Tuesday 25 March 2014

நாணயமற்ற சீனாவின் நாணயத்தை உலக நாணயமாக்கும் கனவு.

இலங்கை போன்ற உலகில் உள்ள அயோக்கிய நாடுகளுடன் நட்புறவைப் பேணிவரும் சீனா தனது பொருளாதாரத்தைப் பற்றி சரியான தகவல்களை வெளிவிடுவதில்லை. சீன அரசின் புள்ளிவிபரங்கள் நம்ப முடியாதவை என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். இப்படிப்பட்ட சீனா தனது நாணயமான ரின்மின்பி யுவானை உலக நாணயமாக மாற்றும் திட்டத்துடன் இருக்கின்றது.

சீன அரசின் முக்கிய பெரும் பொருளாதார நோக்கங்கள்:
1. ஏற்றுமதியிலும் உள்கட்டமைப்பிலான முதலீட்டிலும் தங்கியிருக்கும் சீனப் பொருளாதாரத்தை மீளமைத்து உள்நாட்டுக் கொள்வனவில் பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்தல்
2. ஆண்டொன்றிற்கு 7.5 விழுக்காட்டிற்கும் அதிக பொருளாதார வளர்ச்சியை எட்டுதல்
3. நிதிச் சந்தையைச் சீரமைத்து மிகை கடன்
வழங்கலை இல்லாமல் செய்தல்.

உலக நாணயமாக டொலர் வேண்டாம் யூவான் வேண்டும்.                   சீன அரசின் நீண்ட கால பொருளாதார நோக்கங்களில் முக்கியமானதாக தனது யூவான் நாணயத்தை உலக நாணயமாக மாற்றுவதாக உள்ளது. அதன் ஒரு படியாக இனிவரும் இரண்டு ஆண்டுகளில் நாட்டின் வட்டி வீதத்தில் அரச கட்டுப்பாட்டைக் நீக்கி நிதிச் சந்தை அதை தீர்மானிக்க வழி செய்யப்படும் என மார்ச் 12ம் திகதி சீன அரசு அறிவித்தது. ஆனால் சீனா தனது நாணயத்தை உலக நாணயமாக மாற்ற மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சீன நாணயம் நினைத்த மாத்திரத்தில் மாற்ற நாணயங்களாக மாற்றக் கூடியதாக இருக்க வேண்டும். சீனாவில் கட்டுப்பாடின்றி வெளிநாட்டவர்கள் முதலீடுகள் செய்யக்கூடியதாகவும் அவற்றைத் தேவைப்படும் போது விற்று காசாக்கக் கூடியதாக இருக்க வேண்டும். சீனாவின் மூலதனக் கணக்கு திறந்து விடப்படல் வேன்டும்.  சீனாவின் வங்கித் துறை நவீன மயப்படுத்த வேண்டும். சீனாவின் நிதிச் சந்தை தாராளமயப்படுத்த வேண்டும்.

