Monday 27 October 2014

சீனாவின் பளபளக்காத பட்டுப் பாதை

சீனாவின் கப்பல் போக்குவரத்து மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதில் உலகிலேயே சிறந்த கப்பல் கட்டுமானிகளாக சீனர்கள் இருந்தனர். 11-ம் நூற்றாண்டிலேயே சீனாவிடம் 52,000 கடற்படையினர் இருந்தனர். இவர்களின் முக்கிய பணி சீனாவின் கடல் வர்த்தகத்தைப் பாதுகாப்பதே. சீனாவின் கடல் வாணிபப் பாதை பட்டுப் பாதை எனப்படும். சீனா முக்கியமாக பட்டை ஏற்றுமதி செய்ததால் இந்தப் பெயர் வந்தது. இன்று சீனா கணனிகளை ஏற்றுமதி செய்தாலும் இயந்திரங்களை ஏற்றுமதி செய்தாலும் அவை போகும் பாதை பட்டுப்பாதை எனப்படுகின்றது. இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னர் சீனக் கடற் பட்டுப்பாதை  4,000 மைல்கள் (6,437 கிலோ மீட்டர்கள்) நீளமானதாக இருந்தது. இந்தப் பட்டுப்பாதை கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையிலான வர்த்தகப்பாதையக  மட்டுமல்ல ஒரு கலாச்சாரப் பரிவர்த்தனைப் பாதையாகவும் இருந்தது.

கடல் மாறும் தடங்கள்
சீனாவின் பட்டுப்பாதை இந்திய உப கண்டம், பாரசிகம்(ஈரான்) அரபு நாடுகள் ஆகியவற்றை இணைத்தது. ரோமாபுரியுடனும் வர்த்தகத்தை உருவாக்கியது. சீனாவின் பட்டு, தேயிலை, மட்பாண்ட்கள்  போன்றவை உலகெங்கும் விரும்பப்பட்டன. பின்னர் சீனக் கண்டு பிடிப்புக்களான காகிதம், அச்சுப்பொறி, வெடிமருந்து, திசையறிகருவி ஆகியவையும் உலகெங்கும் விரும்பப்பட்டன. டொமினோ போன்ற பல மேசை விளையாட்டுக்கள் கூட சீனவில் உருவாக்கப்பட்டவையே. 1500 ஆண்டில் உலக மொத்த உற்பத்தியின் 35 விழுக்காடு சீனாவினுடையது. அப்போது ஐரோப்பாவின் உற்பத்தி 17 விழுக்காடு மட்டுமே. ஆசிய நாடுகளின் உற்பத்தி உலக உற்பத்தியில் 77விழுக்காடு. இந்த நிலை மீண்டும் உருவாகும் நிலை இப்போது உருவாகியுள்ளது. அட்லாந்டிக் பெருங்கடலை ஒட்டி இருந்த அதிகாரப் போட்டி இப்போது பசுபிக் பெருங்கடலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஐரோப்பாவின் மக்கள் தொகை 742.5மில்லியன்கள். ஆசியாவின் மக்கள் தொகை 4,427 மில்லியன்கள்.

மாற்றுக்கு மாற்று
தனது எரிபொருள் கொள்வனவு மாலாக்கா நிரிணையில் தடுக்கப்பட்டால் பர்மாவின் சிட்வே துறைமுகத்தில் இருந்து ஒரு தரைவழிப்பாதையையும், அதுவும் தடைபட்டால் பாங்களாதேசத்தின் சிட்டகொங் துறைமுகத்தில் இருந்து ஒரு தரைவழிப்பாதையையும் அதுவும் தடைபட்டால் பாக்கிஸ்த்தானின் குவாடர் துறைமுகத்தில் இருந்து ஒரு தரவழிப்பாதையையும் இவை எல்லாம் தடைபட்டால் மத்திய ஆசியாவினூடான ஒரு விநியோகப்பாதையையும் அமைத்துள்ளது சீனா. தனது மூலப் பொருள்களுக்கே இத்தனை மாற்றுப் பாதைகளை உருவாக்கிய சீனா தனது ஏற்றுமதிகளுக்கு மாற்றுப் பாதைகளைத் தேடுவது ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல. திட்டமிடலில் சிறந்த சீனர்கள் மாற்றுவழிகளைத் தேடுவதிலும் முனைப்புக் காட்டுவது இயல்பே.

