Saturday 29 August 2015

வட துருவத்தில் ஓர் ஆதிக்கப் பனிப்போர்

பூமியின் வட பகுதியில் அறுபத்தி ஆறரை டிகிரி அட்ச ரேகை வரையுள்ள வட்டப் பகுதியானது ஆர்க்டிக் வளையம் என்று அழைக்கப் படுகிறது. ஆர்க்டிக் வளையம் என்னும் கற்பனைக் கோட்டுக்கு வடக்கே இருக்கும் 1.1 மில்லியன் சதுரமைல் பிரதேசம் ஆர்க்டிக் கண்டம் எனப்படும். உதவாத பனிப்பாறைகளைக் கொண்ட பிராந்தியம் எனகப் பல ஆண்டுகளாக கருதப்பட்டு வந்த ஆர்க்டிக் கண்டம் தற்போது உலகின் முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
முன்னை நட்ட கொடி
1909-ம் ஆண்டு ஆர்க்டிக் கண்டத்துக்கு முதலில் சென்ற அமெரிக்கரான ரொபேர்ட் பியரி வடதுருவம் எனப்படும் பூமியின் வட முனையில் அமெரிக்கக் கொடியை நாட்டி இந்தப் பிராந்தியம் அமெரிக்காவினுடையது எனப் பிரகடனப் படுத்தினார். தற்போது நோர்டிக் நாடுகள் என அழைக்கபடும் டென்மார், ஃபின்லாந்து, ஐஃச்லாந்து, நோர்வே, சுவீடன் ஆகிய நாடுகளும் இரசியாவும், கனடாவும் ஐக்கிய அமெரிக்க்காவும் இந்த ஆர்க்டிக் கண்டத்தில் ஆதிக்கம் செய்யப் போட்டி போடுகின்றன.
ஆடாத ஆர்க்டிக் சபை
பூமியின் தென் துருவத்தை ஒட்டிய அண்டார்டிக்கா கண்டத்தை ஒரு உடன்படிக்கையின் அடிப்படையில் சில நாடுகள் ஆய்வுகளை அங்கு மேற்கொள்கின்றன. ஆர்ஜெண்டீனா, ஒஸ்ரேலியா, பெல்ஜியம், சிலி, பிரான்ஸ், ஜப்பான், நியூசிலாந்து, நோர்வே, தென் ஆபிரிக்கா, இரசியா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் அண்டார்டிக் கண்டத்தில் ஐம்பதிற்கு மேற்பட்ட விஞ்ஞான ஆய்வு மையங்களை நிறுவி ஆராய்ச்சிகள் செய்கின்றன. ஆனால் ஆர்க்டிக் கண்டம் தொடர்பாக ஒரு காத்திரமான உடன்படிக்கை ஏதும் செய்யப்படவில்லை. கனடா, டென்மார், ஃபின்லாந்து, ஐஃச்லாந்து, நோர்வே, இரசியாசுவீடன், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் கூடி ஆர்க்டிக் சபை என ஒன்றை நிறுவியுள்ளன. இவை ஆர்க்டிக்கின் சூழல் பாதுகாப்பு தொடர்பாகவும் அங்கு சிக்குப்பட்டவர்களை மீட்பது தொடர்பாகவும் உடன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்தச் சபை ஒரு அதிகாரமற்ற சபையாகும். ஆர்க்டிக் கண்டத்தின் மீதான உரிமைக்கு என ஒரு பன்னாட்டுச் சட்டமோ அல்லது உடன்படிக்கையோ இல்லை. இந்த ஆண்டில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஆர்க்டிக் சபை அமெரிக்காவின் தலைமையில் கீழ் இயங்கவிருக்கின்றது. உக்ரேனின் கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்ததைத் தொடர்ந்து ஆர்க்டிக் சபையின் மற்ற நாடுகள் இரசியாவுடன் கடுமையாக முரண்படுகின்றன.
