Sunday 2 November 2014

அமெரிக்காவின் அளவுசார் தளர்ச்சியும்(Quantitative Easing) பொருளாதார வளர்ச்சியும்

2008-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து ஆறு ஆண்டுகளாக தனது பொருளாதாரத்தில் அளவுசார் தளர்ச்சியைச் செய்து வந்த ஐக்கிய அமெரிக்கா 29-10-2014இல் இருந்து அதை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. 2008-ம் ஆண்டிற்கு முன்னர் ஐக்கிய அமெரிக்காவின் மைய வங்கி(Federal Reserve) எண்ணூறு பில்லியன் டொலர்களுக்குக் குறைவான ஆவணங்களை (Bonds)மட்டும் வைத்திருந்தது. 2008இல் இருந்து அளவுசார் தளர்ச்சி(Quantitative Easing) செய்யவதற்காக தொடர்ந்து ஆவணங்களை வாங்கிக் குவித்ததால் அமெரிக்க மைய வங்கியிடம் இப்போது நான்கரை ரில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆவணங்களைக் கொண்டுள்ளது.  அமெரிக்கா தனது பொருளாதாரத்தை தூண்டி வளரச்செய்ய எடுத்த இந்த முயற்ச்சியான அளவுசார் தளர்ச்சி வெற்றியளித்ததா என்ற விவாதம் இப்போது எழுந்துள்ளது.

அமெரிக்கா தனது அளவுசார் தளர்ச்சியை நிறுத்தியவுடன் உலகின் முன்ன்ணி நாணயங்களான யூரோ, பவுண்ஸ், யென் ஆகியவற்றிற்கு எதிராக டொலர் பெறுமதி ஏற்றம் அடைந்தது. 600 பில்லியன் டொலர்களுக்கு ஆவணங்கள் வாங்கப்பட்டால் அது நீண்டகாலக் கடன்களுக்கான வட்டிவிழுக்காட்டை 0.15 முதல் 0.25 வரை குறைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மையவங்கியானது தனது வட்டி விழுக்காட்டை (federal funds rate) 0.75 முதல் ஒரு விழுக்காடுவரை குறைப்பதற்கு ஒப்பானதாகும். பன்னாட்டு நாணய நிதியம்(IMF) செய்த மதிப்பீடு இப்படிக் கூறுகின்றது: 

“In the US, the cumulative effects of bond purchase programs are estimated to be between 90 and 200 basis points
(0.9 and 2 percentage points) . . . In the UK, cumulative effects range from 45 basis points to 160 basis points.”

என்ன இந்த அளவுசார் தளர்ச்சி?
நாட்டின் பொருளாதாரத்தைத் தூண்ட நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும். அதற்கு நாட்டில் வட்டி விழுக்காடு குறைக்கப் பட வேண்டும். வட்டி விழுக்காட்டைக் குறைக்க மைய வங்கி குறுங்காலக் கடன் பத்திரங்களை(ஆவணங்கள்) வர்த்தக வங்கிகளிடம் இருந்து தனியார் நிறுவனங்களிடமிருந்தும் வாங்கும். இதை விரிவாக்க நிதிக் கொள்கை(Expansionary Monetary Policy) என அழைப்பர். இதைத் தொடர்ந்து செய்ய பொருளாதாரம் வளர்ச்சியடையலாம். இப்படி நாட்டின் வட்டி விழுக்காடு குறைந்து சென்று பூச்சியத்தை அண்மித்தும் பொருளாதாரம் போதிய வளர்ச்சியை எட்டாவிடில் மைய வங்கி நீண்டகாலக் கடன் பத்திரங்களை வர்த்தக வங்கிகளிடமிருந்தும் தனியார் நிறுவனங்களிடமிருந்தும் வாங்கும். இதை அளவுசார் தளர்ச்சி என்பர். இதனால் நீண்டகால வட்டி விழுக்காடு வீழ்ச்சியடையும்.