சீனாவின் வீட்டு விலை பெரும் சரிவைச் சந்திக்குமா?.                         2011-ம் ஆன்டுவரை சீனப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து கொன்டிருந்தது.இதனால் பல கிராமப்புறத்து மக்கள் நகரங்களை நோக்கி நகரத் தொடங்கினர். இதனால் சீன நகரங்களில் வீடுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. வீட்டு விலைகள் மிகவும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கின. இதைச் சமாளிக்க சீன அரசும் தனியார்களும் வீடுகளைக் அதிகமாக நிர்மாணித்தனர். வீட்டு விலைகள் அதிகரித்துக் கொன்டு போவதால் பலர் வீடுகளை வாங்குவதை ஒரு முதலீடாகக் கொன்டனர். பல நகரங்களில் வீட்டு விலைகள் 20 விழுக்காடு அதிகரித்தன. பலர் வீடுகளை வாங்கி அவற்றின் விலை அதிகரிப்பை இலாபமாகக் கருதி வாடகைக்குக் கூட விடாமல் வெறும் வீடுகளாக வைத்திருந்தனர். இவர்களில் பலர் வீடுகளை வங்கிகளில் கடன் பெற்றே  வாங்கினர். ஆனால் கடந்த இரண்டு ஆன்டுகளாக சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் குறைந்தது. கிராமங்களில் இருந்து நகரத்திற்கு வந்து வேலை பெற்றவர்கள் வேலைகளை இழந்து மீன்டும் கிராமங்களுக்குச் சென்றனர்.  இதனால் வீட்டு விலைகள் சரிவடைந்து. வங்கிகள் தாம் வழங்கிய கடன்களை மீளப்பெற முடியாமல் போகலாம் என இப்போது அஞ்சப்படுகின்றது. இது பெரிய அளவில் நிகழும் போது சீனாவிலும் சில மேற்கு நாடுகளில் ஏற்பட்டது போன்ற ஒரு கடன் நெருக்கடி ஏற்படலாம் எனச் சிலர் கருதுகின்றனர். ஆனால் நாட்டின் பொருளாதாரத்தின் மீது கடுமையான கண்காணிப்பையும் கட்டுப்பாட்டையும் வைத்துள்ள சீன அரசால் இந்தப் பிரச்சனையை சமாளிக்க முடியும் எனவும் சிலர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

சீனாவின் போட்டித் திறன் குறைவடைகின்றதா?                         சீனா உலகச் சந்தையில் மற்ற நாடுகளிலும் பார்க்கக் குறைந்த விலையில் தனது உற்பத்திப் பொருட்களை விநியோகித்தல் சீனாவின் பொருளாதாரவளர்ச்சிக்குப் பெரிதும் உதவிக் கொன்டிருக்கின்றது. சீனாவில் குறைந்த செலவில் உற்பத்தி செய்யலாம் என்பதால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமது உற்பத்தியை வேறு நாடுகளில் இருந்து சீனாவிற்கு மாற்றின. இதுவும் சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்காற்றியது. சீனாவில் பலதொழிற்துறைகளில் ஊழியர் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. சீனத் தொழிலாளர்கள் உயர் தொழில்நுட்பத் துறைகளில் வேலை செய்வதையே விரும்புகின்றனர். சீன ஊழியர்களின் வேதனம் ஆண்டு ஒன்றிற்கு பத்து விழுக்காடு அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இவற்றால் சீனாவின் உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது. இது சீனாவின் உலகச் சந்தையில் போட்டியிடு திறனைப் பாதிக்கின்றது. இந்திய நாணயப் பெறுமதி அண்மைக் காலங்களாக வீழ்ச்சி அடைந்து கொன்டிருப்பதால் வெளிநாட்டு நிறுவங்களைப் பொறுத்தவரை இந்தியாவின் உற்பத்திச் செலவு குறைகின்றது. இதனால் பல நிறுவனங்கள் தமது உற்பத்தியை சீனாவில் இருந்து இந்தியாவிற்கு மாற்றியுள்ளன. ஜப்பான் சீனாவுடன் உள்ள உறவு கிழக்குச் சீனக் கடலில் உள்ள் தீவுகளுக்கு யாருக்குச் சொந்தம் என்ற முரண்பாட்டால் பாதிப்படைவதால் பல ஜப்பானிய நிறுவனங்களும் தமது உற்பத்தியை சீனாவில் இருந்து இந்தியாவிற்கு மாற்றியுள்ளன.