பட்டுப்பாதையல்ல முள்ளுப்பாதை
சீனாவின் பொருளாதாரம் அதன் ஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருக்கின்றது. சீன ஏற்றுமதியில்  பெரும்பகுதி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குச் செல்கின்றது. சீனாவிற்கும் 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான வர்த்தகம் அதிகரித்துச் செல்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகம் நாளொன்றிற்கு ஒரு பில்லியன் யூரோ நாணயம் பெறுமதியானதாகும். சீனப் பொருட்கள் கடற்பாதையூடாக ஐரோப்பாவிற்குச் செல்வதாயின் மலாக்கா நிரிணையைக் கடந்து இந்து மாகடல் கடந்து சென்று ஏடன் வளைகுடாவுடாகச் சென்று சூயஸ் கால்வாயையும் கடந்து சென்று கிப்ரல்டர் நீரிணையில் (Strait of Gibraltar) புகுந்து இரு வல்லரசுகளான பிரான்சிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான ஆங்கிலக் கால்வாய் ஊடாகப் பயணித்து ஐரோப்பாவை அடைய வேண்டும். இதற்கு சிங்கப்பூர், கொழும்பு, கெய்ரோ, லிஸ்பன்(போர்த்துகல்) ஆகிய துறைமுகங்கள் முக்கியமானவையாகும். சீனாவின் ஏற்றுமதி வர்த்தகம் நடக்கும் இந்தப் பாதையை புதிய பட்டுப்பாதை என அழைக்கிறார்கள். ஆனால் சீனாவின் பட்டுப்பாதை பட்டுப் போன்ற பாதை அல்ல. உலகின் மிக மோசமான திருகுப் புள்ளிகளைக் (choke points)  கொண்ட பாதையாகும். பல கப்பல் போக்குவரத்து அட்டவணைப் பிரச்ச்னைகள் கொண்ட பாதை மட்டுமல்ல பல படைத்துறைச் சவால்களையும் எதிர் நோக்க வேண்டும். இந்தக் கடற்பாதைக்கு மாற்றீடாக ஒரு தரைவழிப்பாதையை ஐரோப்பாவிற்கு உருவாக்க வேண்டும் என்பதே சீனாவின் அடுத்த திட்டமாகும்.