இரசிய அமெரிக்கப் போட்டி
ஐக்கிய நாடுகள் சபையின் கடற்சட்டத்திற்கான உடன்படிக்கையின் படி ஆர்க்டிக் பிராந்தியம் யாருக்கும் உரித்தானது அல்ல. ஆனால் ஆர்க்டிக் கண்டத்துடன் எல்லையைக் கொண்டுள்ள நாடுகளுக்கு 200 கடல்மைல்கள் தூரம் வரை பொருளாதார உரிமம் உண்டு. கடற்படுக்கைக்கும் எந்த நாடும் உரிமை கொண்டாட முடியாது. அது ஐக்கிய நாடுகளின் கடற்படுக்கைச் சட்டத்திற்கான உடன்படிக்கையின் படி உலக மக்களுக்கு சொந்தமானது. இதனால் ஆர்க்டிக் கண்டத்தின் கடற்படுக்கை ஐக்கிய நாடுகள் சபையின் கடற்படுக்கை அதிகாரசபைக்கு சொந்தமானதாகின்றது. 2007-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 2-ம் திகதி ஆர்க்டிக்கா 2007 என்னும் பெயரில் இரசியா ஆர்க்டிக் கடற்படுக்கைகு சிறு நீர்மூழ்கிக்கப்பல்களை அனுப்பி அதன் இயந்திரக் கரங்கள் மூலம் கடற்படுக்கையில் தனது கொடியை நாட்டி அங்கிருந்து மணலையும் நீரையும் ஆய்வுகளுக்காக அள்ளிக் கொண்டது. ஆய்வில் கலந்து கொண்ட நிபுணர் ஆதர் சிலிங்கரோவ் ஆர்க்டிக் கண்டம் என்றும் இரசியாவிற்குச் சொந்தமானது என்றார். இதைத் தொடர்ந்து அமெரிக்கா தனது  Coast Guard icebreaker, the USCGC Healy என்னும் கப்பலை ஆர்க்டிக் கண்டத்திற்கு அனுப்பியது.
எல்லாமே எண்ணெய்க்குத்தான்.
ஆர்க்டிக் கண்டத்தில் ஆதிக்கம் செலுத்து பல நாடுகளும் முயல்வதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று அங்கு இருக்கும் பெருமளவு எரிபொருள் வளம். இரண்டாவது அங்கு பனிப்பாறைகள் தொடர்ந்து உருகிக் கொண்டிருப்பதால் அதனூடாக கப்பற் போக்கு வரத்துச் செய்ய வாய்ப்புண்டு. இதனால் வட அமெரிக்கா, வட ஐரோப்பா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளிடையான வர்த்தகம் இலகுவாகவும் மலிவாகவும்  நடக்க வாய்ப்புண்டு. ஆர்க்டிக் கண்டத்தினூடாக ஐந்து வேறு வேறு கடற்ப்பாதைகள் இனம் காணப்பட்டுள்ளன. உலகின் கைத்தொழில் உற்பத்தியில் 80 விழுக்காடு உலகின் வட பிராந்தியத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றது. மேலும் ஆர்க்டிக்கில் பெரும் கடலுணவுகளும் கனிம வளங்களும் இருக்கின்றன. ஆனால் ஆர்க்டிக்கில் எண்ணெய் அகழ்வு செய்வது செலவு மிகுந்தது. எரிபொருள் விலை வீழ்ச்சியடையும் நிலையில் அங்கு எண்ணெய் அகழ்வது இலாபகரமானது அல்ல. ஆனால் காலப்போக்கில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது அங்குள்ள எரிபொருள் மிகவும் தேவையானதாக மாறும்.  அத்துடன் சூழல் வெப்பமடைவதால் பனிப்பாறைகள் உருக எரிபொருள் அகழ்வது மலிவானதாக மாறலாம். உலகின் பாவனைக்கு உட்படுத்தப்படாத எண்ணெய் வள இருப்பின் 13 விழுக்காடும், எரிவாயு இருப்பின் 30 விழுக்காடும் ஆர்க்டிக் கண்டத்தில் இருப்பதாக நம்பப்படுகின்றது. யூரேனியம், இரும்பு, செப்பு, நிக்கல் ஆகிய உலோகங்களும் ஆர்க்டிக்கில் இருக்கின்றன. நெதர்லாந்தைச் சேர்ந்த உலகின் முன்னணி எரிபொருள் நிறுவனமான றோஜல் டச் ஷெல் ஆர்க்டிக் கண்டத்தில் எண்ணெய் அகழ்விற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
ஆளில்லாக் கண்டத்தில் ஆளில்லாப் போர்விமானங்கள்.
