Sunday 19 October 2014

மாறுபட்ட நிலைகளில் வேறுபட்ட தடங்களில் தடுமாறும் உலகப் பொருளாதாரம்

IMF எனப்படும்பன்னாட்டு நாணய நிதியம்2014-ம் ஆண்டிற்கான உலகப் பொருளாதார வளர்ச்சி 3.7விழுக்காடாக இருக்கும் என ஏப்ரல் மாதம் எதிர்வு கூறியிருந்தது. இப்போது அதை 3.3 ஆகக் குறைத்துவிட்டது. தற்போது உலகின் பல நாடுகளில் போதுமான அளவு விலைவாசி அதிகரிப்பு இல்லை என்பது பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக அமைந்துள்ளது. அத்துடன் உலக நாணயமாகக் கருதப்படும் அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துக் கொண்டே போவதும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றது.

இரு முனை ஏமாற்றங்கள்
2008-ம் ஆண்டும் 2009-ம் ஆண்டும் மேற்குலகப் பொருளாதாரங்கள் வீழ்ச்சியைச் சந்தித்த போது   அந்த நாடுகள் தம்மை    தமது தேக்க நிலையில் இருந்து சீனாவும் இந்தியாவும் மீட்கும் என நம்பின. அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்த இரு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதன் மூலம் தமது பொருளாதாரங்கள் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்லலாம் என அவை எதிர்பார்த்திருந்தன. ஆனால் சீனாவினதும் இந்தியாவினதும் பொருளாதார வளர்ச்சிகளின் வேகம் குறையத் தொடங்கின. உலகெங்கும் பொருளாதார வளர்ச்சி குன்றும் என்ற அச்சம் பொருளாதார நிபுணர்களைப் பீடிக்க முன்னர் நிதிச் சந்தையைப் பிடித்துவிடும். பத்தாண்டு ஆவணங்களின் yield எனப்படும் ஊறுதிறன் அதாவது இலகுவாகச் சொன்னால் இலாப விழுக்காடு 2.2 ஆகவும் முப்பது ஆண்டு ஆவணங்களின் ஊறுதிறன் (இலாப விழுக்காடு) மூன்றிலும் குறைந்துள்ளது. ஆசியாவின் இரு வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றான ஜப்பானின் நிலைமை மோசமாக உள்ளது.தென் கொரியா தனது பொருளாதார வளர்ச்சியை இரண்டாகக் குறைத்துள்ளது.

இந்தியாவிற்கு வாய்ப்பு உண்டு வளர்ச்சி போதாது
உலகச் சந்தையில் எரிபொருள் மற்றும் பல மூலப் பொருட்களின் விலை வீழ்ச்சி இந்தியாவிற்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. எரிபொருள் விலை ஒரு அமெரிக்க டொலர் குறைந்தால் அது இந்தியாவிற்கு ஆண்டு ஒன்றிற்கு ஒரு பில்லியன் வெளிநாட்டுச் செலவாணியை மீதமாக்கும். இந்த ஆண்டு எரிபொருள் விலை 25 டொலர்களுக்கு மேல் குறைந்துள்ளது. இதனால் இந்திய அரசு எரிபொருளுக்கு செலவு செய்யும் உதவிநிதியையும்(மானியம்) குறைக்கலாம். இது இந்திய அரசின் பாதிட்டுக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும். இந்த வாய்ப்பான நிலைமை இந்தியப் பொருளாதாரத்தை வளரச் செய்து அது உலகப் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படச் செய்ய இன்னும் ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் எடுக்கும். ஆனாலும் இந்தியாவிற்குத் தேவையான (ஆகக் குறைந்த) ஏழு விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியாது. இந்திய மைய வங்கித் தலைவர் ரகுராம் ராஜன் 2014இல் இந்தியா 5 விழுக்காடு வளர்ச்சியையும் 2015இல் 6 விழுக்காடு வளர்ச்சியையும் எட்டும் என்கின்றார்.