சீனாவில் கடன் நெருக்கடி ஏற்படுமா?                                                                                                  Shanghai Chaori Solar Energy Science & Technology Co என்னும் சீன நிறுவனம் மார்ச் மாத ஆரம்பத்தில் தனது வெளிநாட்டுக் கடன் நிலுவையை செலுத்த முடியாமல் போனது உலக நிதிச்சந்தையை உலுப்பியது. இது சீனாவில் ஒரு கடன் நெருக்கடி ஏற்படுமா என்ற கேள்வியை உருவாக்கியது.  இதற்கு முன்னர் 2014ம் ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு சீன நிறுவனம் தனது கடன்நிலுவை செலுத்த முடியாத நிலையில் இருந்து தப்பித்துக் கொன்டது. தப்பிக்க வைத்தது சீன அரசா அல்லது சீன அரச வங்கியா என்பது பற்றி யாருக்கும் தெரியாது.  சீனாவில் கடன் அதிகரிப்பு விழுக்காடு அதன் பொருளாதாரவளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் இரண்டு இரண்டு  இருக்கின்றது. இப்படியான நிலை இருந்த நாடுகள் பல கடன் நெருக்கடியில் அகப்பட்டதாக வரலாறு சான்று சொல்கின்றது. இதே நிலை சீனாவிற்கும் ஏற்படுமா என்ற அச்சம் இப்போது அதிகரித்துக் கொன்டிருக்கின்றது. 2008 ம் ஆண்டு உலகப் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளானதைத் தொடர்ந்து சீனாவின் ஏற்றுமதி குறையத் தொடங்கியது. இதனால் உள்ளூரில் வேலைவாய்ப்புக் குறைந்து மக்கள் அரசுககு எதிராகக் கிளர்ந்து எழுவதைத் தடுக்க சீனா தனது உள்நாட்டு முதலீட்டை கன்னா பின்னா என அதிகரித்தது. தனது வங்கிகளுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க உத்தரவிட்டது. சீனா தனது பொருளாதாரத்திற்கு நானூறு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஊக்குவிப்பைக் கொடுத்தது. பிபிசி தொலைக்காட்சி சீன அரசின் உள்நாட்டு முதலீட்டைப்பற்றி சீனா எப்படி உலகை ஏமாற்றியது என்ற ஆவணப்படத்தில் விபரித்தது. சீன அரச முதலீட்டால் சீனாவில் 26,000 மைல்கள் நீளமான வேகப் பெருந்தெருக்கள் கட்டப்பட்டன, முப்பது விமான நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டன, ஐந்து நாட்களுக்கு ஒரு வானத்தைத் தொடும் உயர்மாடிக்கட்டிடங்கள் எழுப்பப்பட்டன, இருபத்தைது நகரங்களில் மெட்ரோ தொடரூந்து முறைமை உருவாக்கப்பட்டது, ஆறாயிரம் மைல்கள் நீளமான உயர்வேகத் தொடரூந்துப் பாதைகளும் தரிப்பு நிலையங்களும் உருவாக்கப்பட்டன, உலகிலேயே நீளமான மூன்று பாலங்கள் கட்டப்பட்டன இப்படி சீன அரச முதலீட்டைப் பட்டியலிட்டது பிபிசி. தனது நாட்டின் பொருளாதாரவளர்ச்சி குன்றாமல் இருக்க சீனா இந்தச் முதலீட்டு அதிகரிப்பைச் செய்தது. சீன அரச முதலீடு அதன் மொத்தத் தேசிய உற்பத்தியின் 40விழுக்காட்டில் இருந்து 50ஆக உயர்த்தப்பட்டது. இது சீனாவால் தொடர்ந்து செய்ய முடியாத முதலீட்டு நிலை எனப் பொருளாதார நிபுணர்கள் விபரித்தனர். கடந்த ஐந்து ஆன்டுகளாக சீனாவின் கடன்வளர்ச்சி 71 விழுக்காடாக இருக்கிறது. சென்ற ஐம்பது ஆண்டு வரலாற்றில் இப்படியான மிகை கடன் வளர்ச்சியைச் சந்தித்த 33 நாடுகளில் 22 நாடுகள் கடன் நெருக்கடிக்கு உள்ளாகி பொருளாதார மந்த நிலைக்கு உள்ளாகின. சீனாவின் முதலீட்டு அதிகரிப்பும் வங்கிகளின் கடன்வழங்கல் அதிகரிப்பும் சீனாவில் விலைவாசி உயர்வையும் கடன் நெருக்கடியையும் கொண்டு வரலாம் என்ற அச்சத்தில் சீனா தனது நாட்டில் பணப்புழக்கத்தைக் குறைக்கப் பல நடவடிக்கைகளை எடுத்தது. சீன வங்கிகளுக்கு கடன் கொடுப்பதை வெகுவாகக் குறைக்கும் படி உத்தரவிடப்பட்டது.