2015-ம் ஆண்டு மார்ச் மாதம் இரசியா 80,000படையினரையும், 220 போர் விமானங்களையும் 41 கப்பல்களையும் 15 நீர்மூழ்கிக்கப்பல்களையும் கொண்டு ஒரு பாரிய போர் ஒத்திகையை ஆர்க்டிக் பிராந்தியத்தில் செய்தது. 2018-ம் ஆண்டளவில் ஆர்க்டிக் கண்டத்தில் ஒரு தன்னிறைவான படைத்தளம் ஒன்றை அமைக்கும் திட்டம் இரசியாவிடம் உண்டு. நோர்வேயும் "Operation Cold Response"என்னும் குறியீட்டுப் பெயருடன் பல படைத்துறைப் பயிற்ச்சிகளில் நேட்டோப் படைகளுடன் இணைந்து செய்து வருகின்றது. இரசியாவை ஒட்டிய ஆர்க்டிக் கண்டத்தில் உள்ள எரிபொருள் வளங்களை பெறுவதற்கு அது ஆண்டு தோறும் 100பில்லியன் பெறுமதியான முதலீடுகளைச் செய்ய வேண்டும். அமெரிக்காவின் செய்மதிப்படங்களில் இருந்து இரசியா தனது ஓர்லன் - 10 என்னும் உத்திசார் ஆளில்லாப் போர்விமானங்களை ஆர்க்டிக் கண்டத்தில் நிறுத்தியிருப்பது கண்டறியப் பட்டுள்ளது. கனடாவும் தனது ஆளில்லாப் போர் விமானங்களை ஆர்க்டிக் கண்டத்தில் பறப்புகளில் ஈடுபடுத்தியுள்ளது. அமெரிக்காவின் பி-52 போர்விமானங்கள் 2015 ஏப்ரல் முற்பகுதியில் ஆர்க்டிக் கண்டத்தில் பறக்க வைத்தது. இது பயிற்ச்சி நோக்கங்களுக்காக என வெளியில் சொல்லப்பட்டாலும் உண்மையான காரணம் இரசியாவிற்கு சவால் விடுவதாகும். இந்தப் பயிற்ச்சி நடவடிக்கைக்கு அமெரிக்கா துருவ உறுமல் எனப் பெயரிட்டிருந்தது. ஆர்க்டிக் பிராந்தியத்தை ஒட்டிய தனது நட்பு நாடுகளுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்திருந்தது. ஆர்க்டிக் கண்டத்திற்குப் போட்டி போடும் எட்டு நாடுகளில் இரசியாவைத் தவிர மற்றவை நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் உள்ள நாடுகளாகும்.
அடிமாட்டு விலைக்குப் போன அலாஸ்க்கா
ஐக்கிய அமெரிக்காவின் ஆர்க்டிக் கண்டத்தின் மீதான உரிமை கோரல் அதற்குச் சொந்தமான அலாஸ்க்கா நிலப்பரப்பில் இருந்து உருவானது. இரசியாவிற்குச் சொந்தமாக இருந்த அலாஸ்க்கா என்னும் வடதுருவப் பிரதேசத்தை அமெரிக்கா ஐம்பது ஏக்கர் ஒரு டொலர் என்ற விலைப்படி 1867-ம் ஆண்டு வாங்கியது. சுமார் ஒரு நூற்றாண்டுக்கு மேல் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த அலாஸ்க்காவைப் பிரித்தானியப் பேரரசு ஆக்கிரமிக்கலாம் என்ற அச்சத்தில் இரசியா அமெரிக்காவிற்கு மொத்தம் 7.2 மில்லியன் டொலருக்கு விற்பனை செய்தது. ஆனால் அலாஸ்க்கா அமெரிக்காவிற்கு ஒரு பொருளாதார ரீதியில் இலாபமளிக்கக் கூடிய ஒன்றாக இதுவரை இருந்ததில்லை. ஆனால் அலாஸ்க்காவிலும் எரிபொருள் வளம் உண்டு. இரசியாவுடன் அமெரிக்கா எல்லையைக் கொண்டுள்ளது என்றால் அது அலாஸ்க்கா பிரதேசத்தில்தான்.  கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்ததன் பின்னர் இரசியாமீது அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதாரத் தடையால் இரசியர்கள் மத்தியில் அமெரிக்காவிற்கு எதிரான குரோதம் வளரத் தொடங்கியது. "கிறிமியா எங்களுடையது. அலஸ்க்கா அடுத்தது" என்ற குரல் இரசியாவில் ஒலிக்கத் தொடங்கியது. அலாஸ்க்காவை மீளக் கையளிக்கும் கோரிக்கை 37,000 பேர்களால் கையொப்பம் இடப்பட்டு வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்டது. "கிறிமியா எங்களுடையது. அலஸ்க்கா அடுத்தது" என்ற பதாகையுடன் பென்குவின் பறவைகள்  பல ஊர்வலம் போவது போல ஒரு படம் கணனியில் இரசியர்களால் உருவாக்கப்பட்டு பரவ விடப்பட்டது. ஆனால் பென்குவின் பறவைகள் ஆர்க்டிக் கண்டத்திலோ அல்லது அலாஸ்க்காவிலோ வாழ்வதில்லை இரசியர்களின் மொக்கை இது என அமெரிக்கர்கள் நையாண்டி செய்தனர். ஆனால் கிறிமியாவை இணைத்ததன் மூலம் ஒரு பெரும் வரலாற்றுத் தவறைச் சீர் செய்த விளடிமீர் புட்டீன் அடுத்த வரலாற்றுத் தவறான அலாஸ்கா விற்பனையையும் சீர் செய்ய வேண்டும் என பல இரசியர்கள் கருதுகின்றார்கள். அலாஸ்க்காவின் முப்பது இரசிய மரபுவழிக் கிறிஸ்த்தவ தேவாலயங்கள் உள்ளன. அலாஸ்க்காவின் ஸ்புரூஸ் தீவு இரசியத் திருச்சபைக்குச் சொந்தமானது என்றும் அதை விற்கவோ அல்லது வாங்கவோ யாராலும் முடியாது என்றும் ஒரு இரசிய சரித்திர அறிஞர் வாதிடுகின்றார். இரசியாவின்  மிக் - 31, ரியூ- 95 ஆகிய போர்விமானங்கள் அலாஸ்க்காவை ஒட்டிய வான்பரப்பில் பறப்பது அண்மைக்காலங்களாக அதிகரித்து வருகின்றது. 2014-ம் ஆண்டு பத்துக்கு மேற்பட்ட தடவைகள் அமெரிக்காவின் F-22 போர்விமானங்கள் இரசிய விமானங்களின் அலைவரிசைகளை குழப்பி திருப்பி அனுப்பியுள்ளன. இரசியா தனது போர்விமானங்களை அலாஸ்க்கா எல்லையை ஒட்டிய வான்பரப்பில் பறப்பதன் மூலம் ஆர்க்டிக் மீதான தனது ஆளுமையை உறுதி செய்ய முயல்வதுடன் கண்காணிப்பு மற்றும் உளவு நடவடிக்கைகளையும் செய்கின்றது.
சீனாவா கொக்கா
சீனாவும் ஆர்க்டிக் கண்டத்தில் அதிக அக்கறை காட்டி வருகின்றது. ஆர்க்டிக் சபையில் 2007-ம் ஆண்டில் இருந்து ஒரு பார்வையாளராக இருக்கின்றது. 2013-ம் ஆண்டு ஐஸ்லாந்துடன் சீனா ஒரு வர்த்தக உடன்படிக்கையை செய்து கொண்டு. ஐஸ்லாந்தின் வடபகுதியில் உள்ள ஆர்க்டிக் பிராந்தியத்தில் பனி உடைக்கும் கப்பல்களைச் சேவையில் ஈடுபடுத்தியது. அத்துடன் நோர்வேயின் Spitsbergen தீவில் ஒரு ஆய்வு மையத்தையும் உருவாக்கியுள்ளது. தரைவழிப் பட்டுப்பாதை கடல்வழிப்பட்டுப்பாதை என தனது கொள்வனவுகளுக்கும் விநியோகங்களிற்க்குமான பாதையில் அதிக அக்கறை காட்டும் சீனாவிற்கு ஐரோப்பாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் குறுகிய ஒரு தூர வழி மிகவும் கவர்ச்சிகரமானதாகும். ஆர்க்டிக்கின் ஊடான பாதையின் நீளம் தற்போது பாவிக்கும் பாதையிலும் பார்க்க 30 விழுக்காடு குறைவானதாகும். ஆர்க்டிக் பிராந்திய ஆய்வுகளிற்காக சீனா அறுபது மில்லியன் டொலர்கள் செலவு செய்கின்றது. இது அமெரிக்கா செய்யும் செலவீனத்திலும் பார்க்க அதிகமானதாகும்.
இந்தியா, சிங்கப்பூர், தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகளும் கூட ஆர்க்டிக் கண்டத்தில் அகழ்வு செய்வதற்கும் கடற்பயண உரிமத்திலும் அக்கறை காட்டுகின்றன. ஆனால் இரசியா மற்ற நாடுகளிலும் பார்க்க ஆர்க்டிக் கண்டத்தில் முன்னணியில் இருக்கின்றது. அது அங்கு ஏற்கனவே எரிபொருள் அகழ்வைத் தொடங்கிவிட்டது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...