Saturday 4 April 2015

ஈரானுடனான அணுக்குண்டுப் பேச்சு வார்த்தையில் வெற்றியடைந்தது யார்?

தற்காலத்தில் இராசதந்திரப் பேச்சு வார்த்தை என்பது ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து இருவருக்கும் வெற்றி என்ற நிலையில் முடிப்பது என்றாகி விட்டது. உலகின் ஐந்து வல்லரசுகளும் ஜேர்மனியும் ஒரு புறமும் ஈரான் மறுபுறமுமாக இருந்து நடாத்தி பேச்சு வார்த்தையில் ஈரான் தனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு முடிவை எட்டியுள்ளது. ஈரான் எமக்கு ஒரு பாடத்தை இங்கு போதிக்கின்றது. பேச்சு வார்த்தை என்பது வலியவர்கள் கொடுப்பதை மட்டும் மற்றவர்கள் ஏற்றுக் கொளவதுமல்ல வலியவர் என்னை நீ நம்புகிறாயா எனக் கேட்கும் போது மற்றவர்கள் மாடு போல் தலையாட்டுவதுமல்ல என்பதை தமிழர்களின் தலைவர்கள் எனத் தம்மைச் சொல்லுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உடன்படிக்கை தொடர்பாக உடன்பாடு
ஐக்கிய அமெரிக்கா, இரசியா, சீனா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய ஐந்து வல்லரசு நாடுகளும் ஜேர்மனியும் இணைந்து P5+1 என்னும் பெயரிலான குழுவாக ஈரானின் அணுக்குண்டு உற்பத்திக்கான யூரேனியப் பதப்படுத்துதலை நிறுத்துவது தொடர்பாகஒரு தொடர் பேச்சு வார்த்தை நடாத்தி ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளன. 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் திகதி ஈரானுடன் கைச்சாத்திடப்படும் உடன்படிக்கை எப்படி அமைய வேண்டும் என்பது தொடர்பாகவே இப்போது சுவிற்சலாந்து நகரான லௌசானின் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இன்றுவரை ஈரான் தான் யூரேனியம் பதப்படுத்துவது சமாதான நோக்கங்களுக்கு மட்டுமே அணுக்குண்டு தயாரிப்பதற்கு அல்ல என அடித்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றது.

சவுதி ஒரு புறம் இஸ்ரேல் மறுபுறம்

ஈரானின் அணுக்குண்டு உற்பத்தி தொடர்பாக இஸ்ரேல் மட்டுமல்ல சவுதி அரேபியாவும் அதிக கரிசனை கொண்டிருந்தது. ஈரான் அணுக்குண்டு உற்பத்தி செய்தால் சவுதி அரேபியாவும் பாக்கிஸ்த்தானின் உதவியுடன் அணுக்குண்டுகளை உற்பத்தி செய்யலாம் என அஞ்சப்பட்ட்டது. இதனால் ஒரு அணுப் படைக்கலப் பரவலாக்கம் மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் ஏற்படலாம் எனவும் அஞ்சப்பட்டது . லிபியா, துனிசியா, அல்ஜீரியா, பாஹ்ரேன், எகிப்து ஆகிய நாடுகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சவுதி அரேபியாவின் முக்கிய எரிபொருள் வளப் பிரதேசங்களைத் தான் கைப்பற்ற வேண்டும் என்ற கனவு ஈரானிய மதவாத ஆட்சியாளர்களுக்கு உண்டு என சவுதி அரேபியா கருதுகின்றது. ஈரானின் இந்தக் கனவை அது அணுக்குண்டு மூலம் சாதிக்க நினைக்கிறது என்று சவுதி அஞ்சுகிறது. இதனால் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்தது போல் ஈரானையும் ஆக்கிரமிக்க வேண்டும் என சவுதி விரும்பியது.