மாற்றுப்பட்டு - சீனாவின் மேற்கே போகும் ரயில்
சீனா ஐரோப்பாவிற்கான கடல் வழிப்பாதைக்கு மாற்றீடாக ஒரு தரை வழிப்பாதையூடாக ஐரோப்பாவிற்கான ஏற்றுமதி இறக்குமதியைச் செய்கின்றது. இந்தத் தொடரூந்துப் பாதை சீனாவிலிருந்து கஜகஸ்த்தான், இரசியா, பெலரஸ், போலாந்து ஆகியவற்றினூகாகச் செல்கின்றது.  இந்தத் தொடரூந்துப் பாதை கணனித் துறை நிறுவனங்களான ஹெச்.பி, ஜேர்மனிய வாகன உற்பத்தித் துறை நிறுவனமான பி.எம்.டபிளியூ, மெர்ஸெடிஸ் பென்ஸ் போன்றவை விரும்பிப் பாவிக்கின்றன. ஹெச்.பி தான் சீனாவில் உற்பத்தி செய்யும் கணனிதத் துறைப் பொருள்களை ஐரோப்பாவிற்கு அனுப்புவதற்கு இந்த தொடரூந்துப் பாதையைப் பயன்படுத்துகின்றன. கடல் வழியாக அனுப்பதிலும் பார்க்க தொடரூந்து வழி அனுப்புவது செலவு மிகுந்தது என்றாலும் துரிதமாகவும் தடைகளின்றியும் அனுப்பக் கூடியதாக இருக்கின்றது.  ஹெச்.பி நிறுவனத்தின் தகவல்களின்படி சீனாவில் இருந்து ஜேர்மனிக்கு 22 நாட்களில் பொருட்களை எடுத்துச் செல்லலாம். இது கடல் வழிப்பாதைக்கு எடுக்கும் காலத்திலும் அரைவாசியாகும். ஆனால் கடல் வழிப்பாதையிலும் பாக்க தொடரூந்து வழிப்பாதை இருபது முதல் இருபத்தைந்து விழுக்காடு செலவு அதிகமானதாகும். 2011-ம் ஆண்டில் இருந்து தரைவழி வாணிபப் போக்குவரத்துச் செலவு குறைந்து கொண்டு வருகின்றது என்பதும் மத்திய ஆசிய நாடுகளிடையான வர்த்தகம் 2009-ம் ஆண்டில் இருந்து 29 விழுக்காடு அதிகரித்துள்ளது என்பது இங்கு கருத்தில் கொள்ளத் தக்கவையாகும்.


இரசியா போடும் சிவப்பு ரூட்டு
11,000 கிலோ மீட்டர் நீளமான இப்பாதையின் பெரும்பகுதி இரசியாவினூடாகச் செல்வதால் சீனாவின் வர்த்தகத்திற்கு இரசியாவில் தங்கியிருக்க வேண்டிய நிலை இருக்கின்றது. இந்தத் தொடரூந்துப் பாதை இரசிய மற்றும் ஜேர்மனிய தொடரூந்து நிறுவனங்களின் கூட்டு உருவாக்கமாகும். ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பரந்த நிலப்பரப்பைக் கொண்ட உலகிலேயே பெரிய நாடாகிய இரசியா ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான தரைவழித் தொடர்பை கட்டுப்படுத்த விரும்புகின்றது. இந்த தொடரூந்துப் பாதையைப் பரவுபடுத்துவதும் தனது கனவுத் திட்டமான யூரோ ஏசியன் பொருளாதாரக்  கூட்டமைப்பை மேம்படுத்துவதும் இரசியாவின் கனவாகும். முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை மேற்குப் புறம் ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தக் ரீதியில் அபகரித்துக் கொள்ள கிழக்கு புறமாக  உள்ள மத்திய ஆசிய நாடுகளுடனான வர்த்தகத்தை சீனா வேகமாக வளர்த்துக் கொள்ள இரசியா நடுவில் தடுமாறுகின்றது. கஜக்ஸ்த்தானில் முப்பது பில்லியன் டொலர்கள் பெறுமதியான முதலீட்டையும், உஸ்பெக்கிஸ்த்தானில் 15 பில்லியன் டொலர் பெறுமதியான முதலீட்டையும் செய்துள்ளது. மத்திய கிழக்காசியாவில் உள்ள கனிம வளங்களை யார் சுரண்டுவது என்பதிலும் இரசியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் போட்டி உண்டு. மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் தொடர்பில் சீனாவிற்கும் இரசியாவிற்கும் இடையில் முறுகல் நிலை எப்பொழுதும் தொடங்குலாம் என்பதை சீனா நன்கு அறியும்.