சீனாவின் இருமுனைச் செயற்பாடு
பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும் போது அரசு தனது செலவீனங்களை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தை வளரச் செய்ய வேண்டும் என்பது கீன்சியப் பொருளியல் நிபுணர்களின் கருத்து. மாறாக நிதியியல் பொருளாதார நிபுணர்கள் அதாவது Monetarists அரச நிதிக் கொள்கைதான் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து வலுவாக அமைய வேண்டும் எனக் கருதுகின்றனர். கீன்சியர்கள் வேலைவாய்ப்பு நிலையை உருவாக்க பொருளாதாரத்தை முகாமை செய்ய வேண்டும் எனக் கருதுகின்றனர். நிதியியலாளர்கள் நாட்டின் பொருளாதாரத் தேவைக்கு ஏற்ப வேலைவாய்ப்பு நிலை அமைய வேண்டும் எனக் கருதுகின்றனர். 2008-09 ஆண்டுகளின் பொருளாதாரப் பின்னடைவின் பின்னர் மேற்கு நாடுகள் தமது பொருளாதாரங்களை நிதியியலாளர்களின் தத்துவங்களுக்கு ஏற்ப முகாமை செய்கின்றன. தமது நாடுகளில் பணப்புழக்கங்களை அதிகரிக்கச் செய்தனர். இதை அளவுசார் தளர்ச்சி அதாவது quantitative easing என்கின்றனர். சீனா பணப்புழக்கத்தை அதிகரித்ததுடன் அரச செலவீனங்களையும் அதிகரித்துக் கொண்டது. நாட்டின் உள்ளகக் கட்டுமானங்களில் அரச முதலீடுகளை பெருமளவில் அதிகரித்தது. சீன அரசின் இந்த இருமுனைச் செயற்பாடுகளை உலகப் பொருளாதார நிபுணர்கள் மிகவும் துணிச்சல் மிக்க நடவடிக்கை எனக் கருதினர். சீனா முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பொருளாதாரச் சீர்திருத்தம் என்று தொடங்கியதில் இருந்து சீனா தனது பொருளாதாரத்தின் உற்பத்தித் திறனை அதிகரித்தும் பணப்புழக்கத்தை அதிகரித்தும் அரச செலவீனங்களை அதிகரித்தும் வேகமான பொருளாதார வளர்ச்சியைப் பெற்றது.  இந்த வளர்ச்சிக்கு சீனாவின் வட்டி விழுக்காடு பணவீக்கத்திலும் குறைவான நிலையில் இருக்கும்படியாக கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாகப் பேணப்படுகின்றது. இதனால் முதலீட்டாளர்கள் இலகு கடன் பெற வாய்ப்பாக இருக்கின்றது. கடந்த இருபது ஆண்டுகளாக சீனா தனது வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை மிகவும் அதிகமாக வளரவைத்தது. இதற்கு சீன நாணயத்தின் பெறுமதி குறைந்த நிலையில் பேணப்பட்டது. மாறாக மேற்கு நாகள் பலவற்றில் நாணயங்களின் பெறுமதி உயர் நிலையில் பேணப்பட்டு வளர்முக நாடுகளில் இருந்து குறைந்த விலையில் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அதனால் அந்த நாடுகளின் விலைவாசி கட்டுப்படுத்தப்பட்டது.