சீனாவின் நிழல் வங்கிகள்                                             நிழல் வங்கிகளுக்கான இலகு வரைவிலக்கணம் ஒன்றை இங்கு கொடுப்பது பொருத்தமானதாகும். அரசு அனுமதி பெற்ற வங்கிகளின் செயற்பாட்டை அரசுக்குத் தெரியாமல் செய்யும் நிறுவனங்கள் அல்லது தனிப்பட்டவர்கள் நிழல்வங்கிகள் எனப்படும். சீன அரசானது வங்கிகள் கடன் வழங்குவதைக் கட்டுப்படுத்தியது. ஆனால் கடனுக்கான தேவை சீனாவில் தொடர்ந்தும் உயர் நிலையிலேயே இருந்தது. இதனால் நிழல்வங்கிகள் பல உருவாகி மக்களுக்கு கடன்களைக் கொடுக்கத் தொடங்கியது. இது கட்டுக்கடங்காமல் வளர்ந்து எட்டு ரில்லியன் (எட்டு இலட்சம் கோடி) அமெரிக்க டொலர்கள் பெறுமதியான துறையானது. இது பொருளாதாரத்தின் மீதான சீன அரசின் இறுக்கமான பிடியை இழக்கச் செய்தது. சீனாவில் பெரும் கடன் அதிகரிப்பு ஏற்பட்டது. அது எந்த அளவு என சீன அரச பொருளாதார நிவாகிகளால் அறிந்து கொள்ள முடியவில்லை. சீன அரசு நிழல் வங்கித் துறைக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுத்தது.

 உக்ரேன் விவகாரம் சீனாவிற்கு சாதகமாகலாம்.
உக்ரேன் விவகாரத்தில் இரசியாவிற்கு எதிராக ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கொண்டுவரும் பொருளாதாரத் தடை சீன நாணயத்திற்கு ஒரு வாய்ப்பாக அமைகின்றது. இரசியாவிற்கு எதிரான அமெரிக்காவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் நடவடிக்கைகள் ஒரு போர் ஆபத்தாக மாறும் வாய்ப்பு உள்ளது. அப்படியான் ஆபத்து அமெரிக்க டொலர், பிரித்தானியப் பவுண், ஐரோப்பிய ஒன்றிய யூரோ ஆகிய நாணயங்களின் பெறுமதியைப் பாதிக்கலாம். இதனால் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமும் உலகிலேயே அதிக அளவு வெளிநாட்டுச் செல்வாணியைக் கையில் கொண்டதுமான சீனாவின் நாணயம் ஒரு பாதுகாப்பான நாணயமாக உருவாகலாம்.

அசையாது சீனா                                 சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தில் உள்நாட்டு மக்கள் கொள்வனவு மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. பொதுவாக வளர்ச்சியடைந்த நாடுகளில் இது மூன்றில் இரண்டு பங்காகும். சீனா தனது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி அவர்களின் கொள்வனவு வலுவை பெருமளவு அதிகரிக்க வேன்டும். குறைந்த ஊதியம் கொடுத்து வேலைவாங்குவதில் இருந்து விலகினால்தான் சீனப் பொருளாதாரம் மேற்குநாடுகளில் தங்கியிருப்பதைக் குறைக்கலாம். சீனாவின் பொருளாதாரத்தைப்பற்றி எழுதும் உலகப் பொருளாதார வல்லுனர்கல் அடிக்கடி பாவிக்கும் வார்த்தை நீர்க்குமிழி என்பதாகும். அது எப்போதும் வெடிக்கலாம். ஆனால் சீனாவின் நிதிக்கட்டமைப்பு ஆரம்ப நிலையேலேயே இப்போதும் உள்ளது. அதனால் நிர்வகிக்க இலகுவானது. சீன நிதிக்கட்டமைப்பில் அரச வங்கிகள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. பல தனியார் வங்கிகள் நிதி நிறுவனங்கள் கொண்ட மேற்கு நாடுகளைப் போல இல்லாமல் இருப்பதால் நாட்டில் பொருளாதாரத் திட நிலையை ஏற்படுத்துவதும் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துவதும் சீன அரசிற்கு இலகுவானதே. எந்த ஒரு சீனவங்கியும் வங்குரோத்து நிலை அடையாது என்பது நிச்சயம். உலகிலேயே அதிக அளவான மூன்றரை ரில்லியன் (மூன்றரை இலட்சம் கோடி) அமெரிக்க டொலர்களை வெளிநாடடுச் செலவாணியாகக் கையிருப்பில் வைத்துள்ள சீன அரசு வங்குரோத்து நிலையை அடையப்போவதில்லை.

