Friday 10 January 2014

வருகிறார் இணையவெளி ஒசாமா பின் லாடன்

இணையவெளியில் 3D தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்படும் ஒசாமா பின் லாடன் இனிவரும் காலங்களில் பெரும் பிரச்சார பீரங்கியாகச் செயற்படலாம் என அமெரிக்க உளவுத் துறை அஞ்சுகிறது. இந்த அச்சம் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இருக்காலம் என்கிறது அமெரிக்க உளவுத்துறை. Online Avatar எனப்படும் பின் லாடனால் பல முனைகளில் செயற்பட முடியும்.

Second Life and World of Warcraft போன்ற கணனி விளையாட்டுத் துறையில் ஒசாமா பின் லாடனின் உருவத்தை உருவாக்கி ஏற்கனவே ஒலிப்பதிவு செய்த அவரது உரைகளைப் புகுத்தி அமெரிக்காவிற்கு எதிரான போரிற்கு இசுலாமியர்களைத் தூண்டச் செய்யலாம். அல் கெய்தாவிற்கான ஆட் சேர்ப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம். தாக்குதல்களைத் தூண்டலாம்.

பல புதிய இணையவெளித் தொழில்நுட்பங்களை ஒசமா பின் லாடனின் ஆதரவாளர்கள் பயன்படுத்தி அவர் உயிருடன் இருப்பது போன்ற ஒரு எண்ணப்பாட்டை உலகெங்கும் உருவாக்கலாம்.

Monday 6 January 2014

சிக்கலாகும் உலக நாடுகளிடையான உறவுகள்

உலக நாடுகளிடையான உறவுகளில்   பாரிய மாற்றங்கள் இனிவரும் காலங்களில் ஏற்படவிருக்கின்றன.    1991-ம் நடந்த    சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியும்     2001இல் நடந்த    9/11 எனப்படும் இரட்டைக்கோபுரத் தாக்குதலும் இரண்டாம் உலக போரின் பின்னர்    உலக நாடுகளிடையான உறவுகளில்    அதிர்வை ஏற்படுத்திய இரு பெரும் நிகழ்வுகளாகும்.     இவை உலக ஒழுங்கில்   பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின.

தற்போது உலக அரசியலையும் நாடுகளிடையான உறவுகளைப் பாதிக்கும் காரணிகளாக இருப்பவை:
முதலாவது, போர்களால் சலிப்படைந்த  அமெரிக்கா உட்பட்ட   நேட்டோ நாட்டு மக்கள்.
இரண்டாவது நலிவடைந்து போன  வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின்  பொருளாதாரம்.
மூன்றாவது உலக அரங்கில்  ஆதிக்கம் செலுத்த வரும் சீனா
நான்காவது உலக அரங்கில்   இரசியாவின் செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்த வரும்   விளாடிமீர் புட்டீன்.
ஐந்தாவது சர்வாதிகாரிகளின் ஆட்சியில்   வெறுப்படைந்த ஆபிரிக்க மக்கள்.
ஆறவது முன்னேறத் துடிக்கும்  ஆசிய நாட்டு மக்கள்.
ஏழாவது எரிபொருள் ஏற்றுமதி நாடாக மாறப்போகும் அமெரிக்கா.

1991-ம் ஆண்டில் நடந்த சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் உலக ஒழுங்கை தமக்கு சாதகமாக மாற்றிக் கொண்டிடுருந்த வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு படைக்கலன்கள் ஏந்திய குழுக்களிடமிருந்து மோசமான எதிர்ப்புக்கள் உருவாகின. அதன் விளைவுதான் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள இரட்டைக் கோபுரக் கட்டிடத்தின் மீது நடந்த தாக்குதல். இதைத் தொடர்ந்து அமெரிக்கா வேட்டியை மடித்துக் கட்டியது.

இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர்    அமெரிக்கா உலக நாடுகளை மிரட்டி     எல்லோரையும் தனது பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு உதவி வழங்கும்படி கேட்டுக் கொண்டது.    பல நாடுகளுக்கு அமெரிக்கா பல விட்டுக் கொடுப்புக்களையும் செய்ய வேண்டி இருந்தது.    சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர்   தமது படைத்துறைச் செலவுகளைக் குறைக்க முயன்ற வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் மீண்டும் தமது பாதுகாப்புச் செலவுகளை    அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.    எதிரிகளின் பொருளாதாரத்தைச் சீர்குலையச் செய்ய வேண்டும் என்ற பின் லாடனின் கனவு 2008இல் இருந்து நிறைவேறியது. தமது நாட்டுப் பொருளாதரத்திலும் பார்க்க பாதுகாப்பில் அதிக கவனத்தை வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் செய்தன. இதனால் 2008இல் உலகப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

