Friday 26 September 2014

ஈரானுடன் ஓர் Indecent Proposal

பிரித்தானியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜக் ஸ்ரோ (Jack Straw) இலண்டனில் இருந்து வெளிவரும் டெயிலிகிராஃப் பத்திரிகையில் எழுதிய பத்தி ஒன்றில் ஈரானுக்கு அணுக்குண்டு தொடர்பாக ஒரு விட்டுக் கொடுப்புச் செய்து அதற்குப் பதிலாக இசுலாமியத் தீவிரவாத அமைப்புக்களுக்கு அது கொடுக்கும் ஆதரவுகளை நிறுத்தச் செய்ய வேண்டும் என்ற முன்மொழிபை வைத்துள்ளார். தொழிற் கட்சியின் உறுப்பினரான ஜக் ஸ்ரோ ஒரு வலதுசாரித் தினசரியில் இப்படி எழுதியிருப்பதில் உள்நோக்கங்களும் இருக்கலாம்.

ஜக் ஸ்ரோவின் பத்தி "The West should risk doing a deal with Iran" என்ற தலைப்புடனும் "For the greater good, Tehran must be allowed to keep some of its nuclear capability" என்னும் துணைத் தலைப்புடனும் வெளிவந்திருந்தது.

2005-ம் ஆண்டு யூரேனியம் பதனிடக்கூடிய 200 சுழற்ச்சிக் குழாய்களை (centrifuges) வைத்திருந்த ஈரானிடம் இப்போது 19,000இற்கு மேற்பட்ட சுழற்ச்சிக் குழாய்கள் இருக்கின்றன. ஈரானின் அணு விஞானிகளைக் கொன்றும் இணையவெளியில் ஊடுருவி ஈரானின் யூரேனியம் பதனிடும் சுழற்ச்சிக் குழாய்களை (centrifuges) சிதைத்தும் பல நாசகார வேலைகளைச் செய்தும் ஈரானின் யூரேனியம் பதனிடுவதைத் தடுக்க முடியவில்லை. பின்னர் கடுமையான பொருளாதரத் தடைகளை ஈரானுக்கு எதிராக விதித்ததுடன் வங்கிகளுக்கு இடையிலான  பன்னாட்டு கொடுப்பனவு முறைமையான SWIFT இல் இருந்து ஈரானிய வங்கிகளை வெளியேற்றி ஈரானுக்கு SWIFT மூலம் எந்த பணப்பரிமாற்றமும் செய்ய முடியாமற் செய்த படியால் அது அமெரிக்கா, இரசியா, பிரான்ஸ், பிரித்தானியா, சீனா ஆகிய ஐநா பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளுடனும் (P-5) ஜேர்மனியுடனும் பேச்சு வார்த்தைக்கு முன்வந்தது.

இசுலாமிய அரசு எனத் தன்னை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு எதிராகத் தாக்குதல் நடாத்த அமெரிக்க வெளியுறவுத் துறைக்குப் பொறுப்பான அரசத் துறைச் செயலர் ஜோன் கெரி பல நாடுகளை இணைத்த ஒரு கூட்டமைப்பை அமைக்க பெரு முயற்ச்சி எடுத்தார். அதில் சவுதி அரேபியா, ஜோர்தான், ஐக்கிய அமீரகம், காட்டார், பாஹ்ரேய்ன், ஈராக்ஆகிய நாடுகளை இணைத்தமை ஐக்கிய அமெரிக்காவிற்கு ஒரு பெரும் இராசதந்திர வெற்றியாகும். ஆனால் அதில் ஈரான் இணைந்து கொள்ள மறுத்துவிட்டது.  ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்றிய ஈரானிய அதிபர் ஹசன் ரௌஹானி சில உளவுத் துறைகள் பைத்தியங்களின் கைகளில் படைக்கலன்களை கொடுத்தன, அவை இப்போது யாரையும் விட்டு வைக்கின்றன இல்லை என மேற்கு நாடுகளைக் கடுமையாகத் தாக்கினார். ("Certain intelligence agencies have put blades in the hand of madmen, who now spare no one,")

அமெரிக்கா, பிரான்ஸ், சவுதி அரேபியா, ஜோர்தான், ஐக்கிய அமீரகம், காட்டார், பாஹ்ரேய்ன், ஈராக் ஆகிய நாடுகளின் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளாலும் கொரசன் போன்ற அல் கெய்தா ஆதரவுப் போராளிக் குழுக்களாலும் தாக்குப் பிடிக்க முடியாமல் போனால் அவை ஈரானிற்குத் தப்பி ஓடலாம். அங்கு அவை மீளிணைந்து மேற்கு நாட்டு இலக்குகள் மீது தீவிரவாதத் தாக்குதல்களைத் தொடுக்கலாம். இதனால் இசுலாமியத் தீவிரவாதக் குழுக்களை ஒழித்துக் கட்ட மேற்கு நாடுகளுக்கு ஈரானின் ஒத்துழைப்பு அவசியம். பிரித்தானிய முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜக் ஸ்ரோவின் பத்தி இதற்கான பேச்சு வார்த்தை தொடங்கி விட்டது என்பதையே சுட்டிக் காட்டுகின்றது. அதற்கான ஒரு கருத்துருவாக்க முயற்ச்சியே ஜக் ஸ்ரோவின் பத்தியாகும். இதேவேளை இன்னொரு அமெரிக்க ஊடகம் ஈரான் அணுக்க்குண்டுக்காக அல் கெய்தாவை விற்குமா என்ற கேள்வியுடன் ஒரு கட்டுரையை வரைந்துள்ளது. ஈரான் தனது பிராந்திய ஆதிக்கத்திற்கு  உலகின் பல இடங்களிலும் செயற்படும் அல் கெய்தா, காசா நிலப்பரப்பில் செயற்படும் ஹமாஸ், லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா, சிரியாவில் செயற்படும் கொரசன், லெபனானிற் செயற்படும் ஹிஸ்புல்லா ஆகிய அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்பை வைத்ததக் கொண்டு அவற்றிற்கு படைக்கலன்களையும் பணங்களையும் வழங்கி வருகின்றது. வளைகுடாப் பிராந்திய நாடுகளில் உள்ள செல்வந்தர்கள் இந்த அமைப்புகளுக்கு வழங்கும் நன்கொடைகள் ஈரானுடாகவே விநியோகிக்கப்படுகின்றது. ஈரான் தொடர்பான அமெரிக்க நிபுணர் ஒருவர் இந்த அமைப்புக்கள் பற்றிக் குறிப்பிடும் போது "They are explosive bargaining chips". என்றார்.

ஆனால் இசுலாமியப் போராளிக் குழுக்களைக் காட்டிக் கொடுத்து ஈரானிய ஆட்சியாளர்கள் P5+1 நாடுகளுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்தால் அது ஈரானிய ஆட்சியாளர்களுக்கேஆபத்தான நிலையில் போய் முடியும். இது ஈரானில் ஒரு உள்நாட்டுக் குழப்பத்தை ஏற்படுத்தலாம். இதனால் ஈரான் வலுவிழந்த நிலை ஏற்பட்டால் இஸ்ரேல் ஈரானிய யூரேனிய பதப்படுத்தும் நிலையங்கள் மீது குண்டு வீசி அழிக்கலாம். இப்படி ஒரு சதித் திட்டத்துடன் ஈரானுடன் ஒரு உடன்பாடு செய்ய மேற்கு நாடுகள் தமது Indecent Proposal முன்வைத்திருக்கலாம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...