Friday 27 February 2015

நகைச்சுவைக் கதை: முதலமைச்சரின் மூன்று பெட்டிகள்

picture from vinavu.com
முதலமைச்சர் ஆர்ஜீஎம் கடும் சுகவீனமுற்றுப் படுக்கையில் கிடந்தார். என்னேரமும் அவர் உயிர் பிரியலாம் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். இனி அவரின் இறுதி ஆசையை நிறைவேற்றுவதுதான் சரி என அனைவரும் அவரது கட்சியின் உயர் மட்டத்தினர் தீர்மானித்தனர். அவர்கள் முதலமைச்சர் ஆர்ஜீஎம் இடம் சென்று உங்கள் இறுதி ஆசை என்ன என்றனர். அதற்கு அவர் தனக்குப் பின்னர் அம்முதான் முதல்வராகவேண்டும் என்ற தனது ஆசையைத் தெரிவித்தனர்.  கட்சி உயர் மட்டத்தினர் சிலர் உடனே அங்கிருந்து விலகிவிட்டனர். சிலர் பற்களை நறு நறுவெனக் கடித்தபடி கைகளை பிசைந்து கொண்டு நின்றனர். அம்முவிற்கு வேண்டியவர்கள் அப்படியே ஆகட்டும் வாத்தியாரே என்றனர். முதலமைச்சர் ஆர்ஜீஎம் உடனடியாக அம்முவை அழைத்து வாருங்கள் என்றனர். அம்மு அழைத்துவரப்பட்டார். முதலமைச்சர் ஆர்ஜீஎம் தன்னையும் அம்முவையும் தனிமையில் விடும்படி சொன்னார். சிலர் சாகப்போகிற நேரத்திலுமா என்று தமக்குள் முணு முணுத்தபடி சென்றனர். அம்முவைத் தன்னருகே அழைத்த முதலமைச்சர் ஆர்ஜீஎம் எனக்குப் பிறகு நீதான் ஆட்சியையும் கட்சியையும் நடத்த வேண்டும் என்றார். அம்மு உள்ளுக்குள் மிகவும் மகிழ்ந்தபடி அது மிகவும் சிரமமான காரியம் என்று சொன்னார். அதற்கு முதலமைச்சர் ஆர்ஜீஎம் பயப்படாதே அம்மு என்று சொல்லிக் கொண்டு தன் தலையணைக்குக் கீழ் இருந்து ஒன்று இரண்டு மூன்று என இலக்க அடையாளமிடப்பட்ட மூன்று சிறு பெட்டிகளை அம்முவிடம் கொடுத்து நீ கடும் பிரச்சனைகளைச் சந்திக்கும் போது இப்பெட்டிகளை ஒன்றன் பின் ஒன்றாக திறந்து பார் என்று சொல்லிவிட்டு கண்ணை மூடிக் கொண்டார்.

முதலமைச்சராகப் பதவி ஏற்ற அம்மு ஆர்ஜீஎம் ஐ முற்றாக மறந்து விட்டு அவரின் கொள்கைகளுக்கு முற்றிலும் விரோதமானவரைத் தனது குருவாக ஏற்றுக் கொண்டு ஆட்சி நடத்தினார். அவர் பல பிரச்சனைகளை எதிர்கொண்டார். கட்சியில் பிரச்சனை. நாட்டில் பிரச்சனை. மத்திய அரசு ஆட்சியைக் கலைக்கலாம் என்ற அச்சம். அப்போது தான அம்முவிற்கு ஆர்ஜீஎம்இன் நினைவு வந்தது. அவர் கொடுத்த பெட்டிகளும் நினைவிற்கு வந்தன. முதலாவது பெட்டியைத் திறந்து பார்த்தார். உன் பிரச்சனைகள் எல்லாவற்றிற்ககும் காரணம் எதிர்க் கட்சியே என்று பரப்புரை செய் என்று ஒரு சிறு துண்டில் எழுதப்பட்டு இருந்தது. அம்முவும் அப்படியே செய்தார். பிரச்சனைகள் ஒருவாறு சமாளிக்கப்பட்டு அம்மு அடுத்த தேர்தலில் வெற்றியும் பெற்றார். ஆட்சி தொடர்ந்தது. ஊழல்களும் நிறைந்தன. அம்மு பெரும் பணக்காரியானார். மீண்டும் பிரச்சனைகள். பிரச்சனைகளுக்கு மேல் பெரும் பிரச்சனைகள். அம்மு இரண்டாம் பெட்டியைத் திறந்து பார்த்தார். எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம் மத்திய அரசு என்று பரப்புரை செய் என்று இருந்தது. அம்முவின் ஆட்சி கலைக்கப்பட்டது. இனிப் பெட்டிகளையே திறப்பதில்லை என்று முடிவு செய்தார் அம்மு. எதிர்க் கட்சியில் இருந்த அம்முவிற்குப் பெரும் யோகம் அடித்தது. ஆளும் கட்சியை தொலைக்கிறேன் பேர்வழி என்று பல தமிழ் உணர்வாளர்கள் எதிர்க்கட்சியில் இருந்த அம்முவை தேர்தலில் வெற்றி பெறச் செய்து ஆட்சியில் அமர்ந்தனர். அம்முவின் உற்ற தோழிக்கும் அம்முவிற்குமிடையில் அம்முவின் குருவினர் சண்டையை மூட்டி விட்டனர். தமிழின உணர்வாளர்கள் ஒருபக்கம் நெருக்கல் கொடுத்தனர். அவர்கள் சொற்படி நடந்தால் தனது ஆட்சியை தமிழர்களின் விரோதியான மத்திய அரசு தனது ஆட்சியைக் கலைத்துவிடும் என்ற பயம் ஒரு புறம். சொத்துக் குவிப்பு வழக்கு இன்னொரு புறம். அம்முவின் நோய்கள் இன்னும் புறம்  சிறைத்தண்டனை வேறு....எப்போது எத்தனை ஆண்டு சிறைவாசம் என்ற் அச்சம் எல்லாவற்றிற்கும் மேலாக.............................. அம்முவிற்குப் பெரும் துயர். சரி கடைசியாக அந்த மூன்றாவது பெட்டியைத் திறந்து பார்ப்போம் என்று போய் அந்த மூன்றாவது பெட்டியையும் திறந்து பார்த்தார். அதில் கிடந்த வாசகம்: "மூன்று பெட்டிகளைத் தயார் செய்".

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...