Saturday 10 January 2015

சீனாவின் பெண் பாவம்

உலகெங்கும் தனது பொருட்களை ஏற்றுமதி செய்து தமது வெளிநாட்டுச் செலவாணியை நான்கு ரில்லியன்களாக உயர்த்திய சீனா தனது தேவையைப் பூர்த்தி செய்ய முக்கியமான ஒன்றை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கின்றது. சீனாவில் ஏற்பட்டுள்ள பெண்களுக்கான தட்டுபாட்டைப் போக்க சீன இளைஞர்கள் தமக்கான மணமகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றர்.

ஒரு சீன இளைஞன் உள் நாட்டில் ஒரு மணமகளைத் திருமணம் செய்ய அறுபத்து நான்காயிரம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பணத்தைச் செலவிட வேண்டி இருக்கின்றது. இதே வேளை வியட்நாமில் இருந்து ஒரு மணமகளை இறக்குமதி செய்வதற்கு திருமணத் தரகருக்கு இருபதினாயிரம் அமெரிக்க டொலர்களிலும் குறைவான பணத்தைச் கொடுத்தால் போதும். அத்துடன் மணமகள் தனக்குப் பிடிக்கவில்லை என்று மணமகனை விட்டு ஓடினால் மணமகன் கொடுத்த பணம் மீளளிப்புச் செய்யப்படும் என்ற உத்தரவாதமும் அதாவது money-back guaranteeயும் உண்டு. பல தரகர்கள் பணம் வாங்கி மோசடி செய்த படியால் இந்த கொடுத்த பணம் மீளளிப்புச் செய்யப்படும் என்ற உத்தரவாதம் இப்போது வழங்கப்படுகின்றது .

1970களிற்குப் பின்னர் பல சீனர்கள் தமக்கு ஆண்பிள்ளை ஒன்று மட்டும் போதும் என்ற நிலையில் இருந்தனர். இதனால் பல சீன நகரங்களில் 150 ஆண்களுக்கு நூறு பெண்கள் என்ற நிலை இப்போது உருவாகியுள்ளது. 2020-ம் ஆண்டு பெண்களுக்கான பற்றாக் குறை தேசிய அளவில் 20 விழுக்காடு குறைவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஆண்களை ஆண்கள் திருமணம் செய்யும் தொகை அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சீன மணமகளைப் பிடிக்க இருபதினாயிரம் டொலர்கள் தேவைப்பட்டது. இப்போது அது மூன்று மடங்கிற்கு மேலாகிவிட்டது. 2020 ஆண்டு எப்படி இருக்கும் என்ற அச்சமும் சீன ஆண்களைத் ஆட்டிப்படைக்கின்றது.

மணமகள் தட்டுப்பாடினால் பல சீனக் கிராமங்கள் பிரமச்சாரிகளின் கிராமங்களாக  மாறி ஒழுக்கக் கேடுகள் அதிகரிக்கின்றன. இப்படி ஆயிரக்கணக்கான பிரம்மச்சாரிக் கிராமங்கள் சீனாவில் இருக்கின்றன. 2006-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 28 வயதிற்கும் 49 வயதிற்கும் இடைப்பட்ட பிரம்மச்சாரிகளில் 97 விழுக்காட்டினர் உயர் பள்ளிப்படிப்புப் படிக்காதவர்கள் என அறியப்பட்டது. நல்ல கல்வி கற்று நல்ல தொழிலில் இல்லாதவர்களுக்கு மணமகள் தேடுவது இயலாத காரியம் என்பதை இது சுட்டிக்காட்டுகின்றது.

சீனாவின் இந்தப் பிரச்சனைக்கு மூலகாரணம் பெண் சிசுக் கொலைகளே. முதலில் பிறந்த பெண் குழந்தைகள் கொல்லப்பட்டனர். பின்னர் கருவிலேயே பெண் பிள்ளை என்பத அறியும் வசதி வந்த பின்னர் அவர்கள் கொல்லப்பட்டனர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...