Monday 24 March 2014

உக்ரேனியர்களுக்கு இரசியாபோல தமிழர்களுக்கு இந்தியாவா?

உக்ரேனிய மக்கள் பக்கத்திலுள்ள பிராந்தியப் பேரரசான இரசியாவை நம்பாமல் தொலைவிலுள்ள உலகப் பேரரசான அமெரிக்காவை நம்பிக் கெட்டது போல தமிழர்களும் பக்கத்திலுள்ள "பிராந்தியப் பேரரசான" இந்தியாவை நம்பாமல் தொலைவிலுள்ள அமெரிக்க உலகப் பேரரசை நம்பிக் கெடக்கூடாது என்ற கூச்சல் சிலரால் இப்போது முன்வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி கூச்சலிடுபவர்கள் தங்கள் "வாதத்திற்கு" ஜோர்ஜியா மீது இரசியா 2008-ம் ஆண்டு செய்த ஆக்கிரமிப்பையும் ஆதாரமாக முன்வைக்கின்றனர். இரசியா உக்ரேனியர்களுக்கு எதிராக மேற்கொண்ட இனக்கொலைகளைத் தெரிந்து கொண்டும் இவர்கள் இப்படிக் கூச்சலிடுவது "கொடுத்த காசுக்கு மேலாலை கூவுதல்" என்ற பதத்தைத்தான் நினைவிற்கு கொண்டு வருகின்றது.

இந்தியா ஒரு பிராந்திய வல்லரசா?
முதலில் இந்தியா ஒரு பிராந்திய வல்லரசா என்பது பற்றிப் பார்ப்போம். இந்தியாவைச் சிலர் பிராந்திய வல்லரசு என்கின்றனர். பிராந்திய வல்லரசுக்கு இப்படி ஒரு வரைவிலக்கணம் உண்டு:
States which wield unrivaled power and influence within a region of the world possess regional hegemony.
இதன் பொருள்:  ஈடற்ற  வலிமையும் செல்வாக்கும் உலகின் ஒருபிரதேசத்திற்குள் செயலாட்சி புரியக் கூடிய ஒரு அரசு பிராந்திய ஆதிக்கமுள்ளது. சீக்கிம் நாட்டை தனது ஒரு மாநிலமாக இணைத்த போதும் பங்களா தேசத்தைப் பாக்கிஸ்த்தானில் இருந்து பிரித்த போதும் இந்தியாவிடம் ஒரு பிராந்திய ஆதிக்கம் இருந்தது. ஆனால் இப்போது இந்தியாவைச் சூழவுள்ள எந்த நாட்டிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்துவதில்லை. இந்தியாவிடம் வலிமை இருந்தாலும் அது  ஈடற்ற வலிமை அல்ல. இந்தியாவிற்கு மிஞ்சிய வலிமை சீனாவிடம் இருக்கிறது. இந்தியாவின் வலிமைக்கு சவால் விடக்கூடிய வலிமை பாக்கிஸ்த்தானிடம் இருக்கிறது. நேப்பாளம், மியன்மார்(பர்மா), இலங்கை ஆகிய நாடுகளின் மேல் இந்தியாவின் ஆதிக்கம் இல்லை. பிரேமதாசாவின் அரசைக் கவிழ்க்க முற்பட்டு இந்தியா பல்லுடை பட்டதும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இந்தியா மூக்குடைபட்டதும் இந்தியாவின் பிராந்திய ஆதிக்கத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டது. இந்தியாவின் உயர் இராசதந்திரிகளான விஜய் நம்பியார், கமலேஷ் ஷர்மா போன்றவர்கள் இலங்கை அரசின் கைக்கூலிகள் போல் செயற்படுவதும், இந்திய வெளிநாட்டமைச்சர்கள் இலங்கை அதிபர் முன் பணிவுடன் நிற்பதும், நிருபாமா ராவ் போன்றவர்கள் இலங்கை அமைச்சர்கள் முன் பல்லிளித்துக் கொண்டு நிற்பதும் இந்தியாவிற்கும் பிராந்திய வல்லரசு என்ற சொல்லிற்கும் வெகு தூரம் என்பதைக் காட்டுகிறது.