ஈரானைத் தாக்கத் திட்டமிட்ட சவுதியும் இஸ்ரேலும்
ஈரானின் எல்லா பதப்படுத்தப்பட்ட யூரேனிய இருப்பையும் அழிக்க வேண்டும் என சவுதியும் இஸ்ரேலும் இரகசியமாக ஆலோசனை நடாத்தின. சியா முசுலிம் நாடான ஈரான் அணுக்குண்டு உற்பத்தி செய்வதையிட்டு சுனி முசுலிம் நாடான சவுதி அரேபியா இஸ்ரேலிலும் பார்க்க அதிக கரிசனை கொண்டிருந்தது. இஸ்ரேலும் சவுதியும் P5+1 நாடுகளிற்கும் ஈரானிற்கும் இடையி நடக்கும் பேச்சுவார்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டால் அது தமது நாடுகளுக்கு ஆபத்தாய் அமையும் என அஞ்சின. ஈரான் அணுக்குண்டைத் தயாரித்தால் முதலில் செய்வது சவுதியில் இருக்கும் புனித நகர்களான மக்காவையும் மதீனாவையும் கைப்பற்றுவதாகும். இத்னால் சவுதியும் இஸ்ரேலும் இரகசியமாக இணைந்து ஈரானின் அணு ஆய்வு நிலைகளைத் தாக்கி அழிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. சவுதி அரேபியாவின் வான் பரப்பினூடாக பறந்து சென்று ஈரான் மீது தாக்குத நடத்துவது இஸ்ரேலுக்கு பெரும் வாய்ப்பாக அமையும். சவுதி அரேபிய விமானத் தளங்களைப் பாவித்தால் இஸ்ரேலுக்கு ஈரானிய யூரேனியப் பதப்படுத்தும் நிலையங்களைத் தாக்குவது மேலும் இலகுவாகும். 1981-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ம் திகதி இஸ்ரேலிய விமானங்கள் சவுதி அரேபிய வான் பரப்பினூடாகப் பறந்து சென்று ஈராக்கின் அணு ஆராய்ச்சி நிலைகளைத் தாக்கி அழித்தன. மலைகளும் பாறைகளும் நிறைந்த ஐந்து இடங்களில் ஈரான் தனது யூரேனியம் பதப்படுத்தும் நிலையங்களை அமைத்துள்ளது. அந்த ஆழத்திற்கு துளைத்துச் செல்லக் கூடிய குண்டுகளை ஏற்கனவே இஸ்ரேல் உருவாக்கிவிட்டதா அல்லது அமெரிக்காவிடமிருந்தோ அல்லது பிரான்ஸிடமிருந்தோ அவற்றை வாங்கிவிட்டதா என்பது ஒரு கேள்வியாக இருந்தது. இஸ்ரேலிய உளவுத் துறையான மொசாட் ஏற்கனவே சவுதித் தலைநகர் ரியாத்தில் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன. இரசிய ஊடகம் ஒன்றிற்கு கருத்துத் தெரிவித்த ஈரானிய அரசியல் ஆய்வாளர் செய்யது முகம்மது மராண்டி இஸ்ரேலும் சவுதியும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடாத்தினால் இரு நாடுகளுக்கும் பதிலடி கொடுப்பதுடன் உலகப் பொருளாதாரத்தின் மீதும் பெரும் அடி விழும் எனவும் எச்சரித்திருந்தார்.