அளவுசார் தளர்ச்சி எப்படி வேலை செய்கின்றது?விரிவாக்க நிதிக் கொள்கை(Expansionary Monetary Policy) நாட்டில் பணத்தின் விலையை (அதாவது வட்டி விழுக்காட்டைக்) குறைக்கும். அளவுசார் தளர்ச்சி(Quantitative Easing) நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும். மைய வங்கி நாட்டில் ஆவணங்களை(அரசக் கடன் பத்திரங்கள் போன்றவை) வாங்கும்போது ஆவணங்களின் விலை அதிகரிக்கும். இதனால் ஆவணங்களில் இருந்து கிடைக்கும் உறுதிறன் (வருமான விழுக்காடு yield) குறையும். இதனால் முதலீட்டாளர்கள் 9முக்கியமாக வர்த்தக வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், ஓய்வூதிய நிதியங்கள்) இந்த ஆவணங்களை வாங்குவதைத் தவிர்த்து வேறு துறைகளில் முதலீடு செய்வார்கள். மைய வங்கியிடம் ஆவணங்களை விற்றுப் பெற்ற பணத்தை முதலீட்டாளர்கள் நீண்ட காலக் கடனாக உற்பத்தி நிறுவனங்கள், கட்டிடம் கட்டும் நிறுவனங்கள், பொதுமக்கள் இப்படிப் பலதரப்பினருக்கு கொடுக்க முடியும். மைய வங்கிக்கு ஆவணங்களை விற்ற தனியார் நிறுவனங்கள் தமக்குக் கிடைத்த பணத்தை பொருளாதாரத்தில் முதலீடு செய்வர். இதனால் பங்குகளின் விலைகள் அதிகரிக்கும். நாட்டில் முதலீடு அதிகரித்து உற்பத்தி வேலை வாய்ப்பு என்பன அதிகரிக்கும். இது மக்களின் வருமானத்தை அதிகரிப்பதனால் அவர்கள் செலவு செய்து பொருட்களை வாங்குவார்கள். இதனால் உற்பத்தியும் வேலைவாய்ப்பும் மேலும் அதிகரிக்கும்.


அமெரிக்கா என்ன செய்தது?
2008-ம் ஆண்டு நவம்பரில் இருந்து ஐக்கிய அமெரிக்காவின் மைய வங்கி (Federal Reserve) ஈட்டுக்கடன் ஆவணங்களை வாங்கத் தொடங்கியது. இதனால் அதனது ஆவண இருப்பு800 பில்லியன் டொலர்களில் இருந்து  1.75 ரில்லியன் டொலர்களாக அதிகரித்தது. தொடர்ந்து செய்த ஆவணக் கொள்வனவால் 2010 ஜூனில் ஆவணக் கையிருப்பு 2.1 ரில்லியன் டொலர்களாக உயர்ந்தது. அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்ற படியால் ஆவணக் கொள்வனவு நிறுத்தப்பட்டது. ஆனால் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவு இல்லை என உணர்ந்ததால் பின்னர் மாதம் தோறும் முப்பது பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆவணங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. இரண்டாம் சுற்று ஆவணக் கொள்வனவு 2010 நவம்பரில் செய்யப்பட்டது. இதில் 600 மில்லியன் டொலர்கள் பெறுமதியான திறைசேரிக் கடன் பத்திரங்கள் வாங்கப்பட்டன. இதிலும் பொருளாதாரம் போதிய வளர்ச்சியை எட்டாததால் 2012 செப்டம்பரில் மூன்றாம் கட்ட அளவுசார் தளர்ச்சி செய்யப்பட்டது. இதில் மாதம் தோறும் 40 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆவணங்களை அமெரிக்க மைய வங்கி வாங்க முடிவு செய்தது.

 அமெரிக்க மைய வங்கியின் அளவுசார் தளர்ச்சி வெற்றியளித்ததா என்ற கேள்விக்குப் பதிலளித்த அமெரிக்காவில் 2008 அளவுசார் தளர்ச்சியை ஆரம்பித்து வைத்த அமெரிக்க மைய வங்கியில் முன்னாள் பென் பேர்னார்க் "Quantitative Easing works in practice but does not work in theory" என்றார் நகைச்சுவையாக.

அமெரிக்காவில் செய்யப்பட்ட அளவுசார் தளர்ச்சிக்கு ஆதரவாகச் சொல்லப்படும் கருத்துக்கள்:


1. அளவுசார் தளர்ச்சி 2008இல் உருவான பொருளாதாரச் சரிவு (recession) பொருளாதாரம் மந்த (depression)நிலையை அடைவதைத் தடுத்தது.
2. அளவுசார் தளர்ச்சி நாட்டில் விலைவாசி அளவிற்கு அதிகமாக வீழ்ச்சியடைவதைத் தடுத்தது.
3. அளவுசார் தளர்ச்சி விலைவாசியை அதிகரித்து பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்யும்.
4. அளவுசார் தளர்ச்சி  நாட்டில் வேலை வாய்ப்பை அதிகரித்தது.
5. அளவுசார் தளர்ச்சி மிகைப்பணவீக்கத்தைக்(hyper inflation) கொண்டு வரும் என்ற கூற்றுப் பொய்யாக்கப்பட்டுள்ளது.
6. அளவுசார் தளர்ச்சி அமெரிக்க டொலரின் பெறுமதியை உயர்த்தியது.