அளவுசார் தளர்ச்சி (quantitative easing - QE) பற்றிய விவாதம்
ஊடகங்களைப் பொறுத்தவரை அளவுசார் தளர்ச்சி மைய வங்கிகள் தமது இருப்புநிலைக் குறிப்புகளின் (ஐந்தொகை) அளவை அதிகரித்து நாட்டில் கடன் வழங்குதலை அதிகரிப்பதாகும். இதற்காக மையவங்கி புதிதாக நாணயங்களை உருவாக்கி அதாவது காசு அச்சிட்டு மற்ற வங்கிகளிடமிருந்து சொத்துக்களை வாங்கும். அந்தச் சொத்து விற்பனையால் தமக்குக் கிடைக்கும் நிதியை வங்கிகள் கடனளிக்கும். கடன் நாட்டில் அதிகரிப்பதால் நாட்டில் வட்டி விழுக்காடு குறையும். மக்கள் அதிகம் செலவளிப்பார்கள். இதனால் அவர்களது கொள்வனவு அதிகரிக்கும். அதிகரித்த கொள்வனவால் நாட்டில் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் நாட்டில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். அதிகம் பேர் வேலை செய்வதால் நாட்டின் கொள்வனவு மேலும் அதிகரிக்கும். இதனால் மேலும் கொள்வனவு அதிகரிக்கும். இந்தச் சுழற்ச்சி தொடரும். மைய வங்கி நேரடியாக வர்த்தக நிறுவனங்களிடமிருந்து சொத்துக்களை (கூட்டாண்மைக் கடன் ஆவணங்கள் – அதாவது corporate bonds வாங்குவது கடன் தளர்ச்சி எனப்படும். 2008-09 ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார விழ்ச்சியின் பின்னர் அமெரிக்கவின் அளவுசார் தளர்ச்சியும் கடன் தளர்ச்சியும் செய்யப்பட்டன. அமெரிக்காவின் மைய வங்கியின் இருப்புநிலைக் குறிப்பு (ஐந்தொகை) ஒரு டிரில்லியன் டொலர்களில் இருந்து நான்கரை டிரில்லியன்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மைய வங்கி 2009-ம் ஆண்டு அளவுசார் தளர்ச்சியும் கடன் தளர்ச்சியும் செய்தபடியால் மோசமான ஒரு பொருளாதார மந்தம் தவிர்க்கப்பட்டது எனப்படுகின்றது. அதேவேளை அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவு இருக்கவில்லை. அமெரிக்காவைப் போல ஜப்பானும் தனது பொருளாதாரத்தை வளர்ச்சிப்பாதைக்குக் கொன்டுவர அளவுசார் தளர்ச்சியைப் பெருமளவில் மேற் கொண்டது. ஆனால் ஜப்பானில் அளவுசார் தளர்ச்சி பெரிய அளவில் வேலை செய்யவில்லை எனக் கூறப்படுகின்றது. யூரோ வலய நாடுகள் விலைவாசி அதிகரிப்பின்மையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்திலேயே மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட ஜேர்மனி இரண்டு காலாண்டுகளாக பொருளாதாரச் சுருக்கத்தைக் கண்டுள்ளது. பிரான்ஸ் இத்தாலி ஆகிய நாடுகளும் பொருளாதார வளர்ச்சியின்றித் தவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் மைய வங்கித் தலைவர் மரியோ திராகி ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள யூரோ வலய நாடுகளில் உள்ள தனியார் பெரு வர்த்தக நிறுவனங்களின் கடன் பத்திரங்களைக் கொள்வனவு செய்து யூரோ வலய நாடுகளிடை ஓர் அளவுசார் தளர்ச்சியை ஏற்படுத்தி பொருளாதாரத் தூண்டலை ஏற்படுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளார். இத்தாலியரான மரியோ திராகியின் திட்டத்திற்கு ஜேர்மனியைன் மைய வங்கி ஆளுநர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ஆனால் மரியோ திராகி எந்த அளவு நிதியை அளவுசார் தளர்ச்சி மூலமோ அல்லது கடன் தளர்ச்சி மூலமோ பொருளாதாரத்தினுள் செலுத்தப் போகின்றார் என்பது பற்றித் தெரிவிக்கவில்லை. யூரோ நாணய்த்தின் பெறுமதியை விழச்செய்வது பிரான்ஸினதும் இத்தாலியினதும் ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்க மைய வங்கிக்கு நிதிக் கொள்கையில் இருக்கும் சுதந்திரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் மைய வங்கிக்கு இல்லை. ஐரோப்பிய ஒன்றியம் குறைந்தது ஒரு ரில்லியன் யூரோக்களையாவது தனது பொருளாதாரத்தினுள் செலுத்த வேண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


இந்த வரைபடத்தின் மூலம் இங்கிலாந்தின் மைய வங்கி தனது சொத்துக் களின் பெறுமதியை அதிகரித்து அளவுசார் தளர்ச்சியை அதிகரித்தால்  பொருளாதார வளர்ச்சியடையும் தொடர்ந்து வரும் பணவிக்கம் சொத்துக்களின் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்யும் பொருளாதார வளர்ச்சியையும் விழச் செய்யும் நாட்டில் பணப்புழக்கம் மட்டும் நிலையாக இருக்குன் எனக் காட்டியுள்ளது.

வளைய முடியாத யூரோவலயம்
அமெரிக்கப் பொருளாதாரம் கணிசமான வளர்ச்சியை எட்டாததும் ஜப்பான் இப்போதும் மோசமான நிலையில் இருப்பதாலும் அளவுசார் தளர்ச்சி எந்த அளவு வேலை செய்யும் என்பது பற்றிய விவாதம் எழுந்துள்ளது. அமெரிக்காவில் வேலைவாய்ப்பு அதிகரித்தமையைத் தொடர்ந்து அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. அத்துடன் அமெரிக்கா சவுதி அரேபியாவையும் மிஞ்சி உலகிலேயே அதிக அளவு எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடாக மாறிவிட்டது. 27 ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் 17 நாடுகள் ஒன்று கூடி யூரோ என்னும் நாணயத்தை தமது பொது நாணயமாக்கின. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மொத்தப் பொருளாதார உற்பத்தி அமெரிக்கா சீனா ஆகிய நாடுகளின் உற்பத்தியிலும் அதிகமாகும்.  யூரோ அமெரிக்க டொலருக்கு எதிராக பெரு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் யூரோ வலய நாடுகளில் அளவுசார் தளர்ச்சி வயிற்றோட்டத்தில் தவிக்கும் யூரோவிற்கு பேதி மருந்து கொடுத்த கதையாகிவிடும். வேறு வேறு பொருளாதாரச் சூழ் நிலைகளைக் கொண்ட யூரோ வலய நாடுகளில்  பொதுவானவையாக இருப்பவை விலைவாசி அதிகரிப்பின்மையும் பொருளாதார மந்தமுமாகும். பிரான்ஸில் ஐம்பது பில்லிய செலவீனக் கட்டுப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகின்றது. ஆனால் அந்த அளவு வெட்டு பெரும் பொருளாதாரத் தேய்வில் முடியும் என பிரெஞ்சு அரசு அஞ்சுகின்றது.