மரதன் பேச்சு வார்த்தை
ஈரானின் யூரேனியப் பதப்படுத்துதலை நிறுத்துவதற்கான இராசதந்திர முயற்ச்சி கடந்த 13 ஆண்டுகளாக  நடை பெற்றன. ஈரானின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு அது தொடர்ச்சியாக இறுக்கப்பட்டது. ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை 1979-ம் ஆண்டு ஈரானில் மன்னர் ஷா ஆட்சியில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டதில் இருந்து ஆரம்பமானது. தொடர்ந்து 1995-ம் ஆண்டு அப்போதைய அதிபர் பில் கிளிண்டன் தனது ஆணை மூலம் ஈரானில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்வதற்குத் தடை விதித்தார். 1996-ம் ஆண்டு அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவை ஈரானில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்தன. ஈரானின் யூரேனியம் பதப்படுத்தலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் ஈரானுடன் அணு உற்பத்தி தொடர்பான எந்தவித வர்த்தகமும் செய்யக் கூடாது என்ற தடை 2006-ம் ஆண்டு விதிக்கப்பட்டது. இத்தடை 2007-ம் ஆண்டு மேலும் இறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தியது. ஐநா பாதுகாப்புச் சபையில் ஈரானுக்கு எதிராக 2008-ம் 2010-ம் ஆண்டுகளில் மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. ஐக்கிய அமெரிக்கா ஈரானின் வங்கிகள் மீது தடை விதித்தது. ஐக்கிய அமெரிக்காவுடன் பிரித்தானியாவும் கனடாவும் இணைந்து கொண்டன. 2012-ம் ஆண்டு ஈரானின் மைய வங்கி மீது அமெரிக்கா தடை விதித்தது. SWIFT என்னும் பன்னாட்டு வங்கிக் கொடுப்பனவு முறைமையில் இருந்து ஈரான் வெளியேற்றப் பட்டது. இவற்றால் ஈரானியப் பொருளாதாரம் பெரும் பாதிப்பு உள்ளானது.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைப் பொறுத்தவரை அவர் ஈரானுடன் ஒரு போரை விரும்பவில்லை. ஈரானை அணுக்குண்டு தயாரிப்பதில் இருந்து தடுக்க 1. இஸ்ரேல் ஈரானிய அணு ஆய்வு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும். 2. அமெரிக்கா ஈரானிய அணு ஆய்வு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும். 3 அல்லது இரு நாடுகளும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டும். ஒபாமா இதில் எதையும் விரும்பவில்லை.  இது அமெரிக்காவின் மிக நெருக்கமாக மிக நீண்டகால நட்பு நாடுகளாக இருக்கும் இஸ்ரேலையும் சவுதி அரேபியாவையும் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. ஈரானுடனான பேச்சு வார்ததையை விரும்பாதவர்கள் இந்தப் பேச்சு வார்த்தையை கரடியுடன் நடனமாடுவதற்கு ஒப்பிட்டனர். ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பிரச்சனை இன்னும் பல ஆண்டுகளுக்குத் தொடரும் என அவர்கள் எச்சரித்திருந்தனர். ஈரானுடனான பிரச்சனை வெறும் யூரேனியம் பதப்படுத்தல் பிரச்சனை மட்டுமல்ல. ஈரானின் ஆதரவுடன் செயற்படும் தீவிரவாதக் குழுக்கள் உலக அமைதிக்குப் பெரும் அச்சுறுத்தல்கள் எனவும் அவர்கள் எச்சரித்தார்கள்.

ஈரானுடனான உடன்பாட்டில் இஸ்ரேலின் இருப்பு உரிமையை ஈரான் அங்கீகரிக்க வேண்டும் என இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ வலியுறுத்தி இருந்தார். அது பற்றி ஈரானுடன் எந்த உடன்பாடும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. ஈரானியப் படைத்தளபதி இஸ்ரேலை அழிப்பது தொடர்பாகவோ இஸ்ரேலைத் தப்பவைப்பது தொடர்பாகவோ பேச முடியாது எனச் சூளுரைத்திருந்தார்.

உளவு பார்த்த இஸ்ரேல்
ஈரானுடனான பேச்சு வார்த்தை தொடர்பாக சவுதி அரேபியாவிற்கு இரகசியமாகத் தகவல்கள் வழங்கிக் கொண்டிருந்த வேளையில் இஸ்ரேலுக்கு அப்படித் தகவல் எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் இஸ்ரேல் தனது உளவுத்துறையினரைப் பாவித்து லௌசான் நகரில் இருந்து தகவல்கள் பெற்றது அம்பலமாகியது. இஸ்ரேல் உளவுத் துறை மூலம் திரட்டிய தகவல்களை தனக்கு வேண்டிய அமெரிக்கப் பாராளமன்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டது.

