொன்ற வடுக்களை
தமிழனின் வலிகளை வரலாறு மறக்குமோ

பட்டெனும் குழலும் பிறையெனும் புருவமும்
பல சந்த மாலை மடல் பரணி பாவையர்
நஞ்சென வீழ்ந்த குண்டுகளால்
பஞ்செனக் கருகிச் சாம்பலான
வல்லிபுனக் கொடுமையை
வரலாறு மறக்குமோ
பதினாறு குண்டுகளில்
அறுபத்தொரு சிட்டுக்கள்
சிறகொடிந்த கதை
ஈழவன் மறப்பானோ

புகரப் புங்க வன்னி மன்றில்
பவளத் துங்க வரிசை வாயுடை வஞ்சியர்
நகரவிருத்தி நாடுவிருத்தி
எனப்பயில வந்த காலை
செருவுக்கஞ்சி காலை ஏழுமணிக்கு
புக்காராவில் வந்து கொன்ற கதையை
வன்னி நிலத்து வல்லிபுனத்துக்
கொடுமையை வரலாறு மறக்குமோ

முகாமையில் மேலாண்மை
தலைமைத்துவத்தில் தனித்திறமை
ஆண் பெண் சமத்துவம்
தன்னம்பிக்கையில் முக்கியத்துவம்
கால முகாமைத்துவம் ஆகியவை
ஆழப் பயின்று நாளைய ஈழம்
நடத்த முன்வந்த சிட்டுக்கள்
வல்லிபுனத்தில் சிறகொடிந்தன

சங்கு போல் மென் கழுத்து
கதிர் ஆழித் திங்கள்
வதனமெனக் கொண்ட வஞ்சியரை
மேலோர் ஆக்க முயலுகையில்
செஞ்சோலையில் வதைத்த கதை
ஈழத் துயரக் கடலிடை
துளியாய் நிற்பதல்ல
ஈழத்தாய் நெஞ்சத்திடை கனலாய்
என்றும் கொதிக்கும்
வல்லிபுனத்து வன்கொலை

இனக்கொலையாளியை அழைத்து
வெண் குடை விருது
கொடி தாள மேள தண்டிகை எனப்
பாரதம் பாராட்டி மகிழ்ந்த பாதகத்தினை
வல்லிபுனத்து வஞ்சியர் கொலையதை
நினைத்தால் பொறுக்குமோ

2006 ஆகஸ்ட் 14
விடியலைத் தேடி நின்ற
இனத்திற்கு என்றும் போல் விடிந்தது
விடிவின்றிக் கதிர் புலர்ந்தது - துயருக்கு
முடிவொன்று தேடும் இனத்திற்கு
இடியொன்று விழுந்தது
செஞ்சோலையில் எம் பூந்தளிர்களை
கீபீரில் வந்த அரக்கர்கள்
குண்டுகளுக்கிரையாக்கினர்
போர்க்குற்ற வாளிகளை
பூண்டோடு கூண்டேற்றாமல்
பன்னாட்டு விசாரணை வேண்டாம்
உள்நாட்டு விசாரணை போதுமென்பாரை
தேர்தல் களத்தில் காண்கின்றோம்

பூஞ்சோலையாய் பூத்துக் குலுங்க வைக்க
தேர்தெடுந்த வன்னிக் கொழுந்துகள்
தலைமைத்துவப் பயிற்ச்சிக்கும்
அனர்த்த முகாமைத்துவத்துக்கும்
கடைந்தெடுத்த வருங்கால வல்லவர்கள்
தமிழர் தாயக நிர்வாகத்தை
பின்னாளில் தம் பிஞ்சுத் தோளில் தாங்கவந்த
அஞ்சுக மொழி பேசும் பிஞ்சுப் பெண்களை
அழித்தனர் வஞ்சகர் குண்டுகளால்

பயங்கரவாதப் பயிற்ச்சி முகாமை
அழித்தோம் எனக் கொக்கரித்தனர்
சிங்களப் பேரினவாதிகள்
பேசாமல் நின்றனர் இந்தியப் பேரினவாதிகள்
கண்டனம் தெரிவிக்காமல்
இணைத் தலைமை நாடுகள் என்னும்
தறுதலை கூட்டமும் பாராமுகமாயிருந்தது

போர் நிறுத்தத்தை கண்காணித்தோரும்
போய்ப்பார்த்து ஆய்ந்து சொன்னனர்
படை நிலையல்ல அதுவென்று
அக்கொலைகள் செய்த போர்க்குற்றவாளிகளை
இன்றுவரை கூண்டு ஏற்றாக் கோழைகள்
தேர்தல் களத்தில் மார் தட்டி நிற்கின்றனர்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...