உக்ரேனியர்களும்-இரசியாவும் தமிழர்களும்-இந்தியாவும்
இரசியா மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு. இந்தியாவும் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு. இரசியா உலகிலேயே அதிக நிலப்பரப்புக் கொண்ட நாடு. இந்தியாவிற்கும் கணிசமான நிலப்பரப்பு உண்டு. இரசியா தனது நிதி வளத்திற்கு மிஞ்சிய அளவிற்கு படை வலுவைக் குவித்துக் கொண்டிருக்கின்றது. இந்தியாவும் அப்படியே. இரசியா ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இரத்து அதிகாரம் கொண்ட ஒரு வல்லரசு நாடு. இந்தியா அப்படியல்ல.  இரசியா தன்னைச் சூழவுள்ள நாடுகளை உய்ய விடுவதில்லை. இந்தியாவும் தன்னைச் சூழவுள்ள நாடுகளை உய்ய விடுவதில்லை.  ஒரு புளிய மரம் தனது நிழலில் இன்னொரு மரத்தை வளர அனுமதிக்காது. இரசியா உக்ரேனை அதனது அணுப் படைக்கலன்களை ஒப்படை உனது பிரதேச ஒருமைப்பாட்டிற்கு தான் உத்தரவாதம் என்று பொய் சொல்லிவிட்டு இப்போது உக்ரேனைப் பிய்த்து உதறுகிறது. இந்தியா தமிழர்களை அவர்களின் படைக்கலன்களை ஒப்படை உங்கள் பாதுகாப்பிற்கு தான உத்தரவாதம் என்று பொய் கூறி அவர்களைக் கொன்று குவித்தது.  1932-ஆம் 1933-ம் ஆண்டுகளில் இரசிய அரசு தனது விவசாயத் திட்டத்திற்கு ஒத்து வராத எழுபத்து ஐந்து இலட்சம் உக்ரேனியர்களைப் பட்டினி போட்டுக் கொன்றது. உக்ரேனின் பல பிராந்தியங்களில் இரசியர்களைக் குடியேற்றியது. இதற்குப் பின்னரும் இரசியாவைச் சார்ந்து நில்லுங்கள் என்றோ அல்லது இரசியாவைக் "கையாளுங்கள்" என்றோ யாராவது உக்ரேனியர்களுக்கு அறிவுரை சொன்னால் அவர்கள் நிச்சயம் இரசியாவின் சில்லறைக் கைக்கூலிகளே.  இந்தியா தனது நாட்டிலுள்ள போலி அதிகாரப்பரவலாக்கத்திலும் அதிக அளவு அதிகாரப் பரவலாக்கம் இலங்கையில் தமிழர்களுக்குக் கிடைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. சில இந்திய அதிகார மையமான தென் மண்டலத்தில் இருக்கும் பிற்போக்குப் பூனூல் கும்பல்கள் தமிழன் என்பவன் சூத்திரன் அவள் ஆளப்பட வேண்டியவன், அவன் ஆளக்கூடாது என்பதில் உறுதியாக நிற்கின்றன. நேரு எஸ் தொண்டமானையும் ஜீ. ஜீ. பொன்னம்பலத்தையும் இணையவிடாமல் தடுத்தமை, நேரு-கொத்தலாவலை ஒப்பந்தம், சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தம், கச்சதீவுத் தாரைவார்ப்பு, தமிழ் இளைஞர்களுக்கு படைக்கலப் பயிற்ச்சி கொடுத்து தனது காரியத்தை இந்தியா சாதிக்க முயன்றமை, ஜேஆர்-ராஜீவ் ஒப்பந்தம், அமைதிப்படையின் போர்க் குற்றம், ரணில் விக்கிரமசிங்க உயர்பாதுகாப்பு வலயங்களை நீக்க முன்வந்த போது இந்தியா அதைக்கடுமையாக எதிர்த்து நிறுத்தியமை,  இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை வழங்க வந்த ரணிலின் ஆட்சியை இந்தியா  சந்திரிக்கா பண்டாரநாயக்காவையும் ஜேவிபியையும் இணைத்துக் கலைத்தமை, முள்ளிவாய்க்காலில் முடிந்த இனக்கொலையில் இந்தியாவின் பங்களிப்பு, 2008-ம் ஆண்டு மனித ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழகக் கூட்டத் தொடரில் இலங்கையில் இறுதிப் போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக இலங்கை அரசைக் கண்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா இலங்கை அரசுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றியமை இப்படியாக இந்தியத் துரோகப் பட்டியல் மிகவும் நீண்டிருக்கின்றது. இந்த நிலையில் பிராந்திய வல்லரசு அல்லாத இந்தியாவைப் பிராந்திய வல்லரசு எனப் பொய் சொல்லி அதை கையாளுங்கள். அதை விட்டு தூரத்தில் உள்ள அமெரிக்கப் பேரரசை நம்பாதீர்கள் எனச் சொல்பவர்களின் நோக்கம் தான் என்ன?