உடன் பாட்டின் முக்கிய அம்சங்கள்
முதலாவது ஈரனிடம் இருக்கும் யூரேனியம் பதப்படுத்தும் Centrifuge எனப்படும் சுழலும் உருளைகளை பெருமளவில் குறைக்க வேண்டும். தற்போது ஈரான் 19,000 சுழலும் உருளைகள் வைத்திருக்கின்றது. இவற்றை 6000 ஆகக் குறைக்க வேண்டும்.
இரண்டாவது ஈரான் அடுத்த 15 ஆண்டுகளுக்கு 3.67 விழுக்காடு மட்டுமே யூரேனியத்தைப் பதப்படுத்த முடியும். இந்த அளவு குறைவான பதப்படுத்தலால் ஈரானால் அணுக்குண்டு தயாரிக்க முடியாது.
மூன்றாவது ஈரான் தன்னிடம் தற்போது இருக்கும் பதப்படுத்தப் பட்ட யூரேனியத்தை 98 விழுக்காட்டால் குறைக்க வேண்டும். ஈரானிடம் தற்போது 10,000 கிலோ பதப்படுத்தப் பட்ட யூரேனியம் இருக்கின்றது இதை 300 கிலோவாகக் குறைக்க வேண்டும்.
நான்காவது ஈரான் தனது யூரேனியப் பதப்படுத்தலை நடான்ஸ் என்னும் நகரில் மட்டுமெ செய்ய முடியும். அத்துடன் ஐ-ஆர்-1 எனப்படும் சுழலும் உருளைகளை மட்டுமே யூரேனியப் பதப்படுத்தலுக்குப் பாவிக்க முடியும்.  த்ற்போது ஈரான் ஐ-ஆர்-2 என்னும் சுழலும் உருளைகளை யூரேனியம் பதப் படுத்தப் பயன்படுத்துகின்றது. இதனால் விரைவாக யூரேனியத்தைப் பதப் படுத்த முடியும்.
ஐந்தாவது பன்னாட்டு அணுவலு முகவரகம் ஈரானில் தனது தேடல்களையும் சோதனைகளையும் மேற்கொள்ள முடியும்.
ஆறவது அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஈரான் எந்த கனநீர் அணு உலைகளையும் உருவாக்கக் கூடாது.
ஏழாவது தான் இதுவரை பாவித்த அணு உலை எரிபொருடகளை மீள்பாவனைக்கு உட்படுத்தக் கூடாது.

சுவிஸ் நகர் லௌசானில் ஏற்பட்ட உடன்பாட்டைத் தொடர்ந்து எப்போது ஈரான் மீதான பொருளாதாரத் தடை நிக்கப்படும் என அறிவிக்கப்படவில்லை.

அமெரிக்கப் பாரளமன்றம் முட்டுக் கட்டை போடுமா?
அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஈரானுடனான உடன்பாடு தொடர்பாக மகிழ்ச்சி எங்கும் நிலவுகின்றது. ஆனால் ஒபாமாவிற்கு எதிர்கட்சியான குடியரசுக் கட்சியினரைப் பெரும்பான்மையினராகக் கொண்ட அமெரிக்கப் பாராளமன்றத்தில் பல ஐயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவையில் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடை தொடர்பாக சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தன. மக்களவை மீண்டும் ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கலாம். ஆனால் அதை இரத்து செய்யும் அதிகாரம் அமெரிக்க அதிபருக்கு உண்டு. அமெரிக்க அதிபரின் இரத்தைச் செல்லுபடியற்றதாக்குவதற்கு பாராளமன்றத்தின் மக்களவையிலும் மூதவையிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் குடியரசுக் கட்சிக்கு அது இப்போது இல்லை. இதனால் குடியரசுக் கட்சியினரால் பெருமளவு முட்டுக்கட்டை போட முடியாது. அவர்களால் செய்யக் கூடிய ஒரே செயல் ஈரானுடனான பேச்சு வார்த்தைக்கான நிதி ஒதுக்கீட்டை முற்றாக இல்லாமல் செய்வது மட்டுமே.