பிரித்தானியாவும் அயர்லாந்தும்
பிரித்தானியாவில் ஒரு நகைச்சுவை பிரபலம். ஆங்கிலேயனுக்கு தலை முடி உதிர்ந்தால் அவன் முடியை வளர வைக்க நிறையச் செலவு செய்வானாம். ஐரிஸ்காரனுக்கு முடி உதிர்ந்தால் தனது சீப்பை விற்றுவிடுவானாம். 2008-09 நிகழந்த பொருளாதார வீழ்ச்சியில் இருந்து அயர்லாந்து அரசும் மக்களும் சிக்கன நடவடிக்கை மூலம் தமது பொருளாதாரத்தைத் தக்க வைத்துள்ளனர். பிரித்தானியாவில் மக்கள் தொடர்ந்து செலவு செய்து அதன் மூலம் நாட்டில் பொருளாதாரத்தை வளர வைத்தனர்.  இரட்டைப் வீழ்ச்சி பொருளாதாரத் தேக்கத்தின் (double dip recession) பின்னர் பிரித்தானியப் பொருளாதாரம் சற்று வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது. ஆனால் பிரித்தானியாவின் பொருளாதார  வளர்ச்சி ஒரு சமநிலைப்படுத்தப்படாத வளர்ச்சியாக இருக்கின்றது. அங்கு உற்பத்தித் துறை (manufacturing) வளர்ச்சியடையாமல் தேய்வடைந்துள்ளது. பிரித்தானியப் பொருளாதார வளர்ச்சி கட்டிடத் துறையிலும் மக்களின் கொள்வனவிலும் பெரிதும் தங்கியுள்ளது. இதே வேளை சீனா தனது மக்களின் கொள்வனவை உயர வைக்க முடியாமல் திண்டாடுகின்றது. சீனா தனது பொருளாதாரத்திற்கு ஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருக்கின்றது.

எரிபொருள் விலைவீழ்ச்சியால் பாதிப்படையும் நாடாக இரசியா இருக்கின்றது. இரசிய அரசின் வருமானத்தில் பெரும் பகுதி எரிபொருள் ஏற்றுமதியில் தங்கி இருக்கின்றது இரசியாவின் 2014-ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் எரிபொருள் விலை 117 டொலர்களாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் 2015-ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் எரிபொருள் விலை 100 டொலர்களாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் தீட்டப்பட்டன

ஏமாற்றும் அமெரிக்கா
இந்த ஆண்டின் முற்பகுதியில் இருந்து அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அமெரிக்காவைப் பற்றி மற்ற நாடுகள் வளர்ச்சியடையலாம் என எதிர்பார்த்திருந்த வேளையில் அமெரிக்காவின் சில்லறை விற்பனை (2014) செப்டம்பர் மாதம் 0.1விழுக்காடு வீழ்ச்சியடைந்தது.

ஜேர்மன் மைய வங்கியின் கையில் நிறைய இருக்கின்றது
அமெரிக்கப் பொருளாதரம் வளர்ச்சியடைந்தாலும் யூரோ வலய நாடுகள் உள்ளிட்ட ஐரோப்பிய ஓன்றியப் பொருளாதாரம் வளராமல்       உலகப் பொருளாதாரம் தேறாது. யூரோ வலய நாடுகளை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்கு வேண்டிய பணப்புழக்க அதிகரிப்பைச் செய்ய ஜேர்மனியின் மைய வங்கி தடையாக இருக்கின்றது. எரிபொருள் விலை வீழ்ச்சி எரிபொருள் பாவனை நாடுகளுக்கு வாய்ப்பாக அமைந்தாலும் எரிபொருள் ஏற்றுமதி நாடுகளுக்கு பாதகமான நிலையை உருவாக்கும். அதிலும் குறிப்பாக உலகின் முன்றாவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட இரசியா தனது வருமானத்திற்கு எரிபொருள் ஏற்றுமதியில் பெரிதும் தங்கியுள்ளது. உலக நாடுகளின் ஒன்றிணைந்த நடவடிக்கைகள் மட்டுமே  உலகத்தை தொடரும் பொருளாதார மந்த நிலையில் இருந்து மீட்க முடியும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...