புது டில்லிதானாம் ஜெனிவா
"ஜெனிவாவை நோக்கி தமிழர்கள் தமது முழுக்கவனத்தையும் செலுத்துகிறார்கள். ஆனால் புது டில்லி அசையாமல் ஜெனிவா அசையாது. புது டில்லியை எப்படி அசைப்பது என்பதில்தான் தமிழர்கள் முழுக்கவனமும் செலுத்த வேண்டும்." இப்படி ஆலோசனை சொல்கிறார்கள் இந்திய ஆதரவுக் கூச்சலிடுபவர்கள். உலக அரசியல் தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும் ஜெனிவாத் தீர்மானங்களால் தமிழர்களுக்கு எந்த விமோசனமும் இல்லை என்று. ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமையுள்ள  193 நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேற்பட்ட நாடுகளின் ஆதரவு பாலாஸ்த்தீனியர்களின் விடுதலைக்கு உண்டு.  இதை வைத்துக் கொண்டு எந்த ஒரு ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பிலும் தீர்மானம் நிறைவேற்றி அவர்களிற்கு விடுதலை பெற்றுக்  கொடுக்க முடியவில்லை. இப்படி இருக்கையில் ஜெனிவாவில் தமிழர்களுக்கு விமோசனம் எப்படியும் கிடைக்காது என்பதை பன்னாட்டு யதார்த்தத்தை உணர்ந்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். பாலஸ்த்தீனியர்களுக்கு அமெரிக்காவின் இரத்து அதிகாரம் போல் தமிழர்களுக்கு சீனாவினதும் இரசியாவினதும் இரத்து அதிகாரங்கள் தடையாக இருக்கும். தமிழர்கள் ஜெனிவாவிற்குப் போனாலும் காரியம் ஆகப் போவதில்லை. புது டில்லிக்குக் காவடி எடுத்தாலும் காரியம் நடக்கப் போவதில்லை.