இசுலாமியர்களுக்கு எதிரானவர்களை அழித்தொழிக்க வேண்டும்    என இசுலாமியத் தீவிரவாத அமைப்புக்களும்    இசுலாமியத் தீவிரவாதிகளை அழித்தொழிக்க வேண்டும் என   வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் கடுமையாக முயன்று கொண்டிருக்கையில்   இருதரப்பினரும் எதிர்பாராத வகையில் அரபு வசந்தம் 2011இல் உருவாகியது. இதனால் துனிசியா, எகிப்து, லிபியா, சூடான் ஆகிய நாடுகளின் ஆட்சியாளர்களை பதவியில் இருந்து விரட்டப்பட்டனர்.    சிரியா சீரழிந்து கொண்டிருக்கிறது. எகிப்தைப் பொறுத்தவரை   அது தனது பொருளாதார நலன்களுக்காக சூயஸ் கால்வாயைத் திறந்து வைத்திருக்க வேண்டும்.    அதனால் வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும்    சூயஸ் கால்வாய்க்குக் கொடுக்கும் முக்கியத்துவம் குறைந்து விட்டது.     உலக எரிபொருள் விநியோகத்தில் எட்டு விழுக்காடும்       உலக வர்த்தகத்தில் பத்து விழுக்காடும் சூயஸ் கால்வாயூடாக நடைபெறுகிறது.     இதனால் சூயஸ் கால்வாய்    ஒரு கேந்திர முக்கியத்துவம் மிக்க ஒரு இடமாகும். உலக வர்த்தகத்தைப் பாதிக்கக் கூடிய ஐந்து திருகுப் புள்ளிகளில் சூயஸ் கால்வாயும் ஒன்றாகும். சிரியாவில் அமெரிக்கா அல் கெய்தா ஆதரவு இசுலாமியத் தீவிரவாதக் குழுக்களுக்கு ஆதரவாக தனது நிலைப்பாட்டை மாற்றுகின்றதுடன் ஈரானுடன் சுமூக நிலையை ஏற்படுத்த முயல்கின்றது. மீண்டும் மத்திய கிழக்கில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட முயலும் இரசியாவையும் மத்திய கிழக்கு எரிபொருளில் பெரிதும் தங்கியிருக்கும் சீனாவையும் நாம் கவனத்தி எடுக்க வேண்டும். இவற்றைச் சீர் தூக்கிப்பார்ககையில் மக்களாட்சியையும் பொருளாதார முன்னேற்றத்தையும் நாடி நிற்கும் மத்திய கிழக்கு மக்களுக்கு விடிவை யார் தருவார் என்ற கேள்விக்கான விடைகாணல் கடினமாக இருக்கின்றது. மத்திய கிழக்கில் இனி நாடுகளிடையான உறவுகள் மிகவும் சிக்கல் நிலையை நோக்கி நகர்கின்றது.

சீனாவின் விரிவாக்கக் கொள்கையில்   இந்தியாவின் அருணாசலப் பிரதேசத்தையும் அபகரிக்கும் திட்டமும் ஒன்றாக இருப்பதாலும் ஜப்பான் தனது எனச் சொல்லும் கிழக்குச் சீனக் கடற்தீவுகளை சீனா தனதாக்கும் முயற்ச்சியும் ஒன்றாக இருப்பதாலும் அமெரிக்கா இந்த நூற்றாண்டில் ஆசியாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாலும் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் சீனாவிற்கு எதிரான ஓர் அணியை உருவாக்கும் என்று பலரும் எதிர்பார்த்திருக்கும் வேளையில் இந்திய அமெரிக்க உறவு தேவ்யானி விவகாரத்தில் முறுகல் நிலையை அடைந்துள்ளது. உலக அரங்கில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த வரும் இரசியாவிற்கு இந்திய-அமெரிக்க உறவு சீரழிவது நன்மை பயக்கக் கூடியது. தேவ்யானி விவகாரத்தை இந்திய இடது சாரிகள் பெரிதும் தூக்கிப் பிடிக்கிறார்கள் என்பதையும்  நாம் இங்கு கவனிக்க வேண்டும். தேவ்யானியை துகிலுரிவது போல் ஒரு போலியான காணொளியையும் பரவவிட்டுள்ளார்கள். இதனால் ஆசியாவில் இனிவரும் காலங்களில் நாடுகளிடையான உறவுகள் சிக்கலடைந்துள்ளது.

ஐரோப்பியாவில்   ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடை பெரும் பிரச்சனை இப்போது    ஐரோப்பிய ஒன்றியத்தின்   பொருளாதாரக் கொள்கையால் ஏற்பட்டுள்ளது.    யூரோ நாணயத்தின் எதிர்காலம் பிரச்சனைக்கு உரியதாக இருக்கையில்    ஐரோப்பிய ஒன்றியம் தனது அமைப்பில்   மேலும் நாடுகளை இணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகின்றது.   அவற்றின் முக்கிய இலக்கு முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளாகும்.    ஆனால் இரசியா தனது யூரோ ஆசியக் கூட்டமைப்பில் தனது முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை இணைக்க முயல்கின்றது.   ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவாக்கத்தை   இரசியா ஒரு ஜேர்மனியின் ஆக்கிரமிப்பாகவே கருதுகின்றது.   ஐரோப்பிய ஒன்றியத்தினதும் நேட்டோப் படைக் கூட்டமைப்பினதும் ஒரு உறுப்பு நாடான துருக்கி இப்போது அமெரிக்காவிற்கு எதிராக முரண்டு பிடிக்கிறது.   இரசியாவுடனும் ஈரானுடனும் உறவை துருக்கி மேம்படுத்துகிறது. துருக்கி சீனாவிடமிருந்து ஏவுகணைப்பாதுகாப்பு முறைமையை வாங்க முயல்கிறது. இவற்றால் ஐரோப்பிய நாடுகளிடையான உறவு இனி எத்திசையில் நகரும் எனபது ஒரு சிக்கலான விடயமாக இருக்கின்றது.