உடன் பாட்டின் தாற்பரியங்கள்
சுவிஸ் நகரான லௌசானில் P5+1 நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் காணப்பட்ட உடன்பாடு தொடர்பாகக் கருத்து வெளியிட்ட இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ இந்த உடன்பாடு ஈரான் அணுக்குண்டு உருவாக்குவதைத் தடை செய்யாது மாறாக ஈரான் அணுக் குண்டு உற்பத்தி செய்வதற்கு வழிவகுக்கும் எனச் சொன்னார். ஈரானிடம் உள்ள எல்லா பதனிடப்பட்ட யூரேனியமும் அழிக்கப்படவேண்டும் என்பதும் ஈரான் எத ஒரு யூரேனியப் பதப்படுத்தலையும் செய்வதைத் தடை செய்ய வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தி இருந்தது. ஆனால் பல இஸ்ரேலியப் படைத்துறை ஆய்வாளர்கள் உடன்பாடு எதிர்பார்த்திலும் பார்க்கச் சிறப்பானதாக அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர். ஈரானுடன் எந்தவித பேச்சு வார்த்தையிலும் ஈடுபடாமல் அதன் யூரேனியம் உற்பத்தி நிலையங்களைத் தாக்கி அழிக்க வேண்டும் எனப் பல இஸ்ரேலில் உள்ள தீவிரவாதச் சிந்தனை உள்ளவர்கள் கருதினார்கள். இவர்கள் தோற்கடிக்கப் பட்டுவிட்டதாக ஈரானில் உள்ளவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மகிழ்ச்சியில் ஈரான்
ஈரானிய அதிபர் ஹசன் ரௌஹானி தாம் பேச்சு வார்த்தை மேசையில் வழங்கிய உறுதி மொழியைக் காப்பாற்றுவோம் என்றார். ஈரானில் மக்களில் இருந்து உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கொமெய்னி வரை அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அயத்துல்லா அலி கொமெய்னி இந்த உடன்பாட்டுக்கு சம்மதம் தெரிவிப்பாரா என்பது முதலில் சந்தேகத்திற்கு இடமானதாக இருந்தது. ஆனால் உடன்பாட்டால் ஈரான் மகிழ்ச்சியடைந்துள்ளது. ஈரானியர்கள் தெருவில் இறங்கி நடனமாடி தமது மகிழ்ச்சியைக் கொண்டாடினர். பராக் ஒபாமாவின் உடன்பாடு தொடர்பான உரையின் காணொளியை ஈரானிய அரச ஊடகங்கள் ஒளிபரப்புச் செய்தன. பராக் ஒபாமா அமெரிக்காவில் இருந்து கொண்டே காணொளி மூலமாக லௌசான் நகரில் உள்ள பேச்சு வார்த்தையில் பங்கு பற்றியவர்களுக்கு உரையாற்றினார். அவரின் உரையாற்றும் காணொளியுடன் நின்று ஈரானியப் பிரதிநிதிகள் தம்மைத்தாமே ஷெல்ஃபி படங்கள் எடுத்துக் கொண்டனர்.
லௌசான் நகரில் செய்யப்பட்டது உடன்பாடு மட்டுமே. அங்கு யாரும் எந்த ஒரு பத்திரத்திலும் கையொப்பமிடவில்லை. உடன்பாடு தொடர்பாக ஆங்கிலத்தில் வெளிவிடப்பட்ட செய்திகளுக்கும் பார்சி மொழியில் வெள்விடப்பட்ட செய்திகளுக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது. ஈரான் போர்டோ, இஸ்ஃபஹன், நந்தாஸ், ஆரக் ஆகிய நகரங்களில் யூரேனியம் பதனிடும் நிலையங்களை வைத்துள்ளது. இதில் எந்த ஒன்றும் மூடப்படுவதாக உடன்பாட்டில் இல்லை.

இஸ்ரேலுக்கு வைக்கப்பட்ட பொறி

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் பிரான்ஸ் பலஸ்த்தீனத்தை ஒரு அரசாக அங்கீகரிக்கும் தீர்மானத்தைக் கொண்டுவரவுள்ளாது. இதை அமெரிக்கா தனது வீட்டோ எனப்படும் இரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி இரத்துச் செய்வதாயின் லௌசான் நகரில் ஈரானுடன் செய்த உடன்பாட்டிற்கு எந்த முட்டுக்கட்டையும் இஸ்ரேல் செய்யக் கூடாது என நிபந்தனை இரகசியமாக விதிக்கபட்டிருந்தது. சவுதி அரேபியாவில் இருந்து பெருமளவு எதிர்ப்புக் கிளம்பவில்லை.