ஜோர்ஜிய உதாரணம்.
இரசியா 2008-ம் ஆண்டு ஜோர்ஜியாவின் கீழிருந்த இரண்டு தன்னாட்சியுள்ள பிரதேசங்களில் படை எடுத்து அவற்றைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஜோர்ஜியாவிற்கும் இரசியாவிற்கும் இடையில் நடந்த போரில் அமெரிக்கா ஜோர்ஜியாவிற்கு உதவவில்லை. இதற்காக நாம் இந்தியாவிற்கு வால் பிடிக்க முடியாது. ஆனால் 2008-ம் ஆண்டின் பின்னர் ஜோர்ஜியா எப்படி இரசியாவைக் கையாள்கிறது என்பதை கூச்சலிடும் இந்தியக் கைக்கூலிகள் கருத்தில் எடுக்க வேண்டும். 2011-ம் ஆண்டு ஜோர்ஜியப் பாராளமன்றம் 19-ம் நூற்றாண்டில் இரசியா சேர்க்காசியர்களைக் கொன்றதை ஓர் இனக்கொலை எனத் தீர்மானம் நிறைவேற்றியது. இரசியாவின் தென் எல்லையில் உள்ள வட கௌக்கௌஸ் பிரதேசத்தில் தன்னாட்சி கோரிப் போராடும் மக்களுடன் தனது தொடர்புகளை ஏற்படுத்தியது. அவர்கள் ஜோர்ஜியாவிற்கு வருவதற்கு பயண அனுமதி(விசா) தேவையில்லை என அறிவித்தது.

அமெரிக்காவும் இந்தியாவும் பூகோளப் பங்காளிகளா?
அமெரிக்காவிடம் போகாதே இந்தியாவிடம் போ எனக் கூச்சலிடுபவர்கள் அமெரிக்காவும் இந்தியாவும் பூகோளப் பங்காளிகள் என்கின்றனர். ஆனால் உக்ரேன் விவகாரத்தில் இந்தியா இரசியாவிற்கு ஆதரவு தெரிவித்தமை அவர்களின் கூற்றைப் பொய்யாக்குகிறது. வேலிக்கு ஓணான் கதைதான். இந்தியாவில் அதிகமாக உள்ள இளையோர் தொகையும் அதிகமாக உள்ள நடுத்தர வர்க்க மக்கள் தொகையும் இருப்பதால் உலக நாடுகளிற்கு இந்தியா ஒரு கவர்ச்சி மிக்க சந்தையாகத் தெரிகிறது. இதனால்தான் சில பெரிய நாடுகள் இந்தியாவின் நட்பை விரும்புகின்றன.

தமிழர்களுக்கான பூட்டை இந்தியா திறந்து விட்டதா?
விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் தமிழர்களுக்கான பூட்டை இந்தியா திறந்து விட்டது இதனால் இனித்தமிழர்கள் இந்தியாவை அணுகலாம் என்கின்றனர் இந்தியாவிற்காக கூச்சலிடுபவர்கள். பேரறிவாளன், முருகன், சாந்தன் விவகாரத்தில் இந்தியா பூட்டைத் திறக்கவில்லை என்று நன்கு தெரிகிறது. இந்தியக் கைக்கூலிகளான சம்பந்தனும் சுமந்திரனும் ஜெனிவாவில் நின்று செய்யும் பரப்புரைகள் இந்தியா தொடர்ந்து தமிழர்களுக்கு அள்ளி வைத்துக் கொண்டிருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது.

தமிழ்நாட்டில் தமிழர்களின் கொந்தளிப்பு இந்தியாவை மாற்றியதா?
தமிழ்நாட்டில் தமிழர்கள் கொந்தளித்தது இந்தியாவின் இலங்கை தொடர்பான நிலைபாட்டில் சலனத்தை ஏற்படுத்தி விட்டது என்கின்றனர் இந்தியாவிற்காகக் கூச்சலிடுபவர்கள். அப்படியாயின் தமிழர்களின் கோரிக்கையான வடக்கு கிழக்கு இணைப்பை இந்தியா இனி முன்னிறுதி இலங்கையுடனான தனது அணுகுமுறையை மாற்றுமா?

இந்தியாதான் தமிழர்கள் முதல் எதிரை என்பதை என்று பாக்குநீரிணையின் இருபுறமும் உள்ள எல்லாத தமிழர்கள் உணர்கிறார்களோ அன்றுதான் தமிழர்களுக்கு ஒரு விடிவு வரும்.

அடங்குங்கடா!!!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...