சீனாவிடும் பட்டு நூல்
மத்திய ஆசியாவில் இரசியாவுடனான முறுகலைத் தவிர்கவும் தனது ஐரோப்பாவுடனான வர்த்தகம் தடையின்றி நடக்கவும் இரசியாவைத் தவிர்த்து ஒரு புதுப் பட்டுப்பாதையை சீனா உருவாக்க விரும்புகிறது. சீனாவின் புதுப் பட்டுப்பாதை வெறும் போக்கு வரத்துக்கு மட்டுமல்ல பட்டுப்பாதையை ஒட்டிய நாடுகளுடன் வர்த்தகத்தை மேம்படுத்துவதுடன் சீனக் குடியேற்றங்களையும் இலக்காகக் கொண்டது. புதிய பட்டுப் பாதை மத்திய சீனாவில் ஆரம்பித்து சீனாவின் லன்ஞ்சௌ, உரும்கி, கோர்கஸ் ஆகிய மாகாணங்களூடாக கஜகஸ்த்தான், ஊடாக மத்திய ஆசியா சென்று ஈரானிற்கும் செல்லும். அங்கிருந்து ஈராக், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளுக்குச் செல்கின்றது. இன்னும் ஒரு பக்கம் வடதிசை போய் ஐரோப்பாவை அடையும். பல்கேரியா, ருமேனியா, செக் குடியரசு, ஜேர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளிற்கும் செல்லும். இந்தப் புதுப் பட்டுப்பாதை திட்டத்தில் ஜேர்மனியை இணைக்க சீனா பெரிதும் விரும்புகின்றது.

இரசியாவின் மாற்றுத் திட்டங்கள்
இரசியாமீது எரிபொருள் கொள்வனவிற்குத் தங்கியிருக்கும் ஐரோப்பிய நாடுகள் உக்ரேன் விவகாரத்தின் பின்னர் மாற்று வழிகளைத் தேடத் தொடங்கி விட்டன. இதனால் சீனாவிற்கு குழாய்கள் மூலம் எரிவாயுவை விநியோக்கிக்க இரசியா விரும்புகின்றது. சீனாவுடன் இணைந்து இந்த நீண்ட குழாய் பாதையை உருவாக்கினால் அது இந்தியா பாக்கிஸ்த்தான் போன்ற மற்ற ஆசிய நாடுகளுக்கும் எரிவாயு விநியோக்கிப்பதற்கு வசதியாக அமையும். ஆனால் இந்தக் குழாய் வழியும் தொடரூந்து வழியும் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என இரசியா கருதுகின்றது. இரசியாவின் இன்னும் ஒரு கனவு ஜேர்மனியையும் சீனாவையும் இணைத்து ஒரு ஆசிய ஐரோப்பிய வர்த்தக உடன்பாட்டை ஏற்படுத்துவது. வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்பதும் பன்னாட்டு இராசதந்திரத்தில் ஒன்றுதான். ஜப்பானும் அமெரிக்காவும் இந்தியாவும் ஆசியாவில் சீனாவிற்கு எதிராகக் கை கோர்த்தால் சீனாவிற்கு இரசியாவுடன் இணைவதைத் தவிர வேறு தெரிவுகள் இல்லை.