அமெரிக்க மைய வங்கி எப்போது ஆவணங்களை விற்கும்?

அமெரிக்க மையவங்கி வாங்கிக் குவித்துள்ள ஆவணங்களை விற்க வேண்டும். அதன் கால அவகாசம் வரும்போது அதற்குரிய பணத்தைச் செலுத்த வேண்டும். இதைச் செய்யும் போது நாட்டில் மீண்டும் வட்டி விழுக்காடு அதிகரிக்கும். அமெரிக்கா 2015-ம் ஆண்டின் இறுதிப் பகுதிக்குப் பின்னர்தான் ஆவணங்களை விற்பது பற்றி யோசிக்கும்.

ஜப்பானில் தொடரும் அளவுசார் தளர்ச்சி
அமெரிக்கா தனது அளவுசார் தளர்ச்சியை நிறுத்துவதாக அறிவித்த மறுநாள் ஜப்பான் புதிய அளவுசார் தளர்ச்சியைச் செய்யப் போவதாக அறிவித்தது. இதுவரை மாதம் தோறும் அறுபது முதல் எழுபது ரில்லியன் யென் பெறுமதியான ஆவணங்களை வாங்கி வந்த ஜப்பானின் மைய வங்கி இனி மாதம் ஒன்றிற்கு எண்பது ரில்லியன் யென் பெறுமதியான ஆவணங்களை வாங்கப் போவதாக முடிவு செய்துள்ளது. ஜப்பானில் பணவிக்கம் இரண்டு விழுக்காடாக  இப்போதைக்கு அதிகரிக்கப் போவதில்லை என உணரப்பட்டதாலேயே இந்த அளவுசார் தளர்ச்சி அதிகரிப்பு பற்றிய அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஜப்பானிய நாணயமான யென்னின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. இது ஜப்பானிய ஏற்றுமதியை ஊக்குவிக்கலாம். பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் ஜப்பான் புதிய அளவுசார் தளர்ச்சி செய்யப் போவதாக அறிவித்ததால் அமெரிக்காவில் பங்கு விலைகள் உயர்ந்தன.

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அளவுசார் தளர்ச்சி பொருளாதாரம் சரிவு நிலையிலும், பணவிக்க்கம் வலுவிழந்த நிலையிலும் மக்கள் நம்பிக்கை இழந்த நிலையிலும் சிறப்பாக வேலை செய்யும் என அமெரிக்க மைய வங்கி நிரூபித்து விட்டது என இப்போது நம்பலாம். 2014-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான வளர்ச்சி 3.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இது எதிர்பார்த்திருந்த 3 விழுக்காட்டிலும் அதிகமானதாகும்.  அளவுசார் தளர்ச்சியின் செயற்படு திறனை சரியாக அறிந்து கொள்ள இன்னும் சில மாதங்கள் எடுக்கும்.

பிரித்தானியாவின் கசப்பான அனுபவம்
2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரித்தானிய மைய வங்கி அளவுசார் தளர்ச்சியை மேற் கொண்டது. 375 பில்லியன் பவுண்கள் பெறுமதியான ஆவணங்களை அது வாங்கியது. இதனால் ஆவணங்களின் உறுதிறன் குறைந்தது. இது பல ஓய்வூதிய நிதியங்களைப் பாதித்தது. இந்த ஓய்வூதி நிறுவனங்களின் பற்றாக் குறை 312பில்லியன்களை எட்டியது.


செல்வந்தர்களுக்கு மட்டும் இலாபம்
ஆவணங்களை மைய வங்கி வாங்கும் போது அதன் விலை அதிகரிப்பால் செல்வந்தர்கள் இலாபம் அடைவார்கள். வட்டி விழுக்காடு குறைவதால் சிறு சேமிப்புக்களைச் செய்துள்ள வறியவர்கள் பாதிக்கப்படுவார்கள். 

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...