உலகப் பொருளாதாரக் கூட்டமைப்புக்களாக   தற்போது ஐரோப்பிய ஒன்றியம்   ஆசியான், ஆகியவை வளர்ச்சி அடைந்த நிலையில் இருக்கின்றன.    பிரேசில், இரசியா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட பொருளாதாரக் கூட்டமைப்பு மக்கள் தொகையைப் பொறுத்தவரை   முன்னூறு கோடி மக்களைக் கொண்ட உலகிலேயே மிகப் பெரிய கூட்டமைப்பாகும்.   பசுபிக் நாடுகள் ஆசியான் நாடுகள் ஜப்பான், தென் கொரியா ஆகியவற்றை இணைத்து அமெரிக்கா ஒரு பெரிய பொருளாதாரக்  கூட்டமைப்பை உருவாக்க முயல்கின்றது.   சீனா நேட்டோப் படைத்துறைக் கூட்டமைபிற்கு சவால் விடக் கூடிய வகையில் ஷாங்காய் கூட்டமைப்பு நாடுகளை விரிவாக்க முயல்கின்றது.  சீனா, காஜக்ஸ்த்தான், கிரிகிஸ்த்தான், இரசியா, தஜிகிஸ்தான், உஸ்பெக்கிஸ்த்தான் ஆகிய ஆசிய  நாடுகளைக் கொண்டு    2001-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளில்   இந்தியாவையும் இணைக்க வேண்டும் என இரசியா வலியுறுத்தி வருகின்றது.   இந்த படைத்துறை மற்றும் பொருளாதாரக் கூட்டமைப்பில் இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்த்தான், மங்கோலியா, பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகள் பார்வையாளர் நிலையைப் பெற்றுள்ளன. இந்தக் கூட்டமைப்பினது நோக்கத்தையும் சீன விரிவாக்கற் கொள்கையினையும் ஒன்றுபடுத்திப் பார்க்க முடியாமல் இருக்கின்றது.  இந்தக் கூட்டமைப்புக்களின் வளர்ச்சி உலக நாடுகளிடையான உறவுகளைச் சிக்கலாக்கின்றன.

2013-ம் ஆண்டின் இறுதியில் சீன அதிபர் சீ ஜின்பிங் தனது படையினரை ஒரு போருக்குத் தயாராகும் படி வேண்டுதல் விடுத்துள்ளார். சென்ற ஆண்டு சீன அதிபர் சீ ஜின்பிங் தனது நாட்டுப் படை நிலைகளிற்குப் பல தடவை சென்று பார்வையிட்டுள்ளார். அமெரிக்கா தனது கிழக்குச் சீனக் கடற் பிராந்தியத்திலும் தென் சீனக் கடற்பிராந்தியத்திலும் அதிகம் வாலாட்டுவதாக சீனா கருதுகின்றது.   ஒரு மோதல் மூலம்தான் இதற்கு முடிவு கட்டலாம் என்றால்   அதற்கு சீனா தயாராக வேண்டும் என அதிபர் சீ ஜின்பிங் கருதுகிறார்.    இந்த மோதலுக்கு தூபம் போடும் வகையில் ஜப்பானிய தலைமை அமைச்சர் ஷின்சோ அபே அவர்களின்,   சர்ச்சைக்குரிய யசுகுனி போர் வழிபாட்டிடத்துக்கு செய்த பயணம் அமைந்தது.     இந்தப் பயணம் தொடர்பாக, ஜப்பானிய தூதரை அழைத்து சீனா தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.   சீனாவினையும் தென் கொரியாவையும்   ஜப்பான் ஆக்கிரமித்த போரின் போது இறந்தவர்களின் சமாதி யசுனி போர் வழிபாட்டிடமாக ஜப்பானியர்களால் மதிக்கப்படுகின்றது.   சீனா மட்டுமல்ல தென் கொரியாவும்  இதில் அதிருப்தி அடைந்துள்ளது.   இவை நாடுகளிற்கு இடையான உறவை ஆபத்தாக்குகின்றது.

இந்தியாவும் இரசியாவும் மீண்டும் அமெரிக்காவிற்கு எதிராகக் கைகோர்த்துக் கொள்ளும் சாத்தியம் உண்டு. அப்படி நிகழும் கட்டத்தில் இலங்கையில் அமெரிக்கா, இரசியா சீனா ஆகிய நாடுகளிடை ஒரு மும்முனைப் போட்டி உருவாகலாம். அதை தமிழர்கள் தமக்குச் சாதகமாக மாற்ற உயர்தர விவேகம் தேவை.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...