எரிபொருள் விலை வீழ்ச்சியடையும்
ஈரான் மீதான பொருளாதாரத் தடை விலக்கப்படுமிடத்து உலகில் எரிபொருள் விலை மேலும் வீழ்ச்சியடையவிருக்கின்றது. இது சீனாவிற்கும் இந்தியாவிற்கும் நன்மையளிக்கக் கூடியதாகும். ஆனால் எரி பொருள் விலை வீழ்ச்சி இரசியாவிற்கு மேலும் அடியாகப் போகின்றது. இதை ஈடு செய்ய இரசியா ஈரானுக்கு பெருமளவு படைக்கலன்களை விற்பனை செய்ய முயற்ச்சிக்கலாம்.

புவிசார் அரசியல் மாறுமா?
லௌசான் நகர் உடன்பாட்டைத் தொடர்ந்து  அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் இடையிலான உறவு சீரடையலாம்.  இது மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் புவிசார் அரசியலைத் தலைகீழாக மாற்றலாம். துருக்கி-ஈரான் - அமெரிக்கஆகியவற்றின் முக்கூட்டு உறவு ஒன்று உருவாகும் சாத்தியம் உண்டு. இதன் மூலம் தற்போது உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கும் சிரியா, ஈராக், லெபனான், காசா நிலப்பரப்பு, யேமன் ஆகிய நாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பது ஐக்கிய அமெரிக்காவின் மாற்றுக் கொள்கைகளில் ஒன்றாக இருக்கின்றது. ஈரானுடன் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்தி ஈரானில் உள்ள வலது சாரிகளையும் மேற்கு நாடுகள் சார்பானவர்களையும் ஊக்கப்படுத்துவதும் அமெரிக்காவின் ஒரு நோக்கமாக இருந்தது. 1979 இல் முறிந்து போன ஈரானிய அமெரிக்க உறவை மீண்டும் புதுப்பித்து வளைகுடாப் பிராந்தியத்தில் அமைதி பேணலில் ஈரானையும் ஒரு பங்காளியாக்கும் ஒபாமாவின் கனவு நிறைவேறுவதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கின்றது.

யார் ஆறாம் வல்லரசு
ஈரானுடனான பேச்சு வார்த்தைகளில் ஐந்து வல்லரசு நாடுகளுடன் ஆறாவது நாடாக ஜேர்மனி இணைந்திருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாயின் அதில் முதலிடம் ஜேர்மனிக்கா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது இந்தியா, ஜப்பான், பிரேசில், தென் ஆபிரிக்கா ஆகியவற்றின் வல்லரசுக் கனவைக் கலைக்கிறதா என்ற கேள்வியும் தொடர்கின்றது.

அமெரிக்கக் குடியரசுத் தேர்தலும் ஈரானும்
அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் ஏற்கனவே அமெரிக்காவின் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. குடியரசுக் கட்சியின் சார்பின் போட்டியிட முயலுபவர்கள் ஈரானுக்கு எதிரான தமது வீர வசங்களை இனி மேலும் முறுக்கேற்றிப் பேச வாய்ப்புண்டு. ஒபாமாவின் வெளிநாட்டுக் கொளகையைத் தாக்கிப் பேசிவரும் குடியரசுக் கட்சியினர் தமது தாக்குதலை மேலும் அதிகரிப்பர். மக்களாட்சிக் கட்சி (Democratic Party) சார்பில் போட்டியிடவிருக்கும் ஹிலரி கிளிண்டனுக்கு அமெரிக்காவின் மிதவாதிகளிடமிருந்து ஆதரவு பெருக வாய்ப்புண்டு.

இஸ்ரேலின் மூன்று முக்கிய நிபந்தனைகளான இஸ்ரேலின் இருப்பை ஈரான் ஏற்றுக் கொள்ள வேண்டும், ஈரானின் பதப்படுத்தப் பட்ட யூரேனிய்ம் முற்றாக அழிக்கப்படவேண்டும், ஈரான் எந்த ஒரு யூரேனியம் பதப்படுத்தலையும் செய்யக் கூடாது ஆகியவை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இஸ்ரேலைத் தோற்கடிக்கும் எதுவும் ஈரானியர்களுக்கு வெற்றியே.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...