அமெரிக்க ஆமை புகுந்தது
சீனாவின் புதிய பட்டுப்பாதை ஆப்கானிஸ்த்தானூடாகச் செல்வதை அமெரிக்கா விரும்புகின்றது. அத்துடன் ஆப்கானிஸ்த்தானின் கனிம வளங்களை சீனா மூலம் தான் சுரண்டுவதற்கு அமெரிக்க முன்னுரிமை கொடுக்கின்றது. ஏற்கனவே சீனா பல கனிம வள அகழ்வு வேலைகள் ஆப்கானிஸ்த்தானில் செய்ய அமெரிக்கா அனுமதித்துள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று சீனாவால் அமெரிக்காவிலும் பார்க்க குறைந்த செலவில் அகழ்வு செய்ய முடியும். இரண்டாவது அமெரிக்க நிறுவனங்கள் அகழ்வு செய்வது பெரும் பாதுகாப்புப் பிரச்ச்னையை உருவாக்கும். சீனாவின் புதிய பட்டுப்பாதையை ஆப்கானிஸ்த்தானூடாக இழுத்து ஆப்கானிஸ்த்தானை சீனாவின் தலையில் கட்டுவதற்கு அமெரிக்கா முயல்கின்றது. இதற்கு தூண்டுகோலாக இதே வாய்ப்பை இந்தியாவிற்கும் அமெரிக்கா வழங்க முன்வந்துள்ளது. சீனாவையும் ஜேர்மனியையும் தன்னுடன் இணைந்து ஒரு வர்த்தகக் கூட்டமைப்பை ஏற்படுத்த இரசியா எடுத்த முயற்ச்சி அமெரிக்காவை கலக்கமடைய வைத்தது. இத்திட்டம் தொடர்ப்பக இரசியாவிலும் சீனாவிலும் விரிவாக ஆராயப்பட்டது. ஜேர்மனியும் கவனத்தில் எடுத்தது. ஜேர்மனிக்கும் இரசியாவிற்கும் இடையில் குழப்பத்தை ஏற்படுத்த அமெரிக்கா உக்ரேன் பிரச்சனைக்கு தூபமிட்டது எனக் குற்றம் சாட்டுவோரும் உண்டு. ஆசியாவிலும் ஐரோப்பவிலும் அமெரிக்காவைப் ஓரம் கட்டும் வேலையை இரசியாவும் சீனாவும் இணைந்து செய்யலாம் என்பது அமெரிக்காவின் கருத்து. இதில் ஐரோப்ப ஒன்றியத்தின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட ஜேர்மனி இணைந்தால் அமெரிக்காவிற்கு நிச்சயம் பெரும் பின்னடைவு ஏற்படும். உக்ரேன் பிரச்சனையுடன் உருவாகிய இரண்டாம் பனிப்போர் நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பில் உள்ளசில நாடுகளை ஒன்று படுத்தியதுடன் சில நாடுகளை வேறுபடவும் வைத்தது. சில நாடுகள் இரசியாவுடன் ஒரு முறுகல் நிலை உருவாகுவதை விரும்பவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் இத்தாலியும் ஹங்கேரியும் இரசியாவுடன் உடன்பட்டுச் செல்வதை விரும்புகின்றன. பிரித்தானியா சுவீடன், போலாந்து, ருமேனியா மற்றும் போல்ரிக் நாடுகள் இரசியாவிற்கு எதிராக நிற்கின்றன. ஜேர்மனி கழுவும் மீன்களில் நழுவும் மீனாக நிற்கின்றது. ஏற்கனவே அமெரிக்காவின் கிழக்கு நோக்கிய நகர்வை உக்ரேனும் ஈராக்கும் தடுத்து விட்டன. அமெரிக்கா ஆசிய பசுபிக் நாடுகளுடன் செய்ய முனையும் பசுபிக் தாண்டிய வர்த்தக் உடன்படிக்கையும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்ய முனையும் அட்லாண்டிக் தாண்டிய வர்த்தக உடன்படிக்கையும் இழுபடும் நிலையில் அமெரிக்கா ஜேர்மன் சீனாவுடனும் இரசியாவுடனும் இணைவது நிச்சயம் அமெரிக்கவிற்குப் பிரச்சனைக்கு உரியதாகும்.

ஊர் ஒன்றுபட்டால்
இந்தியாவின் புதிய ஆட்சியாளர்களும் சீனாவின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள்.  இந்திய சீன வர்த்தக உறவு இரு நாடுகளையும் பொறுத்தவரை தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. சீனாவின் புதிய பட்டுப்பாதையில் இணைவது பற்றி இந்தியாவுக் பரிசீலித்து வருகின்றது. இந்தியாவைத் தொடர்ந்து தூர கிழக்கு நாடுகளும் இதில் இணைய முனையலாம். இப்படி ஆளுக்கு ஆள் ஊரில் ஒன்றுபட்டால் கூத்தாடி அமெரிக்கா என்ன செய்யும்?

நாடுகளிடையான பாதகளை மட்டும் இணைத்தால் போதாது நாடுகளும் முரண்பாடுகளைக் கடந்து இணைய வேண்டும்.


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...